Friday, February 5, 2010

கடந்து போனவள்...(மீள் பதிவு)




எதிர் வெயிலுக்கு முகம் சுருக்கி தன் முன்னே நடந்து போய்க் கொண்டு இருந்த அந்தப் பெண்ணை முருகேசனுக்கு கொஞ்ச நாளாய் நன்றாகவே தெரியும் . தினமும் இந்த வழியாகத்தானே போகிறாள் ....வருகிறாள் ...; ஒரு முறையேனும் அவள் இவனைத் திரும்பி பார்த்ததில்லை ... இவனும் அப்பெண்ணை பார்க்க வேண்டும் என்று பார்த்ததில்லை ... பழக்கதோஷம் என்பார்களே அப்படித்தான் இதுவும் ,


முருகேசன் அயன் கடை வைத்திருந்த தெரு அப்பெண் குடியிருக்கும் தெருவாகி விட்டதால் அடிக்கடி பார்வையில் பட நேர்ந்தது ...அதுவே பின்னாளில் அவளைப் பற்றி அவன் யோசிக்கவும் வழிவகுத்தது . ஒருநாள் அப்பெண்ணைப் தெருவில் பார்க்கா விட்டாலும் " இன்னும் காணோமே ... என்று மனம் கேள்வி கேட்கும் நிலை வந்து விட்டது இப்போதெல்லாம் ...


பசி வந்ததும் கூடவே தங்கத்தின் ஞாபகம் வந்தது , மதியம் என்ன செய்து வைத்திருப்பாளோ ? எட்டு மணிக்கெல்லாம் " மீன் ...மீன் ...மீனோய்... வஞ்சிரம் மீனோய் ! என்று கூவி கொண்டு போன மீன்காரனின் குரல் செவியில் இன்னும் கூட தேனாய் தித்தித்தது , இன்றைக்கு மீன் செய்ய சொல்லி இருக்கலாம் ,தங்கம் எது செய்தாலும் வாய்க்கு ருஷியாகத்தான் செய்வாள் .கோழிகறி ஆகட்டும் ...ஆட்டுக்கறி ஆகட்டும் ...உண்டு முடித்தபின் ஆளை ஒரு அசத்து அசத்தி விடும் .


தங்கத்துக்கும் , முருகேசனுக்கும் கல்யாணமாகி ஐந்து வருடம் ஓடி விட்டாலும் சின்னஞ்சிறுசுகள் போலத் தான் இப்போதும் கேலியும் கிண்டலும் தூள் பறக்கும் அவர்களது சம்பாசனையில் . பிள்ளையில்லாத வெறுமை கூட இதற்கு காரணமாயிருக்குமோ என்னவோ?


பாதையில் கடந்து போகும் அந்தப் பெண்ணின் பெயர் முருகேசனுக்குத் தெரியாது . கூட ஒரு குழந்தை நடந்து போகும் ,அது அவளுடைய குழந்தை தான் . வாய் ஓயாமல் பேசிக் கொண்டே போகும் . "மம்மி நீ வர வேண்டாம் னு சொல்றேன்ல" நான் தான் இப்ப பிக் கேர்ள்ஆயிட்டேன் ல"அவள் அதிகம் பேச மாட்டாள் , "ரோட்டைப் பார்த்து நட குட்டிம்மா " இது தான் அவள் பேசி அவன் கேட்ட வார்த்தைகள் .


மாமியார் தூரத்தில் துணி மூட்டையுடன் வருவது இங்கிருந்து நிழல் அசைவாய் கண்ணில் பட்டது , பாவம் இந்த வயதிலும் கடின உழைப்பாளி , வீடு வீடாய் போய் அயனுக்குத் துணி வாங்கி வருவாள் அதை பெட்டி போட்டுத் தந்ததும் மறுபடி வீடு வீடாய் போய் கொடுத்து பணம் வாங்கி கொண்டு வருவாள் . முருகேசனுக்கு 'நல்ல சப்போர்ட் 'என்று பக்கத்தில் கறிக்கடை வைத்திருக்கும் முனியசாமி சிலாகித்துச் சொல்லிக் கொள்வார்.


மாமியார் வெயிலை உடல் முழுதும் உறிஞ்சி விட்ட ஆயசத்தில் கருத்துப் போன முகத்தைத் அழுந்தத் துடைத்து விட்டு , பானையில் இருந்து சொமபு சொம்பாய் நீர் மொண்டு குடித்து விட்டு கொஞ்சம் முகத்திலும் சுளீர் ...சுளீரென்று தண்ணீரால் அடித்துக் கொண்டு துடைக்காமல் விட்டு விட்டாள். காற்று படப் பட இதமாய் இருக்கும் போல ... "சரி முருகேசு நீ வீட்டுக்குப் போ ... மணி ஆவுது பாரு" சொல்லி விட்டு கடைக்குள் கால் நீட்டி உட்கார்ந்து கொண்டாள்;


நல்லவள் தான்...ஆனால் வாய் கொஞ்சம் ஜாஸ்தி ... பேச்சு அதிகாரமாய் தான் இருக்கும் , இதனால் அயனுக்கு தருகிறவர்கள் ஒன்றிரண்டு பேருடன் அவ்வப்போது சின்ன சின்னத் தகராறும் செய்து கொள்வாள் ,பிறகு மறுபடி அவளே அதை சரி செய்து விடுவாள் , பாதையில் கடந்து போகும் அந்தப் பெண்ணுடன் கூட ஒருமுறை சின்ன சண்டை போட்டிருக்கிறாள் , அன்றைக்கு முருகேசன் கடைக்கு வராத நாள் .


மச்சினன் சித்தநாதனை கடையில் நிற்க வைத்து விட்டு புதுப்பேட்டையில் இருக்கும் ஒன்று விட்ட தம்பி மனைவியின் சித்தப்பா இறந்த துஷ்டி கேட்க போயிருந்தான் . அந்தப் பெண் கடைக்கு துணி கொண்டு வந்து அவன் பார்த்ததில்லை ,மாமியார் தான் போய் வாங்கி வருவாள் , அவசரமென்றால் அவளது கணவன் வந்து பெட்டி போட்ட துணிகளை வாங்கி போவான் .


அவள் வீட்டு துணிகள் இவனுக்கு நன்றாகவே ,அத்துப்படி கணவனது உடைகள் நிச்சயம் விலை கூடுதலாய்த்தான் இருக்கும் ,அருமையான மேல்சட்டைகள் , பெரும்பாலும் அவளது துணிகள் வராது . எப்போதாவது ஒரு சுடிதார் வரும் ,இல்லாவிட்டால் பட்டுப்புடவை வரும் . குழந்தையின் பட்டுப்பாவாடை ,சட்டை ,இப்படி கொஞ்சம் வரும் .


அவள் சுடிதார் அயனுக்குப் போடததாலோ என்னவோ ! தினம் அவள் கடை தாண்டிப் போகையில் இவன் அவளது உடை பார்க்க ஆரம்பித்தான் . ஓ... இன்னைக்கு பச்சை கலர் சுடிதார் ! இன்னைக்கு வெள்ளிக்கிழமை அதான் சிவப்புக் கலர் சுடிதாரோ ..! அட இந்த ஊதா கலர் சுடிதார் அந்தப் புள்ள நிறத்துக்கு அவ்ளோ எடுப்பா இல்லையோ ...?! இதென்ன இவ்ளோ சுருக்கஞ் சுருக்கமா இருக்கு ? நல்லா தண்ணிய உதறி சுர்ருன்னு இழுத்து தேய்ச்சா அப்படியே கம்பியாட்டம் நிக்கும் இந்த வெள்ளைக் காட்டன் சுடிதார் ... சேலை கட்டவே மாட்டா போல ?ஒருமுறை எதேச்சையாய் தங்கத்திடம் கூற அவள் பார்த்த கேலிப் பார்வையில் பிறகு இவன் கருத்து கந்தசாமி போல அவளிடம் எல்லாம் சொல்வதை நிறுத்தி விட்டான் .


இன்றைக்கு காலையில் எழுந்ததிலிருந்தே மனம் ஏதோ ஒரு அவஸ்தையில் பர பரவென்று தான் இருந்தது , எப்போதாவது இப்படி நிகழ்வதுண்டு தான் , பதினெட்டு வயதில் முதல் முறை சொந்த அத்தை மகள் கனகம் வயசுக்கு வந்ததும் கூட்டாளிகளின் கேலி கிண்டலுக்கு மத்தியில் அவளுக்கு குச்சு கட்டப் போகையில் இப்படித்தான் ஆனதாய் ஞாபகம்....!!!


பிறகொரு முறை ; மதுரை அழகர் கோயிலின் தீர்த்த தொட்டியில் குளித்து விட்டு கீழே வருகையில் குரங்குக்கு பயந்து மிரண்டு ஒதுங்குவதாய் நினைத்து தடுமாறி விழப்போன பத்து வயது பெண் குழந்தை ஒன்று இவன் மீது மோதி நிற்க பதறிப் போய் தாங்கினான் . நடுங்கி ஓய்ந்த குழந்தை நடுக்கம் நின்றதும் சிறு புன்னகையுடன் "தேங்க்ஸ் அங்கிள் " என்று புறங்கையில் முத்தமிட்டு விட்டு ஓடிவிட . அப்போதும் இப்படித்தான் பர பரத்து சிலிர்த்தது மனசு .


பிறகு தங்கத்துக்கும் அவனுக்கும் கல்யாணமான அன்று இரவில் அவளுக்காக தனி அறையில் காத்திருக்கும் போது கூட மனம் இப்படி தான் .... வெட்ட வெளியில் சீறும் காற்றில் ஒற்றையாய் கொடியில் சட சடக்கும் சல்லாத் துணி போல் பட பட வென அடித்துக் கொண்டு பர பரத்து அலைந்தது . இது போல சொல்லிக்கொள்ள உதாரணங்கள் இன்னும் கூட சில உண்டு அவனுக்கு .... இன்று என்ன வரப் போகிறதோ ?!


போனவளை இன்னும் காணோமே ?! யோசனையுடன் அவள் போன திக்கை யதேச்சையாய் பார்த்தால் அவள் கணவன் தான் என்றுமில்லா அவசரகதியில் வண்டியை அலற விட்டுக் கொண்டு வந்து கொண்டிருந்தான் . கொஞ்சம் மெதுவாய் போனால் தான் என்ன ? மனதோடு சொல்லிக் கொண்டான் . அவளைக் காணோம் , இந்த வழியாகத்தானே வருவாள் என்று மறு படி சொல்லிக்கொண்டு , மதியச்சாப்பாட்டுக்காக வீட்டுக்குப் புறப்பட்டுப் போனான் .


சாப்பிட்டு விட்டு ஒரு அரை மணி தூங்குவான் ,இன்றும் அப்படிப் படுத்தான் . காலையிலிருந்து உள்ளே எழுந்து ஆடிக் கொண்டு இருந்த மனப் பாம்பின் சீற்றம்...தங்கம் இவன் கேட்காமலே மனதறிந்து செய்து வைத்த வஞ்சிரம் மீனில் சற்றே வாலைச் சுருட்டிக் கொண்டு ஓய ஒரு மணி நேரத்துக்கும் மேலாகவே தூங்கி விட்டான் போல ....! தங்கம் டீ போட்டுக் கொண்டு எழுப்பித் தரும் போது மணி நான்கை தொட்டிருந்தது , மாமியார் புலம்பிக் கொண்டிருப்பாளே என்று வேக வேகமாய் கிளம்பி போனான் .

மெல்லத் தான் போயேன் ....ஏன் ஓடற ...? தங்கம் பேசியவாறு பின்னோடு அவனுடனே கடைக்கு வந்தாள் ...கொஞ்ச நேரம் இருந்துவ்விட்டு விளக்கு வைக்க வீட்டுக்குப் போவாள் அவள் .கடைக்குள் நுழைந்தவனுக்கு ஆச்சர்யமான இன்ப அதிர்ச்சி மேலெழும்பி குதியாளம் போடாத குறை தான் , அந்தப் பெண் இரண்டு பெரிய கட்டை பைகள் நிறைய அயனுக்குத் துணிகள் கொண்டு வந்து கொடுத்து விட்டுப் போய்க் கொண்டிருந்தாள்.

அன்றைக்கு முருகேசன் வழக்கத்தை விட ரொம்ப சந்தோசமாய் மனைவியிடமும், மாமியாரிடமும் பேசிச் சிரித்தவாறு துணிகளைப் பெட்டி போட்டு முடித்தான் . இனிமேல் அவள் வீட்டுத் துணிகள் மறுபடியும் இங்கே தான் வரும் . அவள் வந்ததில் இவனுக்கு என்ன சந்தோசமோ ???!!! அவனுக்கே புரியவில்லை தான் ...ஆனாலும் குதூகலமாய் ராத்திரிக்கு தங்கத்துக்கு அல்வா வாங்கிக் கொண்டு போனான் வீட்டுக்கு .. என்னய்யா இது ? சனிக்கிழம தான வாங்கிட்டு வருவா ... இன்னிக்கி என்னவாம் ..என்று வெட்கச் சிரிப்போடு வாங்கி வைத்த மனைவியின் கன்னத்தைச் செல்லமாக கிள்ளி விட்டு குளிக்கப் போனான் . இரவு நன்றாகத் தூக்கம் வந்தது .

மறுநாள் வழக்கத்தை விட வேகமாய் கடை திறந்து வேலையை ஆரம்பித்தான் .அவன் கடைக்கு அடுத்து ஒரு மளிகைக் கடை, ஒரு ஜெராக்ஸ் கடை .ஒரு கல்யாணமண்டபம் ,அதற்கும் அப்பால் வக்கீல் சீதாராமன் வீட்டை அடுத்து அவள் குடியிருக்கும் வீடு தான் , அது ஒரு அபார்ட்மென்ட் , மொத்தம் இருபது வீடுகள் ,அவள் இருப்பது முதல் பிளாட்டில் தான் ,

முருகேசன் கடை திறக்கும் போது நேரம் ஏழரை மணி இருக்கும் . வழக்கமாக எட்டு மணிக்கு தான் போவான், இன்று என்னவோ ஒரு இனம் புரியா உல்லாஷம்.யதேச்சையாகத்தான் பார்த்தான் .... அவள் பிளாட்டின் முன்புறம் ஒரு லாரி நின்று கொண்டிருந்தது . நெடு நேரமாய் நின்று கொண்டிருக்கும் போல இவன் இப்போது தான் பார்கிறான் .யாரோ வீடு மாற்றிக் கொண்டு போகப் போகிறார்கள் போல !

அந்த பிளாட்டில் இப்படித்தான் அடிக்கடி ஒரு வீட்டில் மட்டும் இப்படி நிகழும் . ராசி இல்லாத வீடாம் அது ... என்ன ராசியோ ?! என்ன நம்பிக்கையோ ? போங்கடா நீங்களும் உங்க நம்பிக்கையும் ...! கிண்டலாய் உள்ளே நகைத்துக் கொண்ட முருகேசன் தன் வேலையைப் பார்க்கலானான் .நேரம் போய்க் கொண்டே இருந்தது . அந்தப் பெண்ணைக் காணோம் ...! குழந்தையையும் பள்ளிக்கு கூட்டிக் கொண்டு போனதாகத் தெரியவில்லை பெட்டி போடப் பட்ட துணிகளையும் வாங்கிக் கொண்டு போனதாகத் தெரியவில்லை . சரி வரும் போது வரட்டும் .... இவன் இப்படி யோசித்துக் கொண்டிருக்கும் போதே ;

அந்த லாரி தாண்டி முகமெல்லாம் சந்தோசம் பூத்துக் குலுங்க அவள் ....அவள் தான்.... அந்தப் பெண் வந்து கொண்டிருந்தாள் .... இவனது கடையை நோக்கி ...துணி வாங்க வருகிறாள் போல ... வரட்டும் ... வரட்டும் ... அவளது சந்தோசம் ' முருகேசனையும் தொற்றிக் கொள்ள ... அப்போது சூரியன் எப் எம் மில்

"வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ" பாடல் ;

முடிந்து

"வா வெண்ணிலா உன்னைத் தானே வானம் தேடுதே"

பாடல் மாயவரம் ராதா ,மதுரை சுப்பு , தேனாம் பேட்டை மல்லிகா ,ஒன்டிபுதூர் அம்பிகா ஆகியோருக்காக ஒலி பரப்பிக் கொண்டிருந்தார்கள்,மெல்லத் தனக்குள் பாடிக்கொண்டே அவள் கிட்டே வரக் காத்திருந்தான் ... வந்தாள் ... வந்தவள் ... அவன் மாமியாரிடம் . எவ்ளோ ஆச்சு ஆயா ? என்று கேட்டு பணம் தந்து துணி வாங்கி நகரப் போனாள்.

வக்கீல் சீதாராமன் மனைவி காம்பௌண்டில் இருந்து எட்டிப் பார்த்து சத்தமாய் கேட்டாள்...

"ஏண்டிம்மா கல்பனா .. எத்தனை மணிக்கு கிளம்பறேல் ...சாமான் சட்டேல்ல்லாம் பாத்து பாக் பண்ணிட்டேலா இல்லியோ ?"

அவள் மாமிக்கு என்ன பதில் சொன்னாலோ !!!

அவளது வீட்டைப் போலவே இப்போது இவனது மனமும் காலியாக .... ஒரு கணம் முகத்தில் சந்தோசம் வடிந்து சங்கடம் காட்டி நின்றான் ...சில நிமிட வெறுமைக்குப் பின் சின்னதாய் உள்ளே ஒரு குரல் ஓ... கல்பனாவா ...இதான் உன் பேரா ..? என்று மெல்ல சொல்லிப் பார்த்துக் கொண்டது.

இந்தக் கல்பனா இனி அவன் கடை தாண்டி .. அந்தப் பக்கம் போக மாட்டாள் .இந்தப் பக்கமும் போக மாட்டாள் ... ஏன் இடப்பக்கம் ... வலப்பக்கம் என்று எந்தப் பக்கமும் போகவே மாட்டாள் ... அவள் இனி அந்தத் தெருவில் இருந்தால் தானே எப்பக்கமும் போவதற்கு ? முருகேசனின் மன பரபரப்பு இந்த முறை இப்படி தான் ஓய வேண்டும் போல ?!

இப்படி எல்லோருடைய வாழ்விலும் நிகழ்வது உண்டு தானே !

வாழ்வின் அன்றாட சுவாரஸ்யங்களுக்கு இப்படி ஒரு கல்பனாவோ ...முருகேசனோ தப்பி விடக் கூடுமா?"எதுவும் கடந்து போகும்" சற்று அதிகப் படியான மேற்கோளாய் தோன்றினாலும் ஆற்றில் மிதந்து கடக்கும் பூக்களாய் ...இலைகளாய் நம்மைக் கடந்து கொண்டிருக்கும் சில விஷயங்கள் நம்மில் சில பாதிப்புகளை ஏற்படுத்திச் செல்வது மறுக்க இயலாத நிஜமே!