Monday, August 9, 2010

அட்ரஸ்...

ஆலங்குலத்து தாத்தா இறந்து விட்டார் என்று தந்தி வந்தது.

இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்னால் பார்த்த தோற்றம் தான் நெஞ்சில் நிழலாடியது ; சமீபத்தில் அவரைப் பார்க்க நேரவில்லை.

பாட்டி திக்கித்து துக்கித்து உட்கார்ந்தாலும் புலம்பிக் கொண்டே தான் இருந்தாள்...என்ன மனுஷன் ? ...எப்பிடிச் செத்தாரோ? சாமான்யமா போற உசுரா அது?!

தங்கையின் முகம் பார்த்தேன் தாத்தாவின் இறப்புக்காக அவள் நிறைய அழப் போகிறாளோ என்று!

சோகம் போல உட்கார்ந்திருந்தாலும் அழக்காணோம்...எனக்கும் தந்தி பார்த்த கணத்தில் ...என்ன முயன்றும் உடனே பட்டென்று கண்ணீர் தெறிக்கக் காணோம் தான்.

நெடுஞ்சாலையின் மேலிருக்கும் வீடென்பதால் வெளிப்புற குட்டிக் காம்பவுண்டில் உட்கார்ந்து கொண்டு சாலையில் விரையும் ரூட் பஸ்களையும் லாரிகளையும் வேடிக்கை பார்ப்பதைப் போல துக்க நேரத்தில் கொஞ்சத்தை கரைக்க யத்தனித்தேன் .

ஐந்து வயதில் ஆலங்குலத்து தாத்தாவோடு சாத்தூர் ராஜா ஆசாரியிடம் காது குத்திக் கொள்ளப் போனது நன்றாய் நினைவில் இருக்கிறது.ஒரே தடவையில் காது குத்தி இலைத்தோடு போட்டு விட்டாலும் கூட காது புண்ணாகி புண்ணாகி சீல் வைக்கவே அப்படியே கொஞ்சநாள் விளக்கு மாற்றுக் குச்சி உடைத்து காதோட்டையில் சொருகி புண் ஆறியதும் மறுபடி ராஜா ஆசாரி வீட்டுக்கு போவோம் நானும் தாத்தாவும்.

முதல் மரியாதை சிவாஜி சாயலிருக்கும் தாத்தாவுக்கு; கக்கத்தில் ஒரு புத்தம் புது மஞ்சள் பையை இடுக்கிக் கொண்டு வெள்ளைத் துண்டை உருமாக்கட்டாய் கட்டிக் கொண்டு சந்தன நிற சட்டையும் வெள்ளைக் கதர் வேட்டியுமாய் புறப்பட்டு வருவார்.

"மாமா இந்தப் புள்ள ரோட்ல அங்கிட்டு இங்கிட்டு திங்கு திங்குன்னு ஓடுவா...பாத்துக் கூட்டிட்டுப் போயிட்டு வாங்க "

என்றவாறு பாட்டி அவரோடு தன் கையால் வெகு அருமையாக தலை நிறைய எண்ணெய் கவிழ்த்து பின்னி விட்ட கோண வகிட்டு ரெட்டைச்சடையுடன் என்னை அனுப்புவாள்.

பின்னாட்களில் ராஜா ஆசாரியிடம் இரண்டு மூன்று முறை காது குத்திக் கொள்ளும் பெருமைக்காக அப்போது ஆலங்குலத்து தாத்தாவோடு டவுன் பஸ்ஸில் ஏறி ஆசாரி வீட்டுக்குப் போயிருக்கிறேன் நான்.ராஜா ஆசாரி வீடு என்று ஒரு வீடு இப்போதும் சட்டென்று ஞாபகத்தில் வந்தாலும் அந்த வீட்டுக்கு உள்ளே ஒருநாளும் நான் போனதில்லை.

வெளியே கருங்கல் பாவிய பெரிய திண்ணை இருக்கும் பெரிய நீளமான வாசல் படிகளை மிதித்து ஏறி அந்தத் திண்ணையில் உட்கார்ந்தால் வெயிலுக்கு குளு குளுவென்று இதமாய் இருக்கும் ,எனக்கு வெள்ளை வேட்டி சட்டையில் எல்லைக்கருப்பண்ணசாமி போல சிடு சிடு முகம் காட்டும் ராஜா ஆசாரியைக் கண்டு கொஞ்சம் பயம் இருந்தாலும் , ஜிலு ஜிலுப்பான அந்த திண்ணையில் உட்கார ரொம்பப் பிடித்திருந்தது அந்நாட்களில் .என்னைப் பொறுத்தவரை ராஜா ஆசாரி வீடென்றால் இப்போதும் அது கரும் பளிங்கு போல மினுங்கி குளுமையூட்டும் அந்த திண்ணை மட்டும் தான் ,திண்ணை தாண்டி உள்ளே நீளும் வீடாகிய அறைகளைக் குறித்து அலட்டல்கள் எதுவும் மனதில் பதியவில்லை .

ஆலங்குளத்தை விட்டு விட்டு ஆசாரிக்குத் தாவிய மனதை இழுத்துப் பிடித்து மீண்டும் தாத்தாவுடனான சம்பவங்களை கோர்க்கத் தொடங்கினேன் .ஆலங்குலத்து தாத்தா அருமையான தவசுப் பிள்ளையாகவும் இருந்தார் எங்கள் வீட்டு விஷேசங்களில்,அவரே சமையல் ஆட்களுடன் வேண்டி விரும்பி சேர்ந்து கொள்வார். சாப்பாட்டில் அத்தனை பிரியம் மனிதருக்கு.

எண்ணெய் மிதக்கா விட்டால் எந்தக் குழம்பும் ருசிக்காது என்று நம்புபவர் அவர்.
ஆடு,கோழி,காட்டுப் பன்றி ,ஸ்ரீவில்லிபுத்தூர் பக்கத்து காடுகளில் இருந்து தப்பி வந்து லாரியில் அடிபட்டு செத்த நரியின் கறி ,எப்போதேனும் வயலில் சிக்கும் மயில் ,அவ்வப்போது அவரே பிடித்து வரும் முயல் கறி,வாரம் இருமுறை மீனும் கருவாடும்...இப்படி தனி வயிரானாலும் தன் வயிற்றை அட்டகாசமாய் பல ஐட்டங்களைப் போட்டுத் தாக்கி வாடாமல் வனப்பாய் கவனித்துக் கொண்டவர் தாத்தா .

அவர் சேவல் (மீனை சேவல் என்றும் சொல்வார்கள் ஏனோ!) குழம்பு வைத்தால் எங்கள் தெரு தாண்டி அடுத்த தெருவும் கூட மணக்கும்,அப்போதெல்லாம் ஒட்டு வீடுகள் தானே!காற்றுக்கென்ன வேலி?

தக்காளி பஜ்ஜி ருசிக்க ருசிக்கச் செய்வார்.நெய் வாங்க காசில்லா விட்டால் தஞ்சாவூர் நாயக்கர் கடையில் அடி மண்டியோடானாலும் பரவாயில்லையென்று உள்ளங்கை குவித்து பிடித்து ஒரு முட்டை நல்லெண்ணெய் விட்டு உண்டால் தான் பருப்பு சாதமே ருசிக்கும் அவருக்கு.

உண்டு முடித்த மட்ட மத்தியானத்தில் அவர் வீட்டு சுண்ணாம்புத் திண்ணையில் சாய்ந்து கொண்டு தடித்த கருப்பு சட்டமிட்ட கோழி முட்டை லென்ஸ் கண்ணாடி மூக்கில் சரிய சரிய பெரிய எழுத்து போஜராஜன் கதை படிப்பார்,அசைவ சாப்பாடென்றால் என்ன உல்லாசமோ ! அன்றைக்கு மட்டும் தெரு பிள்ளைகள் எல்லோரையும் கூட்டி வைத்துக் கொண்டு கதை சொல்வார்,மற்ற நாட்களில் கதை சொல்ல சொல்லி நாங்கள் யாரும் நச்சரித்தால் தன் உருமாலைக் கழட்டி சுழட்டி சுழட்டி வீசி "போங்க கழுதைகளா தூங்க விடாம...மனுசன நச்சரிச்சுக்கிட்டு 'என்று விரட்டுவார்.

இப்படி விதம் விதமாய் பசிக்கு மட்டும் இல்லாமல் ருசிக்கு உண்ணும் அந்த ஒற்றை ஜீவன் தூரத்து உறவென்றாலும் கூட ரொம்பப் பக்கத்தில் இருந்ததால் சொந்தத் தாத்தாவாகத் தான் எங்களால் நினைக்கப்பட்டுக் கொண்டிருந்தார்.

அவர் ஏன் துத்தநாகத்தை கரைத்துக் குடித்தார் !

வானம் பார்த்த பூமி .

மழை இல்லை விளைச்சலும் இல்லை .

குவைத்தில் இருக்கும் மகன் குவைத் பற்றி எரிந்ததில் போட்டது போட்டபடி ஓடி வந்தார்.அப்பா வீட்டுக்கு அல்ல ,மனைவி வீட்டுக்கு. ஓரிரு முறை அப்பாவை பார்க்க வந்தார் ,செம்பட்டை அப்பாவை பாசமாய் பார்க்க வந்து போனதில் ஆலங்குலத்து தாத்தாவின் ஒன்னரைக் குழி சொந்த பூமி பட்டாளத்து நாயக்கர் பெயரில் பட்டாவானது .

எலி வலையானாலும் தனி வலை,தனி வலையானாலும் தன் வலை ,என்றிருந்த மகராசன் .வீட்டைக் கூடை மகன் அடமானம் வைக்க உள்ளுக்குள் ஒடுங்கித் தான் போனார்.ஆனாலும் கெத்து விடாமல் இருக்கவும் கொஞ்ச நாட்கள் முயன்று பார்த்தாராம். அப்போது அம்மாவுக்கு வேலை கிடைத்து நாங்கள் மானாமதுரைக்குப் பொட்டி கட்டியிருந்தோம். கூடவே பாட்டியும் தாத்தாவும் .

ஆத்திர அவசரத்துக்கு ஒரு டம்ளர் ரசமோ,ஒரு கிண்ணம் பருப்போ ,கொஞ்சம் சோறோ,வெஞ்சனமோ வாங்கிக் கொள்ளலாம் கூடவே பாடு பஞ்சம் என மனசை ஆற்றிக் கொள்ள பேச்சுத் துணைக்கு இருந்த இந்த உறவும் அற்றுப் போக அவர் நிர்கதியானார்.

மகன் கடனில் இருக்க ...மகள் யாரோவாகிப் போக ...வந்த இடத்து சொந்தங்களும் தூரமாகிப் போக ;

கடைசி கடைசியாய் பெருமாள் சித்தப்பா மகள் சடங்குக்கு பள்ளிக்கு லீவு போட்டு விட்டு அம்மா ஊருக்குப் போகையில் தாத்தா அம்மாவைப் பார்த்து ஆசையாய் ஓடி வந்து பேசினாராம்.

அம்மா கண் கலங்க அவர் கையில் நூறு ரூபாய் நோட்டை திணித்து விட்டு

"வாரேன் சித்தப்பா பஸ்சுக்கு லேட் ஆச்சு "

; என்று ஓடி வந்து பஸ் ஏறியதை அம்மாவே சொல்லக் கேட்டோம் அன்றொரு நாள்.

போகும் போதே பாட்டி அம்மாவிடம் ஒன்றுக்கு பலமுறை சொல்லி அனுப்பிய ஒரு வார்த்தை .

"மறந்தும் இந்த வீட்டு அட்ரஸ் மட்டும் கொடுத்துறாத ஆலங்குலத்து நாயக்கருக்கு" அவர் பாட்டுக்கு பஸ் ஏறி வந்துரப் போறாரு. ஏதாவது பணம் காசுன்னு கேட்டுகிட்டு "

கண்கள் கரித்துக் கொண்டு வரவில்லையா?

ச்சே என்ன பெண் நான்?!

ஊமை வலியில் சூன்யம் பார்த்துக் கொண்டு நெடு நேரம் உட்கார்ந்திருந்தேன் . அம்மாவும் பாட்டியும் எதையோ பேசிக் கொண்டே காபி அருந்திக் கொண்டிருப்பது கலங்கலாய் தெரிந்தது.இமை தட்டியதில் ஒரு துளிக் கண்ணீர் உதிர்ந்து புறங்கை நனைந்தது ;

அழுகிறேன் போல !