Thursday, February 24, 2011

லைப்ரரி ...

லைப்ரரி


இன்றைக்கு ...

தரையில் இறங்கும் விமானங்கள் -இந்துமதி
மாயலோகம் - சா.கந்தசாமி
நினைத்துப் பார்க்கிறேன் (தொகுப்பு) -ஜெயகாந்தன்
விகடன் தீபாவளி மலர் 2010 - விகடன்

இவை நான்கையும் எடுத்துக் கொண்டேன் .முன்பே buzz இல் யாரோ கேட்டிருந்தார்கள் ஞானியின் " தவிப்பு " நாவல் இப்போது கிடைக்கிறதா என்று! கிடைக்கிறது விகடன் வெளியீடு விலை ரூ -80 பத்துப் பதினோரு வருடங்களுக்கு முன்பு வாசிக்கையில் மிகப் பிடித்திருந்தது ,மீள் வாசிக்கும் எண்ணம் இல்லாததால் அதை எடுக்கவில்லை.
தி.ஜா வின் சக்தி வைத்தியத்தை தேடித் பார்த்தேன் சென்ற முறை கண்ணெதிரில் இருந்தது,இப்போது தேடினால் கிடைக்கவில்லை . பல முறை தி.ஜா புத்தகங்கள் எடுக்கும் போது முன்னால் முன்னால் வந்து கண்ணில் படும் ,இப்போது வேண்டு விரும்பி தேடப் புறப்பட்டால் கைக்கோ பார்வைக்கோ சிக்கக் காணோம் . சக்தி வைத்தியத்திற்கு தான் சாகித்ய அகாடமி விருது வழங்கப் பட்டதாம் என்று இணையத்தில் பார்த்தேனா ...அதில் என்ன இருக்கிறது என்று பார்த்தாக வேண்டிய கட்டாய மனநிலை உருவாகி அதைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.

தேவனின் மல்லாரி ராவ் கதைகள் இருந்தது எடுப்போமா வேண்டாமா என்று யோசித்து விட்டு பிறகு வாசிக்கலாம் என்று வைத்து விட்டேன். சில கதைகளை வாசிக்க சில மனநிலைகள் தேவைப்படுகின்றன. எல்லா நேரங்களிலும் எல்லாவற்றையும் வாசித்து விட முடிவதில்லை ...இப்போதைய தேடல் பரிந்துரைகளின் அடிப்படையில் இயங்குவதால் பலரும் பாராட்டிய இந்துமதியின் "தரையில் இறங்கும் விமானங்களை "எடுத்துக் கொண்டேன் .விகடன் பொக்கிஷத்தில் இரு வாரங்களுக்கு முன் ஒரு சோற்றுக் கடை அம்மாளைப் பற்றி ஜெயகாந்தன் எழுதி இருந்த ஒரு கட்டுரை பிரசுரமாகி இருந்தது இந்தத் தொகுப்பில் இருந்து தான் எடுக்கப் பட்டதோ என்னவோ தெரியவில்லை ,வாசிக்க பிடித்ததால் " நினைத்துப் பார்க்கிறேன் "தொகுப்பை எடுத்துக் கொண்டேன் .

எப்போதுமே பல்சுவைக்கு எனது விருப்பங்களில் முதலிடம் அந்தக் கணக்கில் பழையதானாலும் பரவாயில்லை இன்னும் வாசிக்க வில்லையே என்று 2010 விகடன் தீபாவளி மலரையும் எடுத்து வந்திருக்கிறேன். புரட்டிப் பார்த்ததில் நிறைய சுவாரஸ்யங்கள் இருக்கும் போலத் தான் தெரிகிறது ,வாசித்துப் பார்த்தால் தெரியும் .

பேருந்தில் வருகையில் முன் சீட் அம்மணி ஒருவர் நீளக் கூந்தலை விரித்துப் போட்டு சிக்கெடுத்துக் கொண்டிருந்தார். எனக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்த அம்மணியோ சாவதானமாக காலடியில் வைத்திருந்த மூன்று குட்டிச் சாக்குகளில் இருந்து விதம் விதமாக பூக்களை எடுத்து சரம் கட்டிக் கொண்டே வந்தார் இறங்க வேண்டிய நிறுத்தம் வரும் வரை ,

சிட்கோ நகர் நிறுத்தத்தில் பேருந்தில் ஏறிய ஒரு பெண்மணி குள்ளமாகத் தான் இருந்தார் அவரது கூந்தல் பின்னலிடப் பட்டு அவரை விட உயரமாக இருந்தது .இத்தனை நீளக் கூந்தலா ! தலைக்கு அப்படி என்ன தான் போட்டுக் குளிப்பாளோ இந்தம்மாள் என்று யோசித்துக் கொண்டிருந்தேன் .டென்த் படிக்கையில் லதா என்றொரு சினேகிதி இருந்தாள் அவளுக்கும் பட்டுப் போல நீளப் பின்னல் தான் ஆனால் கருப்பின்றி செம்பட்டை வாய்ந்த கூந்தல் ..."தலைக்கு என்னத்தையடி தேய்த்துக் குளிப்பாய் என்று கேட்டதற்கு 501 சோப்பு தான் கார்த்தி "என்று சிரித்திருக்கிறாள் . அவளது செம்பழுப்புக் கூந்தல் அதை நிஜம் என்று கூட நம்ப வைத்தது.அன்றிலிருந்து எத்தனை அடர்த்தியான பின்னலைப்பார்த்தாலும் தலைக்கு என்ன தேய்த்துக் குளிப்பாய் என்று யாரையும் நான் கேட்டதில்லை.

சொல்ல அந்த விஷயம் பதினோரு மணிக்கு மேல் சென்னை நகரில் பேருந்துகள் இடைஞ்சல் இல்லாமல் நெருக்கடி இல்லாமல் பெண்கள் தங்கள் தலை முடியை விரித்துப் போட்டு உலர்த்திக் கொண்டும் பூக் கட்டிக் கொண்டும் பயணிக்கிற வசதியில் இருக்கின்றன என்பதைத் தான் .
வந்தது தான் வந்தோம் வீட்டுக்கு கொஞ்சம் பழங்கள் வாங்கிக் கொள்ளலாம் என்று பழக்கடைப் பக்கம் ஒதுங்கினால் அகச்மாத்தாகவோ அசரீரியாகவோ காதில் பாய்ந்த ஒரு ஸ்டேட்மென்ட்டை பாருங்கள் ; அங்கே ஒரு சிவப்புச் சேலை பெண்மணி கூட வந்திருந்த இன்னொரு மஞ்சள் சேலை பெண்மணியிடம் இப்படிச் சொல்லிக் கொண்டிருந்தார்.

// "நல்ல பெண்டாட்டிக்கு நல்ல புருஷன் அமையறதில்லை ,நல்லபுருஷனுக்கு நல்ல பெண்டாட்டி அமையறதில்லை "//

அப்படியா மக்களே !?

இதிலிருந்து என்ன சொல்ல வருகிறார் என்று ஒரு நொடி குழம்பி விட்டு தலையை குலுக்கி அந்த வார்த்தையில் இருந்து விடுபட்டுக் கொண்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தேன் .

1 comment:

ஜெய்லானி said...

// "நல்ல பெண்டாட்டிக்கு நல்ல புருஷன் அமையறதில்லை ,நல்லபுருஷனுக்கு நல்ல பெண்டாட்டி அமையறதில்லை "//


ஹா..ஹா..ஹா... !! வீட்டில அன்னைக்கி ’ யாருக்கோ’ நல்ல அடி கிடைச்சு இருக்கு அதான் மேட்டர் :-))))