Tuesday, July 28, 2009

அழகர்சாமியின் குதிரையும் பாஸ்கர் சக்தியும்


அழகர்சாமியின் குதிரையும் பாஸ்கர் சக்தியும்
மிக மிக எளிமையாக போகிற போக்கில் யாரேனும் கதை சொல்ல இயலுமா ?பாஸ்கர் சக்தியால் இயலும்.இவரது இரண்டாவது சிறுகதைத் தொகுப்பான அழகர்சாமியின் குதிரையில் மொத்தம் ஒன்பது சிறுகதைகளும் இரண்டு குறுநாவல்களும் வாசிக்கக் கிடைத்தன.

வெண்ணிலா கபடிக் குழு திரைப் படத்தில் பல இடங்களில் சரளமாக விரவியிருந்த சரவெடி ஹாஸ்ய நெடி ஜெயமோகனின் கருத்தை உண்மையாக்கியது

ஜெயமோகனின் வலைத்தளத்தை வாசிக்கும் போது ஒருமுறை அவர் பாஸ்கர் சக்தியின் வசன ஆற்றல் குறித்து சொல்லியிருந்த அவரது கருத்து இப்போது ஞாபகம் வருகிறது ,பாஸ்கரின் எழுத்துக்களில் சடக் சடக்கென்று கடந்து போகும் சமூகம் மற்றும் கதை மாந்தர்கள் குறித்த எள்ளல்களை அவர் தனக்கே உரிய பாணியில் நகைச் சுவை தோய்த்து காயப் போட்டிருக்கும் விதத்திற்கு தான் தேனி குசும்பு என்று பெயர் போலும் .

கனகதுர்கா

இது தான் முதல் சிறுகதை ...மும்பைக்கு வேலை நிமித்தமாகச் செல்லும் ஒரு இளைஞன் வேலை ஒழிந்த நேரத்தில் யதேச்சையாக அங்கே பக்கத்தில் இருக்கும் மனநல மருத்துவமனையில் நடக்கும் தமிழ் பட ஷூட்டிங் பார்க்கப் போகிறான்.வெகு தற்செயலாகத் தான் அங்கே ஒரு இளம்பெண் இவனிடம் ஒரு உதவி கேட்கிறாள் ...அவளது பெயர் தான் கனக துர்கா ...
அவளது பெற்றோரைக் கண்டு பிடித்து அவளை அந்த மனநலக் காப்பக மருத்துவமனையில் இருந்து மீட்க அவன் உதவ வேண்டும்,இதுவே அவளது கோரிக்கை.

கனக துர்காவை மீட்க அந்த இளைஞன் படும் அலைச்சல்களையும் மன உளைச்சல்களையும் பிரத்த்யேக மெனக்கிடல்கள் எதுவும் இன்றி கிண்டலும் அங்கதமும் குறையாமல் கதையை நகர்த்திப் போய் கடைசியில் அட இதற்காகவா இத்தனை அலைச்சல் எனத் தோன்றும் நொடியில் மறுபடி கதை முதலில் இருந்து ஆரம்பிப்பதைப் போலொரு தோற்றம் தரும் சிறுகதை.

அடுத்து வருவது உதயாவுக்கு திலகா சொன்ன கதை .

ஒரு அம்மா தனக்கு நேர்ந்த அல்லது தான் கடந்து வந்த மூன்று காதல்களை தன் மகளிடம் பகிர்ந்து கொள்வதைப் பற்றிய எளிமையான நடையுடன் நகரும் சிறுகதை ,இளமையின் மகரந்தப் படிகளில் நிற்கும் தன் மகளுக்கும் காதல் வந்திருக்கக் கூடும் என யூகிக்கும் திலகா தன் மகளான உதயாவுக்கு பெரிதான உபதேசங்களோ ...மிரட்டுதல்களோ இன்றி தன் வாழ்வில் தான் கடந்து வந்த தனது காதல் காலங்களை அழகாக திரும்பிப் பார்த்து அதை மகளிடமும் பகிர்ந்து கொள்வது வாசிக்க இனிமை. தனக்கு எது நல்லது ..எது கேட்டது என்பதைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை திலகாவைப் போல எத்தனை அம்மாக்கள் தங்கள் மகள்களிடம் ஒப்படைக்கக் கூடுமோ?! ஒருவேளை இந்தக் கதையை வாசித்தால் மாற்றம் வரலாம்...!!!

அடுத்தது "கண்ணாடியைக் கண்டடைதல் "

இங்குள்ள ஒன்பது கதைகளில் வாசிக்கும் போதும் அதற்குப் பிறகும் அதிகம் சிரிப்பு மூட்டும் கதை இதுவே என்பது எனது கருத்து .சதா ஒருவித வித்யாசமான மனோபாவத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கும் ஆனந்தன் என்றொரு கதாபாத்திரம். பெயருக்குத்தான் அது ஆனந்தன் ...ஏன் அது நீங்களாகக் கூட இருக்கலாம்...நானாகக் கூட இருக்கலாம் ...சிலர் வெளியில் சொல்லக் கூசிக் கொண்டு உள்மனதில் நினைக்கும் விந்தைக் கனவுகளை இங்கே அவன் தன் நண்பனிடம் பகிர்ந்து கொள்கிறான். இப்படியும் கூட தோன்றுமா எனும் வகையில் ஆனந்தனும் அவனது கற்பனைகளும் காமெடிக் கலக்கல்கள், அப்படிப் பட்ட ஆனந்தனையே கற்ப்பனையில் விஞ்சும் வண்ணம் அவனுக்கொரு மனைவி அமைந்ததும் ஆனந்தனின் புதுப் புது கற்பனைகள் கொஞ்சம் மட்டுப் படுகின்றன. படித்துக் கொண்டே...இல்லை...இல்லை படித்து முடித்த பின்னும் சிரிக்கலாம் இந்தக் கதையை நினைத்து.

மகன் மற்றும் மின்னு இரண்டு சிறுகதைகளும் ஆனந்த விகடனில் நான் ஏற்க்கனவே வாசித்தவை தான், இரண்டுமே அட அட..அடடா...ரகக் கதைகள்,பெரிய கற்பனைகளோ வர்ணனைகளோ இல்லை,ஒரு சாலையில் நடந்து கொண்டிருக்கிறோம் கூட நடக்கும் பயணியின் செயல்களை அல்லது நடவடிக்கைகளை பார்த்தும் பார்க்காமல் GAVANIPPOM தானே ...அப்படித் தான் பாஸ்கரின் கதைக் களங்கள் அமைகின்றன.வாழ்வில் நம் கவனித்தும் கவனிக்காமல் விட்டதுமான சம்பவங்களை தனக்கே உரிய நகைச்சுவை கலந்து படிக்கத் தருவது கிராமத்து தென்னந்தோப்பில் ஓசியாக குடிக்கக் கிடைத்த இளநீர் போல அத்துனை மனநிறைவு.அத்துனை இதம் .

குறுநாவல்களில்

எழுநாள் சூரியன் எழுநாள் சந்திரன் .... நிச்சயம் வாசிக்கும் அனைவரையும் கவரும் தன்மையில் அமைந்து விட்ட அருமையான படைப்பு ,

"ஞாயிற்றுக் கிழமை நகையைக் காணோம்

திங்கட்கிழமை திருடன் கிடைத்தான்

செவ்வாய்க் கிழமை ஜெயிலுக்குப் போனான்

புதன் கிழமை புத்தி வந்தது

வியாழக் கிழமை விடுதலை ஆனான்

வெள்ளிக் கிழமை வீட்டுக்கு வந்தான்

சனிகிழமை சாப்பிட்டுப் படுத்தான்."


பால்யத்தில் கிராமத்துப் பள்ளிகளில் பயிலும் வாய்ப்புக் கிடைத்த அனைவருக்கும் பரிச்சயமான பாடல் தான் இது, இந்தப் பாடலைப் போலவே திருடனின் வாழ்வு திருந்தி அமைந்து விடுவது இல்லை தான்...


ஒரு கிராமம் அங்கே ஒரு மிராசுதார் ,அவருக்கு ஒரு தம்பி முரட்டு மிராசுதாரும் ,பகுத்தறிவுத் தம்பியும் நல்ல எதிர் எதிர் துருவங்கள் , நகைகளிலும் அதிகாரங்களிலும் மோகம் கொண்ட அனேக பாமர மனைவிகள் போலவே ஒரு அண்ணி ...விவரம் அறிந்தும் அறியாத வயதில் அவர்களுக்கொரு மகன்,அவனைச் சுற்றியும் அவனது சித்தப்பாவைச் சுற்றியும் சுழலும் கதை .சித்தப்பாவின் ஜாதி மீறிய காதல் அதை வெறுக்கும் அப்பாவேலையாட்களுக்கு மிராசுதாரரின் மேலிருக்கும் சொல்லவொண்ணா பயம்.

மொத்தத்தில் மிராசுதார் வீட்டில் நகை காணாமல் போக அதைத் திருடிய திருடனான வீட்டு வேலையாள் அவரிடம் கொண்ட பயம் காரணமாக தப்பிஓட முயன்று முடிவில் பிடிபட்டு விடுவோமோ என்ற பதட்டத்தில் கிணற்றில் தவறி விழுந்து அநியாயமாக மரணிக்கிறான்.


மறுபடி மேலே உள்ள பாடலை மறுபடி பாடிப் பாருங்கள்ஒரு சோகம் மனதில் தழும்பத் தான் செய்கிறது.ஞாபகங்களைக் கிளரும் கதை இது.

அழகர்சாமியின் குதிரை இது அடுத்த குறுநாவல்;

இதுவே இத்தொகுதியின் தலைப்பும் ஆனது .



இதைக் குறித்து தனியாகவே ஒரு பதிவிடலாம்.

தேனியைச் சுற்றி இருக்கும் ஒரு சிறு கிராமத்தில் அழகர்சாமியின் குதிரை வாகனம் காணாமல் போவதும் அதைத் தொடர்ந்து நிகழும் சம்பவங்களுமே கதை. எல்லாமே காமெடிக் கூத்துக்கள் தான்.கிராமத்து வெள்ளந்தித் தனம் என்பார்களே ...அதே தான். மக்களும் ...மண்ணும் அதன் மணமும் .எல்லாக் கதைகளுமே அருமை
அருமைஅருமைஅருமை
அதைத் தவிர வேறொன்றுமில்லை .

நீங்களும் வாசித்துப் பார்க்கலாம்

நிச்சயம் சோர்வைத் தராத படைப்புகளில் ஒன்று இப்புத்தகம்.