Wednesday, December 16, 2009

மோகனவள்ளியின் புன்னகை...

பாட்டியை சிவகாசிக்கு பஸ் ஏத்தி விடத்தான் நான் பஸ் ஸ்டாண்டுக்குப் போனது .பத்துமணி தேனீ டு சிவகாசி பஸ்ல ஒன்பதே முக்காலுக்கே கூட்டம் நெறியும்.ஒத்தை சீட் கிடைச்சாக் கூடப் போதும்னு வேக வேகமா ஓடிப் போய் பார்த்தா கண்டக்டர் உட்கார்ற சீட் மட்டும் தான் சும்மாக் கெடக்கு ,மித்ததெல்லாம் கசகசன்னு வகைக்கொரு முகறையா நிறைஞ்சிருச்சு ,

அடச்சே வயசாளியாச்சே !எம்மாந்தொலவு நின்னுக்கிட்டே போவும் பாட்டி!

சுத்துமுத்தும் தெரிஞ்ச மூஞ்சி எதுனா தட்டுப்படுதான்னு துலாவுனா எதுவும் ஆப்படல (அகப்படவில்லை)

மூணு மூன்ற மணி நேரம் நின்டுகிட்டே போற வயசில்லை பாட்டி உனக்கு ...எறங்கு நாளைக்கிப் போலாம்னு சொன்னா கேட்குதா பாட்டி?!

அடியே உம்மாமன் மஞ்சக் காமல கண்டு மதுர லா காலேஜுல இருந்து வந்து வீட்ல கிடக்கான்னு போனு மேல போனு போடுதா உன் சித்தி ,இன்னியும் இங்கன தங்குமா எம்மனசு? உசிலம்பட்டி..பேரையூறு...கல்லுப்பட்டின்னு யாராச்சும் இறங்காமயாப் போயிருவாக ?போய்த்தான் ஆகணும் இன்னைக்கு ,போயி பத்தியக் கஞ்சி வச்சிக் கொடுத்து அவனுக்குப் பண்டுதம் பார்த்தாதேன் எம்மனசு ஆறும் !

கிழவி ரவுசு தாங்கலடா சாமி ...சொன்னாக் கேட்குதா பாரேன் ,ஒருநா பிந்திப் போனா உம்மவனுக்கு சித்தி பத்தியக் கஞ்சி காய்ச்சி ஊத்திக்கிட மாட்டாளா? தொண்டைக் குழி வரைக்கும் வந்த எடக்க (இடக்குப் பேச்சு) மடக்குன்னு முழுங்கிட்டு ;

இங்கன நில்லு பாட்டி ஒத்தை சீட் கெடைக்குமான்னு பார்த்திட்டு வரேன்னு முன்னாலயும் பின்னாலயும் பஸ்சுக்குள்ள அலசுனேன்.

அப்பதேன் "ஏ தமிழு ...தமிழு தான நீங்கன்னு ஒரு பொம்பளக் குரலு காதுல வந்து மோதுச்சு" படக்குன்னு நிமுந்து பார்த்தா அட நம்ம மோகினிப் பிசாசு மோகன வள்ளி .

கைல அவள மாறியே (மாதிரி) கன்னங்கரேர்னு ஒன்னரை...ரெண்டு வயசிருக்கும் ஆம்பளப் புள்ள ஒன்னத் தூக்கிகிட்டு நிக்கறா.கலரு கருப்புத்தேன்னாலும் கிழங்காட்டம் இருப்பா மோகனள்ளி ...இப்பயும் அப்பிடித்தேன் இருக்கா ; அதே மங்குணித்தனமாட்டம் சிரிப்பும் கூட ,மங்குணிதனமாப் பட்டாலும் அவ சிரிக்கிறது நல்லாத்தேன் இருக்கும் அந்தச் சிரிப்புக்குப் பேரு புன்னகையாம்.தமிழ் வாத்தியாரு சொல்லுவாரு.நெனப்ப உதறிட்டு ....

வாய்க்கொள்ளாச் சிரிப்போட "ஆமாண்டி...ஆமாண்டி ...நான் தமிழுதேன்...இதாரு உம்மவனா?எத்தனையாவது? உம்மாறியே இருக்காம்பாரு.சொல்லிகிட்டே அவன் கன்னத்தைக் கிள்ளுனேன் .

ரொம்பநாள் ...இல்ல..இல்ல...ரொம்ப வருஷம் செண்டு மொத மொதோ இன்னைக்கித்தேன் பார்த்துக்குறோம் நாங்க .

என்னடி ...எப்படி இருக்க ?எங்கன வாக்கப் பட்ட?எத்தினி பிள்ளைக ? உங்கம்மை ..தங்கச்சிலாம் எங்கன இருக்காக ?நீ எங்கன இருக்க,உம்புருஷன் என்ன செய்றாரு? இம்புட்டும் கேட்கறதுக்குள்ள டிரைவர்ரு சீட்ல ஏறி உட்கார்ந்துகிட்டு "டுர்றூ..டுர்றூங்க" ஆரம்பிச்சிட்டார்.

பொறவு என்ன செய்வ நீ ?!

மோகனள்ளி( மோகன வள்ளி தான் ...பள்ளிக்கொடத்துல இப்பிடித்தேன் கூப்புடுவோம் அவள) புண்ணியத்துல பாட்டிக்கு அவ கூட வந்த ஆம்பள (புருஷனாத்தேன் இருக்கணும்னு நானாவும் நெனச்சிக்கிட்டேன்!)சீட் கெடைக்கவும் உட்கார வச்சிட்டு பத்திரமா ஊருக்குப் போயிட்டு போனு போடு பாட்டின்னு எறங்கி நின்னு கையாட்டிட்டு வீட்டுக்கு பொறப்டுட்டேன் .

ஆட்டோவுல வீட்டுக்குப் போகையில அவள நினைச்சுக்கிட்டே உட்கார்ந்திருந்தேனா ஒன்னொன்னா நெனப்புக்கு வருது .எம்புட்டு நாளாச்சு அவளக் கண்டு ! ம்...எட்டாப்பு வரைக்கும் எங்கூடப் படிச்சவ...என்ன விட அஞ்சாறு வயசு மூத்தவளும் கூட ,பெயிலாகி பெயிலாகி என்கூட வந்து சேர்ந்துகிட்டா எட்டாப்புல.

மோகனள்ளிய நெனச்சஒடனே கூடவே ரகுபதி வாத்தியாரையும் நெனக்காம இருக்க முடியுமா?

மோகனள்ளி அம்மாதேன் அப்பம் எங்க வீட்டு வண்ணாத்தி ...அழுக்குத் துணி எடுக்க அவளும் வருவா...செல நாலு மவளுகளையும் அனுப்புவா.மோகனள்ளி அழுக்குத் துணி எடுக்க வாரயில அழுக்குக்கு வந்த சீலை எதுனாச்சும் பிடிச்சிப் போச்சுன்னா தொவச்சி அத உடுத்திக் கிட்டு வருவா.ரெண்டொரு தடவ அந்த சீலைக் காரவுகளுக்கு தெரியாம இப்பிடிக் கட்டிப் பார்த்துட்டு மறுக்கா துவச்சு கொடுத்துர்றது தான்.

ரகுபதி வாத்தியாரு பொண்டாட்டியும் எங்கூரு பள்ளிக்கூடத்துல டீச்சருதேன் ,அந்தம்மா அஞ்சாப்பு டீச்சர் ,சாரு எட்டாப்பு வாத்தியாரு. டீச்சர் சீலைய அப்பிடி மோகனள்ளி கட்டிட்டு கண்டமனூர் தியேட்டர்ல ராத்திரி மொதோ ஷோ எம்.ஜி.ஆரூ நடிச்ச "தேடி வந்த மாப்பிள்ளை " படம் பாக்கப் போயிருக்கா ஒருக்கா .

எங்கூருக்கும் கண்டமனூருக்கும் நடுல வைகையாத்துப் பாலம் ,பாலத்த ஒட்டி அம்புட்டும் ரகுபதி வாத்தியாரு தோட்டந்தேன்...ராத்திரி தோட்டத்துக்குப் போயிட்டு புல்லட்டுல வீட்டுக்கு திரும்பி வந்துகிட்டிருந்த வாத்தியாரு கண்ணுல "தம் பொண்டாட்டி சீலையைக் கட்டுன மோகனள்ளி பட்ருக்க கூடாது... விதி...அந்நேரம் நல்லாவே கண்ல பட்டுட்டா...

வைகை ஆத்துப் பாலம் ...மேல நிலா

சிலு சிலுண்டு காத்து...,கீழ சல..சலண்டு ஆத்துத் தண்ணீ ...வாத்தியாருக்கு நெனப்பு என்னமோ பண்ணித் தொலைக்க; புல்லட்ட "உர்ரு..உர்ருன்னு உறும விட்டுட்டு வீட்டுக்குப் போய் சேந்தார்.

மறுநா வாத்தியாரு வகுப்புல சயன்சு வீட்டுப் பாடம் பண்ணாம வந்தவுக எல்லாம் எந்திரிச்சு நின்னாக,மோகனள்ளியுந்தேன்...

வாத்தியாருக்கு முன்னால எந்திரிச்சு நிக்கிறதுக்குன்னு ஒரு முறைமை இருந்துச்சு அப்போ .ரெண்டு கையையும் முன்னால கட்டிக்கிட்டுதேன் நிக்கணும்.ரெண்டு கையையும் தொங்கப் போட்டு நின்னா அது மரியாதைக் குறைச்சல் ,ஒத்தக் கைய தொங்க வுட்டு ஒத்தக் கைய மடிச்சு நின்னாக்க அது திமுர்ருனு நெனைச்சிக்கிட்டு கம்பால விளாசிருவாக .

ஒவ்வொருத்தரா ஏன் வீட்டுப் பாடம் செய்யலன்னு கேட்டுக்கிட்டே காதப் பிடிச்சு திருகறது...கைய நீட்டச் சொல்லி பிரம்பால சுளீர்னு ரெண்டு போடறதுன்னு மோகனள்ளி கிட்ட வந்த வாத்தியாரு. என்ன நெனச்சாரோ?

என்னம்மா மோகனவள்ளி உனக்கு நேத்தெல்லாம் எம்.ஜி.ஆரூ படம் பார்க்கப் போகத்தான நேரமிருந்திருக்கும் ..சொல்லிக்கிட்டே மடிச்சிக் கட்டுன அவ ரெண்டு கையையும் எடது கையாள முன்னால தள்ளிப் பிடிச்சிக்கிட்டு ,வலது கை பிரம்பை கீழ போட்டுட்டு வினயமா சிரிச்சாரு.

அவள அடிக்க மாட்டாரு போலன்னு நாங்கள்லாம் பார்த்துக்கிட்டு இருக்கோம்.

அவள அடிக்கல தான் .ஆனாக்க என்ன செஞ்சாரு தெரியுமா? அவ கைய மடிச்சிக் கட்டினத முன்னால இழுத்தாருன்னு சொன்னேன்ல அந்த இடைவெளில வலது கையாள அவ வயித்தப் பிடிச்சு கிள்ளர மாதிரி எங்கனயோ கிள்ளுனாறு.பாவம் மோகனள்ளி நெளிஞ்சிகிட்டு இருந்தா.

என்ன செய்வா அவ?!

அன்னைக்கு மட்டும் இல்ல? அதுலருந்து வீட்டுப் பாடம் முடிக்காம வாற எல்லா நாளுமே வாத்தியாரு அவள மட்டும் அப்பிடித்தேன் கிள்ளுவாரு.அவ ஒரு வாய் செத்தவ ,வீட்ல போயி அம்மை அப்பன்கிட்டல்லாம் எதுவும் சொல்லலை போலருக்கு .

எங்க செட்டுப் பிள்ளைகளும் ...பயலுகளும் மாத்திரம் வாத்தியாரு மோகனள்ளிய இப்பிடிக் கிள்ளுராருன்னு அவங்கவங்க வீட்ல போயி தோணும் போதெல்லாம் சொல்லிட்டு இருந்தோம்,அரசல் புரசலா டீச்சருக்கும் எல்லாருமே தெரிஞ்சி தான் இருக்கும் போல.

ஊர்க்காரவுக வாத்தியாரு அங்கிட்டு இங்கிட்டுப் போகையில ஒரு மாதிரி குசு குசுன்னு பேசி அவகளுக்குள்ள சிரிச்சாகளே தவிர வாத்தியாரே...என்னனு ஒரு கேள்வி இல்ல,ஒரே சாதி சனம்ன்னு ஒத்துமையாத்தேன் இருந்தாக

வாத்தியாரை யாரும் எதுவும் கேட்ட மாதிரி தெரில.

வாத்தியாருக்கு ஒத்தைப் பொண்ணும் மூணு ஆம்பளைப் புள்ளங்களும் இருந்தாங்க,ஆம்பளைப் புள்ளைங்களை விட ஒத்தைக்கு ஒத்தைப் பொம்பளைப் புள்ளைன்னு பொண்ணு மேல டீச்சருக்கும் வாத்தியாருக்கும் அம்பூட்டுப் பாசம் .

வாத்தியாரு மக நிர்மலாக்காவும் ரொம்ப நல்ல மாதிரித்தேன்.

திருழா (திருவிழா) சமயத்துல ஊருப் பிள்ளைகளுக்கெல்லாம் டான்ஸு சொல்லிக் கொடுத்து மேடைல ஆடலும் பாடலும் ஆட விடறதெல்லாம் நிர்மலாக்கதேன். "பொன்னுமணி படத்துல வர சௌந்தர்யா மாதிரி "நிர்மலாக்கா அழகாவும் இருப்பா பதவிசாவும் இருப்பா.

அவ அதிர்ந்து பேசி கண்டதில்லை நாங்க.

பூப்போல பொண்ணுன்னு நிர்மலாக்காவைப் பார்த்து சொல்லலாம் .

வாத்தியாரு தம்பொண்ணு மேல உசுரையே வச்சிருந்தாரு. அப்பைக்கு நூறு பவுனு போட்டு ஒரு லட்சம் ரொக்கம் கொடுத்து மெட்ராஸ்ல கவருமெண்டு இஞ்சினியருக்கு நிர்மலாக்காவக் கல்யாணம் கட்டி வச்சாருன்னா பார்த்துக்கோங்க மக மேல பாசத்தை.

நிர்மலாக்க புருஷன் ஆளு பாக்க நடிகர் கார்த்திக் மாதிரி (பொன்னுமணி படத்தப் பார்த்த பாதிப்பு ஊர்க்காரவுகளுக்கு) ஜம்முன்னு இருப்பாராம் பாட்டி சொல்லக் கேட்ருக்கேன்.

அக்காவக் கட்டிக் கொடுத்தப்புறம் எட்டாப்பு முடிஞ்சு ஒன்பதாப்புக்கு நான் தேனி டவுன் ஸ்கூல் போயிட்டேன். அப்புறம் மோகனள்ளி ..வாத்தியாரு கதை என்னாச்சுன்னு விவரமேதும் தெரியலை.

இன்னைக்குதேன் பாட்டிய பஸ் ஏத்தி விடப் போகைல பார்க்குறேன் அவள.

ம்...பெருமூச்சோட ஆட்டோவுக்கு காச கொடுத்துட்டு வீட்டுக்குள்ள நுழையறேன்.

அப்பா அவசர அவசரமா எங்கனயோ கெளம்பி கிட்டு இருந்தவரு என்னப்பார்த்த ஒடனே ;

நல்ல வேலை வந்தியா ...வா..வா...

சிலிண்டருக்குப் போன் பண்ணிச் சொல்லி பத்து நாளாச்சு ,இப்ப சிலிண்டர்காரன் வாற நேரம் தான்.பணம் கடுகு டப்பாவுல இருக்கு எடுத்துக் கொடுத்துட்டு வாங்கி வை. உங்கம்மா நம்மூருக்குப் போயிருக்கா சாயந்திரந்தேன் வருவா.

ஏன் என்னாச்சுப்பா திடீர்னு இன்னைக்கு நம்மூருக்குப் போயிருக்காங்க அம்மா?

ஓ ...ஒனக்கு விஷயம் தெரியாதில்ல ...

நம்ம ரகுபதி வாத்தியாரு மருமகனுக்கு ஆக்சிடென்ட் ,ஸ்பாட்லயே உசுரு போயிடுச்சாம்...

பாவம் மெட்ராஸ்ல இருந்து லீவுக்கு ஊருக்கு வந்த மனுஷன் மாமனாரு புல்லட்டை எடுத்துக் கிட்டு பொண்டாட்டியை படத்துக்கு கூட்டிட்டுப் போனானாம். பொணமாதேன் திரும்பி வந்திருக்கான்.

ஒரே ஊரு..சொந்தக் காரவுக வேற...அதான் உங்கம்மா தகவல் சொல்ல வந்த உங்கத்தை கூட முன்னால பஸ்ல போறா.நானும் ஒரு எட்டுப் போயிட்டு வந்துறேன். நம்ம கடைல தான் பலசரக்கு வாங்குவாரு வாத்தியாரு. ரெண்டு பேரும் போகலன்னா தப்பாப் போயிடும் .

ஒரு நிமிஷம் திக்குன்னு ஆயிருச்சு எனக்கு.

கண்ல நிர்மலாக்கா ஊர்ப் பிள்ளைகளுக்கு டான்ஸு சொல்லிக் கொடுத்தது...அவ பேசுனது..சிரிச்சது...திருழாக்கு சுட்ட முறுக்கு எடுத்து பிள்ளைகளுக்கு கொடுத்து திங்கச் சொன்னது எல்லாம் படமா ஓடுது.

பாவம்ப்பா நிர்மலாக்கா ...

ம்...பாவந்தேன் ...அந்தப் புள்ளைக்கும் நல்ல அடியாம் வண்டில இருந்து கீழ விழுந்ததுல.

நல்ல வேலை பிள்ளைய டீச்சர் கிட்ட விட்டுட்டு புருஷனும் ..பொண்டாட்டியுமாதேன் வண்டில சினிமாக்குப் போனாகளாம்,அந்த மட்டுக்கும் அந்தச் சின்ன உசுரு தப்பிசுச்சு. அப்பா நெடுமூச்சாய் சொன்னார்.

ச்சை ...மனசுக்கு ரொம்பவும் பாரமா போயிருச்சு.

அப்பா கெளம்பிப் போன ஒடனே கொஞ்ச நேரம் டி.வியப் போட்டுக்கிட்டு உட்கார்ந்தேன் .

கொஞ்ச நேரத்துல பக்கத்து வீட்டு மணிமேகலை வந்தா ...தயிருக்கு உரை குத்த தயிர் கேட்டு ...

இங்க அவ எனக்கு நல்ல பிரெண்டு ...அவ கிட்ட மோகனள்ளி கதைய ..ரகுபதி வாத்தியாரு கதைய ...நிர்மலாக்க புருஷன் ஆக்சிடெண்ட்ல செத்த கதைய சொல்லிக்கிட்டு இருந்தேன் மறுக்கா ...

அவதேன் திடீர்னு சொன்னா "அந்தப் பொண்ணுக்கு செஞ்ச பாவம் தான் வாத்தியார் மகளுக்கு இப்பிடி ஆகி போச்சோ !?

எனக்கு திக்குன்னு ஆயிருச்சு.

என்ன மணி இப்பிடிச் சொல்லிட்ட நீ ?

என்னவோ தோனுச்சு சொன்னேன் .சரி நான் வரேன் அண்ணன் சாப்பாட்டுக்கு வர நேரம். எந்திரிச்சுப் போயிட்டா அவ.

மணி ஒன்னு ..ஒன்னரை சாப்ட்டு ஒரு தூக்கம் போடலாம்னு பார்த்தா போனு அடிச்சது .

போயி எடுத்தா பாட்டி கொரலு கேட்குது

தமிழு நான் பாட்டி பேசுறேன்.

பஸ்சு பிரேக் டவுனு ஆயிருச்சு சீலுத்தூர் (ஸ்ரீவில்லி புத்தூர் ) கிட்ட மல்லி (இதுவும் ஊர் பேர் தான்)ரோடுல ...வேற பஸ்சுல ஏத்தி விடறேன்னு சொல்லிருக்கா உம் பிரெண்டு மோகன வள்ளி,இங்கன அவ சொந்தகாரவுக வீடு இருக்குன்னு கூட்டிட்டுப் போயி காப்பித் தண்ணீ வச்சிக் கொடுத்தா,அவுக வீட்டுப் போனுல இருந்து தான் பேசுறேன்.

இதென்ன கூத்து ?! என்று பயந்து போய் ...நான் தான் நாளைக்குப் போலாம்னு சொன்னேன்ல பாட்டி ,கேட்டியா நீ ? இப்பம் பாரு என்னாச்சுன்னு ... நான் பதற .

அடி நீ இருடி ...சும்மாப் பதறாத அதான் இந்தப் புள்ள மோகனவள்ளி இருக்கா இல்ல ? அவ திருத்தங்கல் போறவ ..அங்கன தான் புருஷன் வீடாம். என்னைக் கொண்டு சிவகாசி பஸ் ஸ்டாண்டுல இறக்கி விட்டுட்டு அப்புறம் அவ வீட்டுக்குப் போறேன்னு சொல்லியிருக்கா .நீ பயப்படாத. பாட்டி சொல்லச் சொல்ல ...

மோகனவள்ளி கிட்ட போனக் கொடு நான் பேசறேன்னேன் .

அவ புள்ளக்கி கால் கழுவி விடப் போயிருக்கா ,பஸ்சு வருதாம் நான் அப்புறம் பேசறேன் .'டொக்' போனை வச்சிட்டுப் பாட்டி போயிருச்சு.

அப்புறம் அன்னைக்குச் சாயந்திரம் வரை பாட்டி எப்படா...ஊருக்குப் போய் சேர்ந்து "நல்ல படியா வந்து சேந்துட்டேன்னு போனப் போடுமோ நு காத்துக் கிட்டிருந்தேன் நான்.

ஒரு வழியா அஞ்சு அஞ்சரை இருக்கும் போனு அடிச்சுச்சு. எடுத்தேன்

பாட்டிதேன்...

தான் பஸ்சுல ஏறினதுல இருந்து பிரேக் டவுன் ஆன கதை ,கூட வந்த ஆளுங்க கதை ...ஊருக்குப் போயி சேர்ந்த கதைய எல்லாம் சொல்லி முடிச்சிட்டு கடைசில எதோ உம் பிரெண்டு கூட வந்தாளே நல்லதா போச்சு. இல்லாட்டி நடு ரோட்டுல வாய்க்கு ருசியா காப்பி கிடைக்குமா?

பொண்ணுன்னாலும் பொண்ணு இவ தான் பொண்ணு ,எம்புட்டு பொறுமை !ஐயோ அவ மகன் பாவம் படுத்தி எடுத்துட்டான் பஸ்சுல ,எல்லாத்தையும் சகிச்சுக்கிட்டு மூஞ்சி கூட சுளிக்காம அவ பாட்டுக்கு சிரிப்பு மாறாம வாரா...



சிரிச்சாளா !?



எல்லாத்துக்கும் சிரிப்பு மாறாம இருக்காளா ...இருப்பாளே ...அவ இருப்பா ?!



ரகுபதி வாத்தியார் மருமகன் ஆக்சிடெண்ட்ல செத்ததைக் கேட்டாலும் சிரிப்பு மாறாமத் தான் இருப்பாளோ!

நெனப்ப விரட்டி விட்டுட்டு துஷ்டி கேட்டுட்டு வாரவுகளுக்கு தலை முழுக வெந்நி வைக்க சமயக்கட்டுக்குப் போனேன் நான்.

அவுக வாற நேரமாச்சே.

இன்னிக்குப் பொழுது இப்பிடி முடிஞ்சதாக்கும்.

பிஞ்சுகள் ...

மாய மாயா லோகங்களின்
மடிப்புக் கலையா பிரதியாக
மருட்டும் மிரட்டும் மகோன்னத பூமிப் பந்து
பச்சைக் கிளிகளின் பிய்த்து எறியப்பட்ட
சிறகுகளின் கனமேந்தி உருளுகையில்
துடைத்தெடுத்த பளிங்குத் தரை,
ஏடு படிந்து போன பாசாங்காய்
ஏசுநாதரின் சிலுவையில் தோய்ந்துறைந்த
செம்பட்டை ரத்தம்
நிஜக்குளிர் அலுத்துப் போய்
வெம்மை தேடி அலைகையிலே
இன்னுமொரு பிஞ்சு
சர்ப்ப பிசாசின்
இச்சைகளின் வடிகாலாகுமோ!