Thursday, March 4, 2010
வி.ஐ.பி ஆல்பா சூட்கேஸ் ...
இருந்து இருந்து அம்பிகாவுக்கு மூன்றாவதாக பையன் பிறந்திருந்தான். மூத்தவை இரண்டும் பெண்கள்;சத்துணவு டீச்சரான அம்பிகாவின் அதிர்ஷ்டம் தான் பையன் பிறந்தது என்று கருக்கலிலேயே ஆஸ்பத்திரிக்கு குழந்தையைப் பார்க்க ஓடி வந்த பால்வாடி ஆயா சொல்லிச் சொல்லி பூரித்துக் கொண்டிருந்தாள்.அம்பிகாவின் மாமியார் ஆஸ்பத்திரிக்கு எதிர் சந்தில் இருந்த காபிக் கடையில் வடையும் காப்பியும் வாங்கப் போயிருந்தார்.
அம்பிகா டீச்சர் தலையணைக்கடியில் இருந்த மணி பர்சை திறந்து அடிக்கடி எண்ணிப் பார்த்துக் கொண்டாள்.அதில்
250 ௦ ரூபாய்களும் 5 ரூபாய்க்கு சில்லறைகளும் இருந்தது.அம்மா பிரசவமாக ரெண்டொரு நாளாகும் என்று சாயந்திரமாக மட்டும் வந்து எட்டிப் பார்த்து விட்டு போயிருந்ததால் அவர்களுக்கு இன்னும் சேதி தெரியாது ,ஆயாவிடம் தான் தாக்கல் சொல்லி விட வேண்டும் ,பஸ் காசாவது கொடுத்து விட்டால் தான் நியாயப்படும்.
அப்பா இந்நேரம் வீட்டில் தான் இருப்பார். ஆறு மணி பஸ்சுக்கு போகச் சொல்லி சொன்னால் சரியாக இருக்கும்,தம்பிகள் தங்கை,அண்ணன் வீட்டில் என்று எல்லோருமே இருப்பார்கள்.பர்சைப் பிரித்து மாமியார் வருவதற்குள் ரெண்டு ரூபாய்களை அவசரமாக எண்ணி ஆயாவிடம் கொடுத்த அம்பிகா டீச்சர்.அங்க போய் சாப்பிட்டுக்கோ ஆயா.அப்டியே அவங்க கிட்ட தாக்கலும் சொல்லிட்டு நீ ஸ்கூலுக்குப் போ ...எனக்கு பதிலா ஜோதி டீச்சர் இருப்பாங்க.
அம்பிகாவுக்கு மாமியார் மட்டும் தான்.அந்தக் கால கண்ணாம்பாளை கொஞ்சம் குள்ளமாக கற்பனை செய்தால் அது தான் அம்பிகாவின் மாமியார்.தினமணி தாளில் சுற்றிய வடைகளோடும் திருக்கு சொம்பில் காப்பியோடும் அந்த சின்ன ஆஸ்பத்திரிக்குள் இருந்த ஒற்றை அறையில் நுழைந்தார் அந்த அம்மாள்.நடு ராத்திரியில் பிரசவமானதால் இன்னும் அயற்சியாய் இருந்தது அம்பிகாவுக்கு.ஆயா வடை தின்று காபி குடித்துப் பிள்ளையை ,
என் ராசா..எந்தங்கம்...எங்க டீச்சரம்மா பெத்தெடுத்த சிங்கம் ,இன்னும் என்னவெல்லாம் வாய்க்கு வந்ததோ எல்லாம் சொல்லி கொஞ்சி விட்டு புறப்பட்டு விட்டாள்.
அவள் போனதும் மாமியார் அம்பிகா தூங்குவதாக நினைத்துக் கொண்டு வாங்கி வந்த வடைகளில் ரெண்டை தட்டில் வைத்து பிட்டு வாயில் போட்டுக் கொண்டார்.பாவம் பசி தாங்க முடியாத ஜீவன்.பிள்ளைப் பெற்ற உடம்பு இந்நேரத்துக்கு வடை திங்க சொல்ல முடியுமா? இட்லி அவித்துக் கொட்ட நேரமாகுமாம் ஏழுமணிக்கு வரச் சொன்னான் காபிக் கடைக்காரன். தனக்குள் புலம்பிக் கொண்டு அந்தம்மாள் ஒரு லோட்டா காபியையும் முழுங்கினார்.
என்ன தான் சின்ன ஆஸ்பத்திரி என்றாலும் ,சுகப் பிரசவம் தான் என்றாலும் பிரசவ செலவு 200 ரூபாயாவது போடுவார்கள் ,கூட இருந்த நர்சுக்கு பத்து ரூபாயாச்சும் தரனும்.டாக்டரம்மாவுக்கு தாம்பாளத்தில் வைத்துக் கொடுக்க பழம் வாங்க வேண்டும் அதற்க்கு ஒரு இருபது இருபத்தி ஐந்து ஆகாதா? பிள்ளையைப் பார்க்க வருகிறவர்களுக்கு காபி வடை செலவு மிட்டாய் வேறு வாங்கி வைக்க வேண்டும் அப்படி ஒரு பத்து பதினைந்து ரூபாய்கள் ஆகும்.இன்னும் பிறந்த பிள்ளைக்கான செலவுகள் வேறு ஒரு பக்கம்.
ஜான்சன்ஸ் சோப்
பவுடர்
தனி துண்டு
குழந்தைக்கு உடுத்த புதுத் துணிகள்,
கைக்கும் காலுக்கும் கட்ட வசம்பு,
கழுத்துக்கு கருப்பு பூசல் மாலை
காலுக்கு தண்டை
பாலோ மருந்தோ ஊட்ட சங்குக்குப் பஞ்சமில்லை மூத்தது இரண்டுக்கும் வாங்கியதே வீட்டில் கிடக்கும் ,அது போதும்.
எப்படிப் பார்த்தாலும் செலவு 250 ...300 நெருக்கி வரும் போலத்தான் தெரிகிறது.
ஆஸ்பத்திரிக்கு வருவதற்கு முதல் நாள் மாலையில் தான் சம்பளப் பணம் 300 வாங்கி அப்படியே அதை அப்பாவிடம் கொடுத்திருந்ததால் கொஞ்சம் நிம்மதியாகத் தான் இருந்தது.புருசனுக்கு சரியான வருமானம் இல்லை ,இரண்டு பிள்ளைகளை வைத்துக் கொண்டு அங்கே சமாளிக்க முடியாதென்று தான் அப்பா இங்கேயே கூட்டி வந்து அவருக்கு தெரிந்தவர்களிடம் பேசி வைத்து இந்த வேலையை வாங்கிக் கொடுத்தார்.டீச்சர் வீட்டுக்காரர் மாதம் ஒரு முறை வந்து போவார்.போகும் போது டீச்சர் தான் பஸ் செலவுக்கு காசு கொடுத்து அனுப்ப வேண்டிய நிலை.விதி மாறும் என்ற நம்பிக்கையில் தான் வாழ்கிறார்கள்.
மாமியார் ரொம்ப விநயம் பிடித்தவள் இல்லை ...ஏழு மணிக்கெல்லாம் ஓடிப் போய் இட்லி வாங்கி வந்து டீச்சரை எழுப்பி சாப்பிட வைத்தார்.அதற்குள் டாக்டரம்மாவும் வந்து விட ;என்ன சாப்பிடக் கொடுக்கலாம் என்று கேட்டுக் கொண்டார். நார்மல் டெலிவரி தானம்மா ...சில்லுனு மாத்திரம் இல்லாம ரெண்டொரு நாள்ல எல்லாம் சாப்பிடக் கொடுங்க.பட படவென்று சொல்லி விட்டு தொட்டிலில் கிடந்த குழந்தையின் கன்னத்தைக் கிள்ளி பிள்ளையை எடுத்துக் கொடுங்க பால் கொடுக்கட்டும் சொல்லிக் கொண்டே தன் கிளினிக்குக்கு போய் விட்டாள் அந்தம்மாள். ,
இந்த அறையை ஒட்டிய சின்ன அறை தான் அதுவும்.வெளியில் ஒரு நீளமான வராண்ட,அங்கே பெஞ்ச் போட்டிருப்பார்கள் நோயாளிகள் உட்கார.கவர்மென்ட் ஆஸ்பத்திரிக்குப் போய் விட்டு பிறகு இங்கே வந்து விடுவார் டாக்டரம்மா.காலையில் ஒரு ஒருமணி நேரம் பிறகு சாயந்திரம் மட்டும் தான் கேஸ் பார்ப்பார்.வீட்டை ஒட்டி இருந்த இரண்டு சிறு அறைகளையும் வராண்டாவையும் தான் ரங்கநாயகி ஹாஸ்பிடல் என்று போர்டு மாட்டி இப்படி ப்ராக்டிஸ் செய்து கொண்டிருக்கிறார்.கொஞ்சம் கைராசிக்காரர் என்று பெயராகி விட்டது."இங்க பிரசவம் பார்த்தா ஆம்பளப் புள்ள பொறக்குமாம்!!!"
ஆயா போய் தாக்கல் சொன்ன மாயத்தில் அடுத்த பஸ்சிலேயே அம்மாவும் அப்பாவும் வந்து விட்டார்கள்.
அம்மா குழந்தையை மடியில் போட்டுக் கொண்டு பிளாஸ்டிக் கூடை நிறைய மடித்துக் கொண்டு வந்திருந்த துணியைக் கிழித்து கிழித்து காட்டுப் பிய் துடைத்து துடைத்து போட்டுக் கொண்டு சிரித்து சிரித்து பேரனைக் கொஞ்சிக் கொண்டிருந்தாள்.அப்பா படியேறும் போதே கையிலிருந்த பையில் பவுடர்,எண்ணெய் சோப்பு குழந்தைத் துணி என்று தன் வந்தார். அம்பிகா டீச்சருக்கு மாமியார் முன்னிலையில் அப்பா இப்படி வந்தது பெருமையாக இருந்தது."எங்கப்பாவாச்சே" என்ற நினைப்பில் முகம் பெருமிதத்தில் பள பளத்தது.
சாத்தூர் எஸ்.ஆர் நாயுடு காலேஜில் பி.யூ.சி படிக்கும் தம்பி காலையில் போகும் போது ஒரு தடவை சாயந்திரம் வரும் போது ஒரு தடவை ஆஸ்பத்திரிக்கு வந்து தொட்டிலை அகல விரித்து மருமகனை ஆசை தீரப் பார்த்து கொஞ்ச நேரம் கொஞ்சி விட்டுப் போவது இன்னும் பெருமையானது அம்பிகா டீச்சருக்கு.
ரெண்டாம் நாள் பிள்ளையின் அப்பா வந்து விட்டார்.எப்போதும் சுமந்து வரும் ஆல்பா சூட்கேசில் இந்த முறை பெண்டாட்டிக்கென்று ஒரு புது பாலிஸ்டர் சேலையும்,பிள்ளைக்கு புது உடுப்புகளும் கொண்டு வந்திருந்தார்.பணம் எதுவும் இருக்கிறதா என்று டீச்சர் கேட்கையில் அவர் மோட்டு வளையைப் பார்க்கவே டீச்சர் குழந்தைக்கு பால் கொடுக்கும் சாக்கில் கீழே குனிய ரெண்டு சொட்டுக் கண்ணீர் உதிர்ந்து மறைந்தது.
அண்ணனும் அண்ணன் பெண்டாட்டியும் ஹார்லிக்ஸ் பாட்டிலோடு வந்து எட்டிப் பார்த்து விட்டுப் போனார்கள்.
கூட வேலை பார்த்த டீச்சர்கள் ரெண்டு பேர் ஆளுக்கொரு குழந்தைத் துணியை கையில் பிடித்துக் கொண்டு வந்து காப்பி குடித்து பிள்ளை கையில் பத்து ரூபாய் திணித்து விட்டுப் போனார்கள்.ஊரிலிருந்து டவுனுக்கு வேறு காரியமாக வருகிறவர்கள் கூட பிள்ளையைப் பார்க்கும் சாக்கில் ஆஸ்பத்திரிக்கு வந்து காப்பி சர்பத் குடித்து விட்டுப் போனார்கள்.
மூன்றாம் நாள் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்குப் போகச் சொல்லி விட்டார்கள்.
பொண்ணுப் பிள்ளை மகன் சுந்தரத்தின் அம்பாசிடர் காருக்கு சொல்லி இருந்தார் அப்பா ,அந்த ஒரு கார் தான் அப்போது ஊருக்குள் கார் என்ற பெயரில் பகட்டாக இருந்தது.வேறு கார்கள் இருப்பதெல்லாம் அந்த ஊர் ஜனங்களுக்கு ரொம்ப நாட்களுக்குத் தெரியாது.
கார் வாடகை 75 ௦ரூபாயாம் .
சம்பளப் பணம் மொத்தமும் அப்பாவிடம் தானே கொடுத்திருக்கிறோம் என்று தைரியமாய்த் தான் இருந்தார் அம்பிகா டீச்சர்.
ஆஸ்பத்திரி செலவுகள் பெரிய மனது பண்ணி அந்த டாக்டரம்மா 150 ரூபாய் தான் எடுத்துக் கொண்டார் தட்டில் வைத்த ஐம்பதை அப்படியே குழந்தையில் கையில் திணித்தார்.அந்தம்மாளின் தங்கை அம்பிகா டீச்சருடன் பாளையங்கோட்டை சார டக்கர் ஸ்கூலில் பி.யூ.சி ஒன்றாகப் படித்து விட்டு இப்போது மெட்ராஸ் மெடிகல் காலேஜில் டாக்டருக்குப் படித்துக் கொண்டிருக்கிறாள்.அந்த பாசத்தில் இப்படிச் செய்திருக்கலாம்.டீச்சர் வெளி வார்த்தையாக ;
"எதுக்கு டாக்டர் ...வேண்டாம் டாக்டர் பணம் எடுத்துக்குங்க டாக்டர் "
என்றாலும் ,பணத்தை திரும்ப எடுத்துக் கொள்ளவில்லை அவர்.வயிற்றில் பால் வார்த்ததைப் போலத் தான் இருந்தது அந்நேரம்.
மணி பர்சில் இருந்த 250 இல் 200 செலவு போக புருசனுக்கு பஸ் செலவுக்கு அவர் கேட்கும் முன்பே ஹேங்கரில் தொங்கிய சட்டைப் பையில் வைத்து விட்டு
அப்பாவிடம் தான் 300 ரூபாய் இருக்கிறதே அதை வைத்து கார் வாடகை கொடுத்துக் கொள்ளலாம் என்ற சுய சமாதானத்தில் காருக்காக காத்துக் கொண்டிருந்தார்கள் .
அந்நேரம் அண்ணி வரக் கூடும் என்று அம்பிகா டீச்சர் எதிர் பார்க்கவில்லை.
அண்ணனும் அண்ணியும் கூட எலிமெண்டரி ஸ்கூல் டீச்சர்கள் தான் ,டீச்சரை வீட்டுக்கு அழைத்துப் போக முதலில் அவர்களைத் தான் கேட்டார் அப்பா ,சொல்லி வைத்தது போல ரெண்டு பேருமே மீட்டிங் இருக்கு ,டி.ஓ வருவாரு என்று சாக்கு போக்கு சொல்லிக் கழண்டு கொண்டார்கள்,இப்போதேன்னவாம்!!!
அப்பா தான் கார் அழைத்துக் கொண்டு வரப் போயிருந்தார்.
அம்மாவின் ஒன்று விட்ட தங்கை தான் அண்ணி. அம்மா ரெண்டாம் தாரம் என்பதால் கல்யாணமாகி வருகையில் பதினோரு வயதுப் பிள்ளைக்கு பெறாமலே அம்மாவாகி விட்டாள்,மூத்தாளின் மகனை படிக்க வைத்து டிராயிங் மாஸ்டராக வேலையும் பண்ணி வைத்து ஒன்று விட்ட தங்கையையும் அம்மாவே கூட இருந்து கல்யாணமும் பண்ணி வைத்து விட்டாள்.இதில் லாபமா நஷ்டமா என்று புரியாமல் ஓரக்கத்தி சண்டைகள் அரங்கேறிக் கொண்டிருந்தது தனிக் கதை.
அண்ணிக்கு அம்பிகாவைக் கண்டால் அக்கா மகள் என்ற பாசத்தை தாண்டியும் நாத்தனார் என்ற பொறாமை நிறைய இருந்தது,அதிலும் மாமனார் மகளுக்கு வாழ்க்கை சரி இல்லை என்று வீட்டோடு கொண்டு வந்து வைத்துக் கொண்டு அவள் பிள்ளைகளும் இங்கே வளர்வதில் ஏகப்பட்ட நெஞ்செரிச்சலில் இருந்தாள்; அடிக்கொருதரம் அதை குத்தல் பேச்சில் வெளிக்காட்டிக் கொள்ளவும் தயங்க மாட்டாள்.
இவள் எதிரில் அப்பாவோ அம்மாவோ கரிசனமாய் ரெண்டொரு வார்த்தை கூட சொல்ல முடியாமல் ஆக்கி வைத்தவள் இந்த அண்ணி .
என்னக்கா இன்னும் கிளம்பலையா? கேட்டு விட்டு அக்கம் பக்கம் துலாவிய அண்ணி அம்பிகாவிடம் குசு குசுப்பாய்;
"எங்க தம்பியைக் காணம்? ஊருக்குப் போய்ட்டாரா அதுக்குள்ளே "என்றால் விஷமமாய் .
அம்பிகாவுக்கு முன்பே அவள் மாமியாருக்கு சுருக்கென்று பட..அந்தம்மாள் ;
சிடுசிடுப்பாய் ;
"பிள்ளையைக் கொண்டு போயி வீட்ல விட முன்னாடியே ஊருக்கு பஸ் ஏறிருவாங்களா ?
ஏன் பாக்கியம் நீ அஞ்சு பிள்ளைப் பெத்தியே உம்புருசன் அப்டித் தான் செஞ்சாரா? "
மாமியார் கொத்திய பாம்புக் கொத்தலில் அண்ணி பாக்கியம் அடங்கித் தான் போக வேண்டியதாயிற்று.
ஆனாலும் சமாளிப்பாய் ..."அதில்ல மதினி மருமகனைக் காணமேன்னு கேட்டேன்.நீங்க என்ன பொரிஞ்சு தள்ளிட்டிங்க. "
என்று சொல்லாமல் இல்லை.
கார் வந்தது ...
முன் சீட்டில் அப்பாவோடு அண்ணன்.
இறங்கி வந்து சாமான்கள் எல்லாம் சரி பார்த்து டிக்கியில் வைத்தார்கள் ,அம்மா பிள்ளையைத் தூக்கிக் கொண்டாள்,டீச்சர் கையில் ஒரு கூடையுடன் பின் சீட்டில் அம்மாவுடன் உட்கார்ந்து கொள்ள மாமியார் ஏறியதும் ;டிரைவர் டீசல் போட பணம் கேட்டார். அப்பா
அண்ணனும் அண்ணியும் இருப்பதைப் பார்த்துக் கொண்டு ;
"என்னப்பா இது இப்போ கேட்கற ஊர்ல போய் கொடுக்கலாம்னு இருந்தேன்".ஊர்ல மகா கிட்ட முழு பணம் வாங்கித் தாரேன் இப்ப டீசல் உன் செலவுல போடப்பா " என்றார்.
இதற்கு அர்த்தம் மகளுக்காக அவர் உருகவில்லையாம் ,வாரி இரைக்கவில்லையாம்! மகனுக்கும் மருமகளுக்கும் நிரூபிக்கிறாராம்!
அம்பிகா டீச்சருக்கு முகம் செத்துப் போனது.மாமியார் வேறு பக்கத்தில்;
அந்தம்மாள் என்ன செய்வார் ? மகன் சூதாடி இல்லை,பொய் புரட்டுக்காரனும் இல்லை,குடி..கூத்தி என்று பணம் கரைப்பவனும் இல்லை,என்ன விதியோ தொட்டதில் எல்லாம் தோற்றுக் கொண்டிருந்தான் ,இன்று இப்படி,நாளை எப்படியோ?! காலம் மாறும்,மீண்டு வருவான் தன் மகன் என்ற நினைப்பில் காடு கரைகளுக்கு கூலி வேலைக்குப் போயாவது சம்பாதித்து மகனை காப்பாற்றிக் கொண்டிருப்பவள் அந்தம்மாள்.
முகம் செத்துப் போனாலும் ரோசம் செத்து வடுமா?!
மாமியார் சுருக்குப் பையை படக்கென்று உருவி அதிலிருந்து சில்லறை நோட்டுகளை எண்ணி டிரைவரிடம் கொடுத்தாள்,
"டீசல் போட்டுக்கிட்டே வீட்டுக்குப் போப்பா "
அப்பா இவர்களைப் பார்க்காமல் முன் புற சீட்டில் அமர்ந்து கொண்டு ஜன்னல் வழியே வேறெங்கோ பார்த்துக் கொண்டிருந்தார்
அண்ணனும் அப்பாவின் அருகில் ஏறி உட்கார்ந்து கொள்ள ;டீச்சருக்கு திக்கென்று ஆனது.புருஷனுக்கு இடமில்லை காரில்.
ஆல்பா சூட்கேசை கையில் சுமந்து கொண்டு என்ன செய்வதென்று புரியாமல் வெளியில் நின்று கொண்டிருந்தார் அவர்...
Subscribe to:
Posts (Atom)