Tuesday, August 10, 2010

ஹமீதாக்கா ...

நட்டநடு நிஷி ஹமீதாக்கா கதவைத் திறந்து போட்டு விட்டு வாசலில் இறங்கி இடுப்பில் உரமாய் கைகளை ஊன்றி நின்று கொண்டு ஹோவென்று வெறிச்சோடிப் போயிருந்த தெருவை அமானுஷ்யமாய் பார்த்துக் கொண்டிருந்தாள்.


ஹமீதாக்காவுக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை,அவளின் அக்கா ரஷீதாவை போன வருஷம் தான் மதுரையில் கட்டிக் கொடுத்தார்கள் ,கல்யாணமான மாயத்தில் ரசீதாவுக்கு உம்மா வீடு இல்லைஎன்றானது,வாப்பா போட்ட நகை பத்தலையாம்.ஒரு பொண்ணைக் கரை சேர்க்கக் கொள்ளவே வாப்பாவுக்கு நெஞ்சு வலி கண்டு விட ஆஸ்பத்திரிக்கும் வீட்டுக்குமாய் நடை கழண்டு கொண்டிருந்தது.

குடி இருக்கும் வீடும் சொந்த வீடில்லை வாடகை வீடு தான்,வாப்பா முன்னைப் போல சரி வர உத்தியோகத்துக்குப் போக ஏலாத நிலையில் ஆறு மாத வாடகை பாக்கி வேறு அச்சுறுத்திக் கொண்டிருந்தது.

உம்மா அழுது அழுது அதிலேயே கரைந்து விட்டவள் போல எந்நேரமும் வாப்பாவின் கட்டிலருகே ஒரு சேரைப் போட்டுக் கொண்டு உறங்கியும் உறங்காத நிலையில் ஏதோ பேருக்கு ஜீவித்திருப்பதைப் போல எந்தப் பிரஞ்சையும் இன்றி அவள் பாட்டுக்கு இருந்தாள்,நல்ல நாள் பொல்லாத நாளுக்கு ஒரு புதுத் துணி கிடையாது,வாய்க்கு ருசியாய் ஒரு மட்டன் பிரியாணி ,அடச்சே ...பிரியாணியாம்...பிரியாணி இந்தக் கேடு கேட்ட கெண்டை மீனுக்கு கூட வக்கில்லை இப்போதெல்லாம் ,ஒரு ரசம் வைத்து உளுத்துப் போன உப்புக் (வாளைமீன்) கருவாட்டை சுட்டு வைப்பது தான் ஹமீதாக்காவின் பிரமாத சமையல் வேலை,இது தவிர அவள் நாளெல்லாம் பொழுதுக்கும் சும்மாவே தான் இருந்தாள்.

ஏழாம் மாதமும் வாடகை பாக்கி நிற்கவே விடிந்த கொஞ்ச நேரத்தில் எல்லாம் வீட்டுக்காரி ராஜம் டீச்சர் உம்மாவிடம் வந்து ,

"மாமி நீங்க வேற வீடு பார்த்துகிடுங்க ,என் மக பிரசவத்துக்கு வரா பாம்பேல இருந்து,தொணைக்கு எங்க அம்மா வருவா,எங்க வழி உறமுறைங்க மருமகன் வழி சொந்தக்காரவுக வேற ரொம்பப் பேரு வரப் போக இருப்பாங்க.எங்க போர்சன்ல எட வசதி பத்தாது.இந்த வீட்ட ஒழிச்சுக் கொடுத்திங்கன்னா தான் சரிப்படும் ,ஆனது ஆச்சு,இந்த கொற மாசத்துக்கு இருந்துக்கிடுங்க,தாயா புள்ளையாப் பழகிட்டு டீச்சர் இப்பிடிச் சொல்லுதேன்னு நெனைக்காதீக.எங்களுக்கு வீடு வேணும் ,என்ன நாஞ் சொல்றது? அம்புட்டுதேன்"

சொல்லி முடித்து சனி விட்டது பாவனையில் அவள் போய் விட்டாள்.

டீச்சர் சொன்னதைக் கேட்ட மாயத்தில் உம்மாவுக்கு கண்ணைக் கட்டிக் கொண்டு வர ,தலையைப் பிடித்துக் கொண்டு ,

"ஹமீதா அரை லோட்டா கடுங்காப்பி போட்டு எடுத்தா,தலையச் சுத்துதுடி "

என்று மறுபடி கட்டிலில் தலையை முட்டுக் கொடுத்து சரிந்து விட்டாள் .வாப்பா தூங்கவில்லை,ஆனால் தூங்குவதைப் போல கண்களை மூடிக் கொண்டிருந்தார்.இல்லா விட்டாலும் தான் அவர் அதைத் தவிர என்ன செய்து விடப் போகிறார்?

ஹமீதாக்காவுக்கு நியாயப்படி உம்மாவின் மீதும் வாப்பாவின் மீதும் கொள்ளை கொள்ளையாய் கோபம் இருந்தாலும் அவர்களை எதுவும் சொல்ல முடியா இயலாமை குடைந்து கொண்டிருந்தது,

"ரசீதாவ கட்டிக் கொடுத்தாப்பில என்னையும் எங்கனயாச்சும் கட்டிக் கொடுத்திருங்க..."

என்று மூன்று மாதங்களுக்கு முன் தொணதொணத்துப் பார்த்தாள்.உம்மாவுக்கு அழுவதா சிரிப்பதா என்று புரியாத நிலை!

"ஏய் ...இவளே,ஒனக்கு நிக்ஹா பண்ணிப் பார்க்கற நெலமையிலயா நாங்க இங்கன இருக்கம்?! வாப்பாவுக்கு மொதல்ல நெஞ்சு வலி குணமாகட்டும் ஹமீதா ...பெறகு பார்ப்போம்.இப்பமென்ன ஒனக்கு இருபது வயசு தான ! "

உம்மா மெல்ல முணு முணுத்துக் கொண்டு வாப்பாவை ஆஸ்பத்திரிக்கு கிளப்பிக் கொண்டு வெளியேறினாள்.

அப்புறமும் ஹமீதாக்கா விட்டு விடுவாளா ?

அவள் பாட்டுக்கு தொண தொணவென்று நச்சரிக்க உம்மாவுக்கு எரிச்சல் வந்தது;

"இந்தாருடி ...ஏன் கெடந்து நிக்ஹா பண்ணிக்க இந்த அல அலையற ?! "

சுள்ளென்று உம்மா கேட்க ஹமீதாக்காவுக்கு பளாரென்று கன்னத்தில் அறை பட்ட வலி நெடு நேரம் இருந்தது.அதற்குப் பிறகு அவள் நிக்ஹா பேச்சை எடுக்கவே இல்லை.

உம்மாவின் பொட்டு பொடுசு நகைகள் கற்பூரமாகி குடும்பத்தின் வறுமைத் தீயில் எரிந்து பதங்கமாக ஹமீதாக்கா தெரு வாசலில் சும்மா வேடிக்கை பார்க்க கூட வந்து நிற்க முடியாதவளாகிப் போனாள்.அவளுக்கு காது மூக்கில் கூட பொட்டுத் தங்கம் இன்றி பிறர் கண்ணில் காட்சிப் பொருளாவது ரொம்ப அவமானமாகத் தெரிந்தது.

முன்னெல்லாம் ராஜம் டீச்சரின் அம்மா ஊரிலிருந்து வந்தாளானால் ஹமீதாக்கா அந்த முதியவளுடன் சரிக்குச் சரி வாயடிப்பாள்.அந்தம்மாள் பொல்லாதவள் ,ஆனாலும் மகள் பள்ளிக்குப் போய் விட்டால் அப்போதெல்லாம் அவசரத்துக்கு கடைக்குப் போக,ஆஸ்பத்திரிக்குப் போக,முட்டி வலி தைலம் தேய்க்க இப்படி பொழுதை தள்ள ஹமீதாவை தான் நம்பி இருந்தாள் அந்தப் பாட்டியம்மாள்.


அதனால் ஹமீதாக்காவின் மீது நிஜமாய் பாசமே இல்லையென்றாலும் கூட தனக்கு ஹமீதாவென்றால் தனிப் பாசம் என்பதாய் எல்லோரிடமும் காட்டிக் கொள்வாள்,இது ஹமீதாக்காவுக்கும் தெரிந்தே தான் இருந்திருக்கக் கூடுமோ என்னவோ! ஆனாலும் அவள் பாட்டியுடன் மிகுந்த விருப்பத்தோடு தான் எப்போதும் பேசுவாள்,பாட்டி அளந்து விடும் ஊர்க் கதைகள் அதற்கொரு காரணமாய் இருந்திருக்கலாம் .

அந்தப் பாட்டி இன்றைக்குக் காலையில் நிலக்கோட்டையில் இருந்து வந்து இங்கே மகள் வீட்டில் இறங்கி விட்டாள் போலும் ,அடுத்த போர்சனில் பேச்சு களேபரமாய் இருந்தது.இருட்டறையில் அடைந்து கிடந்ததைப் போல புழுங்கிப் போயிருந்த ஹமீதாக்காவுக்கு முகத்தில் லேசாய் குளிர் காற்று பட்டார் போல கொஞ்சம் போல சந்தோசம் எட்டிப் பார்த்தது.


ஆனால் வீட்டை காலி செய்யச் சொல்லி விட்ட நாளில் இருந்து சும்மாவேனும் டீச்சர் வீட்டுக்குப் போய் வருவது நின்று விட்டபடியால் ,பாட்டியே வந்து பேசினால் ஒழிய தான் அங்கே போவதற்கில்லைஎன பேசாமல் சமையல் கட்டின் பின் கதவை திறந்து வைத்துக் கொண்டு மீந்து விட்ட பழைய சோற்றை வட்டிலில் இட்டு செத்துப் போன நாக்கை அரிந்து கீழே வீசி விட்டால் தேவலாம் போல கண்ணை மூடிக் கொண்டு பெரிய பெரிய கவளங்களாக உருட்டி உருட்டி முழுங்கிக் கொண்டிருந்தாள்.அன்றைக்கு அந்த பாழாய்ப் போன உப்புக் கருவாட்டுக்கும் வழி இல்லாத நிலை.

பெரிதாய் வீட்டை காலி பண்ணச் சொல்லி விட்டாள் ராஜம் டீச்சர் ,வீடென்னவோ இப்போதே ஏற்கனவே கழுவித் துடைத்து காலி செய்தார் போலத் தான் இருக்கிறது !

இருக்கும் ஒரே நாடாக் கட்டிலை மடக்கி வாப்பா தலையில் வைத்துக் கொண்டால் அதன் மேலேயே ஓரம் நைந்த இரண்டு கோரைப் பாய்கள் அரிசிக் கடைபையால் உறை தைத்துப் போட்ட மூன்று தலையணைகள்,ஒரே நைலான் மூட்டையில் கட்டி வைத்து விடத் தக்க சில தட்டு முட்டுச் சாமான்கள்,மிஞ்சிப் போனால் துணிமணிகள் அடங்கிய ஒரு ஜாதிக்காய் பெட்டி எஞ்சும் ,அதை ஹமீதாக்காவே கையில் சுமந்து கொண்டு போய் விடலாம்,கிழிந்தது ,ரொம்பப் பழசானது என்று கழித்தால் மொத்தமே பத்து துணிகள் தான் தேறும் அந்தப் பெட்டியில் பிறகென்ன! தூக்கிச்சுமந்து கொண்டு இப்போதே கூட நடையைக் கட்டி விடலாம்,அதொன்றும் பெரிய காரியமில்லை தான்,ஆனால் போவதற்கு போக்கிடம் எது?!

இந்தக் கேள்வி தான் பூதம் போல வீட்டில் மூவரையும் பயம் காட்டிக் கொண்டிருந்தது.

ரஷீதா வீட்டுக்கு ...!

நினைத்தமாத்திரத்தில் ஹமீதாக்காவுக்கு பழைய சோறு புரையேறிக் கொண்டு விக்கியது.சொம்புத் தண்ணீரை மடக் மடக்கென்று குடித்து விட்டு உச்சந்தலையை இடக்கையால் படீர் படீர் என தட்டிக் கொண்டாள்.கண்ணில் நீர் வரும் அளவுக்கு புரையேறி தொண்டை கமறியது ;

என்னடி பொண்ணு நீ ! இப்பிடியா புரை ஏறிப் போற அளவுக்கு வட்டிலப் பார்க்காம சோத்த முழுங்குவ !? பாட்டி தான் ...ஹமீதாக்காவைத் தேடிக் கொண்டு சமையல் கட்டுக்கே வந்து விட்டாள்.

சம்பிரதாயத்துக்காக ...

"வாங்க பாட்டி ...இப்ப தான் வந்தீகளா?"

என்று கேட்டுக் கொண்டே
சாப்பாடு கொள்ளாமல் வட்டிலை கொல்லை கிணற்றடியில் போட்டு விட்டு கை கழுவிக் கொண்டு வந்தாள் ஹமீதாக்கா .

அதற்குள் கால் மூட்டைப் பிடித்துக் கொண்டு கொல்லைப் படிக்கட்டில் அமர்ந்த பாட்டி;
"அடியாத்தி வலி இந்தப் பிடுங்கு பிடுங்குதே ...இந்தா இந்த தைலத்தை போட்டு கொஞ்சம் நீவி விடேண்டி அமீதா "
ஹமீதாக்கா பாட்டில் மூடியை திறந்து கொண்டிருக்கும் போதே ... பாட்டி ;
"ஏன் அமீதா ...வீட்டக் காலி பண்ணச் சொல்லிப்பிட்டாளாமே எம்மக,வந்து எறங்குனதும் அவ சொன்னதை கேட்டோடனே எனக்கு ரொம்ப மனத் தாங்கலா ஆயிடுச்சுடி அமீதாக்குட்டி "

"என்னடி இது உங்களுக்கு வந்த கேடு! என்னப்பனே ஈஸ்வரா கிணற்றுத் திண்டில் சாய்ந்து கொண்டு பாட்டி கொஞ்சம் சோகம் போலக் காட்டிக் கொண்டு தான் இதை சொல்லி இருக்க கூடும்;

ஹமீதாக்கா பதில் சொல்வாள் என்று பாட்டி நினைத்திருக்களாம். பதிலுக்காக அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள் ,

"காலி பண்ணிட்டு எங்க போகப் போறீங்க ரஷீதா வீட்டுக்கா !?"

அடுத்த கேள்வி பாட்டியிடமிருந்து ;

"பேசாம ரஷீதா வீட்டுக்காரனுக்கே ஒன்னையும் கட்டிக் கொடுத்து குடும்பமா அங்க போய் உட்கார்ந்துக்கலாம்னு நினைக்கார உங்க வாப்பா !?" துப்புக் கெட்ட மனுசன்னா அது உங்க வாப்பா தான் . விசமத்துடன் பதிலை எதிர்பாராமல் பாட்டி பேசிக் கொண்டே இருக்கக் கண்டு ;


ஹமீதாக்காவுக்கு பாட்டியை தர தரவென இழுத்து வெளியில் தள்ளி கதவைப் பூட்டி விட்டு ஒரு மூச்சு ஓவென்று அழுது ஓயவேண்டும் போல ஒரே ஒரு கணம் தோன்றி மறைந்தது .

மிஞ்சி மிஞ்சிப் போன வாடக எம்புட்டு தரிங்க மாசம் 600 ரூவா அதுக்கும் ...ஆறு மாசமா ததிங்கனத்தோம்னா எப்டி சகிப்பாங்க....அதான் போகச் சொல்லிப்பிட்ட போல எம்மக ...சரி விடு யாரோ மிலிட்டரிக் காரன் குடும்பமாம் 1200 ரூவா க்கு சரினுட்டாங்கலாம் அடுவான்சு 20 ,000௦௦௦ ரூவான்னா பார்த்துக்கோ ,
உன் வாப்பா தருவாரா அவ்ளோ பணம்?!

நான் சொல்றதக் கேளு புத்தியாப் பொழைக்கப் பாரு.பேசாம ரஷீதா வீட்டுக்கு போய்டுங்க ,முடிஞ்சா அவ புருஷனையே கட்டிக்கோ ...ஊர் உலகத்துல நடக்காத கதையா!

அதற்கும் ஹமீதாவிடம் பதிலில்லாமல் போக

"என்னடி அமுக்கினி மாதிரி பேசாம உட்கார்ந்திருக்க ...சத்தமே காணோம்"

.பாட்டி என்னவோ ஹமீதாவுக்கு தான் நல்லதொரு உபகாரம் செய்து விட்ட நினைப்பில் சற்று உரக்கவே கேட்டு ...மு...டிக்..க....கூட இல்லை ;

அரிசி புடைக்கும் முறத்தால் ஹமீதா பாட்டியை முழங்கால் ...தோள்பட்டை தலை என்று பேதம் பிரிக்கவே பிடிக்காதவள் போல சாத்து சாத்தென்று சாத்த ஆரம்பித்திருந்தாள் .

அரண்டு போன பாட்டியின் ஓலம் தெரு முக்கு தாண்டி கேட்டிருக்க கூடும் .

ஆனால் அசரவில்லை ஹமீதாக்கா.

தடுக்க வந்த உம்மாவுக்கு காலால் எட்டி ஒரு உதை. வாப்பாவுக்கு நல்ல செந்தமிழில் அர்ச்சனை ,இத்தனைக்குப் பின் கிட்டே வர ராஜம் டீச்சர் என்ன பைத்தியமா!?

ஹமீதாக்காவுக்கு என்ன ஆச்சு!

ஒருத்தருக்கும் தெரியாது தான் .

ஆனால் தெரிந்தார் போலத் தான் தங்களுக்குள் தினம் பேசிக் கொள்கிறார்கள்.

"அவளுக்கு பேய் பிடிச்சிருக்கு ."

அவளுக்கு சித்த பிரமை ...

அவளுக்குப் பைத்தியம்...

அவள முனி அடிச்சிருச்சு etc ...etc .

நீங்க சொல்லுங்க ஹமீதாக்காவுக்கு என்ன தான் ஆச்சு ?!