இந்திரனைப் பற்றி பேசுமிடத்து நாம் ஆரியர் என்போர் வரலாறு யாதெனவும் சற்று திரும்பிப் பார்த்தல் நலம் .
ஆரியர்கள் என்போர் யார்?
மத்திய ஆசியாவிலிருந்து (தற்போதைய உஸ்பெகிஸ்தான்)இடம்பெயர்ந்து கால்நடைகளுடன் வாழ்வாதாரம் தேடி வடமேற்கு கணவாய்கள் வழியாக இந்தியப் பகுதிகளில் நுழைந்தவர்கள் அனைவரும் ஆரியர்களா?
பண்டைய வரலாற்றில் பின்னோக்கிப் பயணித்தால் பல வித ஆச்சரியங்கள் மொட்டவிழ்க்கின்றன. இந்திய வரலாறு என்பது எங்கிருந்து ஆரம்பிக்கிறது.கீழ் வகுப்புகளில் கற்பிக்கப் பட்டதைப்போலஹரப்பா...மொகஞ்சதாரோ ...அகழ்வாராய்ச்சிகளில் இருந்து தான் இந்திய வரலாறு துவங்குகிறதா?!
பூர்விக இந்திய குடிகள் யார்?ஆரியம் என்பது வெளுப்பு என்றும் திராவிடம் என்பது கறுப்பென்றும் வகுத்தது எவரோ?!
வேதங்கள் ,உபநிடதங்கள்,இதிகாசங்கள் என்று கற்பனைகள் விரிகின்றன.ராமாயணமும் மகாபாரதமும் கற்பனை கதைகளே ,அதிலொன்றும் ஆச்சரியமில்லை.அப்படிப் பார்க்கின் ரிக் வேதம் என்பதும் கூட கற்பனையான கவிதைகளின் தொகுப்பு தான்,ஆரியர்கள் எனப்படுவோர் ஈரானியர் என்கிறது ஒரு வரலாற்று ஆய்வுப் புத்தகம்.அங்கிருந்து உணவு சேகரிப்புக்காக இடை விடாத இடப் பெயர்ச்சி மூலம் இந்தியப் பகுதிகளில் ஊடுருவிய மக்களே ஆரியர்கள் எனப்பட்டனராம்.அப்படியாயின் அவர்கள் முன்பு இருந்த நிலப் பகுதியில் இருந்த பற்றாக்குறை அல்லது வறட்சியே அவர்களை இடம்பெயர வைத்ததென்பது தெளிவு.
அப்படி ஊடுருவிய ஆரியர்கள் தமது ஆதிக்கத்தை நிலை நாட்டிக் கொள்ள இங்கிருந்த பூர்விக இந்தியக் குடிகளை அவர்கள் பாணியில் சொல்ல வேண்டுமானால் தஸ்யூக்கள்(தாசர்கள்) ,தஸ்யூக்களை போரில் வென்று அடிமைகளாக்கி தமது இருப்பை ஸ்திரப் படுத்திக் கொண்டிருந்தனர்.இருப்பினும் ஆரியர்களுக்கும் தஸ்யூக்களுக்குமான போர் இடை விடாது நடந்த வண்ணமே இருந்தது.இதற்க்கான கற்பனை முலாம் பூசிய ஆரியக்கதைகள் தான் ராமாயணமும் மகாபாரதமும் என்பது அறிஞர்களின் வாதம்.
ஆரியர்களின் இந்திய ஊடுருவல் அல்லது ஆதிக்கத்தை தெய்வீக வண்ணம் பூசி இங்கிருந்த பூர்விக குடிகளை அரக்கர்களாக சித்தரித்து அவர்களை ஒடுக்கிய பராக்கிரமசாலிகள் ஆரியர் என்பதை மனதில் பதிய வைக்க எழுதப் பட்ட வியாசரின் புனைவே மகாபாரதம் ,புனைவிலும் இருக்கும் நிஜம் எதுவெனில் அது ஆரியர்கள் என்போருக்கும் ஆரியர் அல்லாதோருக்கும் அப்போது நிகழ்ந்த போர்,அந்தப் போர் தான் ஆரிய ஆதிக்க வரலாற்றின் சான்றாக இருக்கக் கூடும்,தென்னிந்தியாவில் சங்கப் பாடல்கள் எப்படி பண்டைய தமிழக வரலாற்றை சிறிது புகட்டுகின்றவோ அவ்விதமே வட இந்திய இதிகாசங்கள் சொல்ல வருவது கற்பனை கட்டுக் கதைகள் மட்டுமல்ல அப்போதைய வட இந்திய வரலாற்றையும் தான்.
இந்த வரலாற்று நூலறிஞர்களின் சரித்திர மேற்கோள் ஆதாரங்களைப் பாருங்கள்.
இராமாயணம் வரலாற்றை உணர்த்தும் இதிகாசமேஇராமாயணம், மகாபாரதம் எனும் இரண்டு இதிகாசங்களும் ஆரியர் பரவிய பருவங்களை வெகு தெளிவாகக் குறிப்பிடுகின்றன.மகாபாரதம் கங்கைநதி வெளியில் ஆரியர்கள் பரவியதையும், இராமாயணம் தென்னிந்தியாவை அவர்கள் கைப்பற்றியதையும் உணர்த்துகின்றன.(முன்பு கல்வி அமைச்சராக இருந்த கனம் சி.ஜே. வர்க்கி எம்.ஏ., எழுதிய இந்திய சரித்திரப் பாகுபாடு என்னும் புத்தகத்தின் 15 ஆவது பக்கம்).
//இராமாயணமும், மகாபாரதமும் இந்தோ-ஆரியர் காலத்தையும், அவர்களுடைய வெற்றிகளையும், உள்நாட்டுச் சண்டைகளையும் பற்றிக் கூறுவதாகும் . . . இவைகள் உண்மையென்று நான் நம்பியதேயில்லை. பஞ்சதந்திரம், அராபியன் நைட் முதலிய கற்பனைக் கதைகளைப் போன்றவை என்பதே என் கருத்து.(பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்கள் எழுதியுள்ள டிஸ்கவரி ஆஃப் இந்தியா பக்கம் 76-77).
இராமாயணம் என்பது தென்னிந்தியாவில் ஆரியர் பரவியதைக் குறிப்பதாகும்.(டிஸ்கவரி ஆஃப் இந்தியா பக்கம் 82)
ஆரியர்கள் இந்தியாவுக்குள் நுழைந்ததனால் புதிய பிரச்சினைகள் கிளம்பின. இனத்தாலும், அரசியலாலும், மாறுபாட்ட திராவிடர்கள், ஆரியரால் தோற்கடிக்கப்பட்ட திராவிடர்கள் நீண்ட கால நாகரிகத்துடன் வாழ்ந்து வந்தபடியால், இவர்களை விடத் தாங்கள் உயர்ந்தவர்கள் என்று கூறிக் கொண்ட ஆரியர்களுக்கும் இவர்களுக்கும் இடையே விரிந்த - பெரிய - பிளவு ஏற்பட்டது.(டிஸ்கவரி ஆஃப் இந்தியா பக்கம் 62).
இதிகாசங்கள் ரிஷிகள் என்று கற்பிக்கப்பட்டவர்கள் அனைவரையும் ரிக் வேதம் புரோகிதர்கள் என்று காட்டுகிறது ,வஷிஸ்டர் புரோகிதர் என்றால் இங்ஙனம் வால்மீகியும் ஒரு புரோகிதர் ! வேத வியாசரும் புரோகிதரே அன்றோ !!!புரோகிதர் என்பதற்கு சரியான விளக்கம் வேதங்களில் உள்ள மந்திரங்களை சரியான படி உச்சரிப்பவர் என்பதாம்.
ரிக் வேத பாசுரத்தில் வழிபாடு செய்யப் படும் இந்திரனும் ஆதி ஆரியத்தலைமகனும் ஒரு ஒப்பீடு:-
ரிக் வேதம் காட்டும் இந்திரன் வரலாறு கட்டமைத்த ஆரியன் ஒருவனுக்கு உகந்ததான மூர்க்கத் தனம் நிரம்பியவனாக ஒரு போர்த் தலைவனைப் போல சித்தரிக்கப் படுகிறான்.தெளிந்து நோக்குகையில் பராக்கிரமம் பொருந்திய ஒரு ஆரிய படைத் தலைவனைத் தான் அக்காலத்திய கவிகள் அலது ரிக் வேதத்தை வாய் மொழியாக மனனம் செய்து கொள்ளத் தக்க பாரம்பர்யத்தில் வந்த புரோகிதர்கள் இந்திரனை தெய்வ நிலைக்கு உயர்த்திப் பிடித்ததனரோ எனும் சந்தேகம் வலுப் பெறுகிறது. பகைவர்களுக்கு எதிரான போருக்கு அழைக்கும் போதும் சரி ,வெற்றி அடைந்த பின்பும் சரி ரிக் வேதப் பாசுரங்களில் சோம பானம் அருந்த(போதை நிறைந்த மது) வரச் சொல்லி பல முறை இந்திரன் அழைக்கப் படுகிறான்,இது ஒரு படைத் தலைவனை உருவேற்றும் சங்கதியன்றோ!.
- சான்று :
நம்மைச் சுற்றி நாலு பக்கங்களிலும் தஸ்யூக் கூட்டத்தார் (திராவிடர்கள்) இருக்கிறார்கள். அவர்கள் யாகங்களைச் செய்வதில்லை. ஒன்றையும் நம்புவதில்லை; அவர்களுடைய பழக்க வழக்கங்களே வேறாக இருக்கின்றன. ஓ! இந்திரனே, அவர்களைக் கொல்லு; தாசர் வம்சத்தை அழித்துவிடுவாயாக.(ரிக் வேதம் அதிகாரம் 10 சுலோகம் 22-8).
இராமாயணத்தில் குடிகாரர்களை சுரர்கள் என்றும், குடியை வெறுத்தவர்களை அசுரர்கள் என்றும் பிரித்துக் கூறப்பட்டிருக்கிறது.(ஹென்றி ஸ்மித் வில்லியம், எல்.எல்.டி., எழுதிய சரித்திரக்காரர்களின் உலக சரித்திரம் வால்யூம் 2 இல், பக்கம் 521).
.இந்தியாவிலுள்ள ஆரியர்களிடம் மனிதனைக் கொன்று யாகம் செய்யும் வழக்கம் இருந்திருக்கிறதென்று நிச்சயமாகச் சொல்லலாம்.(இம்பீரியல் இந்தியன் கெஜட் 1909 ஆம் வருடத்திய பதிப்பு வால்யூம் 1 இல் 405 ஆவது பக்கம்
நதிகளை விடுவித்த தீரச் செயலுக்காக இந்திரன் ரிக் வேதப் பாடல்களில் மறுபடி மறுபடி போற்றப்படுகிறான்.மழை பெய்வதற்கும் இந்திரன் தான் அழைக்கப் படுகிறான்,அவ்விதமே இந்திரன் மழைக் கடவுளானான்,வானில் மேகமாகக் குவிந்துள்ள மழையை அவனே விடுவிக்கிறான் என்று நம்பினர் .
இந்திரானால் விடுவிக்கப் பட்ட நதியில் செயற்கையான தடுப்புகளைப் போட்டு ஓட்டத்தை தடை செய்தான் "விரித்திரன் "எனும் அரக்கன்,அவன் ஒரு பாம்பைப் போல மலைச் சரிவின் குறுக்கே படுத்துக் கொண்டு நதியின் போக்கை தடுத்தான்,இந்திரன் அவனைக் கொன்றதும் வண்டிச் சக்கரங்களைப் போல கற்கள் உருண்டன இறந்த அரக்கனின் உயிரற்ற உடல் மீது நீர் பிரவாகமாக ஓடியது .இது ரிக் வேதப் பாசுரத்தில் சொல்லப் பட்டது.
இயல்பாக சொல்லப் போனால் ஆரியனான இந்திரனுக்கும் ஆரியன் அல்லாத ஒரு பூர்வ குடி தலைவனுக்கும் இடையில் நதியின் காரணமாக நிகழ்ந்த போரில் இந்திரன் வென்ற ஒரு வரலாற்று நிகழ்வு தான் இவ்விதம்கற்பனை மேவி உவமை நயத்துடன் பாடலாகப் பாடப்பட்டது என்பதை ஊகிக்கலாம் .
ஆரிய நாகரீகமோ திராவிட நாகரீகமோ எந்த நாகரீகம் நிலை பெற வேண்டும் என்றாலும் நீர் போக்கை வைத்தே அவை தீர்மாணிக்கப் படக் கூடும் என்பது வெட்ட வெளிச்சம்,இன்றைக்கும் நதி நீர் பங்கீட்டில் நாடுகளுக்கும் மாநிலங்களுக்கும் இடையே நிலவும் பூசல்களை சொல்லவும் வேண்டுமோ?!
இன்னும் சான்று வேண்டுமெனில் இதைப் படியுங்கள்,
ரிக் வேதத்தில் ஆரியர் அல்லாதோரில் பாணி என்போர் முக்கியமானவர்கள்,பாணி என்பது ஆரியச் சொல் இல்லை,'வணிக்' என்ற சமஸ்கிருதச் சொல்லின் மூலம் பாணி,சமஸ்கிருதத்தில் பணா என்றால் நாணயமாம்.ஆகா ரிக் வேதம் காட்டும் பாணிகள் தற்போதைய வட இந்திய பனியாக்களின் (வணிகர்கள்) மூதாதையர்களாக இருக்கலாம். ஆரியரது இந்திய வருகையின் போது இந்தப் பாணிகள் வட இந்தியாவில் நதிப் புற குடிகளாக செல்வாக்கோடு வாழ்ந்திருந்தோர் எனலாம்.
இந்தப் பாணிகள் இந்திரனோடு எதிர்த்துப் போராட வலுவற்றவர்கலாக சித்தரிக்கப்படுகிறார்கள்,அப்படியாயின் இந்திரன் தேவர்களின் தலைவன் கடவுள் என்பதெல்லாம் சுத்த ஹம்பக் என்று கேலி செய்வோர் அநேகம் பேர் .
காரணம் சான்றுகளுடன் ;
மொகஞ்சதாரோ ...சிந்து சமவெளி அகழ்க்வாராய்ச்சியின் போது அப்பகுதிகளில் கிடைத்த போர்க்கருவிகளைஒப்பிடுகையில்ஆரியரதுபடைத்தளவாடங்கள்மிகவலிமை வாய்ந்தவை,
ரதங்கள்அமைப்பதில் போர்கருவிகள் தயாரிப்பதில் ஆரியர்கள் வல்லவர்களாய் இருந்தார்கள்.பாணிகளிடம் அத்தகைய வலுவான போர்க்கருவிகள் இல்லை அதனால் பாணிகள் ஆரியர் படைத் தலைவனுக்கு திறை செலுத்தும் படி மிரட்டப் படுகிறார்கள் .
வேதிய விளக்க உரைகள் பாணிகள் இந்திரனின் கால்நடைகளைத் திருடி ஒழித்து வைத்து விட்டனர் என்றும் இந்திரனின் தூதாக வரும் நாய் தேவதை சராமா அவற்றை மறுபடி இந்திரனிடம் சேர்பித்து விடும்படி பாணிகளிடம் கேட்டுக் கொள்வதாகவும் ரிக் வேதப் பாசுரம் ஒன்று பிரபலமானது. உண்மையில் அந்தப் பாசுரம் சொல்வது இதையல்ல மேற்சொன்ன "பாணிகள் ஆரியத் தலைவன் இந்திரனுக்கு கப்பம் கட்ட வேண்டும் என்று மிரட்டப் படுவதே" ஆகும் என்று டி.டி.கோசாம்பியின் "பண்டைய இந்தியா "ஆய்வுகள் கூறுகின்றன.
இப்படியெல்லாம் பகுத்துப் பார்த்துக் கொண்டே போனால் தெய்வ நம்பிக்கை மிஞ்சக் கூடுமா என்பது சந்தேகமே!
சிலப்பதிகாரத்தில் இந்திர விழா வருகிறது,வசந்த கால கானல் திருவிழாவாக வரும் இதில் இந்திர பூஜை நடக்கிறது,அப்படியானால் சோழப் பிரதேசமான பூம்புகாரில் திராவிட பூமி என்று நாம் கருதும் இடத்தில் ஆரியக் கடவுளான இந்திர வழிபாடு வழக்கத்தில் இருந்ததென்றால் இப்போதிருப்பவர்கள் ஆரிய திராவிட கலப்பினங்கள் என்று தானே சொல்லிக் கொள்ள முடியும்! கலப்பற்ற ஆரியர்கள் அல்லது திராவிடர்கள் என்போர் யார்?இது ஒரு விடையற்ற கேள்வி தான்.
இப்படித்தான் தெய்வ ரூபங்கள் தோன்றி இருக்கக் கூடும் எனில்,மனிதர்களில் செயற்கரிய காரியங்களை செய்பவர்கள் அனைவரும் பின் வரும் தலை முறையினருக்கு தெய்வங்கள் தான்.
பதிவுக்கு சம்பந்தமில்லாத ஒரு ராமாயணக்கிளைகதை :
சீதையும் ராமனும் ஒரு நதிக்கரையில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கையில் சீதையின் அழகில் மயங்கிப் போன இந்திரன் மகன் ஜெயந்தன் காக உருவில் சீதையின் கன்னம் தொட வந்தானாம் அவ்வேளையில் ராமனது ஞான திருஷ்டியில் அவன் காகமல்ல ஜெயந்தன் எனத் தெரிந்து கோபம் கொண்ட ராமன் எய்திய அம்பு காக உருவில் வந்த ஜெயந்தனின் இடது கண்ணில் தைத்து அவன் அன்றிலிருந்து ஒன்றரைக் கண்ணன் ஆனான்.காகங்கள் தலை சரித்துப் பார்ப்பதற்கு ஒரு கண் பார்வை இழப்பே காரணம் என்பது ஒரு ராமாயணக் கிளைக்கதை. இதற்கு சரித்திரச் சான்று தேட முடியாது. இது இந்தப் பதிவுக்கு தேவை இல்லாத செய்தி தான் ,ஆனாலும் ஜெயந்தனின் கதைகள் (நிராயுதபாணியின் ஆயுதங்கள்)வாசிக்கையில் அட்டைப்பட காகம் இந்தக் கதை சொல்லத் தூண்டியது.மனித மனங்களுக்கே உரிய சலனத்தை தான் ஜெயந்தன் காக உருவில் உணர்த்துகிறானோ!!!(பார்க்க இடது புற சைடு பார் புத்தகப் படம்.)