Thursday, March 25, 2010

ஜண்டுபாம் கவிதைகள் இரண்டு ...

1.

கடிகார பெண்டுலமாய்
அலைவுறும் கனவுகளுக்குள்
முங்கி நீந்துகையில்
காற்றுக் குமிழிகளாய்
வெளியேறும் நிஜங்களை
கண்ணால் துழாவியவாறு
மெல்ல நழுவி
உந்தி எழ விழைகையில் எல்லாம்
காலிடறின தாமரைக் கொடிகளாய்
கடந்தும் கடக்கவியலா
இகபர அக்கப்போர்கள் ...
இன்னும் ஒரு பிறவி!

2.

ஒரு விரல் தேடும் அலுப்பு
பதிவான மூளை செல்கள்
செல்லரித்து சிதறும் முன்
மரணம் .

Friday, March 19, 2010

கமலக்கண்ணன் S/O அம்சவேணி ...கனகவல்லி டீச்சரின் மகள் அனிதா மகனை ஸ்கூல் வேனில் ஏற்றி விட பஸ் ஸ்டாண்டுக்கு தினம் இந்தப் பக்கமாய்த் தான் நடந்து போகிறாள்...அவளைப் பார்த்து விட்டால் ஒரு பத்து நிமிடங்களாவது நிற்க வைத்து விசாரணை செய்து அனுப்பாமல் மனம் ஆறுவதில்லை சொர்ணவல்லி டீச்சருக்கும் இந்திராணிக்கும்.

மரகதமும் இந்த கூத்தைப் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறாள் .

சொர்ணவல்லி டீச்சரின் மகள் சத்யபாமா இப்போது புருஷன் பிள்ளைகளோடு குப்பை கொட்டுவது நியூயார்க்கில்,மகளின் அமெரிக்கப் பெருமையை டீச்சரைக் காட்டிலும் டீச்சர் புருஷன் வாயால் தான் நித்தம் கேட்க வேண்டும்.காது ஜவ்வு கிழியாத குறை தான்.

பெரிய நாயக்கர் மகனாயிற்றே என்று டீச்சர் புருஷனை எல்லாவற்றிலும் கலந்து கொள்வார்கள் ஊர் பஞ்சாயத்தார்.வேறு என்ன விவகாரம் அங்கே ஓடிக் கொண்டிருந்தாலும் மனிதர் அங்கேயும் போய் மகள் அமெரிக்காவில் டைட்ஸ் போட்டுக் கொண்டு தான் ஷாப்பிங் போவாள் என்று லஜ்ஜையே இல்லாமல் சொல்லிக் கொண்டிருப்பார்.

சத்யபாமாவும் இந்திராணி மகள் ராஜியும் பிளஸ் டூ வரை கூடப் படித்தவர்கள் கோட்டை வீட்டு கமலக் கண்ணனும் இவர்களுடன் தான் படித்தான்.

கண்ணனின் அப்பாவுக்கு இரு தாரங்கள்,மூத்த மனைவி புருஷனின் ரெண்டாம் திருமணம் பிடிக்காமல் ஒதுங்கிக் கொள்ள கண்ணனின் அம்மா அம்சவேணியோடு ஊருக்கு வெளியே தோட்டத்தில் குடியிருந்து கொண்டார் கண்ணனின் அப்பா.அம்சவேணி உத்தர தேசத்துக் காரி என்று சொல்லிக் கொள்வாள் தன்னை,முதலில் கல்யாணமாகி ஒத்து வரவில்லை என்று பிரிந்து பிறகு கண்ணனின் அப்பாவை மணந்து கொண்டாள்.கண்ணன் ரெண்டாம் கணவருக்குப் பிறந்தவன் தான்.

அம்சவேணி விவரிக்க முடியாத அடர் கருப்பு.கருப்பில் அப்படி ஒரு மினு மினுப்பை இந்த ஊர் அவளுக்கு முன் பார்த்திருக்காது .புட்டம் தாண்டி அசையும் கூந்தலுக்கு அழுந்த எண்ணெயிட மாட்டாள்,பஞ்சு பஞ்சான கூந்தலை பட்டுப் போல மெத்தென்று வாரி இறுக்கப் பின்னலிட்டு டிஸ்கோ ரப்பரில் அடக்கி கட்டித் தொங்க விட்டுக் கொள்வாள்,அப்போதைய fashion அது!!!

அந்தக் கால சாவித்திரிக்கு கருப்பு மேக் அப் போட்டார் போல சருமத்தில் மாசு மருவே இல்லாத நிகு நிகு உடல் வாகு...கிழங்காட்டம் தாட்டிமையான பெண் அவள்.அவளிடம் கண்ணனின் அப்பா மயங்கியதில் ஊருக்கு எந்த ஆச்சரியமும் இல்லை ,மனிதர் தூணுக்கு சேலை சுற்றினாலே இமைக்காமல் பார்க்கும் ஜாதி."மூத்த மனைவி புண்ணியவதி" இவரிடமிருந்து தப்பித்து விட்டாள் என்று தான் வீட்டுப் பெண்கள் அரசல் புரசலாய் எப்போதும் பேசிக் கொள்வார்கள்.

அம்சவேணியைப் பற்றி எப்போதுமே கண் சிமிட்டலோடு தான் பேசிக் கொண்டார்கள் ஊர் இளவட்டங்கள்,அதையெல்லாம் சேலையில் ஒட்டிய தூசியாய் தான் அம்சவேணி நினைத்திருக்கக் கூடும்,வீட்டுப் பாதாள அறையில் பணமும் நகைகளுமாய் குவித்து வைத்த புருஷனே இவளது போக்கை வெட்கம் கெட்டு ரசிக்கையில் அவளுக்கென்ன "தினம் ஒரு புருஷன் கூட வைத்துக் கொள்வாள்" இவ அம்மாளுக்கு அம்மா ஜம்பளிபுத்தூர் கதளி நரசிங்கப் பெருமாள் கோயில்ல பொட்டுக் கட்டின தாசியாம்! பெண்கள் கூடும் இடங்களில் இந்தப் பேச்சு தவறாது இருந்தது சில காலம்.

கமலக் கண்ணன் பிளஸ் டூ முடித்ததும் பாலிடெக்னிக் படிக்கப் போனவன் எப்படி இந்திய ராணுவத்தில் சேர்ந்தானோ !படிக்கப் போனவன் ஐந்தாறு வருடங்களில் மிலிட்டரி விடுப்பில் உடுப்போடு தான் ஊர் திரும்பினான்."கன்னிப் பருவத்திலே" என்றொரு படம் பாக்யராஜ் வடிவுக்கரசி நடித்தது அதில் ராஜேஷ் தான் ஹீரோ.அப்போதைய நடிகர் ராஜேஷின் சாயலில் இருந்தான் கமலக்கண்ணன்.

அந்த அம்சவேணி ஒரு நாள் சொர்ணவல்லி டீச்சர் வீட்டுப் படியேறி வந்து உறவுமுறை சொல்லி அழைத்து ;

மதினி உங்க மக சத்யபாமாவ எம் மகன் கண்ணனுக்கு கொடுத்தா என்ன? ராஜாவாட்டம் பையன் .எம் மருமகளுக்கு நான் நூறு சவரன் பரிசம் போட்டு கட்டிகிட்டுப் போறேன்.என்ன சொல்றிங்க என்று கேட்டு விட்டாள் துணிந்து.

அப்படி...இப்படி தயங்கிக் கொண்டிருந்த சொர்ணவல்லி டீச்சர் ...எப்படி சரி சொன்னாரோ ! கண்ணன் தான் டீச்சர் வீட்டு மாப்பிள்ளை என்று சுமார் ஒன்னரை வருடம் ஊர் முழுக்கப் பேசிக் கொண்டிருந்தார்கள்...அவன் லீவில் வந்தால் டீச்சர் வீடே கதியென இருந்தான்.

சொர்ணவல்லி டீச்சருக்கு திலகா..திலகா என்று அக்கா மகள் ஒருத்தி உள்ளூரிலேயே வாக்கப் பட்டிருந்தாள்,அவள் புருஷன் பாண்டியன் பஸ் கண்டக்டர்.சத்யா அவனுக்கு ஒன்று விட்ட கொழுந்தியாள் ஆகிப் போனாளா!

எக்கண்டமும் எகடாசியுமாய் பேசுவதில் சமர்த்தனான மனிதன் வாய்க்கு அவல் சிக்கியதைப் போலத் தான் ...சத்யா அக்காவைப் பார்க்க வீட்டுக்கு வரும் போதோ இல்லை இவன் அவள் வீட்டுக்கு போக வாய்த்தாலோ ....

"சத்தி ...உங்க அத்தைய விருதுநகர்ல பார்த்தேன் நேத்து ...முந்தாநேத்து எங்க டிப்போலருந்து குற்றாலம் டூர் போயிருந்தோம் டிரைவர் கண்டக்டர்கள் எல்லாரும்...பரமசிவம் பிள்ளை மகன் முருகன் தான் காட்டினான் அங்கயும் உங்கத்தை தான் ...கூட வெள்ளையும் சொள்ளையுமா ரெண்டு தடித் தடி ஆம்பளைங்க...அடுத்த வாரம் மெட்ராஸ்க்கு போக டிக்கட் சொல்லி வச்சிருக்குதாமே ...நல்ல சம்பாத்தியம் உங்கத்தைக்கு. ..."
என்று நமுட்டுச் சிரிப்பாய் சுதி ஏற்றி விட...

ராஜேசுடன் டூயட் பாடிக் கொண்டிருந்த சத்யபாமா கொஞ்சம் கொஞ்சமாய் குழம்ப ஆரம்பித்தாள்.குட்டை குழம்ப குழம்ப லீவில் வீட்டுக்கு வந்த கமலக் கண்ணன் இவளது சுரத்தில்லாத பேச்சில் என்னத்தைக் கண்டு கொண்டானோ...பொது சுவர் வைத்து வீடு கட்டிக் கொண்டு பக்கத்து பக்கத்தில் வசித்த இந்திராணி மகள் ராஜி கிளாஸ்மேட் தானே என்று அங்கே கொஞ்ச நேரம் உட்கார்ந்து அரட்டை அடித்து விட்டுப் போனான் ஒரு நாள்.பிறகு அவன் விடுப்பில் இருந்த வரை அது தொடர் கதையாக ;சத்யாவுக்கும் அவனுக்கும் சண்டையாகி அவன் லீவு முடிந்து ராணுவம் போனான்.

அடுத்த லீவில் சத்யாவை எட்டியும் பார்க்காமல் ராஜி வீடே கதியென சிரிப்பும் கும்மாளமுமாய் பேசிக் கழித்தான்.சொர்ணவல்லி டீச்சர் சத்யாவுக்கு ராஜபாளையம் மாப்பிள்ளையை நிச்சயம் பண்ணி விட்டாள்.விஷயம் தெரிந்து அம்சவேணி "எம்மகனுக்கு என்ன கொற......இப்படி நம்ப வச்சு கழுத்தறுத்திட்டின்களே" என்று வீடேறி சத்தம் போட;

"அம்மா தாயே ஒன் நூறு பவுனும் வேண்டாம்...ஊர் ஊரா அம்பளைங்கள சேர்த்துட்டு சுத்தற மாமியாரும் எம் பொண்ணுக்கு வேண்டாம்.எங்களுக்கு தாங்காது இதெல்லாம்" டீச்சர் ஆர்ப்பாட்டமே இல்லாமல் ஒரே பேச்சாய் முடித்து விட அம்சவேணி தெருவெல்லாம் தனக்குத் தானே பேசிக் கொண்டும் அழுது கொண்டும் போனவள் தான் அப்புறம் இந்த வீட்டுப் படியை மிதித்தாளில்லை.

அதற்காக மகனுக்கு கல்யாணம் பேசாமல் இருப்பாளா ! என்ன இருந்தாலும் தாய்! சத்யா தட்டிப் போன பின் ராஜி தான் நன்றாகப் பேசுகிறாளே என அவளை இந்திராணியிடம் பெண் கேட்டாள் அம்சவேணி.

இந்திராணிக்கும் பெண்ணை தர லேசு பாசாய் இஷ்டம் தான் ...ஆனாலும் "கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை" என்பதாய் அம்சவேணியின் நடவடிக்கைகள் குறித்து யோசனையாகவும் இருந்தது.

எப்படி ..எப்படியோ யோசித்துப் பார்த்தும் இந்திராணிக்கும் மகளை அம்சவேனிக்கு மருமகளாக்க துணிவில்லாமல் போக ராஜி ஓசூர்டைட்டன் கம்பெனியில் வேலையிலிருந்த மாப்பிள்ளைக்கு மனைவியானாள்.

"காத்திருந்தவன் பெண்டாட்டிகளை நேற்று வந்தவன் கொண்டு போன " கதையாக ...ஒருத்தி அமெரிக்காவுக்கும் ஒருத்தி ஓசூருக்கும் பறந்து போய் விட கமலக் கண்ணனுக்கு வந்த எகனை மோகனையான கோபத்தில் சொர்ணவல்லி டீச்சர் முன்னாள் தானும் ஒரு டீச்சர் மகளைத் தான் மனம் முடித்திருக்கிறேன் பார் என்று காட்ட ...அதே ஊரில் வடக்குத் தெருவில் இருந்த கனகவல்லி டீச்சர் மகளை ஒரே வாரத்தில் நிச்சயம் செய்து விடுப்பு முடிவதற்குள் கல்யாணமும் செய்து கொண்டான்.

கனகவல்லி டீச்சருக்கு குடும்பத்தில் பல பிரச்சினைகள் இருந்தன.மூத்த மகன் குடிகாரன்.கணவர் ஒரு சந்தேகப் பேர்வழி.இன்னும் இரண்டு மகள்கள் கல்யாணத்துக்கு வேறு நிற்கிறார்களே என்ற விசனத்தில் அதிகம் யோசிக்க அவகாசமின்றி உள்ளூர் மாப்பிள்ளை தானே என்ற ஆறுதலில் பெண்ணைக் கொடுத்து விட்டாள்.

அனிதா இப்படித் தான் கமலக் கண்ணன் மனைவியானாள்.

புருஷனோடு மிலிட்டரி குடியிருப்பில் நான்கு வருடங்கள் ஸ்டேட் ஸ்டேட்டாய் அலைந்து விட்டு அலுத்துப் போய் மூட்டை முடிச்சை கட்டிக் கொண்டு சொந்த ஊருக்கே வந்து அம்மா வீட்டில் தங்கி மகனை படிக்க வைத்துக் கொண்டிருந்தாள்.அம்மா வீடு வடக்குத் தெரு ,ஸ்கூல் வேன் ஏற்ற பஸ் ஸ்டாண்டுக்கு தான் வந்தாக வேண்டும் ,சொர்ணவல்லி வீடும் இந்திராணி வீடும் பஸ் ஸ்டாண்டில் தான்,அவர்கள் வீட்டை கடந்து தான் தினம் இவள் போயாக வேண்டும் .

அப்படி போகிறவளைத் தான் பாசம் பொங்க இழுத்து வைத்துக் கொண்டு ...கை கழுவிய மாப்பிள்ளைப் பாசத்தில் உருகிக் கொண்டிருந்தார்கள் சொர்ணவல்லியும்,இந்திராணியும்.

கண்ணன் எப்பம்மா வரான்?! லீவு கெடைக்குமா?!

கொழந்தையும் நீயும் அவன்கூட இருக்க முடியாதா அங்க!?

உங்கத்தை எதுக்கு மருந்து குடிச்சாளாம்!!? கண்ணன் எதுவும் திட்டி சண்டை போட்டுட்டானா போன லீவ்ல வந்துட்டுப் போறப்ப!?

வா கண்ணு வந்து ஒரு தோச தின்னுட்டுப் போயேன் எங்க வீட்ல,நீயும் எம் பொண்ணு மாதிரி தான!

விஷயம் தெரிந்த எதிர் வீட்டு மரகதம் மட்டுமல்ல கோடி வீட்டு சாந்தா...கடைக்கார தனம் எல்லாரும் தான் மூஞ்சியை மூஞ்சியை பார்த்து கண் ஜாடை காட்டி நக்கலாய் சிரித்துக் கொள்கிறார்கள் இவர்களது பாசப்பிணைப்பைக் கண்டு.

"பொண்ணைத் தரலை இல்ல மூடிக்கிட்டு போறது தான ரெண்டும்...எப்டி குழையுதுங்கன்னு பாரு அந்தப் பொண்ணுகிட்ட!"

எல்லாம் ஒரு பெருமை தான்.ஜம்பம் தான்

(அம்சவேணி தென்னைக்கு வைக்கும் பன்னி மாத்திரை முழுங்கி செத்துப் போய் ஆறு மாதம் ஆன பின் தான் இந்தக் கூத்தெல்லாம்!)

கதை முடிந்தது .

Thursday, March 18, 2010

தினுஸ் ...தினுஸாய்...மனஸ்...!!!

பஸ்ஸில் அதிக கூட்டமெல்லாம் இல்லை.

ஓரிரு சீட்கள் வெறுமையாய் கூட இருந்தன.கடைசி நீள சீட்டுக்கு முன் சீட்டில் ஜன்னலோரம் உட்கார்ந்திருப்பவனை விஜிக்கு நன்றாய்த் தெரியும்.அவனுக்கும் விஜியைத் தெரியும் தான்.விஜி திரும்பிப் பார்க்கவில்லை,

அவன் இவளைப் பார்த்தும் பாராதவனாய்...

மனசெல்லாம் பஞ்சாய்ப் பறப்பதைப் போல ஒரு இலகுத் தன்மை ஊடாட,நிரந்தரமில்லா பேரமைதியில் சீட்டில் நன்றாக சாய்ந்து உட்கார்ந்து கொண்டு பின்புறம் தலை சாய்த்துக் கொண்டாள் விஜி.

நேரம் மாலை 4 மணி ,திருச்சியில் இருந்து புறப்பட்ட கம்பம் பஸ்ஸில் கேரளா நெடுங்கண்டம் எஸ்டேட்டை நோக்கிய பயணத்தில் விஜியும் அவளது ஐந்து வயதுக் குழந்தையும் ... .கம்பம் போகவே ஆறேழு மணி நேரம் ஆகும் அங்கிருந்து குமுளி போய் அங்கிருந்து நெடுங்கண்டம் பஸ் ஸ்டாப்பில் இறங்கி செம்மண் சாலையில் மூன்று கிலோ மீட்டர் உள்ளே போனால் தான் எஸ்டேட் வரும். கணவன் ஜீப் அனுப்புவான். அந்த நம்பிக்கை இன்னும் இருக்கிறது.குளிர் காலமாதலால் மழைப் பிரதேசங்கள் நெருங்க நெருங்க இருள் சூழ்ந்து கொண்டு வந்தது .

வைகை ஆறு சாந்தமாய் ஓடிக் கொண்டிருந்த ஒரு மதிய நேரம்.பள்ளி விடுமுறை நாள்.தாத்தாவின் கொய்யாத் தோப்பு ஆற்றங்கரையில்,கரையொட்டிய மரத்தின் கிளையில் அமர்ந்து கால்களைத் தொங்க விட்டால் பாதக் கொலுசுகளை மோதிக் கொண்டு வெள்ளி நீர் பாய்ந்தோடுவது கொள்ளை அழகாய் இருக்கும் .

கணக்கு விஜிக்கு பெரும் பிணக்கு ...நேற்று கணக்கு வாத்தியார் வீட்டுப்பாட கணக்கை தப்பாய் போட்டுக் கொண்டு வந்ததால் ரூல்ஸ் தடியால் கை நீட்டச் சொல்லி பலக்க வேறு அடித்து விட்டார்.இப்போது நினைத்தாலும் "மழுக்கென்று" கண்ணீர் வந்தது வாத்தியார் அடித்ததற்க்கில்லை அதைப் பார்த்து அந்த கடன்காரன் தியாகு சிரித்ததற்காய் தான்!

"அத்தையிடம் பலமுறை சிடு சிடுத்திருக்கிறாள் இந்த குரங்கை நீ ஏன் பெத்தெடுத்தாய் என்று ! "

அத்தை சிரிப்புடன் இவளை அடிக்க கையை ஓங்கிக் கொண்டு வருவாள்.

"என்னடி மருமகளே!...எம்பையன் ஒனக்கு குரங்கா!? அந்தக் குரங்கு தான் நாளைக்கு ஒனக்கு புருஷனா வரப் போறான்..பார் !"

"வெவ்வெவ்வே' ...இவன யாரு கட்டிக்குவா?! ஆசையப் பாரு! கணக்கு வாத்தியார் ரூல்ஸ் தடி எடுத்துட்டு வரலைனா இவன் பையில இருந்து ஸ்கேல் எடுத்து தரான் என்னை அடிக்க ...இவனப் போய் நான் கட்டிக்குவேனாக்கும்".முகம் சிவக்க விஜி கத்திக் கொண்டிருக்க

"ஆமாண்டி ஒன்னத்தான் கட்டிக்கணும்னு இங்க ஒத்தக் கால்ல நின்னு நின்னு கால் சுழுக்கிடுச்சு பாரு.அசல் குரங்கு நீ தான் இன்னொரு வாட்டி சொல்லு "வெவ்வெவ்வே" அப்டியே போட்டோ எடுத்து திருஷ்டிக்கு மாட்டுங்கம்மா ,திருஷ்ட்டிப் பூசணிக்காய் !"

அப்போது தான் குரல் உடைபட ஆரம்பித்த நேரம் தியாகுவுக்கு ,புதிதாய் அப்பாவின் லுங்கி கட்ட பழகி இருந்தான்,

போடா ...தகர டப்பா தொண்டை ...!

"போடீ எலிவால் சுந்தரி ...ரெட்டை ஜடை ரேடியோ ...கொட்டடிக்கப் போறியா?! "

(அவளது காதோரம் இரு புறமும் அத்தை வைத்து விட்ட டேலியா பூக்களை ஜடையோடு பிடித்து ஆட்டி அவன் சத்தம் போட்டு சிரிக்க )

உதடுகள் கோணிக் கொண்டு அழுகை வந்தது விஜிக்கு ...அழ ஆரம்பித்து விட்டாள்.

"அம்மா ரேடியோன்னு சொன்னா அழறா பாரு...இப்ப தான் ஒரிஜினல் ரேடியோ வால்யூம் கூட்டனும்னா ஜடைய திருகனும்" அவன் இன்னும் அவளை சீண்ட.அத்தை கோபச் சிரிப்புடன் அவன் தலையில் கொட்டினாள்.

"போடா போக்கிரி ...சும்மா எம்மருமகள கேலி செஞ்சிகிட்டு ...ஓடிப் போயிடு உங்கப்பாகிட்ட ,நீ வாடி என் செல்ல மருமகளே !" விஜியை இழுத்து அணைத்துக் கொண்டாள் .

"சரி...சரி வால்யூமக் குறைக்கச் சொல்லு என் ஹோம் வொர்க் நோட் தரேன் ,பார்த்தாச்சும் ஒழுங்கா தப்பில்லாம கணக்கு போடச் சொல்லு உம்மருமகள.நாளைக்கும் வந்து அடி வாங்கி வச்சிட்டு அழுதுட்டு இருக்கப் போறா !"

கண்களில் கேலி கூத்தாட அவளைப் பார்த்து இன்னும் பழிப்பு காட்டி விட்டு அவன் நகர்ந்தான்.
விஜிக்கு அம்மா கேன்சரில் போய் விட்டாள்,அப்பா மறுகல்யாணம் பண்ணிக் கொண்டு ஒதுங்கி விட்டார்.நாத்தனாரின் மகளை தியாகுவின் அம்மா தான் சீராட்டி வளர்த்தாள் என்று ஊருக்குள் இன்றும் பேசுவார்கள்.

கதை இப்படியே போனால் விஜி தியாகுவைத் தான் மணந்திருக்க வேண்டும்.ஆனால் அந்த தியாகு தான் இப்போது இதே பஸ்ஸில் பார்த்தும் பாராது கடைசி சீட்டுக்கு முன் சீட்டில் உட்கார்ந்திருக்கிறானே!?

நடந்தது என்ன?!
.
.
.
.
.
.
.
.
.
.
..
...

வாசிப்பவர்களுக்கு இஷ்டமிருந்தால் பின்னூட்டத்தில் உங்கள் கற்பனைக்குதிரைகளைத் தட்டி விடுங்கள்...

Monday, March 15, 2010

ஆப்பிள் ...
மகா கடித்துக் கொண்டிருந்த ஆஸ்திரேலியன் ஆப்பிள் கை வழியே வழுக்கிக் கொண்டு நழுவி உருண்டு கூடம் தாண்டி வெளிப்புற உயரமான திண்ணை நடுவில் ஸ்கூட்டரை வீட்டுக்குள் ஏற்ற கட்டிய சிமென்ட் சரிவில் புரண்டு கொண்டு ஓடி தெருப் புழுதி பூசிக் கொண்டு நின்றது.பின்னே அதை விரட்டிக் கொண்டு ஓடி வந்த மகா புழுதி பூசிய ஆப்பிளை கையில் எடுக்க மனமின்றி திண்ணையில் உட்கார்ந்திருந்த தன் அப்பாவைப் பெற்ற பாட்டியிடம் ;

"பாட்டி ஆப்பிள் மண்ல விழுந்திருச்சு...எடுத்துக் கழுவித் தாங்க " என்றாள்.


லக்ஷ்மி அம்மாள் அந்த ஆப்பிளை எடுத்து கழுவித் தருவதற்குள் மகா வீட்டுக்குள் ஓடி விட, அந்தம்மாளே பழத்தை மருமகளிடம் கொடுப்பதற்காய் வீட்டுக்குள் வந்தாள்.ஞாயிற்றுக் கிழமை கோர்ட் லீவ்,வக்கீலான லக்ஷ்மி அம்மாளின் மகன் வீட்டில் தான் இருந்தான்.

டி.வி யில் பாட்டு ஓடிக் கொண்டிருந்தது.கல்லூரி வார இறுதி விடுமுறைக்கு அக்கா வீட்டுக்கு வந்திருந்த மகனின் கொழுந்தியாள் சுற்றுப் புறம் மறந்து பாட்டில் லயித்திருந்தாள்.சின்னவன் கார்ட்டூன் சேனல் வைக்கச் சொல்லி நச்சரித்துக் கொண்டிருந்தான்.மகா காமெடி பார்க்க ஆதித்யா சேனல் வைக்கச் சொல்லி தொணப்பிக் கொண்டிருந்தாள்,மருமகள் மதியச் சமையலுக்கு காய் நறுக்கிக் கொண்டிருந்தாள்,மகன் பேப்பரில் மூழ்கிப் போயிருந்தான்.


லக்ஷ்மி அம்மாளை ஒருவரும் கவனித்து என்னவென்று கேட்கக் காணோம்.அந்தம்மாள் இந்த ஆப்பிளை என்ன செய்வதென்று யோசித்துக் கொண்டவளாய்,அதைக் கொண்டு போய் மருமகள் நறுக்கிக் கொண்டிருந்த காய்கறிக் கூடையில் வைத்து விட்டு.


"ஆப்பிள் மண்ல விழுந்துருச்சு...மகா கழுவித் தரச் சொன்னவ...உள்ள வந்துட்டா,இந்தா இதைக் கழுவிட்டேன்,இந்த தூசிய மட்டும் நறுக்கிக் கீழே போட்டுட்டு சாப்புடலாம்,நறுக்கிக் கொடு திங்கட்டும் ."
சொல்லி விட்டு அந்தம்மாள் மறுபடி திண்ணைக்கே போய் விட்டாள்.

மருமகள் நல்லவளோ கெட்டவளோ...இன்னமும் ஒரு முடிவுக்கே வர முடியாத நிலை தான் லக்ஷ்மி அம்மாளுக்கு.வார இறுதியில் தான் மதியச் சாப்பாடு நிறைவேறக் கிடைக்கும்,பிள்ளைகள் பள்ளிக்கும் கணவன் கோர்ட்டுக்கும் போய் விட்டால் பெரும்பாலும் காலையோடு சமையலை ஏறக்கட்டி விடுவாள்.மதியம் இருப்பதை வைத்து ஒப்பேற்றி விடும் அதி சிக்கனக்காரி.


'தொட்டுக் கொள் துடைத்துக் கொள் ' எனும் ரீதியில் லக்ஷ்மி அம்மாள் சட்டியில் மீந்திருப்பதை எல்லாம் வழித்துப் போட்டு தன் கணவருக்கு தந்து விட்டு ஒரு சொம்புத் தண்ணீரை மடக்..மடக்கென்று குடித்து விட்டு மறுபடியும் திண்ணையில் போய் உட்கார்ந்து கொள்வாள்.கணவருக்கு தொண்ணூறு வயதிருக்கும்,இந்தம்மாளுக்கு எழுபத்தி ஐந்து.பசி தாங்கத்தான் முடியவில்லை,தானாக ஆக்கித் தின்றாலும் வயிற்றுப் பாட்டுக்கு பஞ்சம் இருக்காது,மருமகள் கையால் இப்படி சோறு உண்ணும் பவிசை எண்ணி அந்தம்மாள் விசனப் படாத நாட்களில்லை இந்த பத்து வருடங்களாய்.ஆனாலும் வாய் மூடி மௌனியாகவே காலத்தைப் பிடித்து தள்ளிக் கொண்டிருந்தாள்...ஏனென்று தான் அந்தம்மாளுக்கே புரியவில்லை! ஊமைப்பாசங்கள் வாய் திறப்பதில்லையோ!


திண்ணையில் உட்கார்ந்து கொண்டால் நேரம் அதுபாட்டுக்கு கரையும்,யாராவது வந்து லக்ஷ்மி அம்மாளிடம் கதை பேசிக் கொண்டிருப்பார்கள் ,சாப்பாட்டு நேரம் என்பதால் இந்த வெயிலுக்கு யாரையும் காணோம்,

"உள்ளே என்ன சமையலோ! ஞாயிற்றுக் கிழமை ...கறி எடுத்திருப்பார்கள்,தங்கை வேறு வந்திருக்கிறாளே! "

"ம்ம் ...எனக்கு தர வேண்டாம்,இந்த மனுசர் இன்னும் எத்தனை நாள் வாழ்ந்து விடப் போகிறார்!இவருக்காச்சும் ஒரு மடக்கு சூப் கொண்டு வந்து கொடுத்திருக்கலாம்.காலங்காலையில் பேரப் பிள்ளை ஒரு டம்பளர் தழும்பத் தழும்ப சூப் கொண்டு வந்து திண்ணையில் உட்கார்ந்து தான் குடித்துக் கொண்டிருந்தான்.பச்சைப் பிள்ளை..சிந்தாமல் குடிக்க லக்ஷ்மி அம்மாள் தான் டம்ளர் பிடித்துக் கொண்டிருந்து விட்டு பிறகு அதைக் கழுவிக் கொண்டு போய் உள்ளே கவிழ்த்தினாள்."

இந்த வீட்டில் தான் புழங்கிக் கொண்டிருந்த அந்த நாட்களில் கறியும் மீனுமாய் பிள்ளைகள் வயிறு நிறைத்த தன் கைகளை உற்றுப் பார்த்துக் கொள்ளும் போது தன்னிச்சையாய் கண்கள் நிறைந்தன.தன் மாமியார் மாமனாரை தான் எப்படி வைத்துக் கொண்டோம் என்றும் எண்ணிப் பார்த்துக் கொள்கையில் மீண்டும் கண்கள் பொங்கின.

சின்னச் சின்ன ஊடல்கள் இருந்தாலும் அந்த ஜீவன்களை பார்க்க வைத்து தின்று விட்டு வெறும் ரசத்தை ஊற்றித் தின்னக் கொடுத்த கொடுமையெல்லாம் தான் செய்திருக்கவில்லை,அப்பனே!...முருகா! என்னடா வாழ்க்கை இது! சீக்கிரமா அழைச்சுக்கோ !" யோசனை வறண்டு உருள திண்ணை மேல்படியில் காலரவம் கேட்டது.

சேலைத் தலைப்பால் கண்களை துடைப்பது தெரியாமல் துடைத்துக் கொண்டு தெரு பார்த்தது பார்த்தவாறே உட்கார்ந்திருந்தால் லக்ஷ்மி அம்மாள்.யாராயிருந்தால் என்ன?இப்போதைக்கு சாப்பிட சொல்லி அழைக்கப் போவதில்லை யாரும்,எல்லோரும் உண்டு முடித்த பின் உள்ளிருந்தே மருமகள் நல்ல தனமாய்த் தான் குரல் விடுவாள்

"அத்தே...மாமாக்கு சாப்பாடு போட்டுட்டு நீங்களும் சாப்பிடுங்களேன்..நேரமாகலையா" எனக்கென்னான்னு உட்கார்ந்திருக்கிங்க!"

உதட்டில் நெளியும் விரக்திப் புன்னகையோடு இந்தம்மாள் அப்புறம் தான் உள்ளே போகலாம்.

ஆரம்ப நாட்களில் "வயதான மனுசராச்சே என்று...எல்லோருக்கும் முதலில் தன் கணவருக்கு சாப்பாடு போட்டு விட்டு இந்தம்மாளும் எதையோ சாப்பிட்டதாய் பேர் பண்ணிக் கொண்டு கூடத்தில் உட்கார்ந்தவள் தான்.அப்போதெல்லாம் என்ன நடந்ததாம்?! சமையல் உள்ளில் கச முசா...கச..முசா வென்று மருமகள் விம்மலும் பொருமலுமாய் மகனை விரசிக் கொண்டிருப்பாள் ,அகஸ்மாத்தாய் அவன் கோர்டுக்குப் போய் விட்டாள் அவள் தனக்குத் தானே வெறுப்புடன் புலம்புவாள்,பாதி கேட்கும்,பாதி கேட்காது,ஆனாலும் புலம்பலின் சாராம்சம் இது தான்!

"கத்தரிக்காய் காரக்குழம்பு அவருக்கு ரொம்பப் பிடிக்கும்னு ஆச..ஆசையாச் செஞ்சு வச்சா...சட்டில ஒட்டிட்டு தான் இருக்கு ,வந்தா அவருக்கு என்னத்த போடறதாம்?பீன்ஸ் பொரியல் மகாக்கு ரொம்ப இஷ்டம்...அம்புட்டையும் தூக்கி கிழவருக்கு போட்டாச்சு...இனிமேத்தான் வளரப் போறாராக்கும்,வயசாச்சே தவிர கொஞ்சமும் இங்கிதமில்ல.எல்லாம் எந்தலைஎழுத்து ,இதுகளைக் கட்டிட்டு இங்க மாரடிக்கணும்னு! "

லக்ஷ்மி அம்மாள் சுரணை கெட்டவளா...இல்லையே! செவிடா ...அதுவும் தான் இல்லையே!

மகள்களின் வீடுகளுக்குப் போகலாம்...வாரம் பத்து நாட்கள் ..பிறகு!

தனியாக இந்த வயதில் சொந்த வீடிருக்க கிராமத்தில் தனிக் குடித்தனம் போவதென்பது அவள் இத்தனை காலம் வாழ்ந்த வாழ்க்கைக்கு கொஞ்சமும் பொருந்தாது,ஊர் சிரிக்கும் ,அதற்க்கு ஒரு சொம்புத் தண்ணீரை முழுங்கி விட்டு பேசா மடந்தையாய் திண்ணையில் உட்காருவது போதுமென்று தான் இருந்தது.


திண்ணை மேற்படியில் வந்து நிற்பது "தொண்டை செருமலை" வைத்து மகன் தான் என்று உணர முடிந்தது ,அப்படியே அவன் அப்பாவைப் போலவே இவனும் தொண்டையை செருமிக் கொள்வான். முன்னெல்லாம் அப்பாவைப் போலவே பிள்ளை என்று பெருமையாய்ப் பேச முடிந்தது ,இப்போது அம்மா...அப்பா என்ற அழைப்பே சுருங்கித் தேய்ந்து வெறும் செருமல் தான் அழைப்பு என்றான பின் ஆயாசம் தான் மிஞ்சியது.

"என்னப்பா...? " என்பதைப் போல லக்ஷ்மி அம்மாள் மகனை நிமிர்ந்து பார்க்க.

ஒரு தட்டை நீட்டினான் மகன் .

அதில் ஆப்பிள் துண்டுகள் !

ஒரு நொடி அதிசயித்துத் தான் போனாள் லக்ஷ்மி அம்மாள் .

"இத சாப்பிட்ரும்மா...இல்லனா...அப்பாக்கு கொடு "

"ஏம்ப்பா ..மகா தின்னுட்டு இருந்தாளே...பிள்ளைங்களுக்கு தா ,எங்களுக்கெதுக்கு ?!"

அவளுக்கு இது வேண்டாமாம்,அவம்மா வேற வெட்டிக் கொடுத்துட்டு இருக்கா ,நீ இத சாப்புடும்மா"
ஒன்னு பதினஞ்சு ரூபா.சின்னக் கழுத மண்ல விழுந்தது திங்க மாட்டாளாம்... அதான் கழுவித் துடைச்சாச்சு இல்ல!

கிலோ ஆப்பிள் நூறு ரூபாயாக்கும்!

மகன் தனக்குள் முணு முணுத்துக் கொண்டு ஆப்பிள் தட்டை அவளருகில் வைத்து விட்டு உள்ளே போய் விட்டான் .

ஆப்பிள் விலை தெரிந்த மகனுக்கு அம்மாவின் விலை தெரியுமோ?!

ஆப்பிளைப் பார்த்து கதறிக் கொண்டு அழுகை வந்தது லக்ஷ்மி அம்மாளுக்கு.முந்தானை வாயை அடைத்துக் கொள்ள கண்ணீரை தொண்டைக்குள் விழுங்கிக் கொண்டாள்.

லக்ஷ்மி அம்மாளின் அழுது சிவந்த கண்களைப் போலவே தட்டில் அடர் சிவப்பாய் சிரித்துக் கொண்டிருந்தது ஆப்பிள் .


Thursday, March 4, 2010

வி.ஐ.பி ஆல்பா சூட்கேஸ் ...இருந்து இருந்து அம்பிகாவுக்கு மூன்றாவதாக பையன் பிறந்திருந்தான். மூத்தவை இரண்டும் பெண்கள்;சத்துணவு டீச்சரான அம்பிகாவின் அதிர்ஷ்டம் தான் பையன் பிறந்தது என்று கருக்கலிலேயே ஆஸ்பத்திரிக்கு குழந்தையைப் பார்க்க ஓடி வந்த பால்வாடி ஆயா சொல்லிச் சொல்லி பூரித்துக் கொண்டிருந்தாள்.அம்பிகாவின் மாமியார் ஆஸ்பத்திரிக்கு எதிர் சந்தில் இருந்த காபிக் கடையில் வடையும் காப்பியும் வாங்கப் போயிருந்தார்.

அம்பிகா டீச்சர் தலையணைக்கடியில் இருந்த மணி பர்சை திறந்து அடிக்கடி எண்ணிப் பார்த்துக் கொண்டாள்.அதில்
250 ௦ ரூபாய்களும் 5 ரூபாய்க்கு சில்லறைகளும் இருந்தது.அம்மா பிரசவமாக ரெண்டொரு நாளாகும் என்று சாயந்திரமாக மட்டும் வந்து எட்டிப் பார்த்து விட்டு போயிருந்ததால் அவர்களுக்கு இன்னும் சேதி தெரியாது ,ஆயாவிடம் தான் தாக்கல் சொல்லி விட வேண்டும் ,பஸ் காசாவது கொடுத்து விட்டால் தான் நியாயப்படும்.

அப்பா இந்நேரம் வீட்டில் தான் இருப்பார். ஆறு மணி பஸ்சுக்கு போகச் சொல்லி சொன்னால் சரியாக இருக்கும்,தம்பிகள் தங்கை,அண்ணன் வீட்டில் என்று எல்லோருமே இருப்பார்கள்.பர்சைப் பிரித்து மாமியார் வருவதற்குள் ரெண்டு ரூபாய்களை அவசரமாக எண்ணி ஆயாவிடம் கொடுத்த அம்பிகா டீச்சர்.அங்க போய் சாப்பிட்டுக்கோ ஆயா.அப்டியே அவங்க கிட்ட தாக்கலும் சொல்லிட்டு நீ ஸ்கூலுக்குப் போ ...எனக்கு பதிலா ஜோதி டீச்சர் இருப்பாங்க.

அம்பிகாவுக்கு மாமியார் மட்டும் தான்.அந்தக் கால கண்ணாம்பாளை கொஞ்சம் குள்ளமாக கற்பனை செய்தால் அது தான் அம்பிகாவின் மாமியார்.தினமணி தாளில் சுற்றிய வடைகளோடும் திருக்கு சொம்பில் காப்பியோடும் அந்த சின்ன ஆஸ்பத்திரிக்குள் இருந்த ஒற்றை அறையில் நுழைந்தார் அந்த அம்மாள்.நடு ராத்திரியில் பிரசவமானதால் இன்னும் அயற்சியாய் இருந்தது அம்பிகாவுக்கு.ஆயா வடை தின்று காபி குடித்துப் பிள்ளையை ,

என் ராசா..எந்தங்கம்...எங்க டீச்சரம்மா பெத்தெடுத்த சிங்கம் ,இன்னும் என்னவெல்லாம் வாய்க்கு வந்ததோ எல்லாம் சொல்லி கொஞ்சி விட்டு புறப்பட்டு விட்டாள்.

அவள் போனதும் மாமியார் அம்பிகா தூங்குவதாக நினைத்துக் கொண்டு வாங்கி வந்த வடைகளில் ரெண்டை தட்டில் வைத்து பிட்டு வாயில் போட்டுக் கொண்டார்.பாவம் பசி தாங்க முடியாத ஜீவன்.பிள்ளைப் பெற்ற உடம்பு இந்நேரத்துக்கு வடை திங்க சொல்ல முடியுமா? இட்லி அவித்துக் கொட்ட நேரமாகுமாம் ஏழுமணிக்கு வரச் சொன்னான் காபிக் கடைக்காரன். தனக்குள் புலம்பிக் கொண்டு அந்தம்மாள் ஒரு லோட்டா காபியையும் முழுங்கினார்.

என்ன தான் சின்ன ஆஸ்பத்திரி என்றாலும் ,சுகப் பிரசவம் தான் என்றாலும் பிரசவ செலவு 200 ரூபாயாவது போடுவார்கள் ,கூட இருந்த நர்சுக்கு பத்து ரூபாயாச்சும் தரனும்.டாக்டரம்மாவுக்கு தாம்பாளத்தில் வைத்துக் கொடுக்க பழம் வாங்க வேண்டும் அதற்க்கு ஒரு இருபது இருபத்தி ஐந்து ஆகாதா? பிள்ளையைப் பார்க்க வருகிறவர்களுக்கு காபி வடை செலவு மிட்டாய் வேறு வாங்கி வைக்க வேண்டும் அப்படி ஒரு பத்து பதினைந்து ரூபாய்கள் ஆகும்.இன்னும் பிறந்த பிள்ளைக்கான செலவுகள் வேறு ஒரு பக்கம்.

ஜான்சன்ஸ் சோப்
பவுடர்
தனி துண்டு
குழந்தைக்கு உடுத்த புதுத் துணிகள்,
கைக்கும் காலுக்கும் கட்ட வசம்பு,
கழுத்துக்கு கருப்பு பூசல் மாலை
காலுக்கு தண்டை
பாலோ மருந்தோ ஊட்ட சங்குக்குப் பஞ்சமில்லை மூத்தது இரண்டுக்கும் வாங்கியதே வீட்டில் கிடக்கும் ,அது போதும்.

எப்படிப் பார்த்தாலும் செலவு 250 ...300 நெருக்கி வரும் போலத்தான் தெரிகிறது.

ஆஸ்பத்திரிக்கு வருவதற்கு முதல் நாள் மாலையில் தான் சம்பளப் பணம் 300 வாங்கி அப்படியே அதை அப்பாவிடம் கொடுத்திருந்ததால் கொஞ்சம் நிம்மதியாகத் தான் இருந்தது.புருசனுக்கு சரியான வருமானம் இல்லை ,இரண்டு பிள்ளைகளை வைத்துக் கொண்டு அங்கே சமாளிக்க முடியாதென்று தான் அப்பா இங்கேயே கூட்டி வந்து அவருக்கு தெரிந்தவர்களிடம் பேசி வைத்து இந்த வேலையை வாங்கிக் கொடுத்தார்.டீச்சர் வீட்டுக்காரர் மாதம் ஒரு முறை வந்து போவார்.போகும் போது டீச்சர் தான் பஸ் செலவுக்கு காசு கொடுத்து அனுப்ப வேண்டிய நிலை.விதி மாறும் என்ற நம்பிக்கையில் தான் வாழ்கிறார்கள்.

மாமியார் ரொம்ப விநயம் பிடித்தவள் இல்லை ...ஏழு மணிக்கெல்லாம் ஓடிப் போய் இட்லி வாங்கி வந்து டீச்சரை எழுப்பி சாப்பிட வைத்தார்.அதற்குள் டாக்டரம்மாவும் வந்து விட ;என்ன சாப்பிடக் கொடுக்கலாம் என்று கேட்டுக் கொண்டார். நார்மல் டெலிவரி தானம்மா ...சில்லுனு மாத்திரம் இல்லாம ரெண்டொரு நாள்ல எல்லாம் சாப்பிடக் கொடுங்க.பட படவென்று சொல்லி விட்டு தொட்டிலில் கிடந்த குழந்தையின் கன்னத்தைக் கிள்ளி பிள்ளையை எடுத்துக் கொடுங்க பால் கொடுக்கட்டும் சொல்லிக் கொண்டே தன் கிளினிக்குக்கு போய் விட்டாள் அந்தம்மாள். ,

இந்த அறையை ஒட்டிய சின்ன அறை தான் அதுவும்.வெளியில் ஒரு நீளமான வராண்ட,அங்கே பெஞ்ச் போட்டிருப்பார்கள் நோயாளிகள் உட்கார.கவர்மென்ட் ஆஸ்பத்திரிக்குப் போய் விட்டு பிறகு இங்கே வந்து விடுவார் டாக்டரம்மா.காலையில் ஒரு ஒருமணி நேரம் பிறகு சாயந்திரம் மட்டும் தான் கேஸ் பார்ப்பார்.வீட்டை ஒட்டி இருந்த இரண்டு சிறு அறைகளையும் வராண்டாவையும் தான் ரங்கநாயகி ஹாஸ்பிடல் என்று போர்டு மாட்டி இப்படி ப்ராக்டிஸ் செய்து கொண்டிருக்கிறார்.கொஞ்சம் கைராசிக்காரர் என்று பெயராகி விட்டது."இங்க பிரசவம் பார்த்தா ஆம்பளப் புள்ள பொறக்குமாம்!!!"

ஆயா போய் தாக்கல் சொன்ன மாயத்தில் அடுத்த பஸ்சிலேயே அம்மாவும் அப்பாவும் வந்து விட்டார்கள்.

அம்மா குழந்தையை மடியில் போட்டுக் கொண்டு பிளாஸ்டிக் கூடை நிறைய மடித்துக் கொண்டு வந்திருந்த துணியைக் கிழித்து கிழித்து காட்டுப் பிய் துடைத்து துடைத்து போட்டுக் கொண்டு சிரித்து சிரித்து பேரனைக் கொஞ்சிக் கொண்டிருந்தாள்.அப்பா படியேறும் போதே கையிலிருந்த பையில் பவுடர்,எண்ணெய் சோப்பு குழந்தைத் துணி என்று தன் வந்தார். அம்பிகா டீச்சருக்கு மாமியார் முன்னிலையில் அப்பா இப்படி வந்தது பெருமையாக இருந்தது."எங்கப்பாவாச்சே" என்ற நினைப்பில் முகம் பெருமிதத்தில் பள பளத்தது.சாத்தூர் எஸ்.ஆர் நாயுடு காலேஜில் பி.யூ.சி படிக்கும் தம்பி காலையில் போகும் போது ஒரு தடவை சாயந்திரம் வரும் போது ஒரு தடவை ஆஸ்பத்திரிக்கு வந்து தொட்டிலை அகல விரித்து மருமகனை ஆசை தீரப் பார்த்து கொஞ்ச நேரம் கொஞ்சி விட்டுப் போவது இன்னும் பெருமையானது அம்பிகா டீச்சருக்கு.

ரெண்டாம் நாள் பிள்ளையின் அப்பா வந்து விட்டார்.எப்போதும் சுமந்து வரும் ஆல்பா சூட்கேசில் இந்த முறை பெண்டாட்டிக்கென்று ஒரு புது பாலிஸ்டர் சேலையும்,பிள்ளைக்கு புது உடுப்புகளும் கொண்டு வந்திருந்தார்.பணம் எதுவும் இருக்கிறதா என்று டீச்சர் கேட்கையில் அவர் மோட்டு வளையைப் பார்க்கவே டீச்சர் குழந்தைக்கு பால் கொடுக்கும் சாக்கில் கீழே குனிய ரெண்டு சொட்டுக் கண்ணீர் உதிர்ந்து மறைந்தது.

அண்ணனும் அண்ணன் பெண்டாட்டியும் ஹார்லிக்ஸ் பாட்டிலோடு வந்து எட்டிப் பார்த்து விட்டுப் போனார்கள்.

கூட வேலை பார்த்த டீச்சர்கள் ரெண்டு பேர் ஆளுக்கொரு குழந்தைத் துணியை கையில் பிடித்துக் கொண்டு வந்து காப்பி குடித்து பிள்ளை கையில் பத்து ரூபாய் திணித்து விட்டுப் போனார்கள்.ஊரிலிருந்து டவுனுக்கு வேறு காரியமாக வருகிறவர்கள் கூட பிள்ளையைப் பார்க்கும் சாக்கில் ஆஸ்பத்திரிக்கு வந்து காப்பி சர்பத் குடித்து விட்டுப் போனார்கள்.

மூன்றாம் நாள் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்குப் போகச் சொல்லி விட்டார்கள்.

பொண்ணுப் பிள்ளை மகன் சுந்தரத்தின் அம்பாசிடர் காருக்கு சொல்லி இருந்தார் அப்பா ,அந்த ஒரு கார் தான் அப்போது ஊருக்குள் கார் என்ற பெயரில் பகட்டாக இருந்தது.வேறு கார்கள் இருப்பதெல்லாம் அந்த ஊர் ஜனங்களுக்கு ரொம்ப நாட்களுக்குத் தெரியாது.

கார் வாடகை 75 ௦ரூபாயாம் .

சம்பளப் பணம் மொத்தமும் அப்பாவிடம் தானே கொடுத்திருக்கிறோம் என்று தைரியமாய்த் தான் இருந்தார் அம்பிகா டீச்சர்.

ஆஸ்பத்திரி செலவுகள் பெரிய மனது பண்ணி அந்த டாக்டரம்மா 150 ரூபாய் தான் எடுத்துக் கொண்டார் தட்டில் வைத்த ஐம்பதை அப்படியே குழந்தையில் கையில் திணித்தார்.அந்தம்மாளின் தங்கை அம்பிகா டீச்சருடன் பாளையங்கோட்டை சார டக்கர் ஸ்கூலில் பி.யூ.சி ஒன்றாகப் படித்து விட்டு இப்போது மெட்ராஸ் மெடிகல் காலேஜில் டாக்டருக்குப் படித்துக் கொண்டிருக்கிறாள்.அந்த பாசத்தில் இப்படிச் செய்திருக்கலாம்.டீச்சர் வெளி வார்த்தையாக ;

"எதுக்கு டாக்டர் ...வேண்டாம் டாக்டர் பணம் எடுத்துக்குங்க டாக்டர் "

என்றாலும் ,பணத்தை திரும்ப எடுத்துக் கொள்ளவில்லை அவர்.வயிற்றில் பால் வார்த்ததைப் போலத் தான் இருந்தது அந்நேரம்.


மணி பர்சில் இருந்த 250 இல் 200 செலவு போக புருசனுக்கு பஸ் செலவுக்கு அவர் கேட்கும் முன்பே ஹேங்கரில் தொங்கிய சட்டைப் பையில் வைத்து விட்டு
அப்பாவிடம் தான் 300 ரூபாய் இருக்கிறதே அதை வைத்து கார் வாடகை கொடுத்துக் கொள்ளலாம் என்ற சுய சமாதானத்தில் காருக்காக காத்துக் கொண்டிருந்தார்கள் .

அந்நேரம் அண்ணி வரக் கூடும் என்று அம்பிகா டீச்சர் எதிர் பார்க்கவில்லை.

அண்ணனும் அண்ணியும் கூட எலிமெண்டரி ஸ்கூல் டீச்சர்கள் தான் ,டீச்சரை வீட்டுக்கு அழைத்துப் போக முதலில் அவர்களைத் தான் கேட்டார் அப்பா ,சொல்லி வைத்தது போல ரெண்டு பேருமே மீட்டிங் இருக்கு ,டி.ஓ வருவாரு என்று சாக்கு போக்கு சொல்லிக் கழண்டு கொண்டார்கள்,இப்போதேன்னவாம்!!!
அப்பா தான் கார் அழைத்துக் கொண்டு வரப் போயிருந்தார்.

அம்மாவின் ஒன்று விட்ட தங்கை தான் அண்ணி. அம்மா ரெண்டாம் தாரம் என்பதால் கல்யாணமாகி வருகையில் பதினோரு வயதுப் பிள்ளைக்கு பெறாமலே அம்மாவாகி விட்டாள்,மூத்தாளின் மகனை படிக்க வைத்து டிராயிங் மாஸ்டராக வேலையும் பண்ணி வைத்து ஒன்று விட்ட தங்கையையும் அம்மாவே கூட இருந்து கல்யாணமும் பண்ணி வைத்து விட்டாள்.இதில் லாபமா நஷ்டமா என்று புரியாமல் ஓரக்கத்தி சண்டைகள் அரங்கேறிக் கொண்டிருந்தது தனிக் கதை.

அண்ணிக்கு அம்பிகாவைக் கண்டால் அக்கா மகள் என்ற பாசத்தை தாண்டியும் நாத்தனார் என்ற பொறாமை நிறைய இருந்தது,அதிலும் மாமனார் மகளுக்கு வாழ்க்கை சரி இல்லை என்று வீட்டோடு கொண்டு வந்து வைத்துக் கொண்டு அவள் பிள்ளைகளும் இங்கே வளர்வதில் ஏகப்பட்ட நெஞ்செரிச்சலில் இருந்தாள்; அடிக்கொருதரம் அதை குத்தல் பேச்சில் வெளிக்காட்டிக் கொள்ளவும் தயங்க மாட்டாள்.

இவள் எதிரில் அப்பாவோ அம்மாவோ கரிசனமாய் ரெண்டொரு வார்த்தை கூட சொல்ல முடியாமல் ஆக்கி வைத்தவள் இந்த அண்ணி .

என்னக்கா இன்னும் கிளம்பலையா? கேட்டு விட்டு அக்கம் பக்கம் துலாவிய அண்ணி அம்பிகாவிடம் குசு குசுப்பாய்;

"எங்க தம்பியைக் காணம்? ஊருக்குப் போய்ட்டாரா அதுக்குள்ளே "என்றால் விஷமமாய் .

அம்பிகாவுக்கு முன்பே அவள் மாமியாருக்கு சுருக்கென்று பட..அந்தம்மாள் ;
சிடுசிடுப்பாய் ;

"பிள்ளையைக் கொண்டு போயி வீட்ல விட முன்னாடியே ஊருக்கு பஸ் ஏறிருவாங்களா ?

ஏன் பாக்கியம் நீ அஞ்சு பிள்ளைப் பெத்தியே உம்புருசன் அப்டித் தான் செஞ்சாரா? "

மாமியார் கொத்திய பாம்புக் கொத்தலில் அண்ணி பாக்கியம் அடங்கித் தான் போக வேண்டியதாயிற்று.

ஆனாலும் சமாளிப்பாய் ..."அதில்ல மதினி மருமகனைக் காணமேன்னு கேட்டேன்.நீங்க என்ன பொரிஞ்சு தள்ளிட்டிங்க. "

என்று சொல்லாமல் இல்லை.


கார் வந்தது ...

முன் சீட்டில் அப்பாவோடு அண்ணன்.

இறங்கி வந்து சாமான்கள் எல்லாம் சரி பார்த்து டிக்கியில் வைத்தார்கள் ,அம்மா பிள்ளையைத் தூக்கிக் கொண்டாள்,டீச்சர் கையில் ஒரு கூடையுடன் பின் சீட்டில் அம்மாவுடன் உட்கார்ந்து கொள்ள மாமியார் ஏறியதும் ;டிரைவர் டீசல் போட பணம் கேட்டார். அப்பா
அண்ணனும் அண்ணியும் இருப்பதைப் பார்த்துக் கொண்டு ;

"என்னப்பா இது இப்போ கேட்கற ஊர்ல போய் கொடுக்கலாம்னு இருந்தேன்".ஊர்ல மகா கிட்ட முழு பணம் வாங்கித் தாரேன் இப்ப டீசல் உன் செலவுல போடப்பா " என்றார்.

இதற்கு அர்த்தம் மகளுக்காக அவர் உருகவில்லையாம் ,வாரி இரைக்கவில்லையாம்! மகனுக்கும் மருமகளுக்கும் நிரூபிக்கிறாராம்!

அம்பிகா டீச்சருக்கு முகம் செத்துப் போனது.மாமியார் வேறு பக்கத்தில்;

அந்தம்மாள் என்ன செய்வார் ? மகன் சூதாடி இல்லை,பொய் புரட்டுக்காரனும் இல்லை,குடி..கூத்தி என்று பணம் கரைப்பவனும் இல்லை,என்ன விதியோ தொட்டதில் எல்லாம் தோற்றுக் கொண்டிருந்தான் ,இன்று இப்படி,நாளை எப்படியோ?! காலம் மாறும்,மீண்டு வருவான் தன் மகன் என்ற நினைப்பில் காடு கரைகளுக்கு கூலி வேலைக்குப் போயாவது சம்பாதித்து மகனை காப்பாற்றிக் கொண்டிருப்பவள் அந்தம்மாள்.

முகம் செத்துப் போனாலும் ரோசம் செத்து வடுமா?!

மாமியார் சுருக்குப் பையை படக்கென்று உருவி அதிலிருந்து சில்லறை நோட்டுகளை எண்ணி டிரைவரிடம் கொடுத்தாள்,

"டீசல் போட்டுக்கிட்டே வீட்டுக்குப் போப்பா "

அப்பா இவர்களைப் பார்க்காமல் முன் புற சீட்டில் அமர்ந்து கொண்டு ஜன்னல் வழியே வேறெங்கோ பார்த்துக் கொண்டிருந்தார்

அண்ணனும் அப்பாவின் அருகில் ஏறி உட்கார்ந்து கொள்ள ;டீச்சருக்கு திக்கென்று ஆனது.புருஷனுக்கு இடமில்லை காரில்.

ஆல்பா சூட்கேசை கையில் சுமந்து கொண்டு என்ன செய்வதென்று புரியாமல் வெளியில் நின்று கொண்டிருந்தார் அவர்...

Tuesday, March 2, 2010

புல்...
பாயிலிருந்து உருவி நழுவிய கோரைப்புல்
நழுவாத மற்றொன்றிடம் சொல்லிக் கொண்டது
எனக்கு விடுதலை !
புல்லின் பாஷை அறியாமல்
கட்டிக் கொண்டு துயில்கின்றனர்
தம்பதிகள்.
"கல்லானாலும் கணவன்
புல்லானாலும் புருஷன்"
மடையர்கள்
புல் சரி...கல் எப்படி ?!
கோபித்துக் கொண்டு
சுளித்த முகத்துடன்
தரையில்
தனியாய் புல் !

நோட்:
படம் கூகுளில் தேடுகையில் உயிர்மையில் கிடைத்தது.