இந்தக் கைக் குழந்தைகளின் அராஜகம் இருக்கிறதே சொல்லி மாளாது அதன் மகாத்மியம். காலையில் பேருந்தில் ஐ.சி.எப் நிறுத்தத்தில் ஒரு கைக்குழந்தையும் அதன் அம்மாவும் ஏறினார்கள் கூடவே அதன் பாட்டியும்.இந்தக் குழந்தை அது எனக்கு இடம் கொடுங்கள் என்று யாரிடமும் கேட்கவே இல்லை,கேட்கும் முன்பே பிங்க் நிற பஞ்சுத் துவாலையில் சுற்றப் பட்ட அதன் தோற்றத்தை உத்தேசித்து எனக்கு பின்னிருக்கையில் இருந்த அம்மாள் டக்கென எழுந்து அதற்குரிய மரியாதை செலுத்துவதாக எண்ணிக் கொண்டு இடம் கொடுத்தாள். சரி சத்தமில்லாமல் கமுக்கமாக உட்கார்ந்து கொள்ள வேண்டியது தானே!வயதானவள் என்ற ஹோதாவில் அந்தக் குழந்தையின் பாட்டியம்மாள் அதை பூப்போல மடியிலேந்திக் கொண்டு உட்காரப் போக ,உடனே ஒரு சிணுங்கல் மெல்ல ஆரம்பித்து அந்தம்மாள் எழுந்து கொண்டு அதன் அம்மாவை உட்கார வைக்கும் அவகாசத்தில் பெருத்த கத்தலாகப் போய் விட்டது. யாருக்கு வசதிக் குறைச்சலாகப் போனாலும் இந்தக் கைக்குழந்தைகள் மட்டும் அதன் விருப்பங்களை எப்படியெல்லாம் நிறைவேற்றிக் கொள்கின்றன பாருங்கள்!
எரிச்சலாக கடக்கும் காலை நேரப்பேருந்துப் பயணம் இன்று இந்த கைக்குழந்தையின் செல்ல அராஜகத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்ததில் எனது நிறுத்தம் வந்ததே தெரியவில்லை. அந்தக் குழந்தையின் முகம் இன்னமும் கண்ணுக்குள் .லவ் யூ குட்டிம்மா //யார் குழந்தையாய் இருந்தால் என்ன?! குழந்தைகள் கொண்டாடப்பட வேண்டியவர்கள்//
குழந்தைகள் மகத்தானவர்கள் நம்மையும் நமது மனநிலைகளையும் நொடியில் மாற்றி எந்தச் சூழலின் மீது வண்ணம் பூசி மைல்டாக மாற்றி விடுவதில் கில்லாடிகள்.