Monday, February 15, 2010

கிளிஞ்சல்கள் பறக்கின்றன...


மென் அடர் நீல ஊமத்தம் பூக்கள் நீரில் கரைந்தால் என்ன நிறம் கிடைக்குமோ அந்த நிறத்தைப் பூசிக் கொண்டு இந்த கவிதைப் புத்தகத்தின் முகப்பு வாசிக்கும் நபர்களை தன்னுள் வசீகரிக்கிறது.மொத்தம் நூறு கவிதைகளாம் முன்னுரை சொல்கிறது.

அடிவானம் குங்குமம் கரைத்த தங்கத் தாம்பாளமாய் சிவந்து கிளர்ந்தால் அதிலொரு அழகு.

அதே வானம் அந்தி மசங்கி சூரியனை முற்றாய் காணாமலடித்த பின் பரிபூர்ண கடல் நீலம் ஆங்காங்கு பளீரிடும் நீரின் பளபளப்பு சூழ மினுங்குகையில் கண் காணும் காட்சியெங்கும் நிழலுருவமாய் நீலம் ஒட்டிக் கொள்ளும்.அப்படித் தான் இங்குள்ள கவிதைகளில் சங்குப் பூக்களின் மென் நீலம் போல சிநேகமானதோர் மென் சோகம் நிரம்பி வழிகிறது.நிசப்த ஆடையில் நீலம் இழைத்து மிதந்து பறந்த கிளிஞ்சல்களில் மனதை வருடிச் சென்ற சிலவற்றை பகிர்ந்திருக்கிறேன் இங்கே.வாசித்து விட்டு சொல்லுங்கள்.

pepsi blue வுக்கும் லாவண்டர் க்கும் இடைப்பட்ட புராதன நீலம் அப்படி ஒரு pleasant looking color .மொத்தம் இருக்கும் நீல வண்ணங்களில் இது மிக அழகான நீலம்!

சரி இனி கவிதைகளுக்குப் போகலாமா...

பட்டுப் புடவை எடுக்க கடைக்குப் போகிறோம்,பட்டில் எது சோடை!!! எல்லாமே மனதிற்கு உகந்ததாகத் தான் இருக்கும்.பட்டின் மென்மையும் மேன்மையும் இங்குள்ள எல்லா கவிதைகளிலும் இறைந்து கிடந்தாலும் சட்டென வசீகரித்த பத்தே பத்துக் கவிதைகள் மட்டும் இங்கே...

ஓடிப்போனவன் (என்.வினாயகப்பெருமாள் (பக்க எண்-11)

ஓடிப் போன நண்பன்
நாலுநாள் கழித்து
வீடு திரும்பினான் .

விம்மியபடி வாசல் வந்து
கட்டிக் கொண்டால் அவனின் மனைவி
ஐந்து வயது மகனுக்கு
கால்கள் தரையில் இல்லை

கொல்லி போட வந்த
சந்தோசத்தில் அப்பா.
அப்பாடாவென்று
ஆனந்தப் பட்டார்கள் நண்பர்கள்
பாவம்
என்ன கஷ்ட்டமோ?
என்ன ஞானமோ ?
பாதியில் வந்து விட்டான் .

நிதானமாக விசாரிக்க வேண்டும்
பாதி புத்தனை .

மொத்தக் கவிதையையும் இந்தக் கடைசி வரி தான் சுமக்கிறது.பாதி புத்தன்! பொருத்தமான அடைமொழி தான் ஓடிப்போன நண்பனுக்கு.

வீடு (ஜ்யோவ்ராம் சுந்தர் (பக்க எண்-12)

நாய்கள் விளையாடிக்
கொண்டிருந்தனவாம் இவ்வீட்டில்
மாடும் கன்றும் சத்தம் போட்டுக்
கொண்டிருந்தனவாம்
புறாக்கள் பறந்து கொண்டிருந்தனவாம்
அணில்கள் லாந்திக் கொண்டிருக்குமாம்
எந்நேரமும் உறவுகளும் நட்புகளும்
பேசிச் சிரித்து
கூடி மகிழ்ந்திருந்தார்களாம் இவ்வீட்டில்
இப்போது கடன்காரர்களின்
ஏசல்கள் கூட இல்லை
எல்லாரும் எல்லாமும் கைவிட
கழிகின்றன பொழுதுகள் சலனமற்று .

எல்லோரும் எல்லாமும் கை விட்ட வீடுகளை நீங்கள் பார்க்க வாய்த்திருக்கிறதா எப்போதேனும்? நான் பார்த்திருக்கிறேன்.என் பாட்டியின் பிறந்தகம் அது.வீடு இன்னும் இருக்கிறது அதே ஊர் அதே தெரு ...அதே இடத்தில் ,ஆனால் அங்கிருந்து கூடிக் குலாவி...சுணங்கிப் பிணங்கி கணமொரு பாவனை செய்த மனிதர்களைத் தான் காணோம்! அதன் ஜீவன் அவர்கள் புழங்கிய ஓசை என்பதறியாமல் இந்தியாவெங்கும் சிதறிய அம்மக்கள் அவ்வீட்டின் உயிரை எடுத்துக் கொண்டு பறந்தனர் வெறும் கூடாகிப் போன அவ்வீடு சில பல ஆண்டுகளுக்கொரு முறை உயிர்த்தெழும்.அன்றைக்கு நீங்கள் அங்கே வந்து பாருங்கள் அந்த வீட்டின் தேஜஸை .எல்லாம் சில நாட்கள் தான் வாரம் தாண்டாது மறுபடி..மறுபடி தவணை முறையில் செத்து செத்துப் பிழைக்கும் வீடுகளில் இதுவும் ஒன்று.

கப்பல்காரி (அய்யனார் (பக்க எண் 10 )

மழை மாலைத்
தெரு நதியில்
கப்பல்கள்.

செய்பவளின்
கண்ணெதிரில்
மடியாமல்
மெல்ல
மிதந்து போய்
பின்
மூழ்கும் .

விடியலில்
புங்கை மர
தடித்த வேரில்
சிக்கிச்
செத்துக் கிடக்கும்
அதே
கப்பல்கள்

எவ்விதச்
சலனமுமில்லாது
தாண்டிப் போவாள்
அதே கப்பல்காரி.


நாடெங்கும்...ஊரெங்கும்...வீடெங்கும்...திண்ணையிலும்...கொல்லையிலும்...முற்றத்திலும் ஒரே கப்பல்காரிகள் மயம்,அய்யனாரின் கவிதை பற்றி மேலும் மேலும் சொல்ல என்ன இருக்கிறது ! "கப்பல்காரிகள்" ம்...அழகான பிரயோகம்

தொட்ட மழை விட்ட மழை (பொன்.வாசுதேவன் (பக்க எண் 16 )

போகிற வழியில்
ஏதோவொரு ஊரில்
தற்செயலாய் இறங்கியது போல்
தட்டுத் தடுமாறி யோசனையாய்ப்
பெய்து கொண்டிருந்தது மழை

ததும்பும் மழையின்
வேகத்தைக் கண்டு
வேகம் கூட்டிச் செல்லும் வாகனங்கள்

குடைஎடுக்காமல் வந்ததற்காய்
தன்னைத் தானே நொந்து
நனைந்த புடவை கசங்காத படி
வேகமாய் விரையும் பெண்கள்

மழை நீரில் கப்பலே விட்டரியாத
குடியிருப்புச் சிறுமி
வழிந்தோடும் நீரில் பார்வையால்
செலுத்திக் கொண்டிருக்கிறாள் கப்பலை

நுரைத்துக் குமிழ்ந்திருக்கும்
ஒருபாவமும் அறியாத
சாலைக் குழி நீரை
எட்டி உதைத்தோடும்
மழை நனைந்த பையன்

எல்லோரையும் கடந்தபடி
மழையில் நனைவதென்றால்
ரொம்பப் பிடிக்குமெனச்
சொல்லிச் சொல்லி
அன்பால் நனைந்து காதலித்த
யமுனாவோ
வெயிலுக்கென எடுத்து வந்த
வண்ணக் குடைக்குள்
தலை தோள் நனையாமல்
சென்று கொண்டிருக்கிறாள்
பத்திரமாக தன் வீட்டுக்கு .

//போகிற வழியில்
ஏதோவொரு ஊரில்
தற்செயலாய் இறங்கியது போல்
தட்டுத் தடுமாறி யோசனையாய்ப்
பெய்து கொண்டிருந்தது மழை //

மழைக்கும் யோசனை உண்டாக்கும்?!
இந்த கற்பனை அழகென்றாலும் இதை விட இதை ரசித்தேன்.

//மழை நீரில் கப்பலே விட்டறியாத
குடியிருப்புச் சிறுமி
வழிந்தோடும் நீரில் பார்வையால்
செலுத்திக் கொண்டிருக்கிறாள் கப்பலை//

கண்களால் கப்பல் செலுத்துதல் அருமை அகநாழிகை

நுகத்தடி பூட்டிய (வடகரை வேலன் பக்க எண்-19 )

குழந்தைகளென்றால்
கொள்ளைப் பிரியம்
செவலைக்கு
கொம்பு நடுவில் சொறிந்து கொடுக்க
சொக்கி நிற்கும் கண் சொருக

எட்ட வரும் போதே எட்டி உதைக்கத்
தயாராகவிருக்கும் மயிலை
ஏனோ பிடிக்கவில்லை
குழந்தைகளை அதற்கு
அதனால்
குழந்தைகளுக்கும் அதனை

நுகத்தடியில் பூட்டியதும்
இரண்டும் ஈருடல் ஓருயிர் தான்
இடமென்றால் இடம் வலமேன்றால் வலம்
ஒத்திசைவு தான்
ஒரு போதும் இல்லை எசலி

அழுந்திக் காய்த்தக் கழுத்துக்கள்
சொல்லக்கூடும் உள்ளுக்குள்
மரத்துப் போன ஓராயிரம்

வலியோடு தொடர்வதன்றி
வேறேதும் வழியுண்டா
இரண்டுக்கும்?

இந்தக் கவிதை சொல்ல வருவது காளைகளின் வலிகளையும் ஏக்கங்களையும் மட்டும் தானா? பாரம் சுமக்கவென்றே ஒப்புக் கொடுக்கப் பட்டவர்களின் நிரந்தர வலிகளை அல்லவோ!


நேயன் விருப்பம் (செல்வேந்திரன் பக்க எண் 21 )

கழிப்பறையில்
முழங்காலும்
குளிக்கையில் முழங்கையும்
இடிக்கிறது
இடிபட வாழ்தலின்
இன்றைய தினம்
துவங்கியாகி விட்டது.

தீ" யென
எழுதப் பட்ட வாளிக்குள்
மணல் தான் இருக்கிறது.


தினசரி வாழ்வின் எந்திரத்தன சமாளிப்புகள் மற்றும் ஊமைச் சமாதானங்களின் எள்ளலாய்ச் சாடும் முதலும் கடைசியுமான வரிகள் ரசிக்கத் தக்கவை .

திண்ணையின் கதை (அமுதா பக்க எண்- 23 )

கையில் விளக்கோடும் இடுப்பில் குடத்தோடும்
மணப்பெண்ணாக வந்த பொழுது
வரவேற்றது...

கை நிறைய வலையல்கலோடும் மடி நிறைய
சுமையோடும்
விடை பெற்ற பொழுது
வாழ்த்தி வழியனுப்பியது...
...................................................................................

வீட்டின் எல்லா விஷேசங்களுக்கும் நிமிர்ந்து நின்றது
ஆசையாகக் கட்டியவர்
சுமந்து வரப்பட்ட வேலை தான்
குறுகிப் போனது .

திண்ணைகள் வைத்த வீட்டின் சொந்தக்காரர்களுக்குப் புரியும் இந்தக் கவிதையின் ஏக்கம்.துன்பியல் அழகு

முடியாத கதை (கார்த்திகைப் பாண்டியன் பக்க எண்-31 )

ஏழு மலையும் ஏழு கடலும் தாண்டி
மாயமாய் மறைந்து கிடக்கும் பச்சைத் தீவில்
வானம் தொட்டு உயர்ந்து நிற்கும்
ஆலமரத்தின் அடியில் புதைந்து கிடக்கிறது
ராட்சசனின் உயிரைத் தாங்கி நிற்கும்
மரகத வீணை ...
ராஜகுமாரன் அதனைத் தேடி எடுத்து
உடைக்க யத்தனித்த போது ...
எங்கிருந்தோ வந்த அப்பாவின் குரல் கேட்டு
அம்மா காணாமல் போக...
அசதியில் தூங்கிப் போகிறது குழந்தை..!!
இருந்தும்?
எப்போது கதை மீண்டும் தொடங்கப் போகிறதோ
அப்போது தான் கொள்ளப் படுவோம்
என்பதை அறியாதவனாக
குழந்தையின் ஆழ்மன அடுக்குகளில்
தீராத வன்மம் கொண்டவனாக
அலைந்து கொண்டே இருக்கிறான் ராட்சஷன்..!


மொத்தப் பத்திலும் நான் மிக ரசித்த கவிதை இதுவே....

தினம் தினம் கொல்லப் படக் காத்திருக்கும் ராட்ஷசர்களுடன் கவியும் இரவுத் தூக்கங்கள் எனக்கும் ஒரு போதில் வாய்த்திருந்தது,என் மகளுக்கும் கதை சொல்லிக் கொண்டு தான் இருக்கிறேன்,அதென்னவோ பாட்டி சொன்ன கதைகளின் புராதனத் தன்மை கண்ணாமூச்சு ஆட சுரைக்குடுக்கையாய் காய்ந்து கூடாகிப் போன கதைகளைத் தான் சொல்ல முடிந்திருக்கிறது இதுவரையிலும்.பாட்டிகள் ஆகச் சிறந்த கதை சொல்லிகள்,இந்தக் கவிதையில் ராட்ஷசன் மட்டுமா ஒழிந்திருக்கிறான் என் பாட்டியும் தான்.ஆகவே இந்தக் கவிதை வசீகரிக்கிறது.

சத்தங்கள் (அமிர்தவர்ஷினி அம்மா பக்க எண்-34 )

காரைத் தரையில்
கட்டை தென்னந் துடைப்பத்தால்
வரும் சர்...ரக்,சர்..ரக்
இப்படித் தொடங்கி
பால் பொங்கும் ஓசை ...குக்கர் விசில் சத்தம்...பாத்திரங்கள் உருளும் ஓசை நடைபாதையை வீட்டுக்குள் கொண்டு வரும் பூக்காரர்,தயிர்காரர் பேச்சொலிகள் இப்படி தொடர்ந்து
"இடையிடையே சிணுங்கலும் சிரிப்புமாய்
ஓடி வந்து காலைக் கட்டிக் கொள்ளும்
செல்ல மகளின் "அம்மா"
கடைசியில் இப்படி முடிக்கையில்

காலை நேரத்தின் அவசரங்களுக்கிடையில் இனம் காணும் சின்னச் சின்ன சந்தோசங்கள் அப்படி அப்படியே ஒளிப் படமாய் கண்ணில் நகரத் தான் செய்கிறது.

சக்திவேலும் சாவிகளும் (உமாஷக்தி பக்க எண்-50 )

எங்கே ஒழித்து வைத்தாலும் சாவிகளின் வாசனை
சக்திவேலுக்குத் தெரிந்து விடும் !
அவற்றின் ரகசிய இடங்களை
அவன் மட்டுமே அவ்வளவுக்கு அறிந்திருப்பான் !
வண்டிச் சாவி,வாயில் சாவி,
பழைய இரும்புப் பெட்டியின்
மிகச் சிறிய சாவி ,பீரோ சாவி,வீட்டுச் சாவி...
என பூட்டே கூட இல்லாத பல சாவிகள்
அவனிடம் உண்டு ...

அம்மாக்களின் பேரன்பை விளக்க அழகான கவிதை உமா ,அம்மாவின் அன்பைத் திறக்க மகனுக்கு சாவி வேண்டுமா என்ன ?!

குகைகளில் முடியும் கனவுகள் (ஜோ பக்க எண்-55 )

தனியனாகவே அலைந்து திரிகிறேன்,
பாலைவனங்களில், கடற்கரைகளில் ,
குறுகலான நீண்ட குகைகளில் ,
சுரங்கப் பாதைகளில் சென்று
மூச்சுத் திணறி ,
கனவு கலைந்து விழிக்கிறேன் .
........................................................

மீண்டும் வந்தது வெள்ளி இரவு
"மதுவருந்தி நடனமாடலாம் அழகிய பெண்களுடன்"
சக ஊழியனின் அழைப்பை மறுத்து
வீட்டிற்கு விரைகிறேன்
தனியனாய் அலையும் கனவுகளை நோக்கி .


தொடக்கப் பள்ளி (ஹேமா பக்க எண்-58 )

பொன்னையா மாஸ்டர் சுளகில்
அரிசி புடைத்தபடியே
தமிழ் பாடம் சொல்லித் தந்ததை
மறக்க முடியவில்லை .

முட்டிக் கால் போட்டு மூன்றாம் வாய்ப்பாடு
பாடமாக்கினதையும் மறக்கவில்லை
..................................................................
சின்னக் காளிகோவில்
ஒரு அரச மரத்தடி புத்தர்
பிறகு ஐயனார் சிலை? பாலம் வயல் வெளி ?
ஆறு கடக்க
...................................................................
போன வருடம் போய்
என் மலையகத்து ஆரம்பப் பள்ளி பார்த்து
பாதம் தொட்டு வணங்கி வாய் விட்டழுது
பிரிய முடியாமல் பிரிந்து
இனியும் பார்ப்பேனா உன்னை என்று
கண்ணீரோடு வந்ததையும் மறக்க முடியவில்லை .


திருவினை (யாத்ரா பக்க எண் -62 )

திருவினையாகாத முயற்சிகளை நொந்து
கயிற்றைத் தேர்ந்தெடுத்தேன்
கடைசியாக
அதற்கு முன்பாக
மலங்கழித்து விடலாமென
கழிவறை போக
பீங்கானில் தேரைகளிருக்க
கழிக்காது திரும்பி
வரும் வழியில்
எறும்புகளின் ஊர்வலத்திற்கு
இடையூறின்றி கவனமாக
கடந்து வந்தேன் அறைக்குள்
கரிசனங்கள் பிறந்து விடுகிற
கடைசி தருணங்களின்
வினோதத்தில் புன்சிரித்தேன்...

தற்கொலை செய்து கொள்ளப் போகும் நிலையை இத்தனை கவித்துவமாய் எங்கேனும் சொல்லி இருக்கிறார்களா? எறும்புகளுக்கு கரிசனம் காட்டுபவன் ஏனோ கயிற்றை தேர்ந்தெடுக்க வேண்டும்? ரசிக்கத் தக்க வார்த்தைக் கோர்ப்புகள்.யாத்ராவின் இந்தக் கவிதை அழகு.


ஆதிரை என்றொரு அகதி (தமிழ்நதி பக்க எண்-65 )

ஐந்து வயதான ஆதிரைக்கு
கடல் புதிது
கேள்விகளாலான அவள்
அன்றைக்கு மௌனமாயிருந்தாள்
..........................................................
கழிப்பறை வரிசை
கல் அரிசி....
சேலைத் திரை மறைவில்
புரியாத அசைவுகள்...
காவல் அதட்டல்...
கேள்விகளாலான அவள்
ஊரடங்குச் சட்டமியற்றப் பட்ட
பாழடைந்த நகர் போலிருந்தாள்.

என் சின்ன மயில் குஞ்சே!
.............................................................

"அம்மம்மா !அவையள் ஏன் என்னை
அகதிப் பெண்ணு எண்டு கூப்பிட்டவை?"

வழக்கம் போல வலிக்கிறது இந்த வரிகளை வாசிக்கையில்.எழுதி எழுதி எத்தனை மாய்ந்தாலும் தீராத வேதனைகள்.தேறுதல் இல்லா துக்க வீட்டின் அழியாச் சின்னங்களாயின எண்ணிக்கையிலா சின்ன மயில் குஞ்சுகளும் ,சின்னப் புறாக்களும்.என்ன சொல்ல! துக்கம் உணரப்பட்டால் போதுமா ?! விடையறியாக் கேள்விகள்.

கலைந்து கொண்டேயிருக்கும் வீடுகள் (அன்புடன் அருணா )

ஆதிமூல கிருஷ்ணனின் "கலர்" இதில்


//சாக்லேட் கலருக்கும்
காப்பி பொடி கலருக்கும்
இடைப்பட்ட வண்ணத்தினாலான
புடவை என்னால் கண்டுபிடிக்கவே முடிவதில்லை.// அழகான பகடி.

உயிரோடை லாவண்யாவின் "கண்ணாடிக் கோப்பைகளும் சில பிரியங்களும் " இதுவும் ரசனையான கவிதை.

இவை மட்டுமல்ல பதிவுலக பிரத்யேகக் கவிஞர்கள் பா.ராஜாராம்,நேசமித்திரன்,அனுஜன்யா,இன்னும் பலரின் மிக நல்ல கவிதைகள் இத்தொகுப்பில் உள்ளன.தொகுத்தளித்த நண்பர் மாதவராஜ் அவர்களுக்கு நன்றிகள் உரித்தாகட்டும்.

புத்தகம் கிளிஞ்சல்கள் பறக்கின்றன
தொகுப்பு ஜே.மாதவராஜ்
வெளியீடு வம்சி
விலை ரூ 50