Wednesday, June 30, 2010

தேவதை சொல்லும் கதைகள் - 1



நானே எவ்ளோ நாளைக்கு உனக்கு கதை சொல்லிட்டிருப்பேன் ,இனிமே நீயும் அம்மாக்கு கதை சொல்லணும் .

ம்ம்...நானா ...ம்ம்...சரி இப்ப புதூ...சா பெரீசாஒரு கத சொல்லப் போறேனே ...நீ கேட்கறயா? (ஓரக்கண்ணால் என்னைக் கொஞ்சம் கீழ்ப் பார்வை பார்த்துக் கொண்டே ரோஜாப் பூக்கள் குவிந்து (அதாங்க உதடுன்னு சொல்வாங்க இல்ல அதான் :))) சிரிப்பதைப் போன்ற பாவனையில் ;

ஒன்ன விட நான் சூப்பரா கத சொல்வேன் தெரிமா ...ஒனக்கு தெரியாதில்ல !

ம்ம்...சரி நீ கதய சொல்லுக்கா மொதல்ல...

நான் ஒனக்கு அக்காவா?

இல்ல..இல்ல தப்பாச் சொல்லிட்டேன் பார்...சொல்லுங்க மாமியாரே ....

ஏய் அம்மா ...நான் அப்புறம் பாட்டிகிட்ட சொல்லிக் கொடுத்துருவேன் ஒன்ன ...

சின்னதாய் கோபித்துக் கொண்டவளைப் போல முகத்தை வைத்துக் கொண்டு ...போ நீ கதை சொல்லாம என்ன ஏமாத்தப் பாக்கற. நான் உன் பேச்சு கா. எங்கே மறுபடி என்னையே கதை சொல்லச் சொல்லி அடம் பண்ணப் போகிறாளோ என்று கிச்சனுக்குள் எஸ்கேப் ஆகப் பார்த்தால் ...

விடுவேனா என்று பின்னோடு வந்து கழுத்தைக் கட்டிக் கொண்டு ;

பழம் விடு...அப்போ தான் கதை இல்லனா உதை தான் என்று ரைமிங்காய் சிரித்தாள்.
ஒருவழியாய் இலை விட்டு...காய் விட்டு பழம் விட்டு கதை ஆரம்பமானது.

ஒரு ஊர்ல ஒரு பெரீ.....ய அடர்ந்.......த கா.........டு இருந்துச்சாம் ,அந்தக் காட்டுக்குள்ளா ஒரு பெரிய சூனியக்காரி இருந்தாளாம்.அவ ரொம்பக் கெட்ட பொண்ணாம்

சூனியக்காரிய அந்தக் காட்டுல்ல இருந்த நல்லவங்க எல்லாம் சாபம் போட்டு கொன்னுட்டாங்களாம்.
அப்போ என்ன ஆச்சு தெரிமா ?!

என்ன ஆச்சுடா...குட்டி ?

அந்த சூனியக்காரி இருக்கா இல்ல ..அவளோட மூதாதேவிங்க (ங்ஹே !!! மூதாதேவிங்களா !!!)

மூதாதேவிங்களா ?! அவங்க யாருடா ?

இது கூடத் தெரிலையா ஒனக்கு. அவங்க தான் அந்த சூனியக் காரியோட மூதாதேவிங்க அவங்க வந்து ஒரு நல்ல பையன் இறந்து போகப் போவானா அப்போ அந்த நல்ல பையனோட உயிரை எடுத்து இந்த சூனியக் காரிக்குள்ள வச்சு மூடிடுவாங்க ,அப்புறம் அவளுக்கு அந்த பையனோட உயிர் வந்துடுமாம்.

ம்ம் ...அதெல்லாம் சரி...இந்த மூதாதேவிங்கன்னா ...!!!

இரும்மா கதைய சொல்ல விடு ...சும்மா...சும்மா கொஸ்டீன் கேட்டுட்டே இருக்க நீ?

கொஞ்சம் போல சிடுசிடுப்பாய் முகத்தை வைத்துக் கொண்டு அவள் சிணுங்க கோபத்தில் கூட என் மகள் அழகு தான் என்று நான் மயங்கிப் போய் சரி சரி விடு ஆப்டர் ஆல் ஒரு மூதாதேவிங்க இதுக்கு போய் குறுக்க குறுக்க கேள்வி கேட்டுகிட்டு என்று பேசாமல் ம்ம்..கொட்டினேன் .

அப்புறம் என்ன ஆச்சு சொல்லு ...

அப்ப்புறமா அந்த சூனியக்காரிக்கு உயிர் வந்தோட்ன்னே ...அவ அந்தக் காட்டையே கட்டி ராஜ்ஜியம் பண்ண ஆரம்பிச்சிட்டா. கொஞ்ச நாள் கழிச்சு அவளுக்கு அந்த புல்லு வீடு வேர்த்து போச்சு .

வேர்த்துப் போச்சா ஏன் புல்லு வீடு குளு குளுன்னு இருக்காதா !? மறுபடியும் நமக்கு வாய் சும்மா இருக்குமா !?

ம்மா ...நீ சும்மா கதைக் கேளேன் ..தொல்லை பண்ணாத கத சொல்லும் போது...

"அது வந்து வேர்த்து இல்ல வெர்த்து (வெறுத்து)போச்சு புல்லு வீடு அந்த சூனியக்காரிக்கு ."

இரு...இரு புல்லு வீடுன்னா ?!

புல்லு தெரியாதா அது வந்து கோல் வீடு ! (மறுபடியும் "ங்ஹே " கோல் வீடா ...அப்படிலாம் வீடிருக்கா ! நான் குழம்ப !

கோல்னா வைக்கோல் ... வைக்கோல் வீடு ...இது கூட தெரியாதா ! போம்மா

ஓ...அப்டியா ...சரி சரி கோச்சிக்காதடா...நீ மேலே சொல்லு கதைய ;

அந்த புல்லு வீடு அவளுக்கு வெர்த்து போச்சா ....அப்பறமா அவளுக்கு ராஜ்யத்தையே கட்டி ஆளனும்னு ஒரு ஆச வந்துச்சாம் .

இப்ப காட்டையே கட்டி ராஜ்ஜியம் பண்ணிட்டு இருக்கானு தான மொதல்ல சொன்ன !

அய்யோ...அது வேற ராஜ்ஜியம்...இது வேற ராஜ்ஜியம் ...இங்க ராஜா ,ராணி...நம்மள மாதிரி மனுசங்க எல்லாம் இருப்பாங்க .

ஓ ...

ராஜ்யம்னா பெரீ...ய கோபுரம் மாதிரிலாம் இருக்கும் ,தங்க கலர்ல பெயின்ட்லாம் அடிச்சிருக்கும் ,பாத்துருக்க இல்ல நீ ?

ம்ம்...பார்த்திருக்கேன். ஆனா ...எங்க ...எப்போ !

ம்ம்...ராஜா..ராணிலாம் இருப்பாங்க இல்ல அங்க அந்த கோபுரம் (ஓ ..அரண்மனையாக்கும் மனசுக்குள் நினைத்துக் கொண்டேன் )

அந்த ராஜ்யத்தை கட்டி ஆளனும்னு அவளுக்கு ஆசை வந்துச்சாம்.

ம்ம்...

அப்போ அவளுக்கு மூளையே இருக்காதில்ல !

திடீரென்று இந்தக் கேள்வி வந்து விழவே ஆமாம் என்று சொல்வதா இல்லை என்று சொல்வதா என்று நான் குழம்ப. அவளே தொடர்ந்தாள். அதற்குள் அவளுக்கு தூக்கம் வந்து விட்டிருந்தது கண்கள் மெல்லச் சொருக ...

சூனியக்.........காரிக்கு..........எல்லாம் மூ.........ளை.......யே இருக்காது..அவங்க எல்..........லாம் முட்டாள்........களாம் சுட்டி டி.வி ல சொன்னாங்க (அப்டியா...நிஜமா அப்டி சொன்னாங்கலாங்க?!)

நம்மள மாதிரி மனுசங்க தான் புத்திசாலிங்களா........ம்ம் .

சூனியக்காரிக்குள்ள நல்ல பையனோட உயிர் ஆவிய உள்ள வச்சு மூடிட்டாங்க இல்ல அவளோட மூதாதேவிங்க !!! (மறுபடியும் மூதாதேவிங்க!!!) அதனால அவ புத்திசாலி ஆயிட்டா.

ம்ம்...ஆமா இந்த மூதாதேவிங்கனா !

தூ...க்கம்வருது...

கழுத்தைச் சுற்றி பிஞ்சுக் கை மாலையாக ;

இடுப்பை வளைத்து கால்கள் ஒட்டியாணமாய் இறுக்கிக் கொள்ள ;

சரி ...சரி தூங்குடா ... இரு ..இரு ...ஆமாம் ...இந்த மூதாதேவிங்கன்னா யாரு?

தூக்கம் ..தூக்கமா வருது ... இந்தா பார் அம்மா நீ என் தூக்கத்தை கலைக்காதா .

கப் சிப் ...பேச்சில்லை .(அதற்கு மேலும் தூங்கும் சிங்கத்தை தட்டி எழுப்ப நான் என்ன லூசா ?!)

ஆனாலும் இந்த மூதாதேவி ரொம்பவே குழப்ப கிட்டத் தட்ட அரைமணி பலவாறாக யோசித்த பின் ஒருவாறாக புரிந்தது .

அட மூதாதையர்கள் என்று சொல்லத் தெரியாமல் தான் குழந்தை அதை மூதாதேவிகள் என்று சொல்கிறாள் போலும் என்று நினைத்துக் கொண்டே தூங்கிப் போனேன் நானும்.


ஏய்...நீ என்ன அத்தனை அழகா ?!





வெயில் அடித்துக் கொண்டே மழை பெய்தால் அழகு, தங்கக் கண்ணாடி குழாய்களில் நீரடைத்து பீய்ச்சி அடிப்பதைப் போல தரை தொட்டுப் புரளும் வெயில் நேரத்து மழைநீரை முகமேந்தி தாங்கிக் கொண்டு பளிங்காய் முகத்திலிருந்து சிதறிப் பரவி தெறித்து விழும் பிரவாகத்தை இரு கை அள்ளி நீர் குவித்து மீண்டும் வான்நோக்கி சிதறடித்தால் விசிறிப் பறக்கும் வைரச் சிதறல்கலாம் ஒவ்வொரு மழைத் துளியும் மின்னிடும் ...மின்னிடும்;

ஏய் ...மழையே நீ என்ன அத்தனை அழகா?

அந்த மழையில் நனைவது ஆனந்தம்,நனைந்து கரைவது பரமானந்தம்...கரைந்து காணாமல் போவது தெய்வீகம்.

ஒற்றைச் செம்மண் சாலையில் தொலைவிலாடும் மாமாரக்கிளைகள் கண்ணுக்கு இதம்,ஆளற்ற வெளியில் சில்லென மிதந்து முகம் தொடும் காற்றில் தயங்கி தயங்கி சட...சடக்கும் சல்லாத்துணி துப்பட்டா முனைகள் சிலும்பி நெற்றி தொட்டு தோளில் புரளும் பட்டுக் கூந்தல் குறுகுறுப்பில் மனம் லேசாகி லேசாகி மேகத்தில் மென்துகிலாக கண்ணோடு மனம் காணும் காட்சியெங்கும் இதமான இனிமை.

காற்றோடு கரைந்து போவது எல்லோருக்கும் வாய்ப்பதில்லை காண்.

சாணமிட்டு மெழுகிய தரை கோமேதகப் பழுப்பு ,சிவந்த சிமென்ட் தரை ரத்தினக் கவர்ச்சி ,வெள்ளை மார்பிளில் பச்சைக் கரை கட்டிய தரை மரகதக் குளுமை எல்லாம் இருக்கலாம் ஆனாலும் வீட்டுக்கு வெளியே பளீரிடும் பச்சைக் கற்களை வெட்டி பதித்ததைப் போல விரிந்த பசும்புல்லில் தரை சரிந்து தலை சாய்த்து மண்ணோடு முகம் உரசினால் கத கதப்பாய் சில்லிடும் குளிர் பிஞ்சுப் பாதத்தை கன்னம் பாதிக்கும் உயிர் மணக்கும் உன்னதம் .

இன்னும் இருக்கலாம் உலகத்தின் உன்னதங்கள். சொல்வதற்கு வார்த்தைகள் கிடைத்த பின் ஒவ்வொன்றாய் பார்க்கலாம்.


மண்,மழை,காற்றோடு பேசுதல் சட்டென வாய்ப்பதில்லை.