மேகங்கள் அடர்ந்ததோர்
கானகத்தின் ஊடே
யுகம் யுகமாய்
இளைப்பாறல் இன்றி
நெடுந்தூரம் நடக்கையில்
என்றேனும் ஓர் நாள்
சிங்கங்கள் நமக்கு
சிநேகிதமாகலாம் ...!
புலிகள் நமக்கு
புதிர் நீக்கலாம்
யானைகள் நமக்கு
வழித் துணைகளாகலாம்
காட்டிலுள்ள விலங்குகளெல்லாம்
அன்றொரு நாளில்
பழக்கப் பட்டு
வார்த்தைகள் ஏதுமில்லா
வான் வெளியின்
வெற்றிடத்தில்
வசப்படாத இலக்கியமாய்
நட்பை நமக்கே பாடமாக்கி
நட்பெனப் படுவது யாதெனில்
யாதொன்றும் தீமை இலாத சொலல்
என
வார்த்தைகள் கனமிழக்கும்
கண நேர புரிதலில்
நட்புக்குத் தேவை இருப்பதில்லை
மனித...மிருக வித்யாசம்
ஆடும் நண்பனே
மாடும் தோழனே
குழி முயலும்
குட்டிக் குரங்கும்
மயிலும்
குயிலும்
மானும்
மீனும்
ஏன் காக்கையும் ...குருவியும்
ஏன் அசையும் ...அசையாத
எல்லாமே நண்பர்களே !
சும்மாவா சொன்னான் பாரதி
"காக்கை குருவி எங்கள் ஜாதி
நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம் "
ஆதலின் நட்பெனப் படுவது யாதெனில்
யாதொன்றும் தீமையிலாத சொலல் "