Wednesday, January 13, 2010

பஷீரின் "பால்யகால சகி"




பஷீரின் "பால்ய கால சகி"

இந்த சிறிய நாவல் ஏற்படுத்தும் பெரிய அதிர்வுகளுக்கு சத்தம் என்னவோ நியூட்ரல் தான்.

பேச்சை விட பலசமயங்களில் மௌனத்திற்கு கிடைக்கும் மரியாதை அலாதியானது.

பால்யகால சகி ....

கொஞ்சம் பெரிய ஒன்னு (மஜீது )
ராஜகுமாரி (சுகறா)

இவர்கள் இருவரைப் பற்றிய கதை அல்ல இது.வாழ்வின் நிர்தாட்சண்யம் குறித்து வாசிப்பவர்களுக்கு சந்தேகம் எழுப்பும் கதை.


ஒன்னும் ஒன்னும் சேர்ந்தா எவ்வளவு ?கணக்கு வாத்தியார் கேள்வி கேட்க மஜீது பதில் சொல்கிறான் "கொஞ்சம் பெரிய ஒன்னு" வாசிப்பவர்களை அவரவர் பால்ய காலத்து வகுப்பறை நாட்களை நினைவிலோட்டிப் பார்க்க வைக்கும் அழகான ரசனை மிக்க வரிகள்.


எஸ்ராவின் வாசகபர்வத்தில் தான் முதன் முதலாக பஷீரைப் பற்றி அறிந்தேன்,அங்கே எஸ்ரா "பால்யகால சகி" பற்றி வெகுவாக சிலாகித்திருப்பார்.நாவலின் தாக்கம் அத்தகையதே என்பதை இப்போது உணர முடிகிறது .பஷீர் ஒரு உன்னத படைப்பாளி ,இரக்கமற்ற படைப்பாளியும் கூட,பஷீரை சொல்வதைக் காட்டிலும் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையை அப்படிச் சொல்வதே பொருத்தமாயிருக்கக் கூடும்.சிலருக்கு பலவேளைகளில் வாழ்வின் இரக்கமற்ற தன்மை விதி என்ற பெயரில் புரியாமலே கூட போய்விடக் கூடும்.மேலே ஒன்றும் சொல்வதற்கில்லை .


மஜீதின் வீட்டருகே இருக்கும் மாமரத்திலிருந்து பழுத்து தானே உதிரும் மாம்பழங்களை யார் எடுத்து உண்பது என்பதில் தொடங்கும் சண்டை பிறகு சில நாட்களில் மஜீது ,சுகறாவை நண்பர்களாக்குகிறது,சலனமற்ற நீரோடை போல நகரும் பால்ய நட்பு பின்னொரு காலத்தில் காதலாகி பிறகது மணம் பரப்பும் முன்னே மஜீது தன் வாப்பாவிடம் கோபித்துக் கொண்டு கண்காணாமல் வீட்டை விட்டு ஓடிப் போகிறான் .

தொடர்பே அற்றுப் போன சில ஆண்டுகளின் பின் அவன் ஊருக்கு வரும் போது சுகறாவுக்கு நிக்காஹ் முடிந்து விடுகிறது,சுகறா அவனுக்காக காத்திருக்கவில்லை. அவள் மட்டுமா எதிர்காலமும் கூடத் தான்.

பணக்கார முஸ்லீம் குடும்பத்தில் ஒற்றை மகனாகப் பிறந்தும் மஜீதின் விதி அவனை பின்னாட்களில் ஓட்டலில் எச்சில் பாத்திரம் கழுவிக் கவிழ்த்தும் கடை நிலை வேலைக்காரனாக்குகிறது. சுகறா என்ன ஆகிறாள்? மஜீதின் ராஜகுமாரி பிச்சைக்காரி போல நான்கு நாட்கள் பட்டினிக் கோலத்தில் காசுக்காக கட்டியவனால் விரட்டப் பட்டு தாய் வீட்டுக்கு வருகிறாள்.

இப்படிக் கதை சுருக்கம் சொல்வதற்கு ஏற்ற கதையெல்லாம் இல்லை இது.

வாசித்து வாசித்து உள்ளுக்குள் உணர வேண்டிய பல நிஜங்கள் இதில் உண்டு.
இந்த நாவலை வாசிக்கையில் என் நினைவில் வந்து போன திரைப்படங்கள் இரண்டு ஒன்று பொன்வண்ணனின் "நதி கரையில் (முதலில் ஜமீலா என்று பெயரிடப் பட்டு பிறகு நதி கரையில் என்று வெளிவந்தது)

மற்றொன்று லோகித தாசின் "பாடம் ஒன்னு ஒரு விலாபம்" திரைப்படம்

முன்னுரையில் யூசுப் சொன்னவையாக சில வரிகள் "இந்தக் கதை முஸ்லீம் குடும்பத்தில் நிகழ்வதை ஒரு முஸ்லீம் எழுதுவதை ஞாபகத்தில் இருத்திக் கொண்டு வாசிக்க வேண்டும் என்பதைப் போல வருகின்றன,அதனாலோ என்னவோ இந்தத் திரைப் படங்களும் ஞாபகத்தில் நிழலாடுகின்றன. சுகறாவின் வாப்பா சொல்வார் ஓரிடத்தில் "உண்மையான முஸ்லீம்கள் எல்லாம் வெளியே நகரங்களில் இருக்கிறார்கள்,இங்கிருப்பவர்கள் எல்லாம் வெறும் மூடநம்பிக்கையாளர்கள்" இவர்கள் நம்புவது இஸ்லாத்தை அல்ல சடங்குகளை மட்டுமே என்பதாய்...அதனாலும் கூட அந்தப் படங்கள் ஞாபகம் வருகின்றனவோ என்னவோ!

என்ன தான் குளம் படு சுத்தமாகப் பளிங்கு தண்ணீருடன் மேலே காட்சி அளித்தாலும் உள்ளிருக்கும் அடர்ந்த பாசி போல பால்யமும் அதன் நினைவுகளும் எப்போதும் பசுமையானவையே.அங்கே கசப்புகள் இருக்கலாம்,இனிப்புகளும் இருக்கலாம் அதை எல்லாம் புறம் தள்ளக் கூடிய வயது அது ஒன்று மட்டுமே அல்லவோ!

சுகறா மரித்துப் போனால் என்ன? மஜீது ஓட்டலில் தட்டுக் கழுவினால் என்ன? மனோராஜ்யத்தில் மாளிகை கட்டக் கூடிய மனதுக்காரன் அவன். அவனது ராஜகுமாரி அவன் மனக்கோட்டை மாளிகையில் சௌக்கியமாய் எப்போதும் வாழ்ந்திருப்பாள்.

இதை மட்டுமே சொல்ல முடிகிறது என்னால்.


நூல் பால்யகால சகி
ஆசிரியர் பஷீர்
மூலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தவர் குளச்சல்.மு.யூசுப்
வெளியீடு காலச்சுவடு
விலை 75 ரூபாய்
நோட்:
புத்தகத்தின் புகைப்படம் தேடினால் கிடைத்தது பஷீரின் படம் தான் .கூகுள் வழியாக இப்படம் யாழிசை தளத்திலிருந்து பெறப் பட்டது.நன்றி யாழிசை .