Friday, April 24, 2009

சிட்டுக்குருவி (மீள் பதிவு)

கீற்று இணைய இதழில் வெளிவந்த எனது சிறுகதை இது.
இங்கே மீள்பதிவு செய்துள்ளேன் .படிப்பவர்கள் தங்கள் கருத்துக்களைச் சொன்னால் நல்லாத்தான் இருக்கும்.

திடீரென்று தான் இப்படி ஆகிவிட்டது ; கதை பேச மாமா இல்லை , கேலி செய்யஅத்தை இல்லை , கொஞ்சிக் கொண்டே உருட்டி உருட்டி உள்ளங்கையில் சாதம்வைக்க அம்மா இல்லை .சித்தி கூட எங்கேயோ தூரத்தில் இருந்து கொண்டுஎப்போதோ தொலை பேசுகிறாள் , சித்தப்பா வீடு தங்குவது அரிதாகிப் போய்நெடுநாளகிறது,

பாட்டிக்கு இந்த பட்டணம் பிடிக்காமல் ஊரோடு போய் விட்டாள்,தாத்தாவோ ரேஷன் கடை ,மளிகைக் கடை ,மார்கெட் என்று ஓய்ந்து பின்மாலையில்அவர் வயது மனிதர்களைத் தேடி கோயில் , பார்க் என்று போய் விடுகிறார் , என்னையாரும் கண்டு கொள்வதாகத் தெரியவில்லை !!! .
வேப்பமரமும் , புளியமரமும் இல்லாத இந்த ஒன்டிக்குடித்தன நகரத்து நரக வீடுகொஞ்சம் கொஞ்சமாய் என்னை கொல்லபோவதை போல தினமும் கெட்ட கெட்டகனவுகளில் தூங்கவே முடியாத சோகத்தில் தான் இன்று இந்த பின் மத்தியானநேரத்தில் கால் காசு பெறாத இந்த "சிட்டுகுருவியுடன்" விருதாவாய் பேசிக்கொண்டுஇருக்கிறேன் .

சிட்டு குருவி "விசுக் விசுக்கென்று " பறந்து கொண்டிருந்தது முன் புற பொதுதாழ்வாரத்தில் , யாரோ காய வைத்த வடகத்தை கொத்தி கொத்தி குட்டி மண்டையை'விலுக் விலுக்கென்று' ஆட்டியவாறு சிறிது வாயிலும் சிறிது வாசல் படியிலுமாக சிந்திசிதறி விழுங்கிக் கொண்டிருந்த நேரத்தில் ஏதோ ஒரு நொடியில் அதன் பார்வையில்நான் பட்டிருக்க வேண்டும் ,அதுவாகத் தான் என்னிடம் பேச ஆரம்பித்தது ;

முதலில் பேச்சு எப்படி தொடங்கியதுஎன்று யோசித்தேன் நான் !. அதற்கு என் பெயரெல்லாம் தெரிய சாத்தியமே இல்லை ,ஒருமையில் தான் பேசிகொண்டிருந்தது . இனுக்கி இனுக்கியாய் பிய்த்த வடகத்தைஅலகில் சிக்க வைக்க முயன்று தோற்று போன வெறுப்போ என்னவோ ? சும்மா ஏன்என்னையே பார்கிராய் ? என்று காட்டமாய் கேட்டு விட்டு வெளிப்புற கேட் வரைபறந்து காட்டி விட்டு திரும்ப வந்து ஜன்னல் கம்பியில் அமர்ந்து கொண்டு " பதிலைசொல்லி தொலை என்பதை போல "என்னையே இலக்கு மாற்றி மாற்றிபார்த்துக்கொண்டே இருந்தது .

ஒரு சிட்டுக்குருவி பேசுமா ? என்பதையே நம்ப முடியாமலிருந்த நான் அதன்கேள்வியில் திடுக்கிட்டு போனேன் . பேசும் குருவியா இது ? என்ற உற்சாகத்தில்சந்தோசம் பீறிட்டுக் கொண்டு வர என்ன கேட்டாய் குருவி ? என்றேன் நான் ;குருவி இளக்காரமாய் சிரித்துக்கொண்டது , மறுபடி பேச முயலவேயில்லை ;பார்த்துக் கொண்டிருக்கும் போதே குருவி ஜன்னலில் இருந்து எம்பி பறக்கபோவதை போல போக்கு காட்டியது,பிறகு மறுபடி என்னை நீயும் வருகிறாயாஎன்னோடு ? என்பதை போல சும்மா பார்த்துக்கொண்டு உட்கார்ந்து விட்டது, அடுத்துஎன்ன செய்யப் போகிறாய் நீ ? என்று நானும் விடாமல் அதையே கவனிக்கதொடங்கினேன்.

குருவி கொஞ்ச நேரம் பார்த்த பின் "எனக்கு ஒரு தோசை தாயேன்"என்றது . இல்லை...கெஞ்சுதலாய் எல்லாம் இல்லை . சட்டமாய் கேட்டது ; நீ எனக்கு கொடுத்து தான்ஆகவேண்டும் என்று தொனியில் கேட்டதோடு "விருட்டென்று " சமையல்கட்டுக்குள்ளும் பறந்துபோய் விட்டது . என்ன திமிர் இந்த குஞ்சு குருவிக்கு என்றுசெல்ல கோபத்தோடு நானும் பின்தொடாந்தேன். வேறு என்ன செய்ய வீட்டில்அப்போது யாரும் இல்லை !

அம்மா குவைத்திற்கு வீட்டு நர்சாக காண்டிராக்டில் போய்மாதம் ஆறு ஆகிறது . ஊரிலிருந்தால் கடன்கொடுத்தவர்களின் தொல்லை கழுத்தைநெரிக்கும் என்று தான் சென்னைக்கு வந்து ஒரு மில் முதலாளிக்கு கார் டிரைவர்ஆகிவிட்டார் அப்பா
பாட்டி தான் ஊருக்குள் எதையோ சொல்லி சமாளித்து கொண்டுவீட்டோடு இருக்கிறாள் , ஊரை விட மனமில்லை என்பதெல்லாம் வெறும் நகாசுப்பேச்சு , அவளும் வந்து விட்டால் வீட்டை பண்ணை வீட்டு ராமசாமி அடிமாட்டுவிலைக்கு எடுத்துக் கொண்டு வாங்கிய கடனுக்கு நெடுநாளாய் கட்டாமலிருந்தவட்டிக்கு கழித்து விடுவாரோ என்ற அதீத பயம் தான் காரணம் !

குருவிசாவதானமாய் சமையல் உள்ளில் புகுந்து தோசை மூடி வைத்த தட்டத்தை அலகால்இடறித் தள்ளி விட்டு "சீனி போடு கொஞ்சம் என்றது" , என்னால் சிரிப்பை அடக்கவேமுடியவில்லை . சிரிக்கும் என்னை ஒரு தூசி போல பார்த்து விட்டு , அதுவே பறந்துபோய் நல்லெண்ணெய் இருந்த வால்கின்னத்தை தூக்க முடியாமல் தூக்க முயன்றுஎண்ணையை கொட்டி கவிழ்த்து கொண்டது தோசை இருந்த தட்டில்ஐயோ ! ஏய் குருவி என்னிடம் கேட்டால் நான் எடுத்து தந்திருக்க மாட்டேனா ? இப்படிஎண்ணெய் முழுசும் கொட்டி தீர்த்து விட்டாயே !

மறுபடி எண்ணெய் வாங்க காசுக்குநின்றால் அப்பா ஆயிரம் கேள்வி கேட்பாரே! உன்னால் எனக்கு நேரம் சரியில்லைஇன்று என்றேன் நான் எண்ணெய் இழந்துவிட்ட ஆற்றாமையில் ...
குருவிஅதையெல்லாம் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை , அது பாட்டுக்கு ஒருதோசையை அறையும் குறையுமாய் சிந்தி சிதறி குதறிப் போட்டுவிட்டு ... அப்புறம்என்ன ? என்று தண்ணி தொட்டியின் விளிம்பில் போய் உட்கார்ந்தது .

தொட்டி தளும்பநீர் பிடித்து ஊற்றி வைத்திருந்தேன் நான் ; விழுந்து விடாதே .... பார்த்து உட்காரேன் ;நான் தான் பதறினேனே தவிர அது என்னவோ தேர்ந்த நீச்சல் வீராங்கனை போலவிளிம்பில் இதன் அசைவில் தளும்பி மேலெழுந்த சின்ன தண்ணீர் துள்ளலில்தலையை விட்டு ஆட்டிப் புரட்டி ஒரு மினி தலைகுளியல் செய்து கொண்டது , பார்க்கபார்க்க அதிசயமாய் இருந்தது ;

அதோடு முடியவில்லை கதை ,குளிர்ந்த தண்ணீர் பட்டதும் ஒட்டிக்கொண்டசிறகுகளை சடசடவென அடித்து தூசிபடலம் போல நீர்படலத்தை தெறிக்க விட்டுபுகை போக்கி ஓட்டை வழியே அடுப்படி மேல் விழுந்த வட்ட சூரிய ஒளியில் போய்நின்று கொண்டு இப்படியும் அப்படியும் திரும்பி வெப்பம் வாங்கி கதகதப்பாகிக்கொண்டது , வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த எனக்கு " அது
குருவியாய்தெரியவில்லை ஏதோ விருந்துக்கு வந்த அத்தை மகளை கூட நின்று பார்ப்பதைபோல ஒரு தோழமை உணர்வு சட்டென மேலெழுந்து அந்த அறை முழுதும் நிரம்பிவழிந்து கசிந்தது .

நான் இங்கே இப்படிக் குருவியோடு குருவியாய் லயித்து நிற்பது பால்காரஅண்ணாமலைக்கு தெரியுமா என்ன?
எப்போதும் நேரம் தப்பி பால் கொண்டு வந்துவசவுகளை அழுக்கு வெள்ளை வேஸ்டி நிறைய வாங்கி கட்டிக்கொண்டு போகும்அவர் அன்று சரியான நேரத்துக்கு பாலுக்கு மணியடித்தார். போய் வாங்கி வைத்துவிட்டு திரும்ப வரும் முன் கொஞ்சம் கூட இங்கிதமே இல்லாத சென்னை நகரத்துவானிலை மிக மோசமாகி மழை தூரலிட்டது.

"ஐயோ அப்பாவின் யூனிபார்ம் சட்டை....!!!" காலையில் துவைத்து போட்டது ஞாபகம்வர வேக வேகமாய் மூச்சு வாங்க மொட்டை மாடிக்கு ஓடினேன் . நல்ல வேலைரொம்பவும் நனையத் தொடங்கும் முன் கொடியிலிருந்து பிடுங்கி கொண்டு வந்து விட்ட திருப்தியில் உட்புறகொடிகயிற்றில் காயப்போட்டு விட்டு குருவியை தேடிக்கொண்டு மீண்டும் உள்ளேபோனேன் . காணோம் ....!

குருவி அங்கே இல்லை ஏய் குருவி அதற்குள்ளே எங்கேபோய் விட்டாய் ? மழை வேறு பலமாய் வரும் போல தெரிகிறது... நனைந்து விட்டால்என்ன செய்வாய் குட்டி பறவையே ? நான் எனக்குள் பேசிக்கொண்டே குருவியைவீட்டுக்கு உள்ளே ... வெளியே என்று கொஞ்ச நேரம் தேடினேன் . காணோம் ...!

எங்கும்குருவி இல்லை .

ஐந்து மணிக்கு அப்பா வந்து விட்டார் . ஆறு மணிக்கு தாத்தாவந்தார் . குருவி மட்டும் வரவேயில்லை . நான் குருவியை நினைத்துக் கொண்டேஇருவருக்கும் காப்பி போட்டுக் கொடுத்தேன் , வாசல் தெளித்து கோலம் போட்டேன். இரவுக்கு மாவு பிசைந்து கோதுமை சப்பாத்தி போட்டு , தேங்காய் சட்னி வைத்துஇருவருக்கும் கொடுத்து விட்டு நானும் சாப்பிட்டு முடித்தேன் .

எங்கே போயிருக்கும்இந்த மழையில் குருவி !!! என்று யோசித்துக் கொண்டே சமைத்து சாப்பிட்டபாத்திரங்களை கழுவி கவிழ்த்தேன் . குருவியை காணவே காணோம் ...! இனிமேலாவரபோகிறது.... மணி ஒன்பது ஆகி விட்டது . அப்பா நைட் சிப்டுக்கு புறப்பட்டுவிட்டார் , தாத்தா வெளித்திண்ணையில் ரேஷன் கடை சேலை விரித்துப் படுத்துவிட்டார் .

மழை அது பாட்டுக்குப் பெய்து கொண்டிருந்தது . இரவு வானத்தை மழைமுகமூடிக் கொள்ளைக் காரன் போல கருப்பு துணி போர்த்தி கண்ணுக்குத் தெரியாமல்மறைத்து சாகசம் செய்து விட்ட திருப்தியில் ஆர்பாட்டமின்றி சிறு ஓசையுடன்இறங்கி பூமியுடன் சல்லாபித்துக் கொண்டிருந்தது . கல்யாணமாகி வருடம் சில கடந்துநிதானமாகி விட்ட தம்பதியர் போல பூமிக்கும் மழைக்குமான சங்கமம் சிறு ரகசியசம்பாசனையுடன் விடியும் வரை தொடர்ந்...தது....!!!

குருவி எங்கே போயிருக்குமோ ?

மழைக்கு எங்கே ஒதுங்கியிருக்குமோ ?

அதன் கூடு எந்த மரத்தில் , எவ்வளவு தூரத்தில்இருக்குமோ ?

இந்நேரம் என்ன செய்து கொண்டிருக்குமோ குருவி?

குருவி...குருவி...குருவி !!!

ஏய் ! குருவி ... சிட்டுக் குருவி...... சிட்டுக்......குருவி ...

எங்கேபோய்விட்டாய் என் செல்லக் குருவி ?

குருவியை நினைத்துக் கொண்டே தூங்கினாலும் கனவில் என்னவோ குருவி எல்லாம்வரவில்லை ,ஒரு வேளை கனவே வரவில்லையோ என்னவோ ?!

காலை டிபன்தயாரிக்கும் அவசரத்திலும் அதென்னவோ அந்த காணமல் போன குருவியை மட்டும்மறக்கவே முடியவில்லை ....
இன்றைக்கு மறுபடி வருமோ ? என்ற எதிர்பார்போடு தான்சாதம் வைத்து , சாம்பார் வைத்து ...உருளைக் கிழங்கு வறுவல் செய்து , அப்பளம்பொரித்தேன்.குருவிக்கு இதெல்லாம் பிடிக்குமா ? என்ற யோசனையோடு தான்ஒவ்வொன்றையும் செய்து மூடி வைத்தேன் .

மழை நின்று போன விடிகாலையும்வழக்கம் போலத்தான் விடிந்திருந்தது , ஆனாலும் காற்றில் ஒரு ஈரவாடை பரவிமொட்டைமாடியில் துணி காயபோட்டு விட்டு , கட்டைசுவற்றில் கைவைத்து கீழேவிரையும் வாகனங்களைப் பார்த்தவாறு ஆழமாய் மூச்சை உள்ளே இழுத்துமெதுவாய் வெளியேபரவ விடும் போது ஈரத்தோடு ஈரமாய் ஒரு குளிரான சந்தோசம்தேகமெங்கும் சந்தனம் போல அப்பிக்கொள்ளத்தான் செய்கிறது ஒவ்வொருமுறையும் !

குருவிக்கு குளிறாதா ?

பார்த்தால் கேட்க வேண்டும் ...."

வருமா? வந்தால்கேட்க வேண்டும் !!!" என்று கேள்வியை ஓரமாய் மனதில் போட்டு வைத்தேன் .

நேற்றுபோல இல்லாமல் பால்கார அண்ணாமலை இன்று பழக்க தோசமாய் லேட்டாகத்தான்வந்தார் ... ஒன்றும் சொல்வதற்கின்றி பேசாமல் பாலை வாங்கி மூடி வைத்தேன் .அம்மாவிடமிருந்து தொலை பேசி அழைப்பு வந்தது; மாதம் ஒருமுறை அரைமணிநேரம் பேசுவாள் அம்மா , ஏதோ திருவிழா போல துள்ளிக்கொண்டு பேசுவதற்குஓடுவேன் நான் .

இன்று அப்படி இல்லை , வெகு நிதானமாய் போய் விட்டு திரும்பியஎன்னை தாத்தா அதிசயம் போல பார்த்துவிட்டு குனிந்து மறுபடி பேப்பர் படிக்கஆரம்பித்தார். அப்பா வந்தார் மறுபடி காபி போட்டேன் , இரவு சமைத்தேன் ,எல்லோரும் சாப்பிட்டோம். இரவு ஷிப்ட் வந்தது .அப்பா கிளம்பி போய் விட்டார் . தாத்தா திண்ணையில் யாரோ நண்பரோடு பேசிகொண்டிருந்தார் , அவர் அப்படியே தூங்கி விடுவார் , இனி உள்ளே வரமாட்டார் ,தண்ணீர் முதலிலேயே சொம்பில் பக்கத்தில் எடுத்து வைத்துக் கொள்வார் .

சின்னஞ்சிறிய வீடு தான் ....

ஆனாலும் தனிமை ...ருசியானதா??...

எப்போதும்தனிமை ....ருசியானதா ...?!

பெரிய பங்களா வீடெல்லாம் கழுத்து வரை கடனோடு ஊரில் இருக்கிறது .... கோயில்கோபுரத்தில் அரக்கி போன்ற தோற்றத்துடன் கத்தி பிடித்து நிற்கும் காவற்காரிபொம்மை போல பாட்டி அங்கே இந்நேரம் தூக்கம் வராமல் புரண்டு கொண்டு தான்இருப்பாள் என நினைக்கையில் நெஞ்சுக்குள் பிசைகிறது ,

தாத்தா .... பாவம் ?

அப்பா .... பாவம் தான் ?

அம்மா ...அவளும் கூட பாவம் தானே ? !

அப்படியானால் நான் ???!!!

அந்த குருவி... ?!

தூரத்தில் எங்கேயோ பாட்டு சத்தம் ...

"சிட்டுக்குருவி ....சிட்டுக்குருவி ...சேதிதெரியுமா ?
என்னை விட்டு பிரிந்து போன கணவன் வீடு திரும்பலை ...

"ஏய் குருவி...சிட்டுக் குருவி
உன் ஜோடியத்தான் கூட்டிகிட்டுநீ
இங்கே வந்து கூடு கட்டு ...

இன்றைக்கு சிட்டுக் குருவி ஸ்பெஷல் போல ரேடியோவில்
கடைசியில்...

எப்போதும் போல் ...

ஒற்றையாய் தெளிவான சிந்தனைகள் ஏதுமின்றி தூங்கத்தொடங்கினேன் நா....னு...ம் .

Tuesday, April 21, 2009

மனிதம் மின்னிதழில் எனது கவிதை (மாத்தி யோசி)


லெனின் பிறந்த தினமான இன்று வெளியான மனிதம் மின்னிதழில் எனது கவிதை .வாசித்து விட்டு உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்.
பெயர் குழப்பம் வேண்டாம், மிஸஸ் .தேவ் இல் இருக்கும் தேவ் வாசுதேவன் தான்,எதுக்கு நீட்டி முழக்கனும் அன்பா பாசமா தேவ் :) ,இப்படித் தான் கார்த்திகா வாசுதேவன் மிஸஸ்.தேவ் ன்னு ஆனேன் .

திருத்தம்:-

கவிதையில் உள்மனதின் தாழ்ப்பாள் என்பது யூழ்ப்பாள் என்று தவறுதலாகத் அச்சிடப் பட்டு விட்டது போலும் ,வாசிப்பவர்கள் தாழ்ப்பாள் என்றே வாசியுங்கள்.

Monday, April 20, 2009

சுபாங்கனியின் ஜாமன்றி பாக்சும் ...அம்ருதாவும் ...

சுபாங்கனியின் ஜாமன்றி பாக்ஸ் தொலைந்து போனதால் தான் அம்ருதா அதை தேடிக் கண்டுபிடித்து எடுத்து வரும் பொருட்டு தன் மகளின் பள்ளிக்குச் செல்ல வேண்டியதாகி விட்டது .போன வாரம் தான் ரகுராமன் அந்த ஜாமன்றி பாக்ஸ் வாங்கிக் கொடுத்திருந்தார் சுபாங்கனிக்கு ...அதை மகளின் கையில் கொடுக்கும் போதே ஏகப் பட்ட அறிவுரைகளோடு எப்போதும் போல பல (பஞ்சப்) பாட்டுக்களுடனும் தான் கொடுத்திருந்தார்.

சுபாங்கனிக்கு சந்தோசம் பிடிபடவில்லை...தன் அப்பாவா இது? புது ஜாமன்றி பாக்ஸ் கேட்டு முக்கால் வருடம் தாண்டி வாங்கிக் கொடுப்பார் என்று அவள் தான் எதிர்பார்க்கவே இல்லையே!!!சும்மா கேட்டு வைப்போம் என்று தான் அவளும் ஒரு வார்த்தை போட்டு வைத்தால் அப்பாவின் செவியில் ...அவர் நிஜமாகவே வாங்கிக் கொடுத்ததும் மகிழ்ச்சியில் திக்கு முக்காடிப் போய் விட்டால் பாவம்?!

அந்த ஜாமன்றி பாக்ஸ் தான் இப்போது காணோம் ...விலை 125 ரூபாய்கள் ...

அப்பாவை நினைத்தால் அடிவயிற்றில் பயப் பந்து உருண்டது ...தொண்டை உலர்ந்து மூச்சுத் திணறி கண்களில் நீர் கரை கட்டி நின்றது எப்போதடா கரை மீறி உருளலாம் என; ரகுராமன் அத்தனைக்கு மோசம் என்று சொல்ல முடியாது தான் ...மனிதன் கஷ்டப் பட்டு முன்னேறிக் கொண்டிருப்பவன் ...(கவனிக்கவும்...முன்னேறிக் கொண்டிருப்பவன் தான் இன்னும் முன்னேறியவன் ஆகவில்லை ரகுராமன் ...

ஒவ்வொரு பைசாவுக்கும் கணக்குப் பார்த்தே ஆக வேண்டிய சூழல் அவனுக்கு உண்டு ...அவனது மனைவியும் ...மகளும் ஆகிப் போன காரியத்தால் அந்த சூழல் சுபாங்கனிக்கும் ... அம்ருதாவுக்கும் கூட உண்டு தானே என்பது அவனது அசைக்க முடியாத நம்பிக்கை.

தவறுதலாகவோ அல்லது கவனக் குறைவாகவோ எது நடப்பினும் அதற்க்கு காரணம் எவராக இருப்பினும் ரகுராமனின் மிக நீண்ட அறிவுரைகளை அந்த வீட்டினரின் காதுகள் கேட்டே தீர வேண்டும் ,அம்மாவோ மகளோ தவறு செய்திருப்பின் அறிவுரைகளாக ஆரம்பிக்கும் பேச்சு தவறுதல் ரகுராமானது என்று வரும்போது இடை விடாத புலம்பல்களாக மாறி விடும் .உங்களுக்கெல்லாம் அறிவுரை ஆயிரக் கணக்கில் சொல்லி விட்டு என்னைப் பார் இப்படி செய்து விட்டு வந்து நிற்கிறேன் என்று அதற்கும் புலம்பி...புலம்பி பேசிப் பேசி கொல்வான் ...

ஆக மொத்தத்தில் ரகுராமனின் புலம்பலில் இருந்து தப்பிக்கவும் ...வீட்டுச் சூழலில் 125 ரூபாய் ஜாமன்றி பாக்சை அநியாயமாய் தொலைத்து விட்டு வந்து நிற்க்கிராலே இந்த பாதகத்தி எனும் குமைச்சலிலும் அம்ருதா வேக..வேகமாய் பள்ளி காம்பவுண்டை நெருங்கினாள்.

சுபாங்கனியின் ஜாமன்றி பாக்ஸ் தொலைந்து போனதால் தான் அம்ருதா அதை தேடிக் கண்டுபிடித்து எடுத்து வரும் பொருட்டு தன் மகளின் பள்ளிக்குச் செல்ல வேண்டியதாகி விட்டது .

ஆரம்பிக்கும் பேச்சு தவறுதல் ரகுராமானது என்று வரும்போது இடை விடாத புலம்பல்களாக மாறி விடும் .உங்களுக்கெல்லாம் அறிவுரை ஆயிரக் கணக்கில் சொல்லி விட்டு என்னைப் பார் இப்படி செய்து விட்டு வந்து நிற்கிறேன் என்று அதற்கும் புலம்பி...புலம்பி பேசிப் பேசி கொல்வான் ...ஆக மொத்தத்தில் ரகுராமனின் புலம்பலில் இருந்து தப்பிக்கவும் ...வீட்டுச் சூழலில் 125 ரூபாய் ஜாமன்றி பாக்சை அநியாயமாய் தொலைத்து விட்டு வந்து நிற்க்கிராலே இந்த பாதகத்தி எனும் குமைச்சலிலும் அம்ருதா வேக..வேகமாய் பள்ளி காம்பவுண்டை நெருங்கினாள்.

வாட்ச்மேனைக் காணோம்...ஒரு ஐந்து நிமிடம் காத்திருந்து பார்த்தும் வாட்ச்மேன் வந்தபாடில்லை...பள்ளி பெரிய கேட் மூடப் பட்டு சின்ன கேட் தான் ஒருக்களித்து திறந்திருந்தது,அம்ருதா படித்த காலத்திலிருந்தே அந்தப் பள்ளியில் பெரிய கேட் திறந்திருந்தால் தான் அது பள்ளி நேரம் ,மற்றபடி பள்ளி நேரம் முடிந்த பின் மாலை மற்றும் அதிகாலை வேளைகளில் நிர்வாகிகள் அல்லது ஆசிரியர்கள்வர மட்டுமே சின்ன கேட் திறப்பு பயன்படுத்தப் படும்...

வேறு யாரும் அத்து மீறி அந்தப் பாதையில் நுழையக் கூடாது என்பது பள்ளி விதிகளில் ஒன்று . என சொல்லிக் கொண்டிருந்தேன் ?ஆம் அம்ருதாவும் இதே பள்ளியில் தான் படித்தாள் பிளஸ் டூ வரையிலும்,

சுற்றும் முற்றும் இருமுறை பார்த்து விட்டு சட்டென்று அந்த சிறு கேட் வழியே உள்ளே விறு ...விறுவென்று நுழைந்து விட்டாள்,அவள் மனம் முழுக்க ஜாமன்றி பாக்ஸ் சுபாங்கனியின் வகுப்பறையில் எங்காவது ஓரிடத்தில் கிடைத்து விட வேண்டும் என்ற வேண்டுதல் தான் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது.

ரகுராமனின் புலம்பல்களுக்கு இன்னும் அம்ருதாவின் அம்மா சொல்வதைப் போல் "மாப்பிள்ளையின் தொண தொணப்பிலிருந்தும் ...நச்சரிப்பிலிருந்தும் அம்ருதா தப்பிக்க வேண்டுமென்றால் அவளுக்கு ஜாமன்றி பாக்ஸ் கிடைத்தே ஆக வேண்டும் .

8 th standard "B" SECTION மாடியில் அல்லவா இருக்கிறது ?!

முறையாக வாட்ச்மேனிடம் அனுமதி வாங்கி வந்திருந்தாலும் பரவாயில்லை ...யாருக்கும் தெரியாமல் அல்லவா உள்ளே நுழைய வேண்டியதாகி விட்டது ?! அம்ருதாவுக்கு யாரேனும் தன்னை பார்த்து விட்டு தவறாகக் கருதி சத்தம் போட்டு மானத்தை வாங்கி விடக் கூடாதே என்ற பதை பதைப்பு வேறு கூடிக் கொண்டே போக அந்த பின் மாலை நேரத்து சிலு...சிலு காற்றிலும் வியர்த்துக் கொட்டியது .

பள்ளியின் கேட் தாண்டி உள்ளே வந்ததும் முதலில் கண்ணில் பட்டது தலைமை ஆசிரியரின் "பர்னாசாலை" போன்ற குடிசை தான் ..எத்தனை முறை மேப் எடுக்கவும் ..சாக் பீஸ் எடுக்கவும் ...மண்பானை நீர் எடுத்துப் போகவும் வந்திருக்கிறோம் ...

டீச்சர்களுக்கு மண் பானை நீர் சொம்பில் எடுத்துக் கொண்டு போய் கொடுக்க அம்ருதாவுக்கும் ...சுமதிக்கும் தான் எப்போதும் போட்டி ..யார் முதலில் ஓடிப் போய் தண்ணீர் கொண்டு வருகிறார்களோ அவர்களே ராஜம் டீச்சர் குடிமையியல் வகுப்பில் முதலில் பாடம் வாசிக்கத் தகுதி பெறுவார்கள் ...

இது அந்த டீச்சராகச் சொல்லவில்லை,பிள்ளைகளே அப்படி ஒரு முடிவு கட்டிக் கொண்டு தினம் ..தினம் இந்த போட்டி நடைபெறும் அப்போது....

சுமதியைக் காரைக்குடியில் கட்டிக் கொடுத்திருப்பதாக அம்மா சொன்ன ஞாபகம் மூளைக்குள் மின்னி மறைய நடையை எட்டிப் போட்டால் அம்ருதா ,

பத்தாம் வகுப்புக் கட்டிடத்திற்கு முன்னே சவுக்கு பாத்திகளுடன் உள்ளே ஒரு சின்ன பூங்கா போன்ற அமைப்பு உண்டு அந்தப் பள்ளியில் அதைக் காணோம் இப்போது ...அங்கே தான் அம்ருதா பரீட்சை சமயங்களில் உட்கார்ந்து படிப்பாள்...கடைசி பெல் அடித்த பின் மெயின் ஹால் பத்தாம் வகுப்புக் கட்டிடமே என்பதால் எழுந்து ஓடிப் போய் தன் பதிவு எண் பார்த்து அமர வசதி என்பதால் வேறு யாருக்கும் அந்த இடத்தை அம்ருதா விட்டுத் தந்ததே இல்லை ...

இந்தப் பக்கம் பத்தாம் வகுப்புக் கட்டிடம்...அந்தப் பக்கம் தலைமை ஆசிரியரின் பர்னாசாலை ...நடுவே பூங்கா ...அதில் வலது மூலையில் ஒரு பழைய வேப்ப மரம் அதன் தூரின் பிசினை நோண்டிக் கொண்டோ அல்லது பிளவு பட்ட பட்டைகளை உறித்துக் கொண்டோ ...தரையைக் குச்சியால் கிளறிக் கொண்டோ தான் அம்ருதா எப்போதும் பரீட்சைக்குப் படிப்பது வழக்கம் .

அதைத் தாண்டி உள்ளே நடந்தால் பிளே கிரவுண்டு ...அங்கே தான் மார்னிங் பிரேயர் நடக்கும் ..கொடிக் கம்பத்தைச் சுற்றிலும் ஒரு சின்ன ரோஜாத் தோட்டம் ..அதைத் தோட்டம் என்று சொல்ல முடியாது ..ஒரு சின்ன பாத்தியில் சில நூறு ரோஜாச் செடிகளை நட்டு அது அங்கே பூத்துக் குலுங்கிக் கொண்டிருக்கும் ஆண்டு முழுதுமே...

பிளஸ் டூ வில் அம்ருதா தான் ஸ்கூல் பீபில் லீடர் ...அந்த ஆண்டு அரைப் பரீட்சை முடியும் வரை அவள் தான் "தாயின் மணிக் கொடி பாரீர் ..அதைத் தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர் " பாடல் முடிந்ததும் கொடி ஏற்றுவாள் .அந்த கொடிக் கம்பம் இருக்கிறது ..ரோஜாப் பாத்தியைத் தான் காணோம்...அதற்க்கு பதிலாக அந்த இடத்தில் பேஸ்கட் பால் ஆடுதளம் சிமென்ட் பூசப் பட்டு நீண்டு போய் பார்வையில் பட்டது .

ஐயோ ...ஜாமன்றி பாக்ஸ் கிடைக்குமா ?

கிடைச்சிட்டா தேவலை !!!

சுபாங்கனி கூட வரவில்லை ..அப்பா வரும் நேரம்...அம்மா..மகள் ரெண்டு பேருமே வீட்டில் இல்லாததைக் கண்டால் கோபம்பொத்துக் கொண்டு வரும் ரகுராமனுக்கு ;

அம்மா காய் வாங்க கடைக்குப் போயிருக்கிறாள் என்று சொல்லி சமாளிக்க அன்னையை பள்ளிக்கு அனுப்பி விட்டு மகள் வீட்டில் இருந்தால் வீட்டுப் பாடம் செய்து கொண்டு !?

எட்டாம் வகுப்புக்கு போக மாடிப் படி ஏற வேண்டும் ...நல்ல கருங்கல் கட்டிடம் ...படிகள் நல்ல வலுவான கற்கள் ...ஒரு முறை ஏழாம் வகுப்பு முழுப் பரீட்சை முடிந்து கடைசி பெல் அடித்ததும் மாடியில் இருந்து அடித்துப் பிடித்து ஓடி வரும் போது நான்கைந்து படிகள் தாண்டும் ஸ்ரீதரன் காலை இடறியதில் அம்ருதா தலை குப்புற விழுந்து வைத்ததில் ஏற்ப்பட்ட வடு இன்னும் கூட அவளது முன் நெற்றியில் உண்டு ,

ஸ்ரீதரன் திருநெல்வேலிக்காரப் பையன் ,அம்மாவைப் பெற்ற பாட்டி தாத்தா இந்த ஊர் என்பதால் ஐந்திலிருந்து எட்டு வரை செல்லமாய் பாட்டி வீட்டில் இருந்து படித்தான் ,எட்டாம் வகுப்பு லீவில் ஊருக்குப் போனவன் தான் பிறகு டி.சி வாங்கிக் கொண்டு சொந்த ஊருக்கே அவனை அழைத்துக் கொண்டு போய் விட்டார்கள்,அவனது தாத்தா ..பாட்டி இருக்கும் வரை லீவுக்கு ரெண்டு வருடம் வரை வந்து கொண்டிருந்தான்,அதற்குப் பிறகு அவனைப் பார்க்கவே இல்லை,அவனால் ஏற்ப்பட்ட வடு மட்டும் அவனை ஞாபகப் படுத்திக் கொண்டு அம்ருதாவுடன் தங்கி விட்டது போலும்!?

முதல் மாடி ஏறி வந்தாயிற்று ...இந்த வராண்டாவின் கடைசி அரை தான் எட்டாம் வகுப்பு ..பி செக்சன் ...மொத்தம் ஆறு அறைகள் ...முதல் அரை ஏழாம் வகுப்பு எ செக்சன் ...

அங்கு கஸ்தூரி டீச்சர் தான் கிளாஸ் டீச்சர் ...அம்ருதாவுக்கு கஸ்தூரி டீச்சரை ரொம்பப் பிடிக்கும். டீச்சருக்கு நீளமான பின்னல் ...வெள்ளிக் கிழமைகளில் தலைக்கு ஊற்றிக் கொண்டு தளர்வாய்ப் பின்னி கூந்தலில் உச்சியில் துளி மல்லிகைப் பூ கிள்ளி வைத்துக் கொண்டு வருவார் ...

பிள்ளையார் கோயிலுக்குப் போய் வந்ததற்கு சாட்சியாய் நெற்றியில் சின்னக் கீற்றாக திருநீறு, மெலிதாக மஞ்சள் பூசிய அடையாளம் தெரியும் ,எப்போதும் டீச்சர் வட்டப் பொட்டு வைத்துக் கொண்டு அம்ருதா பார்த்ததில்லை நீட்டப் பொட்டு தான் இப்போதும் கூட!

டீச்சரின் தூரத்துச் சொந்தம் தான் ரகுராமன் என்பதால் அவள் டீச்சரை எப்போதாவது குடும்ப விஷேசங்களில் பார்ப்பது உண்டு இப்போதும்...

அதெல்லாம் போகட்டும் ...இப்போது ஜாமன்றி பாக்ஸ் ...ஐயோ...அது கிடைக்க வேண்டுமே ?!

அதற்குத் தானே பல வருடங்கள் கழித்து இப்போது இந்தப் பள்ளிக்குள் நுழைந்தோம் !!!

ஞாபகங்கள் மின்னி மின்னி மறைய எல்லாவற்றையும் உதறி விட்டு எட்டாம் வகுப்பு பி. செக்சனுக்குள் ஒரு வழியாய் அம்ருதா நுழைந்து விட்டாள்.வலது புறம் மூன்றாவது பெஞ்சில் நான்காவது இடம் தான் சுபாங்கனியின் இடம் !!!

அதே வலது புறம் இரண்டாவது பெஞ்சில் ஜன்னலோரம் முதல் இடம் அம்ருதாவின் இடமாக இருந்தது முன்னொரு நாளில் !?

அதே மர பெஞ்சுகள் ..டெஸ்க்குகள் ...வகுப்பறையின் சிமென்ட் தரை ...கரும் பலகை ...சாக் பீஸ் வைக்கும் சின்ன மரப் பெட்டி ,

"அங்கிங்கெனாத படி எங்கும் பிரகாசமாய் ஆனந்த ஜோதியாகி ..."

"ஒருமையுடன் நினது திரு மலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும்"

"இந்தியாவில் அதிகமாய் மழை பொழியும் இடம் சிரபுஞ்சி "

"உலகின் கூரை திபெத் ""ஏய் சண்முகப் பிரியா உன் இடத்தில பென்சில் துருவிப் போட்ரீ ஏன் டெய்லி என் இடத்துல போடற ? டீச்சர் கிட்ட சொல்லித் தாரேன் இன்னைக்கு பாரு நீ...

போய்ச் சொல்லிக்க போடீ (இது அந்த சண்முகப் பிரியா )

பாண்டிச் செல்வி எனக்கு இண்டர்வெல்ல மாங்க பத்தை வாங்கித் தா...நேத்து நான் கொய்யாப் பழம் வாங்கிக் கொடுத்தேன் இல்ல..இன்னைக்கு உன் முறைடீ ஞாபகம் இருக்கு இல்ல?!

கலவையாய் பல குரல்கள் காற்றில் பரவி செவியில் வந்து மோத...

அம்ருதா ஜாமன்றி பாக்சை மறந்து போக முடிவு செய்யாமலே தானாய் அது நினைவில் இருந்து நழுவி ஓடியது போலும்?!

அம்ருதா ஏன் மேத்ஸ்ல மார்க் கம்மி ? சயின்ஸ் ல மட்டும் 98 வாங்கியிருக்க ? என் பாடம் உனக்கு வேப்பங்காயா இருக்காக்கும்? மேத்ஸ் டீச்சர் அனுராதா தான் இது?!

விடுங்க டீச்சர் அடுத்ட பரீட்சைல பாருங்க அம்ருதா மேத்ஸ்ல 100/100 வாங்குவா பாருங்க..இது சயின்ஸ் வாத்தியார் முருகன் ...

கடைசியில் அம்ருதா எதில் 100/100 வாங்கினாள்?!

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!(&) !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

ஸ்ட்ராபெர்ரி தெரியும் அதென்ன கிரேன்பெர்ரி !!! (மீள் பதிவு)



இதுவும் ஸ்ட்ராபெர்ரி போல ஒரு பழ வகை தான் , இங்கே இந்தியாவில் இது நிறையக் கிடைக்குமா என்ன என்பதெல்லாம் தெரியவில்லை ,ஆனால் "பெரும்பாலும் பெண்களுக்கு வரும் "சிஸ்டைடிஸ்" எனும் உபாதைக்கு இது ஒரு மிகச் சிறந்த நிவாரணி என்று மருத்துவ அறிக்கை கூறுகிறது .இதை ஜூஸ் செய்தும் குடிக்கலாம் ...மாத்திரை பட்டைகளாகவும் கிடைக்கும் .


சிஸ்டைடிஸ் பெண்களை மட்டும் பாதிப்பதில்லை ...ஆண்களும் பாதிக்கப் படலாம் , எல்லா வயதினரையும் தாக்கலாம் .பெரும்பாலும் பெண்கள் இருபது முதல் ஐம்பத்து வயது வரை இதனால் பாதிக்கப் படுகின்றனர் .ஒவ்வொரு முறை சிறுநீர் கழிக்கும்போதும் அளவற்ற எரிச்சல் ஏற்பட்டாலோ அல்லது அடிவயிற்றில் வலி இருந்தாலோ ...கலங்கலான நிறத்தில் சிறுநீர் வெளிப்பட்டாலோ ...சிறுநீருடன் ரத்தம் கலந்து வந்தாலோ , அல்லது இந்த அறிகுறிகளுடன் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் அவஸ்தை ஏற்பட்டாலோ ஒருவர் ஆணோ அல்லது பெண்ணோ சிஸ்டைடிஸ் உபாதையால் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள் எனத் தெரிந்து கொள்ளலாம் .


இந்நோய் பெரும்பாலும் இ . கோலி எனும் பாக்டீரியாவால் தான் பரப்பப்படுகிரதாம் . இது சிறுகுடல் பகுதியில் காணப்படும் . பெரும்பாலும் சுத்தமின்மை காரணமாகவும் , உடலில் ஏற்ப்படும் நீர் இழப்பின் காரணமாகவுமே இந்த பாக்டீரியா உடலில் கிட்னி கும் கூடப் பரவ வாய்ப்பு ஏற்படலாம் . சரி...சரி .இப்படியே நீட்டிக் கொண்டு இன்னும் பத்துப் பக்கங்கள் கூட எழுதலாம் தான் ...


கிரான்பெர்ரி என்ற பெயர் புதிதாக இருக்கிறதே என்று நெட்டில் தேடினால் இப்படி ஒரு பயனுள்ள விஷயம் சிக்கியது .இந்தப் பழங்களில் சிட்ரிக் அமிலம் அபிரிமிதமாக இருப்பதால் இது இந்த உபாதையைத் தீர்ப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது அவ்வளவு தான் மேட்டர் !!!கிரேன் பெர்ரி கிடைத்தால் சரி தான் .

Friday, April 17, 2009

"வாழிய விடியல்...வாழிய கதிரோன் "


உள்ளுக்கும் வெளிக்கும்

முயங்கித் தயங்கி

தட்டுத் தடுமாறி

வட்டத்துள் உழலும்

வாட்டம் பறித்து

முக்காலும் மறந்து

ஓடிப் பறந்து

நகர்ந்து முகர்ந்து

மறைந்து தெளிந்து

சட்டென்று மூச்சிரைக்க

நட்டநடு தீவில் நின்றும்

நவரசம் மறக்கா

சித்திரச் சிற்றாடை

துவளத் தழுவும்

பன்னெடும் திக்கில்

செங்கதிர் பரவல்

வாழிய விடியல்

வாழிய கதிரோன் ...

Thursday, April 16, 2009

அழகரும் ஆற்றுக்கொலைகளும் ..திரி திரி பொம்மக்காவும்

அழகர் ஆற்றில் இறங்கும் காட்சி கண்கொள்ளாக் காட்சி மதுரையில் மட்டும் அல்ல ...எங்கள் ஊரிலும் தான் ,முழங்கை உயர கம்பீர வெண்கலச் சிலையாய் மரக் குதிரையில் பச்சைப் பட்டோ ...சிவப்புப் பட்டோ உடுத்தி கழுத்து கொள்ளா நகைகளோடு அழகர் எங்கள் ஊர் வைகை ஆற்றின் நடுவில் எழுந்தருளும்போது பெரும்பாலும் பிற்பகல் நேரம் ஆகிவிடும் ..தக தகவென சூரிய ஒளியில் ஆற்று மணல் வெள்ளியாய் மின்ன , கரையோர தென்னை மரங்கள் அழகரை கீற்றசைத்து வரவேற்க அந்த பின் மாலைப் பொழுது வெகு ரம்யமாய் தோன்றும் .

அழகர் ...ஏன் எப்போதும் முழுக்கை சட்டை போட்டுக் கொண்டிருக்கிறார் ? என்று ஒரு குழந்தை தன் அம்மாவிடமோ..பாட்டியிடமோ கேட்டுக் கொண்டிருப்பதும்...பொடிப் பொடியாய் நசுக்கிய வெல்லத் தூள் பிரசாதமாக தரப் படுவதும் ,துளசி தீர்த்தமும் அதன் சில்லிப்பு வாசமும் ...ஜடகோபுரம் கவிழ்த்து ஆசிர்வதிக்கப் படும் விதம் விதமான தலைகளும் ... பலவர்ணத் துணிகளால் தயாரான பட்டுக் குஞ்சலங்கள் ஆடும் பெரிய பெரிய குடைகளும் கண்முன்னே விரிகின்றன .

ஒவ்வொரு வருடமும் மதுரை சித்திரைத் திருவிழா அன்று எங்கள் ஊர் வைகை ஆற்றிலும் கள்ளழகர் கண் நிறைக்க எழுந்தருளி மறுநாள் காலையில் ஊரெல்லாம் பவனி வருவார். அது ஒரு கோலாகலத் திருவிழா .சென்ற வருடம் இதே திருவிழாவுக்கு ஊருக்குப் போன எனக்கு கொஞ்சம் அல்ல பெரிய அதிர்ச்சி அங்கே காத்திருந்தது .

அழகரை எப்படி குதிரையிலிருந்து பிரிக்க முடியாதோ அப்படியே வைகை ஆற்றிலிருந்தும் பிரித்து விட முடியாது,அழகர் என்றாலே வைகை ஆறு தானே ஞாபகம் வரும் . இப்படிப் பசுமையான நினைவுகளோடு அழகரை தரிசிக்க ஆற்றில் இறங்கினால் கண்ட காட்சியில் கண் நிறைய கண்ணீர் தளும்ப கேவி கேவி அழுது விட்டால் தேவலை என்று ஆகி விட்டது .

ஆறு கிடந்த கோலம் வயிற்றுக்குள் ஏதோ பிசைந்த உணர்வு ,ஆற்றோரப் புளிய மரம் தன் தூரில் மண் ஒட்டாமல் அனாதையாய் பரிதாபமாய் நின்று கொண்டிருந்தது ...என் குழந்தைப் பருவத்தில் அந்த மரத்தின் தூர் கண்ணுக்கு புலப் பட்டு கண்டதில்லை நான் ...அரை வாசி மரம் ஆற்று மணலில் புதையுண்டு சாய்ந்து விளையாட வாகாய் நின்றிருக்கும் தண்டு ..இன்றோ சண்டையிட்டுப் பிரிந்து போன சேக்காளிகள் போல அது தனியே ஒரு ஓரம் தூர் தனியே மறு ஓரம் ..வேர் கூட வெளித் தெரிய பரிதாபத் தோற்றம் .

அதை விடுங்கள் ...இன்னும் கொஞ்சம் பார்வையை வீசிப் போட்டால் நட்ட நடு ஆற்றில் மருந்துக்கும் மணல் இல்லை ...ஏதோ எல்லா மணலையும் பெயர்த்து எடுத்துக் கொண்டு போய் விட்டார் போல தரை மட்டும் அசிங்கமாய் தன் முகம் காட்டிக் கொண்டு நின்றது தகிடு முகடாய் .

ஆறு எங்கே ? ஆற்று மணல் எங்கே? தானே உதிரும் புளியம் பழங்களை தின்று மிஞ்சிய புளிய முத்துக்களை மணலில் ஓட்டி விளையாடிய "திரி திரி பொம்மக்கா "விளையாட்டு ....எல்லாம் இனி என் மகளுக்கு அங்கே மிச்சம் இல்லையா ?மனம் கண்டபடி சிந்த்தித்து அழ முயல புத்தி இடித்துக் காட்டியது ...
அடி பெண்ணே ...ஆறே இல்லை நீ என்ன பொம்மக்கா விளையாட்டுக்குப் போய் விட்டாய் ? போய் வேறு ஏதும் வேலை இருந்தால் பார் ...ஆறு கொலை செய்யப் பட்டு பல நாட்கள் ஆகிறது ,காலம் கடந்து வந்து வெறும் பார்வையாளராய் கண்ணில் நீர் மிதக்க விட்டு யாதொரு பயனும் இல்லை .

உண்மை தான் இங்கே நான் மட்டுமா பார்வையாளர் ?! அழகரும் அவரது குதிரையும் ...குஞ்சலங்கள் வைத்த பட்டுக் குடைகளும் பார்த்துக் கொண்டு தானே இருக்கின்றன நடப்பதை ,

மணல் கொண்டு இனி ஆற்றை நிரப்ப முடியுமா? கேள்வியோடு வீட்டுக்குத் திரும்பினேன் .

இந்த வருடமும் சித்திரை வந்தாயிற்று ...அழகரும் வருவார் ...எத்தனை தூரம் தரை தெரிய ஆறு அமிழ்ந்து போனாலும் ஆற்றில் தான் இறங்குவார் .சென்று பார்க்கும் அந்த நேரம் மட்டும் மனசாட்சியை ...பால்ய நினைவுகளை கொஞ்சம் தட்டி அடக்கி விட்டால் திருவிழா செல்வதில் பாதகமில்லை .

Wednesday, April 15, 2009

எனக்குப் பிடித்தவர்கள் ...(நண்பர் ஜமால் எழுத அழைத்த தொடர் பதிவு)

எனக்குப் பிடித்தவர்கள் ...இந்தப் பதிவை நண்பர் ஜமால் எழுத அழைத்து நாட்கள் பல கடந்து விட்ட நிலையில் இன்று இதை எழுதுகிறேன் ,எனக்குப் பிடித்தவர்கள் என்று லிஸ்ட் போட ஆரம்பித்தேன் ...அந்தப் பட்டியல் அது பாட்டுக்கு நீண்டு கொண்டே போகிறது ,பிரபலமானவர்களை பற்றிச் சொல்வதை காட்டிலும் சிறு வயதில் இருந்து நான் கடந்து வந்து கொண்டிருக்கும் எனது வாழ்க்கை பயணத்தில் என்னால் மறக்க முடியாத சில சுவாரஸ்ய மனிதர்களைப் பற்றி "எனக்குப் பிடித்தவர்கள் லிஸ்ட்டில் சொன்னால் என்ன என்று தோன்றியதால் இந்தப் பதிவு வந்தது இப்போது .

சரி இனி பதிவுக்குச் செல்லலாம் ...

எனக்கு 80 வயது ஆனாலும் கூட இன்று போலவே இவர்களை அன்றும் எனக்குப் பிடித்தே இருக்கக் கூடும் என்று நினைக்கத் தக்க வகையில் என்னால் மறக்க இயலா நபர்கள் இவர்கள் ,யார் அவர்கள் ?

1.ஒன்னாப்பு வாத்தியார்
2.ரூபி சிஸ்டரின் அப்பா
3.ஆண்டாள் டீச்சர்
4.பூமா என்றொரு பிரியமான சிநேகிதி
5.வெயிலு வந்தாள் என்ற வித்யாசமான பெயரில் அறிமுகமான பக்கத்து வீட்டு அக்கா
6.கே.எல்.ஆர் தாத்தா

இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன் ...மேலே நான் குறிப்பிட்ட நபர்களுக்குள் ஒரு மிகப் பெரிய ஒற்றுமை என்னவெனில் எவருமே தற்போது உயிருடன் இல்லை,அதனால் தானோ என்னவோ அவர்களைப் பற்றி எழுதத் தோன்றியது எனக்கு .

1.ஒண்ணாப்பு வாத்தியார்

முதலில் ஒன்னாப்பு வாத்தியார் (இவரது பெயர் எனக்கு நினைவில் இல்லை ...ஆனால் ஒற்றை நாடி தேகத்துடன் நல்ல பளீர் வெள்ளையில் வேஷ்டி ,சட்டையில் எப்போதும் கதை சொல்லிக் கொண்டிருக்கும் இவரை எனக்கு மட்டுமல்ல அன்று என்னுடன் பயின்ற எல்லா மாணவர்களுக்குமே மிகப் பிடிக்கும் மிக சுவாரஸ்யமான மனிதர் ,திருமணமே செய்து கொள்ளவில்லை என்று நினைக்கிறேன் நெற்றி நிறைய பால் வெள்ளையில் திருநீறு பூசிக் கொண்டு இவர் கதை சொல்லும் அழகே தனி தான் .இவரைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள பொறுமை இருப்பவர்கள் எனது முந்தைய இந்த பதிவைப் படித்துக் கொள்ளுங்கள் .

http://mrsdoubt.blogspot.com/2008/11/blog-post_18.html


2.ரூபி சிஸ்டரின் அப்பா
இவரை தாத்தா என்று அழைத்தாலும் கூட ரூபி சிஸ்டரின் அப்பா என்று சொன்னால் தான் அந்தப் பகுதி மக்களுக்குப் தெரியும் ,ரூபி சிஸ்டர் மானாமதுரையில் ஒரு கிறிஸ்த்தவ மருத்துவமனையில் அப்போது பணிபுரிந்த நர்ஸ் ,கறுப்பாக இருந்தாலும் சிஸ்டருக்கு களையான முகம் ,என் அம்மாவின் சிநேகிதியாக அறிமுகமான ரூபி சிஸ்டரின் வீட்டுக்கு எப்போதாயினும் விடுமுறை நாட்களில் அம்மா அழைத்துப் போவார் ,அப்படித் தான் எனக்கு ரூபி சிஸ்டரின் அப்பாவைத் தெரியும் ,தாத்தா பாரம்பரியமான கிறிஸ்த்தவக் குடும்பத்தை சேர்ந்தவர் அப்போதே அழகிய ஆங்கிலத்தில் தினம் டயரி எழுதும் பழக்கம் அவருக்கு இருந்தது ,அவரது வீட்டுக்கு செல்லும் எல்லாக் குழந்தைகளிடமும் தனது டயரியை நீட்டி வாசித்துப் பார்க்கச் சொல்லுவார் பளபளப்பான வெல்வெட் அட்டையுடன் வழ வழப்பான பக்கங்களுடன் சற்றே சாய்வாக தாத்தாவின் கையெழுத்தில் நிரம்பி இருக்கும் அந்த டயரி இன்றும் என் கண்ணை விட்டு மறையவில்லை ,எனக்கு டயரி எழுதும் பழக்கத்தை தாத்தா தான் முதன் முதலில் அறிமுகப் படுத்தினார் ,அந்த அளவில் நடிகர் மீசை முருகேசை ஞாபகப் படுத்தும் தாத்தாவும் கூட மறக்க இயலாத நபர் .
3.ஆண்டாள் டீச்சர்
டீச்சரைப் பற்றி புதுதாக நான் என்ன சொல்லிவிடப்போகிறேன் ..விருப்பமிருப்பவர்கள் ஆண்டாள் டீச்சரைப் பற்றி நான் முன்பே எழுதிய இந்த பதிவைப் பார்ர்த்துக் கொள்ளுங்கள் தமிழ்மணத்தில் சூடான இடுகைகளில் வந்த பதிவு இது ,"ஆண்டாள் டீச்சரும் பாலசந்தர் ஹீரோயின்களும் " என்ற தலைப்பில் .அந்தப் பதிவுக்கான சுட்டி கீழே.
4.பூமா என்றொரு பிரியமான சிநேகிதி
பூமாவைப் பற்றி என்ன சொல்ல? பூமா ஏழாம் வகுப்பு முடிந்து எட்டாம் வகுப்புக்கு என்னோடு வரவில்லை ,வீட்டில் சம்பாதிக்கும் ஒரே ஆணான அவளது தந்தை அப்போது எதிர்பாராமல் இறந்து விட்டார் ,எட்டாம் வகுப்பில் சொந்தத் தாய்மாமனுக்கே அவள் திருமணம் செய்து வைக்கப் பட்டாள்,பாவம் பூமா ...இப்போது நினைத்தாலும் எனக்கு கண்களில் நீர் திரையிடும், தனது சிறுமிப் பருவத்தில் அதற்குண்டான எந்த உரிமைகளையும் அனுபவிக்காத அல்லது அனுபவிக்க அனுமதிக்கப் படாத சிறுமி அவள் . வெகு இளமையிலேயே கணவன்..குழந்தை என்று குடும்பம் என்ற சிக்கல்களுக்குள் உழன்று காணாமல் போனவள் .ஒற்றைக் கல் மூக்குத்தி ...ரெட்டைப் பின்னல் ...அழகான வண்டுக் கண்கள் ...இப்போதும் பூமாவை நினைத்தால் மனம் ஆறவில்லை தான், அவள் சொர்க்கத்தில் இருக்கக் கூடுமோ என்னவோ இப்போது ?!

5.வெயிலு வந்தாள் என்ற வித்யாசமான பெயரில் அறிமுகமான பக்கத்து வீட்டு அக்கா
இவரது பெயர் இது தான் ...குல தெய்வப்பெயராம்,நாங்கள் அங்கு வசித்த போது இவருக்கு வயது நிச்சயமாய் இருபத்து ஐந்துக்கு மேல் இருக்கும் ,திருமணம் முடிந்து அன்பான கணவருடன் தனிக் குடித்தனம் வேறு, கணவர் பரமேஸ்வரன் மிக நல்ல மனிதர் ,என் பாட்டியுடன் மனா மதுரை மார்கட் போவது,வீட்டுக்கு கரண்ட் பில் கட்டுவது என்று சிறு சிறு இன்றியமையாத உதவிகள் செய்வார்,கணவன்..மனைவி இருவர் மீதும் என் பாட்டிக்கு வெகு பிரியம் ,வீட்டில் என்ன பலகாரம் செய்தாலும் அவர்களுக்கும் அன்போடு கூப்பிட்டுக் கொடுப்பார் .வெயிலு வந்தா அக்காவுக்கு குழந்தைகள் இல்லை அப்போது ,நாங்கள் அம்மாவின் பணி மாறுதலின் பின் இடமாற்றம் செய்தோம் .
பிறகு சற்றேறக் குறைய மூன்று ஆண்டுகளின் பின் கேள்விப் பட்ட செய்தி மிக அதிர்ச்சி அளித்த ஒன்று ,வெயிலு வந்தா ...பரமேஷ்வரன் தம்பதிக்கு அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்த பின் பரமேச்வரனின் சிமென்ட் ஆலை வேலை பரி போனதாம் ஆட்கள் குறைப்பில். இடையில் குடும்ப வறுமை இன்னும் பல சொல்ல தெரிய காரணங்களால் வெயிலு வந்தாளின் நடத்தை மாற பரமேஷ்வரன் தன் அன்பான மனைவியை தானே அரிவாளால் வெட்டிக் கொன்றார் .இது அப்போது பத்திரிகைகளில் கூட வந்திருக்கக் கூடும் . பாளையம் கோட்டை சிறையில் இருந்த பரமேஷ்வரன் தனக்காக வாதாட சொல்லி வழக்கறிஞராக இருந்த என் தாய் மாமாவுக்கு எழுதிய கடிதத்தில் தெரிய வந்த செய்தி இது .
இன்று பரமேஷ்வரனுக்கு மறு திருமணம் நடந்திருக்கக் கூடும் .அந்தப் பெண் குழந்தை என்ன ஆயிற்று என்று தெரியவில்லை ,வெயிலு வந்தா ...பெயரைப் போலவே வினோதமான வாழ்வும்..முடிவும் இவருக்கு .
6.கே.எல்.ஆர் தாத்தா
என் கல்லூரி விடுமுறை நாட்களில் தாத்தாவின் நூலகம் எனக்கு மிக மகிழ்வைத் தந்த ஒரு விஷயம் ,யாருக்கும் அத்துணை எளிதாக தன் நூலகச் சாவியைத் தராத தாத்தா நான் என் ஐ.ஏ.எஸ் கனவைக் கூறியதும் வெகுவாக மழிந்து போய் உற்சாகமாக அவரது சிறிய ஆனால் செறிவான புத்தகங்கள் நிறைந்த நூலகத்தை எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்த எனக்கு அனுமதி தந்தார் .
அங்கே தான் எத்தனை அருமையான புத்தகங்களை சேர்த்து வைத்திருந்தார் தாத்தா !!?? இப்போது நினைத்துப் பார்த்தால் நான் அப்போது சரியாக அந்த நூலகத்தைப் பயன்படுத்தி இன்னும் நிறைய வாசித்திருக்கலாமோ என்ற எண்ணம் நெருடுகிறது ,தாத்தா அவர் காலத்தில் நடந்த பல சுவையான சம்பவங்களைப் பற்றியெல்லாம் கூட மணிக் கணக்காகப் பேசுவார் ,
தெரிந்து கொள்ளம்மா ...பிறர் வாழ்வின் அனுபவங்கள் உனக்குப் பாடங்களாக இருக்கும், நான் என்று இல்லை ஒவ்வொரு மனிதனின் வாழ்வியல் அனுபவமும் இன்னொருவனுக்கு பாடம் தான் ...படிப்பினை தான் என்பார். கூடவே பெண்கள் சாதிக்க வேண்டுமானால் திருமணம் என்பது மிகச் சரியான நபரோடு அமைய வேண்டும் .
இரட்டை மாட்டு வண்டியில் இரண்டு மாடுகளும் ஒத்து நடந்தால் தான் பயணம் போய்ச் சேர வேண்டிய இடத்திற்குப் உரிய வகையில் போய்ச் சேரும் ,ஒரு மாடு சண்டி மாடானால் மொத்த வண்டியும் குடை சாயும் "வாழ்க்கை மாட்டு வண்டி தான் மாடுகள் கணவனும்..மனைவியும் ஒத்த மனம் அமைய வேண்டும் என்பார் .
"எங்கள் திருமண வரவேற்புக்கு தம்பதி சமேதராக வந்திருந்து ஆசிர்வதித்த அந்த தாத்தாவையும் பாட்டியையும் என்னால் மறக்க இயலாது தான் .இப்போது தத்தா இல்லை சென்ற மாதத்தில் ஒருநாள் இவ்வுலகை விட்டு பிரிந்தது அவரது இன்னுயிர் . என்னைப் பொறுத்தவரை மிக நல்ல ஆத்மா .தாத்தா கோவையின் சமையற்கலை மேதை அன்னபூர்ணா திரு தாமோதரசாமி நாயுடு அவர்களின் சம்பந்தி என்பது கூடுதல் தகவல் .அவரது ஆத்மா சாந்தி அடைய எப்போதும் நான் பிரார்த்திக்கிறேன்.
பதிவு நீண்ட பதிவாகிக் கொண்டே போவது போல ஒரு எண்ணம் அதனால் இத்தோடு முடித்துக் கொள்கிறேன் .

கனவு மெய்ப்படுமே...?!



நெடு நேரக் கனவின் பின்


ஒருநாள் விழித்தெழுந்தும்


தொடரும்


கனவின் நிழலில்


இடிபாடுகளுடன்


அழுக்கடைந்த கலசங்களின்


உச்சியில்


பட்டும் படாமலும்


சட சடத்துப் பறக்கும்


புறாக்களின் சிறகசைவில்


காற்றின் மென் சுருட்டலில்


அதிரத் தளும்பும்


உலர் பூக்களின் சறுகோசையில்


அத்திப் பழ இனிப்பு நெடியில்


கை ஒட்டிய பாவனையில்


துடைத்துக் கொள்ள துணி தேடும்


தூசுக் கலவை நாசி தாக்க


புகை படிந்த ஓவியமாய்
ஞாபகப் பரணில்


பத்திரப்படுத்தப் பட்ட
ஏதோ ஒரு கோயில்


நிஜமாய் கண்ணில் பட்டால்
கனவு மெய்ப்படுமே


வாழ்வின் நிஜங்கள் தென்படுமே ?!

Tuesday, April 14, 2009

பிசு பிசுக்கும் ...நச நசப்பில் நகரும் நாட்கள் ?!


உள்ளிருக்கும் இரைச்சல் ஓயும் நேரம்

நெருங்காக் கனவில் அறிந்தும் அறியா

ஏராள நினைவுகள் ;

இமைக்க மறந்தாலும் கண் திறக்கவொட்டா

கடலோர நுரைச் சிதறலின் முன்

காத்திருக்கும் மணற்துகள்களாய்

உறுத்தியும் உறுத்தாமல்

ஒட்டிக் கொண்டு பிசுபிசுக்கும்

நச நசப்பில் நாட்கள் நகர்கின்றன

தூரத்தே கலங்கரை விளக்கம்

Monday, April 13, 2009

வாழ்க்கையே லாஜிக் இல்லா மேஜிக் தானோ?!

தொல்காப்பியமும்
நன்னூலும்
அஃறிணையென்று விதித்த
நாயும் பசுவும்
எஜமான விசுவாசம் கொண்டு
பகுத்தறிந்தே வாழ்கின்றன ...
நாயோடும் ,பசுவோடும்
பழகியவர் சொல்லக் கேட்டேன் ;
சிந்தித்தல்
ஆறாவது அறிவென்றால்
இது என்ன?
பழக்க தோசமா ?!
அனிச்சை செயலா ?
நாயும் ... பசுவும்
உயர்தினையென்றால்
இலக்கணம் தவறா ?!
திணை மயக்கமா ?!
வாழ்க்கையே ...
லாஜிக் இல்லா மேஜிக் தானோ?!

Wednesday, April 8, 2009

பாப்பு...தொட்டில் பாட்டு...மற்றும் குத்துவிளக்கில் காய்ச்சிய பால் !!!

தாயே யசோதா உந்தன் ஆயர் குலத்தில் உதித்த
மாயன் கோபால கிருஷ்ணன் செய்யும் ஜாலத்தை பாரடி
தையலே கேளடி ...உந்தன் பையனைப் போலவே
இந்த வையகத்தில் ஒரு பிள்ளை அம்மம்மா நான் கண்டதில்லை ....

தாயே யசோதா உந்தன் ஆயர் குலத்தில் உதித்த
மாயன் கோபால கிருஷ்ணன் செய்யும் ஜாலத்தை பாரடி ;

பாலனென்று தாவி அணைத்தேன் அணைத்த என்னை
மாலையிட்டவன் போல் வாயினில் முத்தமிட்டான்டியசோதா ...
பாலனென்று தாவி அணைத்தேன் அணைத்த என்னை
மாலையிட்டவன் போல் வாயினில் முத்தமிட்டான்டிபாலனல்லடி
உன் மகன் ஜாலமாகச் செய்வதெல்லாம் நாலு பேர்கள் கேட்க சொன்னால் நாணம் மிக ஆகுதடி ...

தாயே யசோதா...
காலிலே சிலம்பு கொஞ்சவே கைவளை குலுங்கிட
முத்து மாலைகள் அசைய தெரு வாசலில் வந்தான்
வானவரெல்லாம் புகழ மானிடரெல்லாம் மகிழ
நீலவண்ணக் கண்ணனவன் நர்த்தனம் ஆடினான் .

தாயே யசோதா...

தாயே யசோதா உந்தன் ஆயர் குலத்தில் உதித்த
மாயன் கோபால கிருஷ்ணன் செய்யும் ஜாலத்தை பாரடி ;
தையலே கேளடி ...உந்தன் பையனைப் போலவே
இந்த வையகத்தில் ஒரு பிள்ளை அம்மம்மா நான் கண்டதில்லை ....

பாடலின் வரிகளை நான் சரியாக வரிசைப் படுத்தி இருக்கிறேனா என்ன என்று தெரியவில்லை,எனக்குத் தெரிந்த வரையில் எழுதியாகி விட்டது ..பலர் இந்தப் பாடலைக் கேட்டிருக்கக் கூடும் .அருமையான பாடல்.

இந்தப் பாடலை எஸ்.பி.பியின் தேன் குரலில் முதன் முதலில் கேட்கும் போதே பரம ஆனந்தமாக இருக்கும் ,பிடித்துப் போனதால் அடிக்கடி இதே பாடலை கேட்டதில் பாடல் மனதில் பதிய பாப்பு பிறந்ததும் அவளைத் தூங்க வைக்க தொட்டில் பாட்டாக இதையே பாடுவேன்.

வீட்டில் அப்பாவிலிருந்து ....தம்பி ...அப்போது அம்மா வீட்டில் இருந்ததால் வார இறுதி விடுமுறையில் எங்களைக் காண வரும் தேவ் ...என் அம்மா எல்லோருமே சிரிப்பார்கள்,ஏனென்றால் பாப்புவை தொட்டிலில் போட்டு எத்தனை தொட்டில் பாட்டுக்கள் (தாலாட்டு ) பாடினாலும் அவள் கண்களை மூடி தூங்குவதற்கான எந்த முகாந்திரமும் தெரியாது.

என் இரு பாட்டிகளும் பழைய தொட்டில் பாட்டுக்கள் நீள...நீளமாக நிறைய பாடுவார்கள் .கிட்டத் தட்ட அரைமணி முதல் ஒருமணி நேரம் வரை பெரிய பெரிய பாட்டுக்கள் எல்லாம் கூட அருமையாகப் பாடுவார்கள் ...பாப்பு அதை எல்லாம் கர்ம சிரத்தையாகக் கேட்டுக் கொண்டிருப்பாள் கால் கட்டை விரலை வாயிலிட்டுக் கொண்டோ அல்லது கை கட்டை விரலை சப்பிக் கொண்டோ ,

ஆனால் கண்களில் மட்டும் பல்ப் எரிவதைப் போல அந்தப் பாட்டுக்களைக் கேட்ட பின் தான் அதிக வெளிச்சம் தெரியும் .அவள் தூங்கப் போவதற்கான அறிகுறியே தெரியாது.;கடைசியில் அவளைத் தூங்க வைக்கப் பாடிப் பாடி களைத்துப் போய் பாட்டிகள் தாங்கள் பாடிய பாட்டுக்கு மயங்கி தாங்களே தூங்கி விடும் வழக்கமாகி விட !!!

இதேதடா துன்பம் என்று அதற்குப் பின் தான் இந்தப் பாடலை அந்தக் கண்ணனே காதில் விழவைத்தான் போல என்றெண்ணிக் கொண்டோம் , இப்போது பாட்டிகளுக்கு தாலாட்டுப் பாடும் தினப் படி ஹோம் வொர்க்கில் இருந்து சற்றே விடுதலை, இந்தப் பாடலை வேறு யார் பாடினாலும் பாப்பு தூங்க மாட்டாள் ...அவளுக்கு அவளது அம்மா தான் இந்தப் பாடலை பாட வேண்டும் !!!

கற்பனை செய்து பாருங்கள் தினமும் ஆறு மாதக் கைக்குழந்தை ஒன்று பகலெல்லாம் தூங்காமல் ...இரவுகளிலும் அரைமணி நேரத்திற்கு ஒருமுறை விழித்துக் கொண்டு எந்நேரமும் விளையாடிக் கொண்டே இருந்தால் அந்த வீட்டில் கலகலப்புக்கு பஞ்சம் இருக்காது ...கூடவே பெரியவர்கள் (ஐ மீன் தொட்டில் பாட்டுப் பாடி களைத்துப் போன பாட்டிகள் அன் கோ ?) எப்படித் தான் தூங்குவதாம் ?

வந்தது விடியல்!? பாப்பு இந்தப் பாடலைக் கேட்டதும் ஆழ்ந்து தூங்க ஆரம்பித்து விடுவாள் ...எல்லாம் ஒரு இரண்டு மணி நேரம் மட்டுமே...பிறகு மறுபடி ...ம்மா ... ங்கா...ஞ்சா...சத்தம் ஆரம்பிக்கும்...மறுபடி தொட்டில் பாட்டு தான் ...ஆக மொத்தம் எத்தனை பேர் பாடினாலும் கடைசியில் இந்தப் பாடல் பாடினால் மட்டுமே பாப்பு தூங்குவாள்.

இதில் ஒரு ட்ரிக் வேறு வைத்திருந்தாள் பாப்பு ...முதலிலேயே இந்தப் பாடலை பாடி விட்டால் பாப்பு உடனே தூங்கி விடுவாள் என்று முதலில் இந்தப் பாடலை பாடினோம் என்று வையுங்கள் ஒரு பிரயோஜனமும் இல்லை ,பாப்பு கிருஷ்ணா பரமாத்மா போல தொட்டில் நிறைக்க சிரித்துக் கொண்டே தான் இருப்பாள் யார் தொட்டிலை ஆட்டுகிறோமோ அவர்களது முகத்தைப் பார்த்துக் கொண்டு தெய்வீகச் சிரிப்பை சிந்திக் கொண்டு .

சும்மா இரண்டு பாடல்களை முதலில் பாடி முடித்து விட வேண்டும்...கடைசியில் மூன்றாவதாக இந்தக் கண்ணன் பாட்டு பாடினால் ஒரு இரண்டு மணி நேரத்திற்கு நாம் ஓய்வெடுத்துக் கொள்வதற்கு உத்தரவாதம் உண்டு ,பாப்பு இந்தப் பாடலில் தான் தூங்குவதென அப்போதே ஏதேனும் சத்யப் பிரமாணம் செய்து கொண்டிருப்பாளோ என்னவோ?

அதிலும் இந்தப் பாடலை அவளது அம்மாவின் இனிய குரலில் தான் (ஹா ...ஹா..ஹா...ஆறு மாதக் குழந்தைக்கு அம்மாவின் குரல் மட்டுமே இனிமையாக இருக்கக் கூடும் மற்றேல்லாருடைய குரலைக் காட்டிலும் !!!சரி தானே நான் சொல்வது?)கேட்கப் பிடிக்கும் .பாட்டு முடிவதற்குள் தூங்கி விடுவாள்.

இப்போது தெரிந்திருக்கக் கூடுமே ஏன் வீட்டில் அப்பா முதற்கொண்டு எல்லோரும் ஏன் சிரித்தார்கள் என்று ?!

கைக்குழைந்தைகளை தூங்கப் பண்ணுவது என்பதென்ன சாமான்ய காரியமா ? அந்தக் காலத்தில் எல்லாம் குறைந்த பட்சம் ஐந்து அல்லது ஆறு குழந்தைகள் தலா அது அம்மா ...அது அப்பாவிற்கு ! இப்போது இந்த ஒன்றை சமாளிக்கவே புதுசாகக் கற்க வேண்டி இருக்கிறது பல விசயங்களை.

என் அப்பாவின் அத்தைப் பாட்டி ஒருவர் அவருக்கு ஐந்து குழந்தைகள் எல்லாம் அடுத்தடுத்து பிறந்து விட்டதால் அந்த வீட்டில் நண்டும் சிண்டுமாக எப்போதும் பிள்ளைகளின் குரல் பசிகோ இல்லை தூக்கதிற்கோ அழுவது கேட்டுக் கொண்டே இருக்குமாம் . பாட்டிக்கு ஒத்தாசைக்கு ஆள் இருக்க மாட்டார்களாம் அப்போது அவர்களுக்கு நிலம் நீச்சு ஏகப்பட்டது உண்டு வீட்டு ஆட்களும் வயலுக்குப் போய்விடுவார்கள்.இவர் ஒருவரே கை குழைந்தை முதற்கொண்டு ஐந்து பிள்ளைகளையும் வீட்டில் சமாளிக்க வேண்டும் .

அந்தக் காலம் மட்டும் இல்லை இன்றும் கூட குழந்தைகள் வளர்ப்பில் அது நிலை என்னவென்றால் ...பசிக்கு அழும் குழந்தைகள் அவர்களுக்கென்று பால் கலந்து எடுத்து வருவதற்குள் குய்யோ முய்யோ என்று கத்தித் தீர்த்து விடுவார்கள்.கண்களில் ஜலம் கொட்டும் ,இது எல்லோருக்கும் கிடைத்திருக்கக் கூடிய அனுபவம் தான் .

எல்லா நேரமும் பல வேலைகளுக்கிடையில் சரியான நேரத்திற்கு பிள்ளை அழும் முன் அதன் பசியாற்றுவது என்பது சில சமயங்களில் இயலாது போகலாம்.வேறு வேலை ஏதும் செய்து கொண்டிருப்பின் மறந்தும் விடலாம்,அதற்குள் கத்தல்...கதறல் ஆரம்பித்து விடும்.

இந்தப் பாட்டி சொன்ன செய்தி என்னவென்றால் இப்போதைப் போல அப்போது கேஸ் ஸ்டவ் கிடையாதல்லவா ...ஐந்து பிள்ளைகளும் பசிக்கு அழுதால் விறகடுப்பில் பற்ற வைத்து பால் கலக்கும் வரை பொறுப்பார்களா என்ன? பெரிய குத்து விளக்கு இருக்குமாம் அவர்கள் வீட்டில் அதை ஏற்றி அதில் பாலை சூடு பண்ணி அப்போதைக்கப்போது குழந்தைகளுக்கு தருவாராம்.

இந்தச் செய்தி எனக்குப் புதிது ...ஆச்சர்யம் கூட !? பகிரத் தோன்றியது பதிந்து விட்டேன் . கருத்துக்களை எழுதுங்கள்.

இதற்குப் பெயரும் கவிதையென சொல்வேன்?!

சளக் சளக்கென நீந்தி

விலுக் விலுக்கென துள்ளி

சள..சளவென வெந்து

தள தளவென வாசம் பரப்பி

தட்டில் விழுந்ததும்

களுக் களுக்கென

முழுங்கப் பட்டு

விசுக் விசுக்கென

மறையும்

அது என்ன?!

Tuesday, April 7, 2009

பானாக்கரம்...(ஜக்கம்மா பிரசாதம்)

பானாக்கரம் ..இதையே பானகம் என்றும் சொல்வார்களாயிருக்கும் போல !? எங்கள் ஊரில் பானாக்கரம் என்று சொல்லத்தான் கேள்விப் பட்டிருக்கிறேன் . இதை வெயில் காலத்தில் குடித்துப் பாருங்கள் தேவாமிர்தம் தான் .ரசத்திற்கு அம்மா புளி ஊற வைத்து விட்டு அந்தண்டை போனால் போதும் ஊற வைத்த புளித் தண்ணீரை எடுத்து பானாக்கரம் ஈசியாகச் செய்து அம்மா இந்தண்டை வருவதற்குள் குடித்து முடித்து விட்டு பாத்திரத்தையும் துலக்கி வைத்து விடலாம் .அத்தனை எளிது பானாக்கரம் செய்வது .

நல்ல நீரில் ஊறவைத்த புளி, புளி நன்றாக ஊறியதும் நீரை வடிகட்டிப் பிரிக்க வேண்டும் ,அதனோடு சர்க்கரையோ ...வெல்லமோ சேர்த்தால் பானாக்கரம் ரெடி.
வெயிலுக்கு ஜில்லென்று இருக்கும் .இப்போது இப்படி யாரும் செய்து அருந்துவதாகாத் தெரியவில்லை.

நான் பிறந்த ஊரில் ...ஊருக்கு வெளியே ஜக்கம்மாவுக்கென்று ஒரு கோயில் உண்டு ...வருடத்திற்கு ஒருமுறை அவளுக்குத் திருவிழா வரும். ஜக்கம்மா துடியான தெய்வம் என்பார்கள் ...அவளுக்குத் துணை தெய்வம் கருப்பசாமி ...வெட்டரிவாள் ஏந்தி பக்கவாட்டில் அவரும் நிற்பார் ஜக்கம்மா சன்னதியில் .

கோயில் என்பது பெயரளவில் தான் ...அது ஒரு வெட்ட வெளி அங்கே ஒரு பீடத்தில் ஜக்கம்மா உக்கிரமாய் பார்த்துக் கொண்டு அமர்ந்திருப்பாள். திருவிழா சமயங்களில் மேலே தென்னம் பந்தல் போட்டுக் கொள்வார்கள் ,மாற்ற நாட்களில் எல்லாம் ஜக்கம்மாவுக்கு சுற்றியுள்ள கொடிக்காய்புளி காய்ந்த முள்ளில் வேயப்பட்ட சுற்று வேலிப்படல் தான் சாஸ்வதம் .

உக்கிரத்தை தணிக்கவோ என்னவோ அவளது கோயில் பிரசாதமாக பானாக்கரமும் கூடவே வெல்லமிட்ட பச்சரிசியும் தான் தருவார்கள். பச்சரிசியுடன் பொடியாய் நறுக்கிய தேங்காய் துண்டுகளும் உண்டு. அது ஒரு வகை அலாதி சுவைதான் .

பானாக்கரம் பற்றி பகிர்ந்து கொள்ளத் தோன்றியது ...பதிவாக்கி விட்டேன் .

Monday, April 6, 2009

ஈசல் சாப்பிட்டு இருக்கிங்களா ?!

மழை பெய்து முடித்த மறுநாள் காலை என்று தான் நினைக்கிறேன்! பெருவாரியான ஈசல்கள் கூட்டமாக மொய்த்துக் கொண்டிருக்கும் காட்சியை எங்கள் கிராமத்தில் சகஜமாகக் காணலாம் .அழுக்கான கண்ணாடித் தாள் போன்ற மெல்லிய றெக்கைகள் அதற்கு .வாசிப்பவர்கள் ஈசலைத் தட்டான் பூச்சி என்று நினைத்துக் கொண்டு விடாதீர்கள் .அது வேறு ,இது வேறு

"தட்டான் தாழப் பறந்தால் மழை வரும்" என்பார்கள் ஊர்ப் பக்கத்தில் ,ஆனால் ஈசல் எப்போதும் மழை ஊற்றி முடித்த மறுநாள் காலையில் தான் வண்டல் மண் சேகரித்துக் கொட்டி வைக்கப் பட்டிருக்கும் திட்டுக்களின் மேலே கூரை போல கூட்டமாக மொய்த்துக் கொண்டிருக்கும் .

ஆர்வமிருக்கும் சில சிறுவர்...சிறுமிகள் கையேடு கொண்டு போயிருக்கும் பித்தளைத் தூக்குகளிலோ அல்லது எவர்சில்வர் தூக்குகளிலோ அந்த ஈசல்களைப் ஓடி ஓடி பிடித்து அடைத்து வைத்துக் கொள்வார்கள் .உங்களுக்குத் தெரிந்திருக்கலாம் ஈசல்களின் வாழ்நாள் காலம் ஒரே ஒரு நாள் மட்டுமே !

மழை பெய்த மறுநாள் காலையில் கண்களில் படும் ஈசல்கள் அன்றைய தினமே வெயில் ஏற ஏற ஆற்று மணல் ...அல்லது களத்து மணல் மேடு போன்ற இடங்களில் வெயிலில் சுருண்டு விழுந்து கொஞ்ச நேரத்தில் உயிரை விட்டு விடும். அந்த ஈசலகளையும் விட்டு வைக்க மாட்டார்கள் சிலர் .

அதென்ன டேஸ்ட்டோ ?! இப்போது யோசித்தால் ஒன்றும் புரியவில்லை! என் தாத்தாவின் வத்தல் களத்தில் சோடை வத்தல் பொறுக்கி நல்ல வத்தல்களை மூட்டை கட்டி கொடுத்து விட்டுப் போக பக்கத்து ஊரிலிருந்து வரும் தினக் கூலிகளில் சரசக்கா இந்த ஈசல்களை மகா ஆசையோடு பாலீதீன் பைகளில் சேகரித்து வைத்து நன்றாக வெயில் ஏறியதும் களத்து சுடுமணலில் காய வைப்பார் .

ஈசல்கள் மொரு மொறுவென்று காய்ந்ததும் அங்கேயே கற்களை வைத்து அடுப்பு மூட்டி பொரிகடலை ...காய்ந்த வத்தல் கொஞ்சம் உப்பு கூட அந்த ஈசல் என்று கலந்து போட்டு வறுத்து உண்பார். வேடிக்கை பார்க்கும் எனக்கும் தருவார். வயிற்றைப் புரட்டிக் கொண்டு வாந்தி வரும் எனக்கு .

இப்படி அல்லாது வெறுமே காய்ந்த ஈசல்களை உன்பவர்களையும் பார்த்திருக்கிறேன் அப்போது நான்!!! இப்போது நினைத்துப் பார்த்தால் வித்யாசமான மனிதர்கள் ...வித்யாசமான பழக்க வழக்கங்கள் என்று தோன்றினாலும் அந்த நாள் ஞாபகங்கள் என்றுமே இனிக்கவே செய்கின்றன. ஈசல்களைப் போலவே தான் அதற்குப் பின் நான் சரசக்காவையும் காண நேரவில்லை .

Sunday, April 5, 2009

மாத்திரைகளும்...மருந்தும் செய்யாத மாயாஜாலம்

பானு தினமும் என்னோடு வாக்கிங் வருவாள் மாலை 4.30 க்கு ஆரம்பிக்கும் நடை 5.30 க்கு முடியும் சாவதானமாக ஒரு 15 நிமிடங்கள் காற்றாட வாக்கிங் நடக்கும் இடத்தில் போட்டிருக்கும் கல் பெஞ்சில் உட்கார்ந்து கதை பேசி விட்டு 6 மணிக்கெல்லாம் வீட்டிற்கு வந்து விளக்கேற்றி விட்டு இரவு சமையல் வேலை தொடங்குவோம்.அவளது வீடு என் வீட்டு மாடி .

இன்று வாக்கிங் வரும் போது பானு சுரத்தே இல்லாமல் நடந்து கொண்டிருந்தாள் .என்னாச்சு பானு ?என்றேன் ;அம்மா ஊர்ல இருந்து ட்ரீட்மென்ட் காக இங்க வந்திருக்காங்க ரத்னா என்றாள்.எப்போ வந்தாங்க நான் பார்க்கலையே ...உங்க வீட்ல இருந்து ஒரு சத்தத்தையும் காணோமே! கெஸ்ட் வந்தா வீடே அமர்க்களப் படுமே உன் பையன் ஓடி வந்து என்கிட்டே சொல்லி இருப்பானே இந்நேரம் "என் பாட்டி தாத்தா வந்திருக்காங்க ஆண்டி னு. இன்னிக்கென்ன ஒன்னையும் காணோம்.

ஹம்.......பானு நீள மூச்செடுத்து பின் மீண்டும் அமைதியானாள்.

பானுவின் அமைதியின் பின் என்ன இருக்குமோ என்ற யோசனையுடன் அன்றைய வாக்கிங் முடிந்தது.அவளிடம் நான் ஏனோ ...ஏன் ..எதற்கு..எப்படி என்று தூண்டித் துருவ மனமின்றி கல் பெஞ்சில் உட்கார்ந்தோம் இருவரும்.பானுவின் கண்கள் லேசாகக் கலங்குவதைப் போல தோன்றியது .சரி சொல்லும் விஷயம் என்றாள் அவளே சொல்லக் கூடும் ...ஆறுதலுக்கு கேட்கிறேன் பேர்வழியென்று அவளது மனக் கஷ்டத்தை தூண்டியது போல் ஆகி விடக் கூடாதே என்று அவளை ஆராயாமல் மேலே பறந்து கொண்டிருந்த காகங்களிலும் கீழே ரயில்வே ட்ராக்கில் தேமே என நின்று கொண்டிருந்த எருமை மாடுகளிலும் பார்வையை ஓட்டினேன் ,

ஐந்து நிமிடங்கள் கழிந்தபின் ...பானுவே சொன்னாள் .

வீட்ல வேலை எல்லாம் முடிச்சதும் கொஞ்சம் மேல என் வீடு வரை வந்துட்டுப் போயேன் ரத்னா என்று , மெல்ல புன்னகையுடன் "என்ன பிரச்சினை என்றாலும் மனசை ரொம்ப போட்டு அலட்டிக்காதே பானு .நான் நைட் சமையல் முடிஞ்சதும் மாடிக்கு வரேன் உன் வீட்டுக்கு "என்று முடித்தேன் .

ஏற்கனவே பிசைந்து வாய்த்த கோதுமை மாவு ஃபிரிஜ்ஜில் இருந்ததை எடுத்து எனக்கு மூன்று சப்பாத்திகள் என் கணவருக்கு நன்கு சப்பாத்திகள் என் மகளுக்கு இரண்டு சப்பாத்திகள் ஹாட் பாக்கில் தொட்டுக் கொள்ள பச்சைப் பட்டாணி குருமா ,கூட ஒரு சிறு கிண்ணத்தில் கெட்டித் தயிரில் துருவிய கேரட் கொஞ்சம் போட்டு கலந்த ராய்த்தா என்று எடுத்து உணவு மேஜையில் வைத்தேன் தண்ணீர் பாட்டிலும் எடுத்து வைத்த பின் ஹால் சோபாவில் உட்கார்ந்து படித்துக் கொண்டிருந்த மகளிடம் அம்மா பானு ஆண்டி வீடு வரைக்கும் போயிட்டு வரேன் ...அப்பா வந்தா ரெண்டு பேரும் சாப்பிடுங்க எனக்காக வெயிட் பண்ண வேண்டாம் ..என்று தகவல் சொல்லி விட்டு மாடிப் படிகளை கடந்தேன்.

பானு வீட்டில் நிலவிய அசாத்திய அமைதி கண்டு முதல் முறையாய் எனக்கு ஒரு மாதிரியாக ஆகி விட்டது ...பானுவின் அம்மா இதற்க்கு முன்பும் சில முறைகள் இங்கே வந்திருக்கிறார்...மகள் வீட்டுக்கு விருந்தாளியாய்...!?

மங்கள கரமான பெண்மணி ...முகத்தில் அன்பு ததும்பும்...பேச்சில் கனிவு பொங்கும்...என் அம்மாவைப் போல அவர் வேலை பார்க்கும் அம்மா இல்லை ...எப்போதும் வீடு ...வீடு..வீடு தான் அவரது உலகமாம் .

குழந்தைகள் படிப்பு...கல்யாணம் என்று ஆனதும் அவர்களது பிள்ளைகள் அவர்களது வருகை ...இப்படியே தான் அவரது வாழக்கை சுழன்றது இதை அவரது பேச்சின் மூலம் நான் கிரகித்தேன் .பானுவும் சொல்லி இருக்கிறாள் அவளது அம்மாவைப் பற்றி கொஞ்சம்...

அவளது வீட்டுக்குள் நுழைந்ததும் கண்கள் அவளது அம்மாவைத் தான் தேடின ... அம்மா அப்போது சமையல் உள்ளில் இருந்தார்கள் ...கையில் ஒரு பழந்துணி கொண்டு சமையலறை ஜன்னல்களைத் துடைத்துக் கொண்டிருந்தார்கள். பானு ஹால் சோபாவில் உட்கார்ந்து கொண்டிருந்தாள் முகத்தில் வெளிச்சமில்லை .

நான் அவளருகில் சென்று அமர்ந்தவாறு...

எப்போ வந்தீங்கம்மா ? சத்தமே காணோம் ...நீங்க வந்தா உங்க பேரன் இந்த அபார்ட்மென்ட் முழுக்க விளம்பரம் பண்ணுவானே ! இந்த வாட்டி அருவமே இல்லையே...ஊர்ல எல்லாரும் சௌக்கியம் தானே?

பானுவின் அம்மாவுக்கு நான் பேசியது ..என் விசாரணை எல்லாமே மிகத் தெளிவாக கேட்கும் தூரம் தான்...ஆனாள் அவரென்னவோ திரும்பியும் பார்க்கவில்லை. அவர் என்னைப் பார்க்கவே இல்லை போல என்று அருகே செல்ல எழுந்த என்னை ,பானு மெல்லக் கை அசைத்து என்னை அமைதியாக உட்காரும் படி தன்னருகில் இருத்தினால்.

ஆச்சர்யமாக இருந்தது எனக்கு.

சமையல் அரை ஜன்னலைத் துடைத்துக் கொண்டிருந்த அம்மா இப்போது கேஸ்

ஸ்டவ்வை துடைத்துக் கொண்டிருந்தாள் ...,நானும் பானுவும் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்தோம் ...நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அடுத்தடுத்து பாத்திரங்கள்...தட்டுக்கள்...தம்ளர்கள் ...சமையல் மேடை ....குடம்...கிரைண்டர்....மிக்சி...பிரிஜ் ...அவன் ....எல்லாம் துடைத்து முடித்து விட்டு பிறகும் அந்த அம்மா கையில் இருந்த பழந்துணியை கீழே வைத்ததாகத் தெரியவில்லை.

என்னிடம் முகம் கொடுத்துப் பேசவில்லை ...சரி நான் யாரோ பக்கத்து வீட்டுப் பெண் ...ஆனாள் பானு அவரது மகள் இல்லையா? அவளிடமும் ஒன்றும் பேசிய பாடில்லை .நாங்கள் இரண்டு பேர் அங்கே உட்கார்ந்து கொண்டு அவரை வேடிக்கை பார்க்கிறோம் என்ற சுவாதீனமே இல்லை அவருக்கு.அவர் பாட்டுக்கு துடைத்துக் கொண்டே இருந்தார் ஒவ்வொன்றாய் ...

துடைத்தல் எல்லாப் பொருட்களையுமே ஒன்று விடாமல் துடைத்தல் கையில் இருக்கும் பழந்துணி அழுக்கு நிறைய சேர்ந்து விட்டதென்று அவருக்குத் தோன்றினால் அதை பரபரவென்று சோப்புப் போட்டுத் துவைத்து பிழிந்து ஜன்னல் கம்பியில் உலரப் போட்டு விட்டு இன்னொரு பழந்துணி கிழித்து மறுபடி கிடைத்ததை துடைக்க ஆரம்பித்து விடுவார்.

கிட்டத் தட்ட ஒருமணி நேரம் இதே கதை தான்.நானும் பயந்து தான் போனேன் இதைப் பார்த்து ; பானுவிடம் எதுவும் ஆறுதல் சொல்ல வகையின்றி ...அம்மாவுக்கு என்ன பானு ? என்றேன்!

அவளோ அடக்க மாட்டாமல் அழுது விடுபவளைப் போல முகத்தை வைத்துக் கொண்டு "அதான் தெரியலை ரத்னா ...நேத்து நைட் வந்தாங்க ...அப்போ இருந்தே இதே கதை தான்...ரஞ்சன் பாட்டிய பார்த்ததும் எப்பவும் போல ஓடிப் போய் கட்டிக்கிட்டு கொஞ்சினான். அம்மாவுக்கு அது உணரலை போல...அவன விலக்கி விட்டுட்டு அப்போ போய் கிச்சன்ல இப்படி துடைக்க ஆரம்பிச்சவங்க தான் ...நைட் தூங்கவே இல்லை ...இதே தான்...மேலே பேச முடியாமல் அவளுக்குத் தொண்டை அடைத்துக் கொண்டது.

எனக்கு எப்போதோ ஆனந்த விகடனில் மதன் கேள்வி பதிலில் படித்திருந்த "அப்சசிவ் கம்பல்சிவ் டிஸ் ஆர்டர் தான் நினைவில் நெருடியது . எங்க காட்டறீங்க ? அம்மாவை என்றேன் அண்ணா வீடு திருவான்மியூர்ல இருக்கு அங்க ஒரு டாக்டர்.

அம்மாவுக்கு வயது 65 இருக்கும் போல தெரிந்தது ...அவர்கள் டாக்டரிடம் கொண்டு பொய் அம்மாவை காண்பிப்பதில் எனக்கொன்றும் மாற்றுக் கருத்து இல்லை ...வெறும் மருந்து மாயங்களில் இந்த அம்மாள் பழையபடி மங்களம் துலங்க என்னை "வாம்மா ரத்னா " எப்படி இருக்கே ? என்று முகமெல்லாம் பளிச்சிட அழைத்து விட்டால்...எனக்கும் பரம சந்தோசம் தான் .

எனக்கென்னவோ சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்ட என் ஒன்று விட்ட பாட்டியின் ஞாபகம் தான் மனம் முழுக்க வியாபித்தது பானுவின் அம்மாவைப் பார்த்ததில் இருந்து .

பாட்டி பெரிய பணக்காரி ...அந்தக் காலத்தில் தங்கப் பல் கட்டிக் கொண்ட சீமாட்டி. விடுமுறையில் ஊருக்குப் போனால் வாயிலிருக்கும் தங்கப் பல் டாலடிக்க "எப்போ வந்தேடி குட்டிப் பொண்ணே?! என்று

அந்தப் பாட்டிக்கு இரண்டு பெண்கள் ...கணவர் நல்ல உழைப்பாளி தான்..ஆனாலும் கொஞ்சம் சோக்குப் பேர்வழி என்று என் பாட்டியும் தாத்தாவும் பேசுகையில் கேட்டிருக்கிறேன் .ஆனாலும் பணம் நிறைய இருந்ததால் நன்றாகத் தான் இருந்தார்கள் .

கடைசியில் ஒருநாள் இதே போல அந்தப் பாட்டியை அவளது மூத்த மகளான எனது ஒன்று விட்ட அத்தையின் வீட்டுக்கு ட்ரீட்மென்ட்க்கு கூட்டி வந்தார்கள் ஒருநாள் விடிகாலையில் ,

பாட்டி இயல்பான நடவடிக்கையில் தான் தோற்றம் தந்தாள் ...ஆனால் இருந்தார் போல் இருந்து தன்னை யாரோ செய்வினை வைத்து விட்டார்கள்...செத்துப் போன தன் மாமியார் வந்து மிரட்டுகிறாள் நேரில் ஆவியாய் ...ஒரு பூனை கிட்டே போனால் கூட "ஐயோ இது என் மாமியார் தான் என்னை அவளோடு க்கூட்டிப் போக வந்து விட்டால் ...என்று அலறுவார் ...அத்தையும் ...மாமாவும் என்னென்னவோ வைத்தியம் எல்லாம் செய்து பார்த்தார்கள் ...பாட்டிக்கு குணமான பாடில்லை.

உச்ச கட்டமாக தங்கப் பல் டாலடிக்க சிரித்து வரவேற்கும் பாட்டி பல்லெல்லாம் கொட்டி முடி எல்லாம் சடை பிடித்து திரி ...திரியாகத் தொங்க தன் உடைகளைத் தானே கிழித்துக் கொண்டு உளரும் நிலை வந்ததும் ஒருநாள் திடீரென்று செத்துப் போனார்கள்.

ஊருக்குள் பேசிக் கொண்டார்கள் ...அந்த பாட்டிக்கு தென்னை மர மாத்திரை கொடுத்து விட்டார்கள் வீட்டினரே என்று...கருணைக் கொலையா இது என்று மனம் அதிர்ந்தது சில விநாடிகள் .

பானுவின் அம்மாவைக் கண்டதும் எனக்கு ஏன் அந்தப் பாட்டி ஞாபகம் வந்ததோ?!

ஆனால் கண்களில் நீர் தளும்பி நீழே உதிரட்டுமா என்றது ..பானுவிடம் என்ன சொல்ல என்று புரியாமல் மாடிப் படிகளைக் கடந்து கீழே என் வீட்டுக்கு வந்தேன்.

வெறும் மாத்திரைகள்..........மருந்துகள்.....டாக்டர்கள்......வேறு....வேறு......வேறு ...டாக்டர்கள்.

வெறும் மாத்திரைகள் ...மருந்துகள் ....என்ன செய்யக் கூடுமோ ?!!!

இது ஒரு பயங்கர நோயா ? என்ற சந்தேகமே என்னை அரித்துக் கொண்டிருந்தது.

மறுநாள் என் மகளுக்கு கோடை விடுமுறை விட்டார்கள் , இரண்டு வருடங்களாய் வேலைப் பளு ...மகளின் படிப்பு ...இதர திறமைகளை வளர்த்துக் கொள்ளும் படிப்புகள் ...பாட்டுக் கிளாஸ்...டான்ஸ் கிளாஸ் ...கம்பியூட்டர் கிளாஸ் ...ஸ்கேட்டிங் கிளாஸ் எல்லாம் மூட்டை கட்டி வைத்தோம் குறைந்த பட்சம் ஒரு மாதத்துக்கு,

என் கணவர் அவரது அலுவலக வேலைகளை எல்லாம் முடியுமட்டும் விரைவாக்கினார்...முடித்தார் .பதினைந்து முழுநாட்கள் விடுமுறை கிடைத்தது அவருக்கு.

இதோ கிளம்பி விட்டோம் எங்கள் பெற்றோரைக் காண ...இனி விடுமுறைக் காலங்கள் அவர்களுக்கே .

அம்மா...அப்பா...மாமியார்...மாமனார்...எல்லோரோடும் மனம் விட்டுப் பேசலாம்...பேசிச் சிரிக்கலாம் அவர்களை சிரிக்க வைக்கலாம்.பேரன் பேத்திகளோடு விளையாடலாம் ..விளையாட வைக்கலாம் ...எங்கே போய் விடப் போகின்றன? டான்ஸ் கிளாசும் ...கம்பியூட்டர் கிளாசும் சும்மா ஒரு மாத இடைவெளியில்?!

எங்கள் ஊருக்கு செல்லும் பஸ்ஸில் ஏறி சீட்டில் அமர்ந்து சாய்ந்து உட்கார்ந்ததும் அதுவரை இருந்த திணறல் நீங்கி நிம்மதியாக மூச்சு விட முடிந்தது.


வெறும் மாத்திரைகளும்...மருந்தும் செய்யாத மாயஜாலம் தான்.

Friday, April 3, 2009

சும்மாவா சொன்னாங்க பெரியவங்க...(நன்றி-பட்டாபி)

"சும்மாவா சொன்னாங்க ...பெரியவங்க -பட்டாபி "சில நாட்களுக்கு முன் இணையத்தில் வாசிக்கக் கிடைத்த புத்தகம் இது ,அருமையான பல விஷயங்கள் அள்ளித் தரப் பட்ட அழகான புத்தகம் .சரி புத்தகத்தை விடுங்கள் அதை நீங்களே இணையத்தில் தேடிப் படித்துக் கொள்ளுங்கள் .

இதிலிருந்து எனக்கொரு சின்ன பொறி கிடைத்தது,அதைப் பகிந்து கொள்ளவே இந்தப் பதிவு ,

தினம் காலையில் அரிசி அளக்க எவர்சில்வர் உழக்கு வைத்திருக்கிறோம் இல்லையா ?அது முன்பெல்லாம் பித்தளையில் வரும் ...இப்போதெல்லாம் எவர்சில்வர் தான் பார்க்க பெரிய சைஸ் டம்ளர் போலவே இருக்கும் .
அகஸ்மாத்தாக சில நேரங்களில் (பல நேரங்களிலும் தான்... !!! :) ;அதையே டம்ளர் ஆகப் பாவித்து தண்ணீர் பிடித்தோ அல்லது மொண்டு குடித்திருப்போம் .

வீட்டில் பாட்டியோ ...அம்மாவோ...அத்தையோ இருந்து நாம் எவர்சில்வர் உழக்கு டம்ளர்ரில் தண்ணீர் குடிப்பதைப் பார்த்து விட்டால் சட்டென்று சொல்வார்கள் ,
உழக்கில் தண்ணீர் பிடித்துக் குடிக்கவே கூடாது ...படுத்த படுக்கையாக இருப்பவர்கள் சாவை நெருங்கி விட்டால் அவர்களுக்குத் தான் படுக்கையில் படுத்த நிலையில் உழக்கில் தண்ணீர் விடுவார்கள் .நன்றாக இருப்பவர்களெல்லாம் உழக்கில் தண்ணீர் குடிக்கவே கூடாது என்று பயமுறுத்துவார்கள் .

நானும் வெகு நாட்கள் மற்ற டம்ளர்கள் சிங்கில் கழுவாமல் கிடக்கும் போது சோம்பலாக கை எவர்சில்வர் உழக்கு எடுக்கப் போகும் போதெல்லாம் பாட்டியும் அம்மாவும் சொன்னதை எண்ணி மெனக்கெட்டு (!!!) வேறு டம்ளர் கழுவி பிறகு தண்ணீர் பிடித்துக் குடிப்பேன் . ஒரு பயம் தான் என்றே வைத்துக் கொள்ளலாம்.

இப்போது யோசித்ததில் தினம் தினம் அரிசி அளக்க எவர்சில்வர் உழக்கு தான் பயன்படுத்துகிறோம் ,அரிசி மட்டும் அன்றி அந்த உழக்கு அளவு வைத்து தான் 1:2
அளவில் அரிசியும் நீரும் கலந்து குக்கர் வைக்கிறோம் .அதனால் உழக்கு கொஞ்சம் ஈரப் பதமாக இருக்கக் கூடும் ,ஆனாலும் அப்படியே உலர விட்டால் மறுநாள் காலைக்குள் ஈரம் உலர்ந்து விடும் .

இதை விடுத்து டம்ளர் மாதிரி இருக்கிறதென்று அடிக்கடி தண்ணீர் மொண்டு குடிக்க ஆரம்பித்தால் உழக்கில் ஈரம் நிலைத்து விடும் ஈரப் பதம் போக வழியில்லை .இதனால் என்ன ஆகும் ? அரிசி அளக்கும் போது மொத்த அரிசியிலும் அந்த ஈரம் பரவும் ...இதனால் அரிசியில் பூஞ்சை பிடித்து மூட்டை அரிசியும் கெட்டுப் போகக் கூடும் .

விஞ்ஞானப் பூர்வமான இந்த காரணத்தையும் விளக்கத்தையும் சொன்னால் நாம் உடனே சரி என்று ஏற்றுக் கொள்ளப் போகிறோமா என்ன ? அதே சமயம் பயம் தோன்றும் வகையில் எதையேனும் சொல்லி வைத்தால் கிடக்கிறது.அந்த பயத்திலாவது உழக்கில்ஈரம் உலர வழி கிடைத்ததே என்று தான் இப்படி சொன்னார்கள் போல !?

இது நான் நினைத்த காரணம் மட்டுமே ...இதற்க்கு வேறு காரணங்களும் கூட இருக்கலாம்.அப்படி ஏதேனும் இருந்தால் இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள் .

Thursday, April 2, 2009

ஏதாச்சும் செய்யணும் பாஸ் ...வெயில்ல இருந்து தப்பிக்க...

சுடச் சுட வெயில் காலம் கோலாகலமாய் ஆரம்பமாகி விட்டது ...மலைப் பிரதேசங்களில் வாழ்பவர்கள் குளுகுளுப்பாய் ஜிலு..ஜிலுவென்று இருப்பார்கள்...மற்றவர்கள் என்ன செய்யலாம்? வீட்டில் A/C போட்டு குளுமை செய்யலாம் ...A/C முடியாதவர்கள் AIRCOOLER வைத்துக் கொண்டு ஐஸ் கட்டிகளைப் போட்டு வீட்டுக்குள் சுடும் காற்றை குளிர வைத்துக் கொள்ளலாம்.

இதில் ஒரு சிக்கல் என்னவெனில் மின்சாரத் தடை ...அடிக்கடி கரண்ட் காட்டாகும் போது நிறையப் பணமிருப்பவர்கள் பவர் ஜெனரேட்டர்கள் கொண்டு சமாளிப்பார்கள் ,அதை வாங்க வழியில்லாதவர்களும் இருப்பார்கள் அவர்களுக்கான எளிய தீர்வு வழிமுறைகள் இவை .


இன்னும் என்னென்ன செய்யலாம் ...?!


கீழே ஒரு பட்டியலிடலாம் ,வெயிலின் கொடுமையில் இருந்து தப்பிக்க என்னென்ன செய்யலாம் ?முதல் வேலையாக வீட்டைப் பற்றி பார்ப்போம் ;

வீட்டைப் பேணுதல்

வீடுகள் என்று எடுத்துக் கொண்டால் பெரும்பாலும் இப்போது கான்கிரீட் வீடுகள் தான்...கிராமங்களில் ஓட்டு வீடுகளைக் காணலாம் ...குடிசைகளையும் காணலாம் .எந்த வகை வீடுகளாயினும் கடும் கோடையில் காற்று சூடாகி விடுவதால் மின்சாரம் தடைபடும் காலங்களில் பெருத்த அவஸ்தை தான் .மின்சாரம் இருந்தாலும் சரி ...இல்லாவிட்டாலும் சரி எந்த வகை வீடாயினும் அதைக் குளிர்வாக வைத்துக் கொள்ள சில உபாயங்களை செய்யலாம் ...புதிதாகச் சொல்ல என்ன இருக்கிறது.எல்லோரும் வெயில் காலங்களில் பயன்படுத்தும் அதே முறை தான் ,

ஓட்டு வீடு

ஓட்டு வீடாக இருப்பின் தரை பெரும்பாலும் சிமென்ட் தளம் தான் ...சிமென்ட் தளத்தில் குளிர்ந்த தொட்டித் தண்ணீரையோ ...கிணற்று நீரையோ தாராளமாகக் கொட்டி மின்விசிறியை சுழல விட்டு ஒரு பத்து இருபது நிமிடங்கள் ஊற விட்டு அலசித் தள்ளி விட்டால் தரை ஜில்லென்று ஆகி விடும்.இதே போல கோடை காலம் முழுமைக்கும் தினம் ஒரு முறை செய்யலாம் .சூரியனின் உக்கிரக் பார்வை கொஞ்சம் மட்டுப் படும் இதனால் .

குடிசை வீடு

குடிசை வீடாக இருப்பின் பசுஞ்சாணம் கொண்டு தரை தினம் ஒருமுறை மெழுகினால் வெயிலின் காட்டம் குறைந்து தரை குழு..குழு..குளுவென்று இருக்கும் ...பொதுவில் தென்னை ஓலை ...பனை ஓலைக் குடிசைகள் வெயிலுக்கு இதமாகவே இருக்கக் கூடும் .

கான்கிரீட் வீடுகள்

இனி கான்கிரீட் வீடுகள் ...மற்ற இரு வித வீடுகளைக் காட்டிலும் கான்கிரீட் வீடுகள் வெயில் காலங்களில் தேவலாம் தான் ...ஆனால் இந்த நகர்ப் புறத்து நெரிசல் காட்டில் தீப்பெட்டி போல அடுக்கப் பட்டு காற்று வர ..வெளிச்சம் பரவ ஜன்னல்கள் இருந்தும் அந்த ஜன்னலையும் அடுத்த வீட்டின் சுவர் மறைக்கும் வண்ணம் இடைஞ்சலில் வீடுகள் கட்டப் பட்டிருப்பின் ஒரு பயனும் இல்லை இவ்வீடுகள் இந்த வெயில் காலங்களில் ஒரு வியாதி போல ஆகி விடக் கூடும் ,ஒண்டுக் குடித்தன வீடுகள் நிறைந்த சென்னையில் வெயில் படுத்தி எடுக்கும் அங்கே குடியிருப்பவர்களை.


என்ன செய்து வெயிலின் சூட்டிலிருந்து இவர்கள் தப்பிக்கலாம் ?!

குடி தண்ணீர் தான் விலைக்கு வாங்கியே ஆக வேண்டும் என்ற நிலை என்றோ வந்து விட்டதே ...குளிக்க ...துவைக்க..உப்புத் தண்ணீராவது தாராளமாகக் கிடைக்க வேண்டும் ...இல்லா விட்டால் நரகம் தான் வெயில் காலம் சென்னையில் .தண்ணீர் தாராளமாகக் கிடைக்கும் பகுதிகளில் வசிப்போர் வீட்டின் தரைத் தளத்திலும் சரி ...மொட்டை மாடி செங்கல் தரையிலும் சரி காலை மாலை இருவேளை தளும்பத் தளும்ப நீரைக் கொட்டி தரையை ஊற விட்டு அலசித் தள்ள வேண்டும்.இதன் மூலம் தரை கொஞ்சம் இதம் தரலாம் .

சரி வீட்டை ஏனோ தானோவென்று கொஞ்சம் சரிப் படுத்தி விட்டோம் வெயிலை சமாளிக்கும் வண்ணம் ...அடுத்து இதோடு முற்றும் போட்டு விட முடியாது .

உடலைப் பேணுதல் :-
அடுத்து யாகாவராயினும் சரி வெயில் காலங்களில் நல்ல உடல்நிலையுடன் இருப்பவர்கள் தினம் காலை ..மாலை இருமுறை கண்டிப்பாக குளித்தே ஆக வேண்டும்.இதன் மூலம் உடல் சூடு மட்டுப்படும்.குளிக்கும் நீரில் ஆரஞ்சு பழத்தோல் ...துளசி இலைகள் அல்லது ஒரு சொட்டு டெட்டால் கலந்து குளிக்கலாம் துர்வாடை விலகி புத்துணர்ச்சியாக இருக்கும் .

இதெல்லாம் சரி தான் ...இனி வெயில் கால உணவுவகைகள் மற்றும் பானங்களைப் பற்றி பார்ப்போம் ;

வெயில் காலங்களில் உண்ணத் தக்க உணவுகள்,காய்கறிகள் ,பழங்கள்

உணவுகள் :

நீர்ச் சத்து நிறைந்த உணவுகள்..நார்ச் சத்து மிக்க உணவுகளை உண்பதே சாலச் சிறந்தது,தாத்தா ...பாட்டிகளின் அன்றைய நாட்களில் வெயில் காலத்தில் கம்பு,கேழ்வரகு, போன்ற உணவுகளை மோரில் கரைத்து உண்பதை நான் அறிவோம் தானே ...கூடவே நீராகாரம் எனும் வடிநீர் உணவும் அன்றைய ஸ்பெசல் தான்.மதிய நேரங்களில் இந்த நீராகாரத்துடன் புளித்த நீர் சேர்த்து அருந்த நீர்க்கடுப்பு கூட விலகும் என்பார்கள்.இன்று குக்கர் வைத்து சமைப்பதால் நீராகாரம் கிடைப்பதில்லை.நம்மால் முடிந்தவரை நூடுல்ஸ்...ஃபிரைடு ரைஸ்...நான் என்று உண்ணாமல் எந்த உணவோடும் சரி மோர் கலந்த உண்ணலாம்.தயிருக்கு மந்தத் தன்மை உண்டு .மோர் நல்லது.எண்ணெய் சார்ந்த உணவுகளை கண்டிப்பாக நீக்க வேண்டும் ,எண்ணெய் அதிகம் சேர்த்துக் கொண்டால் வெயில் காலங்களில் விரைவில் சோர்வு தட்டி தூக்கம் வரும் .

காய்கறிகள்
என்னென்ன காய்கறிகள் சேர்த்துக் கொண்டால் வெயிலுக்கு நல்லதென்று பார்ப்போம் இனி ;

நார்ச்சத்து மிக்க நீர்ச்சத்து மிக்க காய்கறிகள் சேர்த்துக் கொள்வது நலம் ,

முருங்கை காய்
சுரைக்காய்
புடலங்காய்
பூசணிக்காய்
பீன்ஸ்
தேங்காய்
பீர்க்கங்காய்
போன்ற நாட்டுக் காய்கறிகளையும்

கீரை வகைகளுடன்

முட்டைக் கோஷ்
கேரட்
முள்ளங்கி
பீட்ரூட் போன்ற இங்கிலீஸ் காய்கறிகளையும் நிச்சயம் வெயில் காலங்களில் தவிர்க்காமல் சேர்த்துக் கொள்ள வேண்டும் .

உருளைக் கிழங்கு...முட்டை போன்றவற்றை அளவாகப் பயன்படுத்துதல் நலம்.

பழங்கள்

இளநீர் தான் வெயில் நேரத்து தேவாமிர்தம் ;

இதற்கடுத்த இடம் தான் மற்ற எல்லா வித பழங்களுக்கும் ;இயற்கையாகக் கிடைக்கும் பழங்களில் இருந்து தயாரிக்கப் படும் எல்லா பழ ரசங்களும் அருந்தலாம்,
ஆப்பிள் ;
ஆரஞ்சு ,
கொய்யா,
கிர்ணிப்பழம் ,
தர்பூசணி,
எலுமிச்சை ,
மாதுளை ,
சப்போட்டா ,
திராட்சை,
ஸ்ட்ராபெர்ரி ,
கிரேன் பெர்ரி ...etc...etc

செயற்கை குளிர் பானங்கள் இன்றில்லா விட்டாலும் என்றேனும் ஒருநாள் அதற்கான பக்க விளைவுகளைத் தரலாம்.அதனால்
கோக் ...பெப்சி ...மிராண்டா,ஃபேண்டா போன்றவற்றை தவிர்ப்பதே நலம் (!!!)

நன்னாரி சர்பத் வீட்டிலேயே போட்டுக் குடிக்கலாம் ..நன்னாரிக்கு உடல் சூட்டைக் குறைக்கும் சக்தி உண்டென்று எங்கோ படித்த ஞாபகம் .

மேலே சொன்ன விஷயங்கள் எல்லாம் எல்லோருக்கும் தெரிந்தே இருக்கலாம் .வெயில் காலம் ஆச்சுதா நம்ம பங்குக்கு நாமளும் ஏதாவது செய்யணுமேன்னு தான் ...

ஏதாச்சும் செய்யணும் பாஸ் வெயிலருந்து தப்பிக்க !!!

"கண்டேன் சீதையை "

"ஊரெலாம் கூடி ஒலிக்க அழுதிட்டு
பேரினை நீக்கி பிணமென்று பேரிட்டு
சூரையாம் காட்டிடை கொண்டு போய் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப்பு ஒழித்தார்களே "

இந்தப் பாடலும் செய்யுள் தான் ,ஆனால் எங்கிருந்து வந்து மனதில் நீங்காமல் ஒட்டிக் கொண்டதென்று இன்று நினைவில் இல்லை .தேவாரப் பாடலா அல்லது சித்தர் பாடலா ?! யார் இயற்றிய பாடலாக இருந்தாலும் சரி இதில் ஒலிக்கும் நயத்தைப் பாருங்கள் .இன்றென்னவோ நாம் ரொம்பத்தான் அலுத்துக் கொள்கிறோம் ஒரு விஷயத்தை உள்ளது உள்ளபடி தெரிவிக்க .

"விடிய..விடிய ராமாயணம் கேட்டும் விடிந்த பின் கேட்டால் சீதைக்கு ராமன் சித்தப்பா " என்ற கோட்டித்தனத்தைப் போல இன்னாரிடம் இன்ன விஷயம் சொல் என்று சொல்லி அனுப்பினால் நாம் ஒன்று கூற அங்கே விஷயம் திரித்துக் கூறப் பட்டு விடுகிறது.வேண்டுமென்று செய்ததோ இல்லை தற்செயலோ விஷயம் திரிந்து போனால் நஷ்டம் இருபக்கமும் தான்.

ராமாயணத்தில் சீதையை தேடி கடல் தாண்டி சென்று "சூடாமணி " பெற்று வரும் ஹனுமான் லங்காவை விட்டு மீண்டும் ராமனைக் கண்ட முதல் நொடியில் சொன்ன வார்த்தைகள் என கம்பர் எழுதியது

"கண்டேன் சீதையை "
மனைவியைக் காணாமல் தவிக்கும் ஒரு கணவனின் காதுகளுக்கு இந்த வார்த்தைகள் தேன் அல்லவா?

அதனாலன்றோ கம்ப ராமாயணத்தில் ஹனுமான் "சொல்லின் செல்வர் " எனப் புகழப் படுகிறார்.

சரி மேலே உள்ள செய்யுளுக்கும் ஹனுமானுகும் என்ன சம்பந்தம் என்று குழம்ப வேண்டாம் .சொல்நயம் என்ற ஒரு விஷயம் இருக்கிறதே தங்கத் தமிழில் அதை விவரிக்க இவை இரண்டையும் கூறினேன்.

விஷயம் எவ்வளவு பெரிதெனினும் சுருங்கக் கூறி நயம் பட விளங்க வைத்தல் என்ற ஒரு வசதி உண்டு தமிழுக்கு .மரணத்தை நீட்டி முழக்காமல் நாளே நாலு வரிகளில் சொல்ல ஒரு செய்யுள் .
ராமனின் துயரை சட்டென குறையச் செய்ய ஒரு சிறு வாக்கியம் .
தமிழ் அமிழ்து என்பதில் சந்தேகமென்ன?

அம்பையின் காட்டில் ஒரு மான்("அடவி" - சும்மா ஒரு பார்வை )


விலை - ரூபாய் 80
வெளியீடு - காலச்சுவடு பதிப்பகம்
ஏற்கனவே போன பதிவில் சொன்ன சேதி தான் ,அம்பையின் காட்டில் ஒரு மான் சிறுகதை தொகுப்பை வாசித்தேன் என்றேனில்லையா? அதில் ஏழெட்டு சிறுகதைகள் இருந்தன அவற்றுள் "அடவி " என்றொரு சிறுகதை .நான் மிக ரசித்துப் படித்தது .
வனத்தின் மீது ஆசை கொண்ட பெண் செந்திரு அவளது கணவன் திருமலை ,தொழில் அதிபரான கணவன் ...புத்திசாலி மனைவி ,ஆசைக்கு ஒன்று ..ஆஸ்திக்கு ஒன்று என இரண்டு அருமையான குழந்தைகள் ,பணப் பற்றாக்குறை அற்ற நிலை இப்படியாக பொருளாதார கவலைகள் அற்ற நல்ல வாழ்க்கை என்று தானே தோன்றும் நமக்கு இவர்களைப் பற்றி வாசிக்கையில் .
ஆனால் இக்கதையில் செந்திரு கணவனிடம் கோபித்துக் கொண்டு அல்லது கருத்து வேறுபாடு கொண்டு தனியே வனத்தை நோக்கிச்செல்கிறாள் ,வனத்திற்குப் போகிறாள் என்றதும் தனியே கால் நடையாய் என்றெல்லாம் அதீத கற்பனைகள் தேவை இல்லை .கணவனின் இளைய சகோதரன் காரில் கொண்டு போய் விட்டு விட்டு வருகிறான் செந்திருவை காட்டில் இருக்கும் அரசு விருந்தினர் மாளிகையில்.
அங்கே செந்திரு தனது கடந்த காலத்தை வனத்துடனும் ...ராமனின் இல்லை ...இல்லை சீதையின் கதையுடனும் கலந்து மீண்டும் நினைவு படுத்திக் கொண்டு தனக்கான சுய தேடலில் மூழ்குகிறாள். கொஞ்சம் செந்திருவின் கதை ...நடுநடுவே சீதையே நேரடியாகச் சொல்வதைப் போல அவளது வாழ்வியல் நிகழ்வுகள் இடையில் அந்தக் காட்டில் இருக்கும் குடியிருப்பில் வசிக்கும் சவிதா பாயி,துர்கா பாயி,சந்திரா பாயி போன்ற சாமானியப் பெண்களுடனான அர்த்தமுள்ள அரட்டை ,இப்படி சுமூகமாக சம்பவங்களை விரித்துக் கொண்டு போகிறார் அம்பை.
சும்மா வீம்புக்கு அம்பையின் எழுத்துக்களில் பெண்ணிய வாடை தூக்கலாக இருக்கிறது என்று சொல்லிக் கொள்கிறார்களோ என்று தான் தோன்றுகிறது,அவர் முன் வைக்கும் கேள்விகள் எல்லாமே படு "நச் மற்றும் நறுக் "வகை .
குறிப்பாக ராமாயணக் கதை ...ராமனை நாம் இங்கு வெகு சிறப்பாகத் தான் கொண்டாடுகிறோம் ,சீதையையும் தான்...லட்சுமணன் ...ஹனுமான் ...ஜாம்பவான் எல்லோரையுமே கொண்டாடுகிறோம் தான் ...ராமனின் அளவுக்கு என்றில்லா விட்டாலும் கூட சீதை இந்த உலகத்தின் அன்னையாகத் தான் ஹிந்துக்களால் போற்றப் படுகிறாள் .
சிறுகதை வாசித்ததும் சட்டென்று மனதில் உதித்த மற்றும் ஒரு எண்ணம் "வால்மீகி ராமாயணம் வேறு தளம் ...கம்ப ராமாயணம் வேறு தளம் " என்ற மகாப் பெரிய உண்மை . சீதையை ராவணன் கடத்திச் செல்வதாக கம்பர் சொல்லும் இடங்கள் மிக மிக நாகரீகம் ...பண்பான வர்ணனை என்று நாம் கருதும் அந்த ஓரிடத்தை மட்டும் கருத்தில் கொண்டு நான் இதைச் சொல்லவில்லை .கம்ப ராமாயணத்தில் காணக் கிடைக்காத பல முரண்பாடுகள் ஒருவேளை வால்மீகி ராமாயணத்தில் காணக் கிடைக்கலாம் .
செந்திருவுக்கு கணவன் தன்னை தொழிலில் பாகஸ்தியாக சேர்த்துக் கொள்ளவில்லையே என்ற ஆதங்கம் ...மன உளைச்சல் வாழ்வின் மீதான வெறுப்பாக மாறி வனத்தின் நிசப்தத்தின் நடுவில் தன்னை தான் அறிய நடக்க ஆரம்பிக்கிறாள் . அவளது நடை அவளோடு கூடவே நம்மையும் அழைத்துச் செல்கிறது ,அவளோடு நாமும் வானம் முழுக்க அவள் செல்லும் இடங்களுக்கெல்லாம் நடக்கிறோம் காலின் அசதியே தோன்றாமல் .
செந்திருவின் பால்ய வயது ,அவள் மும்பையில் பெரியம்மா வீட்டில் திருமலையைக் கண்டு காதல் கொள்வது ,இந்தக் காதலை கண்டு கொள்ளாமல் இருக்கும் தன் தந்தையிடம் ஒன்றிற்கு இரு முறை சாதாரணமாகவே போகும் போக்கில் இது திருமணத்தில் முடிய வேண்டிய பந்தம் என உணர்த்தும் திண்மை ,கணவனிடம் காட்டை விட்டு வரமாட்டேன் என நடத்தும் வாக்கு வாதங்கள் ,கூடவே தன் பிள்ளைகள் மற்றும் உறவுகளைப் பற்றிய நினைவுகள் இவற்றை எல்லாம் கணக்கில் கொண்டு பார்த்தால் செந்திரு ஒரு தன்னிச்சையான மனுஷியாகத் தான் தெரிகிறாள் .
அவள் தனக்கான முடிவுகளை எப்போதும் தானே எடுத்துக் கொள்கிறாள்,மற்றவர்களை பொருட்படுத்துவதில்லை ,அது தந்தையோ அல்லது கணவனோ ஆனாலும் சரி .அவளது முடிவுகளை அவளே எடுக்கிறாள்.திருமலை மீதான காதல் ஆகட்டும்...மன பேதம் கொண்டு வனத்திற்கு போதல் ஆகட்டும் செந்திரு வியப்பளிக்கக் கூடும் பலருக்கு ;
இந்த சிறுகதையில் செந்திரு தன் நினைவுகளாக பகிந்து கொள்ளும் சில விசயங்களும் வியப்பளிக்கவே செய்கின்றன,
உதாரணமாக காட்டில் லட்சுமணன் மீது மோகம் கொண்ட சூர்ப்பனகை மூக்கறுத்து அவமானப் படுத்தப் பட்டது மட்டுமே நமக்கு கம்பராமாயணத்தில் படிக்கக் கிடைக்கிறது.
இந்திரகாமினி எனும் கந்தர்வப் பெண் லட்சுமணன் மீது மோகம் கொண்டு அவனை நெருங்குகையில் அவளை அவன் உதாசீனப் படுத்தவே ஆசை நிறைவேறா கோபத்தில் அவளொரு சூழ்ச்சி செய்தாளாம்,
லட்சுமனனி படுக்கையில் அன்றிரவு சில உடைந்த வளையல்கள் மலர்களைப் போட்டு வைத்து விட்டு மறைந்து விட்டாளாம். இதற்க்கு ராமன் என்ன செய்தான் தெரியுமா?லட்சுமனனின் அறையை கூட்டிப் பெருக்கி சுத்தமாக்க அங்கே சென்ற சீதை இதைக் கண்டு வந்து ராமனிடம் புறம் சொல்ல , ராமன் விடிந்ததும் அந்த வளையல்கள் யாருடையவை எனக் கண்டு பிடிக்க அந்தக் காட்டில் வசித்த எல்லாப் பெண்களின் வளையல் அளவுகளையும் வாங்கி சோதித்துப் பார்த்தானாம்!?
புறம் சொல்லுதல் பெண்களின் பொதுத் தவறு என்று சொல்ல வருகிறாரோ அம்பை?! ஆனாலும் சீதை புறம் சொன்னால் என்ற வரிகள் எனக்குப் புதியவை.கூடவே அந்த வளையல்கள் காட்டுவாசிப் பெண்கள் எவருக்கும் பொருந்தாமல் சீதியின் வளையல்குடன் பொருந்துகிறது என கண்டுபிடிக்கப் பட்டதாக கூறும் போது ராமனின் சஞ்சல சந்தேக புத்தி விளக்கப் படுகிறது எனலாம்.
லட்சுமணன் ஒன்றும் உத்தமன் இல்லை எனும் ராமனின் வாக்கு நிச்சயம் கம்ப ராமாயணத்தில் காண முடியாதென்று தான் நினைக்கிறேன்,,
ஒருவேளை வடமொழி ராமாயணத்தில் இருக்கக் கூடுமோ என்னவோ? ராமன் இங்கேசஞ்சல ராமன் இல்லை ..அவன் கோதண்டராமனாக..ஜானகி ராமனாக ..."ஒருவனுக்கு ஒருத்தி எனும் "கோட்ப்பாட்டை நிலை நிறுத்த வந்த அற்புத அவதார கடவுள் என்றல்லவா துதிக்கப் படுகிறான்.
ஏனிந்த முரண்பாடு? கம்பருக்கும்..வால்மீகிக்கும்?
செந்திரு எனும் பெண்ணின் மன ஓட்டத்தில் அவள் எண்ணிப் பார்ப்பதாக கதை அமைவதால் சும்மா கற்பனை என்று ஒதுக்கி விடக் கூடும் தான்!
"வித்யா சுப்ரமண்யத்தின் ஒரு நாவலில் கூட அம்பையின் இந்த அடவி சிறுகதையை ஒத்த வரிகளை வாசித்த ஞாபகம் நெருடியதால் இதைப் பதியத் தோன்றியது.
எது ராமாயணம்?புராணமே ஒரு கற்பனை என்றால் சேது பாலம் விசயத்தில் ஏன் இத்தனை ஆர்ப்பாட்ட எதிர்ப்புகள்?
ராமாயணம் உண்மை என்றால் எந்த ராமாயணம் உண்மை? வால்மீகியின் மூல நூலே உண்மை என்றால் கம்பர் கூறும் ராமாயணம் என்ன சொல்ல வருகிறது?
இப்படிச் சில குழப்பங்களை மேலெழுகின்றன .ஆக மொத்தத்தில் இது அம்பையின் எழுத்துக்கு கிடைத்த மகாப் பெரிய வெற்றியே.
வாசிப்பவர்களை யோசிக்க வைத்தல்...பின் தெளிய வைத்தல் எனும் நிலையே நல்ல எழுத்துக்கு அழகாக இருக்கக் கூடும்.
ராமாயணம் பற்றி இன்னும் நிறைய தேடி வாசித்த பின் இந்தப் பதிவை தொடர்வதே சரி எனப் படுகிறது...
ராமாயணம் தெரிந்தவர்கள் தங்களுக்குத் தெரிந்ததை இங்கே பதியுங்கள்

Wednesday, April 1, 2009

"மனமெனும் தோணி பற்றி ..."



"மனமெனும் தோணி பற்றி மதியெனும் கோலையூன்றி
சினமெனும் சரக்கை ஏற்றி செறிகடல் ஓடும்போது
மனனெனும் பாறை தாக்கி மரியும்போதறியவொண்ணா
ஒற்றியூர் உடைய கோவே "

இது ஒரு செய்யுள் ...இதுல கடைசி வரியில வர்ற ஒற்றியூர் இப்போ நம்ம சென்னைக்கு பக்கம் இருக்கற திருவொற்றியூர் தானான்னு ஒரு சின்ன குழப்பம் .தெரிஞ்சவங்க வந்து பின்னூட்டத்துல சொல்லுங்க.

சரி இனி செய்யுளுக்கு பொருள் விளக்கம் பார்க்கலாம்.
சிம்பிள் தத்துவம் தான். வாழ்க்கை ஒரு கடல்னு தான் எல்லா தத்துவ ஞானிகளும் சொல்லிட்டு போயாச்சே ;அதே கான்செப்ட் தான் இங்கயும்.

மனம் என்கிற தோணியில் ஏறி அறிவு எனும் கோலை ஊன்றி கோபம் என்கிற சரக்கை ஏற்றிக் கொண்டு வாழ்க்கையாகிய செறிந்த கடலுக்குள் பயணப்படும் போது மனனெனும் (அறியாமை எனும் ) பாறை குறுக்கிட அதில் மோதி மரிக்கும் நிலை வருகையில் ஒற்றியூரில் வீற்றிருக்கும் கோவே (கோ என்ற சொல் வேந்தனையும் குறிக்கும் தெய்வத்தையும் குறிக்கும்) இங்கே தெய்வம் என்று கொள்ளலாம் .

மரிக்கும் போதாவது தெய்வமே உன்னை நினைக்கும் பெரும்பேற்றை எனக்குத் தருவாயாக என்று இப்பாடலாசிரியர் மனம் உருகி பாடுகிறார்.
செய்யுளின் தரம் எத்தனை அருமை பாருங்கள்.நான்கே வரிகளில் அழுத்தமான வாழ்க்கை தத்துவம்.பள்ளி நாட்களில் இருந்தே எனக்கு மறவாமல் மனதில் பதிந்த செய்யுள் வரிகளில் இது முதன்மையானது.

பால் நிலா ...பானையில் உருகி வழியும் நிலா ...


ஒரு சிறுகதையில் வாசித்தேன் ...நல்ல நிறை பௌர்ணமியில் ஒரு வனக் குடியிருப்பின் அருகில் ஒரு அழகான ஓடை ...ஓடை நிறைய பளிங்கு போன்ற தெளிந்த நீர் ...நீருக்குள் வட்ட வெள்ளித் தட்டாய் வெள்ளி அப்பளம் போல அழகான தண்ணிலா...;

ஒரு காட்டுவாசிப் பெண் செப்புக் குடத்தை எடுத்துக் கொண்டு அந்த ஓடைக்கு நீர் மொண்டு கொண்டு போக வருகிறாள் ;நீரில் நிலா ...நிலவின் பிம்பம் களையக் களைய நீரை குடத்தில் அள்ளியதும் ஓடை நிலா குடத்தில் டாலடிக்கிறது .அடுத்து இன்னொரு பெண் ஓடையில் நீர் எடுக்க வருகிறாள் குடத்தோடு ...இப்போது அவளது குடத்திலும் நிலா .

குனிந்து பார்த்தால் ஓடையிலும் நிலா ...இந்தப் பெண்கள் கையில் ஏந்தி நிற்கும் குடங்களிலும் நிலாக்கள் அப்போது இன்னொரு பெண் அங்கே வருகிறாள் ...குடிக்கக் கொஞ்சம் நீர் கேட்கிறாள் ...

குடத்தில் இருந்த நீரை அந்த காட்டுவாசிப் பெண் சரித்து ஊற்ற இவள் குனிந்து இருகை குவித்து நீரை கீழே வழியாமல் ஏந்தும் போது அவளது குவித்த கைகளுக்கிடையில் நிலா நெளிந்து ..நெளிந்து ஊசலாடுகிறது.

அப்படியானால் இவள் நிலவைக் குடித்தவள் ஆகிராளோ?!

இவள் குடித்து முடித்த பின்னும் வானில் நிலா ...

ஓடையிலும் நிலா...

அந்த பெண்கள் இடுப்பில் தூக்கிச் செல்லும் குடங்களிலும் நிலாக்கள் .

ஆக மொத்தம் எத்தனை நிலாக்கள் ?

எத்தனை அழகான கற்பனை பாருங்கள் ?!

தாகத்திற்கு நீரை அருந்தி முடித்த பின் வானை நிமிர்ந்து பார்க்கும் அந்தப் பெண் தன்னுள் சொல்லிக் கொள்கிறாள்...

"நிலவை மிச்சம் வைத்தவள் நான் "என்று .

இந்த நிலா கற்பனை "அம்பையின் காட்டில் ஒரு மான் தொகுப்பில் "அடவி " எனும் சிறுகதையில் "வாசிக்கக் கிடைத்தது.

சாமியாடிகளும்...சில சாமிகளும்


ஊருக்கு நடுவில்
ஒற்றை நடுகல்

வருடம் ஒருமுறை

காளிகாவதாரம் ...

ஊருக்கு தொலைவில்

பிரம்மாண்ட பேருரு

தினம் தினம்

இரவில்

வேட்டைக்கு குதிரையில் ...

ஜல்..ஜல்...ஜல்

மஞ்சள் நீரும்

பானாக்காரமும் ...

இறைபடும் இருநாள்

கொப்பும் குலையுமாய்

வேம்பிலை ...மாவிலை

ஆடிய தோரணம்

கப்பிக் கிளைத்து

கண் நிறை பச்சை

உறுமும் மேளம்

நடுங்கும் பம்பை

உடுக்கை இடுப்புடன்

ஆடும் சாமிகள் ...

சாமியாடிகள் !?

கூந்தல் பறக்கும்

கண் விழி சிவக்கும்

உருட்டி விழிக்கும்

உன்மத்த நிலையது ...

எங்கே போயின ?

காதில் விழாமல்

கண்ணில் படாமல்

கருத்தில் மறைந்து

ஜல்..ஜல்...ஜல்

எங்கும் இல்லை

சாமியாடிகள் ...!

அது ஒரு காலம் ...

இன்றது அரிதோ ?!