Thursday, February 24, 2011

விகடன் இந்த வாரம் -வாசகர் வாய்ஸ்



வெள்ளிக் கிழமை காலை வரும்போது என் டேபிளில் விகடன் இல்லைன்னா ...பயங்கரமாக் கோபம் வரும்.அது ...எங்கயாவது கூட்டிட்டுப் போறதா சொல்லிட்டு லவ்வர் வராம வெயிட் பண்றப்போ வர கோபம் ." கீழ படிச்சிட்டு இருக்காங்க சார்'ங்கரதைக் கேட்டா ,ஏதோ நம்ம ஆளை இன்னொருத்தன் தள்ளிட்டுப் போயிட்ட மாதிரி டென்சன் ஆகும் .ஏன்னா இத்தனை வருசங்களில் எனக்கும் விகடனுக்குமான தொடர்பு அவ்வளவு லவ்வபிள்! (இதை சொன்னது யார் தெரியுமோ?! )


அறிவுமதியின் மழைப்பேச்சில் இந்த முறை மணியம் செல்வத்தின் ஓவியம் கியூட் (அடடா...இது இன்பத் தமிழ் :)


"எல்லோரும் ஏன் எழுத்தாளர் ஆக வேண்டும் ? வேறு ஏதாவது ஆகலாமே!" ;))) இதை சொன்னது யார் தெரியுமோ?! விடைகள் கடைசியில் .


இணையத்தில் எழுதுவதை நான் அதிகம் வாசிப்பதில்லை,ஆனால் எல்லோருக்குமே எழுத்தாளராக வேண்டும் என்று ஆசை இருப்பது மட்டும் தெரிகிறது .

ஞானபீட விருது கொடுப்பதில் எல்லாம் ஏகப் பட்ட லாபி இருக்கிறது ,குறிப்பாக கன்னட எழுத்தாளர்களுக்கும் மலையாள எழுத்தாளர்களுக்கும் அதிகம் விருதுகள் கொடுப்பதில் லாபி இருக்கிறது என்று நினைக்கிறேன்,சிலர் "எனக்கு தாமதமாக கிடைத்த விருது " என்று அங்கலாய்த்துக் கொள்கிறார்கள் .அது தேவை இல்லை என்று நினைக்கிறேன்.


ஒரு தெருக்கூத்துக் கலைஞருடன் தங்கர் பச்சானின் உரையாடல் நிறைவாய் இருந்தது வாசிக்க.


( "மாற்றம் வந்தாதானேமக்களுக்கு பெனிஃபிட்டு !" )
தெருக்கூத்து நாடகங்கள் எதையும் நான் முழுதாகப் பார்த்ததில்லை இதுவரை. முன்னிரவு முதல் விடிகாலை வரை நடத்தப் படும் என்றால் இப்போது அதை யார் அத்தனை நேரம் செலவழித்து உட்கார்ந்து பார்க்க முடியும்! ? இந்த உரையாடலில் அந்தக் கலைஞர் சொன்னதைப் போல தெருக்கூத்து நாடகங்களைப் பார்க்க கிராமத்து ஜனங்களை விட நகர மக்களுக்கு ஆர்வம் அதிகம் தான் ஆனால் நேரம் விழுங்குவது மிகப் பெரிய மைனஸ் அந்தக் கலைக்கு. தெருக்கூத்தை நவீன மயமாக்கி முன்பு டி.டி யில் ஒரு மணி நேர நாடகங்களாக வருமே ராஜராஜ சோழன் குந்தவை நாடகங்கள் அப்படி குட்டிக் குட்டி நாடகங்களாகப் பகுத்துப் போடடால் ஒரு வேலை சோர்வின்றி பார்க்க கூட்டம் கூடலாம்.


வீட்டுக்கு வீடு தொலைக் காட்சிப் பேட்டிகள் அற்றுப் போய் பொழுது போக்கிற்கு பஞ்சாயத்து டி.வி க்களை நம்பி இருந்த காலத்தில் ஜனங்கள் பாவைக்கூத்தையும் ,தெருக்கூத்தையும் ...உள்ளூர் சர்கஸ் கம்பெனியின் வீர தீர விளையாட்டுகளையும் சலிக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.இப்போதெல்லாம் ஒரு முறைக்கு மேல் எதிலும் ஆர்வமின்றி சலிப்படைந்து விடுகிறார்கள்.

"கூத்துக் கலையை வளர்க்க ஏதாவது யோசிக்கணும் -"


யோசிச்சிங்க ..யோசிங்க - கடந்த ஆண்டு சென்னை சங்கமம் திருவிழா வேலம்மாள் மெட்ரிக் பள்ளி முகப்பேரில் நடத்தப் பட்ட போது சரியான கூட்டம் .தொடக்கத்தில் திரண்ட கூட்டம் களையவே இல்லை கடைசி வரை ,விழா முடிந்த இரவிலும் கூட மக்கள் பள்ளி இருந்த தெருவெங்கும் நின்று கொண்டு அவர்களுக்கு மிகப் பிடித்துப் போன கலைஞர்களை ஒன்ஸ்மோர் கேட்டு ஆட வைத்துக் கொண்டும் பாட வைத்துக் கொண்டும் இருந்தார்கள். பாரம்பர்ய கலை வடிவங்களை மக்கள் ரொம்பவே ரசித்தார்கள். ஓவர் டோஸ் ஆகாமல் கொடுத்தால் எப்போதும் ரசிப்பார்கள் என்று நம்பலாம்.


சொல்வனத்தில் பா.ரா மற்றும் நாவிஷ் செந்தில் குமார் கவிதைகள் வழக்கம் போல அருமை .


ஷாஜியின் மலேசியா வாசுதேவன் பற்றிய நினைவுக் கட்டுரை வாசிக்கையில் தேவ் க்கு மிகப் பிடித்த ஆல் டைம் பேவரிட் பாடல் "ஆகாய கங்கை பூந்தேன் மழை தூவும் " ...." பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது நினைவடுக்குகளில் . ம்ம்...சில வாரங்களுக்கு முன்பு இதே விகடனில் மலேசியா வாசுதேவன் தனது இருப்பைப் பற்றி சலனப் படாத தன்னை மறந்து போன தனது திரையுலக நட்புகளை பற்றி ரொம்ப வருத்தமாய் ஒரு பேட்டி கொடுத்திருந்தார் இன்றவர் இல்லை . நிச்சயம் அந்த நட்புகள் பலவும் இரங்கல் தெரிவிக்க அவரில்லாத வீட்டில் அவரைச் சுற்றி குழுமி இருப்பார்கள்! எங்கிருந்தாவது பார்த்துக் கொண்டு வாசு அரூபமாய் சிரித்திருப்பார் என்று நம்புவோமாக!


நா.முத்துக் குமாரின் "அணிலாடும் முன்றில் "

அ .முத்துலிங்கத்தின் "ஜகதலப்பிரதாபன் "

கவின் மலரின் "தொடர்பு எல்லைக்கு வெளியே "
வேணுவனம் சுகா வின் "மூங்கில் மூச்சு "


இவை அனைத்தும் வாசிக்கப் பிடித்திருந்தன.


எட்டெட்டு இந்த தரம் கொஞ்சம் போர் .


வாசகர் கேள்விகளுக்கு சூர்யா பதில் சொல்லி இருக்கிறார் இந்த வாரம் . பாலா பதில்கள் அளவுக்கு பர பரன்னு எதிர்பார்ப்பை கிளப்பி விடலை .ஆனா நல்லா இருக்கு வாசிக்க. :))


ஒரு கேள்வி பதில் சாம்பிள்க்கு பாருங்க :


ஜோதிகாவை சந்திக்காமல் இருந்திருந்தால் ?


"வாழ்க்கை இவ்ளோ அழகா" ன்னு தெரியாமலே போயிருக்கும்!.


"உலகக் கணவர்களே தாங்கள் யாவரும் இப்படியே பதில் சொல்லக் கடவீர்களாக ,உலக மனைவிகளின் உலகம் உய்யும் . " :))


"ங்கே!" என்று வாசித்துக் கடந்த சில ஸ்டேட்மெண்டுகள் : :


திருமா வளவனுக்கு முதுகெலும்பு முறிந்து விடவில்லை.எனவே,நான் எந்தப் பக்கமும் சாய மாட்டேன் எதுவாக இருந்தாலும் தி.மு.க கூட்டணியில் தான் தொடர்வேன் !" - திருமாவளவன்


"காங்கிரஸ் கூட்டணிக்கு தி.மு.தி.க வந்தால் ,சிவப்புக் கம்பளம் போட்டு வரவேற்பேன் " - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்


"தமிழக மீனவர்களுக்கு ஈழத்து மீனவர்களுக்கும் பகையைத் தூண்டுகிற வேலையை இலங்கை நேரடியாகவும் ,இந்தியா மறைமுகமாகவும் செய்து வருகின்றன !" - சீமான்


விடைகள் :


முதல் விடை லிங்குசாமி - நானும் விகடனும் தலைப்பில் இப்படிப் பேசி இருந்தார் இந்த வாரம்

அடுத்த விடை -அசோக மித்திரன் :))


காசு கொடுத்து விகடன் வாங்கிப் படித்ததில் பெரிதாய் பழுதொன்றுமில்லை இந்த வாரமும்.


"நன்று"


லைப்ரரி ...

லைப்ரரி


இன்றைக்கு ...

தரையில் இறங்கும் விமானங்கள் -இந்துமதி
மாயலோகம் - சா.கந்தசாமி
நினைத்துப் பார்க்கிறேன் (தொகுப்பு) -ஜெயகாந்தன்
விகடன் தீபாவளி மலர் 2010 - விகடன்

இவை நான்கையும் எடுத்துக் கொண்டேன் .முன்பே buzz இல் யாரோ கேட்டிருந்தார்கள் ஞானியின் " தவிப்பு " நாவல் இப்போது கிடைக்கிறதா என்று! கிடைக்கிறது விகடன் வெளியீடு விலை ரூ -80 பத்துப் பதினோரு வருடங்களுக்கு முன்பு வாசிக்கையில் மிகப் பிடித்திருந்தது ,மீள் வாசிக்கும் எண்ணம் இல்லாததால் அதை எடுக்கவில்லை.
தி.ஜா வின் சக்தி வைத்தியத்தை தேடித் பார்த்தேன் சென்ற முறை கண்ணெதிரில் இருந்தது,இப்போது தேடினால் கிடைக்கவில்லை . பல முறை தி.ஜா புத்தகங்கள் எடுக்கும் போது முன்னால் முன்னால் வந்து கண்ணில் படும் ,இப்போது வேண்டு விரும்பி தேடப் புறப்பட்டால் கைக்கோ பார்வைக்கோ சிக்கக் காணோம் . சக்தி வைத்தியத்திற்கு தான் சாகித்ய அகாடமி விருது வழங்கப் பட்டதாம் என்று இணையத்தில் பார்த்தேனா ...அதில் என்ன இருக்கிறது என்று பார்த்தாக வேண்டிய கட்டாய மனநிலை உருவாகி அதைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.

தேவனின் மல்லாரி ராவ் கதைகள் இருந்தது எடுப்போமா வேண்டாமா என்று யோசித்து விட்டு பிறகு வாசிக்கலாம் என்று வைத்து விட்டேன். சில கதைகளை வாசிக்க சில மனநிலைகள் தேவைப்படுகின்றன. எல்லா நேரங்களிலும் எல்லாவற்றையும் வாசித்து விட முடிவதில்லை ...இப்போதைய தேடல் பரிந்துரைகளின் அடிப்படையில் இயங்குவதால் பலரும் பாராட்டிய இந்துமதியின் "தரையில் இறங்கும் விமானங்களை "எடுத்துக் கொண்டேன் .விகடன் பொக்கிஷத்தில் இரு வாரங்களுக்கு முன் ஒரு சோற்றுக் கடை அம்மாளைப் பற்றி ஜெயகாந்தன் எழுதி இருந்த ஒரு கட்டுரை பிரசுரமாகி இருந்தது இந்தத் தொகுப்பில் இருந்து தான் எடுக்கப் பட்டதோ என்னவோ தெரியவில்லை ,வாசிக்க பிடித்ததால் " நினைத்துப் பார்க்கிறேன் "தொகுப்பை எடுத்துக் கொண்டேன் .

எப்போதுமே பல்சுவைக்கு எனது விருப்பங்களில் முதலிடம் அந்தக் கணக்கில் பழையதானாலும் பரவாயில்லை இன்னும் வாசிக்க வில்லையே என்று 2010 விகடன் தீபாவளி மலரையும் எடுத்து வந்திருக்கிறேன். புரட்டிப் பார்த்ததில் நிறைய சுவாரஸ்யங்கள் இருக்கும் போலத் தான் தெரிகிறது ,வாசித்துப் பார்த்தால் தெரியும் .

பேருந்தில் வருகையில் முன் சீட் அம்மணி ஒருவர் நீளக் கூந்தலை விரித்துப் போட்டு சிக்கெடுத்துக் கொண்டிருந்தார். எனக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்த அம்மணியோ சாவதானமாக காலடியில் வைத்திருந்த மூன்று குட்டிச் சாக்குகளில் இருந்து விதம் விதமாக பூக்களை எடுத்து சரம் கட்டிக் கொண்டே வந்தார் இறங்க வேண்டிய நிறுத்தம் வரும் வரை ,

சிட்கோ நகர் நிறுத்தத்தில் பேருந்தில் ஏறிய ஒரு பெண்மணி குள்ளமாகத் தான் இருந்தார் அவரது கூந்தல் பின்னலிடப் பட்டு அவரை விட உயரமாக இருந்தது .இத்தனை நீளக் கூந்தலா ! தலைக்கு அப்படி என்ன தான் போட்டுக் குளிப்பாளோ இந்தம்மாள் என்று யோசித்துக் கொண்டிருந்தேன் .டென்த் படிக்கையில் லதா என்றொரு சினேகிதி இருந்தாள் அவளுக்கும் பட்டுப் போல நீளப் பின்னல் தான் ஆனால் கருப்பின்றி செம்பட்டை வாய்ந்த கூந்தல் ..."தலைக்கு என்னத்தையடி தேய்த்துக் குளிப்பாய் என்று கேட்டதற்கு 501 சோப்பு தான் கார்த்தி "என்று சிரித்திருக்கிறாள் . அவளது செம்பழுப்புக் கூந்தல் அதை நிஜம் என்று கூட நம்ப வைத்தது.அன்றிலிருந்து எத்தனை அடர்த்தியான பின்னலைப்பார்த்தாலும் தலைக்கு என்ன தேய்த்துக் குளிப்பாய் என்று யாரையும் நான் கேட்டதில்லை.

சொல்ல அந்த விஷயம் பதினோரு மணிக்கு மேல் சென்னை நகரில் பேருந்துகள் இடைஞ்சல் இல்லாமல் நெருக்கடி இல்லாமல் பெண்கள் தங்கள் தலை முடியை விரித்துப் போட்டு உலர்த்திக் கொண்டும் பூக் கட்டிக் கொண்டும் பயணிக்கிற வசதியில் இருக்கின்றன என்பதைத் தான் .
வந்தது தான் வந்தோம் வீட்டுக்கு கொஞ்சம் பழங்கள் வாங்கிக் கொள்ளலாம் என்று பழக்கடைப் பக்கம் ஒதுங்கினால் அகச்மாத்தாகவோ அசரீரியாகவோ காதில் பாய்ந்த ஒரு ஸ்டேட்மென்ட்டை பாருங்கள் ; அங்கே ஒரு சிவப்புச் சேலை பெண்மணி கூட வந்திருந்த இன்னொரு மஞ்சள் சேலை பெண்மணியிடம் இப்படிச் சொல்லிக் கொண்டிருந்தார்.

// "நல்ல பெண்டாட்டிக்கு நல்ல புருஷன் அமையறதில்லை ,நல்லபுருஷனுக்கு நல்ல பெண்டாட்டி அமையறதில்லை "//

அப்படியா மக்களே !?

இதிலிருந்து என்ன சொல்ல வருகிறார் என்று ஒரு நொடி குழம்பி விட்டு தலையை குலுக்கி அந்த வார்த்தையில் இருந்து விடுபட்டுக் கொண்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தேன் .