Wednesday, January 12, 2011

சர்மிஷ்டா (மிஸஸ்.யயாதி )

சர்மிஷ்டா (மிஸஸ் .யயாதி )

'சர்மிஷ்டா ' சிலருக்கு சில பெயர்களின் மீது காரணமற்ற பிரேமை ஏற்படக்கூடும்.அப்படி எனக்கிந்தப் பெயரின் மீது ரொம்ப இஷ்டம்.சிறுகதை எழுதத் தோன்றிய ஒவ்வொரு முறையும் இந்தப் பெயரை கதைக்குள் நுழைக்க முடியவில்லையே என யோசித்துக்கை விட்டிருக்கிறேன்.

முதல் முறை இந்தப் பெயரை நான் அறிந்து கொண்டது ஒரு டி.வி தொடரில் தான் . ராமாயணம் மகாபாரதம் தொடர்களை அடுத்து ஞாயிறு காலை பத்து மணிக்கு மகாபாரதத்தில் கிருஷ்ணராக நடித்து பிரபலமான நடிகரின் தயாரிப்பில் மீண்டுமொரு சரித்திரத் தொடர் ஒளி பரப்பாக ஆரம்பித்தது .தொடரின் பெயர் என்னவென்று ஞாபகமில்லை .
ஆனால் ;

அந்த தொடரில் மன்னன் "யயாதி" யாக நடித்த ராஜ் பப்பரையும் அவரது இரு மனைவிகளான தேவயானி மற்றும் சர்மிஷ்டா வையும் இன்னமும் மிகத் தெளிவாகவே ஞாபகமிருக்கிறது . சர்மிஷ்டா ... அன்றிலிருந்து இந்தப் பெயர் எனக்கு மிகப் பிடித்தமாகிப் போனது. பெரிய காரணங்கள் ஏதுமில்லை உச்சரிப்பின் உல்லாசம் எனக் கொள்ளலாம் ;தமிழில் சர்மிஷ்டா ஹிந்தியில் ஜர்மிஷ்டா என்று அந்தத் தொடரில் அவள் அழைக்கப் பட்டதாக நினைவு.

தொடரில் கதைப்படி இளவரசியான சர்மிஷ்டா தன தந்தை அவரது குருவான சுக்ராச்சாரியாருக்கு கொடுத்த வாக்கின் படி சுக்ராச்சாரியாரின் மகள் தேவயானிக்கு தாதியாக அனுப்பப் படுகிறாள். ஒரு ராஜகுமாரி தாதியாகிறாள் .அப்படியேனும் சர்மிஷ்டாவை இளப்பமாக்க நினைத்த அவளது பிராயத்து தோழி தேவயானியின் முயற்சி தோற்கிறது ...

காட்டுக்கு வந்த யயாதி மன்னன் தேவயானியை மணப்பதொடு சர்மிஷ்டாவையும் காந்தர்வ மணம் புரிந்து அவளோடும் வாழ்ந்து குழந்தை பெற்றுக் கொள்கிறான்.

தேவயானிக்கு யது ,துர்வாசா எனும் இரண்டு குழந்தைகளும் ,சர்மிஷ்டாவுக்கு புரூ உள்ளிட்ட மூன்று குழந்தைகளும் பிறக்கின்றன. தேவயானிக்கு எப்போதுமிருந்த வருத்தம் தன்னைக் காட்டிலும் யயாதிக்கு சர்மிஷ்டாவே மனதிற்குகந்தவள் எனும் பொறாமை .

இந்த 'புரூ ' தான் தன் தாயின் ஆணைப்படி தன் தந்தை யயாதிக்கு தன் இளமை அனைத்தையும் தத்தம் செய்து விட்டு வயோதிகத்தை மனமுவந்து ஏற்றுக் கொள்கிறான். (மிக சர்ச்சைகளைக் கிளப்பிய கதை இது)

இதெல்லாம் புராணக் கதைகள் ,இதல்ல சொல்ல விரும்பிய விஷயம்.

சர்மிஷ்டா இந்தப் பெயர் தமிழில் காணக் கிடைக்கவில்லை. என்.எஸ் மாதவன் எனும் மலையாள எழுத்தாளரின் சிறுகதை தொகுப்புக்கு சர்மிஷ்டா என்று பெயர் வைத்துள்ளதைப் பார்த்து ஆச்சர்யமாக இருந்தது .இதையும் சிதம்பர நினைவுகள்,சூர்ப்பனகை உள்ளிட்ட புத்தகங்களை மொழிபெயர்த்த ப்ரியத்துக்குகந்த கே.வி சைலஜா தான் மொழி பெயர்த்திருக்கிறார். இன்னும் தொகுப்பை வாங்கி வாசிக்கவில்லை நான் அதற்குள் சர்மிஷ்டாவைப் பற்றி பேச வேண்டும் போலிருந்ததால் இந்தப் பகிர்வு.

தெரிந்து கொள்ள விரும்பியது இந்த சர்மிஷ்டா இலக்கிய உலகில் எதனால் முக்கியத்துவம் பெறுகிறாள்?

பெருமைக்குரிய ராஜகுமாரியாக இருந்தும் தந்தை சொல் ஏற்று குருவின் புதல்விக்கு தாதியானதாலா?

அல்லது

தன் கணவனுக்காக மகனின் இளமையை தத்தம் செய்து தரப் பணித்ததாலா?

எதனால் இவள் முக்கியத்துவம் பெறுகிறாள் ? இரண்டுமே ஏற்புடைய செயல்கள் அல்லவென்றே நினைக்கத் தோன்றுகிறது.