Thursday, November 20, 2008

ஷாக்...ஷாக்...ஷாக்...அடிச்சிருக்கா எப்போவாச்சும் உங்களுக்கு?




1.ஏற்காட்டில் புதுமணத் தம்பதிகள் வாட்டர் ஹீட்டர் ஷாக் மூலம் உயிரிழப்பு ,


2.கே.கே நகரில் டாக்டர் தம்பதிகள் வாட்டர் ஹீட்டரில் ஏற்ப்பட்ட மின்சாரக்கசிவு மூலம் உயிரிழப்பு ,


3.மழைக்காலத்தில் ஈரமான சுவற்றில் மின்சாரம் பாய்ந்து சுவர் அருகில் இரும்புக் கட்டிலில் படுத்திருந்தவர் மரணம்,


4.கையில் இரண்டுமாதக் குழந்தையை ஏந்திக்கொண்டு பேன் சுவிட்ச் போட்டதில் ஷாக் அடித்து குழந்தை தூக்கி எறியப்பட்டு மரணம் ,தந்தை குற்ற உணர்வில் துடிக்கிறார் .


5.மழைகாலத்தில் செல் போனில் பேசியவாறு சென்ற வாலிபர் மின்னல் தாக்கி மரணம்.


இதெல்லாம் பெரிய விபத்துகள் .இவை தவிர சின்ன அளவிலோ ,பெரிய அளவிலோ உடலுக்கும் மனதிற்கும் காயத்தையும் பயத்தையும் ஏற்படுத்தக் கூடிய சின்னச் சின்ன விபத்துக்களும் உண்டு தான் .ஒருமுறை ஏதாவதொரு மின்சாரப் பொருள் மூலம் ஷாக் அடித்து தூக்கி எறியப் பட்டாலோ காலத்துக்கும் அந்த பயங்கரமான அனுபவத்தை நம்மால் மறக்கவே முடியாது ,உயிரிழப்போடு குற்ற உணர்வு தான் மிஞ்சும் ,ஐயோ இப்படி நடந்து விட்டதே என்று மறுகிக் கொண்டிருப்பதை விட என்ன செய்யலாம் என்று யோசிப்பது நல்லது தானே !!!


பெண் தான் ஒரு குடும்பத்தின் அச்சாணி .அவளைச் சுற்றியே அந்தக் குடும்பச் சக்கரம் சுழல்கிறது ,அதோடு ஆண்களுடன் ஒப்பிடும் போது அதிக நேரம் வீட்டில் இருப்பதும் ,வீட்டில் உள்ள எலக்ட்ரானிக் வீட்டு உபயோகப் பொருட்களை பயன்படுத்துவதும் அவளே ...!


இதே போல இன்னொன்றையும் கூறலாம் ,சொந்தமாக வீடு வாங்கும் ஆசை வந்தால் கணவர்கள் தம் மனைவிகளின் விருப்ப்பத்துக்கே முதலிடம் தருகிறார்கள் என்று கேள்விப்பட்டேன்(!!!) குடும்பத்தலைவி என்பதற்காக மட்டும் அல்ல மனைவி சரியானதைத் தேர்ந்தெடுப்பாள் ,எதையும் ஒன்றுக்குப் பத்தாக யோசித்தே செய்வாள் என்ற நல்ல நம்பிக்கையினாலும் தான் .அந்த நம்பிக்கைக்கு மேலும் வலுச் சேர்க்க வேண்டாமா நாம் ...?


அதனால் வாருங்கள் ஷ்நேகிதிகளே சில விஷயங்களைப் பற்றி தெரிந்து கொள்வோமாக ,முதலில் நீங்கள் ஒரு அடிப்படை விஷயத்தை கண்டிப்பாக தெரிந்து கொண்டே ஆக வேண்டும் ,


எல்லா விதமான மின்சார விபத்துகளும் "எர்த்திங்" சரியாகப் பண்ணப் படாததின் காரணமாகவே நிகழ்கின்றன என்பது ஒரு பொதுவான கருத்து .


எர்த்திங்னா இன்னாப்பா ? அதாவது ஒவ்வொரு வீட்டிலும் வீடு கட்டப்படும் போதே எலெக்ட்ரிகல் வேலைகளும் சேர்த்தே செய்யப்படுகின்றன. அப்படி மின் வேலைகள் செய்து முடித்தபின் அதை எர்த்துடன்(பூமி) பூமிக்கு அடியில் இத்தனை ஆழம் (ஆறு -எட்டு அடி ஆழம்)என்ற கணக்கில் கனெக்சன் செய்வதையே எர்த்திங் என்கிறார்கள் ,


இன்னும் விளக்கமாகச் சொன்னால் ஒவ்வொரு வீட்டிலும் சரி ,பெரிய இண்டஷ்டரிகளிலும் சரி எர்த்திங் நூறு சதவிகிதம் சரியாகப் பன்னப்பட்டே இருக்க வேண்டும் ,இல்லாவிட்டால் மின்சாரம் ஏதாவது ஒரு ரூபத்தில் அதன் புத்தியை நம்மிடம் காட்டத் துவங்கி விடும் (உசாரா இருந்துக்கோ கண்ணு )


அதெப்படி தெரிந்து கொள்வது என்கிறீர்களா ?(சிம்பில்மா ..ஒண்ணுமேயில்ல )பெரும்பாலும் வீட்டின் உட்பகுதிகளில் அடிக்கடி நடமாடும் தரைப் பகுதிகளில் எர்த்திங் செய்வது நல்லதல்ல என்பதால் மீட்டர் பாக்ஸ் அருகில் தான் எர்த்திங் பாயிண்டுகள் மண்ணுக்குள் புதைக்கப் படுகின்றன .அந்த இடங்களில் வயர் கனெக்சன் வெளியில் தெரியுமாறு தான் இருக்கும் .


அதில் பச்சை நிற வயர் தான் எர்த் வயர் சுருக்கமாக ஆங்கிலத்தில் இ என்ற சிம்பல் இருக்கும் ,இதை வைத்து எர்த்திங் செய்யப்பட்டிருப்பதைத் தெரிந்து கொள்ளலாம் .ஆனால் அது நூறு சதம் சரியாகத் தான் செய்யப் பட்டிருக்கிறதா என்பதையும் நாம் கண்டிப்பாகத் தெரிந்து கொண்டேயாக வேண்டும் . இது அதை விடவும் ரொம்பவும் அவஷியம் .


தரமான ஐ எஸ் ஐ முத்திரை உள்ள வயர்களும் ,காயில்களும் வாங்கப்பட்டிருக்கிறதா என்பதும்


எர்த் திங் செய்ய கரெக்ட் சைஸ் வயர்கள் பயன் படுத்தப் பட்டிருக்கிறதா என்பதும் நாம் தெரிந்து கொள்வது நல்லது .


அதோடு அரசாங்க அங்கீகாரம் பெற்ற அனுபவம் வாய்ந்த தரமான எலக்ட்ரீசியன்களை நம்பி மட்டுமே நம் வீட்டின் எலக்ட்ரிகல் வேலைகளை ஒப்படைக்க வேண்டும் .


அதோடு எர்த்திங் பண்ணப்படும் போது முறையான பாதுகாப்புடன்


அ) எர்த் லீக்கேஜ் ப்ரொடெக்சன் பிரேக்கர்ஸ்


ஆ)சர்க்யுட் பிரேக்கர்ஸ் போன்றவை பூமிக்கு அடியில் கனெக்சன் செய்யப்பட்டுள்ளதா என்றும் அவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்வதும் நல்லதே.


இ)கடைசியாக எர்த்திங் விசயத்தில் மழைக்காலம் தவிர்த்து கோடை காலம் உட்பட மற்ற எல்லாக் காலங்களிலும் மாதம் ஒருமுறை எர்த்திங் செய்யப் பட்டுள்ள இடத்தில் தண்ணீர் ஊற்ற வேண்டும் ,


மேலும் வருடத்துக்கு ஒருமுறை தேர்ந்த எலக்ட்ரீசியன் வைத்து செக் செய்து கொள்வதும் அவசியமானதே.


அதோடு பத்து வருடங்களுக்கு ஒருமுறை மின்சார இணைப்புகள் சரியாக இருக்கிறதா என சோதித்துப் பார்த்துக் கொள்வதும் நமது பாதுகாப்புக்கு நல்லதே,


ஒ.கே எர்த்திங் சரியாக இருந்தால் பொருட்களில் மின்கசிவு ஏற்ப்பட வாய்ப்பே இல்லை அதுவரைக்கும் சரி தான் .ஆனால் (voltage) வோல்டஜ் பிரச்சினை வருகிறது என்கிறீர்களா?அதற்கும் தீர்வு இருக்கிறது .


"மினியேச்சர் சர்க்யுட் பிரேக்கர்ஸ்" அல்லது "ரெசிடியுயல் கரண்ட் சர்க்யுட் பிரேக்கர்ஸ்" அல்லது "ட்ரிப்பர்ஸ்" என்ற பெயரில் அனைத்து எலெக்ட்ரானிக் கடைகளிலும் ஒரு பாக்ஸ் கிடைக்கும் ,அதை வாங்கி நமது வீட்டில் பொருத்திக் கொண்டால் போதும் .


பவர் சப்ளை விநியோகக் குறைபாடுகள் ஏற்ப்படும் போது இந்த பிரேக்கர்ஸ் தானாகவே மின்சாரத்துக்கான மெயின் லயனை கட் செய்து விடும் ,இதனால் எலெக்ட்ரானிக் பொருட்கள் பாதிப்படைவது தடுக்கப் படும் .பெரிய அளவு பொருட்சேதத்தில் இருந்து நாம் தப்பித்துக் கொள்ளலாம் .


இதிலும் முக்கியமான ஒரு கண்டீசன் என்னவென்றால் ? எர்த்திங் சரியாகச் செய்யப்பட்ட இடங்களில் மட்டுமே இந்த பாக்ஸ் தன் வேலையை முழுமையாகச் செய்யும் .(அப்ப நம்ம ஹெல்த்தப் பாக்கறோமோ இல்லையோ எர்த்தப் பார்க்கணும்மா எர்த்து ...எர்த்து ...அதான் நம்ம பெர்த்தக் காப்பாத்தும்!!!).


சரி இனி முதலில் சொன்ன பாயிண்டுக்கே வருவோம் .


இப்போ இல்லை மீதி ஷாக்கை மீண்டும் நாளை தொடரலாம் ...


அதுவரை நீங்க உங்க வேலையை பாருங்க நான் என் வேலையை பார்க்கறேன் .