Wednesday, September 8, 2010

பாட்டியும் பட்டுப்புடவைகளும்...

பாட்டியின் பட்டுப்புடவைகள் ... ((அனுபவ பகிர்வு)

வழமையாய் கோடம்பாக்கம் புடவைகளை பின் கொசுவமிட்டு உடுத்தும் பாட்டிக்கு இந்திரா காந்தி போல மொட மொடப்பாய் புடவை கட்டிக் கொள்ளும் ஆசை மிகுந்திருந்தது ,கைத்தறிப் புடவை என்று நினைத்து விடாதிர்கள் ! விவசாயிகள் சங்கத்தின் சார்பில் டெல்லிக்குப் போய் இந்திராவுடன் தாத்தா எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பேரன்பும் பெருமிதமுமாய் கூடத்தில் மாட்டி வைத்திருக்கிறாள் ,


இந்திரா கட்டியிருப்பது பட்டுத் தானாம்!,இந்திரா கட்டி இருப்பது பட்டுத் தானென்று ஒரேயடியாய் சாதிப்பதில் இப்போதும் பாட்டி கெட்டிக்காரி தான்.குடும்பத்தின் மூத்தவள் என்பதால் யாருக்கு பட்டெடுத்தாலும் பாட்டிக்கு காட்டாமல் அலமாரிக்கு செல்லாது,பிறந்த குழந்தையை தடவுவது போல ரொம்பப் பாசத்துடன் பிரித்து பார்த்து அசங்காது மடித்து நீவுவாள்,புடவைக்கு வலிக்குமோ என்றிருக்கும் போலும்!இப்படியாக பாட்டிக்கு பட்டுக் கட்ட ரொம்ப ரொம்ப இஷ்டம் என்று நாங்களெல்லோரும் எப்போதும் அறிந்தே இருந்தும் கூட வாழ்வின் கடை நாட்களில் தான் பட்டென்ற ஒன்றை அவள் மேனி தொட்டுப் பார்க்க நேர்ந்தது ,


ராமர் நீலத்தில் அரக்கு ஜரிகை கரையிட்ட ஊசி வாண சரிகைப் புடவை ஒன்று ,அடர் பச்சையில் அழகான தங்க சரிகைக் கரையில் ஒன்று ,இரண்டுமே கடைசி மாமாக்களின் திருமணங்களின்போது பாட்டிக்கென்று எடுத்தார்கள்,முந்தினதை இரு முறை உடுத்தி இருப்பாள்,பின்னது ஒரே ஒரு முறை தான் ,இரண்டுக்குமே வெள்ளை ரவிக்கை தான்.


சிரிக்கையில் அவள் மூக்கு விரிகையில் ஒரு பக்கம் அன்ன பட்சி ,மறுபக்கம் தோகை விரித்தாடும் மயில் என்று ரெட்டை பேசரி ஜொலிக்கும் ,வாடிய வெற்றிலை போல் வரியோடித் துவண்ட உதடுகளின் பின் ஏழு கல் வெள்ளைத் தோட்டுக்கு போட்டியாய் பளீரிடும் பச்சரிசி பற்கள்.சின்ன வயதில் யாரோ சொன்னார்கள் என்று நெற்றிக்குப் பச்சை குத்திக் கொண்டிருந்தாள்,யாரும் கேட்டால் அறியாச் சிறுமி போல அந்தப் பச்சை செத்துப் போன பின் அவள் சொர்க்கம் போக வழித்துணைக்கு வருமென்பாள் !


வெள்ளி செவ்வாய்களில் தலைக்கு குளித்து முழுகிய பின் கொண்டைக்கு சிவப்புக் குற்றாலத் துண்டு சுற்றி அதீத மங்களகரத்துடன் மேல் வாசற் படியில் நின்று கொண்டு மாரிக்கு சோறிட வருவாள்,அந்த கணங்கள் புகையோடிய விடிகாலை மென் வெளிச்சம் போல ஆழ் மனதை அசைத்துப் பார்க்கும்.. .


பட்டசைத்த ...பட்டுக்கு அசைந்த பாட்டியின் உலகம் ஒரு நாளில் வெண்மை சூழ்ந்தது ,கருத்து நெடிந்து தளர்ந்த தாத்தா அவளைச் சூழ இருந்த நிறங்களை திருடிக் கொண்டு செத்துப் போன பின் அவளுக்கென்று வாய்த்தது ஒரே ஒரு நிறம் அது அந்தப் பாழும் வெள்ளை தான். கலர் புடவை உடுத்திக் கொள்ள யார் சொல்லியும் கேட்க மறுத்து விட்டாள்,தாத்தாவுக்கு பிடிக்காதாம்,வயதான கைம்பெண்கள் கலர் சேலை உடுத்திக் கொண்டு எதிரில் வந்தால் கேலி செய்வாராம். வேண்டவே வேண்டாம் என்று விட்டாள்.செத்தும் வாழ்ந்தார் தாத்தா!


நேற்று பாட்டியின் இரண்டு புடவைகளில் முன்னதை எனக்கும் பின்னதை தங்கைக்கும் என பாட்டியே பங்கு பிரித்துக் கொடுத்து விட்டாள்.உடுத்தும் போதெல்லாம் பாட்டியின் புடவை என்று சந்தோசிப்பதா? பாட்டி உடுத்த முடியாப் புடவை என துக்கிப்பதா ! இனம் புரியாக் குழப்பத்தில் புடவையை கையில் ஏந்திக் கொண்டு கன்னத்தில் வைத்து அழுத்திக் கொண்டேன் ,பாட்டியின் இளகிய உள்ளங்கை தசைகளின் வெது வெதுப்பும் மெது மெதுப்புமாய் கன்னம் தாண்டி சுட்டது புடவை .