Thursday, February 4, 2010

பந்தநல்லூர் ராஜகுமாரி...

இந்த அறையில் பெரிதும் கவனம் கலைக்காத வகையில் வடக்குப் பார்த்து தென்புறச்சுவற்றில் ஒரு ஆணி அடிக்கப்பட்டிருக்கிறது.

வீட்டின் வரவேற்பறையை ஒட்டி சற்றே உட்புறமாக கொஞ்சம் நடுத்தர அளவிலிருந்த அந்த அறையில் நாற்காலி மட்டத்தில் அடிக்கப்பட்டிருந்த அந்த ஆணியைக் குறித்து விமலகீதாவுக்கு எந்த வித அபிப்ராயமும் இது வரைஇல்லை.அவள்அதை எப்போதேனும் கவனித்தாளோ இல்லையோ?!

குடி வந்த புதிதில் அந்த ஆணியில் டிரெஸ்ஸிங் டேபிள் கண்ணாடியை ஒத்த ஒரு பெரிய நிலைக்கண்ணாடி மாட்டி வைத்திருந்தாள்,என்ன நினைத்தாலோ இப்போது அதை கழற்றி வேறிடத்தில் மாட்டிவிட்டாளென்று நினைக்கிறேன்.

விமலகீதா அக்கம் பக்கம் யாருடனும் தேவை இன்றி பேசாத வகை மனுஷி ...

அவள் புருஷன் சொட்டு நீர்ப்ப்பசனம் இன்ஜினியர்.அவனைப் பற்றி அப்படிச்சொன்னால் தான் இங்கிருப்பவர்களுக்கு தெரியும்,சொந்தத் தொழில் என்று சொட்டு நீர்ப்பாசனத்தை கட்டிக் கொண்டு அழுததில் ஆற அமர கட்டினவளைக் கொஞ்சும் அவகாசமெல்லாம் இல்லாதவனாகிப் போனவன் அவன்.

விமலகீதாவும் புருசனையும் அவனது அலட்சியத்தையும் கண்டு அனாவசியமாய் அலட்டிக் கொண்டதாகத் தெரியவில்லை

இந்த இரண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் சம்பந்தமில்லாதவர்களாய் விநோதமாய் குடும்பம் நடத்திக் கொண்டிருந்தார்கள் இங்கே.

நானும் இவர்கள் இங்கு குடியேறிய நாள் தொட்டு கவனித்துக் கொண்டே தான் வருகிறேன் விமலியும் அவள் புருசனும் ஒரு நாளேனும் அந்யோன்யமாய் சிரித்துப் பேசிக்கொள்ளமாட்டார்களா என்று! அதொன்றும் நடந்தபாடில்லை,ஒரு சின்னச் சிரிப்பு ,அதிகம் வேண்டாம் ஒரு சன்னமான கேலி,மிஞ்சி மிஞ்சி எப்போதேனும் போனால் போகிறதென்று மெலிசாய் ஒரு ஊடல் ,ரொம்ப முத்தினால் ஒரு சண்டை .

எப்போதும் என் எதிர்பார்ப்புகளைப் பொய்யாக்கிக் கொண்டே தான் இருக்கிறார்கள் இருவருமே .

ஒழியட்டும்...இலவு காத்த கிளியாய் ஆணியில் தவமிருக்கிறேன் நான் !!! இப்படித்தான் இவர்கள் விஷயம் எனக்கு பெருத்த மன உளைச்சலாகிப்போனது.இங்கிருந்து விலகிப் போகலாம் என்று பார்த்தால் அதற்கு எனக்கு விதியில்லை .

எனது எல்லைகள் வரையறுக்கப்பட்டவை ,இந்த ஆணி மட்டத்திலிருந்து பார்த்தால் எதிர்த்தாற்போல எதிர் வீட்டின் .
பெரிய ஜன்னல் தெரிகிறதா ?! நேர்கோடு போல இங்கிருந்து அந்த ஜன்னல் வரை மட்டுமே நான் போய் வர முடியும்,சில நாட்கள் ரொம்பவும் போர் அடித்தால் அந்த ஜன்னல் வரையிலும் போய் ஜன்னலில் இருந்து ஜிங்கென்று தாவிக்குதித்து அந்தப் பக்கம் ஈசி சேரில் நிசப்தமாய் ஆடிக் கொண்டிருக்கும் தாத்தாவுடன் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருப்பேன்.

எப்போதாவது என் கணவனின் ஞாபகம் வருகையில் மனசு கனமாகிப் போகும்.பாருங்கள்...இப்போதும் அவரைப் பற்றி சொல்லும் முன்பே என் குரல் மெலிந்து கண்கள் கரிக்க ஆரம்பித்து விடுகின்றன. அழுது கொண்டே என் கதையை சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை.

எத்தனை ஆண்டுகள் ஓடி விட்டன.இப்போதும் அவர் முகம் என் நெஞ்சில் பதித்த அச்சாய் .

அவரை நினைக்கையில் எல்லாம் பாகாய் உருகும் நெஞ்சம் ;அனலில் கரையும் பனிமலையாய் அவர் நினைவுகள் என்னில் ஆறாய்ப் பெருகினால் நான் மெலிதான விசும்பலுடன் தேம்பி அழத் தொடங்குவேன் ,யார் காதிலும் விழப் போவதில்லைஎனினும் என் துக்கம் எனக்கு.

எந்த ஜென்மத்தில் நான் செய்த சுண்டு விரல் புண்ணியமோ அப்படி ஒரு கணவன் எனக்கு வாய்க்க...என்ன தவம் நான் செய்தேனோ!


ஹூம்...

பந்தநல்லூர் ராஜகுமாரியைத் தெரியுமா உங்களுக்கு?!

சுதந்திரத்துக்குப் பின் வல்லபாய் படேல் ஜமீன்களை எல்லாம் நிர்மூலமாக்கி இந்தியாவை ஒரே அதிகாரத்தின் கீழ் கொண்டு வந்தாரில்லையா? அப்போது அதிகாரமிழந்து போன ஒரு ஏழை ஜமீனின் ராஜகுமாரி அவள்.

பாவம் ரொம்பவும் சின்னப்பெண் ,வயது பதினைந்து தாண்ட விடமாட்டார்கள் அப்போதெல்லாம்,மாட்டுக்கு மூக்கணாங்கயிறு போலப் பெண்ணுக்கு தாலிக்கயிறு,பாரம் சுமக்க அவளை இப்படித் தான் பழக்க ஆரம்பிப்பார்கள்,அட அப்படி ஒரு கயிற்றுக்கும் கதியற்றுப் போனவளாய் காலிப்பெருங்காய டப்பாவான ஜாமீன் வீட்டில் இவள் பதினேழு தாண்டியும் பருவம் தந்த யவ்வனம் சுமந்து நின்றதில் ஜமீன்தாருக்கு கண்ணைக் கட்டிக் கொண்டு வர தன் மகள் ஈடேற முடியாமலே போவாளோ என்ற பயத்தில் அரண்டு போய் மீட்சியின்றி ஒரு அடைமழை நாளில் மாண்டும் போனார்.

தனித்தவள் ஆனால் ராஜகுமாரி ;

சொந்த பந்தங்கள் ...ஒத்த அந்தஸ்துகள் கல்லில் நார் உறிப்பினும் ஒன்றும் தேறாதென்று ஒதுங்க,உற்ற உறவுகள் எதற்குச்சுமையென கை கழுவ ,அவளிருந்த ஊர் ஜமீன் மரியாதையில் எட்டி நிற்க...இன்னும் தன்னிகரிலா தனித்தவள் ஆயினள் ராஜகுமாரி .

தகிக்கும் தனிமை விஷ சர்ப்பம் போல் அவளோடு ஊர்ந்து உறுத்திய நாட்களொன்றில்

வந்தான் ஒரு ராஜகுமாரன்,

நிஜத்தில் ராஜன் அல்ல ;அவள் அகத்தின் ராஜனாய் பட்டாளத்து உடையில் பகட்டின்றி சிரித்து தண்ணீர் கேட்டுக் குடித்தவனின் கைத்தசை முறுக்கில் கண் அமிழ,கடைந்தெடுத்த தேக்காய் திரண்டு உருண்ட தோளில், தன் பலாச்சுளை கன்னம் பதித்து சொல்லாத் துயர் சொல்லிச்...சொல்லி அழும் ஆசை கொண்டாள் ராஜகுமாரி.

இந்த ஊர்க்காரன் இல்லை அவன்...எங்கு போய்க் கொண்டு இருப்பவனோ ..இடைவழியில் தாகமென்று வந்தவன்...என்ன நினைத்தானோ ?! ஏனிங்கு தங்கினானோ ?பொல்லாத அவள் விதியோ...பொருந்தித் தான் போயிற்றோ...ஜாமீன் பெருமைகளை ஒரு கண்ணீர்ச் சொட்டில் சேகரித்து வீதியோரம் சுண்டி விட்டு சொக்கிப் போய் அவனிடம் தஞ்சமெனசரணடைந்தாள் அன்றே அந்த ராஜகுமாரி .

ஊர் எது? பேர் எது ?... தெரியாது.அண்ணலும் நோக்கி அவளும் நோக்கிய பின் கை பிடித்து கூட்டிப் போனான் ஊர் ஒதுங்கிய எல்லைக் கோயிலுக்கு,பொம்மக்காவோ..திம்மக்காவோ எவளோ ஒருத்தி எல்லைத்தெய்வமென்று கல்லாய் சமைந்திருக்க ;ஜென்ம ஜென்மமாய் காத்திருக்க முடியாதவன்போல் சங்குக் கழுத்து வளைத்துக் கட்டினான் திருமாங்கல்யம் .

மங்கையின் கண்கள் மளுக்கென்று உடைப்பெடுக்க ;உள்ளம் அறிந்தவன் போல் சோகம் உணர்ந்தவன் போல்,உற்றவனாய் உரியவனாய் தோள் சாத்தி தலை வருடி ஆசை தீர அழ விட்டான் ,யாரோ...அவன் யாரோ இன்றவளின் ஆன்மச் சிறகசைத்துப் பறக்க விட்ட பட்டமாக்கினான்,மனம் லேசானது.

அன்றே புறப்பட்டு ,அங்கங்கே உண்டு உறங்கி நடந்தே அவனூருக்கு அழைத்துப் போனான்.மாங்கல்யம் மஞ்சள் மணந்ததால் அவன் கணவனெனும் நினைப்பு வரினும் மிச்ச சொச்ச நேரமெல்லாம் அவள் மனம் மெச்சும் சிநேகிதனாய் களிப்பான கதைகள் பேசி நடந்து நடந்து ஓய்ந்த ஒரு உச்சிப் பொழுதில் அவன் ஊரை அடைந்தார்கள்.

அழகான ஊர் ,இவள் ஊரைப் போல இல்லை அவ்வூர்,இங்கு அவள் ராஜகுமாரி இல்லை என்பது பெருத்த நிம்மதி தந்தாலும் அதை விட ,தோழமை பொங்கும் அன்பான கணவனின் மனைவி என்ற நினைப்பில் தித்தித்துக் கிறங்கிப் போய் எந்நேரமும் அவனை ஒட்டியே இழைந்து நின்றாள் அவள்,

எல்லாம் சில பொழுதே ;நாத்தி ஒருத்தி சேதி அறிந்து பதை பதைத்து ஓடி வரும் வரை மட்டுமே!

ஜோடிகளைக் கண்ட மாத்திரத்தில் அலையக் குலைய ஓடி வந்து மூச்சு வாங்க நின்ற நாத்தியின் கண்கள் விதிர் விதிர்த்து நிலைத்தது பசு மஞ்சள் காயாத இவள் தாலிச்சரட்டில் தான்.நிஜம் போல பொய்யாய் சிரித்து ஆலாத்தி சுற்றி நெற்றியில் பொட்டிட்டு அவள்...என் நாத்தி ;

"வலது கால் எடுத்து வைத்து வாம்மா "

என்று என்னை அழைத்தது இதோ இந்த வீட்டின் வாசலில் நின்று கொண்டு தான்.

"ஆமாம் அந்த பந்தநல்லூர் ராஜகுமாரி நானே தான்.ஏன் என்னை அப்படி உற்றுப் பார்த்து தேடுகிறீர்கள்?!"

என் கதையை நானே சொல்லி வந்தாலும் ஞாபகங்களின் பாரம் தாங்காமல் ,அடக்க மாட்டாமல் அழுகை வருகிறது எனக்கு

என் அம்மா ஜீவித்து இருந்திருந்தால் அவளுக்கு என் நாத்தியின் வயதிருக்கும்.என் கணவனின் ஜாடை தான்,அந்த வயதிலும் வெகு சௌந்தர்யமாய் இருந்தாள்,காராம்பசுவைப் போல அவள் கண்கள் கருணை பொழியக் கூடியவை என்று நம்ப வைக்கும் சாந்தம் காப்பது அவளுக்கு இயல்பாகிப் போனதோ என்னவோ !

வந்த மூன்றாம் நாளே என் கணவன் மறுபடி பட்டாளத்திற்கு அழைக்கப் பட்டார் என தந்தி வந்தது,துடித்துத் துவண்டேன் நான்,இன்னும் எதுவும் இல்லை எங்களுக்குள்!,பிள்ளைச் சிநேகிதம் போல பேசுவதும் சிரிப்பதும் காதல் மிஞ்சிப் போனால் இருவரும் கைகளை கோர்த்துக் கொள்வதும் முழுமை பெற்ற தாம்பத்யம் ஆகுமோ !?

'இம்மென்றால் 'அழுகை வந்தது எனக்கு அவரை பிரிந்து அறியாத தெரியாத மனிதர்களுடன் இந்த ஊரில் எத்தனை நாள் தனித்திருக்க நேருமோ ! பரிதவிப்பிலும் சுய பட்சாதாபத்திலும் சேதி கேட்ட நொடி முதலாய் உழன்றேன் நான்.அங்கத்திய நிலைமையும் அப்படித்தான்..ஆனாலும் ஆணாயிற்றே அழவில்லை...உருகவில்லை...தவிக்கவில்லை என்பதாக ஒரு நாடகம் நடத்த தெரிந்திருந்தது அவருக்கு.

இதே வீடு தான்,இப்போது வாஸ்து பார்த்து குளியலறையாகிப் போன அந்த அறையின் நடுவில் ஒரு மரக்கட்டில் இருந்தது அப்போது,என் கணவரோடு நான் இருந்த இரண்டு நாட்களில் அவர் கட்டிலிலும் நான் தரையில் ஜமுக்காளம் விரித்தும் ஏதேதோ கதைகள் பேசியவாறு அங்கு உறங்கி இருக்கிறோம்,

நாள் கிழமை பாராமல் கல்யாணம் தான் கழித்தாகி விட்டது ..இந்த விசயத்திலும் அவ்விதமாய் அலட்சியப் படுத்தினால் அவரது அக்காவின் கோபம் அளவிலாமல் மீறுமோ என்று அவளிஷ்டப் படி நாங்கள் நல்ல முஹூர்த்த நாளுக்காய் தள்ளி நிறுத்தப்பட்டிருந்தோம்.

அவர் பட்டாளத்திற்கு புறப்பட்ட நாளன்று மதியம் நாத்தி வீட்டு விருந்து எங்களுக்கு,சீராகச்சம்பா அரிசிச்சோறும் ஆட்டுக்கறியும்,கோழி குழம்பும் ,குளத்து மீனுமாய் அமர்க்களமாய் விருந்தளித்தாள்,அவள் மகள் மீனாட்சி எனக்கொரு ஆப்த சிநேகிதியாய் இருந்திருக்கக் கூடும்...நான் அவளுக்குப் போட்டியாய் வந்திரா விடில்!

எதைக் கண்டேன் நான் !இப்படி ஒரு மகளை தம்பிக்காய் நாத்தி வளர்த்து வைத்துக் காத்திருப்பாள் என்று நான் எதிர்பார்த்தேனா!!!அவள் கண்களில் கலக்கம் இருந்தும் என்னிடம் குரோதம் இல்லை,நடு நடுவில் தயங்கித் தயங்கிப் பேசிக் கொண்டிருந்தாள்.பாவமாய் இருந்தது எனக்கு.

"மாமனைக் குறித்து என்னென்ன ஆசைக்கற்பனைகளை சுமந்து கொண்டிருந்தாளோ இந்த அப்பாவிப் பெண்!!! "எதுவும் சொல்ல முடியாமல் மெல்லவும் முடியாமல் மௌனித்தேன் நான்.

பலமான விருந்து தான் ஆனாலும் சரியாக உண்ணாமலிருந்த எனைக் கண்டு நாத்தி வெகு பிரியமாய் உளுந்து வடைகள் நிறைந்த கிண்ணம் ஒன்றை எடுத்து வந்தாள்,எண்ணெய் வடியாத சூடான பொன்னிற வடைகள்...;

"இதையாவது கொஞ்சம் பிட்டு வாயில் போட்டுக்கொள்,என் தம்பியின் குலம்கொழிக்க வாரிசுகளை பெற்றுத் தரப்போகிறவள் இல்லையா நீ?இப்படி கிள்ளிக் கிள்ளி சாப்பிட்டால் எப்படி? கேலியுடன் சிரித்துக் கொண்டே கிண்ணத்தை என்னருகில் வைத்து விட்டு தம்பியிடம் ;

"அவள் சாப்பிடட்டும் ,நீ வா நாட்டாமைக்காரர் வீடு வரை போய் வந்து விடுவோம்,இதை விட்டால் இனி பொழுதிருக்காது அங்கே போக,திருவேங்கடம் வந்திருப்பதாகச் சொன்னார்கள்.போய் சுருக்கத் திரும்பி விடலாம்,

"திருவேங்கடமா? கடல் தாண்டிப் படிக்கப் போனானே?! என்னருமை நண்பன்.முகமெல்லாம் சிரிப்போடு குதூகலித்து என் கணவர் கண்ணசைவில் என்னிடம் விடை பெற்று தன் அக்காவோடு வெளியில் நடந்தார்.

உளுந்து வடைகள் அபார ருசி, மீனாட்சி நான் மறுக்க மறுக்க பிரியத்துடன் நிறைய வடைகளைத் தின்ன வைத்துக் கொண்டே இருந்தாள்,

"அவர் வந்து சாப்பிட மாட்டாரா?!,சும்மா இரு மீனாட்சி ,நானே முழுதாய் தின்று தீர்த்து விடுவேன் போல,சரியான தீனிப்பண்டாரம் என்று அவர் என்னை கேலி செய்யப் போகிறார்." என்று நான் தவிர்க்க நினைத்தும் அளவு மீறித்தான் உண்டு விட்டேன்.

மீதி நடந்ததெல்லாம் எனக்கு அத்தனை ஞாபகமில்லை,

என்னவர் வந்ததும், உறக்கமும் விழிப்புமாய் தலை சுற்றித் துவண்டிருந்த என்னைக் கண்டு பதறியதும்,

"என்னக்கா இது? இவளுக்கு என்ன? ஏன் இப்படி இருக்கிறாள்? "என்று பரிதவித்ததும்,அவரது அக்கா ;

"ஒன்றுமில்லையடா ... வடை ருசியாயிருக்கிறதென்று கொஞ்சம் அளவு மீறித் தின்றிருப்பாள்...எண்ணெய்ப் பலகாரங்கள் ஆச்சுதே ! வயிற்றுக் ஒத்துக் கொள்ளாமல் தலை சுற்ற வைத்து அசத்தி இருக்கும் ! நீ ஒன்றும் பயந்து போகாதே" என்று தம்பியை சமாதானம் செய்ததும் கூட அசங்கள் மசங்கலாய் தான் நிழலாடுகின்றன.

அப்புறம் என்ன ஆனதென்று நான் சொல்லத்தான் வேண்டுமா?!

தன் கை வளைவில் என்னை தாங்கிக் கொண்டு புறப்பட மனமற்றவராய் கடைசி நிமிடங்களில் என் கணவர் ;

"அக்கா குடிக்க தண்ணீர் கொண்டு வா" என்று அக்காவை சமையல் உள்ளுக்கும்,துவைத்த துண்டெடுக்க மீனாட்சியை கொல்லைக்கும் அனுப்பி விட்டு ,நானிருந்த கோலம் தாங்காது ஒரு பச்சிளம் குழந்தையை பத்திரம் போல் உடலோடு அணைத்துத் தழுவி தூக்கிக் கொள்வதைப் போல மயக்கமும் விழிப்புமான பரவச நிலையிலிருந்த என்னை தன்னோடு சேர்த்தணைத்து "மலரினும் மெலிதாக..."

மேகங்களின் ஊடே பஞ்சாய் மிதப்பதைப் போல...உடல் நீங்கி உயிர் காற்றில் கரைவதைப் போல் ;

மிக மிக மெத்தென்று உதடுகளால் ஒரு மென் ஸ்பரிசம் ,அதை முத்தமென்று சொல்வார்களாமே!வலிய ஆணின் வலிக்காத ஒரு முத்தம்.

உருகி ...உறைந்து...உருகினேன் நான்.

கனவில் நிகழ்வதாய்...

கண்மணி...!( அவர் அப்படித்தான் அழைத்துக் கொண்டிருந்தார் என்னை);

"ம்..."

"நான் போய் வரட்டுமா?!"

ம்...ம்ஹூம்;

நீ...நீ...பத்திரமாய் இருப்பாய் தானே நான் வரும் வரை!?என்னிலிருந்து பிரிய முடியாதவராய் அவர் தவிக்கும் போதே நாத்தியும் மகளும் உள்ளே வர,மனமற்று என்னை விட்டு விட்டு கடைசி கேள்விக்கு விடை பெறாமலே போய் விட்டார் .ரயிலுக்கு நேரமாகிறதே!

அந்த நாளுக்குப் பிறகு அவரைக் காணவில்லை நான்.

நாத்தி எத்தனை கெட்டிக்காரி என்று நான் உணர்ந்து கொள்ள அவள் இத்தனை மெனக்கிட்டிருக்க வேண்டுமோ?! சொன்னால் என் கதை கேட்டு நீங்களும் அழக் கூடுமோ என்னவோ?!அவள் முகம் தாய்மை நிறைந்தது,பாவி...அந்த முகத்தை வைத்துக் கொண்டு தான் அவளால் தன் நாடகத்தை வெற்றிகரமாக நடத்திக் கொள்ள முடிந்தது .

அவர் பட்டாளம் சென்ற பின்னும் தொடர்ந்து மூன்று நாட்களாகியும் என்னால் தலை தூக்கிப் பார்க்கவே முடியாமலானது,சதா மயக்கத்தில் இருந்தேன்,என்னைக் குறித்து அச்சப் படும் அளவேனும் எனக்கு புத்தி தெளிந்திருக்கவில்லை.கிராதகி சாப்பிடு..சாப்பிடு என்று உருகி உருகி உபசரித்தாளே எதைக் கலந்து உண்ண வைத்தாளோ!

புதுப் பெண்ணாயிற்றே என்று என்னைப் பார்த்துப் போக வந்த ஊர்க்காரர்கள் முன்னில்
பேசக்கூட இயலாதவளாய் நாக்கு குழறிற்று,ரெண்டடி நடக்க மாட்டாமல் நடை பிசகிற்று, கண்கள் சொருகிக் கொண்டு எங்கோ வெறித்து வெறித்து மூட "நான் நானில்லை ...அவள் கைப்பொம்மை" என்றானேன்.

என் கதை இந்தியா சுதந்திரம் பெற்ற சமீபத்திய கதை.பட்டாளத்துப் புருஷன் திரும்பி வரும் முன்னே நான் முடிந்து போனாலும் கேட்பாரில்லை அன்று.

நாத்தி எனக்குப் பேய் பிடித்திருக்கிறதாக கதை கட்டினாள்,உள்ளூர் கோடாங்கி ஒத்துப் பாட...புளிய விளாராலும்,அது கிடைக்காத போது காய்ந்த துவரை மார்களாலும் விளாசு விளாசென்று விளாசித் தள்ளினான் அவன்.சிவந்த என் உடலில் பாலம் பாலமாய் ரத்தக் கோடுகள் கண்ட போது

நான்...நான் ;

அவர் என்னை கடைசி கடைசியாய் மிக மிக மென்மையாய் முத்தமிட்டதையே நினைத்துக் கொண்டு தூக்கத்தில் உலுக்கி எழுப்பப் பட்ட குழந்தை போல விசும்பி ...விசும்பி அழுதேன் ;அழக் கூட சத்தற்றவளாக்கினார்கள் என்னை.

இரக்கமற்ற பாவிகள் !

என் உடலில் காயங்கள் முற்றிப் போன ஒரு நாளில்,உடல் செத்து உயிர் சாகாத என்னை ;நனவும் கனவுமாக அரை பிரக்ஞையுடன் தத்தளிப்பில் தவிக்க ,துள்ளத் துடிக்க குளிப்பாட்டி ஒரு பழைய மர நாற்காலியில் உட்கார வைத்து இதோ இங்கே ...இந்த ஆணியில் தான் தலை சாய்த்து நாடிக்கட்டுப் போட்டு பிணம் என்று சாற்றி வைத்தார்கள் என்னை.

இனி சொல்வதற்கு ஒன்றுமில்லை ,

சற்றைக்கெல்லாம் இந்த ஆணியில் தான் என் உயிர் பிரிந்தது.

அன்றிலிருந்து இங்கே தான் இருக்கிறேன்.

என் கணவர் என்ன ஆனார்?

என்னைத் தேடினாரா? ...நிச்சயம் தேடி இருப்பார்,இந்தப் பாசப்பழிகாரி எதையாவது சொல்லி பசப்பி இருப்பாள்!

நானாக அனுமானம் செய்து கொண்டவளாய் அமைதியானேன்.

என்ன செய்து விடமுடியும் நான்!

ஆவிகள் பழிவாங்குவதெல்லாம் சினிமாக்களில் சாத்தியமாகலாம்.அதென்னவோ நான் அப்படி முயலக் கூட இல்லை,என் வரையில் ஒரு நல்ல தம்பதிகள் இந்த வீட்டில் குடி இருந்து நான் வாழ விரும்பிய வாழ்க்கையை எனக்கு வாழ்ந்து காட்ட மாட்டார்களா என்ற ஏக்கம் நிரம்பிப் போனவளாய் இன்னும் காத்திருக்கிறேன் இந்த ஆணி மீது!

யாராவது வருவார்களா?

உங்களுக்குக் கல்யாணமாகி விட்டதா ?...நீங்கள் வருகிறீர்களா இந்த வீட்டுக்கு குடி இருக்க !?

முகவரி இது தான் ;

கதவு எண் 210 ,
சிவன் கோயில் தெரு ;
இளையரசனேந்தல் ;
கோவில்பட்டி தாலுகா.