Monday, December 14, 2009

சிவசங்கரியின் "தகப்பன்சாமி " குறுநாவல் ஒரு பார்வை

தகப்பன் சாமி படித்து முடித்ததும் இன்னது தான் என்றில்லாமல் ஒரு அனாமத்தான பயமும் கதை முடிவைக் கண்டு சின்னதாய் ஒரு சந்தோஷமும் பூத்து எண்ணங்களை கலவையான முரண்கள் ஆக்கிரமித்தன.

சதானந்தம் ஏன் இறக்க வேண்டும்?

மனைவியிடமும் பிள்ளைகளிடமும் நேசமும் ...பரிவுமான ஒரு கணவன் ,ஒரு தகப்பன் ஏன் சாலை விபத்தில் சடாரென்று இடைவழியில் சாக வேண்டும்?!

"பசித்து பாலருந்தும் ஒரு குழந்தையின் வாயிலிருந்து பால் பாட்டிலை எதிர் பாராமல் வெடுக்கென்று பறிப்பதைப் போல் ஆகாதா இந்த இழப்பு !!!"

"பிள்ளையை பள்ளியில் கொண்டு விட்டான் ,பக்கத்தில் உட்கார்ந்து பொறுமையுடன் பாடம் சொல்லிக் கொடுத்தான்,அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பியதும் பெண்ணை மடியில் வைத்துக் கொஞ்சினான் ,நாள் தப்பாமல் மனைவிக்குப் பூவும் குழந்தைகளுக்கு தின்பண்டமும் வாங்கிவந்தான் .

ஒருநாள் கொதிக்க கொதிக்க மங்களூர் போண்டா '

அடுத்தநாள் லாலா கடை அல்வா

இன்னும் ஒருநாள் அய்யர் ஓட்டல் தூள் பக்கவடாம்

ஆப்பிள் மலிவா வித்துக்கிட்டு இருந்தான் பசங்களுக்கு வாங்கினேன் '

ரஸ்தாளி இருந்துச்சு குழந்தைகளுக்கு கொடு

மிட்டாய் கடைல சூடா மிக்சர் போட்டுக்கிட்டு இருந்தான் ,சிவாக்கு தயிர் சாதத்துக்கு தொட்டுக்கிடப் பிடிக்குமேன்னு வாங்கி வந்தேன்,பாட்டில்ல கொட்டி வைச்சுகிட்டு தினம் கொஞ்சமா போடு..."

இப்படிப் பட்ட தகப்பனின் பாசத்தில் வளரும் சிவா தகப்பனை இழந்ததும் பெரியப்பா வீட்டில் அனுபவிப்பது ரணம்.வாழ்வின் சில முடிச்சுகளில் சிக்கிக் கொண்டு கனகமும் அவளது சின்னஞ்சிறு குழந்தைகளும் படும் பாடு சாந்தமூர்த்தி மற்றும் தெய்வ நாயகியின் மீது கடும் துவேஷத்தை நாவலைப் படிப்பவர்களுக்கு ஏற்படுத்தக் கூடும் .

கொண்டவன் துணையற்ற ஒரு பெண்ணை "அடிமையாக்கி "தங்களுக்கொரு சம்பளமில்லாத வேலைக்காரி ஆக்கிக் கொள்ளவே பெரும்பாலும் உறவுகள் முயலும் என்பதற்கு கனகமும் அவளது பிள்ளைகளுமே உதாரணம்.இத்தனைக்கும் கனகம் பலகாரம் செய்வதிலும் தையல் கலையிலும் தேர்ந்தவள் ,அப்படி இருந்தும் மூத்தார் குடும்பம் படுத்தி வைக்கும் பாடுகளுக்கு அவள் வாய் மூடி கண்ணீருடன் கரைவது உள்ளதும் போய் விடக் கூடாதே எனும் உள்ளார்ந்த பயத்தினால் தான்.

பெண்கள் தைரியசாலிகளாக முடிவெடுக்க வேண்டுமெனில் அதற்கு அவர்களின் வளர்ப்பு முறையும் முக்கியமே. துள்ளத் துடிக்க இறந்து போன தம்பிக்காக வருந்தாத சாந்த மூர்த்தியா தனக்கொரு நன்மை செய்து விடப் போகிறார்? என கனகத்தால் உணர முடியாமல் போனது அவளது துரதிர்ஷ்டமே!

தாய் தகப்பனை இழந்து அண்ணனின் பரிவில் வளர்ந்து பிறகு அண்ணி வந்ததும் அந்தப் பரிவிற்கும் பங்கம் வர மனைவிக்கு தன் தங்கை வேலைக்காரி ஆவதிலிருந்து அவளை மீட்கவே "பார்வைக்கு அத்தனை லட்சணமாக இல்லாவிட்டாலும்" பரவாயில்லை மாதச் சம்பளம் வாங்கும் மணமகன் பிக்கல் பிடுங்கல் இல்லாத குடும்பம் என்று தான் அழகும் பாந்தமுமான தன் தங்கையை மாதவன் சதனந்ததுக்கு திருமணம் செய்து வைக்கிறான். அதற்கும் இப்படி ஒரு பங்கம் வரக்கூடும் என அவன் கண்டானா?

எளியோருக்கு வலியோர் இரங்குதல் என்பதெல்லாம் சினிமாவில் காணலாம் என்பதைப் போல இங்கே கனகத்தை அநியாயமாக ஏமாற்றுகிறார்கள் தெய்வ நாயகியும் சாந்தமூர்த்தியும்.கணவனின் மரணத்திற்கு பின் அவனுக்கு கிடைத்த இன்சூரன்ஸ் இழப்பீட்டுப் பணம் முழுவதையும் சாந்த மூர்த்தி ஏதேதோ கணக்குகள் காட்டி கழித்துக் கொள்ளும் போது கனகத்தின் கேள்விகளற்ற பரிதவிப்பு அவள் மீதே"முதுகெலும்பில்லாத கோழைப் பெண்ணே "எனும் கோபமாகவே வெடிக்கக் கூடும் வாசகர்களுக்கு.


அதனால் தானோ என்னவோ அவள் பெற்ற மகனே அம்மாவையும் தங்கையையும் விட்டு விட்டு பெரியப்பா குடும்பத்தின் அடாவடியைப் பொறுக்க முடியாமல் அடிவாங்கிச் சாக வலுவின்றி வீட்டை விட்டு ஓடிப் போகிறான்.

பஸ்ஸில் காப்பி டீ விற்கும் சிறுவர்களில் ஒருவனாகிறான்.

சாந்தமூர்த்திக்கும் தெய்வ நாயகிக்கும் பத்தோடு பதினொன்றாய் கூட ஒரு காரணம் கிடைத்தது கனகத்தையும் சிவாவையும் ஊசியால் குத்துவதைப் போல வார்த்தைகளால் குத்திக் கிழிக்க,கனகத்தின் மௌனமான கதறலையும் ஆற்றாமையையும் சொல்லில் விளக்கி விட முடியாது தான்...

ஆனாலும் அவள் எங்கெங்கோ விசாரித்து யார் யாரிடமோ தகவல் சொல்லி கடைசியில் மகன் இருக்கும் இடம் தெரிந்து மூத்தாரை நம்பிப் பயனில்லை என இவளே நேரில் போய் அழைத்தும் அவன் திரும்பி வர மறுக்கிறான்.

தன் பிள்ளையை மூத்தார் மகன் வீணில் பலி சுமத்தி அடிவாங்க வைக்கும் போதும் சரி ...அவனை அந்த மனிதர் ஈவு இரக்கமே இன்றி பெல்ட்டால் விளாசும் போது பேச வகையின்றி கண்ணீரில் உருகும் போதும் சரி கனகத்தின் சிவாவுக்கு இருந்த நம்பிக்கை தகர்ந்து போகிறது.தன் அம்மாவை நம்பினால் இனியெப்போதும் அடிமை வாழ்க்கை தான் என அந்த பிஞ்சு மனம் நினைத்திருக்கக் கூடும் !

கனகத்தின் அழைப்பை மறுத்து அவன் சொல்லும் பதில் குழந்தை அப்பாவையோ ..அம்மாவையோ செல்லமாக பெல்ட்டால் அடித்து விளையாடுமே அப்படி ஒரு சாட்டையடி.சிவா தகப்பன்சாமி தான் இங்கே .

"தைரியமா நாம இருக்க முயற்சிக்கலாம்மா ,இந்த உலகத்துல நிமிர்ந்து வாழ நமக்கு உரிமை இருக்கு,யாருக்கும் காரணம் இல்லாம நாம அடங்கி வாழத் தேவை இல்லை,பெரியப்பா கிட்ட தயங்காம உண்மையைச் சொல்லுங்க மீறிக்கிட்டு குடும்பம் மானம்னு கத்தினார்னா சும்மா கேட்டுக்கிட்டு இருக்காதிங்க,நம்ம வாழ்க்கையை நாம தான் வாழனும் எனக்கொரு பெரியவர் இங்க வந்த புதுசுல சொல்லிக் கொடுத்தார் ,நீங்களும் அதை நினைவுல வச்சிக்கோங்க"

இரண்டும்கெட்டான் வயதில் அந்தப் பையனால் எடுக்க முடிந்த ஸ்திரமான திடமான முடிவை இத்தனை வயதில் கனகத்தால் எடுக்க முடியாமல் போனதை விளக்கத் தான் இந்த குறுநாவலுக்கு இப்படி ஒரு தலைப்பு என்றால் அது மிகையில்லை.

சிவசங்கரியின் இந்தக் குறுநாவல் முன்பு தூர்தர்சனில் "செவ்வாய் தோறும் இரவு ஒளிபரப்பப் படும்" ஒருமணி நேர நாடகங்களில் ஒன்றாக மாஸ்டர் கணேஷ் நடிப்பில் பார்த்த ஞாபகம் .மாஸ்டர்
கணேஷ் தான் சிவா.

இதுமட்டுமா பாலகுமாரனின் "தாயுமானவன்" கூட தொடராக வந்து கொண்டிருந்தது அப்போது .

இப்போது மெகா சீரியல்கள் பல வந்து குழப்பக் கும்மி அடித்தாலும் வெகு சொற்பமானவை தவிர நெஞ்சில் நிற்கவில்லை எதுவும். ஏன் கதைகளுக்கா பஞ்சம்? ஏதாவது ஒரு
வெற்றி பெற்ற நாவலை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாமே!!! என்ன ஒரு கஷ்டம் எனில் கதையின் கருப்பொருளை சிதைத்து தோரணம் கட்டி விடுவார்கள் டி.ஆர்.பி ரேட்டிங் என்ற பெயரில் அப்படி நல்ல நாவல்கள் சிதைந்து திரிந்து போய் மக்கள் மனதில் பதிவதை விட நாவலாகவே வாசிப்பதே உசிதம்.

பாலிமர் டி.வி யில் ஆர்.கே.நாராயணின் "சுவாமி அண்ட் பிரெண்ட்ஸ் " மால்குடி டேஸ் ஆக தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டு இருக்கிறது.மதியத்திற்கு மேல் என்று ஞாபகம்,சுவாமியின் அப்பாவாக கிரீஸ் கர்னாட் நடிப்பில் சுவாமியாக நடிக்கும் சிறுவன் பெயர் தெரியவில்லை .பார்க்கலாம் ஆனால் புத்தகமே அபாரமானது நம் கற்பனைகள் சிறகடிக்க. காட்சி ஊடகம் திறக்க முடியாத பலப் பல கதவுகளை திறக்க வல்லது நாவல்கள் என்பதை "தில்லான மோகனாம்பாளையும்" மலைக்கள்ளனையும் " வாசித்தல் தெள்ளத் தெளிய ஒப்புக் கொள்வீர்கள்.

கொத்தமங்கலம் சுப்புவின் தில்லான மோகனாம்பாள் திரையில் ஒரு வகை விருந்து எனில் நாவலாக வாசித்தவர்களை கேளுங்கள் இதை விட அதன் சுவை அளப்பரியது ,அதே தான் நாமக்கல் கவிஞரின் "மலைக்கள்ளன் " நாவலுக்கும். அப்பப்பா அதை படமாக எம்.ஜி.ஆர்...பானுமதி நடிப்பில் காண்பதை விட நாவலாக வாசித்துப் பாருங்கள் .புரியும் எப்பேர்ப்பட்ட புனைவு!

வாசகர்களின் பக்தியை சோதிக்க ஒரு எளிதான கேள்வி

தகப்பன் சாமி யார்?

அ) சிவன் ஆ)திருமால் இ) விநாயகர் ஈ) முருகன்

சரியான விடை சொல்பவர்களுக்கு அந்தக் கடவுளின் பிரசாதம் அனுப்பி வைக்கப் படும் :))))