பாகப் பிரிவினைக்குப் பின் பாட்டி வீடு மாமா வசமானது.வீட்டுக்குள் நான் சுயமாய் ஓடித் திரிந்து எனக்கே எனக்கென்று ஆண்டு கொண்டிருந்த இடங்களுள்ள அறைகளெல்லாம் அத்தைகளைப் போலவே அன்னியப் பட்டுப் போயின.
வெகு முக்கியமாய் அந்த படுக்கை அறை கதவு மூலை...அங்கமர்ந்து தான் நான் பல ஆண்டுகள் பரீட்சைக்குப் படித்தேன் ,கதவில் சாய்ந்து அமர்ந்து கொண்டு முன்புற டெலிபோன் ஸ்டாண்ட் தாங்கி நுனியை காலால் இடறிக் கொண்டே எத்தனை மணி நேரங்கள் படித்தாலும் அலுக்கவே அலுக்காது.அங்கு இப்போது இத்தனை காலியாய் இடத்தை விட்டு வைப்பானேன் என்று பித்தளை அண்டாவில் இண்டோர் பிளான்ட் வைத்திருக்கிறாள் அத்தை.
இன்னும் ஓரிடம் மச்சு அறை .அங்கமர்ந்து தான் செவ்வாய்க் கிழமை விரத நாட்களில் கொழுக்கட்டை சாப்பிடுவதெல்லாம் நடக்கும்.காலங்காலையில் பல்லைக் கூட தேய்த்துக் கொள்ளாமல் நானும் தங்கையும் உட்கார்ந்து உப்பில்லாத கொழுக்கட்டையும் தேங்காய் சில்லும் கடித்து ருசித்த இடம் இன்று மாமாவின் மகள் ஜெயந்தியின் டிரெஸ்ஸிங் டேபிள் வைத்த இடமாயிற்று.
திண்ணைகள் இல்லை இடித்து மேடாக்கி போர்டிகோ என்றாக்கி உள்ளிருப்பவர்கள் தெருவில் போவோருக்குத் தெரியா வண்ணம் ஆளுயர கேட் போட்டு மூடி விட்டார்கள்.பாட்டி இருக்கையில் தெரு பாட்டிகள் எல்லோருமே சாயந்திர ஜமாக் கூடும் இரு புறத்திண்ணைகள் பழங்கனவாயின.நின்று கொண்டே ஆட்டும் வகையில் இருந்த பெரிய ஒற்றைக் கல் ஆட்டுரல் இப்போது பாவம் மாமா வீட்டு வேலைக்காரப் பெண்ணுக்கு துவைக்கும் கல் மேடை ஆயிற்று.
"வேறென்ன தான் செய்வதாம் அதை வைத்துக் கொண்டு ...?!"
கிரகப்பிரவேசத்துக்கு போயிருக்கையில் அத்தை அம்மாவிடம் அலுத்துக் கொண்டாளாம்.
பூஜை அறையில் எல்லா சாமிப்படங்களும் இருந்தன.தாத்தா தீவிர வைஷ்ணவர்,திருநீறு பூசினவர்களைக் கண்டால் பேச்சின்றி கண் சிமிட்டிக் கொண்டு எள்ளலாய் சிரிப்பார்.அவரது பெரிய சைஸ் புகைப்படம் சிவபெருமானுக்கும் ஏழுமலையானுக்கும் நடுவில் மாட்டப் பட்டிருந்தது.தாத்தா இப்போதும் சிரித்துக் கொண்டு தான் இருந்தார் வரையப்பட்ட படத்தில் இருந்தவாறு!
ஓவியம் படித்துக் கொண்டிருந்த சின்ன மாமாவின் ஓவியப் புத்தகம் பார்த்து பாட்டி வீட்டு கூடத்து சுவற்றில் நான் வெறும் வண்ண சாக்பீசால் வரைந்து வைத்திருந்த விளக்கேந்திய காரிகை ஏழெட்டு வருடங்களுக்குப் பின் இப்போது காணாமல் போயிருந்தாள்.இத்தனைக்கும் பாட்டி இறந்து மூன்று மாதங்கள் கடக்கவில்லை.பாவம் விளக்கேற்றிய பெண் பாட்டியைக் காணாமல் தவிக்கக் கூடாதென எண்ணி அவள் மேல் டிஸ்டம்பர் பூசி மறைத்து விட்டார்கள் போலும்!
தலைமுறை தலைமுறையாய் திருவிழாக் காலங்களில் முறுக்கு சுட்டு அடுக்கி வைத்த ஒரு வெண்கலப் பானை கல்யாணமாகிப் போகையில் உனக்கு கொடுத்து விட வேண்டும் என்று பாட்டி அவ்வப்போது சொல்லிக் கொண்டே இருந்த அதே வெண்கலப் பானை இன்று இரண்டு எவர் சில்வர் அண்டாக்களாகவும் ஒரு பெரிய சில்வர் சம்புடமாகவும் அத்தையின் சமையலறை பரணில்.
ஆயிரம் மனஸ்தாபங்கள் வரினும் இணைக்கவென்று இருந்த ஒரு நூற்கண்டு அறுந்ததில் பாட்டி வீடெனும் பட்டுச் சேலையின் எல்லா நூல்களும் திசைக்கொன்றாய் முகம் திருப்பிக் கொள்ள போலிச் சிரிப்புகளாலும் மூடி வைக்கத் தெரிந்த பொறாமைகளாலும் சிக்குண்டு வலுவிழந்த நூலிணைப்புகள் ஒவ்வொன்றாய் பிடி நழுவின...
இந்த வீடு மட்டுமல்ல ...
இந்த ஊர் மட்டுமல்ல ...
இன்னும் சிலவும் ...இன்னும்...சிலவும் கூட அந்நியப்பட்டுக் கொண்டே இருக்கின்றனவாம் எங்கெங்கோ எவ்வெப்போதோ!