Wednesday, June 30, 2010

ஏய்...நீ என்ன அத்தனை அழகா ?!





வெயில் அடித்துக் கொண்டே மழை பெய்தால் அழகு, தங்கக் கண்ணாடி குழாய்களில் நீரடைத்து பீய்ச்சி அடிப்பதைப் போல தரை தொட்டுப் புரளும் வெயில் நேரத்து மழைநீரை முகமேந்தி தாங்கிக் கொண்டு பளிங்காய் முகத்திலிருந்து சிதறிப் பரவி தெறித்து விழும் பிரவாகத்தை இரு கை அள்ளி நீர் குவித்து மீண்டும் வான்நோக்கி சிதறடித்தால் விசிறிப் பறக்கும் வைரச் சிதறல்கலாம் ஒவ்வொரு மழைத் துளியும் மின்னிடும் ...மின்னிடும்;

ஏய் ...மழையே நீ என்ன அத்தனை அழகா?

அந்த மழையில் நனைவது ஆனந்தம்,நனைந்து கரைவது பரமானந்தம்...கரைந்து காணாமல் போவது தெய்வீகம்.

ஒற்றைச் செம்மண் சாலையில் தொலைவிலாடும் மாமாரக்கிளைகள் கண்ணுக்கு இதம்,ஆளற்ற வெளியில் சில்லென மிதந்து முகம் தொடும் காற்றில் தயங்கி தயங்கி சட...சடக்கும் சல்லாத்துணி துப்பட்டா முனைகள் சிலும்பி நெற்றி தொட்டு தோளில் புரளும் பட்டுக் கூந்தல் குறுகுறுப்பில் மனம் லேசாகி லேசாகி மேகத்தில் மென்துகிலாக கண்ணோடு மனம் காணும் காட்சியெங்கும் இதமான இனிமை.

காற்றோடு கரைந்து போவது எல்லோருக்கும் வாய்ப்பதில்லை காண்.

சாணமிட்டு மெழுகிய தரை கோமேதகப் பழுப்பு ,சிவந்த சிமென்ட் தரை ரத்தினக் கவர்ச்சி ,வெள்ளை மார்பிளில் பச்சைக் கரை கட்டிய தரை மரகதக் குளுமை எல்லாம் இருக்கலாம் ஆனாலும் வீட்டுக்கு வெளியே பளீரிடும் பச்சைக் கற்களை வெட்டி பதித்ததைப் போல விரிந்த பசும்புல்லில் தரை சரிந்து தலை சாய்த்து மண்ணோடு முகம் உரசினால் கத கதப்பாய் சில்லிடும் குளிர் பிஞ்சுப் பாதத்தை கன்னம் பாதிக்கும் உயிர் மணக்கும் உன்னதம் .

இன்னும் இருக்கலாம் உலகத்தின் உன்னதங்கள். சொல்வதற்கு வார்த்தைகள் கிடைத்த பின் ஒவ்வொன்றாய் பார்க்கலாம்.


மண்,மழை,காற்றோடு பேசுதல் சட்டென வாய்ப்பதில்லை.

5 comments:

Vidhoosh said...

:) சும்மாவா?

ரொம்ப அழகா இருக்கு.

VELU.G said...

//
மண்,மழை,காற்றோடு பேசுதல் சட்டென வாய்ப்பதில்லை.
//

வரிகள் அருமை

நல்ல ரசனை

அன்புடன் அருணா said...

ஆஹா !!மழை!மழை!

Sanjai Gandhi said...

இது கவிதை இல்லையா?

//மண்,மழை,காற்றோடு பேசுதல் சட்டென வாய்ப்பதில்லை//

சின்ன வயசுல கிராமத்துலயே இருக்கும் போது அடிக்கடி வாய்க்கும் அதிர்ஷ்டம் இது.. இப்போ :(

mathileo said...

நானும் பார்க்கிறேன், யாரைப்பார்த்தாலும் கல்கியின் புத்தகங்களைத்தான் படிக்கிறீர்கள். த்மிழில் வேறு யாரும் இம்மையா?.
நா.பா.ஜெ.காந்தன், இ.பா.,மௌனி,நாஞ்சில்நாடன்,வண்ணதாசன்,கு.ப.ரா,ல.ச.ரா.,புதுமைபித்தன்,சுஜாதா,பொன்னீலன்,கரிச்சான் குஞ்சு,இன்னும் பலர். அவர்களையும் படியுங்கள்.