Friday, June 18, 2010

தண்டகாரண்யமும் ராவண நீதிகளும் :



ராவணன் பட விமர்சனம் படிக்க கிடைத்தது.அதை ராமாயணக் கதை என்கிறார்கள்.

சென்ற வார விகடனில் அருந்ததி ராயின் பேட்டி , தண்டகாரண்யம் பழங்குடி இன மக்களின் வாழ்வுரிமைக்காக போராடும் அவரை இந்திய அரசு மாவோயிஸ்ட் என முத்திரை குத்தும் அபாயம் இருக்கிறதாம்!வாசித்தவுடன் மிக்க வருத்தமாக இருந்தது.

தண்டகாரண்யம் வனப் பகுதி ராமாயணத்தோடு தொடர்புடையது ,இந்த வனத்தில் வைத்து தான் மாயமானுக்கு மயங்கிய சீதையை ராவணன் லங்கைக்கு கடத்திக் கொண்டு போகிறான் என்பது ராமாயணக் கதை.இதிகாசம் உண்மையோ கற்பனையோ! ஆனால் 10 சதவீத உண்மையில் 90 சதவீத கற்பனை கலக்கப் பட்டிருக்க கூடுமே தவிர முற்றிலும் கற்பனை என்று சொல்ல வாய்ப்பில்லை .ஆரிய திராவிட ஆதிக்க சண்டையின் வரலாற்று தடயங்கள் தான் ராமாயணமும் மகாபாரதமும் என்பதாக நேரு தமது "டிஸ்கவரி ஆப் இந்தியாவில்" இந்திராவுக்கு கூறுகிறார்.

இப்போது அருந்ததி ராய்க்கு வருவோம்,

ஆந்திரா,ஒரிஸ்ஸா எல்லைப்பகுதியில் உள்ள மிகப் பரந்த வனப்பகுதி இந்த தண்டகாரண்யம்,இங்கிருக்கும் பழங்குடிகள் இந்தியா தனி நாடாக உருவாகும் முன்பே இங்கே வாழ்ந்தவர்கள் என்பதற்கு வரலாற்றுச் சான்றுகள் உள்ள நிலையில் அந்த பூமி அவர்களுக்கு உரிமையானது ; அந்த மக்கள் தமது வாழ்வாதாரத்துக்காக போராடுகிறார்கள்.அவர்களது போராட்டத்தை மாவோயிஸ்டுகள் நீர்த்துப் போகாமல் பார்த்துக் கொள்கிறார்கள்,ஈழத் தமிழர்களை இனப் படுகொலை செய்திட்ட சிங்கள அரசாங்கம் போலத் தான் இப்போது இந்திய அரசு தன் சொந்த நாட்டு பழங்குடி இன மக்களை அந்த வனங்களில் இருந்து அப்புறப் படுத்த "சலுவா ஜூடும்" என்ற பெயரில் கூலிப் படைகளை அமர்த்தி உள்ளதாம் .

அத்தனைக்கும் காரணம் பணம். அந்தப் பணத்தை கொள்ளை கொள்ளையாய் கொட்டித் தர தண்டகாரண்யம் காடுகளில் கொட்டிக் கிடக்கும் பாக்சைட் தாதுக்கள் ,அலுமினியத்தில் இருந்து பிரித்தெடுக்கப் படும் இந்த பாக்சைட் தாதுக்கள் விமான தயாரிப்பில் முக்கிய மூலப் பொருட்கள்.இந்த பாக்சைட் தாதுக்களை தண்டகாரண்யத்தில் இருந்து வெட்டி எடுக்க உலக பணக்கார நிறுவனங்கள் அனைத்தும் இந்திய அரசிடம் ஒப்பந்தம் போட்டிருக்கின்றதாம்.அப்படி ஒப்பந்தம் போட்டிருப்பதால் அந்த வனப் பகுதியில் காலம் காலமாய் வாழ்ந்து வரும் பழங்குடி மக்களை இருந்த சுவடே தெரியாமல் அங்கிருந்து அப்புறப் படுத்த வேண்டும்,இல்லையேல் உரிமை பிரச்சினை கோரிக் கொண்டு காலத்துக்கும் அங்கே தமது தொழிற்சாலைகளை நிறுவப் போகும் அந்நிய மற்றும் உள்நாட்டு பணக்கார நிறுவனங்களுக்கு அந்த மக்கள் தொடர்ந்து பிரச்சினை தரும் அபாயம் இருக்கிறது என அரசு நினைக்கிறது.

அதிகார வர்கத்தின் ஆணவ ஆட்டத்தில் உலகெங்கும் இப்படி எளிய மக்கள் பலியாகிக் கொண்டு தான் இருக்கிறார்கள் இதைப் பற்றி மேலும் பேசத் தேவை இல்லை.பேசி ஒன்றும் ஆகப் போவதும் இல்லை. நான் சொல்ல வந்தது வேறு .

ராமாயணக் கதைக்கு வருவோம் இப்போது;

ராவணனை ஏன் நல்லவன் என்று ஒப்புக் கொள்ளக் கூடாது நாம் ?! அவனது ஆளுகையின் கீழ் வரும் தண்டகாரண்யம் வனத்தில் அன்னியனான ராமனின் நுழைவு அவனை அச்சம் கொள்ள வைத்திருக்கலாம்,அதன் அடிப்படையில் அவன் ராமனை அச்சுறுத்த சீதையை கவர்ந்து சென்றிருக்கலாம்.இதை வால்மீகி தன் அரசனை உத்தமனாகக் காட்ட வேண்டி சூர்பனகை மாயமான் எனும் பின் இணைப்புகளால் சுவாரஸ்யமான கதையாக்கி ராவணன் தான் கெட்டவன் என்பதாய் சித்தரித்திருக்கவும் கூடும். இப்படி ஒரு கோணமும் உண்டெனக் கொள்ளலாம்.

"ராவணன் " படம் மூலம் மணிரத்னம் அப்படி ஒரு கோணத்தில் சிந்திக்க வைத்திருப்பது நிஜம் .இந்தப் படம் மட்டுமல்ல " கோஷம்பியின் "பண்டைய இந்தியா" புத்தகம் இதற்கு மிகச் சிறப்பான வரலாற்று ஆதாரம்.

அப்படி ராவணன் தனது எல்லையில் அந்நிய ஊடுருவலை எதிர்த்தது அதற்காகப் போராடியது நியாயம் எனில் ராம ராவண யுத்தத்தில் எவர் பக்கம் நியாயம்? பெண்ணைக் கவர்ந்ததால் ராவணன் கெட்டவன் என்றால் இன்றைக்கு லட்சக் கணக்கில் எங்கெல்லாம் அரசின் நியாயமற்ற அதிகாரத்துக்கு எல்லைப்புற மக்கள் பணிய மறுக்கிறார்களோ அங்கெல்லாம் ராணுவமும் ,காவல்துறையும் விசாரணை என்ற பெயரில் பெண்களை மானபங்கம் செய்து வல்லுறவில் சிதைக்கிறதே இதெல்லாம் நியாயம் ஆகுமா?சீதை என்ற புனித பிம்பத்தை கவர்ந்து சென்றதால் மட்டுமே ராவணன் கெட்டவனாக்கப் பட்டான் என்றால் ;

வீரப்பவதத்தில் சத்யமங்கல வனப் பகுதிகளில் பழங்குடிப் பெண்களுக்கு நிகழ்த்தப் பட்ட சொல்லக் கூசும் பல கொடுமைகளைச் செய்தவர்களான கர்நாடக வனத்துறை போலீசாரும் தமிழக வனத்துறை போலீசாரும் நல்லவர்களா? வீரப்பன் கொள்ளப் பட்டதால் அவர்கள் செய்தது எல்லாமே நியாயம் என்றாகுமா? அந்தப் பழங்குடிப் பெண்களுக்கு நேர்ந்த கொடுமைகளுக்கும் அநியாயங்களுக்கும் விசாரணை இல்லை.விசாரணை இல்லாததை விட அவர்களுக்கெல்லாம் அரசு செலவில் பதக்கம் என்ன,பட்டயங்கள் என்ன ,வீட்டு மனைகள் என்ன!?அப்படியானால் எது நியாயம்! அந்தப் பெண்கள் சீதைகளாய் பிறவாமல் போனது தான் அவர்களது குற்றமா? ஒரு பெண்ணுக்கு இழைக்கப் படும் அநீதி அவள் சீதை எனும் பட்சத்தில் தான் உலகின் கண்களில் நியாயப் படுத்தப் படுமா?

ஈழத்தில் நிகழ்த்தப் படும் கொடுமைகளுக்கு சற்றும் சளைத்தவை அல்ல சத்யமங்கல வனப்பகுதிகளில் வாழும் பழங்குடி மக்களுக்கும் ,இப்போது தண்டகாரண்யம் வனங்களில் தமது உணவுக்கும் உறைவிடத்துக்கும் போராடும் பழங்குடி இன மக்களுக்கும் நிகழ்த்தப் பட்டிருக்கும் கொடுமைகள்.இந்த மக்கள் தமது உரிமைக்காக போராடுவது எப்படி தீவிரவாதமாகும் ?! அதெப்படி அரசு விரோத செயலாகும்!

உலகின் பணக்கார நிறுவனங்கள் பாக்சைடுக்காக இந்திய அரசிடம் இருந்து தண்டகாரன்யத்தை விலை பேசி கூறு போட்டுக் கொள்ளப் போகின்றன.அந்நிய முதலீடுகள் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தலாம்,மக்களாட்சியில் பொருளாதாரம் யாருக்காக வலுப்படுத்தப் பட வேண்டும் மக்களுக்காகத் தானே ? அந்தப் பழங்குடி மக்களும் இந்தியர்கள் தானே,இந்தியாவுக்குள் தானே இருக்கிறார்கள் ?அதிகமாய் எதிர்ப்பு காட்டினால் மாவோயிஸ்டுகள் என முத்திரை குத்தப் படும் அபாயம் இருக்கையில் அவர்கள் எந்த வழியில் தான் தமது எதிர்ப்பை காண்பிக்க முடியும்? தனது செயல்களே சரியானவை மக்கள் அதை மீறினால் அடக்கி ஒடுக்கப் பட வேண்டியவர்கள் எனும் ரீதியில் நடத்தப் படும் ஆட்சி எப்படி மக்களாட்சியாகும்?

அப்படியானால் இந்தியாவில் நடப்பது மக்களாட்சியா ?

தொழிலதிபர்களுக்கும் ,அந்நிய நாட்டு அதிபர்களுக்கும் தான் இந்த அரசு செவி சாய்க்கும் என்றால் அப்படி ஒரு அரசு தன்னை சர்வாதிகார அரசு என்று பகிரங்கமாக அறிவித்துக் கொண்டால் என்ன?

உண்மையில் மக்களுக்காக என்ற பெயரில் இங்கே அரசியல் செல்வாக்குள்ள தொழிலதிபர்கள் தான் கொழுத்துக் கொண்டிருக்கிறார்கள்.அப்படி ஒரு சிலர் தான் இந்தியாவை கட்டி ஆள்கிறார்கள் என்றால்,இங்கே இருப்பது மக்களாட்சி அல்ல.

மன்னராட்சியின் நவீன வடிவமே இது.