Wednesday, June 16, 2010

ஆட்டோக்களும் ஆட்டோ டிரைவர்களும் அவரவர் நியாயங்களும் .
நேற்று கோயம்பேடு ஆம்னி பஸ் ஸ்டாண்ட் செல்ல ஒரு ஆட்டோவை அழைத்திருந்தோம்.எங்கள் தெரு முனையில் இருக்கும் ஆட்டோ ஸ்டாண்டில் வழக்கமாக வரும் டிரைவர் இல்லாததால் வேறு டிரைவர் வந்தார்.இங்கிருந்து கோயம்பேடு போக 100 ரூபாய் கேட்டார்,அடப்பாவமே அப்படியென்றால் போக வர 200 ரூபாய் செலவழிப்பதா என்ற ஆதங்கத்தில் ;

"வழக்கமா ஆம்னி பஸ் ஸ்டாண்ட் போயிட்டு வர 120 ரூபாய் தான் வாங்குவாங்க நீங்க என்ன இவ்ளோ அதிகமா சொல்றிங்க ?நாங்க வேற ஆட்டோல போயிக்கறோம் என்று அங்கிருந்து நகரத் தொடங்கினோம்,"அதற்குள் வண்டியை கிளப்பிக் கொண்டு எங்களருகில் வந்த டிரைவர்.

"மேடம் நீங்க சொல்றது வாஸ்தவம் தான் நார்மலா இங்கருந்து கோயம்பேடு போக 60 ரூபாய் தான்,ஆனா இடைல ரெண்டு சிக்னல் இருக்கு அங்க மட்டுமில்லாம பஸ் ஸ்டாண்ட் முன்னாலயும் இப்பலாம் ரொம்ப ட்ராபிக் ஜாம் ஆகுது அது கிளியர் ஆகி பேசஞ்சர் பிக் அப் அண்ட் டிராப் பண்ணிட்டு வர குறைஞ்சது 1 மணி நேரமாயிடுது. அப்போலாம் பெட்ரோல் வேஸ்ட் ஆகுதே அதனால தான் 80 ல இருந்து 100௦௦ ரூபாய் வரை கேட்கறோம் நாங்க,வேறொன்னுமில்லை ,உட்காருங்க பிக் அப் அண்ட் ட்ராப்க்கு 160 ரூபாய் கொடுங்க வெயிட்டிங்னாலும் பரவாயில்லை என்று இறங்கி வந்தார்.

இன்னும் பேசி கூட ஒரு பத்து அல்லது இருபது ரூபாய் குறைத்திருக்கலாம் ஆனால் பஸ்சுக்கு லேட் ஆகி விடும் என்பதால் அந்த தொகைக்கே சரி என்று அந்த ஆட்டோவில் அமர்ந்தோம்,அந்த டிரைவர் அவர் பாட்டுக்கு பேசிக் கொண்டே வந்தார்.

"முன்னாடி எல்லாம் ஆட்டோ வாங்கணும்னா சேட் கிட்ட தான் பெர்மிட் வாங்கணும் அதுக்கு ஒரு 70 ,000௦௦௦ ரூபாய் ஆகும் ,ஆட்டோ விலை 1 ,20 ,000 ரூபாய்,மொத்தமா வண்டி எடுக்க பெர்மிட்டோட சேர்த்து 2 ௦௦௦௦௦௦௦00000 ரூபாய்க்குள்ள ஆகும்,ஆனா பெர்மிட் சேட் கிட்ட வாங்கினா காலத்துக்கும் அந்த ஆட்டோ கடனை அடைக்கவே முடியாது, கடைசில சவாரியே இல்லனா கடனும் கட்ட முடியாம ஆட்டோவையும் சேட் கிட்ட கொடுத்துட்டு அம்போன்னு நிக்கணும்,

இப்போ அப்படி இல்லை சேட் கிட்ட இருந்த பெர்மிட் உரிமையை அரசாங்கம் ரத்து பண்ணிட்டு இப்போ ஓபன் பர்மிட் தராங்க ,வெறும் 250 ரூபாய் இருந்தா யார் வேணா பெர்மிட் வாங்கலாம்.ஆனா ஆட்டோ விலை கம்பெனிக்கு தகுந்து 2 ல இருந்து 2 ,50௦,000 வரை செலவாகும் ,அரசாங்கம் கேட்ட தொகைக்கு சேட்கள் ஒத்து வரலைன்னு அவங்க கிட்ட பெர்மிட் உரிமையை பிடுங்கிட்டாலும் விலை என்னவோ அதே தான்.

இதெல்லாத்தையும் விட சவாரி கிடைக்குதோ இல்லையோ அந்தந்த ரூட்ல டெய்லி ட்ராபிக் போலீஸ்க்கு ஆட்டோ டிரைவர்ஸ் ஒவ்வொருத்தரும் 100 ரூபாய் கொடுத்தே ஆகணும் ,இல்லனா 4 +1 ,3 +1 இந்த ரூல்ஸ் பாலோ பண்ணலை அதிகமான ஆட்களை ஏத்திட்டு போறாங்க அப்படி இப்படின்னு ஏதாவது ஒரு சாக்குல பைன் போடுவாங்க, சார்ஜென்ட் ஷீட்னு எல்லா ஆட்டோ டிரைவரும் ஒரு பேப்பரை கண்ணாடிக்கு முன்னாடி சுருட்டி வச்சிருப்பாங்க பார்த்திருக்கிங்களா. அந்த சீட் இருந்தா அவங்க பணம் கொடுத்துட்டாங்கன்னு அர்த்தம்,அவங்களை போலீஸ் செக் பண்ணாது பைன் போடாது.

இதுக்காகவே பல ஆட்டோ டிரைவர்ஸ் இங்கலாம் ட்ராபிக் போலீஸ்கிட்ட மாட்டிக்காம அவங்களே வாலண்டியரா டி.நகர் ட்ராபிக் போலீஸ் செக்கிங்ல போய் 50 ரூபாய் கட்டி சார்ஜென்ட் சீட் வாங்கி வண்டில சொருகிப்பாங்க,50 ரூபாய் குறையுது பாருங்க.மத்த ஏரியான்னா 100 ரூபாய் கண்டிப்பா கொடுத்தே ஆகணும்."
இப்படி எல்லாம் அந்த டிரைவர் தன்பாட்டில் சொல்லிக் கொண்டே வந்தார்.

"இங்க ஏன் யாரும் ஆட்டோல மீட்டர் போடவே மாட்டேங்கறிங்க ,அரசாங்கமோ ட்ராபிக் போலீசோ அதுக்கெல்லாம் உங்களை வார்ன் பண்ண மாட்டாங்களா? " தேவை இல்லாமல் நான் இப்படி ஒரு கேள்வியை கேட்டு வைத்தேன் .

மீட்டர்லாம் வச்சா எங்களால ஆட்டோ வாங்கின கடனை கட்ட முடியாது மேடம், ஆட்டோ வாங்கின கடனை விடுங்க டெய்லி பொழப்பையே ஓட்ட முடியாது .பெட்ரோல் விலை ஏறி போச்சு ,அதுல தினமும் போலீஸ்க்கு வேற துட்டு அழனும்.மீட்டர் போட்டா எப்படிங்க கட்டும்,வேலைக்கே ஆகாது." சில கஸ்டமர்ஸ் லேண்ட் மார்க் சொல்றதோட சரி அங்க எறக்கி விட்டா சும்மா ஒரு அடையாளத்துக்கு தான் இதை சொன்னோம் நாங்க போக வேண்டிய இடம் இன்னும் கொஞ்சம் உள்ள போகணும்னு கழுத்தறுப்பாங்க.அந்த இன்னும் கொஞ்சம் உள்ள கிட்டத்தட்ட 1 கிலோ மீட்டர் 2 கிலோ மீட்டர் தூரமா கூட இருக்கும்.அதுக்கெல்லாம் பெட்ரோல் செலவாகுமேங்க.

இதுல லேடிஸ்னா நாங்க ரொம்ப அழுத்தி கூட ஒரு பத்து இருபது கேட்க பயமா இருக்கும்.எதுனா வம்பு பிடிச்ச லேடிஸ் அஞ்சு ரூபா பத்து ரூபாய்க்கு ரொம்ப தகராறு பண்ணுவாங்க ,சுத்தி இருக்கற ஜனங்க தப்பு அந்த லேடிஸ் மேல இருந்தாலும் கூட அவங்களை ஒன்னும் சொல்ல மாட்டாங்க இந்த ஆட்டோக்காரன் ஏதாவது வம்பு பண்ணிருப்பான் தான் நினைப்பாங்க.

இப்படி இருக்கு எங்க பொழப்பு. என்று முடித்தார்.

இது இப்படி இருக்க ;

தம்பியின் அலுவலகம் ஈகாட்டுத்தாங்கல் ஒலிம்பியா டவர்ஸில் இருக்கிறது,லூகாஸில் இருந்து அங்கே ஆட்டோவில் செல்ல ஒருமுறை 150 ரூபாய்கள் ,இன்னொரு நாள் 200௦௦ ரூபாய் அதிசயமாய் ஒருநாள் 120 ரூபாய் என்று விதம் விதமான சார்ஜ்.இதில் ரன்னிங் ஆட்டோ ,ஸ்டாண்டுகளில் உள்ள ஆட்டோக்களுக்கென ஒரு வழாக்கம்.ஸ்டாண்ட் ஆட்டோக்கள் என்றால் அதிக தொகை,ஒரே இடத்திற்கு போக விதம் விதமான கட்டணங்களைப் பாருங்கள் .ரன்னிங் ஆட்டோ என்றால் ஒரு சார்ஜ்.சென்னைக்குள் புதிதாக நுழையும் நபர்கள் நிச்சயமாக ஆட்டோக்காரர்களிடம் ஏமாந்தே ஆக வேண்டும்,


இவை தவிர ஷேர் ஆட்டோக்கள் வேறு,

"ஷேர் ஆட்டோக்கள் பற்றி முக்கியமாக சொல்லியாக வேண்டிய குறிப்பு ஒன்று உள்ளது ;ஒரு முறை போரூரில் இருந்து வடபழனி வரை ஷேர் ஆட்டோ ஒன்றில் அம்மா நான் என் மகள் ஹரிணி மூவரும் பயணிக்க வேண்டியதாயிற்று,இரவு நேரம் பேருந்துகள் எல்லாம் அடைசலாய் புழுங்கிக் கொண்டு போனதால் ஹரிணியை வைத்துக் கொண்டு அதில் இடிபட்டுக் கொண்டு இங்கே வந்து சேர முடியாது என்பது ஒரு புறம் ,கூடவே அந்த நேரத்தில் போரூரில் இருந்து லூகாஸ் வரை லாங் டிரைவ் வருவதற்கு வேறு ஆட்டோக்கள் கிடைக்காத சூழலில் வேறு வழியின்றி ஷேர் ஆட்டோவில் பயணம்.

அந்த ஷேர் ஆட்டோவுக்கு இரண்டு டிரைவர்கலாம்.முன்புற சைடு மிர்ரர்கள் ஒன்று கூடக் காணோம் ,ஆரன் இல்லை,அட... ப்ரேக் கூட இல்லை ,சிக்னலில் வண்டி நிற்க வேண்டுமானால் முன்புற வாகனத்தை உரசினார்போல முட்டிக் கொண்டு தான் அந்த ஷேர் ஆட்டோவை நிறுத்தித் தொலைக்க வேண்டிய நிர்பந்தம்.இத்தனைக்கும் அந்த டிரைவர்கள் கலங்கினார் போல தெரியவில்லை ,அவர்கள் பேசிக் கொண்டதில் இருந்து நாங்களாக தெரிந்து கொண்ட விஷயங்கள்.

தங்களது ஆட்டோவில் சைடு மிரர்கள் இல்லாததும் ஆரன் இல்லாததும் அவர்களுக்கு ஒரு பொருட்டே இல்லை.அது ஒரு பெருமைக்கு உரிய விஷயம் போல அவர்கள் பேசிக் கொண்டார்கள்.

" நாமலாம் எந்தக் காலத்துல சைடு மிரர்,ஆரன்லாம் வச்சினு ஆட்டோ ஒட்னோம் " அத்தெல்லாம் இல்லாது ஆட்டோ ஓடாத இன்னா !!! காலங்காலமா ஆட்டோ ஓட்டினு இருக்கம் இந்த மேக் அப்லாம் இல்லாங்காட்டி இன்னா இப்போ! "

சொல்லிக் கொண்டே இருவரில் ஒரு டிரைவர் வடபழனி நெருக்கத்தில் ஏதோ ஒரு இடத்தில் நிறுத்தி ஒன்லி 5 மின்ஸ் என்று கூறிக் கொண்டு அருகாமை கடையில் என்னவோ வாங்கிக் கொண்டு மறுபடி வண்டியை எடுத்து எப்படியோ ஒருவழியாக வடபழனி சிக்னலில் இறக்கி விட்டார்கள். அந்த டிரைவர் ஒன்லி 5 மினிட்சில் போய் வாங்கிக் கொண்டு வந்தது டாஸ்மாக் சரக்கு தான் என்றார் பக்கத்தில் இருந்த மனிதர். என்ன ஒரு அனுமானம் பாருங்கள்!

நானாக நினைத்துக் கொண்டது டிரைவர்கள் குடிப்பதற்கும் சேர்த்தே தான் பயணிகளின் தோற்றத்தைப் பொறுத்து (இவன் ஏமாளியா விவரமானவனா?!) ஆட்டோ கட்டணம் நிர்ணயிக்கப் படுமோ என்னவோ!!!

ஷேர் ஆட்டோக்களில் கட்டணம் கொஞ்சம் குறைவு என்று அதில் பயணிக்கிறோம் ,அதில் பல ஆட்டோக்கள் தட தட பயணங்கள் தான் ,உயிருக்கு உத்திரவாதமெல்லாம் கேட்கவே கூடாது.வண்டிக்கு ஆரன் இல்லை சரி ஆனால் பிரேக்கே இல்லாமல் இத்தாம் பெரிய நகரில் ஷேர் ஆட்டோக்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன.இதை என்னவென்று சொல்ல!

இதே மாநகராட்சிப் பேருந்தில் என்றால் சாதாரணப் பேருந்தில் 5 ரூபாய் கட்டணம்.
டீலக்ஸ் பேருந்தில் 9 ரூபாய் கட்டணம்.
குளிர்சாதன வசதி கொண்ட பேருந்தில் இதை எல்லாம் விட கொஞ்சம் அதிகம் ஆனால் ஆட்டோவை விட குறைவு.

இதிலிருந்து என்ன சொல்ல வருகிறேன் என்கிறிர்களா?! ஒன்றுமே இல்லை .
அவரவர் நியாயங்கள் அவரவர்க்கு. ஏனென்றால் இங்கு எதுவுமே முறைப்படுத்தப் படவில்லை.உனக்கு ஒரு பங்கு ,எனக்கு ஒரு பங்கு என்று லஞ்சம் மலிந்து எல்லாமே மேம்போக்காய் இருப்பதால் யாரையுமே கட்டுப்படுத்த முடியாமல் போனது வாஸ்தவமாகி விட்டது.

100௦௦ ரூபாய் கொடுத்து சார்ஜன்ட் சீட் போட்டுக் கொண்ட டிரைவர் ஒரே ஆட்டோவில் 7 எட்டு பேரை ஏற்றிக் கொண்டு போக வழி இருக்கையில் ,ஷேர் ஆட்டோக்கள் ட்ராபிக் போலீஸ் கண்காணிக்கும் என்று தெரிந்தும் கூட தைரியமாய் ப்ரேக் இல்லாமல் பயணிகளை ஏற்றிக் கொண்டு போக வழி இருக்கையில், வேறு எதற்குத் தான் வழி இருக்காது. குடித்து விட்டு ஆட்டோ ஓட்டக் கூட வழி இருக்கையில் யாரும் யாரையும் கட்டுப்படுத்த முடியாது தான்.

அநியாய ஆட்டோ கட்டணங்கள் என்று புலம்புவதைக் காட்டிலும் குறித்த நேரத்திற்கு முன்பே கிளம்பி மாநகராட்சிப் பேருந்தில் பயணிக்கலாம் ,இல்லாவிட்டால் சொந்தமாய் கார் அல்லது பைக் வாங்கிக் கொள்ளலாம். அப்படியும் கூட சமயத்தில் ஆட்டோக்களை தவிர்க்க வழியில்லை என்பதே நிஜம்.
நோட் :
புகைப்படம் தி ஹிண்டு பத்திரிகை தளத்தில் இருந்து எடுக்கப் பட்டது.கூகுளில் தேடும் போது கிடைத்தது.நன்றி .