Thursday, May 27, 2010

சாமரப் பெண்டிர் ...

கற்கண்டுக்கு நேற்றிரவில் சரியான தூக்கமில்லை ,மூன்றாம் சாமத்தில் உளைந்து உபாதை கொடுத்துக் கொண்டே இருந்த வலது தோள்பட்டை கொஞ்சம் கழற்றி வைத்தால் தேவலாம் போல பின்னிப் பின்னி வழியில் துவண்டு கொண்டிருந்தது.கிழக்குச் சூரியன் மேற்கில் ஏறி வரத் தொடங்கியதைக் கண்டதும் உபாதைகளைப் புறம் தள்ளி வலி விழுங்கி அரண்மனைக்குப் புறப்பட ஆயத்தமானாள்.மன்னருக்கு சாமரம் வீசும் பெண் மன்னருக்கு முன் அங்கிருக்க வேண்டாமோ!சாமரம் வீச ஒருத்தி போதுமோ? இடப் பக்கம் கற்கண்டு என்றால் வலப் பக்கம் சாமரம் வீச பொன்வண்டு வருவாள்.

கற்கண்டு பொன்வண்டின் வீட்டை அடைகையில் பொன்வண்டு தன் வீட்டு கல் கூரையின் திண்டில் சாய்ந்து காற்றுக்கு ஆடிக் கொண்டிருந்த தென்னம் பாளைகளை சுய இரக்கம் கவிந்து போன பார்வையால் ரசனையே அற்றுப் போனவளாய் பார்த்துக் கொண்டிருந்தாள். கற்கண்டும் பொன்வண்டும் புன்னகை மறந்தவர்களாய் அரண்மனைக்குப் பறந்தார்கள்.

மயிலிறகுகளை விசிறி போலப் பிணைத்துக் கட்டிய முறம் போன்ற மென் சாமரங்களை ஆளுக்கு ஒன்றாய் கைகளில் ஏந்திக் கொண்டு ராஜாவின் தர்பார் மண்டபத்துக்கு வந்து சிம்மாசனத்தின் இரு புறமும் தயாராய் நின்று கொண்டார்கள் ,கட்டியக்காரன் பராக் பராக் சொன்னதும் உள்ளே வந்த ராஜா இந்தப் பெண்களை ஏறிட்டும் பார்த்தாரில்லை .

அப்போது ஆரம்பித்த விசிறல் ராஜாசபை களைந்து அந்தப்புரம் போகும் வரை தொடர்ந்தது.இடையில் கை மாற்றிக் கொடுக்க ஒரு ஆளை போடக் கூடாதா இந்த பாழாய்ப் போன ராஜாக்கள்!!! தோள் பட்டையிலும் மணிக்கட்டு மூட்டிலும் வலி விண் விண்ணென்று தெறிக்க பொன்வண்டின் முகம் பொலிவிழந்து வாடிப் போனது, கற்கண்டு சாமரம் வீசும் பெண்கள் தான் உலகில் சபிக்கப் பட்டவர்கள் எனும் ரீதியில் துக்கப் பட்டு வேதனையில் ஆழ்ந்து போயினள்.பாவம் இந்தப் பெண்கள்! என்று நினைக்க ஆட்கள் எவரையும் காணோம் அத்தனை பெரிய அரண்மனையில் !