கடந்த இரண்டு தினங்களாக என் குடியிருப்புபு வளாகத்தில் நான் கேள்விப்பட்ட இரு செய்திகள் என்னை ஒரு சேர மிகவும் வருத்தமடையும்,சிந்திக்கவும் வைத்தன,எல்லாம் இந்த விவாகரத்து கூத்துக்கள் தான் ,கூத்து என்று சொல்வது தவறு தான் ...ஆனாலும் அது இன்று கூத்துப் போலத்தானே ஆகி விட்டது .பக்கத்து வீட்டுப் பெண் மிஞ்சிப் போனால் இருபத்தியொரு வயசு தான் ...இன்னும் பைனல் செமஸ்டர் முடியாமல் இருக்கும் போதே சென்ற வருடம் திருமணம் செய்து வைத்து விட்டார்கள் அவளுக்கு ,இப்போது திடீரென்று கணவன் வீட்டில் நிறையக் கட்டுப்பாடு சுதந்திரமேஇல்லை என்று கண்ணைக் கசக்கிக் கொண்டு அம்மா வீட்டுக்கு வந்தாயிற்று .பிறகொரு பெண் என் பாப்புவின் கிளாஸ் மேட் நிம்மியின் அம்மா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஐந்து வயதில் பெண் குழந்தை இருந்தும் இன்னமும் அந்தக் குழந்தையை அவளது அப்பா வந்து பார்க்கவே இல்லையாம் ,விவாகரத்து வழக்கு கோர்ட்டில் நிற்கிறதாம் .மிஞ்சிப் போனால் அந்தப் பெண்ணிற்கு இருபத்தி எழு அல்லது இருபத்து எட்டு வயதே ஆகக் கூடும் .
ஒரு வேலை விவாகரத்து ஆனால் மறுமணம் செய்து கொள்வாரா எனப் புரியவில்லை ,எத்தனை காலத்தை தனிமையில் தள்ள முடியும் ஒரு இளம் பெண்ணால்,அம்மா ...அப்பா காலத்திற்குப் பிறகு? தனிமை போலொரு கொடிய சாத்தானை ஈரேழு உலகிலும் காண முடியாது (தனிமையில் இருப்பவர்களைக் கேட்டுப் பாருங்கள் தெரியும்) இன்னொரு பெண் கல்யாணமான மறுநாளே தன் கணவரால் "மனநிலை சரி இல்லாதவள் என்று முத்திரை குத்தப் பட்டு அம்மா வீட்டில் இருக்கிறாள்,பார்க்க லட்சனமாகப் பதவிசாக இருக்கும் அந்தப் பெண் கொஞ்சம் வெகுளி என்பது தான் நிஜம்,மற்றபடி பைத்தியமேல்லாம் இல்லை,ஆனாலும் இன்று அம்மா வீட்டில் வீட்டை விட்டு எங்கே செல்லவும் பயந்து கொண்டு மாலை ஆறு மணிக்கெல்லாம் கதவடைத்துக் கொண்டு உள்ளேயே கிடப்பார்கள் தாயும் மகளும்,அண்ணன் ஒருவன் வடமாநிலத்தில் பணியிளிருக்கிறான் ,அவன் வரும் விடுமுறை காலங்கள் தவிர மாற்ற நாட்களெல்லாம் அவர்களது வீட்டு ஜன்னல் கதவு கூட சாத்தப்பட்டே இருக்கும்(தனிமை தந்த பயம் அந்த பெண்ணை இன்னும் கொஞ்ச நாளில் பைத்தியமாகவே ஆக்கினாலும் ஆச்சர்யப் படுவதற்க்கில்லை ,
இந்த மூன்று பெண்களின் வாயிலாக நான் அறிந்து கொண்ட உண்மை பெண்களுக்கு கல்யாணம் செய்து வைப்பது மட்டும் முக்கியமில்லை...அதற்குப் பின்னான வாழக்கை எப்படிப் பட்டதாகவும் இருக்கலாம் அதையும் சாமர்த்தியமாக அணுகி இடையில் வரும் கஷ்ட நஷ்டங்களையும் புத்திசாலித் தனமாகக் கையாள வேண்டியதின் அவசியத்தையும் வளரும் இளம் பெண்களுக்கு அவரவர் அம்மாக்கள் சொல்லிக் கொடுத்தே ஆகவேண்டும் .இல்லாவிட்டால் பெருகும் விவாகரத்துகளை தவிர்க்கவே முடியாது போகும் .இதனால் பாதிக்கப் படுவது பெரும்பாலும் பெண்களும்(மனைவிகள்) குழந்தைகளும் தான் ,
கல்யாண வயதில் பெண்களை வைத்துக் கொண்டிருக்கும் அம்மாக்களே நீங்கள் மாப்பிள்ளையின் படிப்பையும்...சொத்துக் கணக்கையும் மட்டும் பார்த்தால் இப்போதெல்லாம் போதவே போதாது ,
அந்த அழகான ..வசதியான ...படித்த(படிக்காத மாப்பிள்ளை என்றாலும் கூட இது பொருந்தும் ) மாப்பிள்ளைகள் எப்படி இருந்தாலும் அவர்களை கொஞ்சம் அதாவது அவர்கள் மிகவும் மோசமானவர்கள் இல்லை எனும் பட்சத்தில் அனுசரித்துப் போக கற்றுக் கொடுக்கலாம் . வெறும் வாய் சண்டைகள் ...வேற்று ஊடல்கள் இதற்காகவெல்லாம் விவாகரத்தைப் பற்றி யோசிக்கும் படியான அபிப்ராயங்களை உங்கள் மகள்களின் மனதில் புக விடாமல் தயவு செய்து தடுத்து விடலாமே!!!
இன்னும் சொல்லப் போனால் கணவன் மனைவி என்று ஆனா பிறகு எதற்கு நீ பெரியவன் ...நான் பெரியவள் என்ற ஈகோ ?
ஒரு முறை கணவன் விட்டுக் கொடுத்தால் மறுமுறை மனைவி விட்டுக் கொடுத்துப் போய்விட வேண்டும்(ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டம் தான் ...பழகப் பழக கை வந்து விடும் கலை அது)
முயற்சித்து தான் பாருங்களேன்!
கணவனோ,மனைவியோ
முதலில் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்
பிறகு ஒருவருக்கொருவர் ஒருவரைப் பற்றி மற்றவர் தெரிந்து கொள்ளுங்கள் .
கடைசியாக அவர் அப்படித்தான்...அவள் அப்படித்தான் என்று ஒருவருக்கொருவர் தெளிவு அடையுங்கள் .இதைத்தான் புரிதல் என்பார்கள்
சுலபமாகச் சொன்னால்
"அறிதல்
தெரிதல்
புரிதல் "