Friday, July 29, 2011

எல்லாம் கிருஷ்ணனுக்கே சமர்ப்பயாமி ...மரண பரியந்தம் தொடரும்
என நினைத்திருந்த பந்தம் ஒன்று
இடைவழி போயின் உள்நிறைக்கும்
ஏமாற்றம் இன்னதென விவரணை காணாது
புறத்தாடும் கண்ணாமூச்சு ஆட்டம் ;
எதை நான் பரிகசித்தேனோ
அதுவே நானாகி நானே அதுவாகி
எனக்கே எனக்கென்று
தலைவலியும் காய்ச்சலும்
வந்து மெய்ப்பிக்கும் சோதனையின்
கால் தடங்கள்;
எப்போதும் நமக்கென்று
எதுவும் மிஞ்சி இருப்பதில்லை
இருக்கப்போவதுமில்லை !
எப்போது வேண்டுமானாலும்
தூக்கி எறிந்து விடலாம்;
ஆனாலும் இட்டமுடன் தூக்கிச் சுமக்கும்
அகத்தொருமித்த ஜீவாதாரப் பாம்பு
முற்ற முழுதாய் எனைத்தின்னும் முன்பே ...
உள்ளங்கை நீர் குவித்து
உவந்தளிக்கிறேன் தானம்
எல்லாம் கிருஷ்ணனுக்கே
சமர்ப்பயாமி!

Thursday, July 21, 2011

Wednesday, July 20, 2011

யூமா வாசுகியின் ரத்தஉறவும் இல்லத்தரசிகளின் கிச்சன் கேபினெட்டும் .

கிச்சன் கேபினெட் :


யூமா வாசுகியோட ரத்த உறவு புஸ்தகம் தான் விடிஞ்சு எழுந்ததும் கண்ல பட்டுச்சு ,அது ஒரு குறியீடுன்னு எலக்கிய மூளை கூக்குரலிட அதை தட்டி அடக்க முடியாம கொஞ்ச நேரம் மூளை ஸ்தம்பிக்க , so அங்க இருந்து இன்றைய சுளுக்கு வியாதிக்கு மருத்துவம் ஆரம்பிக்கலாம்ன்னு லேப் டாப்பை திறந்தேன் .நான் லேப் டாப்ல எழுத உட்காரும் போதெல்லாம் பழைய ஹாக்கின்ஸ் குக்கர் விளம்பர கணவர் மாதிரி ;

"என் மனைவி கார் ஓட்டினால் எனக்கு பயமில்லை .

என் மனைவி பார்க்கில் வாக்கிங் போனால் எனக்குப் பயமில்லை .

என் மனைவி சமைக்கத் தொடங்கினால் மட்டுமே எனக்குப் பயம் ரேஞ்சுல

என் மனைவி எழுதத் தொடங்கினால் மட்டுமே எனக்குப் பயம்ன்னு "

தேவ் கொஞ்சம் பீதியானார் தான் ;அதையெல்லாம் பார்த்தா எலக்கிய சேவை ஆற்ற முடியுமா ?

எலக்கிய சேவை என்ற இந்த வரிகளை எழுதும் போது இந்த நிமிடம் எனக்கு விதூஷ் ஞாபகம் வந்தது என்பதை கட்டாயம் இங்கே பதிவு செய்கிறேன்.

சரி இனி கிச்சனுக்குள்ள போகலாமா !

Ready

Start ...

1

2

3...

கிச்சனுக்குள்ள போக கஷ்ட்டமா இருந்தா ஹால் சோபால உட்கார்ந்து கொஞ்ச நேரம் என்ன சமைக்கலாம்னு யோசிச்சிக்கலாம் ,ஆனா அதுக்குள்ள இருட்டிடக் கூடாது ஜாக்ரதை .

//meantime வசந்த பவன்,சரவணபவன்,அஞ்சப்பர்,வேலு மிலிட்டரி பொன்னுச்சாமி ஹோட்டல் இருக்க பயமேன்னு மூளைக்குள்ள பல்ப் எரியும் ப்ளீஸ் ஆப் பண்ணிடாதிங்க //

நல்லா எரிய விட்டு பெண்ணியக் கருத்துகளை வளர்த்தெடுக்க ஒரு வாய்ப்பா இந்த நேரத்தை பயன்படுத்திக்கணும் .
//டைம் மேனேஜ்மென்ட்//

கிச்சனுக்குள்ள போகாமலே கிச்சனைப் பற்றிய யோசனைகளின் விஸ்தீரணம் ஒரு நூறு கஜம் இருக்கலாம் ,அப்ப தான் ஒரு ரெண்டு பக்கமாச்சும் "கிச்சன் கேபினெட்"கட்டுரை தேறும் . ரொம்ப முக்யமான பாயின்ட் இது நோட் பண்ணிக்கோங்க .

இனி கட்டுரைக்கு ;

அதாகப் பட்டது ;

இந்தப் பெண்களுக்கு விடிஞ்சு எழுந்தா இருக்கற மகாப்பெரிய தலைவலி மண்டையிடி இன்னைக்கு என்ன சமைக்கலாம்னு தான் ஆரம்பமாகும் ,அதாகப் பட்டது வெறுமே பழைய சோறு தான்னாலும் கூட அப்டியே திங்க முடியாது பாருங்க பிரிஜ் ன்னு ஒன்னை வாங்கி வச்சுட்டு யூஸ் பண்ணாம இருக்க முடியுமா அதுல ராத்திரியே மிச்சம் மீதி எல்லாம் வச்சு அடைச்சுட்டு கார்த்தால எடுக்கறதால ஒரே ஜில்லிப்பு ,அதை சூடு பண்ணனும் ,சூடு பண்ண ஸ்டவ் பத்த வெச்சப்புறம் அதை உடனே அணைக்க மனசு வராம ஏதோ ஒரு அப்பளமோ கத்தரிக்கா வெண்டைக்கா வத்தலோ இல்ல கருவாடோ எதையோ பொரிக்கத் தான் வேணும்,

இதே சன்டே ,சாட்டர்டே ன்னா விசேசமா அசைவம் ஏதானும் சமைச்சே ஆக வேண்டிய கட்டாய மனச்சிக்கல் வேற .சமைக்கலன்னா அது குடும்பத் தலைவிகளுக்கு எவ்ளோ பெரிய மன உளைச்சலைத் தருதுன்னு சில பல இல்லத்தரசிகளிடம் விசாரித்து கள ஆய்வில் கண்டறிந்தோம் ,

அவர்களது ஒப்புதல் வாக்குமூலம் அவர்கள் மொழியில் கீழே வாசியுங்கள் ;

//சன்டே மட்டன் சிக்கன்,ரத்தப் பொரியல் ,மூளைப் பொரியல், ரொம்ப விசேசமான நாட்கள்ன்னா குடல் குழம்பு ,தலைக்கறி, எலும்பு சூப்,நெஞ்செலும்பு ஈரல் குழம்பு இப்டி எதுனா செய்யலையான்னு எஸ்.டி.டி எம்மாத்திரம் இப்பலாம் வாரா வாரம் ஐ.எஸ்.டி கால் போட்டெல்லாம் விசாரணை பண்ணி கொல்றாங்க சொந்தக்காரங்க,விடாம செல் போன் வேற அடிச்சிட்டே இருக்கும் ,எடுக்கவே மாட்டோமே நாங்க ,எங்களுக்குத் தெரியும் எல்லாம் மெனு விசாரனையாத் தான் இருக்கும்னு ,நாங்க சமைச்சு முடிச்சதும் ,நாங்களும் எல்லாரையும் விசாரிக்க ஆரம்பிச்சிடுவோம்,எங்களால வார இறுதியில் மட்டும் பல செல்போன் கம்பெனிகளின் லாபம் விண்ணைத் தாண்டிப் போயிட்டு இருக்கு தெரியுமா ?! , //


"பெண்கள் பத்திரிக்கை உலகத்துல இந்த ஆய்வை இதுவரை யாருமே செய்யலை ,நீங்க ஏன் அப்டி ஒரு ஆர்டிகிள் கூட பண்ண முயற்சிக்க கூடாது ?! "


//எவ்வளவோ பண்ணிட்டோம் இதப் பண்ண மாட்டோமா! சரிங்க பண்ணிடலாங்க //


. //இந்த இடத்துல நம்ம குடுகுடுப்பையார் ஞாபகம் வரதை தவிர்க்கவே முடியலை,அன்னாருக்கு எல்லா நாட்களும் விசேச தினங்கள் தான்..பாவப்பட்ட ஆடு கோழிகள் பேசும் சக்தியைப் பெற்று அவரை மிருகங்களுக்கான தனி கோர்ட்டில் கூண்டில் ஏற்றி கேள்வி கேட்கா விட்டால் தினம் தினம் அவரது மெனு buzz களால் பீதிக்கு உள்ளாகும் buzz உலகம் இனியும் ஜீவித்து இருக்காது //


//Back to the Field work Report //

கேள்வி :நான்வெஜ் ல என்ன வெரைட்டி சமைப்பிங்க வீக் எண்ட்ல ?

பதில் : 1 .வெஜிடேரியன் குடும்பத் தலைவி : சரவண பவன்ல தாங்க கேட்கணும்
2 . நான்வெஜிடேரியன் குடும்பத் தலைவி : அஞ்சப்பர்ல தாங்க கேட்கணும் .

கேள்வி : வீட்ல சமைக்காம எப்டி கிச்சன் கேபினெட் நடத்தறிங்க ? உங்க பேமிலி மெம்பெர்ஸ் ஐ மீன் உங்க கணவர்கள் கேள்வி கேட்க மாட்டாங்களா ?

பதில் : அவங்களுக்கு தெரிஞ்சா தான! ;

கேள்வி :அவங்களுக்கு தெரியாம ஹோட்டல்ல வாங்கி வச்சு serveபண்ணுவீங்களா?

பதில் :

ச்சே ச்சே இல்லைங்க ...குடும்ப விவகாரங்களை பேசிட்டே சாப்டா எங்க சாப்டறோம்னே மறந்துடும், நல்லா டைம் பார்த்து தூங்கி எழுந்த உடனே காலைலேயே வழக்கு விவகாரங்களை ஆரம்பிச்சிடணும் அப்டியே எங்க போறோம் , என்ன சாப்பிடறோம்ன்னு எல்லாம் அவங்க யோசிக்க முன்னால கூட்டிட்டு போய் சாப்டுட்டு பில் பே பண்ண வச்சு மறுபடியும் வீட்டுக்கு வந்துடுவோம் .

//மந்திரிச்சு விட்ட கோழி கதை ஞாபகம் வந்தா நான் பொறுப்பில்லை//

கேள்வி : இப்படித் தான் வெகு காலமா கிச்சன் கேபினெட் நடத்தப் படுதா?

பதில் :

அதைப் பத்தி எல்லாம் சங்க இலக்கியத்துல குறிப்புகள் இருக்கலாம்,இல்லனா யுவான் சுவாங்,பாஹியான் பயணக் குறிப்புகள்ல ஏதாவது சொல்லப் பட்டிருக்கலாம் ,சரியா தெரியலைங்க ஆனா எங்களுக்கு பாட்டிகளும் அம்மாக்களும் கொஞ்சம் கொஞ்சம் சொல்லி தந்தாங்க ,மீதி எல்லாம் அனுபவப்பாடம் தாங்க . கிச்சன் கேபினெட் ஒரு சாகரம் ,அதுல இன்னும் யாரும் முத்து எடுத்தாங்கலான்னு கூகுள்ள தேடிப் பார்க்கணும் .இது சம்மந்தமா உங்களுக்கு நிறைய விடைகள் கிடைக்கலாம் .

கேள்வி : சரிங்க கிச்சன் கேபினெட்ன்னா என்னங்க?

பதில் : சின்னப் புள்ளத்தனமால்லாம் கேள்வி கேட்க கூடாது ,

இப்படித் தாங்க எதை எழுத ஆரம்பிச்சாலும் அது இப்டி வெண்டைக்காய் மாதிரி முடியுது . // நோ கமெண்ட்ஸ்//

ஒரு துறை பற்றி எழுதும் முன்பு அந்தத் துறை பற்றிய ஞானம் கொஞ்சமேனும் அறிந்து கொண்டு பிறகு இந்தக் கட்டுரையை தொடர்வதே உசிதம் என்றெண்ணியதால் ஆறுதலுக்கு ஒரே ஒரு சமையல் குறிப்போடு இந்தக் கட்டுரை முடிகிறது.

ரத்தப் பொரியல் :


தேவையான பொருட்கள் :

ரத்தம் - ஒரு ஆட்டு ரத்தம் என்று கறிக் கடைகளில் கேட்டால் கட்டியாக உறைந்த ரத்தத்தை எடுத்துத் தருவார்கள் வாங்கிக்கொள்ளவும்.
கடலைப் பருப்பு - 50 கிராம்
பெரிய வெங்காயம் - 1
காய்ந்த மிளகாய் - 6
எண்ணெய் - 3 டீ ஸ்பூன்
தேங்காய் - 1/4 மூடி துருவியது
உப்பு - தேவையான அளவு

தாளிக்க :
எண்ணெய் - 1 டீ ஸ்பூன்
கடுகு உளுந்தம்பருப்பு - 1 டீ ஸ்பூன்
கருவேப்பிலை - 1 ஆர்க்

செய்முறை :

முதலில் ஒரு அகலமான பாத்திரத்தை அடுப்பில் ஏற்றி மூன்று டம்ளர் தண்ணீர் விட்டு நன்றாக கொதித்ததும் ரத்தக் கட்டிகளைப் போட்டு ௧௦ நிமிடம் வேக வைக்கவும் ,நன்றாக வெந்திருக்கிறதா என இடையிடையே கூர்மையான ஃபோர்க்கால் வெந்து கொண்டிருக்கும் ரத்தக் கட்டிகளை குத்தி சரி பார்த்துக் கொள்ள வேண்டும்,இல்லையேல் மேற்புறமாக நன்றாக வந்திருப்பதாக கண்ணுக்குத் தெரிந்தாலும் உள்ளே சரியாக வேகாமல் பச்சையாக இருக்கலாம். நன்றாக வெந்த ரத்தக் கட்டிகளை நீரை வடிகட்டி விட்டு ஒரு தட்டில் கொட்டி ஆற விடவும் ,ஆறிய பின் பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும் ,நறுக்கிய ரத்தக் கட்டிகளை நீர் விட்டு அலசிப் பிழிந்து நீர்ப் பற்று இல்லாமல் சுத்தமாக வடிகட்டிக் கொள்ள வேண்டும்.
கேரட்,முள்ளங்கி,வாழைத்தண்டு பொரியல் செய்வதற்கு வேக வைப்பதைப் போல கடலைப் பருப்பை தனியாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும் .
வாணலியை அடுப்பில் ஏற்றி 3 டீ ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு ,உளுந்தம் பருப்பு ,கருவேப்பிலை,காய்ந்த மிளகாய் தாளித்து அதனோடு நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதங்கியதும் முன்பே வேக வைத்து எடுத்த கடலைப் பருப்பை போட்டு பிரட்டிக் கொள்ளவும் இதனோடு பொடிப் பொடியாக நறுக்கிய ரத்தத்தை போட்டு நன்றாகக் கலந்து தேவையான அளவு தூள் உப்பு சேர்த்து சில நிமிடங்கள் எண்ணெயில் வதங்க விட்டு அடுப்பை அணைத்து விட்டு ஒரு கீற்று தேங்காய் துருவல் சேர்த்து நன்றாகக் கலந்து பிறகு இறக்கிப் பரிமாறலாம்.

வேக வைத்த ரத்தம் சாப்பிட மண் போல ருசி இல்லாமல் இருக்கும் ,சுவைக்காக தான் கடலைப் பருப்பு ,தேங்காய் துருவல் சேர்த்துக் கொள்வார்கள் .

ரத்தப் பொரியல் சாப்பிடுவதன் பயன் :

வளரும் குழந்தைகளுக்கு வாரம் ஒரு முறை ரத்தப் பொரியல் செய்து தரலாம்,ஸ்நாக்ஸ் போல விரும்பி சாப்பிடுவார்கள்,அசைவம் சாப்பிட விரும்பாத குழந்தைகள் உடல் வலுவற்று இருந்தால் இப்படி ரத்தப் பொரியலில் இருந்து ஆரம்பிக்கலாம் . ரத்தத்தில் ஆக்சிஜன் ,ஹீமோகுளோபின்,ப்ளேட் லெட்டுகள் இருப்பதால் ரத்த சோகை வராமல் தடுக்கும் . நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும் .

//வேக வச்ச ரத்தத்துல ஹீமோ குளோபின் செத்துப் போயிடும்லன்னு புத்திசாலித் தனமால்லாம் கேள்வி கேட்கக் கூடாது ,ரத்தப் பொரியல் மூளை வளர்ச்சிக்கு இல்லை..இல்லை...இல்லை இந்த கட்டுரை போலவே . //
இன்றைய கோட்டா ப்லாக் , buzz சேவை முடிஞ்சது .

நன்றி .வணக்கம்

இனி நாளை தொடரும்

Monday, July 18, 2011

Sweet Moments 4 : ( எம்பொண்ணாக்கும் ...)

Sweet Moments 4 : ( எம்பொண்ணாக்கும் ...)

இன்னைக்கு எம் பொண்ணுக்கு செகண்ட் யூனிட் டெஸ்ட் ஆரம்பம் ,முதல் நாள் மேத்ஸ் டெஸ்ட் ,நேத்து நல்லா Revisionபண்ணிட்டா ,டெஸ்ட் எழுத சொல்லி கரெக்சன் பண்ணி முடிச்சதும் எனக்கு திருப்தியா இருந்தது,எல்லாத்தையும் விட காலைல குளிச்சு கிளம்பினதும் வேன் க்கு போறதுக்கு முன்னால அம்மா ,அப்பா இங்க வாங்கன்னு கூப்ட்டா . "டைம் ஆச்சு ஹரிணி வேன் வந்துடும் சீக்ரம் வா "ன்னு கத்திட்டு இருந்தேன் நான்.காலை நேர டென்சன் !

"இரும்மா வரேன் ..அப்பா ப்ளீஸ் சீக்கரம் வந்து அம்மா கிட்ட நில்லுங்களேன்ப்பா"

"என்னடி குட்டி இது இந்நேரம் விளையாடிட்டு இருக்க ,இங்க வா நான் கீழ போறேன் TIME ஆச்சு ."

"இரேன்ம்மா ..."

அவளுக்கு கோபம் வந்திருக்க வேண்டும் முகத்தை சுருக்கிக் கொண்டு தேவ் இடம் போய் அவரது கையைப் பிடித்து எழுப்பி அழைத்துக் கொண்டு வந்து என் அருகில் நிற்க வைத்தாள். தேவ் என்னவோ ரிபோர்ட் அனுப்பிக் கொண்டிருந்தார் அவரது ஹெட் ஆபிசுக்கு .அந்த டென்சன் அவருக்கு .

"என்னடா இப்டி பண்ற ஸ்கூல் க்கு கிளம்பற நேரத்துல என்ன விளையாட்டு இது? " - மனமில்லாமல் சொல்லிக் கொண்டே எழுந்து வந்தார் .

ஒருவழியாக நாங்கள் சேர்ந்து வந்து அவள் முன் நின்றதும் ;

ஹரிணியின் முகத்தில் சிரிப்பு குமிழியிட்டது .

எங்க தீபா மிஸ் EXAM DAY அன்னைக்கு பேரன்ட்ஸ் கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கச் சொன்னாங்க , என்ன Bless பண்ணுங்கம்மா ,Bless பண்ணுங்க டாடி .

ஹேய் ...குட்டி என்னடா இது ! எனக்கு உச்சந்தலையில் ஒரு கூடை ஐஸ் கொட்டியது போல அத்தனை சந்தோசம் அப்பிக் கொண்டது. தேவ் பற்றி சொல்லவே வேண்டாம்.

"ஹே குட்டி இதெல்லாமா உங்க மிஸ் சொல்லித் தராங்க ,நல்ல மிஸ் தாண்டா .... " சிரித்துக் கொண்டே மகளிடம் சொல்லி விட்டு என்னைப் பார்த்த பார்வை சொன்னது ,

"எம்பொண்ணாக்கும்! "

ஐயே ...நல்ல அப்பா நல்ல பொண்ணு ரொம்பத் தான் அலம்பல். :)))

என் ப்ரிய சோபி ( சிநேகிதிக்கு )

சோபி (சோபனா ) யிடம் பேச வேண்டும் என்று தினமும் நினைத்துக் கொள்வேன் ,ஆனால் நிரந்தரமாக அது முடியாமலே போய் விடுமோ என்றிருக்கிறது இப்போதெல்லாம் . மதி கடந்த வாரம் என்னிடம் பேசுகையில் பகிர்ந்து கொண்ட விசயங்களில் மனம் கனத்துப் போனது .

"கார்த்தி ரொம்ப நாள் கழிச்சு போன வாரம் ஒரு வெள்ளிகிழமை சோபி எனக்கு போன் பண்ணி பேசினா "

"சோபியா உனக்குப் பேசினாளா ! என்கிட்டே அவ பேசி வருசக் கணக்காகுதே மதி !

"ம்ம் ...ப்ளீஸ் உன்கிட்ட பேசலன்னு அவள கோச்சுக்காத கார்த்தி "

"கோச்சுக்கலாம் இல்ல ..ஆனா ஏன் மதி ? அவ ஏன் என்கிட்டே பேசாமலே இருக்கா ?"

"சோபி ரொம்பப் பாவம் கார்த்தி "

" ஏன் என்னாச்சு ?"

"அவ போன் எடுத்ததும் என்கிட்டே என்ன சொன்னா தெரியுமா? "

"...................."

"எப்டி இருக்க சோபின்னு மட்டும் என்கிட்டே கேட்டுடாத மதி ...நான் தாங்க மாட்டேன் இந்த வார்த்தைய -இதான் சொன்னா போன் எடுத்து நான் ஹலோ சொன்னதும்"

"எப்டி இருக்கன்னு கேட்கக் கூடாதா !!! ஏன் சோபிக்கு அப்டி என்ன ஆச்சு ?

"அவ ஹஸ்பண்ட்க்கு ப்ளட் கேன்சராம் கார்த்தி ,இங்க தான் அடையார் கேன்சர் இன்ஸ்ட்யூட்ல ட்ரீட்மென்ட் எடுக்கறாங்களாம். "

"என்ன சொல்ற மதி , ஷாக்கிங்கா இருக்கு எனக்கு . "

"ஆமாம் கார்த்தி ...கல்யாணம் ஆகி முதல் குழந்தை டெலிவரி ஆகா ரெண்டுமாசம் முன்னவே தெரிஞ்சிடுச்சாம் கேன்சர் இருக்கறது ,அப்போல இருந்து அவ நாம் பிரெண்ட்ஸ் யார்கிட்டயும் பேசறதே இல்லையாம்... பினான்சியலா வசதி இருந்தும் கூட மனசளவுல அவள ரொம்பக் கஷ்டப்படுத்தறாங்க போல கார்த்தி அவ ஹஸ்பண்ட் வீட்ல "

"கஷ்டப்படுத்தறாங்களா சோபியவா ? சோபி ன்னா நம்ம காலேஜ் ,ஜூனியர் ஸ்டூடண்ட்ஸ் லெக்சரர்ஸ் ,பிரெண்ட்ஸ் வீடுகள் இப்டி எல்லாருக்கும் பிடிக்குமே மதி ,அவ எவ்ளோ அருமையான பொண்ணு ,அவள ஏன் கஷ்டப்படுத்தனும் ! அவ பொண்ணுக்கு எத்தனை வயசாகறது இப்போ ,குழந்தை எங்க இருக்காளாம்?"

"அது ஒரு பெரிய கொடுமை கார்த்தி ,குழந்தை பிறந்த நேரம் தான் அது அப்பாக்கு இப்டி ஆயிடுச்சுன்னு கரிச்சு கொட்டினதுல குழந்தைய சோபி அம்மா வீட்ல கேரளால வளர்க்கறாங்கலாம். அது அவங்க அப்பா முகத்தையே பார்க்க கூடாதாம் ,ஜாதகம் அப்டி இருக்குன்னு நம்பறாங்க அவ ஹஸ்பண்ட் வீட்ல "

"ஏன் இப்டி ஆயிடுச்சு சோபிக்கு ?"

"எனக்கு ஒரு வாரமா தூக்கமே வரலை கார்த்தி ,நம்ம சோபிக்கு இப்டி ஆயிருக்க கூடாதுன்னு தினம் நான் இவர்கிட்ட சொல்லிட்டே இருக்கேன்,வேணும்னா ஒரு தடவ சென்னைக்கு போய் அவளை பார்த்துட்டு வேணா வாயேன் இங்கருந்தே சும்மா புலம்பிட்டே இருந்தா என்ன புண்யம்கறார் எங்க பாவா "

"ம்ம்...அவர் சொல்றதும் சரி தான் ,ஆனா நீ இரு ,நான் சென்னைல தான இருக்கேன் அவ நம்பர் தா ,நான் போய் பார்க்கறேன் அவள ,அப்றமா வீக் எண்ட்ல நீ வா"

"நோட் பண்ணிக்கோ கார்த்தி **********"

"சரி மதி நான் அவகிட்ட பேசிட்டு போய் பார்க்கறேன் ,அப்றமா உனக்கு சொல்றேன்"

"சரி ...குழந்தைங்க ஸ்கூல் வேன் வர டைம் நான் அப்றமா பேசறேன் கார்த்தி "

"எனக்கும் தான் ....சரி மதி "

நாங்கள் இருவரும் இப்படிப் பேசிக் கொண்டு மூன்று மாதங்கள் ஆகின்றன .

அதற்குப் பிறகும் நான்கைந்து முறை சோபி விசயமாகப் பேசிக் கொண்டோம் தான்.

ஆனால் இன்று வரை சோபியை நாங்கள் போய் பார்த்திருக்க வாய்க்கவே இல்லை ,அவளோ அவளது கணவரோ அடையாறு கேன்சர் இன்ஸ்ட்யூட்டில் இல்லை. அவளது ஊருக்கு தொலை பேசலாம் என்றால் பழைய எண்கள் எதுவும் இப்போது வேலைக்காகவில்லை.எல்லாம் மாறி இருந்தன. அவளை எப்படித் தொடர்பு கொள்வதென்று புரியவில்லை.வீட்டில் கம்பியூட்டர் இருக்குமா என்பதை விட அப்படியே இருந்தாலும் அவளுக்கு அதைப் பயன்படுத்தும் உரிமைகளும் சுதந்திரமும் இருக்குமாவென்பது கேள்விக்குறி.

சோபி ,நான்,மதி,சுபா,பரிமளா , நான்கு பெரும் காலேஜ் நாட்களில் நாங்க நாலு பேர் கணக்காக சுற்றிக் கொண்டிருப்போம் .ஒரே டிபன் பாக்ஸில் நான்கு பேருக்கும் லஞ்ச்,கேம்ப் பில் கலந்து கொண்டாலும் டூர் போனாலும் ஏன் சில சமயம் லீவ் எடுப்பதென்றாலும் கூட சொல்லி வைத்து கூட்டாகச் செய்வது . செமஸ்டர் விடுமுறைகளில் ஒருவர் மாற்றி ஒருவர் வீடுகளில் மொத்தமாய் டேரா போட்டு மொத்தக் கல்லூரிக் கதைகளையும் விடாது பேசி பிழிந்து காய வைப்பது இப்படி இருந்தவர்கள் தான் .இப்போது திசைக்கொருவராய் இருந்தாலும் மற்றவர்களுடன் எப்போதாவது அலைபேசி விட முடிகிறது .


என் பிரியா சோபி உன்னுடன் கல்லூரி நாட்களின் பின் எனக்கும் உனக்கும் குழந்தை பிறக்கும் முன் எண்ணி இரண்டே முறை தான் பேச முடிந்தது.இதற்கு நானும் காரணம் அல்ல ,நீயும் காரணம் அல்ல .எனக்கது புரிந்தே இருக்கிறது.நீயாக தொடர்பு கொண்டால் தவிர உன்னைப் பற்றி அறிந்து கொள்ள முடியாத இந்த வாழ்வியல் சூழலை என்னவென்பது?


கனத்துப் பெயர்கின்றன நிமிடங்கள் .

Monday, July 4, 2011

நகுலன் - நேர்காணல் (பௌத்த அய்யனார்)சொல்லில் இருந்து மௌனத்துக்கு ' எனும் பௌத்த அய்யனாரின் நேர்காணல்கள் தொகுப்பு ஒன்று வாசிக்கக் கிடைத்தது ,தமிழின் சிறந்த படைப்பாளிகளுடனான அவரது நேர்காணல்கள் இந்த தொகுப்பில் பதியப் பட்டுள்ளன ,புத்தகத்தை புரட்டியதில் நகுலனின் நேர்காணல் தட்டுப் பட என்னைக் கவர்ந்த கேள்வி பதில்களை மட்டும் இங்கே பகிர்ந்திருக்கிறேன்.

ஏமாற்றம் ,ஏமாற்றம்,ஏமாற்றம் தான் மிச்சம் - நகுலன் .


திருவனந்தபுரம் Marivanious ' கல்லூரியில் முப்பது ஆண்டுகள் ஆங்கிலப் பேராசிரியராகப் பணி புரிந்து ஓய்வு பெற்று ,திருவனந்தபுரத்தில் வசிக்கும் டி.கே.துரைசாமியின் இலக்கியப் பெயர் நகுலன் .


உங்களோட கதை ,கவிதை ,நாவல் எதை எடுத்தாலும் "சுசிலா" என்ற பெயர் தொடர்ந்து வருகிறதே ?

இதப்பத்தி அசோகமித்திரன் ரொம்பப் பிரமாதமா எழுதிஇருக்கார் ,'சுசிலாங்கறது ' ஒரு அய்க்கண்,ஐக்கண்டா உங்களுக்குத் தெரியுமோ ? ஐக்கண்ணு சொன்னா நாம சரஸ்வதி தேவியை தெய்வமா பூஜிக்கறோம்,அந்த தெய்வாம்சம் தவிர்த்து,அவளோட Body Relation வச்சுண்டா நாம் தொலைஞ்சோம்.ஒவ்வொரு பொண்ணும் ஒரு தெய்வாம்சம்,அதா நான் மறுக்கல,மதிக்கறேன். 'சுசிலா இருக்கான்னு சொன்னா ,அந்த அம்மா மனசு எவ்வளவு வருத்தப் படும் ,இது தெய்வீகமான உறவாக்கும்,அதனால 'சுசிலா இருக்கா இல்ல' 'சுசிலாவின் சிறப்பு சுசிலாவிடம் இல்லை ' இப்படி ஞானக்கூத்தன் எழுதினர்.

எழுத்து பத்திரிகையில் எப்படி எழுத ஆரம்பிச்சிங்க ?

அவாளுக்கு எழுத ஆள் கிடைக்கலை,எழுத்துக்கு நானாத்தான் எழுத ஆரம்பிச்சேன் ,வேற ஒருத்தரும் என்னோட எழுத்த போடா மாட்டா ,அப்போ ஆனந்த விகடனும் போடா மாட்டா .

ஆனந்த விகடனும் போடறதா இருந்தா அனுப்பி இருப்பிங்க இல்ல ?

ஆமா ,ஒன்னும் பிரச்சினை இல்லை,எழுத்துக்கு கதை அனுப்பினேன் ,போட்டா .அதனால தொடர்ந்து எழுதினேன் ,அப்புறம் கா.நா.சு க்கு என்கிட்டே பெரிய மதிப்பு,அவரது 'இலக்கிய வட்டம்' பத்திர்கையில எது எழுதினாலும் போடுவா .'செல்லப்பா'க்கு தான் பெரிய குரு ,தான் சொன்ன படி தான் நடக்கனும்னுட்டு நெனப்பார்.க.நா.சு கிட்ட இது கிடையாது ,அதுக்கப்புறம் 'நடையில் ' கொஞ்சம் எழுதி இருக்கேன் .

அந்தக் காலத்துல உங்களோட எழுத ஆரம்பிச்சவங்க யார் யார்?

ராஜகோபாலன் ,முத்துச்சாமி சிறுகதை எழுதி இருக்கார் ,அப்புறம் தெரு நாடகம் எழுதினர் ,என்ன காரணம் தெரியுமோ ? Board Foundation -லேர்ந்து அனுமத் கொடுத்தா ,அதிலேர்ந்து அவர் திசை மாறினார் .'நீர்மை'ன்னு நல்ல சிறுகதைத் தொகுப்பு வந்திருக்கு ,அதிலேர்ந்து விட்டுட்டார் ,பசுவய்யா எழுதினர் .பசுவய்யா திறமைசாலி.

பிரமிள் ?

Gifted Fellow .அவர் நல்ல திறமையான எழுத்தாளர்,என்னைப் பத்தி சிறப்பா எழுதி இருக்கார்,என்னைப் பத்தி மகா மோசமாகவும் எழுதி இருக்கார் ,நல்ல கவிஞர் , 'கண்ணாடியுள்ளிருந்து ' 'கைப்பிடியளவு கடல்' - இதெல்லான் நேக்குப் பிடிச்சது ,அவருக்கு ரத்த அழுத்தம் கூடி பக்கவாதம் வந்து செத்துட்டார் ,என்ன செய்யிறது.

உங்களை பாதிச்ச தமிழ் எழுத்தாளர்கள் ?

புதுமைப் பித்தன்,மௌனி,லா.ச.ரா,அழகிரி சாமி ,அப்புறம் ஒரு கட்டம் வரை ஜெய காந்தன் .

முதல்ல உங்கள எழுதத் தூண்டியது யார்?

க.நா.சு

ஜெயமோகன் ,தமிழில் நாவல் என்ற வடிவத்தை சரியாகப் பயன்படுத்தவில்லை என்கிறாரே ?

அவர்,தமிழின் முதல் நாவல் 'பிரதாப முதலியார் சரித்திரம்' 'பத்மாவதி சரித்திரம்','கமலாம்பாள் சரித்த்திரம் ' இதை எல்லாம் சரியான முறையில் படித்தாரா? மகாபாரதத்தில் கதை,உப கதை,மிருகங்கள் எல்லாம் வருகின்றன,மகாபாரதத்தை முழுசாகப் படிச்சிருக்காரா? தமிழில் நாவலுக்கென்று தனி உருவம் இருக்கிறதுன்னு அவருக்குத் தெரியுமா? ஆங்கில இலக்கியத்தை முறையாகப் படித்திருக்கிறாரா? எதையும் ஓங்கி அடித்துச் சொல்வது காலப் போக்கில் எடுபடாது .

உங்களுக்குப் பிடித்த இந்திய எழுத்தாளர் ?

மலையாளம் நிறைய வாசிச்சிருக்கேன் ,பஷீர் தான் எனக்குப் பிடிச்ச எழுத்தாளர் ,அவர மாதிரி தமிழ்ல எழுத யாரும் இல்ல,கன்னடத்துல மாஸ்தி வெங்கடேச ஐயங்கார் ,வங்காளத்தில் "ஆரோக்கிய நிகேதனம் " மிகவும் விருப்பமான நாவல்.Friday, July 1, 2011

டூ விட்டு டூ விட்டு பழம் விட்ட வாழ்க்கை ...


//The childhood shows the manAs morning shows the day.~John Milton, Paradise Regained//


// If you carry your childhood with you, you never become older. ~Tom Stoppard//

குழந்தையாகவே இருந்திருக்கலாம்
அம்மாவின் முந்தானையை விடாது பற்றிக் கொண்டு
அப்பாவின் தோள் சவாரி எனக்கு தான் முதல் என்று
தம்பி தங்கைகளிடம் போட்டி போட்டுக் கொண்டு
நானும் வருவேன் என்று முந்திரிகொட்டையாய் வயலுக்கு ஓடி
பாட்டியோடு தூக்குப் போணி மூடியில்
பிடிப் பிடியாய் பப்பு புவ்வா சாப்பிட்டுக் கொண்டு
சுண்டு விரல் பிடித்து
மிளகாய் களத்துக்கும் வரப்பு மேட்டுக்குமாய்
தாத்தாவோடு தோட்டம் அளந்து கொண்டு
பெரிய கேரியர் வைத்த சைக்கிளில்
மாமாக்களோடு சர்கஸ் பார்க்கப் போய்க் கொண்டு
சித்தியோடும் அத்தைகளோடும் வாயாடிக் கொண்டு
தாயமும் பல்லாங்குழியும் கலைத்துக் போட்டு
கூட இரண்டு கொட்டுகளை உபரியாய் வாங்கி
திண்ணையில் உட்கார்ந்து அழுது கொண்டு
அழுத கண்ணீர் காயும் முன்னே
ஊர்ப் பிள்ளைகளோடு தெருமுக்கு காலி இடத்தில்
பாண்டி ஆடிக் கொண்டு பட்டம் விட்டுக் கொண்டு
கிட்டிப் புள் கோலால் தெருவளந்து ஊர்அளந்து
உத்தமக் கண்ணன் கோயில் மார்கழி பிரசாத கியூக்களில்
ராஜியோடும் பாமாவோடும் டூ விட்டுக் கொண்டு
டூ விட்டு டூ விட்டு பழம் விட்ட வாழ்க்கை
ருசியாகத்தான் இருந்தது ... இருக்கிறது
இன்னும் நாக்கின் அடியில் இனிக்கும் தேனாய்
மனம் எங்கும் அந்த நாட்கள் .
நூலறுந்த பட்டங்களாய்
வாலறுந்த தும்பிகளாய் ...


//Old age lives minutes slowly, hours quickly; childhood chews hours and swallows minutes. ~Malcolm de Chazal //

ஆண் மனம் (சிறுகதை)

1. ஆண் மனம் :


சிந்தப்புளி பெரியத்தை வந்திருந்தாள்,பாரைப்பட்டியிலிருந்து சின்னத்தை வந்திருந்தாள், ஒத்தயலில் இருந்து விஜியக்கா கூட வந்திருக்கிறாள் .அம்மா கூடத்தில் புளி தட்டிக்கொண்டே அவர்களோடு பேச்சுக்கொடுத்துக் கொண்டிருந்தாள் ,அப்பா இன்னும் மல்லித் தோட்டத்திலிருந்து வரவில்லை,வரும் நேரம் தான், பசி தாங்க மாட்டார் ,பத்து மணியிருக்கும் சூரியன் உச்சிக்கு ஏறிக்கொண்டிருந்தான் ,பஸ் ஸ்டாப் கடைகளில் வடை ..கிடை என்று என்னத்தையாவது அரித்துப் போட்டுக் கொண்டிருப்பார் இந்நேரம்.

அம்மாவுக்கும் அப்பாவுக்கும் காலையில் நீராகாரமும் துவையலும் தான் பெரும்பாலும் ,எங்களுக்கு சோறும் குழம்பும் இருக்கும் தோட்டத்துக் காய்கறிகளில் ஏதோ ஒன்றை அவித்தோ பொரித்தோ வட்டிலில் போடுவாள் பாட்டி , கண் மங்கிப் போனதில் இருந்து புளிக்குழம்பு வைக்கையில் எல்லாம் ஒரு புழுவாவது செத்து மிதக்கும் ரசத்திலோ ,குழம்பிலோ!


பாட்டிக்கு கண் மங்கிப் போச்சு ,நான் நேரம் முச்சூடும் தோட்டமே கதின்னு கெடக்கேன் ,உங்கப்பா தோட்டம் விட்டா பஞ்சாயத்து போர்ட் திடலே கதின்னு கெடக்காரு ,கட்சிக்கார கூட்டாளிக கூட சேர்ந்து அரட்டை அடிக்கவே நேரங்காண மாட்டேங்குது அவருக்கு. இவன் தினோமும் என்னப் போட்டு குடையுறான்.அக்கா தங்கச்சிக இருந்தென்ன அத்தை மாமாக்க இருந்தென்ன காலாகாலத்துல எனக்கொரு பொண்ணப் பார்த்து கட்டி வைக்க யாருக்கும் மனசாகலன்னு ! ஆச்சு வைகாசி பொறந்தா முப்பது முடியப் போகுது அவனுக்கும்.


நம்ம தோட்டத்துல மடை அடிச்சுகிட்டிருந்த பூச்சிப்பய மகன் இவனுக்கு பத்து வயசு இருக்கையில தான் சாத்தூர் கவருமெண்டு ஆஸ்பத்திரில பொறந்தான்,உங்கப்பா இவன தோள்ள தூக்கிட்டு வர நாங்க போயி பார்த்துட்டு சட்டைத்துணி எடுத்துக் கொடுத்திட்டு வந்தோம் , அந்தப் பயலுக்கு கல்யாணம்னு நேத்து வந்து பத்திரிக்க வச்சிட்டுப் போறான் ;
அம்மா சொல்லச் சொல்ல எனக்கு மனசில் ஓரிடத்தில் லேசாக விட்டிருந்த கீறல் கோணல் மாணலாக நீண்டு புயல் நேரத்து மின்னல் கொடி போல விரிந்து கொண்டிருந்தது,அந்தச் சத்தம் என் காதுகளுக்கு மட்டும் தான் இரைச்சல் ,அவர்களுக்கு கேட்டிருக்க வாய்ப்பில்லை.


பெரியத்தை இரைச்சலை பேரிரைச்சல் ஆக்கும் முனைப்பில் இருந்தாள் ,


"அட ஏன் அண்ணி பூச்சிப்பய மகனுக்குப் போயிட்ட நீ ! என் நாத்தனார் பையன் ரெண்டு பேத்துக்கும் கல்யாணமாகி இப்ப மூத்தவனுக்கு ரெட்டப் புள்ளைங்க ,முந்தாநேத்து நானும் உங்க தம்பியும் மெட்ராசுக்கு போயிட்டு தான வந்தம், புள்ள செக்கச் செவேல்னு ரோஜாப் பூவாட்டம் அம்புட்டு அழகு .


என்மகள கட்டிக்கடான்னு உங்க தம்பி சண்டை பிடிச்சார் ;அவென்..."போங்க மாமா வளர்த்த புள்ளையப் போயி யாராச்சும் கட்டுவாங்களான்னுட்டு இஞ்சினியரிங் படிச்சு வேலைக்குப் போற பொண்ணாப் பார்த்து கட்டிக்கிட்டான் ,கூட வேலை பார்க்கரவலாம் .லவ் மேரேஜாம் அண்ணி...பொண்ணு கிடைக்காத குத்தத்துக்கு அதுவுஞ் சர்தேன்னுட்டு என் நாத்தனார் கம்முன்னு இருந்துகிட்டா ."


அக்கா சொல்றது சரிதேன் ,பொண்ணுகளுக்கு ரொம்ப டிமாண்ட் தானாம் அண்ணி ,சின்னத்தை தன் பங்குக்கு எதையாவது சொல்ல வேண்டுமே என்பதாக ஒரு வார்த்தையை வெளியே விட்டாள்.


அக்கா இன்னும் ஒன்றுமே சொல்லாமல் தான் உட்கார்ந்திருந்தாள் ,
அவளுக்கு தீபாவளிச் சீராக பிறந்த வீட்டிலிருந்து இந்த வருஷம் அரக்குப் பட்டுச் சேலை எடுத்து நீட்டவில்லை என்ற காந்தள் இன்னுமிருந்திருக்கும் போல ,இந்த வருஷம் மல்லி நல்ல விளைச்சல் ,பட்டுச் சேலை எடுத்துக் கொடுத்தால் என்ன நட்டம் என்று அவள் நினைத்திருப்பாள்,


அவளுக்கென்ன தெரியும் வந்த வருமானத்தில் முக்காலும் கடனை பைசல் செய்து கழிந்தது என்று, மிச்சம் மீதி வைத்து தான் இந்த வருஷம் மேலத் தோட்டத்தில் நித்யகல்யாணி போட்டிருக்கிறார் அப்பா.

வருஷம் திரும்பறதுகுள்ள உம்மக சடங்காகி நிப்பா .அப்பப் பார்த்துக்கிடலாம் பிள்ள பட்டுச் சேலையெல்லாம் ,அதுக்குச் செய்ய பணங்காசு பார்க்க வேண்டாமா ?ஒனக்கே எத்தன நாலு ஒடைக்கிறதாம்? அம்மா அவள் மூஞ்சியைத் தூக்கின ஏதோ ஒரு நேரத்தில் ஆற்றாமையில் இப்படிச் சொல்லி விட்டாள் ...என்ன இருந்தாலும் கட்டிக் கொடுத்து அடுத்த வீட்டுக்குப் போன பெண்ணுக்கு ஆயிரம் தான் அம்மா தானே சொன்னாள் என்றாலும் மனசு தாங்குமா ?


என்னவோ ஒப்புக்கு தான் வந்து உட்கார்ந்திருக்கிறேன் இங்கே ... என்பதாகத் தான் இருந்தது கூடத்தில் அவளது இருப்பு.


பெரியத்தைக்கு மகள்கள் இருக்கிறார்கள் ,என் வயதுக்கு சின்னப் பெண்கள் தான் ,ஆனாலும் மாமன் மகனைக்கட்டினால் என்னவாம்? ஆனால் கட்டிக் கொள்ள மாட்டார்கள் படிக்க வேண்டும் என்று சால்ஜாப்பு சொல்லிக்கொள்கிறார்கள் பெற்றதுகள் முதற்கொண்டு நண்டு சுண்டான் வரை. அம்மா கொஞ்ச நாள் கேட்டுப் பார்த்து விட்டு அப்புறம் இது கதைக்காகாது என்று விட்டு விட்டாள் .


சின்னத்தைக்கு ரெண்டும் மகன்கள் தான் ,மூத்தவன் பிளஸ் டூ முடித்து விட்டு படிப்பில் இஷ்டமில்லாமல் அப்பாவின் அரிசி மண்டியில் உட்கார்ந்து விட்டான் ,சின்னவன் பத்தாவது படிக்கிறான். படிப்பு வராத பயலுகள் தான் இவனுகள் பெண்ணாய்ப் பிறந்து தொலைத்திருக்க கூடாதா என்று வர வர புத்தி பேதலித்து தொலைகிறது எனக்கு.


பெரியக்கா மகளை கட்ட எனக்கு இன்னும் இருபது வயசு குறைய வேண்டும் . ஓரோர் சமயம் அம்மாவின் மீதும் அப்பாவின் மீதும் ஆத்திரம் பற்றிக் கொண்டு வரும் .ஒன்று அக்காவுக்கு சீக்கிரமே கல்யாணம் செய்து வைத்திருக்க வேண்டும் ,இல்லாவிட்டால் என்னையாவது லேட்டாகப் பெத்திருக்க வேண்டும் .இப்படி ரெண்டும் கெட்டான் நிலையில் அக்கா மகள் என்று உரிமையாய் பெண் கேட்டு சட்டமாய் கல்யாணம் செய்து கொள்ள முடியாமல் வயது கிடந்தது சீரழிக்கிறதே.


சொந்தத்தில் தான் பெண் கிட்டவில்லை.ஒழிகிறது என்று தெற்குத் தெரு வார வட்டிக்காரன் மகள் மோனியை ரூட் விட்டால் அவள் 'சிரித்துச் சிரித்து சிறையிலிட்டது 'என்னை அல்ல பிரசிடென்ட் மகன் கண்ணனை .அந்த வயிற்று எரிச்சலை ஏன் கேட்கிறீர்கள் ? மூணு வருசமஅய்யா அவள் காலேஜுக்குப் போகையில் எல்லாம் பஸ் ஸ்டாண்டே கதி என்று கிடையாய் கிடந்திருக்கிறேன் .என்னைத் தான் பார்த்துச் சிரிக்கிறாள் என்று எப்படித் தான் நம்பிக் கொண்டிருந்தேனோ!


'அவள் பறந்து போனாளே! ' என்றோ 'எங்கிருந்தாலும் வாழ்க 'என்றோ மன்னித்து சகோதரியாய் ஏற்க முடியவில்லை ,காதலித்த பெண்களுக்கு கல்யாணமாகி விட்டால் அவர்கள் சகோதரிகள் என்று போதிக்கும் தமிழ் படங்களை நான் வெறுக்கிறேன். கனவு காண தமிழ் பட கதாநாயகிகள் யாரும் கிடைக்காவிட்டால் மோனி இப்போதும் என் காதல் தேவதை தான் .அவளுக்கு கல்யாணமானது என் குற்றமா ?

"உன் குற்றமா ...என் குற்றமா ...யாரை நான் குற்றம் சொல்ல?"
இவள்களை விடுங்கள் ஒரு வருஷம் முன்னால் பெரியக்கா கோவில்பட்டியில் வீடு எடுத்துக் கொண்டிருந்தாள் என்று என்னை அங்கே காவல் வைத்தாள்,மாமா சிவகாசியில் பிரிண்டிங் பிரஸ் வைத்திருக்கிறார் ,அவரால் அங்கிருந்து அசையக் கூட முடியாது ,அப்பா தோட்டத்துப் புலி, இவர்கள் எல்லோருக்கும் வேலை கெட்டு விடக் கூடாது என்று வெட்டிப் பயலே என்று சொல்லாமல் சொல்லி என்னை அங்கே மேற்பார்வை பார்க்கப் போட்டார்கள்.

முதலில் வேப்பங்காய் ஜூஸ் குடித்த கதையாகத் தான் வண்டி வண்டியாக அக்கா மாமாவைத் திட்டிக் கொண்டு அங்கே போய் வந்து கொண்டிருந்தேன் ஒரு நாள் விட்டு ஒருநாள். அடித்தது லாட்டரி பிரைஸ் கதையாக புறநகர் பகுதியான அங்கு அங்கொன்றும் இங்கொன்றுமாக எழும்பிய புது வீடுகள் ஒன்றில் புவனா வீட்டுக்காரர்கள் குடி வந்தார்கள் .


ஒரே ஜாதி என்ற சலுகையில் குடிக்கத் தண்ணீர் கேட்டும் வீட்டுக்கு phone போடவும் அங்கே போய் வந்ததில்,புவனாவை ரொம்பப் பிடித்துப் போனது .அவளுக்கும் என்னைப் பிடித்திருந்தது ,இல்லாமலா என்னோடு திருச்செந்தூர்,குற்றாலம் என்றெல்லாம் டூர் வந்திருப்பாள். ,அவளுக்கு என்னை கட்டிக் கொள்ள இஷ்டம் தான். அத்தை மகள்கள் அக்கா மகள் விசயத்தில் எல்லாம் விதி தான் சதி செய்தது என்றால் இப்போது அப்பா குறுக்கே விழுந்து கெடுத்தார்.


" அஞ்சு பவுன் கூட போடா மாட்டாங்களாம்டா.அவ அப்பன் கோவில்பட்டி முழுக்க எங்க சீட்டு கச்சேரி நடந்தாலும் அங்க இருப்பானாம் ,அம்மாக்காரி பலகாரம் செஞ்சு தின்னே சொத்த அழிச்சவலாம் ,இப்பிடியாப் பட்ட இடத்துல பொண்ணு கட்டி உன்ன சீரழிக்கச் சொல்றியா ? நான் வேற பொண்ணு பார்க்கறேன் ,இவள விட்ரு "என்று ஒரே போடாகப் போட்டார்.


புவனா அதற்கப்புறமும் கூட ஒருமுறை என்னைப் பார்க்கையில் "என்னை எங்கயாவது கூட்டிட்டுப் போய் கோயில்ல வச்சு தாலி கட்டுங்க ,நீங்க இல்லனா நான் மருந்தக் குடிப்பேன் என்று கெஞ்சியவள் தான் இப்போது சாத்தூர் வெட்டினரி டாக்டர் ஒருவனை காதலித்து கல்யாணம் செய்து கொண்டு வருஷம் திரும்பும் முன் பிரசவ லேகியம் தின்று கொண்டிருக்கிறாளாம் .


இதை எனக்குச் சொன்ன வேலுத்தேவர் மகன் போண்டா மருதுவை செவிட்டில் அறைந்து விட்டு தோட்டத்து மோட்டார் ரூமில் உட்கார்ந்து குலுங்கிக் குலுங்கி அழுதேன் நான் .


அப்பா கூட படித்தவளாம் ராஜ திலகம் டீச்சர். அவளுக்கு மூணும் பெண்கள் ஒவ்வொருத்திக்கும் 25 சவரன் போடுவேன் என்று இரண்டு மகள்களைக் கரை ஏற்றி முடித்து விட்டாளாம்,கடைக்குட்டி செல்வராணி தான் பாக்கி.அவளை எனக்கு கேட்கலாம் என்று அம்மா ஆசை காட்ட அப்பா பஸ் ஏறி ராஜபாளையம் போய் வந்தார்.


ஐந்தாறு முறை பஸ் காசு தான் விரயமானது ,அந்தப் பெண்ணுக்கு அக்கா மாப்பிள்ளைகள் போல சிங்கப்பூர்,மலேசியாவில் பெட்டி தூக்கும் வெளிநாட்டு மாப்பிள்ளைகள் தான் வேணுமாம் ,விவசாயம் பார்க்கும் என்னையெல்லாம் தலை தூக்கியே பார்க்கப் போவதில்லை என்று விட்டாளாம் அப்பா முகம் தொங்கிப் போக குரல் இறக்கிச் சொன்னார்.


சத்தியமாய் நான் அந்நேரம் புவனாவைப் பற்றி எல்லாம் அப்பாவிடம் ஒரு வார்த்தையும் கேட்கவில்லை.

ஆனால் அப்பா என்ன நினைத்தாரோ அன்றிலிருந்து என்னை அமட்டுவதே இல்லை .


உத்தியோகம் புருஷ லட்சணம் என்று அன்றைக்கு தான் கண்டுபிடித்தவரைப் போல விளைச்சல் வற்றிப் போன கீழத் தோட்டத்தை விற்று விட்டு இந்தாடா எதுனா தொழில் ஆரம்பி என்று சித்துராஜபுரத்தில் கேபிள் டி.வி இழுக்கும் தொழில் செய்ய முதல் தந்து அனுப்பினார் என்னை.


அப்புறமும் ரெண்டு வருஷம் கழிந்து தான் எனக்கு தனலட்சுமி கிடைத்தாள்.


என் தொழிலில் வேர் பிடிக்க வேண்டுமானால் உள்ளூரில் ஏற்கனவே கேபிள் டி.வி தொழிலில் இருந்த ரங்கனை முடக்க வேண்டி இருந்தது ,அவனை உறவாடித் தான் முடக்குவது என்றானது விதி. அவன் என்னை மடக்கிப் போட அவனது மச்சினியை எனக்குக் கல்யாணம் செய்து வைத்தான்.

இப்போது ரெண்டு பேரும் சேர்ந்து கொண்டு சிவகாசியைச் சுற்றி இருக்கும் தாயில்பட்டி,மடத்துப்பட்டி,சுப்ரமணியபுரம்,சசிநகர்,ராமசாமி நகர் வரைக்கும் கூட எங்கள் கொடியைப் பறக்க விட்டு விட்டோம்.

எப்படியோ தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்யனாய் தனத்தைக் கட்டிய பின் முதல் பிரசவத்துக்கு ரங்கலட்சுமி ஆஸ்பத்திரியில் சேர்த்திருந்தேன் . பிரசவ வார்டில் தனம் ,வராண்டாவில் நான் நின்றேன் ...அப்போது தான் புவனா தன் ஏழு வயது மகனை அழைத்துக் கொண்டு வராண்டா திருப்பத்தில் வரும் போதே என்னைப் பார்த்து விட்டால் போலும் .

என் மனதில் சாரல் அடித்தது .


அவள் முகத்தில் காணாததைக் கண்ட சந்தோசம் .
இத்தனூண்டு நாணத்தோடு கிட்ட வந்தவள் மெதுவாய்க் கேட்டாள்

"எப்டி இருக்கீங்க ராதா? "


"நல்லா இருக்கேன் புவனி ,உம்பையனா ? ஸ்கூல் போறானா? "
லேசாக கலங்கத் தொடங்கிய கண்களை இமைகளை அடித்து நீர் விலக்கம் செய்து அவளை சம்பிரதாயமாய் விசாரித்தேன்.


"ம்ம்...ரெண்டாங் கிளாஸ் படிக்கிறான்.


"பொம்பளப் புள்ளயாமே ... வெராண்டாவுல பார்த்தேன் அக்கா சொன்னாங்க ,மகாலட்சுமி பொறந்திருக்கா. "

புவனா பிரசவ ஆஸ்பத்திரியின் பழக்க தோசமாய் சில வார்த்தைகள் உதிர்த்தாள்.

" ம்ம்..."

எனக்கும் கல்யாணமாகி குழந்தையும் பிறந்திருக்கிறது அதை புவனி வாயால் கேட்டதும் ஒரு பெரிய ஆயாசப் பெருமூச்சு கிளம்பியது எனக்குள் நிம்மதியாய்.

பரம நிம்மதி .

அப்படியே வெராண்டாவில் போட்டிருந்த சிவப்பு வினைல் சேரில் சாய்ந்து கொண்டு தூக்கம் போல கண்களை மூடிக் கொண்டேன் .
புவனி போய் வெகு நேரமான பின் ரங்கனின் அலைபேசி அழைப்பில் தான் துள்ளிக் கொண்டு விழித்தேன் .

"சகள எங்க இருக்க நம்ம பயக எல்லாம் பிரியாணி ட்ரீட் கேட்க்ரானுங்க பாப்பா பொறந்ததுக்கு ,சீக்ராம் வாய்யா பெல்லு ஓட்டலுக்கு. "


"வரேன்ய்யா வரேன் "


என்று சிரித்துக் கொண்டே கிளம்பினேன் நான்.