Thursday, April 22, 2010

கதை கதையாம் காரணமாம் ...

ஒரு ஜாமத்தின் பின்னான கதைகளைக் கேட்க
கனவுகளின் குவியலுக்குள் களைக்காது புரண்டு
கனகாம்பரப் போர்வை தேடி
சிருங்காரம் காட்டும் என் சின்ன மயிலே
மைனாக் குஞ்சே எங்கிருக்கிறாய் நீ!
பெய்யாது ஓய்ந்த மழைக்காய் அல்ல
பூசணிப் பழங்களாய் காணும் முகமெலாம் சூடாக்கி
ஓயாது வெடித்துப் பிளந்திட்ட வெயிலுக்காயும் அல்ல ;
மாம்பிஞ்சே மரகத பூஞ்சிட்டே ;
தலை சரித்து நோக்குங்கால்
என் நெஞ்சகத்துக் கனமெல்லாம்
காணாதடிப்பாயடி...
சித்திரைப் பூவே ...
சில நேரம் கண்ணுறங்காய் ...
காலிலே கட்டிய சக்கரங்கள் தூங்கட்டும்
கார் கால மேகம் போல்
இமை கவிய கண் துயிலாய்;
எனக்குத் தூக்கம் வருதுடி ...
சுட்டிப் பொண்ணே ...அடிக்கரும்பே
சீனி சர்க்கரையே
அம்முக்குட்டி பொம்முக்குட்டி
அம்மாவோட தங்கக் கட்டி
தூங்கிடேன் ப்ளீஸ் ...

ஒரு அப்பாவி அம்மாவுக்கும் சுட்டி மகளுக்குமான தினப்படி தூக்கத்துக்கு முந்தைய உரையாடல் கவிதை.