ஜெயக்கொடி ...ஜெயக்கொடி ...இந்தப் பேரை கேட்டாலே ஒரு காலத்தில் உடம்பெல்லாம் உதறும் ,மனசுக்குள் ஒரு பயக் குளிர் ஊடுருவும் .இத்தனைக்கும் அவளை நான் நேரில் பார்த்ததே இல்லை ;
ஊரில் பலர் சொல்லிக் கொள்வார்கள் ;
நான் அவளை அங்கே அய்யாவு நாயக்கர் கொய்யாத் தோப்பில் பார்த்தேன்...ஆத்தங்கரை மேட்டில் அந்தி சாயும் நேரத்தில் தன்னந்தனியே ஊருக்குள் நுழைகையில் பார்த்தேன் ...வைகை ஆத்துப் பாலத்தில் பார்த்தேன் ...
என்று ஆள் ஆளுக்கு பேசிக் கொண்டார்கள் .
வெம்பக் குடி அத்தை தான் எதையும் தெள்ளத் தெளிவாய் சொல்வாள் அவள் கூட இப்போது ஜெயக்கொடியால் புலம்பித் தள்ளிக் கொண்டுதான் இருக்கிறாள்.
பின்னாடியே...
பின்னாடியே வந்துகிட்டு இருந்தா நான் உயிரைக் கையில புடிச்சிகிட்டு ஓடியாந்தேன்."இவள அடக்க யாருமில்லையா அடியே ஜக்கம்மா தாயேனு "கண்ண மூடிக்கிட்டு ஒரே ஓட்டம் அங்க ஆரம்பிச்சது எங்க மச்சு வூட்டுக்குள்ள இருக்கன்குடி மாரியம்மன் படத்துல போய் தான் கண்ண முழிச்சிப் பார்த்தேன் ?
அம்புட்டுக்கு கதி கலக்கீட்ட தாயோளி மக! ஊருக்குள்ள எங்கிட்டுப் பார்த்தாலும் இவ நடமாட்டந்தேன் ...அந்தியில..சந்தியில எங்குட்டாச்சும் ஒத்தையில போய் வர முடியுதா ? மூத்தவ வேற இன்னிக்கோ ...நாளைக்கோன்னு குச்சுக்குள்ள உட்கார தயாரா நிக்கா ...ஒத்தையில எங்கனயும் போகதடீன்னா கேட்க மாட்டேங்கா ...இவ பாட்டுக்கு மட்ட மத்தியானத்துல நல்ல தண்ணி எடுத்தாறேன்னு ஆத்தங்கரைக்கு நடையக் கட்டிர்ரா ...இவள அடக்கறதே பெரும்பாடா இருக்கு ,இதுல ஊருக்குள்ள அந்த "ஜெயக் கொடிய நான் இங்கன பார்த்தேன்...அங்கன பார்த்தேன்னு வேற புரளியக் கிளப்பி விட்ராளுகலேனு நேத்து வரைக்கும் விசனப் பட்டுகினு இருந்தேன் எல்லாரும் வயித்துல நெருப்பக் கட்டிக்கிட்டு இருக்கறாப்பல பண்ணிட்டாளே சண்டாளி ...அவ நாசமாப் போக! "ஜெயக்கொடி" நு அவளுக்கா பேரு வச்சவன சொல்லணும் ...ஊரு பூர்ரம் அவ ஜெயத்த தான் மங்களம் பாடிக்கிட்டு திரியறோம் .
ஈசுவரா ..பெருமாளே (துன்னூரை(திருநீர்) அள்ளி அள்ளி நெற்றியிலும் ...உச்சந்தலையிலும் பூசுவதான பாவனையில் தெளித்துக் கொண்டே அவள் சொல்வதைக் கேட்க ஒரு புறம் சிரிப்பு பொத்துக் கொண்டாலும் கேட்க ...கேட்கவே அதீத பயமும் வந்தது .ஆறு மணிக்கு மேல் பாட்டியின் சேலைத் தலைப்பின் நுனியைப் பற்றிக் கொள்ளாமல் தெருவில் நடக்க அப்படி ஒரு பயம்!
ஒரே ஒரு முறை மட்டும் ஜெயக்கொடியை அவள் வீட்டு பழைய புகைப் படத்தில் பார்க்க நேர்ந்தது .பார்த்த பிறகோ "ஏண்டா பார்த்தோம் அதை என்று ஆகி விட்டதென்னவோ வாஸ்தவமே!
அப்படி ஒரு ஆள் துளைக்கும் பார்வை அவளுக்கு ...பார்ப்பவர் கண்ணை மட்டுமின்றி நெஞ்சையும் குத்தும் ஈட்டிக் கண்கள் .எல்லா பழைய போட்டோ கலைப் போலவே அவளுடையதும் லேசாக செல்லரித்துப் போயிருந்தாலும் கண்களில் உயிர் இருந்தது அந்த உயிர்ப்பு பார்ப்பவரின் உயிரை எடுப்பதைப் போல திகிலூட்டியது .சில நிமிடங்களுக்கு மேல் அதைப் பார்க்க இயலவில்லை .பார்த்தால் எங்கே நம்மை அவளது அடிமையாக்கி விடுமோ அந்தப் பார்வை என்ற பயம் வந்தது ,ஏதோ ஒரு அமானுஷ்ய தன்மை அவளுக்கு அப்போதே இருந்திருக்கிறது போல என்று நினைத்துக் கொண்டே நான் பார்வையைத் திருப்பிக் கொண்டேன் .
ஜெயக்கொடி பேர் அழகானது தான் ...அர்த்தமுள்ளதும் கூட!ஆனால் அவள் அர்த்தமின்றி போனது மட்டுமின்றி அன்று ஊரையே ஒரு கலக்கு கலக்கிக் கொண்டிருந்தாள் .
எல்லோருமே ...ஊரின் பெரிய நாட்டாமை "ரங்கசாமி நாயக்கரிலிருந்து " புதிதாய் பக்கத்து ஊர் வகுப்புக் கலவரத்தை ஒடுக்க மாற்றலாகி வந்திருந்த எஸ்.ஐ ராஜாங்கம் முதற்கொண்டு டாக்டர் பெரியப்பா ஐயப்பன் வரை எல்லோருமே அவள் பெயரைச் சொன்னால் கொஞ்ச நேரம் ஏதோ இழவு செய்தி கேட்டதைப் போல அமைதியாகி பிறகே " அவளை எல்லாம் அடக்கி வச்சு ரொம்ப நாளாச்சு ..சும்மா பயந்து சாகதீங்க பெண்டுகளா " என்கிறார்கள். அவர்களுக்கும் உள்ளூர பயம் தான் போல!
சரி அப்பேர்ப்பட்ட அந்த ஜெயக்கொடி யார் என்பது உங்களுக்கும் தெரிய வேண்டும் இல்லையா?
ஜெயக்கொடி ஒரு இளம்பெண் ?!
பதினெட்டு அல்லது பத்தொன்பது வயதிருக்கும் அவளுக்கு சாகும்போது ?!
அப்போதிருந்த எல்லா இளம்பெண்களையும் போலத்தான் சிட்டுக்குருவியாய் பல ஆசைகளை மனதில் தேக்கி வைத்துக் கொண்டு...கேலி பேசும் முறைமைக் கார இளைஞர்களிடம் வெடுக் வெடுக்கென வெட்டி வெட்டிப் பேசிக் கொண்டு .
ஒவ்வொரு தீபாவளி ...பொங்கல் ...சித்திரத் திருவிழாவுக்கும் விலை அதிகம் போட்டு புடவை வாங்கித் தராத அம்மாவிடம் சண்டை போட்டுக் கொண்டு .தன் வயதொத்த பெண்களுடன் "தாயமும் ...பல்லாங்குழியும் ஆடிக் கொண்டு "இஷ்டமிருந்தால் கத்தரிக்காய் பிடுங்கவும் ...களை எடுக்கவும் "பெரிய நாயக்கர் தோட்டம் போய் வர கையில் காசு கண்டதும் டவுனில் பாக்கிய ராஜ் படம் பார்க்க ஆட்களைச் சேர்த்துக் கொண்டு அப்பாவிடம் அனுமதிக்காய் ஒரு வாரம் முதற்கொண்டு நச்சரித்துக் கொண்டு ...
இப்படித்தான் ...
இப்படித்தான் வாழ்ந்திருந்தாள் முன்னேப்போதே நான் பிறக்கும் முன்பு !
இப்போது அவள் இல்லை ஆனால் ...!அவள் பெயர் இருக்கிறது அழியாத பொழிவோடு இன்னமும் !
ஜெயக்கொடி ஏன் செத்துப் போனால் ?
அதுவும் தூக்கில் தொங்கி ?
ஏதேதோ ...சொல்லிக் கொள்கிறார்கள் ;
அவள் கேட்ட"சுங்கிடிபுடவையை தீபாவளிக்கு அம்மா வாங்கித் தராததால்!"
"பக்கத்து வீட்டு பால கிருஷ்ணனை அவள் காதலித்தது வீட்டுக்குத் தெரிந்து பிரச்சினை ஆனதால்"
"எப்போதோ ஒருநாள் நல்ல தண்ணி எடுக்க தோப்புக் கிணற்றுக்கு போகையில் தோப்புக் கார இசக்கிமுத்துகையைப் பிடித்து இழுத்ததால்
"இப்படிப் பல காரணங்கள் சொல்லிக் கொள்கிறார்கள் ...
இப்போதும் சொல்லிக் கொண்டு தான் இருக்கிறார்கள் .
ஜெயக்கொடி ஏன் செத்துப் போனாள்...?
அவள் பேயாய் வந்து பிடித்துக் கொண்டு ஆட்டுவித்த யாவரும் சொன்ன காரணங்கள் தான் மேற்சொன்னன்வை அனைத்தும் .
அப்போது நம்பினேன் .
இப்போது ?!
சரி ஜெயக்கொடியை விடுங்கள் ;
கணபதி வாத்தியார் பற்றி நாளை சொல்கிறேனே !
தொடரும் ...