Monday, December 1, 2008
ஹார்லிக்ஸ் ..காம்ப்ளான் சண்டையா?
புது ரேசன் கார்டு விண்ணப்பித்தவர்களுக்கு நியாயமாக எத்தனை நாட்களில் கார்டு வழங்கப் படவேண்டும்?
கடந்த ஒரு வருடமாக ரேசன் கார்டு அப்ளை செய்து விட்டு ரேசன் ஆபிசுக்கும் வீட்டுக்கும் நடையாய் நடந்து கொண்டிருக்கிறோம்,இன்னும் கார்டு வந்தபாடில்லை,எங்களுக்குப் பிறகு புது ரேசன் கார்டுக்கென பதிவு செய்து காத்திருந்தவர்களுக்கெல்லாம் புது கார்டு கிடைத்து விட்டதாம் சிலர் தேடி வந்து சொல்லி விட்டுப் போய் வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொள்கின்றனர்,
எங்களுக்கு இன்னும் கார்டு வரவே இல்லை .எத்தனை முறை ரேசன் ஆபிசுக்குப் போய் விசாரித்து விட்டு வந்தோம் என்று நாள்...தேதி வாரியாகக் குறித்து வைத்திருக்கிறேன் நான்,அந்த அத்தனை முறைகளுமே அங்கிருந்த ஒரு பெண்மணி அவர் தான் எங்கள் பகுதிக்கு களப் பணியாளராம்,உங்களுக்கு கார்டு வந்து விடும் ,அதற்க்கு முன்பு உங்கள் வீட்டு முகவரிக்கு ஒரு போஸ்ட் கார்டு வரும் அதில் "உங்களுக்கு புது ரேசன் கார்டு வழங்கப் படும் தேதியும்..இடமும் தெரிவிக்கப் பட்டிருக்கும் ,அந்த போஸ்ட் கார்டை எடுத்துக் கொண்டு இங்கே வந்தீர்களானால் புது கார்டு தருவோம் என்கிறார்,அதெல்லாம் சரி தான் .
எங்கள் வீட்டு முகவரிக்கு தான் இன்னும் போஸ்ட் கார்டு வந்தபாடில்லை...இதற்குள் பக்கத்து குடித்தனக் காரர்களில் சிலர் எங்களைப் போல புது கார்டுக்கு விண்ணப்பித்து இருந்தவர்கள் சிலருக்கு புது கார்டு வந்து விட்டதாம் .அவர்கள் வேறு அடிக்கடி வந்து இன்னுமா உங்களுக்கு கார்டு வரவில்லை?பாருங்கள் உங்களுக்குப் பிறகு தான் நாங்கள் விண்ணப்பித்தோம் எங்களுக்கெல்லாம் வந்து விட்டது ,உங்களுக்கு ஏன் இன்னும் வரவில்லை இன்னொரு முறை போய் விசாரியுங்கள்...அங்கிருக்கும் உங்கள் பகுதி களப் பணியாளரிடம் கார்டு தாமதமாவதற்கு தெளிவான விளக்கம் கேளுங்கள் என்று தூண்டி விடுகிறார்கள்.அங்கே ரேசன் ஆபிசிலோ என்ன கேட்டாலும் எதோ கடன் கேட்க வந்தவர்களைப் போலவே நம்மைப் போன்ற நுகர்வோர்கள் நடத்தப் படுகிறார்கள் .
எந்த கேள்வி கேட்டாலும் சரியான பதில் இல்லை,மீறி கொஞ்சம் கார சாரமாகக் கேட்டோமானால் உங்கள் வீட்டுக்குப் போஸ்ட் கார்டு வரும் வந்த பிறகு அதை எடுத்துக் கொண்டு வாருங்கள் இப்போது எதற்கு சும்மா வந்து எங்கள் நேரத்தை வீணாக்குகிறீர்கள் என்று நம்மைக் கேள்வி கேட்கிறார்கள் .
நியாயமாக அரசு நுகர்வோர் பாதுகாப்புக்கென்று வகுத்த நடைமுறை விதிமுறைகளின்படி " அனைத்து ஆவணங்களையும் இணைத்து முறைப்படி விண்ணப்பிக்கும் நுகர்வோர்களுக்கு எத்தனை நாட்களில் புது நுகர்வோர் அட்டை(ரேசன் கார்டு) வழங்கப் பட வேண்டும்? அவர்கள் குறிப்பிட்ட அந்த நாட்களுக்குள் குறிப்பிட்ட ஒரு அல்லது பல நுகர்வோர்களுக்கு நுகர்வோர் அட்டை வழங்கப் படாவிட்டால் அதற்கான காரணத்தை அறியும் உரிமை நுகர்வோருக்கு உண்டா இல்லையா? அப்படி தகவல் கேட்கும் நுகர்வோருக்கு தெளிவான விளக்கம் அளிக்க வேண்டிய கடமை அந்தப் பகுதி களப் பணியாருக்கு உண்டா இல்லையா?
தேவையற்ற வீணான தாமதம் ஏற்ப்பட்டால் அதற்க்கு யார் பொறுப்பேற்றுக் கொள்வார்கள்? இதனால் நுகர்வோருக்கு ஏற்படும் வேறு பல பணித்தடைகளுக்கு யார் பதில் கூறும் பொறுப்பில் உள்ளார்கள்?நுகர்வோருக்கு ஏற்படும் மனக் கஷ்டங்கள் எவ்வகையில் சமன் செய்யப் படும்? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் உண்டா இல்லையா? இது நான் மட்டும் இன்று புதிதாக எழுப்பும் கேள்வி அல்ல...!!! பாதிக்கப் பட்ட மக்கள் பலர் இருக்கலாம் .அவர்கள் சார்பாக இன்றைய எனது இந்தப் பதிவை வாசிக்கும் நண்பர்களில் சிலரேனும் தங்களுக்குத் தெரிந்தவரையில் இதற்கான தங்களது பதிலை இங்கே பதிவு செய்வீர்கள் என்று நம்புகிறேன் .
தகவல் அறியும் உரிமைச் சட்டம் என்கிறார்களே ?இப்படி ரேசன் கடையில் சரியான தகவல்களைச் சொல்லி நுகர்வோரின் சந்தேகங்களைத் தீர்க்காமல் இருப்பதோடு அசட்டையாக மந்த கதியில் பதில் என்ற பெயரில் வெட்டி சாக்கு போக்குகளைச் சொல்லித் தட்டிக் கழிக்கும் பணியாளர்களை என்ன செய்வது?இவர்களைக் கேட்க ஆட்களே இல்லையா? இவர்களைப் பற்றி புகார் புகார் தரும் பட்ச்சத்தில் சரியான நடவடிக்கைகள் எடுக்கப் படுமா? அல்லது இதே பகுதியில் தொடர்ந்து வசிக்கும் நிலை ஏற்படின் புது ரேசன் கார்டு வாங்க முடியாத சூழல் இப்படிப் பட்ட பணியாளர்களால் நுகர்வோராகிய மக்களுக்கு ஏற்பட்டு விடுமா?
ஒன்றுமே புரியவில்லை.புது கார்டுக்கு என விண்ணப்பிக்கும் பொது அவர்கள் கெட்ட னைத்து ஆவணங்களையும் இணைத்து தாக்கல் செய்தோம்,பதிலுக்கு அவர்கள் அளித்த பெறப்பட்டது என்ற சான்றிதல் ஆவணம் எங்களிடம் பத்திரமாக உள்ளது .இந்த ஆவணம் நம்மிடம் இருந்தால் போதும் எத்தனை நாட்கள் தாமதம் ஆனாலும் பயமில்லை என்கிறார்கள் சிலர் .எது நிஜம்?
எதை நம்பலாம் ?
எதை நம்பக் கூடாது என்ற குழப்பத்தில் இருக்கிறோம் இப்போது நாங்கள்.
இனி அடுத்ததாக நுகர்வோர் கோர்டுக்குப் போவது ஒன்று தான் தீர்வா?
ஒரு இரண்டு மாதம் ...மூன்று மாதம் ...அட மிஞ்சிப் போனால் ஐந்து அல்லது ஆறு மாதம்...ஏன் ஒன்பது மாதம் அல்லது பிள்ளைப் பெருகாலமான பத்து மாதங்கள் என்று கூட ஒதுக்கித் தள்ளி விடலாம் .ஆனால் யாருக்கேனும் ஒரு வருடம் கழித்து ரேசன் கார்டு வந்திருக்கிறதா? எனக்குப் பெருத்த சந்தேகமாக இருக்கிறது.
இதைப் போன்ற ஒத்த அனுபவம் பதிவர்கள் யாருக்கேனும் இருந்தால் தயவு செய்து எனதுசந்தேகத்தை தீர்த்து வையுங்கள்.
அடுத்து நாங்கள் செய்ய வேண்டியது என்ன?
நுகர்வோர் கோர்ட்டுக்குத் தான் போய் ஆகா வேண்டுமா?
இன்று கூட ரேசன் கடைக்குத்தான் புறப்பட்டுக் கொண்டிருக்கிறோம் எப்போது கார்டு வரும் என்று விசாரிக்க....