Wednesday, March 11, 2009

ஒற்றனும் மகா ஒற்றனும் (அசோகமிதரனின் ஒற்றன் ஒரு மேலோட்டமான நோக்கில்)

ஒற்றனை வாசிப்பவர்கள் கட்டாயம் இவர்களை மறக்க முடியாது.

யார் அவர்கள்?

ஜான் பீன்

இலாரியா

வபின்ஸ்கி

வென்டூரா

அபே குபேக்னா

பிராவோ

விக்டோரியா

கஜூகோ

ஜிம்

சூஸி

இன்னும் சிலரும் இருக்கத்தான் செய்கிறார்கள் ...ஆனாலும் கவனம் கலைப்பது இவர்களே ,மேலும் இந்நாவலில் "டகரஜான்" என்றொரு பெயர் வருகிறது...கஜூகோ தன் இந்திய எழுத்தாள நண்பரை இவ்விதம் அழைக்கிறாள் .அவ்வகையில் "டகரஜான்" என்பது நமது நாவல் ஆசிரியர் அசோகமித்திரன் தான் என்பது புலனாகின்றது.அசோகமித்திரன் எங்கனம் டகரஜான் ஆனார் என்பது கொஞ்சம் புரிந்தும்..புரியாமலும் இருக்கையில் அடுத்தடுத்த அத்தியாயங்கள் ஈர்க்கின்றன .ஆங்கில உச்சரிப்பில் இப்படியும் பெயர் திரிந்து போகலாம் என்பது புரிய சற்று நேரம் ஆகத் தான் செய்கிறது.

சரி இனி நாவலுக்குள் செல்வோம் .

நாவலின் முகப்பில் ஆசிரியர் கூறி இருப்பதைப் போல ...

இங்கே ஒரு நாயகன்...ஒரு களம்(ஐக்கிய அமேரிக்கா )

ஒரு கால கட்டம்-(1973- 1974) .......அமெரிக்காவின் அயோவா சிட்டி பலகலைக் கழகத்தில் நடைபெறும் "சர்வ தேச எழுத்தாளர்கள் கலந்து கொள்ளும் ஒரு கருத்தரங்கத்திற்கு இந்தியாவின் சார்பில் நமது நாயகன் அழைக்கப் படுகிறார், நாயகன் இங்கு எழுத்தாளர் அசேரகமித்ரனாகவே இருக்கக் கூடும் .

வெறும் ஒருநாள்...ஒரு வாரத்தில் முடியும் நிகழ்ச்சி அல்ல அது...சுமார் ஏழு மாதங்கள் சக அயல் தேசத்து எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்கள் இவர்களைத் தவிரவும் அயோவா பல்கலை கழகத்தில் பயிலும் இதர மாணவ மாணவிகள் இவர்களுடனே உண்டு உறங்கி பயணித்து முடிக்க வேண்டிய ஒரு நிகழ்ச்சி அது.

அங்கே எழுத்தாளர் சந்திக்கும் பல்வேறு மாறுபட்ட குணாதிசயங்கள் கொண்ட மனிதர்களையும் ...அவர்களுடைய திறமைகள் மற்றும் அடாவடித் தனங்கள்...சில நேரங்களில் முட்டாள் தனங்கள் ...இயலாமைகள்,மனித குணங்களின் பல மாறுபட்ட பல வடிவங்களை தமது அனுபவங்களின் வாயிலாக சிறு நகைச்சுவை இழையோட தொகுத்து அளித்துள்ளார்.

ஜான் பீன் என்பவன் இவர்களை ஒருங்கிணைத்து அழைத்துச் செல்லப் பணிக்கப் பட்ட ஒரு அமெரிக்க விரிவுரையாளன் .முதல் aத்தியாயத்தில் அறிமுகம் ஆகி இடையிடையே சில இடங்களில் தென்பட்டு கடைசியில் டகரஜானை இந்தியாவுக்கு விமானம் ஏற்றி அனுப்பி வைக்கும் வரை நாம் ஜானை நாவலில் புறக்கணிக்க இயலாது. தன் பணியை செவ்வனே செய்யும் ஒரு மனிதனாக இவனை ஆசிரியர் அறிமுகப் படுத்தியுள்ளார்.அவ்வளவே!

அடுத்த நபர் வென்டூரா ...பிரேசிலைச் சேர்ந்த நீக்ரோ இனத்தவன் ஆன வென்டூரா கொஞ்சமே நாவலில் வந்தாலும் மிக அழுத்தமான குணாதிசயம் .சிவப்பு ஒயினை அளவுக்கு அதிகமாக அருந்தி விட்டு மிசிசிப்பி நதிப் பயணத்தின் போது கூடை கூடையாக டகரஜானின் மீது வாந்தி எடுக்கும் போதாகட்டும் ...இப்போதே வா என வற்ப்புறுத்தி அழைத்துச் சென்று "கே. மார்ட் எனும் பிரபலமான அமெரிக்க சூப்பர் மார்க்கெட்டில் "டைப் ரைட்ட்ர்" வாங்கும் போதாகட்டும் ...வாங்கிய சாதனத்தை உபயோகிக்கத் தெரியாமல் ரிப்பேர் செய்து விட்டு உடனே டகர ஜானை அடம்பிடித்து அழைத்துப் போய் வேறு " டைப் ரைட்ட்ர் "வாங்கிக் கொண்டு வந்ததாகட்டும் .வென்டூரா ஒரு வித்யாசமான நபர் இங்கு .

முதல் முதலாக அறிமுகப் படுத்திக் கொள்ளும் இடத்தில் ;

அசோகமித்திரன் "நான் இந்தியாவில் இருந்து வருகிறேன் என்கிறார்...வென்டூராவிடம்; அதற்க்கு வென்டூரா ..."பிரேசில் "என்கிறான். பதிலுக்கு அசோகமித்திரன் "ரொம்பப் பக்கம் தான் " என்று கூற ...வென்டூரா ...இல்லை வெகு தூரம் என்கிறான். அதற்கான காரணம் புரியாமல் யோசிக்கும் போது தான்...அவனுக்கு ஆங்கிலம் அதிகம் தெரியாது என்ற உண்மை புலப் படுகிறது.வெறும் வார்த்தைகள் தான் ஆனாலும் எத்தனை அர்த்தமுள்ளதாக்கி விட்டான் அந்த பிரேசில் நாட்டு எழுத்தாளன் என்று ஆச்சர்யம் வரத்தான் செய்யும் வாசிப்பவர்களுக்கு. மொழி தெரியாதவர்கள் மிக அருகில் இருப்பினும் இடைவெளி ரொம்ப தூரமே தான்.உண்மை தானே!?

இங்கே இலாரியாவை நாம் மறந்து விட முடியாது.தகப்பனது அன்பு உரிய வகையில் கிடைக்காமல் தாயின் அரவணைப்பில் வளர்ந்த இலாரியா தன் தாயை தினம் அடித்து கொடுமைப் படுத்தும் தகப்பனை வெறுக்கிறாள். கூடவே தான் நம்பிக் காதலித்த தன் காதலனும் தன்னை நம்பிக்கை துரோகம் இழைக்கவே அவள் மிக நொந்து சுய இறக்கத்தில் ஆழ்ந்து விடுகிறாள். பல மொழிப் புலமை கொண்ட இளம்பெண்ணான இலாரியா ஒருகட்டத்தில் டகரஜான் அவளிடத்தில் காட்டும் சின்னப் பரிவுக்கே அவரைக் காதலிக்கத் தொடங்கி விடுகிறாள். இதை அறிந்து அவளைத் தவிர்க்க விரும்பும் டகரஜான் அவளுக்காக வருந்துகிறார். பாவம் இலாரியா என்று நினைப்பதைக் காட்டிலும் அவளுக்கு அவர் சுய இரக்கத்தில் இருந்து மீண்டு வந்தால் அவளுக்கு இருக்கும் திறமைக்கு அவள் மிகப் பெரிய புகழ் அடையக் கூடும் என்று உற்சாகப் படுத்திவிட்டு பின் அவளது கண்களில் படுவதை தவிர்த்து விடுகிறார். இங்கே இவரது தர்ம சங்கடம் சில சொற்களில் நமக்கு வெகு அருமையாக விளக்கப் பட்டிருக்கும்.

குறிப்பாக எத்தியோப்பிய நாவலாசிரியரான அபே குபெக்னாவைப் பற்றி அவர் விவரிக்கும் இடங்களில் "அங்கதச்சுவை " முழுமை பெற்ற வரிகளை நாம் கண்டு சிரிக்கலாம்.எழுத்தாளர்களிலும் முட்டாள்கள் உண்டு...முரடர்கள் உண்டு ...என்பதை அபே குபெக்னாவை வைத்து அறிந்து கொள்ளலாம்.

அபே தானாக வழிய வந்து தாகறஜாநிடம் சிநேதம் கொள்கிறான்.ஆனாள் அவனது நோக்கம் இவரது சிநேதம் மட்டுமே அல்ல. டகரஜானுடன் சகஜமாகப் பழகும் ஒரு ஜப்பானியப் பெண் கவிதாயினியான "கஜூகோ" வின் தொடர்பைப் பெறவே அபே இவரை வலியத் தேடி வருகிறான். ஆனால் கஜூகோ என்ன காரணத்திற்காகவோ அபேயை வெறுக்கிறாள். அபே உடன் வரின் உன் நட்பும் கூட எனக்கு வேண்டாம் என டகரஜான்(அசோகமித்திரன்) இடம் சண்டையிடும் அளவுக்கு அவளது வெறுப்பு மிதமிஞ்சி நிற்கிறது அபேயிடம் .இதனால் கோபம் கொண்ட அபே நமது இந்திய எழுத்தாளரை ஒரு முறை அடித்தே விடுகிறான். அத்தோடு சரி பிறகு அவன் இவரோடு சிநேதம் பாராட்டவே இல்லை.

அயோவா சிட்டி யில் "டகரஜானை அழைத்துக் கொண்டு அபே சூட் தைத்துக் கொள்ள செல்லும் இடமும் ...வாராந்திர மளிகைச் சாமான் வாங்க அனைத்து எழுத்தாளர்களுடனும் ஷாப்பிங் சென்று மூட்டை மூட்டையாக இறைச்சியும் ...இன்ன பிற பொருட்களோடு "எனக்கு ரொம்பப் பிடிக்கும் ...எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று கூறிக் கொண்டே ஒரு குட்டி சாக்குப் பை நிறைய "மிளகாய்" வாங்கிக் குவித்து அதை எடுத்துக் கொண்டு தங்குமிடம் செல்வதும் மிக்க ரசமான இடங்கள் .மொத்தத்தில் எத்தியோப்பிய அரசரின் தம்பியின் நெருங்கிய நண்பன் என தன்னை கூறிக் கொண்ட அபே குபேக்னா ஒரு மிகச் சிறந்த முரட்டுக் கோமாளியாகவேவாசிப்பவர்களின் கருத்தில் நிறையக் கூடும்.

இவ்விதம் இந்நாவல் சொல்கிறது அபே குபேக்னா பற்றி. அபே குபேக்னா தனது எத்தியோப்பிய மொழியில் எழுதிய நாவலின் தமிழாக்கமே "ஒற்றன்" இந்நாவலை டெல்லி புத்தகத் திருவிழாவில் டகரஜான் எவ்வளவு தேடியும் அவருக்கு கடைசி வரையில் அந்த நாவல் கிடைத்த பாடில்லை .

அடுத்த நபர் பிராவோ ...போலந்து நாட்டு நாவல் ஆசிரியனான "பிராவோ " வெகு துல்லியமான திட்டமிடலுடன் கூடிய ஒரு நபராக தான் டகரஜானுக்கு அறிமுகம் ஆகிறான். ஒரு நாவலுக்கு யாரேனும் வரைபடம் தயாரிக்க இயலுமா? இதை வாசிக்கையில் எனக்கும் ஆச்சர்யமாகத் தான் இருந்தது. ஆனால் பிராவோவின் வரை படத்தை அவன் வாயிலாக விளக்கும் ஆசிரியர் பிராவோ மீது நமக்கும் ஒரு பிரமிப்பையே ஏற்படுத்துகிறார். தனது எழுத்தின் மீது தான் கொண்ட வெறியினால் "நாவல் முடியும் வரை பூட்டிய அறையைக் கூட திறவாமல் "ஏறத்தாழ ஒரு மாத காலம் யார் கண்ணிலும் படாமல் நாவலை தனது தாய் மொழியில் எழுதும் பிராவோ கடைசியில் மிக வருந்துகிறான். காரணம் ஒரு பெண். அது அவன் மனைவி அல்ல.



அந்த மட்டில் அவனது குட்டும் வெளிப் படுகிறது. எத்தனையோ அருமையாகத் திட்டமிடலாம். திட்டமிடுவதில் தான் வெகு சாமர்த்தியசாலி எனப் பிறரை நம்பவும் வைக்கலாம் சில காலத்திற்கு ...ஆனாலும் என்றேனும் உண்மை வெளிப் பட்டே தீரும். அப்படியே ஆகிறது, தனது நாவலை முடித்த பின்னும் அதில் பல குறைகள் கண்டு அதை அச்சுக்கு கொண்டு வர முடியாமல் குழப்பத்தில் ஆழ்கிறான் பிராவோ.திட்டமிடுதலில் இருந்த சாமர்த்தியம் அதை நிறைவேற்றுவதில் இல்லாமையால் பிராவோ தன் மனைவியின் வாயால் " இதுவரை நீ எழுதிய நாவல்களை இதுவே மிக மோசமானது" என்று கேலி செய்யப் படுகிறான்.



இப்படி முடிகிறது இவனுடன் ஆன நட்பு .



அடுத்து வபின்ஸ்கி ...அறைநண்பன் (ஒரே அறையைப் பகிர்ந்து கொள்கிறான்) அறை மாட்டும் அல்ல ஒரே குளிர்பதனப் பெட்டியையும். அவன் நிரப்பி வைத்த பூண்டின் மணம் கமழும் காப்பியை அருந்த இயலாமல் ...அருந்தாமல் இருக்கவும் முடியாமல் டகரஜான் பாடு படு திண்டாட்டம் .அந்த அறையில் தனி இருக்கையிலேயே வபின்ச்கியின் அம்மா இறந்து போக அவனது துயரம் கண்டு தானும் மணம் கலங்குகிறார் ஆசிரியர்.

விக்டோரியாவை பற்றி சொல்ல வேண்டுமெனில் அவள் ஒரு திறமை மிக்க பெண் என்பதை தாண்டி அவள் தனியாக நாவலோ ...கவிதையோ எழுதியவலைப் போல தெரியவரவில்லை இங்கு. சொல்லப் போனால் .மற்ற சக எழுத்தாளர்கள் அனைவரும் எழுதிய அல்லது வாசித்த சில கவிதைகளை ஒருங்கிணைத்து அவள் ஒரு மேடை நாடகம் நடத்திக் காட்டினாள்.அதில் நமது "ஞானக் கூத்தனின் "அம்மாவின் பொய்கள் என்ற கவிதையும் இடம் பெற்ற பொது அந்த நாடகத்தின் அர்த்தமே கனமுள்ளதாகி பலரையும் ரசித்துக் கை தட்ட வைக்கிறது. இதைக் கண்டு வியந்து போய்த்தான் டகரஜான் அவளிடம் பேசுகிறார். ஆக விக்டோரியாவும் இங்கே மறக்க முடியாத பெண்ணாகிறாள்.

இவளோடு கூட காணும் சக எழுத்தாளர்கள் அனைவரோடும் நட்பு வளர்க்கவே விரும்புபவலான ஜப்பானிய கவிதாயினி "கஜூகோ" இவள் தனக்குப் பிடித்த நண்பர்கள் அனைவரையுமே கட்டிக் கொண்டு முத்தமிடுவது இன்னும் அங்கதம். இவளுக்கு ஏனோ ஆப்பிரிக்கர்களை மிகப் பிடித்திருந்தும் "அபே குபெக்னாவை மட்டும் மிக வெறுக்கிறாள்?!" என்ன செய்திருக்கக் கூடும் அபே?! புரிந்தும் புரியாத புதிர் !!! ஒருவேளை அபே அவளுக்கு ஒரு முள்ளம் பன்றி போலக் கூட தோன்றி இருக்கக் கூடுமோ என்னவோ?!இப்படித் தான் விவரிக்கிறார் ஆசிரியர் இவளை.

பிறகு ஜிம் ...மற்றும் சூஸி...ஜிம் ஒரு அற்புதமான ஓவியன். சூஸி "உலோக கலைப் பொருட்கள் மற்றும் வார்ப்பட கலைப் பொருட்கள் தயாரிப்பதில் நிபுணி ...அவளது கற்பனையில் உதிக்கும் உருவங்களை எல்லாம் கலைப் பொருட்கள் ஆக்குவதில் அவள் திறம் மிக்கவள். இருவரும் ஒரே வீட்டில் ஒரே அறையில் கூட சேர்ந்து வாழ்கிறார்கள். ஆனால் தம்பதிகள் அல்ல!சூஸி யின் கணவன் மிகப் பெரும் பணக்காரன்.சூஸி க்கு விவாகரத்து தர மறுக்கும் அவளது கணவன் "புதிதாக அவளைச் சந்திக்க வரும் நபர்கள் அனைவரையுமே அவளது புதுக் காதலர்கள் என்றே எண்ணிக் கொள்வானாம்.! "ஜிம்மி சந்திக்க வரும் டகரஜானையும் அவன் சூச்யின் புது அன்னியக் காதலன் என்று எண்ணிக் கொண்டு துப்பாக்கியைத் தூக்கி கொண்டு சுட்டுக் கொள்ளத் தேடும் போது பயத்தோடு சிரிப்பும் வெடித்துக் கொண்டு தான் கிளம்புகிறது.

ஒரு எழுத்தாளர் அந்நிய மண்ணில் சர்வ தேச எழுத்தாளர்களை சந்தித்து ஏழு மாதங்கள் தங்கி அவர்களது கலாசாரத்தை கொஞ்சமேனும் அறிந்து கொண்டு நமது இந்தியக் கலாச்சாரத்தை இத்தன்னூண்டாவது அவர்களுக்கும் புரிய வைக்க முடிந்ததோ இல்லையோ ஏராளமான வாழ்வியல் அனுபவப் பாடங்களை அவர் கற்றுக் கொண்டார் என்ற நிஜம் இந்நாவல் மூலம் நமக்கு உறைக்கத்தான் செய்கிறது. இங்கு அசோகமித்திரன் அவர்கள் தனக்கு அங்கு நேர்ந்த சம்பவங்களை அல்லது தான் சந்திக்க நேர்ந்த விஷயங்கள் அனைத்தையும் மெல்லிய நகைச்சுவை இழையோட "புனை கதை "வடிவில் அளித்துள்ளமை அருமை.

அமெரிக்க குளிர்...அங்குள்ள பஸ்கள் இயங்கும் முறை ...அமெரிக்க குடும்பங்களின் விருந்தோம்பும் முறைகள் ...பனியில் உறைந்து உறைந்து விரைத்துப் போக முயலும் விரல்களை தணலில் காட்டி வெம்மை ஏற்றுவதைப் போலவே அங்கே குளிர் தாங்காது உழலும் போதும் கூட இங்கே இந்தியாவில் தனது குடும்பம் மற்றும் வீட்டைப் பற்றி எழும் நினைவுகளை அசை போடுவதிலும் அசோகமித்திரன் தனது தனித்துவத்தை பதிந்து செல்கிறார். மகன்...மனைவியுடன் தொலைபேசியில் உரையாட எழும் எண்ணம்...சென்னையின் மழைக் காலம் என்று அவர் தொட்டுச் செல்லும் இடங்கள் எல்லாமே வாசிக்க அருமையாகத் தான் இருந்தன எனக்கு.... மற்றவர்களுக்கு எப்படி என்று இந்த நாவலை வாசித்தவர்கள் யாராயினும் எனக்கு பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம்.

நாவல் : ஒற்றன்

ஆசிரியர்: அசோகமித்திரன்

வெளியீடு : காலச் சுவடு பதிப்பகம்

விலை : ரூ .100