Wednesday, November 10, 2010

யாருக்கு தருவீர்கள் மனநல சிகிச்சை ?!



கோவை சிறுவர்கள் இரட்டைக் கொலை சம்பந்தமாகவும் குற்றம் சாட்டப் பட்ட மோகன் ராஜ் என்கவுண்டர் தொடர்பாகவும் பல்வேறு கருத்துகள் நிலவும் இந்த வேளையில் பலரது முக்கியமான ஆச்சரியம் என்னவேனில் நாடெங்கும் பத்து வயதுக்குட்பட்ட சிறுமிகள் பலாத்காரம் செய்யப்படுவதும் குற்றம் வெளித் தெரியாமல் இருக்க கொலை செய்யப் படுவதும் தொடர்ந்து பத்திரிகைகள் தொலைகாட்சி ஊடகங்கள் வாயிலாக பரவலாக தினசரி நிகழ்வாக ஆகி விட்ட இன்றைய நிலையில் இந்த கொலைகளுக்கு இத்தனை முக்கியத்துவம் ஏன் என்பது பெருவாரியானவர்களின் சந்தேகமாக ஆகி விட்டிருக்கிறது. 

     

உலகில் எங்கெலாம்  குழந்தைகள்   மனிதத்தன்மையற்ற மிருகங்களால் துன்புறுத்தப் படுகிறார்களோ அங்கெலாம் உடனே மகாப் பெரிய கடவுள் பிரத்யட்சமாகி அவர்களை தண்டிப்பானே எனில் இந்தச் சந்தேகம் அவர்களுக்கு வந்திருக்காது.


கடவுள் கூட பாரபட்சம் பார்ப்பாரென்றே நினைக்க வழி இருக்கிறது பாருங்கள்


சொல்ல வந்த விஷயம் அதுவல்ல;

அந்த இரு குழந்தைகளும் கொலை செய்யப் பட்ட விதம் ,அவர்களுக்கு நன்கு அறிமுகம் ஆன பள்ளி வேன் டிரைவரால் ,உங்களுக்குத் தெரியாதா தமிழகத்தில் முக்கால்வாசிப் பெற்றோர் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப தனியார் வேன்களையும் ஆட்டோக்களையும் நம்பி இருக்கின்றனர் என்பது. அப்படிப் பட்ட நிலையில் ஒரு கால்டாக்சி டிரைவரால் திட்டமிட்டு நடத்தப் பட்டதாக ஒப்புக் கொள்ளப் பட்ட இந்த கொடூரச் செயல் அதீத மிரட்சியுடன் தான் பலராலும் கவனிக்கபட்டுள்ளது என்பதில் என்ன பெரிய ஆச்சர்யம் இருக்கக் கூடும்?

அந்தக் குழந்தைகளின் பாட்டி அவர்கள் இருவரும் வேனில் ஏறும் போது உடனிருந்து கண்காணித்திருக்கிறார். மீண்டும் மோகன்ராஜ் வேலையில் இருந்து நின்று விட்டார் என்ற செய்தியும் மற்றொரு டிரைவரால் உடனே தெரிவிக்கப் பட்டிருக்கிறது. உடனுக்குடன் பள்ளியில் குழந்தைகள் இருக்கிறார்களா என்பதை அறிந்து கொண்டு உடனே சந்தேகித்து தேடத் துவங்கி இருந்தால் ஒரு வேளை அந்தக் குழந்தைகள் அட்லீஸ்ட் உயிர் சேதம் இல்லாமல் மீட்கப் பட்டிருக்கக் கூடும் என்ற பரிதவிப்பெல்லாம் இப்போது வருகிறது .


யாருடைய மெத்தனம் இந்த இரட்டைக் கொலைகளுக்கு காரணம்?

பள்ளிக்கு குழந்தைகளை வேனில் அனுப்பும் பெற்றோர்களுக்கு எல்லாம் இது மிக அதிர்ச்சிகரமான மட்டுமல்ல உள்ளுக்குள் நடுக்கத்தை ஏற்படுத்திய செய்தி அந்த வகையில் கூட இந்த செய்தி வழக்கத்தை விட அதிக முக்கியத்துவம் பெற்றிருக்கலாம் .

மோகன் ராஜ் மட்டுமே குற்றவாளி என்பதை அவனது என்கவுன்டருக்குப் பின் முழுவதுமாக நம்ப இயலவில்லை. இந்த கொடூரச் செயலுக்கு நிஜ காரண கர்த்தாவாக அதிகார பலமிக்க அந்தக் குழந்தைகளின் தகப்பனாரின் தொழில் முறை எதிர்கள் அல்லது வேறு எதோ ஒரு காரணத்திற்காக எதிரிகள் ஆனவர்கள் (இந்த நாட்டில் ஒருவருக்கொருவர் எதிரிகள் ஆவதற்கு காரணங்களுக்கா பஞ்சம்! ) இப்படி வேறு எவரேனுமாக இருந்து மோகன்ராஜ் போன்றோரை எய்து விட்டிருக்கக் கூடும் எனவும் சந்தேகிக்க இடமிருக்கிறது. சாட்சியங்கள் அற்ற நிலையில் இன்னும் சந்தேகங்கள் வலுப்பெறவே செய்கின்றன. போலீஸ் அவனை கொன்றது சரி தான் அதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் இத்தனை அவசரம் ஏன் என்னுமிடத்தில் எதையோ அல்லது யாரையோ மறைக்க இப்படி என்கவுண்டர் செய்தார்களோ என்ற பலத்த சந்தேகம் தோன்றுவது தவிர்க்க முடியாதது.

நண்பர் சென்ஷியின் buzz செய்தி

//கடந்த ஏழாம்தேதி திருக்காட்டுப்பள்ளி அருகே கீர்த்திகா எனும் பத்து வயது சிறுமி பாலியல்  உங்களுக்கு தேவையில்லாமல் போகலாம். ஆனால் எட்டாம் தேதி இந்த செய்தியை படித்தவர்கள், கோவை சம்பவத்துக்கு நிகராக இந்த செய்திக்கும் கொந்தளித்தவர்கள், அதை அக்கறையோடு பின்தொடர்ந்தவர்களின் வசவுகளை நான் முழுமனதோடு ஏற்றுக்கொள்கிறேன். இந்த பட்டியலில் வராதோர் கொஞ்சம் சிந்தியுங்கள், உங்கள் புறக்கணிப்பைப் பற்றியும் உங்கள் ஊடகங்களின் பாராமுகத்தைப் பற்றியும்.//

இது மட்டுமல்ல சென்ஷி இப்படி பட்டியலிட ஏராளமான செய்திகள் இருக்கின்றன. சொல்லப் போனால் அந்த செய்திகளை பின்தொடர்ந்தால் நாம் ஒரு நிமிடமேனும் நிம்மதியாய் இருக்க முடியாது. தினம் தினம் அத்தனை அநியாயங்கள் கண்ணில் படும் செய்திகள் அப்படி.

பெயர் ஊர் ஞாபகத்தில் இல்லை ,நான் வாசிக்க நேர்ந்த சில சில சம்பவங்களை இங்கே தருகிறேன் ,படித்துப் பாருங்கள் ;

கொடைக்கானலில் என்று நினைவு ஒரு பாதிரியார் அனாதைக் குழந்தைகளுக்கு என ஆசிரமம் நடத்தி அதற்கு அயல்நாட்டு கிறிஸ்தவ அமைப்புகளிடம் இருந்து நிதி வசூல் செய்து வந்திருக்கிறார் ,அந்தப் பாதிரியாரின் தினசரி நடவடிக்கை என்ன தெரியுமா? சொல்லித் தான் தீர வேண்டும் பருவம் அடைந்த அடையாத என்ற பாரபட்சமே இல்லாமல் பெண் குழந்தைகள் அத்தனை போரையும் தனது வரைமுறையற்ற காமத்திற்கு பலியாடுகள் ஆக்கி இருக்கிறான் . செய்தி எப்படியோ கசிந்து அந்தக் குழந்தைகள் காப்பற்றப் பட்டதாக நக்கீரன் செய்தி வெளியிட்டிருந்தது. இப்போது அந்தக் குழந்தைகள் என்ன ஆனார்கள் ? அந்தப் போலி பாதிரியார் சிறையில் தள்ளப் பட்டானா சுட்டுக் கொள்ளப் பட்டானா என்பதெல்லாம் வெறுமே பரபர செய்திகளுக்காக பத்திரிக்கை வாசிக்கும் நேயர்களுக்கு அனாவசியம் .

மற்றொன்றும் கொடைக்கானல் செய்தி தான் அங்கே ஒரு பள்ளியின் தாளாளர் பள்ளி ஹாஸ்ட்டலில் தங்க படித்து வந்த பெண் குழந்தைகளிடம் தவறாக நடந்து கொண்டதற்காக காவல் துறை விசாரணைக்குட்படுத்தப் பட்டார் என்பதும் சமீபத்திய பத்திரிக்கை செய்தி தான்.



இவர்களை விடுங்கள் அரசு டாஸ்மாக்கில் அள்ளும் லாபம் எவ்வளவோ எனக்குத் தெரியாது ,ஆனால் மனதை திடப் படுத்திக் கொள்ளுங்கள் எவனோ ஒரு மொடாக் குடி நிர்மூடத் தகப்பன் தன மனைவியிடம் கொண்ட சந்தேகம் அளவற்றுப் போய் தான் பெற்ற பெண் குழந்தையையே பாலியல் வன்முறை செய்திருக்கிறானாம். இவ்விடத்தில் பெண் குழந்தை அவனுக்குப் பிறந்ததா இல்லையா என்று ஆராய்தலை காட்டிலும் அதிர்வைத் தந்த விஷயம் அந்தக் குழந்தையின் மீது தொடர்ந்து நடத்தப் பட்ட இந்த கொடூரத்தை பெற்ற தாயே பல நாட்கள் மறைத்து வந்திருக்கிறாள் என்பது தான்.

யாருக்குப் பிறந்திருந்தாலும் குழந்தைகள் குழந்தைகளாக மட்டுமே நடத்தப் பட வேண்டும் என்பதில் யாருக்கேனும் இங்கே மாற்றுக் கருத்து உண்டா?!

குழந்தைகள் என்ன தான் செய்வார்கள்?! கணவன் மனைவிக்குள் சந்தேகம் மிஞ்சிப் போனால் இப்படிப் பட்ட வக்கிரங்களை கண்ணாரப் பார்த்துக் கொண்டு சும்மா இருப்பதை விட அரசு அல்லது தனியார் அநாதை ஆசிரமங்களில் அல்லது தொண்டு நிறுவனங்களில் சேர்த்து விட்டுப் போவதற்கென்ன ?

அங்கேயும் நம்பகத் தன்மை கேள்விக்குறி என்றால் !

இந்த ஒரு செய்தி மட்டுமல்ல இதே ரீதியில் பாதிக்கப் பட்ட இன்னும் சில பெண் குழந்தைகள் மற்றும் அவர்களது அம்மாக்கள் அப்பாக்களின் புகைப்படங்களோடு ஜூ.வி யோ குமுதம் ரிப்போர்ட்டரோ எதுவோ செய்தி வெளியிட்டிருந்தது. பெயரளவில் அப்பாக்களாகி விட்டால் போதுமா ,அந்த உறவைக் கொச்சைப் படுத்தும் இவர்களை என்ன செய்வது

முன்னெப்போதோ சில ஆண்டுகளுக்கு முன் ஜூ.வி யில் ஒரு தொடர்கதை (ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்க்கப் பட்டது ) வாசித்த நினைவு வருகிறது.

சிந்தியா என்ற பெண் தான் கதையின் மூலம் அவள் காவல் துறையில் உயர் பதவி வகித்த தன் தகப்பனால் இதே ரீதியில் பலாத்காரம் செய்யப் பட்டதால் மனசிதைவுக்கு ஆளாகி முடிவில் தானும் திட்டமிட்டு காவல் துறையில் இணைந்து தன் தந்தையையும் தந்தையின் தகாத நடவடிக்கைகள் தெரிந்தும் பேச்சற்று கோழையாய் இருந்த தாயையும் கொடூரமாக கொலை செய்கிறாள். இந்தக் கதை வாசித்த அந்நாளில் மிகப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது .

இன்னொரு செய்தி இரண்டரை வயதுக் குழந்தையை மில் வேலைக்கென்று ஓசூரில் பஞ்சம் பிழைக்க பீகாரில் இருந்து தமிழகம் வந்த மூடன் ஒருவன் அதைத் தூக்கிக் கொண்டு போய் அநியாயம் செய்திருக்கிறான்.குழந்தையை கொல்லவும் செய்திருக்கிறான்.

இன்னும் பல செய்திகள் இப்படி , ஆக ஊடகங்களில் குழந்தைகளுக்கு எதிரான பலதரப் பட்ட அநீதிகளை தினமும் நம்மில் பலரும் வாசித்துக் கொண்டு தான் இருக்கிறோம் ;ஒவ்வொன்றாய் பட்டியிலிட்டால் ஒட்டு மொத்தமாய் வாசிப்பவர்களுக்கு பைத்தியம் பிடிக்கும் .

சிலர் சில செய்திகளை வாசிக்காமல் தவற விட்டிருக்கலாம் .செய்தி ஒன்று தான் நாட்டில் எத்தனை சட்டங்கள் போட்டாலும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் குறையவில்லை. பெற்றோர்கள் இன்னும் தங்களது ஜாக்கிரதை உணர்வை அதிகப் படுத்திக் கொண்டு சதா தங்களது குழந்தைகளின் மீதான கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணமே மேலோங்குகிறது .

இங்கே பலரது கேள்வியும் ...சுடப்பட்டவனுக்கு பின்புலத்தில் அதிகார பலமோ ,பணபலமோ இருந்திருப்பின் இந்த என்கவுண்டர் நடந்திருக்காது என்பதாக இருப்பதால் ஒன்றை மறந்து விடக் கூடாது , நாம் அறிந்தவை அனைத்துமே ஊடகச் செய்திகள் மட்டுமே.

உண்மையில் நடந்தது என்ன என்பதைக் குறித்து முழுமையான நிஜங்கள் நமக்குத் தெரியாது.மோகன்ராஜ் தன் வாய்மொழியாக குற்றத்தை ஒத்துக் கொண்டான் என்பது நிஜம் எனில் (அந்தக் குழந்தைகளை எப்படியெல்லாம் கடத்தி எப்படியெல்லாம் சித்திரவதை செய்து எப்படி ஓடையில் மூழ்க விட்டுக் கொன்றோம் என மோகன் ராஜும் அவனது கூட்டாளியும் காவல் துறையினரிடம் விவரித்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன,உண்மையில் கொலை செய்யாதவன் இப்படியெல்லாம் விவரிக்க வேண்டிய அவசியம் என்ன? !)அவனை சுட்டுக் கொன்றதில் மேலே பேசவோ விவாதிக்கவோ என்ன இருக்கிறது.

கன்னட பிரசாத் குறித்த பர பரப்பு செய்திகளின் போதென்று நினைக்கிறேன், எந்தப் பத்திரிகை என்று நினைவில்லை பழுத்த அரசியல் பெரும் புள்ளி ஒருவருக்கு பள்ளிச்சிறுமிகள் என்றால் அத்தனை விருப்பமாம்! மகாநதி திரைப்படக் கதை தான். படத்தை போல எந்த ஒரு அப்பாவும் இப்படிப் பட்ட பெரும் புள்ளிகளை கொன்று மாடியில் இருந்து வீசியதாக ஊடகச் செய்திகள் எதுவும் காணோம் .

இந்த நாட்டின் சாபக்கேடு இது. எளியவர்கள் என்ற நிலை இருக்கும் வரை வலியவர்கள் எனும் நிலையும் இருந்து கொண்டிருக்கும் தானே!

இதே கொலைகளை அதிகார பலமிக்க ஒருவன் செய்திருந்தால் அவனையும் என்கவுண்டர் செய்வார்களா என்று விவாதித்து தயவு செய்து செய்தியை திசை திருப்பாதிர்கள். யார் செய்திருந்தாலும் அவர்கள் கொல்லப் பட வேண்டியவர்கள் தான். ஆனால் எத்தனை பேர் அப்படிக் கொல்லப் பட்டார்கள் என்று பதில் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தாள் ...பூனைக்கு மணி கட்டுவது யார்? ! 

அதிஷாவின் தளத்தில் வாசித்தது ...

//சமூக குற்றங்களுக்கு மரணதண்டனைகள் எப்போதும் தீர்வாகாது. அதற்கான வேரை கண்டறிந்து அதை களைவதே சிறந்தது. உண்மையில் மோகன்ராஜிற்கு தேவை நல்ல மனநல மருத்துவர். அவனை இந்த குற்றத்திற்கு தூண்டியது எது என்பதை கண்டறிந்து இன்னொரு முறை இப்படி ஒரு வக்கிரம் நடக்காமலிருக்க வேரிலேயே பிரச்சனைகளை தீர்க்க முனையவேண்டும். ஆனால் மக்களுடைய மனதில் ஒரு இன்ஸ்டன்ட் மகிழ்ச்சியை அளிப்பதன் மூலம் எதை மறைக்க முயல்கிறது தமிழக அரசு. இங்கே ஒவ்வொரு நாளும் இதுமாதிரியான ஆட்கடத்தல்களும் கொலைகளும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால் அதில் மாட்டிக்கொண்ட ஒருவனை கொன்றாகிவிட்டது. மற்றவர்கள்?//


இந்தக் கொலைகள் மற்றும் தொடர்ந்த என்கவுண்டர் மூலம் ஒரு விஷயம் தெளிவாகிறது.அது  மக்களின் மாறுபட்ட மனநிலைகள். மோகன்ராஜுக்கு அளிக்கப் பட்டிருக்க வேண்டியது என்கவுண்டர் அல்லது மன நல சிகிச்சை என்போருக்கு சொல்லிக் கொள்ள விரும்புவது ;
 
ஈழத்தை ஏன் மறந்தீர்கள் ?
 
அங்கே நிகழ்த்தப் பட்ட இன்னும் நிகழ்த்தப் பட்டுக் கொண்டிருக்கும் வன்முறைகளின் பொறுப்பாளர்களுக்கு  எல்லாம் மன நல சிகிச்சை தான் தரப்பட்டாக வேண்டுமா? முடியுமா அது? ஏன் வீரப்பனைத் தேடுகிறோம் என்று பழங்குடிப் பெண்களை பாலியல் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கினார்களே தமிழக ,கர்னாடக காவல் துறையினர் அவர்களுக்கும்  மன நல சிகிச்சை தர முடியுமா? சதாம் உசேனை ஏன் தூக்கில் போட்டார்கள் ? அவருக்கு மன நல சிகிச்சை தந்திருக்கலாம் தானே? இன்னும் ஹிட்லர் ,இடி அமீன் இப்படி பட்டியலை நீட்டிக் கொண்டே போனால் நம் பெயரும் கூட கடைசியில் வரும் அபாயமிருக்கலாம்.யாருக்கு மனநல சிகிச்சை அளிப்பது? 
 
எந்த படம் என்று நினைவில்லை,
 
"  பதினோரு வயசுப் பொண்ணு ,கையில் ஒரு மிட்டாயை வச்சு அழுத்தி காரியத்தை முடிச்சிட்டேன் "  என்று சிரிப்பான் ஒரு சிறுமியைக் கொன்றவன் ;; கேள்வியே கேட்காமல் சுட்டுக் கொல்வார் அவனிட பேசிக் கொண்டிருக்கும் காவல் துறை அதிகாரி. இதே ட்ரீட்மென்ட் தான் இவ்விதமாக குற்றத்தில் ஈடுபடும் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்பதில் என்ன சந்தேகம்? .
 
மக்களின் உணர்வு எதிர்பார்ப்பு இது தான்.
 
 
சிலர் இந்த என்கவுன்டரை மட்டுமே பெரிதாக்கி சமுதாயத்தின் மீதான தங்களது தார்மீகக் கோபங்களை வெளிக்காட்டுகின்றனர்.
 
சிலர் அதிஷா  சொன்னது போல இன்ஸ்டன்ட் மகிழ்ச்சி பரவாயில்லை என்று நிம்மதி  அடைந்து விடுகிறார்கள்.


பூனைக்கு மணி கட்டுவது யார்? விவாதங்களால் ஆகப் போவது என்ன?

இறந்த குழந்தைகளின் ஆன்மா சாந்தி அடையட்டும்.

இறந்த குழந்தைகளின் ஆன்மா சாந்தி அடையட்டும்.