Monday, August 30, 2010

மிலிட்டரி நாயக்கர் ...



அந்த ஊரில் மிலிட்டரி நாயக்கர் வீடென்றால் அது சீமை ஓடு வேய்ந்த எட்டுக் கட்டு வீடு ;

அந்த வீட்டுக்கு ரெண்டு வாசத்திண்ணைகள் இருந்தன.

விடியற்கருக்கு...இன்னும் இருட்டு விலகாத சித்திரை மாசத்து கோடை ராத்திரி ,ராப்பூச்சி ரீங்காரம் இருட்டின் குறட்டை சத்தம் போல மெல்லக் கசிந்தபடி இருக்க இந்த வீட்டுத் தொழுவத்தில் சாணி அள்ளவென்றே ஜென்மமம் எடுத்தவளாய் ஊர் குப்பைக்காரன் செல்லாண்டியின் பெண்டாட்டி வெள்ளையம்மா அந்தண்டை வாசதிண்ணையில் குப்புறப் படுத்து தூங்கிக் கொண்டிருந்தாள் ,

இந்தண்டை வாசத்திண்ணையில் செல்லியும் அவள் மாமியாரும் வீட்டின் எல்லாக் குஞ்சு குளுவான்களோடு நல்ல சயனத்தில்;

வீட்டு ஆம்பளை மிலிட்டரி நாயக்கரை அவரது அம்மாவும் ,மனைவியும் வெளித்திண்ணையில் படுத்து தூங்க அனுமதிப்பதில்லை என்பதால் அவர் மட்டும் வீட்டுக்கு உள்ளே தூங்கிக் கொண்டிருந்தார். நாயக்கரை திண்ணையில் படுக்க விடாததற்கு ஒரு ரசமான கதை இருந்தது அவர்களிடம் ;இந்த இருட்டில் அந்தக் கதை என்னத்திற்கு?!

இன்னும் கொஞ்ச நேரத்தில் விடிந்து விடும்.அப்படி இருக்கக் கொள்ள தான் திடீரென்று எதிர் வீட்டு முருங்கை மரத்திலிருந்து ஜிங்கென்று குதித்து இறங்கினாள் பெரிய கோதை ;அவள் இறங்கிய அறிகுறியோ என்னவோ கொல்லையில் கிணற்றுச் சகடம் "கட..கடவென்று "உருண்டு ஓய்ந்து நின்றது .

வீட்டு நாய் விக்கி சன்னமாய் குழந்தை அழுவது போல ஊளையிட்டு அடங்கியது ,என்ன இருந்தாலும் அவள் வளர்த்த நாய் ஆச்சுதே?


"செல்லி ..."

"செல்லி ..."

"ஏய் செல்லி ...வாயேன் எவ்ளோ நேரமா கூப்டுட்டு இருக்கேன் ...வா நல்லதண்ணிக் கெணறு வரைக்கும் ஒரு நட போயிட்டு வருவோம்."

வரும் போதெல்லாம் எப்படி வழக்கமோ அது போலவே அன்றும் வாசற்படியில் ஒரு காலும் தெருவில் ஒரு காலும் வைத்து நின்ற வாக்கில் தண்டை மெலிதாய் குலுங்க செந்தூரக்கமிட்ட முகத்தில் உறைந்து போன சிரிப்புடன் பெரிய கோதை சின்ன செல்லியை அழைக்க ஆரம்பித்தாள் .

செல்லி தூக்கம் கலையாதவளாய் ; கோதை தன்னைக் கையை பிடித்து இழுத்த பாவனையில் கையை உதறிக் கொண்டு ;

"இந்தா ...நான் வரல ...நீ போ ...எம்புள்ளைங்க அழும்.சின்னவன் நானில்லாம ஒத்தப் பருக்க திங்க மாட்டான்."

அவள் சொன்னால் விட்டு விடுவாளோ கோதை ;

"ஏய் கிறுக்கி ... போயிட்டு வெரசா ...வந்துரலாம்டி" இந்தா இருக்கு நல்ல தண்ணிக் கெணறு ,எந்திரி ...எந்திரி "

"ம்ம்ஹூம் ...நான் வல்ல ...நீ போ எம் புருஷனுக்கு சோறாக்கனும் ... கெழக்குத் தோடத்துல மொளகா நாத்து புடுங்கனும் ...அம்மோய் எம்புட்டு வேலயிருக்கு ! ... நான் வல்ல ...நீ போயேன் "

கோதையின் முகத்தில் உறைந்திருந்த சிரிப்பு சன்னமாய் சுணங்க...

"ம்ம்...தண்ணிக் கெணத்துக்கு தான் வல்லேங்கற ...வெறகு பெறக்க காட்டுக்காச்சும் வா போவோம் ..."

"வேணாம்...வேணாம் நான் வல்ல ...நான் எங்கயும் வல்ல "

"ஊர்கம்மாய் ரொம்பிக் கிடக்காம் ,அழுக்குத் துணி எடுத்தா ...போய் புள்ளைங்க துணியன்னாலும் துவைச்சிட்டு வரலாம் ...எந்திரி ..வா...வா "

" அழுக்குத் துணி எடுக்க வண்ணாத்தி வருவாளே ...கம்மாய்க்கு ஏன் கூப்டற நான் வல்ல..."

செல்லி மறுக்க மறுக்க கோதைக்கு ஆங்காரம் கூடிக் கொண்டே போனது போலும் ;

உக்கிரமாய் விழிகளை உருட்டியவள் கொடிக் கயிற்றில் காய்ந்து கொண்டிருந்த செல்லியின் சிவப்பு சுங்கிடிச் சேலையை படக்கென்று உருவி எடுத்து அதை சுருக்கிட்டு அதே கொடியில் தொங்க விட்டாள்,

கட்டக் கடைசியாய் ஒரு முறை அழைப்பவள் போல ;

"அடியே ...இப்ப நீ வரப் போறியா ...இல்லியா?"

அப்போதும் தூக்கக் கலக்கத்துடன் தான் செல்லி பதில் சொல்லிக் கொண்டிருந்தாள் ;

"நானெதுக்கு உன்கூட வரணும் ?" நான் வல்ல நீ போ "

" எதுக்கு வரணுமா? வரணும்டி ...நான் கூப்ட்டா நீ வரணும்.எம் புருஷன் கூப்டோடன மட்டும் வந்துட்டியில்ல ....நாலு புள்ளைங்க கூட பெத்துகிட்டியில்ல. எந்திரிச்சு வா வெள்ளன கெணத்துக்குப் போவோம்

" ஆங் ...உம்புருஷனா ... செல்லிக்குப் பொட்டில் அடித்ததைப் போல உணர்வு

"உம்புருஷனா ...உம்புருஷனா ...அம்மாடியோவ்

அ...த்...தே...அத்...தே ... யாரு வந்துருக்கா இதாரு....? ...எந்திரிங்கத்தே...எந்திரிங்க ... ..."

அலறிக் கொண்டு விழித்த செல்லி உடம்பெலாம் உதறலெடுக்க பக்கத்தில் செத்துப் போனவளைப் போல உறங்கிக் கொண்டிருந்த தான் மாமியாளை உலுக்கோ உலுக்கென்று உலுக்க ;

கோரைப் பாயில் படுத்துக் கொண்டிருந்த அந்தம்மாளும் அதிரி புதிரியாய் சேலையை அள்ளிப் போட்டுக் கொண்டு எழுந்து உட்கார்ந்து கொண்டு ;

இந்தா செல்லி ...எதுக்குத்தா ...இப்பிடி பயந்து கத்தற... மருமவளே என்னடி ஆச்சு ?

பக்கத்தில் உறங்கிக் கொண்டிருந்த தன் ஐந்து வயது கடைக்குட்டி மகனை மடியிலிட்டு இறுக்கிக் கொண்டும் மற்ற பிள்ளைகள் மூன்றையும் எங்கோ கண்ணுக்குத் தெரியாத பூதத்திடம் இருந்து காப்பவளைப் போன்ற பாவனையில் தான் வலது கையை நீளமாக அவர்கள் மேல் பரப்பி வைத்துக் கொண்டு மூச்சுக் கிடைக்காதவளைப் போல மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க நடுங்கிப் போனவளாய் செல்லி அரண்டு போய் இருட்டில் கண்களை உருட்டிக் கொண்டிருந்தாள் ;
அதற்குள் சத்தம் கேட்டு தொழு வாசத்திண்ணையிலிருந்து அரக்கப் பரக்க ஓடி வந்தாள் வெள்ளையம்மா ;

"சின்ன மொதலாளிம்மா ...சும்மா இருங்க .சும்மா இருங்க ..ஒண்ணுமில்ல..ஒண்ணுமில்ல என்று செல்லியின் கைகளை இருக்கப் பிடித்துக் கொண்டு மிலிட்டரி நாயக்கரின் அம்மாவிடம் திரும்பி குசு குசுப்பாய் ...

சத்தம் போடாதிங்கம்மா ...எல்லாம் நம்ம பெரிய கோதையம்மா வேலையாத்தேன் இருக்கும்

போய் செல்லேரியம்மன் துன்னூறு எடுத்தாங்க ...பூசி விட்டா தொந்திரவு இருக்காது "



அவளா ...அவ செத்து மண் மூடிப் போயிட்டாளே...இப்ப எங்கருந்துடி வந்தா ? அச்சத்தால் வறண்டு போன நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக் கொள்ள அந்தம்மாள் திரு திருவென விழித்துக் கொண்டு வெள்ளையம்மாளிடம் கேட்டாள் .

செத்தாலும் ...பொழச்சாலும் நாயக்கரு மொதல்ல கட்டினது கோதை அம்மாளைத் தானுங்கம்மா ,அந்தப் பாசம் விட்டுப் போகுமா !

நாண்டுகிட்டு செத்தவளுக்கு என்னடி புருஷன் பாசம்? விடிஞ்சதும் மொத்தக் காரியமா கோடாங்கிக்கு ஆள விட்டனுப்பு .

அதற்குப் பிறகு பல வருடங்கள் உருண்டு ஓடியே போயின .

செல்லி பாட்டியாகி ..கொள்ளுப் பட்டியான பின்னும் கூட இன்னும் நம்புகிறாள் அவ்வப்போது கோதை தன்னை கிணற்றில் தள்ளி சாகடிக்க அழைப்பதாக ;

உப்புப் பெறாத சுங்கிடிச் சேலைக்காக புருஷனோடு மனஸ்தாபப் பட்டுக் கொண்டு ஆறு மாத சிசுவை வயிற்றில் சுமந்திருந்த போதிலும் தூக்குப் போட்டுச் செத்துப் போன மூத்த சம்சாரம் கோதை ஆண்டாள் இன்னும் செல்லியை அழைத்துக் கொண்டே தான் இருக்கிறாளாம்.

செத்து செத்து விளையாடுவதற்காய் இருக்கக் கூடும் .

மிலிட்டரி நாயக்கர் திண்ணையில் தூங்குவதில்லை .அந்த மட்டும் புரிந்திருக்க வேண்டும் .