Friday, December 12, 2008

அம்மாக்களே...அப்பாக்களே தற்கொலை மட்டும் வேண்டவே வேண்டாம் ப்ளீஸ்...!?

ஜெயமோகன் அவர்களின் "தோன்றாத்துணை" கட்டுரை வாசித்தேன் இன்று...தற்கொலை பற்றி அதில் வரும் சம்பாசனைகள் சிந்திக்க வைக்கின்றன,எந்த முறையில் தற்கொலை செய்து கொள்வது வழியின்றி மரிக்க உதவும் என்று அக்கட்டுரை நீள்கிறது, அதைப் படிக்க ஆர்வமுள்ளவர்கள் இந்த லிங்க்கை அழுத்துங்கள் .

தோன்றாத்துணை http://jeyamohan.in/?p=775

என் பெரிய பாட்டியார் என் அம்மாவெல்லாம் பிறக்கும் முன்பே காலமாகி விட்டார்,இயற்க்கை மரணம் அல்ல,வெகு இளம் வயதிலேயே என் தாத்தாவுடன் ஏற்பட்ட மனப் பிணக்கில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இத்தனைக்கும் அந்தக் காலத்தில் அவர்கள் காதல் மணம் புரிந்தவர்கள்,

ஒரு வயதில் விவரமறியா பிள்ளைகுழந்தை பாலுக்கு அழும் பருவம்...அடுத்த கரு வயிற்றில் தாங்கிக் கொண்டிருந்த ஒரு அசாதாரணமான சூழ்நிலையில் எப்படி என் பெரிய பாட்டியாரால் தூக்குப் போட்டு தன் உயிரை மாய்த்துக் கொள்ள முடிந்தது ?! இன்றளவிலும் என்னை யோசிக்க வைக்கும் கேள்வி இது!

கணவன் மனைவி சண்டை தற்கொலை வரை போவது மிகப் பெரிய தவறு என்று என்னை நினைக்க வைத்தது பெரிய பாட்டியாரின் மரணமே!!!எத்தனையோ பிணக்குகள் இருக்கட்டுமே?அதற்க்கு ஒரே தீர்வு உயிரை போக்கிக் கொள்வது என்று ஆகி விடுமா?அது கொஞ்சம் சுயநலமில்லையா?

பார்த்துப் பார்த்து வளர்த்த நம் குழந்தைகளை பிறகு யார் பொறுப்பெடுத்து வளர்ப்பார்கள்?இயற்க்கை மரணம் என்றால் அது வேறு ...கடவுளை...விதியைத் திட்டிக் கொண்டு அடுத்து நடக்க வேண்டியதைப் பார்க்கத்தான் போகிறோம்...அப்படியே எதுவும் நின்று விடப் போவதே இல்லை.

ஆனால் தன் உயிரை தானே மாய்த்துக் கொள்ளுதல் என்பது எப்படிப் பட்ட மன நிம்மதி இன்மை தெரியுமா?ஏதோ ஒரு நிமிடக் கோபத்திலோ மன அழுத்ததிலோ அப்படி மரித்தவர்களை விட அவர்களது குழந்தைகளை எண்ணியே நாம் வருத்தப் பட வேண்டும்.என்ன பாவம் செய்தார்கள் அவர்கள்?அவர்களிடம் ஏன் இப்படி ஒரு அநியாயமான இழப்பை வலுவில் திணிக்க வேண்டும்?

"இழந்தவர்களுக்கே தெரியும் இழப்பின் வலியும் துக்கமும்".

என் அப்பா வழித் தாத்தா அப்பாவுக்கு பத்து வயதிருக்கும் போதே மரணித்து விட்டார்.இளம் வயதிலேயே கடும் ஆஸ்த்துமாவின் தாக்கத்தால் நிகழ்ந்த இயற்க்கை மரணம் தான் அது!!! ஆனாலும் அந்த மரணத்தின் வலியை என்னாலும் உணர முடிகிறது . பள்ளி செல்லும் வயதில் அப்பா இல்லாததின் கொடுமையை எவ்விதம் விளக்க முடியும்? ஏக்கமான பார்வை தருமே ஓராயிரம் விளக்கங்களை.

அப்பா இல்லாமல் தான் பட்ட அவஸ்தைகள் தன் பிள்ளைகளுக்கு வந்து விடக் கூடாதே என்ற முன்னெச்சரிக்கை உணர்வுகளை என் அப்பாவின் ஒவ்வொரு அசைவுமே எங்களுக்கு உணர்த்தியதுண்டு இப்போதும் கூட,எப்போதும் மிதமான வேகத்துடன் கூடிய வாகனப் பயணம் ...அதில் ஒன்று .இந்த உணர்வு எல்லா அப்பாக்களுக்குமே இருக்க வேண்டும் தானே?

நாங்கள் நாற்பது ...நாற்பத்து ஐந்துக்கு மேல் ஸ்பீட் போக அப்பாவுக்கு பயம் என்று விவரம் புரியாமல் கேலி செய்திருக்கிறோம் தான்...பக்கத்து வீட்டு இளைஞன் கிழக்கு கடற்கரைச் சாலையில் துள்ளத் துடிக்க அதி வேகப் பயணத்தின் ஆசையாலும் ஹெல்மெட் போடாத காரணத்தாலும் இரண்டு லாரிகளுக்கிடையில் சிக்கி சின்னா பின்னமாகி பிண வண்டியில் கொண்டு வரப் படுவதைப் பார்க்கும் வரை...!!!

இங்கு நான் சொல்ல வந்தது என் அப்பாவைப் பற்றிய பாராட்டுரை அல்ல ;ஒரு தகப்பனாருக்கு இருக்கும் பொறுப்புணர்வை.இப்படி இருக்கும் அப்பாக்களால் தற்கொலை முடிவு எடுக்க முடியுமா? வாழ்வின் மீது ஒரு பிடிப்பு மட்டும் அல்ல ...நாளை நல்ல நாளாய் விடியும் என்ற நம்பிக்கையும் வேண்டும்.எதை எதையோ காதலிக்கிறோமே? வாழ்வைக் காதலித்தால் என்ன தவறு? என்ன கெட்டுப் போகும்?

என் அப்பா வழிப் பாட்டி கணையத்தில் புற்று நோய் தாக்கி வாழ்வின் கடை நிலையில் மிக்க உடல் வேதனை கண்டு இறந்தார்.அப்போதும் நான் அவரிடத்தில் கண்டது வாழ்வின் மீது வெறுப்பை அல்ல...இன்னும் கொஞ்சம் வாழ்ந்தால் என்ன ? என்ற துடிப்பை மட்டுமே.கால்கள் எல்லாம் வீங்கி வெடித்துப் போவது போன்ற நிலை,நீடித்த தொடர்ந்த வயிற்று வலி,மூச்சுத் திணறல்,மலச்சிக்கல்,உணவுக் கட்டுப்பாடு,ஏன் கடைசி ...கடைசியாய் வெறும் நீர் உணவு மட்டும் தான் என்ற நிலையிலும் என் பாட்டியிடம் வாழ வேண்டும் என்ற ஆசை நிறையவே இருந்தது.

இத்தனைக்கும் இளம் வயதில் கணவரை இழந்து ,தன் சொந்த அண்ணனின் அடாவடித் தனத்தால் இருந்த சொத்துக்களையும் இழந்து தினந்தோறும் கஷ்ட ஜீவனம் என்ற நிலையில் பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கிய இரும்புப் பெண்மணி அவர்...சொகுசான வாழ்க்கை வாழ்ந்த செல்வ சீமாட்டி அல்ல என் பாட்டி .

இப்படி உதாரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்...தான்!எனக்கு இதற்க்கு மேல் தற்கொலை வேண்டாம் என்று வாதாட போதுமான வார்த்தைகள் சிக்கவில்லை.எப்படிச் சொன்னாலும் சொல்ல வந்த விஷயம் இது தான் .தற்கொலை தவறு இதை சொல்லத்தான் இவ்வளவு நீளமான பதிவு.

நிச்சயம் ஒருநாள் எல்லாம் மாறும் ...என்று நம்புங்கள் ...நிறையவே கஷ்டம் தான் ...கஷ்டப் பட்டு நம்புங்களேன் ,பொசுக்கென்று உயிரை விட்டு விட்டு உங்களை நம்பி இருப்பவர்களை அனாதைகள் ஆக்குவதை விட "கோபத்தையோ மன அழுத்தத்தையோ கொஞ்சம் ஒத்திப் போட்டால் என்ன?

அப்பாக்களே...அம்மாக்களே தற்கொலை மட்டும் வேண்டவே வேண்டாம் ப்ளீஸ் ...!!!