Sunday, February 28, 2010

பா.ராஜாராமின் கருவேல நிழல் ...


என் அப்பாவுக்கும் தாத்தாவுக்கும் கவிதை எழுதத் தெரியாது ,தெரிந்திருந்தால் ஒரு வேலை ராஜாராமின் கவிதைகளை ஒத்த கவிதைகளை அவர்களும் எழுதி முடித்திருப்பார்கள்,அத்தனை வாஞ்சையானவை இவரது கவிதைகள்.நேசமித்திரனின் அழகான முன்னுரை இக்கவிதை தொகுப்பிற்கு உன்னத அங்கீகாரம்.

"ஏதாவது ஒன்றை இழந்தே
மற்றொன்றைப் பெற முடியும் '
என்று கற்றுணர்த்திய அப்பாவிற்கு "

இவைகளை சமர்பித்ததின் மூலம் இன்னும் சிநேகம் மிகுந்த உணர்வுகள் மேலோங்குகின்றன. காரணம் கவிதைகள் பலவற்றில் பேசப்பட்ட பொருட்கள் ஒரு தந்தையின் தார்மீக வலிகள்.

விடுமுறைகளில் சொந்த பூமிக்கு வந்து மீண்டும் அந்நிய பூமிக்கான பயணத்திற்கு நிர்பந்திக்கப் பட்ட ஒரு மனிதன் தன் வீட்டு முற்றத்து தாழ்வாரத்தில் மத்தியான சாப்பாட்டின் பின் வேப்ப மரக் காற்றுக்கு கண்ணசருகையில் உறக்கமும் இன்றி விழிப்பும் இன்றி ஒரு மயக்க நிலையில் வாழ்வின் சம்பவங்களை மீட்டிப் பார்க்கையில் சந்தோசமும் அற்ற வெறுப்பும் அற்ற ஒரு நிராதரவான பரபரப்பில் மனம் ஊசலாடும்.அந்த மனநிலையை இவரது கவிதைகள் ஒவ்வொன்றிலும் உணர முடிகிறது.

வேரோடு பிடுங்கி நடப்பட்டதான உணர்வு தான்.ஆனாலும் வேர்தூவிகளோடு ஒட்டிக் கொள்ளும் ஈர மண்ணைப் போல சொந்த ஊரின் ஞாபகங்கள் எங்கு போனாலும் அலைகளாய் தாலாட்டி மனதின் அடி ஆழத்து மண்ணை ஈரமாகவே நீடிக்க வைக்கின்றன.

தொகுப்பில் முதல் வாசிப்பிலேயே எனக்குப் பிடித்த சில கவிதைகளை இங்கு பகிர்கிறேன்.

சொல்லிட்டேன் ஆமா ...

"ஓட நடக்க
பேசிச் சிரிக்க
குழந்தைகளை
குளிப்பாட்ட
சோறூட்ட
உனக்குப் போலவே
எனக்கும் வாய்த்தது அப்பா
................................................
கீரை
வாங்கியாந்து
கிணற்றடியில் வைத்து
சிரித்துக் கொண்டே
செத்துப் போக...
உனக்கு போலவே
எனக்கும் வாய்க்கனும் அப்பா."


அப்பாவைப்பற்றியதான மகனின் நெகிழ்வு ,ஆளரவமற்ற ஊர் எல்லை மாமரத்தினடியில் வெயிலுக்கு
ஒதுங்கினால் விட்டு விட்டுக் கேட்கும் கிளிகளின் கீச்சொலிகள் போல நீங்காத நினைவுகளை எழுப்பும் கவிதை.

"ஆற்றங்கரையில் எடுத்த கல்
மினு மினுப்பற்ற வழுவழுப்பு
வீடு வரையில் சேர்க்க இயலாத
ஞாபகக் குறைவு
அங்கேயே கூட கிடந்திருக்கலாம்
ஆளோட பேரோட இருந்திருக்கும்..."

வேலைக்கென்று அயல்நாடுகளில் தஞ்சமடைந்து எனது மண்,எனது மக்கள் எனும் சுய அடையாளங்களை இழக்க நேரும் மனதின் வலி மிகுந்த தேம்பலாக இந்த வரிகளை எடுத்துக் கொள்ளலாமா?

விதித்தது எனும் தலைப்பில் :-

"எல்லா கொலுசொலிகளுக்கும்
உசும்பி விழிக்க
பாத்தியதைப் பட்ட
செவி ஒன்று
இருக்கு தானே."

ஞாபகப்பொதி எனும் தலைப்பில் :-

"குருவிக் கூடுகளையும்
கீச்சொலிகளையும்
மரம் இழைக்கிற போதெல்லாம்
உணர்கிறான்
மனசுள்ள தச்சன் ."

இந்த இரண்டு கவிதை வரிகளும் வாசிக்கையில் உள்ளுக்குள் பலத்த அர்த்தங்களை விரித்துக் கொண்டே செல்கின்றன ,ஒவ்வொருவருக்கும் ஒவொரு விதமாய் தோன்றலாம் அது வாசிப்பவரின் மனநிலை சார்ந்தது,எனக்கு மிகப் பிடித்த வரிகள் இவை.

இலையுதிர் காலம் எனும் தலைப்பில் :-

முதுகிற்குப் பின்புறம் மறைகிற
குழந்தைகளை முன்னிழுத்து
"சித்தப்பாடா " என்று
கண்ணீருடன் சிரிக்கிறார்கள் காதலிகள்

அவ்வளவையும் காரணமாக்கி
சாராயத்தில் குளிக்கிறோம்
சவுதியிலிருந்து திரும்பும் நாங்கள்."

பாவப்பட்ட காதலிகளும் அன்னியப்பட்ட காதலர்களும் இக்கவிதைக்கு நேர்மை செய்கிறார்கள்,வேறென்ன சொல்ல!"ஆட்டோகிராப் "படத்தின் மல்லிகாவை ஞாபகப்படுத்தும் காதலிகள் நிறைந்தது இவ்வுலகம்.

வலி எனும் தலைப்பில் ஒரு கவிதை :-

அம்மாவை நேற்று
வீதியில் பார்த்தேன்...
கருத்து சிறுத்து விட்டாள்
ஏன் இப்படிப் போனாள்
என்று கேட்க விருப்பம் எனக்கு

ஏன் இப்படிப் போனாள்
என்று தெரியும் எனக்கு
எனக்குத் தெரியும் என்று
அம்மாவிற்குத் தெரியும்
பிறகெதற்கு தூசிப் புயல்
.............................................

பேசாமல்
பெண் குழந்தையாய்
பிறந்திருக்கலாம் நானும்

அவளின் சொல்லை விட
அவரின் சொல்
கௌரவமாய் இருந்திருக்கும்
அம்மாவிற்கும் எனக்கும்.

மாமியார் மருமகள் போராட்டத்தில் சிக்கிச் சின்னாபின்னப் பட்டுப் போன ஒரு மகனின் காயமிக்க ஊமை நினைவுகள்.என்ன நினைத்து என்ன? மனைவிகள் அம்மாக்களை விடவும் முக்கியப் பட்டவர்களாய் போய் விடுவது வாழ்வின் கண்ணாமூச்சு ஆட்டம்.இன்றைய மனைவிகள் நாளைய அம்மாக்கள்!

"தனலச்சுமி சின்னம்மை "

நான் தான்
"அப்பா உங்களை ரொம்ப
கேட்டுக் கொண்டே இருந்தார் சித்தி" என்றேன்
"ஆகட்டும்" என்றாள்
மென் சிரிப்பின் ஊடே
சரி தானே...
தனலச்சுமி சின்னம்மைக்கு மேலா
அப்பாவை எனக்கு தெரிந்து விடப் போகிறது?


புன்னகையோடு கடந்து விட்டாலும்,புன்னகைக்கும் போதெலாம் உதடுகளில் உறைந்து விடும் மென் சிரிப்பாய் உள்ளார்ந்த உறவுகளைப் பேசும் மென்மையான கவிதை.

காரணப்பெயர் :-

அப்பாவிடம் ஒரு நிலம் இருந்தது
"பெரியனஞ்சை "என்று பெயர்
பெரியனஞ்சைக்குப் பிறகே
அம்மாவை பிடிக்கும் அப்பாவிற்கு
.........................................................
கொண்டு செல்லும் காஞ்சி ஊறுகாயின்
மண்டி நீரையும் வயலில் உமிழ்வார்
ப்ரியம் பொங்க
.............................................................
காலத்தின் தேய்மானத்தில்
பெரியனஞ்சையை தோற்றார்
அப்பா ஒரு நாள்

பிறகு அப்பா சாராயம் குடித்தார்
வெங்காய கடை வைத்தார்
திரையரங்கில் வேலை பார்த்தார்
யார் அழைத்தாலும் போய் உழைத்தார்
அவ்வளவு இடிபாடுகளுக்கிடையேயும்
இயங்கிக் கொண்டே இருக்க
ஐந்து காரணங்கள்
இருந்தது அப்பாவுக்கு

எங்கள் ஊரில் நிலங்களுக்குப் பெயர்
இருந்தது போல்
காரணங்களுக்கும்
பெயர் இருந்தது

அது...
சுமதி
புனிதா
ராஜா
தேவி
இந்திரா .

எல்லாக் கவிதைகளிலும் ஊடாக ஒரு பச்சை நெருஞ்சி முள்ளை வைத்து எழுதி இருக்கிறார் பா.ரா.

அந்த முள் தைக்க வேண்டிய இதயங்களில் தாராளமாய் தைக்கிறது.

இந்தக் கவிதைகள் இயற்கையைப் பற்றிப் பேசவில்லை ,அரசியல் கிடையாது,காதல் இருக்கிறது ஆனால் இவை காதல் கவிதைகள் அல்ல,சோகம் இழையோடுகிறது சோகக் கவிதைகள் அல்ல ,கஷ்ட நஷ்டங்களைக் கலந்து கண்ட அனுபவமிக்க பக்குவப் பட்ட ஒரு குடும்பத் தலைவனின் தகப்பனின்,மகனின்,ஒரு கணவனின்,காதலனின்...தூரத்து துயரங்கள் படர்ந்த நிராதரவான உள் மனச்சமாதானங்களே இங்கே கவிதைகள் ஆக்கப் பட்டிருப்பதால் கவிதைகளை உணர்ந்து வாசிக்க இயல்கிறது.

1988 முதல் கவிதைகள் எழுதி வருகிறாராம்,கணையாழி,சுபமங்களா,தினமணி,ஆனந்த விகடன் ,கல்கி எனப் பிரபல பத்திரிகைகள் பலவற்றிலும் இவரது கவிதைகள் வெளிவந்திருக்கின்றனவாம்.
இங்கே வலைக்குப் பின் அகநாழிகை தொகுப்பில் தான் முதல் முறையாக இவரது கவிதைகளை வாசிக்க நேர்ந்தது.மிக நல்ல கவிதைகள்.

ஆசிரியர் :பா.ராஜாராம்
நூல் : கருவேலநிழல்
வெளியீடு :அகநாழிகை
விலை : ரூ ௪0