Monday, March 15, 2010

ஆப்பிள் ...
மகா கடித்துக் கொண்டிருந்த ஆஸ்திரேலியன் ஆப்பிள் கை வழியே வழுக்கிக் கொண்டு நழுவி உருண்டு கூடம் தாண்டி வெளிப்புற உயரமான திண்ணை நடுவில் ஸ்கூட்டரை வீட்டுக்குள் ஏற்ற கட்டிய சிமென்ட் சரிவில் புரண்டு கொண்டு ஓடி தெருப் புழுதி பூசிக் கொண்டு நின்றது.பின்னே அதை விரட்டிக் கொண்டு ஓடி வந்த மகா புழுதி பூசிய ஆப்பிளை கையில் எடுக்க மனமின்றி திண்ணையில் உட்கார்ந்திருந்த தன் அப்பாவைப் பெற்ற பாட்டியிடம் ;

"பாட்டி ஆப்பிள் மண்ல விழுந்திருச்சு...எடுத்துக் கழுவித் தாங்க " என்றாள்.


லக்ஷ்மி அம்மாள் அந்த ஆப்பிளை எடுத்து கழுவித் தருவதற்குள் மகா வீட்டுக்குள் ஓடி விட, அந்தம்மாளே பழத்தை மருமகளிடம் கொடுப்பதற்காய் வீட்டுக்குள் வந்தாள்.ஞாயிற்றுக் கிழமை கோர்ட் லீவ்,வக்கீலான லக்ஷ்மி அம்மாளின் மகன் வீட்டில் தான் இருந்தான்.

டி.வி யில் பாட்டு ஓடிக் கொண்டிருந்தது.கல்லூரி வார இறுதி விடுமுறைக்கு அக்கா வீட்டுக்கு வந்திருந்த மகனின் கொழுந்தியாள் சுற்றுப் புறம் மறந்து பாட்டில் லயித்திருந்தாள்.சின்னவன் கார்ட்டூன் சேனல் வைக்கச் சொல்லி நச்சரித்துக் கொண்டிருந்தான்.மகா காமெடி பார்க்க ஆதித்யா சேனல் வைக்கச் சொல்லி தொணப்பிக் கொண்டிருந்தாள்,மருமகள் மதியச் சமையலுக்கு காய் நறுக்கிக் கொண்டிருந்தாள்,மகன் பேப்பரில் மூழ்கிப் போயிருந்தான்.


லக்ஷ்மி அம்மாளை ஒருவரும் கவனித்து என்னவென்று கேட்கக் காணோம்.அந்தம்மாள் இந்த ஆப்பிளை என்ன செய்வதென்று யோசித்துக் கொண்டவளாய்,அதைக் கொண்டு போய் மருமகள் நறுக்கிக் கொண்டிருந்த காய்கறிக் கூடையில் வைத்து விட்டு.


"ஆப்பிள் மண்ல விழுந்துருச்சு...மகா கழுவித் தரச் சொன்னவ...உள்ள வந்துட்டா,இந்தா இதைக் கழுவிட்டேன்,இந்த தூசிய மட்டும் நறுக்கிக் கீழே போட்டுட்டு சாப்புடலாம்,நறுக்கிக் கொடு திங்கட்டும் ."
சொல்லி விட்டு அந்தம்மாள் மறுபடி திண்ணைக்கே போய் விட்டாள்.

மருமகள் நல்லவளோ கெட்டவளோ...இன்னமும் ஒரு முடிவுக்கே வர முடியாத நிலை தான் லக்ஷ்மி அம்மாளுக்கு.வார இறுதியில் தான் மதியச் சாப்பாடு நிறைவேறக் கிடைக்கும்,பிள்ளைகள் பள்ளிக்கும் கணவன் கோர்ட்டுக்கும் போய் விட்டால் பெரும்பாலும் காலையோடு சமையலை ஏறக்கட்டி விடுவாள்.மதியம் இருப்பதை வைத்து ஒப்பேற்றி விடும் அதி சிக்கனக்காரி.


'தொட்டுக் கொள் துடைத்துக் கொள் ' எனும் ரீதியில் லக்ஷ்மி அம்மாள் சட்டியில் மீந்திருப்பதை எல்லாம் வழித்துப் போட்டு தன் கணவருக்கு தந்து விட்டு ஒரு சொம்புத் தண்ணீரை மடக்..மடக்கென்று குடித்து விட்டு மறுபடியும் திண்ணையில் போய் உட்கார்ந்து கொள்வாள்.கணவருக்கு தொண்ணூறு வயதிருக்கும்,இந்தம்மாளுக்கு எழுபத்தி ஐந்து.பசி தாங்கத்தான் முடியவில்லை,தானாக ஆக்கித் தின்றாலும் வயிற்றுப் பாட்டுக்கு பஞ்சம் இருக்காது,மருமகள் கையால் இப்படி சோறு உண்ணும் பவிசை எண்ணி அந்தம்மாள் விசனப் படாத நாட்களில்லை இந்த பத்து வருடங்களாய்.ஆனாலும் வாய் மூடி மௌனியாகவே காலத்தைப் பிடித்து தள்ளிக் கொண்டிருந்தாள்...ஏனென்று தான் அந்தம்மாளுக்கே புரியவில்லை! ஊமைப்பாசங்கள் வாய் திறப்பதில்லையோ!


திண்ணையில் உட்கார்ந்து கொண்டால் நேரம் அதுபாட்டுக்கு கரையும்,யாராவது வந்து லக்ஷ்மி அம்மாளிடம் கதை பேசிக் கொண்டிருப்பார்கள் ,சாப்பாட்டு நேரம் என்பதால் இந்த வெயிலுக்கு யாரையும் காணோம்,

"உள்ளே என்ன சமையலோ! ஞாயிற்றுக் கிழமை ...கறி எடுத்திருப்பார்கள்,தங்கை வேறு வந்திருக்கிறாளே! "

"ம்ம் ...எனக்கு தர வேண்டாம்,இந்த மனுசர் இன்னும் எத்தனை நாள் வாழ்ந்து விடப் போகிறார்!இவருக்காச்சும் ஒரு மடக்கு சூப் கொண்டு வந்து கொடுத்திருக்கலாம்.காலங்காலையில் பேரப் பிள்ளை ஒரு டம்பளர் தழும்பத் தழும்ப சூப் கொண்டு வந்து திண்ணையில் உட்கார்ந்து தான் குடித்துக் கொண்டிருந்தான்.பச்சைப் பிள்ளை..சிந்தாமல் குடிக்க லக்ஷ்மி அம்மாள் தான் டம்ளர் பிடித்துக் கொண்டிருந்து விட்டு பிறகு அதைக் கழுவிக் கொண்டு போய் உள்ளே கவிழ்த்தினாள்."

இந்த வீட்டில் தான் புழங்கிக் கொண்டிருந்த அந்த நாட்களில் கறியும் மீனுமாய் பிள்ளைகள் வயிறு நிறைத்த தன் கைகளை உற்றுப் பார்த்துக் கொள்ளும் போது தன்னிச்சையாய் கண்கள் நிறைந்தன.தன் மாமியார் மாமனாரை தான் எப்படி வைத்துக் கொண்டோம் என்றும் எண்ணிப் பார்த்துக் கொள்கையில் மீண்டும் கண்கள் பொங்கின.

சின்னச் சின்ன ஊடல்கள் இருந்தாலும் அந்த ஜீவன்களை பார்க்க வைத்து தின்று விட்டு வெறும் ரசத்தை ஊற்றித் தின்னக் கொடுத்த கொடுமையெல்லாம் தான் செய்திருக்கவில்லை,அப்பனே!...முருகா! என்னடா வாழ்க்கை இது! சீக்கிரமா அழைச்சுக்கோ !" யோசனை வறண்டு உருள திண்ணை மேல்படியில் காலரவம் கேட்டது.

சேலைத் தலைப்பால் கண்களை துடைப்பது தெரியாமல் துடைத்துக் கொண்டு தெரு பார்த்தது பார்த்தவாறே உட்கார்ந்திருந்தால் லக்ஷ்மி அம்மாள்.யாராயிருந்தால் என்ன?இப்போதைக்கு சாப்பிட சொல்லி அழைக்கப் போவதில்லை யாரும்,எல்லோரும் உண்டு முடித்த பின் உள்ளிருந்தே மருமகள் நல்ல தனமாய்த் தான் குரல் விடுவாள்

"அத்தே...மாமாக்கு சாப்பாடு போட்டுட்டு நீங்களும் சாப்பிடுங்களேன்..நேரமாகலையா" எனக்கென்னான்னு உட்கார்ந்திருக்கிங்க!"

உதட்டில் நெளியும் விரக்திப் புன்னகையோடு இந்தம்மாள் அப்புறம் தான் உள்ளே போகலாம்.

ஆரம்ப நாட்களில் "வயதான மனுசராச்சே என்று...எல்லோருக்கும் முதலில் தன் கணவருக்கு சாப்பாடு போட்டு விட்டு இந்தம்மாளும் எதையோ சாப்பிட்டதாய் பேர் பண்ணிக் கொண்டு கூடத்தில் உட்கார்ந்தவள் தான்.அப்போதெல்லாம் என்ன நடந்ததாம்?! சமையல் உள்ளில் கச முசா...கச..முசா வென்று மருமகள் விம்மலும் பொருமலுமாய் மகனை விரசிக் கொண்டிருப்பாள் ,அகஸ்மாத்தாய் அவன் கோர்டுக்குப் போய் விட்டாள் அவள் தனக்குத் தானே வெறுப்புடன் புலம்புவாள்,பாதி கேட்கும்,பாதி கேட்காது,ஆனாலும் புலம்பலின் சாராம்சம் இது தான்!

"கத்தரிக்காய் காரக்குழம்பு அவருக்கு ரொம்பப் பிடிக்கும்னு ஆச..ஆசையாச் செஞ்சு வச்சா...சட்டில ஒட்டிட்டு தான் இருக்கு ,வந்தா அவருக்கு என்னத்த போடறதாம்?பீன்ஸ் பொரியல் மகாக்கு ரொம்ப இஷ்டம்...அம்புட்டையும் தூக்கி கிழவருக்கு போட்டாச்சு...இனிமேத்தான் வளரப் போறாராக்கும்,வயசாச்சே தவிர கொஞ்சமும் இங்கிதமில்ல.எல்லாம் எந்தலைஎழுத்து ,இதுகளைக் கட்டிட்டு இங்க மாரடிக்கணும்னு! "

லக்ஷ்மி அம்மாள் சுரணை கெட்டவளா...இல்லையே! செவிடா ...அதுவும் தான் இல்லையே!

மகள்களின் வீடுகளுக்குப் போகலாம்...வாரம் பத்து நாட்கள் ..பிறகு!

தனியாக இந்த வயதில் சொந்த வீடிருக்க கிராமத்தில் தனிக் குடித்தனம் போவதென்பது அவள் இத்தனை காலம் வாழ்ந்த வாழ்க்கைக்கு கொஞ்சமும் பொருந்தாது,ஊர் சிரிக்கும் ,அதற்க்கு ஒரு சொம்புத் தண்ணீரை முழுங்கி விட்டு பேசா மடந்தையாய் திண்ணையில் உட்காருவது போதுமென்று தான் இருந்தது.


திண்ணை மேற்படியில் வந்து நிற்பது "தொண்டை செருமலை" வைத்து மகன் தான் என்று உணர முடிந்தது ,அப்படியே அவன் அப்பாவைப் போலவே இவனும் தொண்டையை செருமிக் கொள்வான். முன்னெல்லாம் அப்பாவைப் போலவே பிள்ளை என்று பெருமையாய்ப் பேச முடிந்தது ,இப்போது அம்மா...அப்பா என்ற அழைப்பே சுருங்கித் தேய்ந்து வெறும் செருமல் தான் அழைப்பு என்றான பின் ஆயாசம் தான் மிஞ்சியது.

"என்னப்பா...? " என்பதைப் போல லக்ஷ்மி அம்மாள் மகனை நிமிர்ந்து பார்க்க.

ஒரு தட்டை நீட்டினான் மகன் .

அதில் ஆப்பிள் துண்டுகள் !

ஒரு நொடி அதிசயித்துத் தான் போனாள் லக்ஷ்மி அம்மாள் .

"இத சாப்பிட்ரும்மா...இல்லனா...அப்பாக்கு கொடு "

"ஏம்ப்பா ..மகா தின்னுட்டு இருந்தாளே...பிள்ளைங்களுக்கு தா ,எங்களுக்கெதுக்கு ?!"

அவளுக்கு இது வேண்டாமாம்,அவம்மா வேற வெட்டிக் கொடுத்துட்டு இருக்கா ,நீ இத சாப்புடும்மா"
ஒன்னு பதினஞ்சு ரூபா.சின்னக் கழுத மண்ல விழுந்தது திங்க மாட்டாளாம்... அதான் கழுவித் துடைச்சாச்சு இல்ல!

கிலோ ஆப்பிள் நூறு ரூபாயாக்கும்!

மகன் தனக்குள் முணு முணுத்துக் கொண்டு ஆப்பிள் தட்டை அவளருகில் வைத்து விட்டு உள்ளே போய் விட்டான் .

ஆப்பிள் விலை தெரிந்த மகனுக்கு அம்மாவின் விலை தெரியுமோ?!

ஆப்பிளைப் பார்த்து கதறிக் கொண்டு அழுகை வந்தது லக்ஷ்மி அம்மாளுக்கு.முந்தானை வாயை அடைத்துக் கொள்ள கண்ணீரை தொண்டைக்குள் விழுங்கிக் கொண்டாள்.

லக்ஷ்மி அம்மாளின் அழுது சிவந்த கண்களைப் போலவே தட்டில் அடர் சிவப்பாய் சிரித்துக் கொண்டிருந்தது ஆப்பிள் .


37 comments:

அண்ணாமலையான் said...

அய்யோ பாவம்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

எழுதிய விதம் வழக்கம்போலவே நல்லா இருக்கு.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கண்ணீர் வந்துடுச்சு கார்த்திகா..
இது ஒரே ஒரு கதையா...இதுபோல எத்தனையோ நிஜம்மா நடந்தேறிகிட்டே இருக்கற ஒண்ணு இல்லையா.. :(

இளந்தென்றல் said...

அழ வெச்சுட்டீங்க. பல வீடுகளில் நடக்கும் யதார்த்தம் இது. இதை படித்து யாரேனும் ஒரு மகனோ மருமகளோ திருந்தினால் அதுவே உங்கள் படைப்புக்கு கிடைத்த வெற்றி..

R.Gopi said...

//மகா கடித்துக் கொண்டிருந்த ஆஸ்திரேலியன் ஆப்பிள் கை வழியே வழுக்கிக் கொண்டு நழுவி உருண்டு கூடம் தாண்டி வெளிப்புற உயரமான திண்ணை நடுவில் ஸ்கூட்டரை வீட்டுக்குள் ஏற்ற கட்டிய சிமென்ட் சரிவில் புரண்டு கொண்டு ஓடி தெருப் புழுதி பூசிக் கொண்டு நின்றது.//

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்....... யப்பா............. இருங்க கொஞ்சம் மூச்சு விட்டுக்கறேன்....

//அக்கா வீட்டுக்கு வந்திருந்த மகனின் கொழுந்தியாள் சுற்றுப் புறம் மறந்து பாட்டில் லயித்திருந்தாள்.சின்னவன் கார்ட்டூன் சேனல் வைக்கச் சொல்லி நச்சரித்துக் கொண்டிருந்தான்.மகா காமெடி பார்க்க ஆதித்யா சேனல் வைக்கச் சொல்லி தொணப்பிக் கொண்டிருந்தாள்,மருமகள் மதியச் சமையலுக்கு காய் நறுக்கிக் கொண்டிருந்தாள்,மகன் பேப்பரில் மூழ்கிப் போயிருந்தான்.//

சுற்றுப்புறத்தின் வர்ணனை அபாரம்...

//'தொட்டுக் கொள் துடைத்துக் கொள் ' எனும் ரீதியில் லக்ஷ்மி அம்மாள் சட்டியில் மீந்திருப்பதை எல்லாம் வழித்துப் போட்டு தன் கணவருக்கு தந்து விட்டு ஒரு சொம்புத் தண்ணீரை மடக்..மடக்கென்று குடித்து விட்டு மறுபடியும் திண்ணையில் போய் உட்கார்ந்து கொள்வாள்//

நெகிழ்வான எழுத்து....

//தன் மாமியார் மாமனாரை தான் எப்படி வைத்துக் கொண்டோம் என்றும் எண்ணிப் பார்த்துக் கொள்கையில் மீண்டும் கண்கள் பொங்கின.//

ம்ம்ம்ம்

//அப்பனே!...முருகா! என்னடா வாழ்க்கை இது! சீக்கிரமா அழைச்சுக்கோ !" யோசனை வறண்டு உருள //

படிக்கும் போதே கலங்குகிறது...

//ஆப்பிள் விலை தெரிந்த மகனுக்கு அம்மாவின் விலை தெரியுமோ?!//

மிக பிரமாதம்.....

//லக்ஷ்மி அம்மாளின் அழுது சிவந்த கண்களைப் போலவே தட்டில் அடர் சிவப்பாய் சிரித்துக் கொண்டிருந்தது ஆப்பிள் //

சிவந்தது ஆப்பிள் மட்டும் அல்ல....இந்த நெகிழ்வான கதையை படித்த எங்களின் விழியும் கூடவே
மனதும் தான்...

வாழ்த்துக்கள் கார்த்திகா.....

அகநாழிகை said...

கதை சாதாரணமாகத்தான் இருக்கு. நெகிழ்ச்சி, அனுதாபம் எல்லாம் பெறும் முயற்சிகளை கதையில் புகுத்தியிருக்கீங்க.
சரி, வாழ்த்துகள். தொடர்ந்து எழுதுங்க.

கலகலப்ரியா said...

மிக மிக அருமை கார்த்திகா...

லக்‌ஷ்மி அம்மா கதையில் எழுத்தாளர் லக்‌ஷ்மி அம்மா வாசனை கொஞ்சம்..

சின்ன அம்மிணி said...

அழவைச்சுடீங்க

KarthigaVasudevan said...

நன்றி முத்துலெட்சுமி ...(இது போல சின்னச் சின்னதாய் அதிர வைக்கும் விஷயங்கள் சகல இடங்களிலும் நடக்கத் தான் செய்கின்றன.என் பார்வைக்கு கிட்டியதை கதையாக்கினேன்.

@அண்ணாமலையான்... ஆமாம் ஐயோ பாவம் தான் .

@இளந்தென்றல் ...அப்படியெல்லாம் யாரும் திருந்தி விடுவார்களா என்ன?! :(

நன்றி R.Gobi ...

நன்றி அகநாழிகை வாசுதேவன் ...
கதை சாதாரணம் தான்,ஏன்னா அதிசயமா எங்கயாவது ஒன்னு ரெண்டு இடத்துல நடந்தா அது அசாதாரணம்,இந்தக் கதை தான் இங்கே ரொம்ப ரொம்ப சாதாரணமா பார்க்க கிடைக்கறதாச்சே!கதை நிஜ சம்பவம் எனும் போது உங்கள் கருத்து ஏற்றுக் கொள்ள முடியாதது,வெறும் கதை என்ற கண்ணோட்டத்தில் பார்த்தால் இது சாதாரணக் கதை தான் என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன்.இதொன்றும் மாறுபட்ட படைப்பல்ல.

அனுதாபம் பெரும் முயற்சிகள் வலிந்தெல்லாம் புகுத்தப் படவில்லை...பெற்றவள் தனக்குள்ளே நிகழ்த்திக் கொள்ளும் சுய பச்சாதாபங்கள் குறித்த அகசம்பாசனைகள் இப்படித் தான் அனுதாபம் பெரும் முயற்சிகள் ஆகி விடக் கூடுமோ என்னவோ!
:)

KarthigaVasudevan said...

@ கலகலப்ரியா...

லக்ஷ்மி கதைகளை நானும் வாசித்திருக்கிறேன் ப்ரியா .ஆனால் இந்தக் கதை அப்படியா இருக்கிறது! ?
லக்ஷ்மியின் கதாநாயகிகளைப் போல இந்தம்மாள் வலிந்து தன்னை கஷ்டப் படுத்திக் கொள்ளவில்லையே! அவளது சூழ்நிலை அவளை அப்படி இருக்க வைக்கிறது...இந்த வாழ்வு முறை ஒரு வேலை லக்ஷ்மி கதைகளை ஞாபகப் படுத்துகிறதோ!இருக்கலாம்.


@ சின்ன அம்மிணி ...

எங்கேயோ நிகழ்ந்ததை கதையாக்கினேன்.சில நிஜங்கள் அழ வைப்பன போலும்!

நேசமித்ரன் said...

மிக சாதாராணமான க்ளீஷே செண்டிமெண்ட் கதை

ஆனால் நல்லா சொல்லி இருக்கீங்க

voted :)

கலகலப்ரியா said...

இல்லை கார்த்திகா... சில வார்த்தைப் பிரயோகங்கள்... அந்தம்மாவை நினைவில் கொண்டு வந்தன... அவங்கள படிச்சு ரொம்பக் காலமாச்சு... அதனால என்னோட கவனத்தில கோளாறா கூட இருக்கலாம்... =)

//கல்லூரி வார இறுதி விடுமுறைக்கு அக்கா வீட்டுக்கு வந்திருந்த மகனின் கொழுந்தியாள் சுற்றுப் புறம் மறந்து பாட்டில் லயித்திருந்தாள்.//
//'தொட்டுக் கொள் துடைத்துக் கொள் ' எனும் ரீதியில் லக்ஷ்மி அம்மாள் சட்டியில் மீந்திருப்பதை எல்லாம் வழித்துப் போட்டு தன் கணவருக்கு தந்து விட்டு ஒரு சொம்புத் தண்ணீரை மடக்..மடக்கென்று குடித்து விட்டு மறுபடியும் திண்ணையில் போய் உட்கார்ந்து கொள்வாள்.//
//மருமகள் கையால் இப்படி சோறு உண்ணும் பவிசை எண்ணி அந்தம்மாள் விசனப் படாத நாட்களில்லை//

இப்டி சிலது...

நட்புடன் ஜமால் said...

முதல் பத்தியில் ஏனோ வ.நி.சி ஞாபகம் வந்திச்சி.

நிகழ்வுகளின் ஆழம் வருத்தமாத்தான் இருக்கு.

அந்த மருமகளும் மாமியார் ஆவார், விளங்கிடும் பட் டூ லேட் ...

டக்கால்டி said...

அருமை

அமிர்தவர்ஷினி அம்மா said...

நீங்க எழுதியிருக்கறது கதை இல்லை கார்த்திகா, நிஜம், அவ்வளவும் நிஜம்.
பெரும்பான்மையான குடும்பங்களில் நடந்துகொண்டுதான் இருக்கிறது.

ரெயில்வே ஸ்டேஷன்களில் காணாமல் போனவர்கள் போஸ்டர் ஒட்டப்பட்டிருக்கும். அதில் பெரும்பாலும்
வய்து 65 தாண்டி இருந்தால், காணாமல் போன காரணத்தை நம் மனது தானாகவே கணக்கு போட்டிருக்கும்.
அதற்கு முதல் கட்ட காரணம் இந்தக் கதைதான். புறக்கணிப்பு, சாப்பாடு.. இதெல்லாம்தான்.

அதுவும் 2, 3 பிள்ளைகள் இருந்தால் நிலைமை இன்னும் மோசம்.
பழுத்த ஓலை, குருத்து ஓலை கதைதான் எனக்கு அடிக்கடி ஞாபகம் வந்துட்டு போகும்.

எழுதிய விதம் நெகிழ்வு. நேர்ல பார்த்தா மாதிரியே இருந்துச்சு.

☀நான் ஆதவன்☀ said...

உணர்ச்சிகளை வார்த்தையா எப்படிங்க கொண்டு வரமுடிஞ்சுது? அருமைங்க. மனசை விட்டு அகலல. நறுக்குனு ஒரு கொட்டு வச்சு ஒழுங்கா அம்மா அப்பாவை பார்த்துக்கோன்னு சொல்ற மாதிரி :)

KarthigaVasudevan said...

நன்றி நேசமித்திரன் ...

ம்ம்... க்ளீஷே சென்ட்டிமென்ட் கதை தான் ஒத்துக்கறேன். ஆனா இது நிஜத்தில் நடக்கலைன்னு சொல்ல முடியாதே!


ப்ரியா...அருமையான எழுத்தாளரை இந்தக் கதை நினைவுபடுத்தினதுக்கு நன்றிப்பா.


நன்றி டக்கால்டி (என்னங்க இது இப்டி ஒரு பேர் ?!)

நன்றி ஜமால் (மாமியார்களைப் பற்றி மருமகள்களும் மருமகள்களைப் பற்றி மாமியார்களும் நல்ல விதமாக உணர்ந்து புரிந்து கொண்டால் நல்லது தான்.வ.நி.சி யார் ஜமால்?)

நன்றி சாரதா...

அமித்து குட்டி எப்டி இருக்காங்க? நீங்க எப்டி இருக்கீங்க?! குட்டிப் பாப்பாக்கள் ரெண்டு பேரையும் கேட்டதா சொல்லுங்க பிரெண்ட் . நலம் நலமறிய அவா.
:)))

நன்றிங்க நான் ஆதவன் ...

பக்கத்துல இருந்து பார்த்ததைத் தானே எழுதினேன் . அதனால ரொம்ப மெனக்கெட தேவை இருக்கலை

ஜெரி ஈசானந்தா. said...

சிறகடித்து பறக்கிறது

Sangkavi said...

கதை எழுதியவிதமும், கொண்டு சென்ற விதமும் அருமை......

தமிழ் பிரியன் said...

:(
ஏன் இப்படி எல்லாம் எழுதுறீங்க..? படிக்கவே முடியாத அளவு சோகம்... ஆரம்பத்திலேயே கதையின் ஓட்டம் புரிந்து விட்டது..

அது சரி said...

வயதான பெற்றோர்கள் எப்படி எல்லாம் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள்....நிதர்சனம் சொல்லும் கதை...

கதை மாதிரியே இல்லை...

நல்லாருக்கு கார்த்திகா...

பா.ராஜாராம் said...

எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு கார்த்திகா.

Ravi said...

Let me give you the other side.. I am sure i am not alone sulking in the inability to either come back to India and live or bring the parents to where I live because of the visa issues..
Once again, it is the simple fact that we never understand the value of what we have! I miss living with my parents :-(

ஜெய்லானி said...

அழ வெச்சுட்டீங்க. பல வீடுகளில் இதுதானே நடக்குது.

Vidhoosh said...

க்ளீஷே கதை.

மறைமுகமாக ஒரு செய்தியும் இருக்குங்க. சின்ன வயசுலையே அம்மாவும் விருப்பு வெறுப்புக்கள், தனக்கென்ற சாய்ஸ், ஆசைகள், உள்ள ரத்தமும் சதையுமான மனுஷிதான் என்பதை எத்தனை அம்மாக்கள் தன் பிள்ளைகளுக்கு உணர்த்துகிறார்கள். தன் பிள்ளைக்கு மண் பட்டதை அலம்பி தராது வளர்த்த அம்மாவாக, உங்கள் கதையில் இப்போது இருக்கும் மருமகள் போல, முன்னாளில் இந்தத் தாயும் இருந்திருக்கலாம்.

அழுவானேன்!!! என்னால் இக்கதையில் உள்ள அம்மாவின் attitude மட்டுமே ஜீரணிக்க முடியாததாக இருக்கு. "எனக்கும் இது பிடிக்காது" என்று சொல்லும் வரை எப்படி அடுத்தவருக்குத் தெரியும் நம் விருப்பு வெறுப்புக்கள் - அது நாம் பெற்ற பிள்ளையாகவே இருந்தாலும் கூட...

என் கருத்து கதைக்கானது மட்டுமே. :)

Vidhoosh said...

மன்னிக்கவும், பெற்றோர் மற்றும் வேறு யாராக இருந்தாலும், தனக்கென்று சாய்ஸ் ஏதும் வைத்துக் கொள்ளாத "தியாகிகள்" நிலைமை பெரும்பாலும் இப்படித்தான் அமைந்து போகிறது என்பது வருத்தமே... ஆனால், இத்தனை நாள் "தியாகி"யாக இருந்து திடீரென்று "தியாகி"த்தனம் அலுத்துப் போவதேன்.. தவறு யாருடையது?? நான் கேட்பது rude-ஆக இருக்கலாம்.. நிதர்சனங்களின் நிஜம் சுடுகிறது. :(

KarthigaVasudevan said...

நன்றி ஜெர்ரி ஈசானந்தா...(சிட்டுக்குருவி இருந்தா தானேங்க பறக்கறதுக்கு.அதான் அரிதாகிப் போன அபூர்வப் பறவைகள் லிஸ்ட்ல சேர்ந்துடுச்சே!)

நன்றி sankavi ...

நன்றி தமிழ்பிரியன்...(வாசிக்கறவங்க சோகமாகனும்னு எழுதலை...என்னவோ இந்த விஷயம் எழுத தோனுச்சு எழுதிட்டேன் :(

வாங்க அதுசரி...கொடுமைப்படுத்தப் படுகிறார்கள் என்பதெல்லாம் கொஞ்சம் பெரிய வார்த்தை,கவனிக்கப் படவில்லை,உதாசீனப் படுத்தப் படுகிறார்கள் என்பதே சரியாக இருக்குமில்லையா?!

நன்றி பா.ராஜாராம்.(உங்களுக்குப் பிடிச்சா சரி தான் ,உங்க அம்மா கவிதையின் பேசு பொருள் ஒன்றின் சாயல் இக்கதையிலும் இருக்கலாம் :)

KarthigaVasudevan said...

yes ravi...

every issues has two sides.its common ,but sometimes the reason of the issues made us blinds.particularly in the case of who take care of their own parents.
anyway thakx for coming and ur cmnts on this post.

ஹுஸைனம்மா said...

கதையோட்டம், எழுத்துநடை, பாத்திரங்களின் இருப்பு எல்லாமே அருமை.

ஒரு சந்தேகம்: லக்ஷ்மி அம்மாள் நல்ல உடல்நலத்தோடே இருப்பது தெரிகிறது. ஏன் மருமகளுடன் இணைந்து தன்னாலியன்ற வேலைகள் செய்வதில்லை? ஏன் எப்பவும் திண்ணையில் அமர்ந்து கொண்டு தன்னை மற்றவர்களிடமிருந்து அந்நியப்படுத்திக் கொள்ளவேண்டும்?

KarthigaVasudevan said...

வாங்க விதூஷ்...

சில விஷயங்கள் விமர்சிப்பதற்கு மிக எளிதானவை.மண் பட்டதை தன் பிள்ளை உண்ணக் கூடாது என்று நினைக்கும் தகப்பன் மனது தன்னைப் பெற்றவளை மிக எளிதாய் அதை உண்ணச் சொல்லி கடந்து செல்கிறதே! அது தான் இக்கதையில் சொல்லப் பட்ட சம்பவம்.மற்றபடி மாமியார் தன் விருப்பு வெறுப்புகளை சொல்ல முடிகிறதா? மருமகள் நல்லவளா கொடுமைக்காரியா என்பதல்ல.ஒரு வேளை என் கதை விவரிப்பில் வாசிப்பவர்களுக்கு புரிதல்கள் வேறுபடுகின்றனவோ!!! கதைக்கான எனது விளக்கம் மட்டுமே இது

பெண்ணானாலும் சரி ஆணானாலும் சரி விருப்பு வெறுப்புகளை உடனுக்குடன் அறிவிப்பதெல்லாம் எல்லாக் குடும்பங்களிலும் சாத்தியமில்லை.அவரவர் வளர்ந்த வாழும் சூழலுக்கு ஏற்ப நிச்சயம் வேறுபடுகின்றன...
தியாகிகள்னு சின்ன எள்ளலோட முடிச்சிடலாம் தான். ஆனால் தியாகிகள் ஆக்கப்பட்டவர்களும் இருக்கிறார்கள்,தனக்குன்னு சாய்ஸ் இந்தம்மாவுக்கும் இருந்திருக்கலாம்,அது நிராகரிக்கப்பட்டிருக்கலாம்.மீண்டும் மீண்டும் முயன்று விட்டு இவங்க அழுத்தும் போயிருக்கலாம்.
முப்பட்டகக் கண்ணாடியில் சிதறும் ஒளிச் சிதறல்கள் போல பல நிறங்களில் பிரியும் உறவுகளின் கனிவு முகங்கள் இங்கே பாரபட்சப் படுகின்றன. இதுவும் கூட நிதர்சனம் தான் இல்லையா? அவர்களை பார்த்து rude ஆக கேள்வி மட்டுமே கேட்பதும் வெகு எளிது தான்,நிதர்சனம் சுடும்.எல்லாமே ஒரு நேரத்தில் அலுத்துத் தான் போகிறது எல்லோருக்கும்.இது கூட நிதர்சனம் தாங்க.

சரியான கேள்வி தான் ஹூசைனம்மா...

ஒரு வேளை மருமகளுக்கும் மாமியாருக்குமான பேச்சு வார்த்தைகள் மிகத் தொலைவில் அறுந்து போனதால்,சம்பிரதாய பேச்சுகள் தவிர்த்து நீளும் மௌன உதாசீனங்களை இழுத்து இழுத்து ஒட்ட வைக்கத் துணியாத அலுப்பில் அந்தம்மாள் அப்படி இருந்திருக்கலாம்,இப்படியும் ஒரு கோணம் உண்டே!
மாமியாரின் இருப்பைப் பற்றிய பிரஞை இல்லாத மருமகள் முன்னிலையில் மாமியார் வேறு எப்படி இருந்திருக்க முடியும்!

கதை வாசிப்பவர்களை இத்தனை சிந்திக்க வைப்பது ஆரோக்கியமாக உணர்கிறேன்.
நன்றி.

Vidhoosh said...

நீங்க இவ்ளோ சொல்றதுனால சொல்ல வேண்டியதாக இருக்கு. எனக்கு தெரிந்து ஒருவர் தம் வீட்டுக்கு மருமகள் வந்த பிறகும், எல்லோர் முன்னாலும் தம் மனைவியை திட்டுவது, அறைவது என்று மிகவும் மரியாதைக் குறைவாக நடத்துவார். இத்தனைக்கும் அந்த பெண்மணி அரசாங்க உத்தியோகத்தில் இருந்தார். என்னால் பொறுக்க முடியாமல் அவரிடம் நான் கேட்ட ஒரே ஒரு கேள்வி, அவர் வாழ்கையில் ஒரு நல்ல திருப்புமுனையாக அமைந்தது. அதையே தான் இங்கும் கேட்கிறேன். "எனக்கு வலிக்கிறது" "இது எனக்கு பிடிக்கவில்லை" என்று நாம் சொல்லாவிட்டால் எதிராளிக்கு என்ன கவலை அதைப் பற்றி இருக்க முடியும்? குடும்பத்தில் யாரேனும் ஒருவர் விட்டுக் கொடுத்து போவது சரிதான். ஆனால் அது விட்டுக் கொடுப்பவரை புண்படுத்தாத வரை மட்டும்தான் என்பதே எல்லை. சரி...

"உழவன்" "Uzhavan" said...

நல்ல கதை

KarthigaVasudevan said...

வலிப்பதை சொல்லித் தான் ஆக வேண்டும்.இதில் மாற்றுக் கருத்தில்லை விதூஷ்.

ஆனால் எத்தனை முறைகள்!!! ஒரு கணக்கிருக்கிறது இல்லையா? அம்மா மகன் உறவில் "சொல்லித் தான் தெரிய வேண்டுமா " எனும் ரீதியில் நுட்பமான மனச் சிக்கல்கள் நிறைய உண்டே! இந்தக் கதை அம்மாவின் செயலை நியாயப்படுத்தவில்லை.அவள் அழுகிறாள்.அவளால் அதை தான் செய்ய முடிந்திருக்கிறது அப்போது.அழுவதைத் தவிர உருப்படியாய் வேறெதுவும் செய்திருக்கலாம் என்ற சிந்தனையே தோன்றாத பெண்ணாக கூட அவர் இருந்திருக்கலாம்.அப்படிப் பட்ட பெண்கள் இல்லையென்று சொல்லி விட முடியாது.

உங்களது கேள்வியால் ஒருவர் மாறினார் என்பது ஆறுதலான விஷயம்.இப்படி மாற்றங்கள் நிகழ்வது வரவேற்கத்தக்கது.


நன்றி உழவன் ...

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க !

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

பகிர்வுக்கு நன்றி . மீண்டும் வருவான் பனித்துளி !

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

இதயம் கனத்து விட்டது . நேர்த்தியான எழுத்து நடை . மிகவும் அருமை !

James Arputha Raj said...

Really nice :) brought me memories of some real stories I've seen. Thank you..