Monday, June 15, 2009

வேடிக்கை ...?!

வேடிக்கை

அது ஒரு குட்டிப் பூரான் தான் ...பார்க்க துறு துறுவென்று வெகு ஜோராக இருந்தது ,பின்புற கொடுக்கை செங்குத்தாய் தூக்கி நுனியில் அழகாய் நெளிக்கோலம் போடும் லாவகத்தில் கொஞ்சமே கொஞ்சமாய் வளைத்து வைத்துக் கொண்டு என் வீட்டு காம்பவுண்டு சுவரின் மறுபக்கத்து மண் தரையில் இருந்து வீட்டுக்கு உள்ளே மதிலைக் கடந்து வர நெடு நேரமாய் பிரம்ம பிரயத்தனப் பட்டுக் கொண்டிருக்கிறது(ருந்தது)...

நல்ல மட்ட மத்தியானத்தில் பட்டர் பீன்ஸ் காரக் குழம்பும் ,முருங்கைகீரை பொரியலும் சாப்பிட்ட மயக்கத்தில் ஆர்ப்பாட்டமாய் என்னைக் கேளாமலே கண்ணை இழுத்த கடும் தூக்கத்தை எப்படியாவது விரட்டியே தீருவது என்ற விக்ரமாதித்ய முயற்ச்சியில் தான் நானும் அசுவாரஸ்யமாய் இலக்கே இல்லாமல் வெறுமே வீட்டின் பின்னே நீண்டு கிடந்த மலைத் தொடர்கள் ...அதற்குக் கீழே அடுக்கினார் போன்ற தென்னந் தோப்புகள் ...அதற்கும் கீழே நிறை வெயிலில் மஞ்சளாய் தகித்த மக்காச் சோளக் காடுகள்...அதற்கும் பிறகு அங்காங்கே புல் முளைத்துக் கிடந்த வெற்று மண் தரை இப்படி பார்த்துக் கொண்டே வந்தேன்...வந்தேனா ...!!!

அப்படியே வந்து அப்புறம் கடைசியில் தான் இந்தப் பூரானை இல்லை ... பூரான் குட்டியை பார்க்க ஆரம்பித்தேன். எவ்வளவு நேரமோ ? என்ன ஒரு அரைமணி நேரமோ ...முக்கால் மணி நேரமோ இருக்கலாம் போல,

பூரான் குட்டி சளைக்கக் காணோம் ...பார்த்த எனக்கும் சலிக்கக் காணோம்.அது மீண்டும் ...மீண்டும் மதிலில் ஏறுவதும் சடாரென்று சறுக்கி மறுபக்கத் தரையில் விழுவதும் மறுபடி ஏறுவதும் மறுபடி மறுபடி விழுவதுமாக இருந்தது.

பார்த்துக் கொண்டிருந்த எனக்கும் இன்றைக்கு எப்படியும் ஒரு முடிவு தெரியாமல் இந்த இடத்தை விட்டு நகரக் கூடாது என்ற ஆவல் தொற்றிக் கொள்ளவே தூக்கம் போய் தொலைந்த இடம் தெரியவில்லை .கண்களை நன்றாகக் கசக்கி விட்டுக் கொண்டு அந்தக் குட்டிப் பூரானையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு நின்றேன் ,

எப்படியோ முக்கால்வாசி மதில் ஏறி முடித்த பின்னும் கூட ஒரு முறை மண்ணில் சறுக்கி விழுந்தது பூரான்...எனக்கோ பாவமாகப் போய்விட்டது பூரானை நினைத்து ,

அது ஒரு சின்னஞ்சிறு ஜீவன் .......

அழகாய் சலிப்பே இன்றி இப்படி அரைமணி....முக்கால் மணி நேரமாய் வெறும் முயற்சி மட்டுமே இன்னும் செய்து கொண்டிருக்கிறது....இன்னும் மேலே வந்த பாடில்லை, அடிக்கடி நழுவி நழுவி மண்ணில் தான் விழுந்து கொண்டிருக்கிறது இன்னுமே...!!!

எப்போது அது மேலே வரும்?!

வேடிக்கை ....

தொடரும்...