Showing posts with label வாசிப்பு. Show all posts
Showing posts with label வாசிப்பு. Show all posts

Tuesday, January 17, 2012

எம்.வி.வெங்கட் ராமின் 'வேள்வித் தீ ' யாராவது வாசித்திருக்கிறிர்களா?



புத்தகம்- வேள்வித் தீ
ஆசிரியர்-எம்.வி.வெங்கட் ராம்
வெளியீடு -காலச்சுவடு
விலை - ரூ 125 /-

கௌசலையின் மீது இனம் காண முடியாததோர் பரிவு தோன்றும் அதே வேளையில் அடப் பைத்தியமே! என்ற பரிதாபமும் தோன்றி நீடிக்கிறது. இவள் தற்கொலை செய்து கொள்வதிருக்கட்டும் அந்தக்குழந்தை என்ன செய்தது ?
உலக சந்தோசங்களை எல்லாம் தன் மழலையில் முடிந்து வைத்துக் கொள்ளத் தகுதி அற்ற குழந்தையா ராஜி?!

ஹேமா வைப்பற்றி சொல்வதற்கு எதுவுமில்லை ,அவளைப் பற்றிச் சொல்வதானால் இப்படியும் ஒரு பெண்ணா ?இவளை ஏன் கண்ணன் புறக்கநித்திருக்கக் கூடாது என்ற ஆதங்கமே மிஞ்சுகிறது .வயிற்றுப் பிள்ளைக்காரி கைக் குழந்தையோடு தன்னை மாய்த்துக் கொண்ட பின்னும் கூட இவளுக்கு கௌசலையின் கனவனோடு என்ன உறவு வேண்டிக்கிடக்கிறது?! ஆக மொத்தம் சுயநலமிக்கவலாகவே கருத முடிகிறது.

கௌசலையுடனான அவளது நட்பில் உண்மையில்லை.கண்ணனுக்காக அவள் கௌசலையிடம் நட்பாவது மூன்றாம் இடத்திலிருந்து பார்ப்பவர்களுக்கு வேடிக்கைப் பேச்சுக்கும் இழிந்த கற்பனைகளுக்கும் இடம் தந்து சில மணி நேரப் பொழுது போக்குக்கு உதவலாம். ஆனால் கௌசலையின் இடத்தில் இருந்து கண்டால் அவளது கண் மூடித் தனமான ஆத்திரத்தின் நியாயங்கள் புரியும்.


எது எப்படியோ கண்ணன் கௌசலைக்கு இழைத்த துரோகத்தை வேறு பெயரிட்டு அழைக்க இயலாது.

கௌசலை இவனை அதிகமும் நம்பி விட்டாள் ,சொந்த வீடென ஆசுவாசப் பட்டது மழையில் இடிந்து விழுந்த பின் ,நம்பியிருந்த சொந்தத் தொழிலில் கடன் சுமை குரல் வலையை நெரித்துக் கொண்டு திணறச் செய்து ஏற ஏற ஆதரவாய் இருந்த தந்தை திடீரென காலமான நிகழ்வு அவளுக்கான அடுத்தடுத்த அதிர்சிகளின் உச்சகட்டம்,அப்போதும் அவள் சகித்துக் கொண்டு மேலெழவே முயல்கிறாள் தன் கணவன் எனும் நம்பிக்கை விளக்கின்கத கதப்பான உரிமை உணர்வின் நிழலில் பின் பாதுகாப்பாகவே உணர்கிறாள்.

தன் வாழ்வின் ஒளியென அவள் கண்ணனை நினையாதிருந்திருக்க வாய்ப்பில்லை .தன் கணவன் சாகசக் காரன், எத்தகைய தடங்கல்களையும் அவனோடு சேர்ந்து தன்னால் கடக்க முடியும் எனும் அந்தப் பெண்ணின் நம்பிக்கைக்கு கண்ணனும் உறுதி சேர்ப்பவனாகவே இருந்தான் ஹேமா வரும் வரை ! அவள் வந்தாளோ...வந்ததை கௌசலையும் கண்டாளோ அந்த நொடியில் ஆரம்பித்தது இவன் வாழ்வின் அனர்த்தம். கடன் சுமைகளை ,நண்பனின் வஞ்சனையை அவளால் தாங்கிக் முடிகிறது,தகப்பனின் இறப்பை தாண்டிச் செல்ல முடிகிறது ,ஆனால் அவளால் கணவனைப் பங்கு போட்டுக் கொள்ள மட்டும் முடியவில்லை .

கண்ணன்,கௌசலை,ஹேமா மூன்று கதா பாத்திரங்களில் இவளது தற்கொலைக்கு கண்ணனையும் ஹேமாவையும் காரனமாக்குகிறது கதை நிகழ்வுகள்.ஆனால் கௌசலையின் குண விசேஷத்தின் படி அவள் வாழ்க்கை ஹேமாவால் இடையூறு செய்யப் படாமல் இருந்திருக்க வாய்த்திருப்பின் கண்ணன் மிகச் சிறந்த உழைப்பாளியை நீடித்திருப்பான் ,அவர்களுக்கு இன்னுமொரு குழந்தை பிறந்திருக்கும்,இடிந்த வீட்டைக் கட்டிக் கொண்டோ புது வீடு வாங்கிக் கொண்டோ எப்படியேனும் அவர்கள் தங்கள் சுமைகளில் இருந்து தாங்களே மேடேறி இருப்பார்கள் .

ஹேமா இல்லா விட்டால் கௌசலை இருந்திருப்பாள் .கண்ணன் வாழ்ந்திருப்பான். ஹேமாவுடன் தொடருமென கதை முடிவில் விரியும் கண்ணனின் அடுத்த கட்ட வாழ்க்கையை கௌசலையுடன் ஆன அவனது பூரணமான வாழ்வோடு ஒப்பிட முடியாது.

எல்லோரையும் விட ஏற்றுக் கொள்ள முடியாத உறுத்தல் குழந்தை ராஜியின் மரணம் .

அவளை எதை நம்பி கண்ணனிடம் ஒப்படைத்து விட்டுப் போயிருக்க முடியும் கௌசளையால்.

ஆகவே கௌசலையோடு குழந்தையின் தற்கொலைக்கு நியாயம் கற்பிக்கப் பட்டதாகவே கருதிக் கொள்ளலாம்.

வாசித்த வரையில் ஹேமாவின் மீது வெறுப்பும் அசூயையும் வரத் தவறவில்லை.

கௌசலை சாவதற்கு முன்பு வரை அவள் பேரிலிருந்து வந்த ஒரு பெருமித உணர்வு அவள் இறந்த பின் பரிதாப உணர்வாக மாறி அடிப் பெண்ணே உனக்கேன் இந்த நிலை என்பதாக மாறிப் போகிறது.

கண்ணனைப் பற்றிச் சொல்ல ஒன்றுமில்லை.

கதையில் கொஞ்சமே கொஞ்சம் வந்தாலும் மிகப் பிடித்துப் போன மற்றொரு பாத்திரம் கௌசலையின் தகப்பனார் 'பத்மநாப ஐயர்'

பாவம் அந்த மனிதர் சாகும் போது நினைத்திருக்க மாட்டார் தான் மிக நம்பிக்கையோடும் ஆசையோடும் வேண்டி விரும்பி தன் மகளை திருமணம் செய்து வைத்த மாப்பிள்ளை அவளை இப்படி தற்கொலை செய்து கொள்ளும் படிவிட்டு விட்டு நிர்தாட்சண்யமாய் பிறிதொரு பெண்ணை நாடிப் போவான் என்று.

தொழிலாளர் பிரச்சினைகள்,அரசு எந்திரத்தின் மந்த நிலை .முதலாளி தொழிலாளி தந்திர மயக்கப் பேச்சின் மாய மந்திரங்கள் எல்லாமும் கடந்து கதையில் எஞ்சி நிற்பது கண்ணன் கௌசலைக்கு இழைத்து விட்ட தவறு தான்.இது தவறா இல்லையா என்பது அவரவர் புரிதலைப் பொறுத்தது.

கௌசலையின் குழந்தை ராஜியின் மரணத்தைப் பொறுத்த வரை கண்ணன் மன்னிக்கப்படக் கூடியவன் அல்ல. ஹேமாவும் தான். ஏற்றுக் கொள்ள கடினமான மற்றொரு விஷயம்.இந்த மரணங்களுக்காக கண்ணன் 'இப்படி குளத்தில் விழுந்து உயிரை மாய்த்துக் கொண்டாலே!?' என்று கௌசலை மீது தான் வருத்தம் கொள்கிறானே தவிர தான் செய்ததை தவறு என்று கடைசி வரை அவன் எண்ணக் காணோம் .

//இது என் கருத்து மட்டுமே//
வாசிக்கும் எவருக்கும் அவரவர் புரிதலுக்கேற்ப சரி தவறுகள் மாறுபடலாம் .

குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தின் ஒரு தனிப்பட்ட மனிதனின் வாழ்வில் நிகழும் சமூகம் ,தொழில் சார்ந்த புறச் சிக்கல்களோடு அவனது மனைவி மற்றும் அவளது சிநேகிதியான ஒரு பெண்ணால் அவனுக்கும் அவர்களுக்கும் நேரும் அகச் சிக்கல்களையும் ஓரளவுக்கு தெளிவாக உணர்த்திய நல்லதொரு பாடம் இந்த நாவல்.

Sunday, September 11, 2011

பாத்துமாவின் ஆடு ( பஷீர் )

பாத்துமாவின் ஆடு ... (பஷீர்)

மதிலுகள் கடந்தே இன்னும் வர முடியலையாம் .இங்க என்னடான்னா இந்த பாத்துமாவோட ஆடு பாஷீரோட பால்யகால சகியையும் உலகப் புகழ் பெற்ற மூக்கையும் ஒரே நேரத்துல தின்னு செரிச்சிட்டுதாம் .ஏன்னா அது பாத்துமாவோட ஆடாச்சே ! என்ன ஒரு நையாண்டி ! குடும்பத்தின் மூத்த மகள்களுக்கென்றே இருக்கும் சில பிரத்யேக உரிமைகளை இதை விட யாரும் நையாண்டி செய்து விட முடியாது .

பெரியதொரு கூட்டுக் குடும்பத்தின் மூத்தமகனாக இருப்பதின் சங்கடங்கள் .அதிலும் பஷீர் போல காடாறு வருடம் வீடாறு மாதம் என இலக்கியக் கடலில் மூழ்கி முத்தெடுக்க விழைந்த ஊர் சுற்றிகளுக்கு ரொம்பக் கஷ்டம் தான் .மூன்று தம்பிகள் இரண்டு தங்கைகள் ,தம்பிமார் மனைவிகள் ,தங்கைமார் கணவர்கள் அவர் தம் பெற்றெடுத்த சந்தான செல்வங்கள் இத்தனை பேருக்கும் சமர்த்தாக நடந்து கொண்டாக வேண்டிய உறவுச் சிடுக்காட்டமான குடும்ப நிலை .

இத்தனூண்டு ஒலைக்குடிசையினுள் உறவுகளோடும் ,உம்மா வளர்க்கும் கோழிகளோடும்,தங்கைகள் வளர்க்கும் ஆடுகளோடும் ,தாங்கலை வேண்டி விரும்பி உறவாட வந்த பூனைகளோடும் பஷீரின் வாழ்வில் சில காலங்கள் கழிகின்றன .அன்றைய நாட்களை அப்படியே நமக்குக் காணத் தருகிறார் பஷீர்.

பஷீரைப் படிக்கும் போதெல்லாம் என்னவோ ஒரு வேதனையை அடக்கிக் கொண்டு வாசிப்பதான உணர்வு மேலெழும் .

காசு காசென்று பிய்த்தெடுக்கும் உம்மாவும் தம்பிமார்களும் ,தங்கைமார்களும்.
பஷீர் காடாறு வருஷம் போகையில் எல்லாம் வீட்டைக் கவனிப்பவன் தான் தானே என்று அசந்தால் அண்ணனாகி விடும் மூத்த தம்பி அப்துல்காதர் .

கொடுத்த காசுக்கு கணக்குக் கேட்கும் போதெல்லாம் "நான் பட்டாளத்திற்கே போகிறேன் என்று சவடால் அடிக்கும் இளைய தம்பி ஹனீபா "

வீட்டுப் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் ஏன் ஆடு கோழிகளுக்கும் பூனைகளுக்கும் கூட அதட்டல் உருட்டல் மிரட்டல் தான் எப்போதும் செல்லுபடியாகும் என்று நினைத்துக் கொண்டு எந்நேரமும் கம்பெடுத்துக் கொண்டு அதட்டிக் கொண்டு திரியும் கடைக்குட்டி அத்துலு . அவனிடம் அறுபது ஜோடு செருப்புகள் உண்டாம் .


பிறந்த வீட்டில் தனக்கு மட்டுமல்ல தன் ஆட்டுக்கும் ஏகபோக உரிமை கேட்கும் பாத்துமா .

இவர்களது வாரிசுகள் கதீஜா ,ஆரிபா,செய்து முகம்மது,லைலா ,அபி மற்றும் சிலர் .

இத்தனை களேபரத்துக்கு நடுவிலும் பிரசவிக்கும் பாத்துமாவின் ஆடு .

பிரசவத்தை பின் மத்யானப் பேன் பார்த்தல் போல சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் பஷீர் குடும்பத்துப் பெண்ணரசிகள் .

ஆனால் பஷீர் அவர்களைப் போல அல்லவே ! பஷீருக்கு பிரசவித்த ஆட்டுக்கு பக்குவம் பார்க்காமல் அப்படியே விட்டு விட்ட தன் வீட்டுப் பெண்கள் மீது பெரும் மனத்தாங்கல் ஏற்படுகிறது,ஆனாலும் ஒன்றும் கேட்டு விட முடியாது ,ஏதாவது கேட்டு வைத்தால் பஷீர் இல்லாத நேரமாகப் பார்த்து கேலி பேசிச் சிரிப்பார்கள் .

இதெல்லாம் ஒரு புறம் இருக்க ,தினம் தெரு வழியே பஷீரைப் பார்த்துக் கொண்டே போகும் பள்ளி மாணவிகள் அத்தனை ஆசை கொண்டு பார்த்துச் சென்றது தன்னை அல்ல தன் வீட்டு சாம்ப மரத்தின் சாம்பக் காய்களைத் தான் என்ற உண்மை தெரியுமிடத்து பஷீரின் தற்பெருமை டமால் என்று உடைபடுகிறது. அதற்காக அவர் அந்தப் பெண்கள் மறுபடி சாம்பக்காய்கள் வாங்க வரும் போது நோஞ்சான் காய்களாக கொஞ்சம் பறித்துக் கொடுத்து காசு வாங்கிக் கொண்டு பழி தீர்த்துக் கொள்வது ஏக தமாஷ் .

அதே சமயம் பஷீரின் பெருமை உணர்ந்து வீட்டுக்கு அவரைத் தேடி வந்து ஆட்டோகிராப் வாங்கும் தொழிலாளியின் மகள் சுஹாசினிக்கு பஷீர் பார்த்துப் பார்த்து சிவந்த பழங்களாக நிறையப் பறித்து பொட்டலம் கட்டிக் கொடுத்து அனுப்பும் இடம் ரசனை .

//உலகமகா மூத்த எழுத்தாளரே உமக்கு எமது வந்தனங்கள் //

சப்பைக்காலன் அப்துல் காதர் சாகித்ய வித்வப் புகழ் பஷீரைப் பார்த்து இலக்கணம் படித்துக் கொண்டு அப்புறம் நீ இலக்கியம் படைக்கலாம் காக்கா (அண்ணன்) எனச் சொல்லுமிடத்து பஷீரின் ஆற்றாமை வெகுண்டேழுகிறது.

உம்மா பஷீரைக் கல்யாணம் செய்து கொள்ள சொல்லிக் கேட்டு வெறுப்பேற்றுகிறார்.

பாத்துமாவுக்கோ பஷீர் அவள் மகள் கதீஜாவுக்கு ஒரு ஜோடி தங்கக் கம்மல் செய்து தர வேண்டுமென பேராவல்.

பஷீரிடம் இருந்த காசெல்லாம் கரைந்து இனி தம்பிடிக் காசில்லை .

என்ன செய்தார் பஷீர் ?!

புத்தகம் வாங்கிப் படித்து அப்புறம் தெரிந்து கொள்ளுங்கள் .

புத்தகம் -பாத்துமாவின் ஆடு
ஆசிரியர் -பஷீர்
வெளியீடு -காலச்சுவடுவிலை - 80 ரூ

Friday, June 10, 2011

பஷீர்,பெருமாள் முருகன்.ஸ்ட்ராபெர்ரி : (சில புத்தகங்கள்)

வாசிப்பின் ஊடே சில புத்தகங்கள் (நிழல் முற்றம் ,மதில்கள்,ஸ்ட்ராபெர்ரி)

பெருமாள் முருகனின் நிழல் முற்றம் :

வாழ்வின் எல்லாக் கசடுகளையும் அள்ளிப் போட்டுக் கொண்ட ஒரு தியேட்டருக்குள் ஒடுங்கி உட்கார வைக்கப் பட்டு உலக நடப்பின் ஒவ்வொரு கோணல் பக்கத்தையும் அந்த இற்றுப் போன தியேட்டரின் சோடாக் கம்பெனி தண்ணீர் தொட்டிக்குள்ளும் ,டிக்கெட் கிழிக்கும் கியூ வரிசையிலும்,கட்டில் கடையிலுமாய் நான்லினீயர் காட்சிகளாக நிர்பந்தப் படுத்தப்பட்டு மூன்று மணி நேரப் படமாய் பார்க்க நேர்ந்தால் என்ன நேரும்?! தினமும் பரோட்டா சாப்பிடுவது ஒன்றே அந்தப் பையன்களின் வாழ்வில் ஷன நேர விமோஷனமாயிருக்கக் கூடும். அந்த நிலையிலும் சக்தி வேலின் அகஉலகில் உடைபடும் மனித வாழ்வின் அகோரப் பக்கங்கள் வாசிக்கும் நமக்கே பிரமை தட்டச் செய்கின்றன எனில் அனுபவப் படும் அந்த ஜீவன்களின் மீதெழும் பரிதாப உணர்வை தாண்டிச் செல்லத் தான் வேண்டி இருக்கிறது.

சக்திவேலின் தகப்பன் குஷ்டரோகி ,நடேசனின் அம்மா ஓடிப் போனவள்,படக்காரன் வாழ்வின் நிர்பந்தம் காரணமாய் கல்யாணம் கட்டியும் பிரம்மச்சாரி , நாவலில் வரும் ஒவ்வொருவரின் வாழ்வும் பல கோணங்களில் கோணல் மாணலாய் விலகிப் பல்லிளிக்கையில் கலைடாஸ்கோப்பில் தாறுமாறாய் உருளும் உடைந்த வளையல் துண்டுகளின் ஞாபகம் வருகிறது. திக்குத் தெரியாத வாழ்வே தான் எனினும் இவர்களுக்கும் சின்னச் சின்னதாய் வாழ்வு ருசிக்கத் தான் செய்கிறது .இல்லா விட்டால் வாழ முடியாதே. இரண்டும்கெட்டான் வயதில் வேறு போக்கிடம் அற்றுப் போன பையன்களின் வாழ்க்கை என்னாகும் ? நிழல் முற்றம் வாசித்தால் தெரிந்து கொள்ளலாம். அவர்கள் வாழக் கற்றுக் கொள்கிறார்கள் எப்படியாயினும்.

பஷீரின் "மதில்கள் " :அம்மாடியோவ் ... பஷீரை வாசிக்கும் போதெல்லாம் எழுத்திலும் வாசிப்பிலும் இன்னும் கடக்க வேண்டிய தூரம் கண்ணைக் கட்டுகிறது .

என்னய்யா கதை இது ?!

கட்டக் கடைசியில் ;

"மங்களம் ... நாராயணீ சர்வ மங்களம் "

என முடிக்கையில் சிறை வாசலின் சிறு கேட்டின் முன் நமக்கும் மூளை ஸ்தம்பித்து நின்று விடத்தான் வேண்டும் ஒரு நொடியேனும். அந்தப் பெண் நாராயணீ அதற்கு பிறகு பஷீரை தேடி இருக்க மாட்டாளா ?! அதையெல்லாம் நமக்கு நாமே கண்டபடிக்கு கற்பனை செய்து கொள்ள வேண்டியது தான் ,பஷீர் தான் ஒரு இரக்கமற்ற படைப்பாளி என்பதை தனது ஒவ்வொரு படைப்பின் வழியும் நிரூபித்துச் சென்றிருக்கிறார்.

"உங்க உப்புப்பா கொம்பானை குழியானையாம் புள்ளே " எங்க உப்பப்பாவுக்கொரு யானை இருந்தது நாவலில் வரும் குஞ்ஞுதாச்சும்மா வின் அரற்றலுக்கும் , இங்கு பஷீர் விடுதலைக்குப் பின் சிறை மதில்களைத் தாண்டி வந்து தெருவோடு நின்று கொண்டு மனதிற்குள் சொல்லும் ;

"மங்களம்...நாராயணீ சர்வ மங்களம் "

முடித்துக் கொள்ளும் முறித்துக் கொள்ளும் தன்மை கொண்ட என்ன ஒரு இரக்கம் கெட்ட வார்த்தைகள் ! ஸ்தம்பிப்பது மூளை அல்ல இங்கே கதை தான்.பஷீர் அளவில் ஒரு குன்றி மணி அளவுக்காவது எழுத முடியுமா என யோசிக்கையில் நமக்கும் மூளை ஸ்தம்பித்துப் போகலாம்.

எதற்கு அந்த விஷப் பரீட்சை எல்லாம் அடுத்த புத்தகத்தைப் பற்றி பேசுவதே அதை விட உத்தமாமாய் இருக்க கூடும்! ;))

ஜி.முருகனின் "காண்டாமிருகம் " சிறுகதை தொகுப்பு இந்த வாரம் விகடன் வரவேற்பறையில் நூல் அறிமுகமாக பகிர்ந்து கொள்ளப் பட்டிருந்தது .

ஸ்ரீ.ஷங்கர் தொகுத்து அளித்த "ஸ்ட்ராபெர்ரி" தொகுப்பில் பல எழுத்தாளர்களால் எழுதப்பட்ட மனவியல் , உளவியல், பாலியல் சார்ந்த சிறுகதைகள் வாசிக்க கிடைத்தது.

தமிழ்நதியின் 'உடல் ' சிறுகதையை முன்னமே அவரது வலைப்பூவிலேயே வாசித்திருந்தேன் . இந்த தொகுப்பை முதன்முறை வாசிப்பவர்களுக்கு ஜீரணம் ஆகக் கூடிய சற்றே மென்மையான கதையென இதை மட்டுமே கூறலாம்.

லக்ஷ்மி சரவணக் குமாரின் "இருள்,மூத்திரம் மற்றும் கடவுளின் பட்டுக் கௌபீகத்துணி" சிறுகதையை வாசித்து முடிக்கையில் நமக்குள் நாமே சிரித்துக் கொள்வதை தவிர்க்க இயலாது. சிறுகதை ,

குமார் அம்பாயிரத்தின் "மண்யோனி" சிறுகதை கி.ரா வின் "பெண்மணம்" தொகுப்பில் இருந்த கதைகளை நினைவூட்டிச் சென்றது. வாசித்துக் கொண்டிருக்கும் போதே கதையின் சில பகடிகள் சிரிப்பு மூட்டிச் சென்றது. என்ன ஒரு அசாத்திய கற்பனை வளம் ...ஐயோடா ... வாசிக்கத் தான் கொஞ்சம் லஜ்ஜையாய் இருக்கிறது . கெவி டோஸ்.


ஜி.முருகனின் "கிழத்தி " தேர்ந்த நடை. அட்சர சுத்தமாய் கதையில் வருபவர்களின் மனநிலை சித்தரிக்கப் பட்டிருக்கிறது. ஒரு சின்ன நெருடல் " கிழத்தி " என்ற தலைப்பு பெண்ணை கிழத்தி என்றால் அதே விதமாய் நடந்து கொள்ளும் ஆணை என்னவேன்பார்கள்? அதைப் பற்றி இதுவரை எந்த எழுத்தாளரும் நினைத்துப் பார்க்கவில்லையோ? எம்.கோபால கிருஷ்ணனின் "முனி மேடு" தொகுப்பிலும் இதே போலொரு சிறுகதை "நிலைக் கண்ணாடி " சரி பெண்ணுக்கு இப்படி எல்லாம் நேரக் கூடும் ,அவளை இவிதமாகவேல்லாம் இசைக்கேடாக நினைத்துக் கொள்ளலாம் சரியே ...அதே சமயத்தில் அந்த ஆணை என்னவென்பது , பாதிப்பு பெண்ணுக்கு மட்டுமே தானா ,ஆண் என்ன நடந்தாலும் ஒரு பாதிப்பும் இன்றி கால் சராயில் ஒட்டிய மண்ணை உதறிச் செல்வது போல ஒன்றுமே நடக்கவில்லை எனும் பாவனையில் எல்லாவற்றையும் துடைத்து உதறி விட்டு போய் கொண்டே இருக்கலாமோ?குறைந்த பட்சம் கிழத்தி என்று அசிங்கமாய் பெண்ணை விளிப்பதற்கு ஒப்ப ஆணுக்கும் இதே விதமாய் ஒரு பொருத்தமான பெயரை மட்டுமேனும் வைத்து கதைகளிலேனும் விளிக்கலாம். யாராவது எழுதுங்களேன் எழுத்தாள மகா ஜனங்களே!


சு.தமிழ் செல்வியின் "சாமுண்டி " சிறுகதை கணவனை இழந்த மகனுக்கு கல்யாணம் செய்து வைத்து வாழ்வின் கடமைகளை முடித்து விட்ட முதிரிளம் பெண்களின் மனப் போராட்டத்தை பற்றி பகர்கிறது. மூட நம்பிக்கைகள் ஊடுருவ பெரும்பாலும் கூட்டத்தின் நடுவில் இருக்கையிலும் கூட உள்ளுக்குள் தனிமையாய் உணர்தலே முக்ய காரணமாகி விடுகிறது.


//வாசிக்காத ... வாசிக்காதன்னு சொன்னா கேட்டியா ? இப்ப பார் எழுத வேண்டியாத போய்டுச்சு...

//எனக்கு நானே சொல்லிக்கறேன் //

Saturday, June 4, 2011

எங்க உப்பப்பாவுக்கொரு ஆனையிருந்தது(பஷீர்-நாவல்))













இன்றைய கோட்டா ;







பஷீரின் நாவல்களோ சிறுகதைகளோ எதுவாக இருந்தாலும் வாசிக்கும் முன்பு பெரும் தயக்கம் இருக்கும் எனக்கு.படைப்புகளில் இம்மியளவு கூட கதாபாத்திரங்களின் மீதான இரக்கமே இருக்காது பஷீரின் எழுத்துக்களில்.இவர்கள் இப்படித்தான் என்ற ரீதியில் நாம் பாத்திரங்களின் இயல்புகளை உள்வாங்கிக் கொள்ள வேண்டும். இந்த சிறுநாவலில் குஞ்ஞு ஃபாத்துமாவைப் படைத்து அவளுக்காக நாவலை வாசிப்பவர்களை எல்லாம் வருத்தப் பட வைத்து கடைசியில் ஒரு வழியாக அவளை நிஸார் அகமதுவிடம் சேர்த்து வைத்து விட்டார் என்று நினைத்து ஆசுவாசம் கொள்ள வகையில்லை,







// "ஒனக்கே உப்பப்பாக்கே ...பெரீய கொம்பானே ...குழியானேயாம்புள்ளே.குழியானேயாம்!" //







கடைசியில் குஞ்ஞுதாச்சும்மா தன்னைக் கேலி செய்யும் அண்டை அயல் குழந்தைகளின் பேச்சில் பெரிதும் காயப்பட்டுப் போய் ஃபாத்துமாவிடம் இப்படிக் கண்ணீருடன் புலம்புகையில் நாவலின் இடையில் அவள் மீது ஏற்பட்டுப் போன எரிச்சலும் அசூயையும் அவள் மீதான கருணையாக மாறிப் போகிறது.

பாவம் பழம் பெருமை பேசியே செத்துப் போகப் படைக்கப் பட்ட பிறவி இவளாக்கும்!




குஞ்ஞு ஃபாத்துமாவின் உம்மா குஞ்ஞுதாச்சும்மா எப்போதும் பழம் பெருமையில் உழலும் கிரகம் பிடித்த பிறவி .







அவளது அப்பாவிடம் ஒரு கொம்பானை இருந்ததாம் அதைத்தான் அவள் கதை முழுதும் சொல்லிக் கொண்டு திரிகிறாள். வாட்டனடிமை என்று கம்பீரமாய் ஊரை வலம் வந்த பிரமுகரான தன் கணவர் ஒரு கட்டத்தில் நிலை தாழ்ந்து செம்மீனடிமையாக சொத்துக்களை எல்லாம் இழந்து பெரிய வீட்டை நீங்கி ஊரை விட்டு ஒதுக்குப்புறமாய் ஓலைக் கீற்றுக் கொட்டகையில் தம்மை வாழக் கொணர்ந்த வாழ்வின் இறக்கம் அவளைப் படாத பாடு பட்த்துகிறது. பிறகு குஞ்ஞுதாச்சம்மை சதா தன் ஒரே செல்ல மகள் ஃபாத்துமாவையும் கணவரான வாட்டனடிமையையும் பெருங்குரலில் திட்டித் தீர்க்கிறாள் .







முல்லீம் பெண்கள் தமது மார்கத்தில் சொல்லித் தரப்பட்ட ஐதீகங்களை எப்படி ஒரு கேள்வியுமின்றி அட கேள்வி கேட்க வேண்டுமென்ற எண்ணம் கூட இன்றி ஏற்றுக் கொள்ள நேரிடுகிறது என்பதை பஷீரை விட வேறு யாராலும் இத்தனை எளிதாக விளக்கி விட முடியாது .பாவம் ஃபாத்துமாவுக்கு கூந்தலை சீப்பு கொண்டு வாறிப் பின்னலிடக் கூட கூட உரிமை இல்லையெனில் பார்த்துக் கொள்ளுங்கள்.







வாழ்வின் எல்லாத் தாழ்வுகளுக்கும் , எல்லாக் கஷ்டங்களுக்கும் காரணம் இபிலீஸ் எனும் பகைவன் தானே தவிர வேறெந்த காரணமும் இல்லை என நம்புமிடத்தில் குஞ்ஞு ஃபாத்துமா மீது தாங்கவொண்ணாத இரக்கம் பொங்கி வழிகிறது .அப்படி இரக்கப் பட்டு தான் நிஸார் அவளை மணந்து கொள்கிறானோ என்னவோ?!







தன்னை உறிஞ்சி ரத்தம் குடித்த அட்டைக்கும்,அட்டையை விழுங்கிய விரால் மீனுக்கும் இரக்கப் படும் எளியவள் தான் பாத்துமா,அவளது உம்மாவுக்கு மட்டுமே இருந்த "எங்க உப்பாவுக்கொரு ஆனை இருந்தது போன்ற பிரத்யேக லைசன்ஸ் எதுவும் பாத்துமாவுக்கு இல்லை போலும். அவள் தனக்குள் மறுகிக் கொள்ளும் பிறவியாக அடையாளம் காட்டப் படுகிறாள்.




எது எப்படியோ ஃ பாத்துமாவுக்கு கல்யாணம் ஆனதும் வாசகர்களுக்கு அதுவரை நீடித்த அவள் மீதான இரக்கம் சற்றே குறைந்து அது அவளது உம்மாவின் பக்கம் சாய்ந்து விடுகிறது







யானையைப் பற்றிய பெருமை சரியுமிடத்தில் குஞ்ஞுதாச்சும்மா இருந்தும் மரித்தவள் ஆகிறாள். சுத்த இஸ்லாமியர்கள் இறந்தால் மரித்து என்று தான் சொல்ல வேண்டும் என்பதும் ஃபாத்துமாவிற்க்கான குஞ்ஞு தாச்சும்மாவின் கட்டளை தான்.






செத்துப் போவது காபிர்கள் மட்டும் தானாம்.







இன்றும் கூட ஊர்ப்பக்கம் போனால் சில சங்கதிகளை காதாறக் கேட்கலாம்,சில பழம் பெருமைகளை கண்ணாறக் காணலாம் .







"இந்தா இருக்கே இந்த பங்களா எங்க தாத்தா 1953 ல கட்டினதாக்கும் ,தம் பேர்ல எழுதி வைக்கலைன்னு செத்த அப்பனுக்கு கொள்ளி போட மாட்டேன்னு சொல்லி எங்க ஊதாரி மாமா இத்தாம் பெரிய பங்களாவ எங்கம்மா கிட்ட இருந்து எழுதி வாங்கிட்டார். இதான் எங்க பழைய வீடு,நாம் பொறந்து எஸ்.எஸ்.எல்.சி படிக்கற வர இங்க தான் இருந்தோம். இது எங்க வீடு ...இதான் எங்க வீடு - கண்களில் நீர் மின்ன சொல்லும் அப்பாக்கள்,அம்மாக்கள் ,அத்தைகள் ,மாமாக்களை கண்டிருக்கிறேன். //

யாருக்குத் தான் இல்லை பழம் பெருமை?!







அதொன்றும் பஷீர் சொல்வதைப் போல அத்தானாம் பெரிய குற்றம் இல்லை தான்.

ஆனால் பின்னாட்களில் கேலிக்கு இலக்காகி பெருமைக்குரியவரை ஏளனத்தில் தள்ளி வேடிக்கை பார்க்கும் சகல திறமையும் இந்த பழம் பேச்சுக்கு உண்டு.




//எங்க வீட்ல இந்த மூலைக்கும் அந்த மூலைக்கும் வீசி வீசி ஆட அம்மாம் பெரிய தேக்கு ஊஞ்சல் இருந்தது தெரியுமா?


பாட்டி கிட்ட தான் இந்த ஊர்லையே முத முதல்ல பத்துப்பிடி காசு மாலை இருந்ததாம் தெரியுமா?




எங்க வீடு தான் இந்த ஊருக்கே முத கார வீடு தெரியுமா?
எங்கப்பா தான் இந்த ஊருக்கே முத முதல்ல பெரிய பத்து படிச்சவராம் தெரியுமா?


எங்க கல்யாணம்னாலும் எங்கம்மா கிட்ட தான் இந்த ஊரே பட்டுச் சேலை வாங்கி கட்டிகிட்டுப் போகுமாம் தெரியுமா? ...


எங்கண்ணன் தான் இந்த ஊர்லயே முத முதல்ல பிளசர் கார் வாங்கினார் தெரியுமா? ...//

எத்தனை எத்தனை பழம் பெருமைகள் !

பஷீரின் இந்த நாவல் எல்லோரும் படிக்கலாம். வாசித்து முடித்ததும் உள்ளுக்குள் பொங்கும் சிரிப்பில் சன்னமாய் ஒரு வேதனை இலவசம்.


Thursday, February 24, 2011

லைப்ரரி ...

லைப்ரரி


இன்றைக்கு ...

தரையில் இறங்கும் விமானங்கள் -இந்துமதி
மாயலோகம் - சா.கந்தசாமி
நினைத்துப் பார்க்கிறேன் (தொகுப்பு) -ஜெயகாந்தன்
விகடன் தீபாவளி மலர் 2010 - விகடன்

இவை நான்கையும் எடுத்துக் கொண்டேன் .முன்பே buzz இல் யாரோ கேட்டிருந்தார்கள் ஞானியின் " தவிப்பு " நாவல் இப்போது கிடைக்கிறதா என்று! கிடைக்கிறது விகடன் வெளியீடு விலை ரூ -80 பத்துப் பதினோரு வருடங்களுக்கு முன்பு வாசிக்கையில் மிகப் பிடித்திருந்தது ,மீள் வாசிக்கும் எண்ணம் இல்லாததால் அதை எடுக்கவில்லை.
தி.ஜா வின் சக்தி வைத்தியத்தை தேடித் பார்த்தேன் சென்ற முறை கண்ணெதிரில் இருந்தது,இப்போது தேடினால் கிடைக்கவில்லை . பல முறை தி.ஜா புத்தகங்கள் எடுக்கும் போது முன்னால் முன்னால் வந்து கண்ணில் படும் ,இப்போது வேண்டு விரும்பி தேடப் புறப்பட்டால் கைக்கோ பார்வைக்கோ சிக்கக் காணோம் . சக்தி வைத்தியத்திற்கு தான் சாகித்ய அகாடமி விருது வழங்கப் பட்டதாம் என்று இணையத்தில் பார்த்தேனா ...அதில் என்ன இருக்கிறது என்று பார்த்தாக வேண்டிய கட்டாய மனநிலை உருவாகி அதைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.

தேவனின் மல்லாரி ராவ் கதைகள் இருந்தது எடுப்போமா வேண்டாமா என்று யோசித்து விட்டு பிறகு வாசிக்கலாம் என்று வைத்து விட்டேன். சில கதைகளை வாசிக்க சில மனநிலைகள் தேவைப்படுகின்றன. எல்லா நேரங்களிலும் எல்லாவற்றையும் வாசித்து விட முடிவதில்லை ...இப்போதைய தேடல் பரிந்துரைகளின் அடிப்படையில் இயங்குவதால் பலரும் பாராட்டிய இந்துமதியின் "தரையில் இறங்கும் விமானங்களை "எடுத்துக் கொண்டேன் .விகடன் பொக்கிஷத்தில் இரு வாரங்களுக்கு முன் ஒரு சோற்றுக் கடை அம்மாளைப் பற்றி ஜெயகாந்தன் எழுதி இருந்த ஒரு கட்டுரை பிரசுரமாகி இருந்தது இந்தத் தொகுப்பில் இருந்து தான் எடுக்கப் பட்டதோ என்னவோ தெரியவில்லை ,வாசிக்க பிடித்ததால் " நினைத்துப் பார்க்கிறேன் "தொகுப்பை எடுத்துக் கொண்டேன் .

எப்போதுமே பல்சுவைக்கு எனது விருப்பங்களில் முதலிடம் அந்தக் கணக்கில் பழையதானாலும் பரவாயில்லை இன்னும் வாசிக்க வில்லையே என்று 2010 விகடன் தீபாவளி மலரையும் எடுத்து வந்திருக்கிறேன். புரட்டிப் பார்த்ததில் நிறைய சுவாரஸ்யங்கள் இருக்கும் போலத் தான் தெரிகிறது ,வாசித்துப் பார்த்தால் தெரியும் .

பேருந்தில் வருகையில் முன் சீட் அம்மணி ஒருவர் நீளக் கூந்தலை விரித்துப் போட்டு சிக்கெடுத்துக் கொண்டிருந்தார். எனக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்த அம்மணியோ சாவதானமாக காலடியில் வைத்திருந்த மூன்று குட்டிச் சாக்குகளில் இருந்து விதம் விதமாக பூக்களை எடுத்து சரம் கட்டிக் கொண்டே வந்தார் இறங்க வேண்டிய நிறுத்தம் வரும் வரை ,

சிட்கோ நகர் நிறுத்தத்தில் பேருந்தில் ஏறிய ஒரு பெண்மணி குள்ளமாகத் தான் இருந்தார் அவரது கூந்தல் பின்னலிடப் பட்டு அவரை விட உயரமாக இருந்தது .இத்தனை நீளக் கூந்தலா ! தலைக்கு அப்படி என்ன தான் போட்டுக் குளிப்பாளோ இந்தம்மாள் என்று யோசித்துக் கொண்டிருந்தேன் .டென்த் படிக்கையில் லதா என்றொரு சினேகிதி இருந்தாள் அவளுக்கும் பட்டுப் போல நீளப் பின்னல் தான் ஆனால் கருப்பின்றி செம்பட்டை வாய்ந்த கூந்தல் ..."தலைக்கு என்னத்தையடி தேய்த்துக் குளிப்பாய் என்று கேட்டதற்கு 501 சோப்பு தான் கார்த்தி "என்று சிரித்திருக்கிறாள் . அவளது செம்பழுப்புக் கூந்தல் அதை நிஜம் என்று கூட நம்ப வைத்தது.அன்றிலிருந்து எத்தனை அடர்த்தியான பின்னலைப்பார்த்தாலும் தலைக்கு என்ன தேய்த்துக் குளிப்பாய் என்று யாரையும் நான் கேட்டதில்லை.

சொல்ல அந்த விஷயம் பதினோரு மணிக்கு மேல் சென்னை நகரில் பேருந்துகள் இடைஞ்சல் இல்லாமல் நெருக்கடி இல்லாமல் பெண்கள் தங்கள் தலை முடியை விரித்துப் போட்டு உலர்த்திக் கொண்டும் பூக் கட்டிக் கொண்டும் பயணிக்கிற வசதியில் இருக்கின்றன என்பதைத் தான் .
வந்தது தான் வந்தோம் வீட்டுக்கு கொஞ்சம் பழங்கள் வாங்கிக் கொள்ளலாம் என்று பழக்கடைப் பக்கம் ஒதுங்கினால் அகச்மாத்தாகவோ அசரீரியாகவோ காதில் பாய்ந்த ஒரு ஸ்டேட்மென்ட்டை பாருங்கள் ; அங்கே ஒரு சிவப்புச் சேலை பெண்மணி கூட வந்திருந்த இன்னொரு மஞ்சள் சேலை பெண்மணியிடம் இப்படிச் சொல்லிக் கொண்டிருந்தார்.

// "நல்ல பெண்டாட்டிக்கு நல்ல புருஷன் அமையறதில்லை ,நல்லபுருஷனுக்கு நல்ல பெண்டாட்டி அமையறதில்லை "//

அப்படியா மக்களே !?

இதிலிருந்து என்ன சொல்ல வருகிறார் என்று ஒரு நொடி குழம்பி விட்டு தலையை குலுக்கி அந்த வார்த்தையில் இருந்து விடுபட்டுக் கொண்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தேன் .

Friday, December 10, 2010

ஜெயமோகனின் கன்யாகுமரி ( புத்தக விமர்சனம் )



ஒரு வேலை அதீதமாய் தன்னில் மூழ்கிப் போனவர்களுக்கு மட்டுமேனும் இந்தநாவலை வாசித்து முடித்ததும் காதோரமாய் கடலின் இரைச்சலைக் காட்டிலும்அதிகமாய் மனதின் இரைச்சல் கேட்கத் துவங்கலாம். இந்த நாவலுக்குரியவெற்றியென கூறலாம் அதை.

சதா தன்னியல்பற்று தனக்குள் பேசிக் கொண்டே இருக்கும் ஒரு மனிதன் (ரவி)கதையை நகர்த்திக் கொண்டு போகிறான். இங்கு கதை என்பதை விட அவன் தனக்குள்பேசிக் கொண்டே கடக்க முடியாமல் கனத்துச் சுமக்கும் சம்பவங்களின் கோர்வைஎன்பது பொருந்திப் போகலாம்.

விமலாவை,பிரவீனாவை,ரமணியை,ஷை லஜாவைப் புரிந்து கொள்ள முடிவதை வாசிப்பின்ஆழம் என்று சப்பைக் கட்டு கட்டினாலும் இந்தப் பெண்கள் புனிதம்,தெய்வீகம், செண்டிமெண்ட் etc ..etc கான்செப்டில் சிக்கிக் கொள்ளாமல்நழுவிச் செல்வதை எந்த ஆட்சேபமுமின்றி நீடித்த புன்னகையுடன் கடக்கமுடிகிறது.

இவர்களில் கன்யாகுமாரி யார்?

கன்யாகுமரியின் ஐதீகக் கதையை பின்புலமாக வைத்துக் கொண்டு இந்தக் கதையைஎழுதியதாக ஜெயமோகன் தன் குறிப்பில் கூறி இருந்தாலும் கூட இது ஒட்டுமொத்தமாய் பெண்களின் அக மனதை எப்படியேனும் வென்று விட எத்தனிக்கும் ஒருமனிதனின் தனிப்பட்ட துக்கமாகவே மனதில் பதிகிறது.

பெண் சதை தாண்டி யோசிக்கப் பட்டிருக்கிறாள் இங்கு.

ஆனாலும் வெற்றி கொள்ளப்படவில்லை, அவளை வெல்ல முடியாத ஆணின் இயலாமை அவனைதன்னியல்பாய் சுழலுக்குள் தள்ளி சுளித்து மறையுமிடத்தில் முடிகிறது கதை.

கன்யாகுமாரி அவள் ஒரு போதும் எந்த ஆணாலும் வெற்றி கொள்ளப்படப் போவதும்இல்லை ,அவளது தடைகள் மறுப்புகள்...ஏதுமின்றியே படைப்பின் மாயாஜாலம் ஆடும்கண்ணாமூச்சு இது.
ஒரு ஆண் வெறுமே ஆணாக மட்டுமே இருக்கும் போது பெண் குறித்த அவனதுகண்ணோட்டம் படு இழிவானதாகவும் இருக்க முடிந்திருக்கிறது,அவனே தந்தை எனும்நிலையில் பெண்ணைக் குறித்து யோசிக்கையில் அவர்களைப் பாதுகாக்கும்கடமையினால் சதா பருந்திடம் இருந்து குஞ்சுகளைக் காக்கும் தாய்க்கோழிநிலைக்கு துரத்தப் பட்டு விடுகிறான். தலை கீழ் மாற்றம் தான்,ஆனாலும் இதுசில கால இடைவெளிகளில் நிகழ்ந்து விடுகிறது என்பதே நிஜம் .இதற்கொருஉதாரணம் இந்த நாவலில் வரும் பெத்தேல்புரம் ஸ்டீபன் .

ரவியை ஒரு சாதாரண மனிதனாக மதிக்கத் தோன்றவில்லை,படு ஆபத்தான சூழ்நிலைப்பிராணியாகவே சித்தரிக்கப் பட்டிருக்கிறான். எந்நேரமும் அதென்ன மனஉளைச்சலோ?! அறிவு ஜீவியாகவும் இருக்க வேண்டும் ,அழகாகவும் இருக்கவேண்டும் மனைவி என்ற எதிர்பார்ப்பு பொதுப் புத்தி என்று தவிர்த்துவிட்டாலும் கூட கதைப் படி என்ன தான் சாதனையாள இயக்குனராக இருந்தாலும்இத்தனை துஷ்ட சிந்தனை தேவை இல்லை என்றே எண்ண முடிகிறது.அடுத்தொரு இமாலயவெற்றியைக் கொடுத்தே ஆக வேண்டிய நிர்பந்தம் என்று அவனது சலனங்களைசமாளிக்கத் தேவை இல்லை. இந்த நாவல் முழுக்கவுமே அவன் தன்னைப் பெரியஇவனாகத் தான் நினைத்துக் கொண்டு உலவிக் கொண்டிருக்கிறான்.

//இது கன்யாகுமரி தானா ? கன்யாகுமரி தான் ஆனால் அவனுடன் சேர்ந்துஅந்நகரையே கை விட்டு விட்டு மற்ற அத்தனை பெரும் சென்றுவிட்டிருந்தார்கள்,வெளியேறிவிட வேண்டும் என்ற வேகம் எழுந்த போது தான்பாதைகளோ வண்டிகளோ இல்லாமல் அங்கு அகப் பட்டுக் கொண்டு விட்டதை அறிந்தான்//

இப்படி அவன் அகப்பட்டுக் கொண்டு திணறுவதாகக் கதை முடிகையில்எதிர்பார்த்தது போலவே சந்தோசம் எழுவதை தவிர்க்க முடியவில்லை.

நாவலில் ஜெய மோகனின் சில வார்த்தைப் பிரயோகங்களும் அவற்றின்பயன்பாடுகளும் மிக்க ஆழமானவை. தன் கல்லூரிக் கால தோழியும்,காதலியுமானவிமலாவின் பாதங்களைப் பற்றி ரவி நினைத்துப் பார்க்கையில் இப்படி ஒருவாக்கியம் ;

//ஆழத்து வேர் போன்ற அசாதாரமான வெண்ணிறம் //

அவளைப் பற்றியகற்பனைகளில் எல்லாம் நர்கீஸ் போல அவளை எண்ணிக் கொள்வது. அப்படியானால்ஆரம்பத்தில் இருந்தே ரவி விமலாவின் தோற்றத்தில் நர்கீஸை தான்காதலித்திருக்கிறான். என்ன ஒரு ஏமாற்றுத் தனம் ! தன்னைத் தானேஏமாற்றிக் கொள்வதின் உச்சம் இது. ஆனால் எல்லோருக்கும் அப்படித் தான்வாய்க்கிறது. இது உலகநியதி.

நாவல் சொல்ல விரும்பியது பெண்ணின் களங்கமற்ற தன்மையாக இருக்குமென்றுநினைக்கிறன். ஒரு சிறுமியாக ,சகோதரியாக ,காதலியாக,மகளாக காலத்திற்கு தகபெண்கள் கொள்ளும் வேஷங்களில் எதோ ஒரு பொழுதில் அவளது நிஷ்களங்கம்தரிசிக்கப் படுகிறது,அந்த மகா தரிசனத்தை ஆண் அவன் எந்த உறவு முறைகொண்டவனாக இருந்த போதிலும் அவனால் அந்த நிஷ்களங்கத்தின் பரிசுத்தத்தின்முன் இயல்பாய் இருக்க முடிவதில்லை, அந்தப் பெண்ணை அவன் வெற்றி கொள்ளநினைக்கிறான். ,முடியாத பட்சத்தில் அவள் மீது அதீத வெறுப்பை அடைகிறான்.மீண்டும் அன்பைத் தேக்கி குழந்தையாகி அவளிடமே சரணாகதி ஆகிறான்,இந்தசக்கரத்தின் சுழற்சியில் சிக்கிக் கொண்டு வெளி வரத் தெரியாமல்பைத்தியமாகிறான் .

இந்து புராணங்களில் இதனால் தான் சிவனை "பித்தா பிறை சூடி " என்றெல்லாம்பாடி வைத்தார்களோ என்னவோ ?!

தேவியை மணந்து கொள்ள ஸ்தாணுமாலயன் வந்து கொண்டிருக்கிறார்!யுகம் யுகமாய் நீண்டு கொண்டிருக்கும் பயணம் அது...இன்னும் முடியக்காணோம்...தேவி ஸ்தானுமாலயனை எதிர் நோக்கி ஒற்றைக் கல் மூக்குத்தி மினுங்க கடற்கரை மொட்டைப் பாறையில் அர்த்த ராத்திரிகள் தோறும் தவமிருக்கிராளாம்.

ஸ்தாணுமாலயன் சிவன்,விஷ்ணு,பிரம்மா மூன்றும் கலந்த திரி சக்தி ரூபம்.ஆக்கல்,அழித்தல்,காத்தல் மூன்றையும் உள்ளடக்கிக் கொண்ட க்ரியா சக்தி அவன்என்கிறார் ஜெயமோகன் . எத்தனை திறமைகள் இருந்தும் பாவம் இன்னும் தேவியைஆட்கொள்ளக் காணோம்.


காமம் ...யாமம் நாவலின் ஓரிடத்தில் எஸ்ரா இப்படி எழுதி இருக்கிறார்,முசாபர் அலி அத்தர் யாமம் தயாரிக்கும் கலையை தனக்கடுத்த சந்ததிக்கும்கடத்தும் நோக்கத்தில் ஒரு ஆண் குழந்தையைப் பெறுவதற்காக தன்னிலும் மிகஇளைய சுரையா என்ற பெண்ணை மூன்றாம் தாரமாக மணந்து அழைத்துவருமிடத்தில்...
அவளோடான கூடலில் சுரையா அந்த நிகழ்வை கணவனுடனான காமம் தனக்கு மூக்குசிந்தி போடுவதைப் போல தான் என்று நினைத்துக் கொள்வதாக ஒரு வரி.சுரையாவுக்கு வயிற்றுப் பாடே பிரதானமாக இருத்தலைப் போல இங்கு கன்யாகுமரியில் பிரவீனாவுக்கு தான் விருது வாங்கும் நடிகையாவதே பிரதானம்.அதற்காக ரவியைப் புறம் தள்ளி வேணு கோபாலனுடன் சென்று விடுகிறாள் அவள்.

காமம் பெண்களின் கன்னிமையை பாதிப்பதில்லை ,அவள் எதற்காகவோ நீண்டகாத்திருப்பில் தன்னைக் கரைத்துக் கொண்டிருக்கிறாள். இதை மிகஅந்தரங்கமான ஓரிடத்தில் அவள் பாதுகாத்து வைத்திருக்க கூடும் ,அந்தஅந்தரங்கத்தை அறிந்து கொள்ள முடியாமல் சதா தோற்றுப் போகும் நிலையில் தான்ஆண் மிக்க குழப்பத்திற்கு ஆளாகிறான். பெண்ணின் மீதான அவனின் வெறுப்பும்விருப்பும் மாறி மாறி இங்கிருந்து தொடங்கி சதா இளைப்பாறுதல் இன்றிசுழன்றடிக்க ஆரம்பிக்கிறது.

இந்த நாவலை கி.ரா வின் கன்னிமை சிறுகதையின் பாதிப்பில் எழுதியதாகஜெயமோகன் கூறி இருக்கிறார் தன் முன்னுரையில். ஒப்பிட்டுப் பார்த்துஏற்றுக் கொள்ள முடிகிறது. கி.ரா வின் நாச்சியாருக்கும் ஜெயமோகனின்விமலாவுக்கும் ...ஏன் பிரவீனாவுக்கும் பெரிதாய் ஒன்றும் வித்யாசங்கள்இல்லை மனதளவில் அவர்கள் எடுத்துக் கொள்ளும் தீர்மானங்களின் அடிப்படையில்.


இந்த நாவலில் ஆட்சேபிக்கத் தகுந்த ஒரே ஒரு இடமென்றால் அது இது தான்.


// அழகில்லாத பெண்கள் ஆண்களை குரூரமானவர்களாக ,அற்பமானவர்களாக,நீதியுணர்வே இல்லாதவர்களாக ஆக்கும் விதத்திற்கு இணையான ஒன்றைக் கூறவேண்டுமெனில் மான் குட்டியை அடித்துக் கிழித்துத் தின்னும் சிங்கத்தின்இயற்கையான குரூரத்தை தான் //

கூடவே கன்யாகுமரியின் ஐதீகம் தேவி ஸ்தானுமலயனுக்காக கடற்கரையில்காத்திருப்பதாகச் சொல்லப் பட்டிருப்பது சரி தான்,ஆனால் ஸ்தாணுமாலயன் ஏன்அவளைக் காக்க வைத்தார்? இன்னும் வராமல் போனதற்கு காரணக் கதைகள்ஏதுமில்லையா? அது சொல்லப் படவில்லை இங்கே ,அதனால் ஒரு முற்றுப் பெறாததன்மை ...ஒரு வேளை எனக்கு மட்டும் தான் அந்த ஐதீகக் கதை முழுமையாகத்தெரியாம்லிருக்கிறதோ என்னவோ! கதை தெரிந்தவர்கள் யாரேனும் ஜெயமோகன் இந்தநாவலில் சொல்லாமல் விட்டதை வந்து முடித்து வையுங்கள்


நாவல் - கன்யாகுமாரி
ஆசிரியர் - ஜெயமோகன்
பதிப்பகம் - கவிதா பப்ளிகேசன் வெளியீடு
விலை - ரூ 90


Saturday, November 20, 2010

இராமாயண மகாபாரத காவியங்கள் வெறும் கப்ஸா மட்டுமே அல்ல அல்ல...



ராமாயணமும் மகாபாரதமும் முற்றிலுமாய் புனையப் பட்ட கற்பனைகள் அல்லவே அல்ல. கடலில் கரைந்த உப்பாய் அன்றியும் உப்பைக் கரைத்த கடலாய் நடந்த நிஜங்களின் மீது அதீத கற்பனைகளை ஏற்றி புனையப் பட்ட காவியங்கள் ,பாரத ஆதி அந்தம் காண இவற்றை விட்டால் வேறு உகந்த வழிகள் இல.

பார்க்கலாம் ...மகத ராஜ்யங்கள் சீர்ப்படும்முன்பாக இந்துஸ்தானத்தில் மிகுந்த பெருமையோடிருந்தது கோசலமே. கோசல ராமனுக்காய் பாபர் மசூதி இடித்தார்கள் ,தீர்ப்பு சில வாரங்களுக்கு முன் கண்டோமே. நீதிபதிகள் ஒப்புக் கொண்டார்கள் ராமன் பிறந்த இடம் அதுவென்று. சீதையின் சமையலறை இதுவென்று t.v யில் காட்டினார்கள். இது கற்பனை அல்ல . சிந்து சமவெளி நாகரிக காலத்து ஹரப்பா ,மொஹஞ்சதாரோ .டோலவிரா நகரங்களையே அகழ்ந்தெடுக்கும் போது அதற்கும் பிற்பட்ட காலத்து ராமன் வாழ்ந்த இடமாக அயோத்தி ஏன் இருக்க முடியாது ?!

வேத காலத்துக்கு சற்றே பிந்தைய கோசல ஆர்யப் பழங்குடி வம்சங்களில் ஒன்றே கோசலம். கோசலம் வெற்றிக் கோலோச்சிய நாட்களில் மகதம் சற்று பின்தங்கிய நிலையில் இருந்தது,மகதர்கள் தாழ்ந்த குடிகளாகக் கருதப் பட்டனர். மகத மன்னன் அஜாத சத்ரு காலத்துக்குப் பின்பே கோசலம் வீழ்ந்தது ,வீழ்த்தப்பட்டது. கோசல மன்னன் பேசேனாதியும் மகத பிம்பி சாரரும் புத்தரின் சமகாலத்தவர் என சரித்திரம் குறிப்பிடுகிறது.

இந்தியாவில் சைவம் ,வைணவம் பிரபலமடைவதற்கு முன்பே பௌத்தம் இருந்தது ,அதற்கும் முற்பட்ட வரலாறுடையதாக ஜைனமும் இருந்தது . வேத காலப் பழங்குடி வம்சங்களில் ஒன்றான லிச்சாவி குலத்தில் பிறந்த மகாவீரர் ஜைன மதத்தின் தீர்த்தாங்கரராக இருந்தாலும் அவருக்கும் முன்பே பல தீர்த்தாங்கரர்கள் இருந்தனர் என வாசிக்கையில் ஆச்சரியமாக இருந்தது.
இதே போல இந்தோ ஆரியப் பழங்குடி வம்சமான சாக்கிய குலத்தில் தோன்றியவர் கௌதமர் .புத்தர். அதனால் தான் அவர் சாக்கிய முனி.

இங்கே கவனிக்கப்பட வேண்டிய ஒரு மேலான விஷயம் புத்தர் பிறப்பதற்கு முன்பு அவரது அன்னை மாயா தேவி புத்தர் பிறந்த இடமான லும்பினியில் உள்ள புனித புஷ்கரணியில் நீராடி அங்கிருந்த ரும்மினி தேவி எனும் தாய் தெய்வத்திற்கு அந்தக் காலப் பழங்குடி மகளிர் வழி வழியாகக் கடைப்பிடித்து வந்த சடங்குகளைச் செய்து முடித்து விட்டு அப்படியே கௌதமரைப் பெற்றார் என்று புத்தரது வாழ்க்கை வரலாறு கூறுகிறது.

இதிலிருந்து நாம அறிய நேர்வது பௌத்தம் தோன்றுவதற்கு முன்பே இந்துஸ்தானத்தில் நிலை பெற்றிருந்தது தாய் தெய்வ வழிபாடுகள். இதை சாக்தம் என்று சொன்னால் (சக்தி வழிபாடு ) மறுக்கப் படக் கூடுமா என தெரியவில்லை. ஆனால் பாரத்தத்தின் பல மாநிலங்களிலும் தொடர்ந்து நடைபெற்று வரும் அகழவாராய்ச்சிகளின் பின் நாம் அறிந்து கொள்ள முடிவது,எருமை புராதன இந்தியப் பழங்குடி மக்களுக்கு பெரும் சவாலாய் இருந்திருக்க கூடும்.

எருமைகளை அடக்கி பழக்கத்திற்கு கொண்டு வருவது மிகப் பெரும் சவாலாய் இருந்திருக்கலாம்.

குகைச் சித்திரங்களில் பெரும்பாலும் காணப் படும் சித்திரங்கள் பசுபதி உருவங்களும் (காளை கடவுள் -சிவன்) மகிஷாசுர மர்த்தினி சித்திரங்கலுமே ,இதில் நாம் சிந்திக்க உகந்த ஒரு விஷயம் காளை உருவ சித்திரங்களில் காளை மாடுகள் கொல்லப்படவில்லை காளை வீரன் அவற்றை வெற்றி கொண்டு பழக்கப் படுத்திக் கொள்வதாகவே சித்திரங்கள் காட்டுகின்றன. ஆனால் மகிஷம் ஒரு பெண் தெய்வத்தால் கொல்லப் படுவதாக சித்திரங்கள் காட்டுகின்றன. மேலும் சில வீரர்களை எருமைகள் தம் கொம்புகளால் கொத்தி எறிவதாகக் கூட சில சித்திரங்கள் காணக் கிடைப்பதால். அடக்குவதற்கும் பழக்குவதற்கும் அதிக சிரமம் கொடுத்த எருமைகள் தீய சக்திகளாக சித்தரிக்க பட்டிருக்கலாம். அவற்றை அடக்கிய பழங்குடி பெண் மகிஷாசுர மர்த்தினி எனும் தெய்வமாக்கப் பட்டிருக்கலாம்.


தொடரும் ...

Thursday, April 2, 2009

அம்பையின் காட்டில் ஒரு மான்("அடவி" - சும்மா ஒரு பார்வை )


விலை - ரூபாய் 80
வெளியீடு - காலச்சுவடு பதிப்பகம்
ஏற்கனவே போன பதிவில் சொன்ன சேதி தான் ,அம்பையின் காட்டில் ஒரு மான் சிறுகதை தொகுப்பை வாசித்தேன் என்றேனில்லையா? அதில் ஏழெட்டு சிறுகதைகள் இருந்தன அவற்றுள் "அடவி " என்றொரு சிறுகதை .நான் மிக ரசித்துப் படித்தது .
வனத்தின் மீது ஆசை கொண்ட பெண் செந்திரு அவளது கணவன் திருமலை ,தொழில் அதிபரான கணவன் ...புத்திசாலி மனைவி ,ஆசைக்கு ஒன்று ..ஆஸ்திக்கு ஒன்று என இரண்டு அருமையான குழந்தைகள் ,பணப் பற்றாக்குறை அற்ற நிலை இப்படியாக பொருளாதார கவலைகள் அற்ற நல்ல வாழ்க்கை என்று தானே தோன்றும் நமக்கு இவர்களைப் பற்றி வாசிக்கையில் .
ஆனால் இக்கதையில் செந்திரு கணவனிடம் கோபித்துக் கொண்டு அல்லது கருத்து வேறுபாடு கொண்டு தனியே வனத்தை நோக்கிச்செல்கிறாள் ,வனத்திற்குப் போகிறாள் என்றதும் தனியே கால் நடையாய் என்றெல்லாம் அதீத கற்பனைகள் தேவை இல்லை .கணவனின் இளைய சகோதரன் காரில் கொண்டு போய் விட்டு விட்டு வருகிறான் செந்திருவை காட்டில் இருக்கும் அரசு விருந்தினர் மாளிகையில்.
அங்கே செந்திரு தனது கடந்த காலத்தை வனத்துடனும் ...ராமனின் இல்லை ...இல்லை சீதையின் கதையுடனும் கலந்து மீண்டும் நினைவு படுத்திக் கொண்டு தனக்கான சுய தேடலில் மூழ்குகிறாள். கொஞ்சம் செந்திருவின் கதை ...நடுநடுவே சீதையே நேரடியாகச் சொல்வதைப் போல அவளது வாழ்வியல் நிகழ்வுகள் இடையில் அந்தக் காட்டில் இருக்கும் குடியிருப்பில் வசிக்கும் சவிதா பாயி,துர்கா பாயி,சந்திரா பாயி போன்ற சாமானியப் பெண்களுடனான அர்த்தமுள்ள அரட்டை ,இப்படி சுமூகமாக சம்பவங்களை விரித்துக் கொண்டு போகிறார் அம்பை.
சும்மா வீம்புக்கு அம்பையின் எழுத்துக்களில் பெண்ணிய வாடை தூக்கலாக இருக்கிறது என்று சொல்லிக் கொள்கிறார்களோ என்று தான் தோன்றுகிறது,அவர் முன் வைக்கும் கேள்விகள் எல்லாமே படு "நச் மற்றும் நறுக் "வகை .
குறிப்பாக ராமாயணக் கதை ...ராமனை நாம் இங்கு வெகு சிறப்பாகத் தான் கொண்டாடுகிறோம் ,சீதையையும் தான்...லட்சுமணன் ...ஹனுமான் ...ஜாம்பவான் எல்லோரையுமே கொண்டாடுகிறோம் தான் ...ராமனின் அளவுக்கு என்றில்லா விட்டாலும் கூட சீதை இந்த உலகத்தின் அன்னையாகத் தான் ஹிந்துக்களால் போற்றப் படுகிறாள் .
சிறுகதை வாசித்ததும் சட்டென்று மனதில் உதித்த மற்றும் ஒரு எண்ணம் "வால்மீகி ராமாயணம் வேறு தளம் ...கம்ப ராமாயணம் வேறு தளம் " என்ற மகாப் பெரிய உண்மை . சீதையை ராவணன் கடத்திச் செல்வதாக கம்பர் சொல்லும் இடங்கள் மிக மிக நாகரீகம் ...பண்பான வர்ணனை என்று நாம் கருதும் அந்த ஓரிடத்தை மட்டும் கருத்தில் கொண்டு நான் இதைச் சொல்லவில்லை .கம்ப ராமாயணத்தில் காணக் கிடைக்காத பல முரண்பாடுகள் ஒருவேளை வால்மீகி ராமாயணத்தில் காணக் கிடைக்கலாம் .
செந்திருவுக்கு கணவன் தன்னை தொழிலில் பாகஸ்தியாக சேர்த்துக் கொள்ளவில்லையே என்ற ஆதங்கம் ...மன உளைச்சல் வாழ்வின் மீதான வெறுப்பாக மாறி வனத்தின் நிசப்தத்தின் நடுவில் தன்னை தான் அறிய நடக்க ஆரம்பிக்கிறாள் . அவளது நடை அவளோடு கூடவே நம்மையும் அழைத்துச் செல்கிறது ,அவளோடு நாமும் வானம் முழுக்க அவள் செல்லும் இடங்களுக்கெல்லாம் நடக்கிறோம் காலின் அசதியே தோன்றாமல் .
செந்திருவின் பால்ய வயது ,அவள் மும்பையில் பெரியம்மா வீட்டில் திருமலையைக் கண்டு காதல் கொள்வது ,இந்தக் காதலை கண்டு கொள்ளாமல் இருக்கும் தன் தந்தையிடம் ஒன்றிற்கு இரு முறை சாதாரணமாகவே போகும் போக்கில் இது திருமணத்தில் முடிய வேண்டிய பந்தம் என உணர்த்தும் திண்மை ,கணவனிடம் காட்டை விட்டு வரமாட்டேன் என நடத்தும் வாக்கு வாதங்கள் ,கூடவே தன் பிள்ளைகள் மற்றும் உறவுகளைப் பற்றிய நினைவுகள் இவற்றை எல்லாம் கணக்கில் கொண்டு பார்த்தால் செந்திரு ஒரு தன்னிச்சையான மனுஷியாகத் தான் தெரிகிறாள் .
அவள் தனக்கான முடிவுகளை எப்போதும் தானே எடுத்துக் கொள்கிறாள்,மற்றவர்களை பொருட்படுத்துவதில்லை ,அது தந்தையோ அல்லது கணவனோ ஆனாலும் சரி .அவளது முடிவுகளை அவளே எடுக்கிறாள்.திருமலை மீதான காதல் ஆகட்டும்...மன பேதம் கொண்டு வனத்திற்கு போதல் ஆகட்டும் செந்திரு வியப்பளிக்கக் கூடும் பலருக்கு ;
இந்த சிறுகதையில் செந்திரு தன் நினைவுகளாக பகிந்து கொள்ளும் சில விசயங்களும் வியப்பளிக்கவே செய்கின்றன,
உதாரணமாக காட்டில் லட்சுமணன் மீது மோகம் கொண்ட சூர்ப்பனகை மூக்கறுத்து அவமானப் படுத்தப் பட்டது மட்டுமே நமக்கு கம்பராமாயணத்தில் படிக்கக் கிடைக்கிறது.
இந்திரகாமினி எனும் கந்தர்வப் பெண் லட்சுமணன் மீது மோகம் கொண்டு அவனை நெருங்குகையில் அவளை அவன் உதாசீனப் படுத்தவே ஆசை நிறைவேறா கோபத்தில் அவளொரு சூழ்ச்சி செய்தாளாம்,
லட்சுமனனி படுக்கையில் அன்றிரவு சில உடைந்த வளையல்கள் மலர்களைப் போட்டு வைத்து விட்டு மறைந்து விட்டாளாம். இதற்க்கு ராமன் என்ன செய்தான் தெரியுமா?லட்சுமனனின் அறையை கூட்டிப் பெருக்கி சுத்தமாக்க அங்கே சென்ற சீதை இதைக் கண்டு வந்து ராமனிடம் புறம் சொல்ல , ராமன் விடிந்ததும் அந்த வளையல்கள் யாருடையவை எனக் கண்டு பிடிக்க அந்தக் காட்டில் வசித்த எல்லாப் பெண்களின் வளையல் அளவுகளையும் வாங்கி சோதித்துப் பார்த்தானாம்!?
புறம் சொல்லுதல் பெண்களின் பொதுத் தவறு என்று சொல்ல வருகிறாரோ அம்பை?! ஆனாலும் சீதை புறம் சொன்னால் என்ற வரிகள் எனக்குப் புதியவை.கூடவே அந்த வளையல்கள் காட்டுவாசிப் பெண்கள் எவருக்கும் பொருந்தாமல் சீதியின் வளையல்குடன் பொருந்துகிறது என கண்டுபிடிக்கப் பட்டதாக கூறும் போது ராமனின் சஞ்சல சந்தேக புத்தி விளக்கப் படுகிறது எனலாம்.
லட்சுமணன் ஒன்றும் உத்தமன் இல்லை எனும் ராமனின் வாக்கு நிச்சயம் கம்ப ராமாயணத்தில் காண முடியாதென்று தான் நினைக்கிறேன்,,
ஒருவேளை வடமொழி ராமாயணத்தில் இருக்கக் கூடுமோ என்னவோ? ராமன் இங்கேசஞ்சல ராமன் இல்லை ..அவன் கோதண்டராமனாக..ஜானகி ராமனாக ..."ஒருவனுக்கு ஒருத்தி எனும் "கோட்ப்பாட்டை நிலை நிறுத்த வந்த அற்புத அவதார கடவுள் என்றல்லவா துதிக்கப் படுகிறான்.
ஏனிந்த முரண்பாடு? கம்பருக்கும்..வால்மீகிக்கும்?
செந்திரு எனும் பெண்ணின் மன ஓட்டத்தில் அவள் எண்ணிப் பார்ப்பதாக கதை அமைவதால் சும்மா கற்பனை என்று ஒதுக்கி விடக் கூடும் தான்!
"வித்யா சுப்ரமண்யத்தின் ஒரு நாவலில் கூட அம்பையின் இந்த அடவி சிறுகதையை ஒத்த வரிகளை வாசித்த ஞாபகம் நெருடியதால் இதைப் பதியத் தோன்றியது.
எது ராமாயணம்?புராணமே ஒரு கற்பனை என்றால் சேது பாலம் விசயத்தில் ஏன் இத்தனை ஆர்ப்பாட்ட எதிர்ப்புகள்?
ராமாயணம் உண்மை என்றால் எந்த ராமாயணம் உண்மை? வால்மீகியின் மூல நூலே உண்மை என்றால் கம்பர் கூறும் ராமாயணம் என்ன சொல்ல வருகிறது?
இப்படிச் சில குழப்பங்களை மேலெழுகின்றன .ஆக மொத்தத்தில் இது அம்பையின் எழுத்துக்கு கிடைத்த மகாப் பெரிய வெற்றியே.
வாசிப்பவர்களை யோசிக்க வைத்தல்...பின் தெளிய வைத்தல் எனும் நிலையே நல்ல எழுத்துக்கு அழகாக இருக்கக் கூடும்.
ராமாயணம் பற்றி இன்னும் நிறைய தேடி வாசித்த பின் இந்தப் பதிவை தொடர்வதே சரி எனப் படுகிறது...
ராமாயணம் தெரிந்தவர்கள் தங்களுக்குத் தெரிந்ததை இங்கே பதியுங்கள்

Wednesday, March 11, 2009

ஒற்றனும் மகா ஒற்றனும் (அசோகமிதரனின் ஒற்றன் ஒரு மேலோட்டமான நோக்கில்)

ஒற்றனை வாசிப்பவர்கள் கட்டாயம் இவர்களை மறக்க முடியாது.

யார் அவர்கள்?

ஜான் பீன்

இலாரியா

வபின்ஸ்கி

வென்டூரா

அபே குபேக்னா

பிராவோ

விக்டோரியா

கஜூகோ

ஜிம்

சூஸி

இன்னும் சிலரும் இருக்கத்தான் செய்கிறார்கள் ...ஆனாலும் கவனம் கலைப்பது இவர்களே ,மேலும் இந்நாவலில் "டகரஜான்" என்றொரு பெயர் வருகிறது...கஜூகோ தன் இந்திய எழுத்தாள நண்பரை இவ்விதம் அழைக்கிறாள் .அவ்வகையில் "டகரஜான்" என்பது நமது நாவல் ஆசிரியர் அசோகமித்திரன் தான் என்பது புலனாகின்றது.அசோகமித்திரன் எங்கனம் டகரஜான் ஆனார் என்பது கொஞ்சம் புரிந்தும்..புரியாமலும் இருக்கையில் அடுத்தடுத்த அத்தியாயங்கள் ஈர்க்கின்றன .ஆங்கில உச்சரிப்பில் இப்படியும் பெயர் திரிந்து போகலாம் என்பது புரிய சற்று நேரம் ஆகத் தான் செய்கிறது.

சரி இனி நாவலுக்குள் செல்வோம் .

நாவலின் முகப்பில் ஆசிரியர் கூறி இருப்பதைப் போல ...

இங்கே ஒரு நாயகன்...ஒரு களம்(ஐக்கிய அமேரிக்கா )

ஒரு கால கட்டம்-(1973- 1974) .......அமெரிக்காவின் அயோவா சிட்டி பலகலைக் கழகத்தில் நடைபெறும் "சர்வ தேச எழுத்தாளர்கள் கலந்து கொள்ளும் ஒரு கருத்தரங்கத்திற்கு இந்தியாவின் சார்பில் நமது நாயகன் அழைக்கப் படுகிறார், நாயகன் இங்கு எழுத்தாளர் அசேரகமித்ரனாகவே இருக்கக் கூடும் .

வெறும் ஒருநாள்...ஒரு வாரத்தில் முடியும் நிகழ்ச்சி அல்ல அது...சுமார் ஏழு மாதங்கள் சக அயல் தேசத்து எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்கள் இவர்களைத் தவிரவும் அயோவா பல்கலை கழகத்தில் பயிலும் இதர மாணவ மாணவிகள் இவர்களுடனே உண்டு உறங்கி பயணித்து முடிக்க வேண்டிய ஒரு நிகழ்ச்சி அது.

அங்கே எழுத்தாளர் சந்திக்கும் பல்வேறு மாறுபட்ட குணாதிசயங்கள் கொண்ட மனிதர்களையும் ...அவர்களுடைய திறமைகள் மற்றும் அடாவடித் தனங்கள்...சில நேரங்களில் முட்டாள் தனங்கள் ...இயலாமைகள்,மனித குணங்களின் பல மாறுபட்ட பல வடிவங்களை தமது அனுபவங்களின் வாயிலாக சிறு நகைச்சுவை இழையோட தொகுத்து அளித்துள்ளார்.

ஜான் பீன் என்பவன் இவர்களை ஒருங்கிணைத்து அழைத்துச் செல்லப் பணிக்கப் பட்ட ஒரு அமெரிக்க விரிவுரையாளன் .முதல் aத்தியாயத்தில் அறிமுகம் ஆகி இடையிடையே சில இடங்களில் தென்பட்டு கடைசியில் டகரஜானை இந்தியாவுக்கு விமானம் ஏற்றி அனுப்பி வைக்கும் வரை நாம் ஜானை நாவலில் புறக்கணிக்க இயலாது. தன் பணியை செவ்வனே செய்யும் ஒரு மனிதனாக இவனை ஆசிரியர் அறிமுகப் படுத்தியுள்ளார்.அவ்வளவே!

அடுத்த நபர் வென்டூரா ...பிரேசிலைச் சேர்ந்த நீக்ரோ இனத்தவன் ஆன வென்டூரா கொஞ்சமே நாவலில் வந்தாலும் மிக அழுத்தமான குணாதிசயம் .சிவப்பு ஒயினை அளவுக்கு அதிகமாக அருந்தி விட்டு மிசிசிப்பி நதிப் பயணத்தின் போது கூடை கூடையாக டகரஜானின் மீது வாந்தி எடுக்கும் போதாகட்டும் ...இப்போதே வா என வற்ப்புறுத்தி அழைத்துச் சென்று "கே. மார்ட் எனும் பிரபலமான அமெரிக்க சூப்பர் மார்க்கெட்டில் "டைப் ரைட்ட்ர்" வாங்கும் போதாகட்டும் ...வாங்கிய சாதனத்தை உபயோகிக்கத் தெரியாமல் ரிப்பேர் செய்து விட்டு உடனே டகர ஜானை அடம்பிடித்து அழைத்துப் போய் வேறு " டைப் ரைட்ட்ர் "வாங்கிக் கொண்டு வந்ததாகட்டும் .வென்டூரா ஒரு வித்யாசமான நபர் இங்கு .

முதல் முதலாக அறிமுகப் படுத்திக் கொள்ளும் இடத்தில் ;

அசோகமித்திரன் "நான் இந்தியாவில் இருந்து வருகிறேன் என்கிறார்...வென்டூராவிடம்; அதற்க்கு வென்டூரா ..."பிரேசில் "என்கிறான். பதிலுக்கு அசோகமித்திரன் "ரொம்பப் பக்கம் தான் " என்று கூற ...வென்டூரா ...இல்லை வெகு தூரம் என்கிறான். அதற்கான காரணம் புரியாமல் யோசிக்கும் போது தான்...அவனுக்கு ஆங்கிலம் அதிகம் தெரியாது என்ற உண்மை புலப் படுகிறது.வெறும் வார்த்தைகள் தான் ஆனாலும் எத்தனை அர்த்தமுள்ளதாக்கி விட்டான் அந்த பிரேசில் நாட்டு எழுத்தாளன் என்று ஆச்சர்யம் வரத்தான் செய்யும் வாசிப்பவர்களுக்கு. மொழி தெரியாதவர்கள் மிக அருகில் இருப்பினும் இடைவெளி ரொம்ப தூரமே தான்.உண்மை தானே!?

இங்கே இலாரியாவை நாம் மறந்து விட முடியாது.தகப்பனது அன்பு உரிய வகையில் கிடைக்காமல் தாயின் அரவணைப்பில் வளர்ந்த இலாரியா தன் தாயை தினம் அடித்து கொடுமைப் படுத்தும் தகப்பனை வெறுக்கிறாள். கூடவே தான் நம்பிக் காதலித்த தன் காதலனும் தன்னை நம்பிக்கை துரோகம் இழைக்கவே அவள் மிக நொந்து சுய இறக்கத்தில் ஆழ்ந்து விடுகிறாள். பல மொழிப் புலமை கொண்ட இளம்பெண்ணான இலாரியா ஒருகட்டத்தில் டகரஜான் அவளிடத்தில் காட்டும் சின்னப் பரிவுக்கே அவரைக் காதலிக்கத் தொடங்கி விடுகிறாள். இதை அறிந்து அவளைத் தவிர்க்க விரும்பும் டகரஜான் அவளுக்காக வருந்துகிறார். பாவம் இலாரியா என்று நினைப்பதைக் காட்டிலும் அவளுக்கு அவர் சுய இரக்கத்தில் இருந்து மீண்டு வந்தால் அவளுக்கு இருக்கும் திறமைக்கு அவள் மிகப் பெரிய புகழ் அடையக் கூடும் என்று உற்சாகப் படுத்திவிட்டு பின் அவளது கண்களில் படுவதை தவிர்த்து விடுகிறார். இங்கே இவரது தர்ம சங்கடம் சில சொற்களில் நமக்கு வெகு அருமையாக விளக்கப் பட்டிருக்கும்.

குறிப்பாக எத்தியோப்பிய நாவலாசிரியரான அபே குபெக்னாவைப் பற்றி அவர் விவரிக்கும் இடங்களில் "அங்கதச்சுவை " முழுமை பெற்ற வரிகளை நாம் கண்டு சிரிக்கலாம்.எழுத்தாளர்களிலும் முட்டாள்கள் உண்டு...முரடர்கள் உண்டு ...என்பதை அபே குபெக்னாவை வைத்து அறிந்து கொள்ளலாம்.

அபே தானாக வழிய வந்து தாகறஜாநிடம் சிநேதம் கொள்கிறான்.ஆனாள் அவனது நோக்கம் இவரது சிநேதம் மட்டுமே அல்ல. டகரஜானுடன் சகஜமாகப் பழகும் ஒரு ஜப்பானியப் பெண் கவிதாயினியான "கஜூகோ" வின் தொடர்பைப் பெறவே அபே இவரை வலியத் தேடி வருகிறான். ஆனால் கஜூகோ என்ன காரணத்திற்காகவோ அபேயை வெறுக்கிறாள். அபே உடன் வரின் உன் நட்பும் கூட எனக்கு வேண்டாம் என டகரஜான்(அசோகமித்திரன்) இடம் சண்டையிடும் அளவுக்கு அவளது வெறுப்பு மிதமிஞ்சி நிற்கிறது அபேயிடம் .இதனால் கோபம் கொண்ட அபே நமது இந்திய எழுத்தாளரை ஒரு முறை அடித்தே விடுகிறான். அத்தோடு சரி பிறகு அவன் இவரோடு சிநேதம் பாராட்டவே இல்லை.

அயோவா சிட்டி யில் "டகரஜானை அழைத்துக் கொண்டு அபே சூட் தைத்துக் கொள்ள செல்லும் இடமும் ...வாராந்திர மளிகைச் சாமான் வாங்க அனைத்து எழுத்தாளர்களுடனும் ஷாப்பிங் சென்று மூட்டை மூட்டையாக இறைச்சியும் ...இன்ன பிற பொருட்களோடு "எனக்கு ரொம்பப் பிடிக்கும் ...எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று கூறிக் கொண்டே ஒரு குட்டி சாக்குப் பை நிறைய "மிளகாய்" வாங்கிக் குவித்து அதை எடுத்துக் கொண்டு தங்குமிடம் செல்வதும் மிக்க ரசமான இடங்கள் .மொத்தத்தில் எத்தியோப்பிய அரசரின் தம்பியின் நெருங்கிய நண்பன் என தன்னை கூறிக் கொண்ட அபே குபேக்னா ஒரு மிகச் சிறந்த முரட்டுக் கோமாளியாகவேவாசிப்பவர்களின் கருத்தில் நிறையக் கூடும்.

இவ்விதம் இந்நாவல் சொல்கிறது அபே குபேக்னா பற்றி. அபே குபேக்னா தனது எத்தியோப்பிய மொழியில் எழுதிய நாவலின் தமிழாக்கமே "ஒற்றன்" இந்நாவலை டெல்லி புத்தகத் திருவிழாவில் டகரஜான் எவ்வளவு தேடியும் அவருக்கு கடைசி வரையில் அந்த நாவல் கிடைத்த பாடில்லை .

அடுத்த நபர் பிராவோ ...போலந்து நாட்டு நாவல் ஆசிரியனான "பிராவோ " வெகு துல்லியமான திட்டமிடலுடன் கூடிய ஒரு நபராக தான் டகரஜானுக்கு அறிமுகம் ஆகிறான். ஒரு நாவலுக்கு யாரேனும் வரைபடம் தயாரிக்க இயலுமா? இதை வாசிக்கையில் எனக்கும் ஆச்சர்யமாகத் தான் இருந்தது. ஆனால் பிராவோவின் வரை படத்தை அவன் வாயிலாக விளக்கும் ஆசிரியர் பிராவோ மீது நமக்கும் ஒரு பிரமிப்பையே ஏற்படுத்துகிறார். தனது எழுத்தின் மீது தான் கொண்ட வெறியினால் "நாவல் முடியும் வரை பூட்டிய அறையைக் கூட திறவாமல் "ஏறத்தாழ ஒரு மாத காலம் யார் கண்ணிலும் படாமல் நாவலை தனது தாய் மொழியில் எழுதும் பிராவோ கடைசியில் மிக வருந்துகிறான். காரணம் ஒரு பெண். அது அவன் மனைவி அல்ல.



அந்த மட்டில் அவனது குட்டும் வெளிப் படுகிறது. எத்தனையோ அருமையாகத் திட்டமிடலாம். திட்டமிடுவதில் தான் வெகு சாமர்த்தியசாலி எனப் பிறரை நம்பவும் வைக்கலாம் சில காலத்திற்கு ...ஆனாலும் என்றேனும் உண்மை வெளிப் பட்டே தீரும். அப்படியே ஆகிறது, தனது நாவலை முடித்த பின்னும் அதில் பல குறைகள் கண்டு அதை அச்சுக்கு கொண்டு வர முடியாமல் குழப்பத்தில் ஆழ்கிறான் பிராவோ.திட்டமிடுதலில் இருந்த சாமர்த்தியம் அதை நிறைவேற்றுவதில் இல்லாமையால் பிராவோ தன் மனைவியின் வாயால் " இதுவரை நீ எழுதிய நாவல்களை இதுவே மிக மோசமானது" என்று கேலி செய்யப் படுகிறான்.



இப்படி முடிகிறது இவனுடன் ஆன நட்பு .



அடுத்து வபின்ஸ்கி ...அறைநண்பன் (ஒரே அறையைப் பகிர்ந்து கொள்கிறான்) அறை மாட்டும் அல்ல ஒரே குளிர்பதனப் பெட்டியையும். அவன் நிரப்பி வைத்த பூண்டின் மணம் கமழும் காப்பியை அருந்த இயலாமல் ...அருந்தாமல் இருக்கவும் முடியாமல் டகரஜான் பாடு படு திண்டாட்டம் .அந்த அறையில் தனி இருக்கையிலேயே வபின்ச்கியின் அம்மா இறந்து போக அவனது துயரம் கண்டு தானும் மணம் கலங்குகிறார் ஆசிரியர்.

விக்டோரியாவை பற்றி சொல்ல வேண்டுமெனில் அவள் ஒரு திறமை மிக்க பெண் என்பதை தாண்டி அவள் தனியாக நாவலோ ...கவிதையோ எழுதியவலைப் போல தெரியவரவில்லை இங்கு. சொல்லப் போனால் .மற்ற சக எழுத்தாளர்கள் அனைவரும் எழுதிய அல்லது வாசித்த சில கவிதைகளை ஒருங்கிணைத்து அவள் ஒரு மேடை நாடகம் நடத்திக் காட்டினாள்.அதில் நமது "ஞானக் கூத்தனின் "அம்மாவின் பொய்கள் என்ற கவிதையும் இடம் பெற்ற பொது அந்த நாடகத்தின் அர்த்தமே கனமுள்ளதாகி பலரையும் ரசித்துக் கை தட்ட வைக்கிறது. இதைக் கண்டு வியந்து போய்த்தான் டகரஜான் அவளிடம் பேசுகிறார். ஆக விக்டோரியாவும் இங்கே மறக்க முடியாத பெண்ணாகிறாள்.

இவளோடு கூட காணும் சக எழுத்தாளர்கள் அனைவரோடும் நட்பு வளர்க்கவே விரும்புபவலான ஜப்பானிய கவிதாயினி "கஜூகோ" இவள் தனக்குப் பிடித்த நண்பர்கள் அனைவரையுமே கட்டிக் கொண்டு முத்தமிடுவது இன்னும் அங்கதம். இவளுக்கு ஏனோ ஆப்பிரிக்கர்களை மிகப் பிடித்திருந்தும் "அபே குபெக்னாவை மட்டும் மிக வெறுக்கிறாள்?!" என்ன செய்திருக்கக் கூடும் அபே?! புரிந்தும் புரியாத புதிர் !!! ஒருவேளை அபே அவளுக்கு ஒரு முள்ளம் பன்றி போலக் கூட தோன்றி இருக்கக் கூடுமோ என்னவோ?!இப்படித் தான் விவரிக்கிறார் ஆசிரியர் இவளை.

பிறகு ஜிம் ...மற்றும் சூஸி...ஜிம் ஒரு அற்புதமான ஓவியன். சூஸி "உலோக கலைப் பொருட்கள் மற்றும் வார்ப்பட கலைப் பொருட்கள் தயாரிப்பதில் நிபுணி ...அவளது கற்பனையில் உதிக்கும் உருவங்களை எல்லாம் கலைப் பொருட்கள் ஆக்குவதில் அவள் திறம் மிக்கவள். இருவரும் ஒரே வீட்டில் ஒரே அறையில் கூட சேர்ந்து வாழ்கிறார்கள். ஆனால் தம்பதிகள் அல்ல!சூஸி யின் கணவன் மிகப் பெரும் பணக்காரன்.சூஸி க்கு விவாகரத்து தர மறுக்கும் அவளது கணவன் "புதிதாக அவளைச் சந்திக்க வரும் நபர்கள் அனைவரையுமே அவளது புதுக் காதலர்கள் என்றே எண்ணிக் கொள்வானாம்.! "ஜிம்மி சந்திக்க வரும் டகரஜானையும் அவன் சூச்யின் புது அன்னியக் காதலன் என்று எண்ணிக் கொண்டு துப்பாக்கியைத் தூக்கி கொண்டு சுட்டுக் கொள்ளத் தேடும் போது பயத்தோடு சிரிப்பும் வெடித்துக் கொண்டு தான் கிளம்புகிறது.

ஒரு எழுத்தாளர் அந்நிய மண்ணில் சர்வ தேச எழுத்தாளர்களை சந்தித்து ஏழு மாதங்கள் தங்கி அவர்களது கலாசாரத்தை கொஞ்சமேனும் அறிந்து கொண்டு நமது இந்தியக் கலாச்சாரத்தை இத்தன்னூண்டாவது அவர்களுக்கும் புரிய வைக்க முடிந்ததோ இல்லையோ ஏராளமான வாழ்வியல் அனுபவப் பாடங்களை அவர் கற்றுக் கொண்டார் என்ற நிஜம் இந்நாவல் மூலம் நமக்கு உறைக்கத்தான் செய்கிறது. இங்கு அசோகமித்திரன் அவர்கள் தனக்கு அங்கு நேர்ந்த சம்பவங்களை அல்லது தான் சந்திக்க நேர்ந்த விஷயங்கள் அனைத்தையும் மெல்லிய நகைச்சுவை இழையோட "புனை கதை "வடிவில் அளித்துள்ளமை அருமை.

அமெரிக்க குளிர்...அங்குள்ள பஸ்கள் இயங்கும் முறை ...அமெரிக்க குடும்பங்களின் விருந்தோம்பும் முறைகள் ...பனியில் உறைந்து உறைந்து விரைத்துப் போக முயலும் விரல்களை தணலில் காட்டி வெம்மை ஏற்றுவதைப் போலவே அங்கே குளிர் தாங்காது உழலும் போதும் கூட இங்கே இந்தியாவில் தனது குடும்பம் மற்றும் வீட்டைப் பற்றி எழும் நினைவுகளை அசை போடுவதிலும் அசோகமித்திரன் தனது தனித்துவத்தை பதிந்து செல்கிறார். மகன்...மனைவியுடன் தொலைபேசியில் உரையாட எழும் எண்ணம்...சென்னையின் மழைக் காலம் என்று அவர் தொட்டுச் செல்லும் இடங்கள் எல்லாமே வாசிக்க அருமையாகத் தான் இருந்தன எனக்கு.... மற்றவர்களுக்கு எப்படி என்று இந்த நாவலை வாசித்தவர்கள் யாராயினும் எனக்கு பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம்.

நாவல் : ஒற்றன்

ஆசிரியர்: அசோகமித்திரன்

வெளியீடு : காலச் சுவடு பதிப்பகம்

விலை : ரூ .100