Monday, November 30, 2009

மையல்

சமையல் இந்த வார்த்தையை இந்தக் கட்டுரைக்குத் தோதாக என் வசதிக்கு பிரித்துப் பார்த்து பொருள் கொள்ள முயற்சித்ததில் ;

சமையல்= ச+மையல் - என்று ஆனது .

ச என்ற ஒற்றை எழுத்துக்கு "சகி" என்றி நாமாக அர்த்தப் படுத்திக் கொள்வோம்

மையல் -இதற்க்கு பொருள் தெரியாதோர் தமிழ் கூறும் நல்லுலகில் எவரேனும் உண்டோ ?

இப்போது பாருங்கள் சமையல் என்ற சொல்லுக்கு "சகியின் மீது மையல்" என்று அழகான பொருளை நாமாகக் கற்பனை செய்து கொள்ளலாம் தானே.

சகி யார் "சகித்துக் கொள்பவர்களை சகிஎன்று விளிக்கலாம் ,சகி என்ற சொல்லுக்கு "மனைவி" என்றும் அர்த்தப் படுத்திக் கொள்ளலாம் ,பிரிய சகி- பிரியமான மனைவி .

சரி இனி சமையலுக்கு வருவோம் ...

சகியான மனைவியின் மீது அன்பான பண்பான கணவருக்கு (நோட் திஸ் பாயிண்ட் )மையலை ஏற்படுத்தும் வண்ணம் உதவும் ஒரு காரியம் சமையல் என்று பொருள் படுத்திக் கொள்ளலாம் இல்லையா?

சமையல் அருமையாக அமைந்து விட்டால் அந்தத் தம்பதிகளிடையே சண்டை சச்சரவுகளின் வீரியம் பெருமளவு குறையக் கூடும். கூடவே "சமைத்த கைக்கு தங்கக் காப்பு" எனும் வார்த்தை ஜாலம் மூலம் மையலின் சதவிகிதமும் கூடும் .ஒட்டுமொத்தமாகச் சொல்வதானால் தாம்பத்யம் சிறக்க "மையல்" எத்தனை முக்கியமோ அத்தனை முக்கியம் சமையலும் தான்.

கற்பனை வளம் குறைஞ்சு காணாம போயிடக் கூடாதில்லையா ?!

அதான் அப்பப்போ இப்படி ஏதாச்சும் எழுதிப் போட்டுடறது .

Thursday, November 26, 2009

பாப்பு செய்த மணிமாலை



பாப்புவுக்கு பள்ளி நேரம் மாலை மூன்று மணியுடன் முடிந்து விடும் ,வீட்டிற்கு வந்த பின் உடனே யூனி பார்ம் கூட மாற்றிக் கொள்ளாமல் அவள் செய்யும் முதல் வேலை டி .வியை ஆன் செய்வது தான்...பிறகு அவள் இரவு தூங்கச் செல்லும் வரை அது ஓடிக் கொண்டே இருக்க வேண்டும் , அதில் வரும் நிகழ்ச்சிகளைப் பார்க்கிறாளோ இல்லையோ டி.வி அது பாட்டுக்கு ஓடிக் கொண்டே இருக்க வேண்டும் ,இப்படி ஒரு கட்டாய மனநிலை,ஒற்றைக் குழந்தையாய் வளரும் பல குழந்தைகளுக்கும் இருக்கக் கூடும் என்றே தோன்றினாலும் ,இந்தப் பழக்கத்தை மாற்றியே ஆக வேண்டும் என முயன்றதில் நல்ல பலன் .

நேற்று இந்த செயற்கை மாலையும் ,இயர் ஹேங்கிங்கும் பாப்புவே தன் கையால் செய்து காட்டினாள் எனக்கும் அவளது அப்பாவுக்கும்.இன்றைக்கு பள்ளிக்கு எடுத்துக் கொண்டு செல்கிறாள் அவளது அனிதா மிஸ்ஸிடம் காண்பிக்க வேண்டுமாம்.

தேவையான பொருட்கள்:

மீடியம் சைஸ் பீட்ஸ் - 40 (கலர் கலராக கலந்து வாங்கிக் கொள்ளவும் )
மாலை முகப்பு(டாலர் போல) செய்ய - 3 சிறு மணிகள் பிணைத்த தொங்கல்கள்
நரம்பு (கோர்க்க) - 3௦0 சென்டி மீட்டர் (அல்லது) தேவையான அளவு
திருகு அல்லது கூக் - 1 ஒன்று (ரெடிமேட் ஆகவே கடைகளில் கிடைக்கும்)

நரம்பில் விரும்பும் வண்ணங்களில் மணிகளைக் கோர்த்து இரண்டு முனைகளையும் பிணைக்கும் போது ஏற்க்கனவே வாங்கி வைத்த ரெடி மேட் ஹூக்கின் பின்புற முனைகளையும் மணிகளின் கடைசியில் உள்ளே கோர்த்து உட்புறமாக முடிச்சிடவும்

இயர் ஹேங்கிங் செய்யத் தேவையானவை :

மாலை முகப்பு செய்யப் பயன்படுத்திய சிறுமணிகள் பிணைத்த தொங்கல்கள் - 2
கேங்கிங் கூக் - 2

இது மாலை செய்வதைக் காட்டிலும் எளிதானது வாங்கி வைத்த ரெடிமேட் ஹேங்கிங் ஹூக்கில் சிறுமணிகள் பிணைத்த தொங்கல்களை பிணைத்தால் இயர் ஹேங்கிங் ரெடி .

இப்படியாக நேற்று பாப்பு அதிகம் டி.வி பார்க்கவில்லை ,மேஜிக் வொண்டர் லேன்ட் மட்டுமே பார்த்து விட்டு ஹோம் வொர்க் செய்தாள்,பிறகென்ன தூக்கம் வரவே சரியான நேரத்திற்கு தூங்கப் போய் இன்றைய பொழுது அவசரமின்றி அழகாக விடிந்தது.

எனக்கும் ஐயோ டி.வி எந்நேரமும் பார்க்கிறாளே என்ற பயம் குறைந்தது, ஆனாலும் கதை இன்னும் முடியவில்லை தான் ;அடுத்தென்ன செய்யலாம் அவளது கவனம் டி.விக்குச் செல்லாமல் தடுக்க என்று யோசிப்பதில் காலம் கரைகிறது எனக்கு .

Saturday, November 21, 2009

சரோஜினி டீச்சரின் விரல் காலண்டர்

அஷ்வியின் கணவர் இந்த மாத டூர் ரிப்போர்ட் எழுதிக் கொண்டிருந்தவர் தன் போக்கில் கேட்டார். இந்த மாசம் முப்பது நாளா ...முப்பத்தியொரு நாளா? காலண்டர் பார்த்து சொல்லேன். அஷ்வி எழுந்து போய் காலண்டர் எல்லாம் பார்க்கவில்லை கை மடக்கி விரல் முட்டிகளை எண்ணிப் பார்த்து விட்டு சொன்னாள் .

முப்பது நாள்

ஹே ...என்ன நீ கலண்டர் பார்க்காமயே சொல்ற...தப்பா சொல்லிடப் போற...நான் தப்பா ரிப்போர்ட் அனுப்பிறப் போறேன்..என் செல்லுல காலண்டர் இருக்கும் பார்த்து சொல்லேன்.

இல்லங்க சரியாத் தான் இருக்கும் ...தப்பாக வாய்ப்பே இல்லை.

இங்க பாருங்களேன் ...இப்படி கையை மடக்கிகிட்டு பார்த்தா விரல் முட்டி தெரியுதா? சுட்டு விரல் முட்டியில இருந்து கவுண்டிங் ஸ்டார்ட் பண்ணலாம் ...ஜனவரி ..பிப்ரவரி...மார்ச்...ஏப்ரல்...

மேடெல்லாம் முப்பத்தியொரு நாட்கள் ...

பள்ளமெல்லாம் முப்பது நாட்கள்...

மூணாம் கிளாஸ்ல "சரோஜினி " டீச்சர் சொல்லிக் கொடுத்தது .அவ்ளோ சீக்கிரம் மறக்குமா என்ன?

கொஞ்சமே கொஞ்சம் ஆச்சரியமாய் பார்த்து விட்டு ... ஹே எனக்கும் தான் சொல்லிக் கொடுத்தாங்க ..சட்டுன்னு மறந்திட்டேன் பார்...அஷ்வியின் கணவர் வேக வேகமாய்ச் சொல்ல ...

ஆமாமாம் ...சொல்லிக் கொடுத்திருப்பாங்க ...சொல்லிக் கொடுத்திருப்பாங்க ...சொல்லி விட்டு அவள் சிரிக்க ...ஆமாமில்ல என்று கூடச் சிரித்தாலும் ... தலை வலிக்குது ரிப்போர்ட் எழுதி போய் ஸ்ட்ராங்கா ஒரு காபி எடுத்துட்டு வாயேன் என்றார் .

ஹூம் ...அப்பாவானாலும் ...கணவரானாலும் ஆண்கள் ...ஆண்கள் தான்...தனக்குள் மெல்லச் சொல்லிக் கொண்டாள் அஷ்வி !!!

Friday, November 20, 2009

வாங்க...வாங்க சைக்கிள் விடலாம்.

இப்படி யோசித்து பார்த்தேன் நன்றாகவே இருக்கிறது ...கூடவே சுவாரஸ்யமும் கூட...அப்புறம் ஒரு சின்ன திருப்தி கூட உண்டு .

வயதான பாட்டி கால் பந்தாட்ட மைதானத்துக்கு அருகில் நடந்து போய்க் கொண்டு இருக்கிறார்,எதோ ஒரு கணத்தில் பந்து தவறிப் போய் அவரது காலடியில் வந்து விழுகிறது ,பாட்டி அதை அமைதியாக சின்னச் சிரிப்புடன் எடுத்து பந்தை உதைத்த இளைஞனிடம் தருகிறார். இது இயல்பான நிகழ்வு.

அதே பாட்டி காலடியில் உரசும் கால்பந்தை எல்லையில்லாக் குறும்புடன் எட்டி உதைத்து விட்டு தானும் அந்த விளையாட்டில் கலந்து கொள்ளப் போவதைப் போல நிற்பதாக கற்பனை செய்யலாம் தான்...ஏன் பாட்டிகள் சும்மா...அட சும்மா விளையாட்டுக்கு கால் பந்து விளையாடக் கூடாதென்று ஒன்றும் சட்டமில்லையே!!!

நடுத்தர வயதை தாண்டிய அத்தையோ அல்லது அம்மாவோ ஒரு பூங்காவில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர் ...ஏதோ ஒரு கணத்தில் அத்தையோ ...அம்மாவோ முகமெல்லாம் த்ரில்லுடன் எழுந்து போய் சிறுவர்கள் சறுக்கி விளையாடும் சறுக்கு மரத்தில் ஒன்றுக்கு இரண்டு முறை அட்டகாசமான சந்தோசத்துடன் சறுக்கி முடித்து விட்டு வந்து மறுபடி பேச அமர்ந்தால் அதை நம்மால் ரசிக்க முடியாமலா போய் விடும்?!

பழைய எம்.ஜி.ஆர் பாட்டுக்கு ஒட்டு மொத்த குடும்பத்தினர் முன்னும் தாளம் போட்டு டான்ஸ் ஆடும் தாத்தா ...அதை ரசிப்பதோடு கூட ஆடும் பாட்டி.

மழை வந்ததும் ரெயின் டான்ஸ் ஆடும் அப்பாக்கள் ...அதை தடுக்காமல் கூட நனையும் அம்மாக்கள் .

வயதாகிறது என்ற நினைப்பே இல்லாமல் அதை வலிந்து மறந்து விட்டு செப்பு வைத்து விளையாடும் குழந்தைகளோடு குழந்தைகளாய் ஆற்று மணலை அரிசிச் சோறாய் பாவனை செய்து வெறும் தண்ணீரை சாம்பாராகவும் ...உதிர்த்த முருங்கைப் பூக்களை கூட்டு பொரியலாகவும் சுகமான கற்பனை செய்து கொண்டு ஏதோ ஒரு நாளேனும் விளையாடித் தீர்க்கும் மனம் கொண்ட அத்தைகளும்...மாமாக்களும் ...

கண்ணா மூச்சோ ...கொலை கொலையாம் முந்திரிக்காயோ எந்த விளையாட்டானாலும் குடும்பத்தோடு என்றேனும் ஓர்நாள் ஒரே ஒரு நாள் ஆடிப் பார்த்து விடும் ஆரோக்கியமான ஆசைகள் உள்ள மனிதர்கள் நிறைந்த வீடு ...பிரியம் சமைக்கிற கூடு.

வாழ்க்கையில் இன்னும் சுவாரஸ்யங்கள் மிச்சம் இருக்கின்றன.

நம்புங்கள் ...

நம்பலாம் .

சில திரைப்பட உதாரணங்கள் :

சம்சாரம் அது மின்சாரம் படத்தில் குடும்பத்தோடு எல்லோரும் கொலை கொலையாம் (குலை குலையாம்..)முந்திரிக்காய் விளையாட்டை ஒரு பாடலில் ஆடுவதைப் போல காட்சி இருக்கும்.

மீரா ஜாஸ்மின் தோன்றும் ஒரு டீ விளம்பரத்தில் தாத்தா எம்.ஜி.ஆர் பாட்டுக்கு டான்ஸ் ஆடுவார்.

ரெயின் டான்ஸ் பல படங்களில் குழந்தைகளோடு பெரியவர்களும் ஆடுவதைப் போல பல படங்களிலும் பார்க்கிறோம் தானே?!(ரிதம்...)

எல்லாவற்றையும் விட எனக்கு மிகப் பிடித்த விஷயம் ஒன்றே ஒன்றுண்டு அது ஊஞ்சலில் உட்கார்ந்து ஆடுவது. எந்த வயதிலும் இது அலுக்காத ஒரு செய்கை. இப்போதும் கூட கிண்டி சிறுவர் பூங்காவிலோ அல்லது வேறு ஏதோ பூங்காக்களிலோ பார்க்கலாம் வயது வித்யாசம் பாராமல் சிலர் ஊஞ்சலில் உட்கார்ந்து வீசி வீசி ஆடி ரசிப்பதை.

வேகம் கூட...கூட ஜிவ்வென்று வானத்தில் பறப்பதைப் போல ஆனந்தம் பொங்கும் அற்புத ஆடல் அது.அதனால் தானோ தெய்வங்களையும் ஊஞ்சலில் வைத்து ஆட்டி உள்ளம் குளிர்விக்கிறோமோ என்னவோ?! மீனாட்சி அம்மையின் ஊஞ்சல் விளையாட்டை பிள்ளைத் தமிழில் ரசிக்கலாம்.

வீட்டில் நீளமான பலகை ஊஞ்சல் வாங்கி மாட்டி ஆட இடம் இருந்தால் கண்டிப்பாக ஒரு ஊஞ்சல் வாங்கி மாட்டி விடுங்கள் ... டென்சன் குறையும்.

அப்புறம் மனமிருந்தால் எந்த வயதிலும் சைக்கிள் விடலாம் ...அது கூட ரிலாக்ஸ் செய்து கொள்ள மிகச் சிறந்த வழி தான். கண்களைக் குளிர்விக்க பச்சை பசேல் மரகத மலைகள்...சைக்கிள் வழுக்கிக் கொண்டு நழுவ நிரடல் இல்லா தார்ச் சாலை ,எதிர் காற்றில் முகம் தழுவும் ஜில் ஜில் குளிர்...எல்லாம் கிடைத்தால் எண்பது (80)வயதிலும் சைக்கிள் விடலாம். அது ஒரு பரவசம் தான்!!!

இன்னும் நிறைய சுவாரஸ்யங்களுக்கு குறைவில்லை தான்.

இப்போதைக்கு இது போதும்.

அடிக்கடி ...எந்நேரமும் ...அட...சதா எல்லா நேரமும் இல்லா விட்டாலும் கூட எப்போதேனும் ஒரு நாள்..ஒரே ஒரு நாள் மட்டுமேனும் வயதை மறக்கலாம் தவறில்லை.

Thursday, November 19, 2009

நிசப்தம் ...(வெறுமே ஒரு கற்பனை வரையறை)



தலைக்கு மேலே மேகங்கள் மிதப்பதே அறியாமல் மிதந்து கடக்க அறிந்தும் அறியா பாவனையற்ற பார்வையுடன் லயமில்லா லயத்துடன் லஜ்ஜையின்றி ஒரு பறவையின் அலட்டல் அல்லாத வெது வெதுப்பான மிதமான சிறகசைப்பின் லாவகம் தப்பாமல் பறப்பதே தெரியாமல் பறப்பதைப் போல ரசிப்பில்லா ரசனையுடன் ஆளற்ற குளக்கரையின் அசட்டையான படித்துறையின் அசைந்தும் அசையா ஆலமரத்துக் கிளை நுனியின் கட்டக் கடைசி நிழல் தொட்டும் தொடாமல் உச்சந்தலையில் பட்டும் படாமல் அசைந்தும் அசையாமல் தொட்டுத் தடவ தலைக்கு மேலே மேகங்கள் மிதப்பதே அறியாமல் மிதந்து கடக்க அறிந்தும் அறியா பாவனையற்ற பார்வையுடன் ................


இது வெறுமே ஒரு கற்பனை வரையறையே ...நிசப்தம் இந்த சொல்லை எப்படி வரையறுக்க இயலும் ?!,அது புரிதல் சார்ந்ததே.எனக்குத் தோன்றியதை வெறுமே பதியத் தோன்றியது .

அவியல் செய்முறை




தேவையான பொருட்கள் :

அவரைக்காய்- நூறு கிராம்
கத்தரிக்காய் -நூறு கிராம்
பீன்ஸ் -நூறு கிராம்
சேப்பங்கிழங்கு -நூறு கிராம்
உருளைக் கிழங்கு - ஒன்று
முருங்கை காய் -ஒன்று
வாழைக்காய் -ஒன்று
புடலங்காய் - நூறு கிராம்
தேங்காய்- அரை மூடி
கெட்டித் தயிர் -ஒரு கப்
பச்சை மிளகாய் - பத்து
சீரகம்- இரண்டு டீ ஸ்பூன்
கருவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு
தேங்காய் எண்ணெய் - கால் கப்

அவிக்க :

முதலில் சொல்லப் பட்ட காய்கறிகளையும்,கிழங்கு வகைகளையும் அளவில் சற்றே பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும் ,பிறகு ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் கலந்து தேவையான உப்பு சேர்த்து காய்கள் முங்கும் அளவு தண்ணீர் ஊற்றி மேலாக ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் விட்டு குக்கரில் இரண்டு விசில் வரும் வரை வேக வைக்கவும் .வேக வைக்கப் பட்ட காய்கறிகளை எடுத்து அதிலிருக்கும் நீரை வடிகட்டி பிரிக்கவும்.

அரைக்க :

அரை மூடி தேங்காயை துருவி அல்லது நறுக்கி அதனோடு இரண்டு டீ ஸ்பூன் சீரகம் பத்துப் பச்சை மிளகாய்கள் சேர்த்து மையாக அரைத்து எடுத்து ஒரு கப் கெட்டித் தயிரில் கலந்து வைத்துக் கொள்ளவும் .

அவியல்:

அரைத்து எடுத்த தேங்காய் தயிர் கலவையில் முன்பே வேக வைத்து எடுத்துக் கொண்ட காய்கறிகளைப் போட்டு நன்றாகக் கொதிக்க விட்டு இறுதியாக தேங்காய் எண்ணெய் விட்டு ஒரு கைப்பிடி கருவேப்பிலையும் தூவி கிளறி விட்டு இறக்கிப் பரிமாறலாம் .இதற்க்கு தாளிதம் அவசியமில்லை.

அடைக்கு மிகப் பிரமாதமான சைடு டிஷ் அவியல் தான்,முன்பே அடை பதிவு போடும்போதே அவியல் செய்முறையும் போட்டிருக்கலாம்,ஆனால் அப்போது அவியல் செய்து பார்த்திராத காரணத்தால் எழுதவில்லை. அருமையான காலை டிபனுக்கு அடை அட்டகாசமாய்
பொருந்தும்,நிறையகாய்கறிகளும் பருப்புகளும் கலப்பதால் நல்ல சத்து மிக்க உணவும் கூட.

குறிப்பு :-

இன்னும் நிறைய காய்கள் சேர்த்துச் செய்ய விரும்பினால் அப்படியும் சேர்க்கலாம். என்னென்ன காய்கள் சேர்க்க வேண்டும் என்பது சாப்பிடுபவர்களின் விருப்பத்தைப் பொறுத்தது.

நன்றிகள்:

அவியலுக்கான பொருத்தமான படத்தை கூகிளில் தேடியதில் இந்தப் படம் நன்றாக இருந்தது, படம் உதவிக்கு நன்றி mykitchenpitch

Tuesday, November 3, 2009

இலந்தைப் பழமும் இன்ன பிறவும்...

ஜல்லிக் கட்டு,ஒற்றை மாட்டு ரேக்ளா வண்டி,ரெட்டை மாடு பூட்டிய வில் வண்டி,வாய்க்கூடு கட்டிய குதிரை வண்டிகள்,சிவகாசி..சாத்தூர்ப் பக்கம் பனை ஓலைப் பெட்டியில் வைத்துக் கட்டித் தரப் படும் காராச் சேவு... வெல்ல முட்டாசு வகையறா (இதை மிட்டாய் என்றும் சொல்கிறார்கள் ) ,இதை எல்லாம் ரொம்பத் தான் மிஸ் பண்ணுகிறோம் என்ற உணர்வு வந்ததும் சுதாரிக்க வேண்டியிருக்கிறது .

ஆமாம் வயதாகிறது தானே...நமக்கு முன்னே சில பழகிய பொருட்கள் காட்சியில் இருந்து மறைகின்றன என்றால் காலம் நம் கண்முன்னே மருட்டிக் கொண்டு நகர்கிறது என்று தானே அர்த்தம்!!!அப்போதிருந்த சில பல ...இப்போதில்லை ...காலம் மாறிப் போச்சு ...வசதிகளும் கூடிப் போச்சு ஆனாலும் அந்தக் காலம் அது ஒரு சுகம் தான்.இப்படி பழசில் உருகுதல் சரியோ தவறோ மலரும் நினைவுகள் ருசிக்கவே செய்கின்றன.

முன்பெல்லாம் வெள்ளியில்,எவர்சில்வரில், ஈயத்தில் அழகழகான பால் ஊட்டும் சங்குகள் வீட்டுக்கு வீடு இருக்கும். இப்போதெல்லாம் பாட்டில்கள் மட்டுமே,பயணத்திற்கு பாட்டில்கள் வசதி என்றாலும் கூட சங்குக் கின்ணிகள் அழகானவை. அவற்றை எல்லாம் சேகரித்து வைத்தால் இன்னும் முப்பது வருடங்கள் கழித்து பழம் பொருட்கள் என்று கண்காட்சியில் வைக்கலாம்.

முன்பெல்லாம் வீட்டு நிலைப்படிக்கு அருகில் தரையில் கோலிக்குண்டோ ,கிளிஞ்சலோ,அல்லது வெண் சங்கோ எதோ ஒன்றை மேலோட்டமாக புதைத்து அதன் மீது அழுத்தமாக சிமென்ட் பூசி இருப்பார்கள் ,வீட்டுக்குள் நுழைந்தவுடன் குழந்தைகள் அதைக் கவனிக்கத் தவற மாட்டார்கள் .அதற்கான காரணம் புரியாவிட்டாலும் பார்த்ததில் மனதில் பதிந்ததில் இதுவும் ஒன்று ,இப்போதெல்லாம் இப்படி யார் வீட்டிலும் நிலை படிக்கு அருகில் புதைப்பதில்லை போலும்.

அடர் நீல நிறப் பூக்கள் அச்சிடப் பட்ட ஹார்லிக்ஸ் பாட்டில்கள் ...என் தம்பி குழந்தையாய் இருக்கையில் வாங்கியது இப்போது அப்படிப் பட்ட வடிவங்களில் வண்ணத்தில் ஹார்லிக்ஸ் பாட்டில்கள் கிடைப்பதில்லை ,இன்னும் கூட ஞாபகத்திற்காக பரணில் கிடக்கிறது ஒன்றிரண்டு .

இலந்தைப் பழம் ...இப்போது எந்தக் குழந்தைக்காவது இப்படி ஒரு பழம் இருப்பது தெரியுமோ என்னவோ?கொடிக்காய் இதெல்லாம் வெறும் தின்பண்டங்கள் மட்டும் தானா என்ன? பால்யத்தில் தின்பண்டங்களோடு சட்டென நினைவில் நெருடக் கூடியவர்கள் அப்போதைய நண்பர்களும் அல்லவோ?!

கொய்யாப் பழமும் ,மாங்காய்ப் பத்தையும் இப்போதும் இருக்கின்றன ஆனாலும் இப்போதைய குழந்தைகள் குர் குரேவுக்கும் ...லேய்சுக்கும்...மில்க்கி பார்களுக்கும்,கிட் கேட்டுக்கும் தானே ஏங்குகின்றன.

பாண்டி ஆட்டம் எல்லாம் பரணுக்குப் போய் விட்டது ,பல்லாங்குழிகள் புதைந்து போய் விட்டன,தாயக் கட்டைகள் திசை மாறி விழுந்ததில் வீடியோ கேம்கள் இடத்தை நிரப்பிக் கொண்டு எழ மாட்டாமல் அடம் பிடிக்கின்றன. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் ...ஆனால் எனக்கே சோர்வாகத் தான் இருக்கிறது இப்படி அடுக்கிக் கொண்டே போக.

எல்லாம் மாறினாலும் இது ஒன்று மட்டும் மாறப் போவதில்லை.இன்னும் முப்பது வருடங்களுக்குப் பின் என் மகளோ மகனோ என்னைப் போலவே இப்படி சலித்துக் கொள்ளலாம் அப்போதைய புதிய மாற்றங்களைக் கண்டு .அது மட்டும் மாறப் போவதில்லை.

Monday, November 2, 2009

ராசி இல்லாத வீடு



ராசி இல்லாத வீடு

மூடநம்பிக்கை ...மூடநம்பிக்கை என்கிறோமே அதன் எல்லை தான் எது?வெறும் சம்பிரதாயங்கள் மூடநம்பிக்கையில் சேர்த்தி இல்லையா ?இன்னும் சிலர் செய்வினை என்கிறார்கள் ...செயப்பாட்டு வினை தான் தெரியும் என்று அதை புறம் தள்ளவே பெரும் தைரியம் வேண்டும் போலிருக்கிறது,இதில் எங்கிருந்து அதெல்லாம் சுத்த ஹம்பக் என்று ஒதுக்கித் தள்ள !!!

மனித இனம் தோன்றிய நாள் முதற்கொண்டே இதெல்லாம் தொடர்ந்து கொண்டே தான் இருந்திருக்கக் கூடும் போல?! வேறு வேறு ரூபங்களிலும் நம்பிக்கைகளிலும்,இதில் வாஸ்து வேறு சேர்ந்து கொள்ள அதற்கென்று கருத்து யுத்தம் நடத்தி பார்க்கும் வரை நாம் முன்னேறி இருக்கிறோம் ,சிலர் வலுக்கட்டாயாமாகவேனும் சில மூட நம்பிக்கைகளை அறவே ஒதுக்கித் தள்ளத் தான் பார்க்கிறார்கள் ,அவர்களின் பிரயத்தனம் விழலுக்கு இறைத்த நீராய் வீட்டிலுள்ள மனைவி மக்கள் மற்றுமுள்ள இன்னோரன்ன சொந்த பந்தங்களால் மீறப் பட்டுக் கொண்டே தான் இருக்கிறது .

கடந்த மாதம் நண்பர் ஒருவர் புது வீடு வாங்கி கிரகப்பிரவேசம் செய்தார். கிட்டத் தட்ட நாற்ப்பது லகரத்தை தொடக் கூடிய அளவில் நவீன வசதிகள் கொண்ட பிளாட் இரண்டே இரண்டு சயன அறைகள் ,சின்னதாக அடக்கமான சமையலறை ,கொஞ்சம் பரவாயில்லை எனும்படியான அளவில் இரண்டு குளியல் அறைகள்,படுக்கை அறையை விட கொஞ்சமே கொஞ்சம் பெரிய அளவில் ஒரு ஹால் ,இவ்வளவு தான்.சின்னதோ பெரியதோ சென்னையில் சொந்த வீடு என்பது சாமான்யர்களுக்கு சாமான்ய காரியமில்லையே!!! அப்படிப் பார்த்தால் நண்பர் அதிர்ஷ்டசாலி என்றே சொல்லலாம்.

இங்கே நாம் குறித்துக் கொள்ள வேண்டிய முக்கியமான மற்றொரு விஷயம் இது தான் .அதிர்ஷ்டம் என்று சொல்லிக் கொள்வதும் மூடநம்பிக்கையில் சேர்த்தியா இல்லையா? இது மட்டுமில்லை.

ஒரு வீட்டில் குடி இருக்கிறோம் விரும்பத் தகாத நிகழ்வுகள் ஏதேனும் அந்த வீட்டில் குடி இருக்கையில் நிகழ்ந்தால் அது மனிதச் செயல் அல்லவென்றே நம்பத் தொடங்குகிறோம்.வீடு ராசி இல்லை ...வாஸ்து சரி இல்லை.இதெல்லாம் தான் காரணம் என்று சொல்லிக் கொள்கிறோம். அப்படியா ?அது நிஜம் தானா?

வாய் பேசாப் பொருள் ...ஜடப் பொருள் சொல்லப் போனால் வீட்டைக் குறித்து நாம் தான் நமது ஞாபகங்களை வளர்த்துக் கொண்டு என் வீடு ...என் தோட்டம்...என் சமையல் அறை,என் படுக்கை அறை என்றெல்லாம் பேசிப் பகிர்கிரோமே அன்றி வீடு எப்போதேனும் பேசி இருக்கக் கூடுமோ !!! என்னுள் குடி இருக்கும் மனிதர்களை எனக்குப் பிடித்தம் இல்லை ,இதோ இன்று அவர்கள் பயணம் செய்கையில் வண்டியில் இருந்து அவர்களைப் பிடித்து கீழே தள்ளி விடப் போகிறேன், அதில் தப்பி விட்டானா சரி அடுத்த இலக்கு அவர்களது மகனோ மகளோ பள்ளி இறுதி தேர்வு எழுதப் போகிறார்களா நல்ல சான்ஸ் அவர்களை என் ராசியைக் கொண்டு ஃபெயில் ஆக்குகிறேன் பார் என்று வீடு சங்கல்பம் ஏதும் செய்து கொள்ளக் கூடுமா??! இந்த ராசி சென்டிமென்ட் மனிதர்களின் பிரத்யேகக் கண்டுபிடிப்பேயன்றி வீடென்ன செய்யக் கூடும்?!புரியத் தான் இல்லை .

செவ்வாய் வெள்ளிக் கிழமைகளில் கண்ணேறு (திருஷ்டி) கழிக்கிறோம் என்று எதையாவது செய்கிறோம் ,அமாவாசை ...பௌர்ணமிகளில் பூசணிக்காய் உடைகிறது எல்லாக் கடை வாசல்களிலும்...அகஸ்மாத்தாக கவனிக்காமல் யாரேனும் அதன் மேல் தங்கள் இருசக்கர வாகனங்களை ஏற்றித் தொலைத்தால் அவர்களது மண்டைகளும் தான் உடைகிறது சில அமாவாசை பௌர்ணமிகளில்,இதற்கென்ன சொல்ல?ஒருவருக்கு நல்லதை தரும் எனும் நம்பிக்கையில் செய்யப் படும் சடங்கு சம்பிரதாயங்கள் அடுத்தவருக்கு கெடுதல் இழைப்பதில் முடிகிறது.

ஒரு மாமி தன் பெண்ணின் திருமணத்தை முன்னிட்டு தன் வீட்டை ஒட்டி இருந்த அவரது காலி மனையை விற்று விட்டார் ,அதை விலைக்கு வாங்கியவர் அங்கே அடுக்கு மாடி வீடு கட்டி வாடகைக்கு விட்டு நல்ல வருமானம் பார்க்க ஆரம்பித்தார்,மாமிக்கு ஏற்ப்பட்ட மன வருத்தத்தை சொல்லி மாளாது,இதற்குள் எந்த கடமைக்காக மனையை விற்றாரோ அந்தப் பெண்ணும் கணவன் சரியில்லை என்று வாழவெட்டியாக பிறந்தகம் வந்து விடவே மாமியின் வயிற்றெரிச்சலை சொல்லில் விளக்கி விட இயலாது .

தன் கண்முன்னே தனது காலி மனை அடுக்குமாடி வீடாக மாறி அங்கே கலகலவென்று மனிதர்கள் புழங்குவதைக் கண்டு மாமி புழுங்கித் தவித்தார் ...ஐயோ இடம் போச்சே ...போச்சே என்று , மாமி இப்படிப் புலம்புபதைக் காதால் கேட்ட சிலர் தங்களுக்குத் தெரிந்த கதைகளை இட்டுக் கட்ட சமயம் பார்த்தனர்.

காக்காய் உட்காரப் பனம் பழம் விழுந்த கதை போல அடுக்கு மாடி வீட்டில் குடி இருந்த ஒரு குடித்தனக்காரருக்கு எதிர் பாராமல் தொழிலில் நஷ்டம் வர அவர் தொழிலை ஏறக் கட்டி விட்டு விற்றது போக மிச்சம் மீதி இருந்த பணத்தில் எளிமையாக ஒரு வீட்டை வாங்கிக் கொண்டு வாடகை வீட்டைக் காலி செய்து விட்டுப் போய் விட்டார்.

அடுத்து அந்த வீட்டுக்கு குடி வந்த மற்றொரு குடும்பத்தில் வயது முதிர்ந்த பெரியவர் ஒருவர் எண்பது வயதிலும் ஆரோக்கியமாக இருந்தவர் இந்த வீட்டுக்கு வந்ததும் சில மாதங்களில் உடல் நலக் குறைவால் இறந்தார். இதையும் முன்னதையும் சம்பந்தப் படுத்தி பேச நல்ல சந்தர்பம் அமையவே பேசும் நாக்குகள் வேலையை ஆரம்பித்தன.

வீடு ராசி இல்லாத வீடு

மாமி வயித்தெரிச்சல் தான் அங்க குடி இருக்கறவங்களை இந்தப் பாடு படுத்துது .

வேற வீடே இல்லையா என்ன?

இந்த வீட்டுக்கு போய் குடி போகனுமா?

அதென்னவோ முந்தியெல்லாம் காட இருந்த இடம் தானே இதெல்லாம் அங்க காத்து கருப்பு நடமாட்டம் இருந்துச்சோ என்னவோ ?இல்லனா குடி இருக்கறவங்களை இப்படியெல்லாம் கஷ்டப் படுத்தக் கூடுமா? என்னவோ இருக்கு அந்த இடத்துல?!!!!

அந்த இடத்தை வித்து தான் மாமி தம் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வச்சா...என்ன ஆச்சு சுவத்துல அடிச்சா பந்தாட்டம் மறு மாசமே பொண்ணு திரும்பி வந்துட்டா...என்னமோ இருக்குடீ அங்க..அம்புட்டு தான் ...கதை முடிஞ்சது .

வீடு ராசி இல்லாத வீடு .

இதில் குறிப்பிடத் தகுந்த சங்கதி ஒன்றை கட்டாயம் சொல்லித் தான் ஆகா வேண்டும் ,மனையை விற்ற மாமிக்கு ஒன்றும் நஷ்டம் இல்லை ,நல்ல விலைக்கு தான் விற்று பனம் வாங்கிக் கொண்டார்.விலைக்கு வாங்கியவருக்கும் நஷ்டமே இல்லை கட்டிய வீட்டை வாடகைக்கு விட்டு நல்ல லாபம் பார்க்கிறார் அவரும். குடி இருப்பவர்களை மாட்டும் வீட்டு ராசி பாடாய்ப் படுத்துகிறதாம். என்னய்யா கொடுமை இதென்றால்?

கொடுத்தவங்களும் வாங்கினவங்களும் அந்த இடத்துல குடி இருக்கலை இல்ல ? அந்த இடத்தை அனுபவிக்கிறவங்களுக்குத் தானே அதோட பலன் .அப்படிப் பார்த்தா குடி இருக்கிறவங்களைத் தானேப்பா பாதிக்கும்!!!

இதைப் படிப்பவர்கள் யாரேனும்

இப்போதேனும் சொல்லுங்கள் மூடநம்பிக்கை...மூட நம்பிக்கை என்கிறோமே அதன் எல்லை தான் எது ?!!!
நோட்: -
படம் கூகுளில் தேடி எடுக்கப் பட்டது அதற்கும் இந்தக் கட்டுரைக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை .

Sunday, November 1, 2009

கணவர்களின் வாயை அடைப்பது எப்படி?!

யாரோ சொன்னார்கள் கணவனது வயிற்றின் வழியாக அவனது மனதைச் சென்றடையலாம் என்று,சில நாட்கள் இந்த வரிகளுக்கான அர்த்தம் அத்தனை தெளிவாகப் புரிந்திருக்கவில்லை,ஒரு வார்த்தையின் அர்தத்தம் புரிதல் என்பது வெறுமே அதற்கான பொருளை அறிதல் அல்லவே, உணரப் படல் என்பது தானே சரியாக இருக்கும் .

அப்படித் தான் அஷ்விதாவுக்கு கல்யாணம் ஆகி ஆறேழு வருடங்கள் கழிந்த பின் தான் மேற்சொன்ன வார்த்தைகளுக்கு அர்த்தம் விளங்கியதாம்,எப்படித் தெரியுமா?

வீட்டுக்கு வீடு வாசப்படி கதை தான் .

அஷ்விதாவுக்கும் அவளது கணவருக்கும் தலைவலி காய்ச்சல் போல எல்லாம் அல்ல நேர நேரத்துக்குப் பசி எப்படி வருமோ அதே போல வாக்கு வாதமும் அவ்வப்போது வந்து வந்து போகும்...வரும் ...அப்புறம் போகும் !!!

அஷ்வியின் கணவர் எத்தனை நல்லவராய் இருந்தும் ஒரு மனஸ்தாபம் அல்லது சண்டை என்று வந்து விட்டால் பேசி பேசியே கொன்று விடுவாராம் மனிதர்.அவர் வாயை அடைக்க வேறெந்த யுக்தியும் இன்றி அஷ்வி ரொம்பவே இன்னல் பட்டிருக்கக் கூடுமோ என்னவோ?!

எல்லாம் கொஞ்ச நேர மனஸ்தாபம் தான்...காலையில் பணிக்குக் கிளம்பும் போது ஆரம்பிக்கும் வாக்குவாதம் சாப்பாட்டுத் தட்டுக்குப் பக்கத்தில் வந்ததும் சட்டென முறியும் ,மதியம் மறுபடி வரும்...வராமலும் போகலாம் அது வேறு விஷயம்;

அப்போதெல்லாம் அவள் கண்களை குளமாக்கி கன்னங்களை வாய்க்காலாக்கிக் கொண்டு அழுகையில் கரைவதை அவர்களது மூன்று வயது குட்டி சுட்டிப் பெண் சம்யூ (சம்யுக்தா) பார்த்துக் கொண்டே இருந்திருக்கக் கூடும் போல!?

காலங்கள் உருண்டன அஷ்வி எதையும் உணர்ந்தாலோ இல்லையோ ?

சம்யூ எதையோ உணர்ந்திருக்கக் கூடும் போல?!

சம்யூவுக்கும் ஐந்து வயது ...

வழக்கம் போல அம்மாவும் அப்பாவும் எதற்கோ கத்திப் பேசிக் கொண்டு வாக்குவாதம் பண்ணிக் கொண்டு இருக்கையில் மெல்ல அம்மாவின் கையைப் பற்றி இழுத்து அவளைக் குனிய வைத்து காதருகே கிசு கிசுப்பாய் ரகஷியம் போல ஒரு விஷயம் சொல்லி விட்டு வெளியில் விளையாட ஓடி விட்டாள்.

இந்தியா ...பாகிஸ்தான் யுத்தம் போல வெகு உக்கிரமாய் நடந்து கொண்டிருந்த சண்டையின் நடுவே அஷ்வி பக்கென்று சிரித்து விட அவளது கணவரும் இதென்னடா ..பைத்தியம் என்பது போல அவளைப் பார்க்க ,

அஷ்வி தீபாவளிக்கு செய்து வைத்திருந்த ரவா லட்டு ஒன்றை எடுத்து வந்து அவளது கணவரின் வாய்க்குள் திணித்தாள்.

கடு கடுப்பாய் மேலே எதோ பேச வந்த கணவனும் வாய்க்குள் இருந்த லட்டின் சுவையால் உடனே பேச வழியின்றி அதை துப்பவும் மனமின்றி அதை ரசித்து உண்பதில் முனைய அஷ்விக்கு அடக்க மாட்டாமல் சிரிப்பு வந்தது .

"சம்யூ சொன்னா சாமி சொன்ன மாதிரி " எப்போதோ ஒரு ஜோசியக் காரன் ஜாதகம் பார்க்கப் போன போது கொளுத்திப் போட்ட புகழ் வார்த்தை ஒன்றை அஷ்வியின் கணவர் அடிக்கடி சொல்வாராம் ...பெண்ணின் மேல் தகப்பனுக்கு அத்தனைப் பிரியம் போலும்!

அதுவே தான் நடந்ததாம் ...

சம்யூ என்ன சொல்லியிருப்பாளாய் இருக்கும்.

"அப்பா வாயை அடைக்கனும்னா ரவா லட்டு எடுத்து வாய்க்குள்ள திணிச்சுடும்மா " அப்புறம் பேச முடியாது பார்...

குழந்தை உணர்ந்து சொன்னாலோ விளையாட்டாய் சொன்னாலோ எது எப்படியோ மனைவியின் சுவை மிகுந்த கை மணம் சண்டை சச்சரவுகளின் போது மனைவிக்கு ஒரு வரப் பிரசாதம் தான் என்பதில் ஐயமில்லை .

இப்போது புரிகிறதல்லவா பதிவின் முதல் வரியில் சொல்லப் பட்ட வாக்கியத்தின் அர்த்தம்?!

சுபம்

அடைதோசை



அடைதோசை :


தேவையான பொருட்கள் :
அரிசி - ஒரு கப்
கடலைப் பருப்பு -அரை கப்

பாசி பருப்பு - இரண்டு டேபிள் ஸ்பூன்

துவரம் பருப்பு - இரண்டு டேபிள் ஸ்பூன்

உளுந்தம் பருப்பு - ஒரு டீ ஸ்பூன்

சின்ன வெங்காயம் - 10 உரித்தது

தக்காளி - ஒன்று (பெரியது)

காய்ந்த மிளகாய் வற்றல் - 5 அல்லது ஆறு

சீரகம் - ஒரு டீ ஸ்பூன்

கருவேப்பிலை &கொத்து மல்லித் தளை - கைப்பிடி அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை :

அரிசி மற்றும் தேவையான பருப்பு வகைகளை மேற்சொன்ன அளவுகளில் எடுத்துக் கொண்டு ஒரு மணி நேரம் நீரில் ஊற வைக்கவும் , இட்லிக்கு அரைப்பதைப் போலவே ஆனால் கொஞ்சம் கரகரப்பாக அரைத்து கடைசியாக வெங்காயம் ,தக்காளி (பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும் ),காய்ந்த மிளகாய்,சீரகம் போன்ற பொருட்களையும் சேர்த்து அரைத்த பின் மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்து பிரிஜ்ஜில் ஒரு மணி நேரம் வைத்து பின்பு எடுத்து அடையாக ஊற்றி சாப்பிடலாம் ,அடைக்கு சாதா தோசையைக் காட்டிலும் தோசைக்கல்லில் சிறிது எண்ணெய் அதிகம் விட்டு திருப்பிப் போட்டு வேக வைத்தால் சுவை அருமையாக இருக்கும் .

அடைக்கு அவியல் பிரமாதமான சைடு டிஷ் ,அதைத் தவிர்த்து அவசரத்திற்கு காரச் சட்னியோ அல்லது தேங்காய் சட்னியோ கூட செய்து சாப்பிடலாம் நன்றாகவே இருக்கும். காலை டிஃபனுக்கு அருமையான உணவு .

அடை பதிவுக்குத் தோதான படம் கூகுளில் தேடியதில் கிடைத்தது ,
நன்றி கதம்பம்.ப்ளாக்ஸ்பாட்.காம்