Tuesday, August 4, 2009

கண்மணி குணசேகரனின் "வெள்ளெருக்கு" அருமையான சரக்கு .

சில மாதங்களுக்கு முன் எழுத்தாளர் பாராவின் பக்கங்களில் "கண்மணி குணசேகரனின் "படைப்புகள் புத்தகத் திருவிழாவில் வாங்கத் தகுந்தவை எனப் பரிந்துரைக்கப் பட்டிருந்தன.வாங்கி வாசிக்க வேண்டும் என நினைத்துக் கொண்டே இருந்தேன் ,ஆனால் அப்போது கிடைக்கவில்லை.

சென்ற மாதம் அவரது "வெள்ளெருக்கு சிறுகதைத் தொகுதி " என் கைக்கு கிடைத்தது. அடடா...!வாசித்த அத்தனை சிறுகதைகளுமே அருமை.வட்டார வழக்கில் கொஞ்சமும் காம்ப்ரமைஸ் செய்து கொள்ளாமல் அங்கத்திய மக்களின் வாழ்வை அப்படியே கண்முன் காட்சியை விரிய வைப்பதைப் போன்ற அசாத்தியமான எழுத்து நடை .வாசித்து முடித்ததும் எப்படி இப்படி ஒரு எழுத்தை இத்தனை நாட்கள் தவற விட்டோம்?! எனும் எண்ணமே மேலோங்கியது .

மொத்தம் 14 சிறுகதைகள் ;


  1. கொடி பாதை

  2. ஆணிகளின் கதை

  3. சமாதானக் கறி

  4. புள்ளிப்பொட்டை

  5. கிக்குலிஞ்சான்

  6. மழிப்பு

  7. ஏவல்

  8. வலை

  9. ராக்காலம்

  10. ஆண்

  11. வனாந்திரம்

  12. சீவனம்

  13. வெள்ளெருக்கு

  14. வண்ணம


1. கொடிபாதை :-



முக்கித் திணறும் ஒரு பேருந்தும் அதில் மூச்சு விடத் தவிக்கும் பயணிகளுமாய் இந்தச் சிறுகதையை வாசித்து நிமிர்கையில் நாமும் ஒரு பட்டிக்காட்டுப் பேருந்தின் சக பயணியாய் ...அப்பாடா...ஒரு வழியாய் இறங்க வேண்டிய நிறுத்தம் வந்து விட்டது என உணரும் ஆசுவாசம் மனதில் எழாமல் இல்லை. அத்தனை இடைஞ்சலும் அப்பிக் கொண்ட நெரிசலுமாய் பேருந்தே பிரசவிக்கப் போகிற பெண் போல இக்கதையில் சித்தரிக்கப் பட்டிருப்பது செறிவு.அப்படிப் பட்ட ஒரு பேருந்தில் நிறைமாத கர்ப்பிணி ஒருத்தி பிரசவ வலி எடுத்து மருத்துவமனை செல்ல பயணிக்கிறாள் என்றால் ...அந்தச் சூழலில் அவ்விடத்தில் என்னவெல்லாம் சம்பாசனைகள் நிகழும் ,அந்தப் பெண்ணின் வேதனை எத்தகையது ? கடைசியில் அவள் நல்லபடியாக பெற்றுப் பிழைத்தாளா? எனும் வினாவுக்கு விடையே இக்கதை. அந்த கர்ப்பிணியை நினைத்து வாசகர்களுக்கு தோன்றும் கவலை கூட ௨ ௨ கடைசி வரிகளில் மறக்கடிக்கப் படுவதே இக்கதையின் வெற்றி. இங்கே ...இன்னின்ன விஷயங்கள் இப்படித் தான் நடக்கும் என வரையறுக்கப் பட்ட தன்மை அதற்க்கு மேல் புரட்சிகரமான எவ்வித நினைப்பையும் வாசகர்களுக்கு ஏற்படாமல் தடுத்துக் கொண்டே செல்வது இதம் .



ஆணிகளின் கதை :-

வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் வாழ்வியல் பிரச்சினைகள் வாழும் வரை மட்டும் தான் என இல்லாமல். இறந்த பின்னும் தொடரும் இன்னல்களை இப்படி ஒரு புனைவாக தர முடியுமா என ஆச்சரியப் படுத்தும் கதை இது. ஊர்நாட்டுப் புறத்தில் ஒரு வழக்கம் தொன்று தொட்டு உண்டு. பேய் (நம்பிக்கை இருப்பவர்கள் நம்புவார்கள் போல?!) பிடித்தவர்களிடமிருந்து பேயை ஓட்ட கோடாங்கியை அழைத்து பின்னிரவில் உடுக்கை சத்தம் காதைப் பிளக்க திருநீறு அடித்து ஆணோ பெண்ணோ அவர்களின் தலை முடியை ஆலமரத்தின் பட்டையோடு சேர்த்து ஆணி அடித்து பேயை அந்த ஆணியில் சிறை வைத்து விட்டு வருவார்கள்!!! அந்த ஆணி மழுங்கி உதிரும் வரை அந்தப் பேய் அதில் சிறை இருக்கும் என்பது (மூட) நம்பிக்கை .அந்த நம்பிக்கையில் பின்னப் பட்ட கதை இது.பேய்களிலும் ஆண் பேய்..பெண் பேய் மீது மோகம் கொண்டு இம்சிக்கும் என்பது இக்கதையில் புதுமை. ஆக மொத்தத்தில் அகால மரணமடைந்து ஆயுள் முடியும் முன் இறக்கும் ஆணோ பெண்ணோ அவர்களது பிரச்சினைகள் செத்தும் ஆணிகளில் அடித்து அடக்கப் பட்ட பின்னரும் தொடரும் என்பது ஆச்சரியமான கற்பனை தான்!

சமாதானக்கறி :-

குறவர் சமூகத்தில் தாய் மாமனுக்கு தன் மருமகள்களின் மேலிருக்கும் அநியாய அதிகாரத்தை எள்ளி நகையாடும் கதையே சமாதானக் கறி .சிட்டுவுக்கும் சிட்டானுக்கும் கல்யாணம் நடக்கிறது . சிட்டுவின் தாய்மாமன் சின்னக் காத்தானுக்கோ ஓரம் சாரமாய் தன தள தள மருமகள் மீது தகிக்கும் காமம். அக்கா மகள் தான்...தூக்கி வளர்த்த பெண் தான் ஆனாலும் அடங்காத ஆசை எட்டி எட்டிப் பார்க்க கல்யாணத்தின் பின் சாந்தி முகூர்த்தம் நடக்க விடாமல் சின்னக் காத்தானும் அவனது கூட்டாளிகளும் சிட்டு வீட்டில் தகராறு செய்கிறார்கள் .சின்னக்காத்தான் தாய்மாமனுக்கு சீர் முறைமைகள் சரியாகச் செய்யவில்லை,இப்போது கூட நான் சிட்டுவைத் தூக்கிக் கொண்டு போய் என் மனைவியாக்கிக் கொள்ளுவேன் ,அது தாய்மாமனான தனக்கான உரிமை என்கிறான்.அவனை சமாதானப் படுத்த மறுபடி அவனுக்கு தாய்மாமன் சீர் செய்கிறார்கள் ,குறவர் சீர் செய்யும் முறைகள் இக்கதையில் சுவாரஸ்யமான பகுதி, சதைப் பிடிப்பான வளப்பமான பன்றிக் கறி(கோழியும் ஆடும் வெட்டினால் தாய்மாமன் ஏற்றுக் கொள்ள மாட்டான்...பன்றி தான் இங்கே அதி முக்கியம் ) அதிலும் எலும்பில்லாத கறியை அள்ளி அள்ளி திகட்டும் வரைக்கும் தாய்மாமனுக்கு இலையில் போட்டுக் கொண்டே இருக்க வேண்டும் அவனுக்காய் அழுக்கும் வரை,கூடவே தலை நிமிர முடியாதவாறு போதையில் திளைக்க வைக்கும் கள்ளு மொண்டு மொண்டு ஊற்ற வேண்டும் .கடைசியாக தாய்மாமன் மனம் குளிரும் வண்ணம் கொஞ்சம் ரொக்கப் பணம் ,இதில் அவன் மனம் சமாதானமானால் தான் கல்யாணமான பெண் தன கணவனிடம் முழுதாகப் போய்ச் சேர முடியும் ,இல்லையேல் அவளை தாய்மாமன் தூக்கிக் கொண்டு போய் தன் வீட்டில் வைத்து குடும்பம் நடத்தலாமாம்,இதுவே அவர்தம் சமூகத்து நீதி. சமாதானக்கறி கதைக்குத் தோதான தலைப்பு தான் இல்லையா பின்னே?! சிட்டு சின்னக்காத்தானிடம் இருந்து தப்பினாலா? சிட்டானுடன் வாழ்ந்தாளா? கதையை படித்து தெரிந்து கொள்ளலாம்.



புள்ளிப்பொட்டை :-

ஊர் ஊராகப் போய் பாத்திரங்களுக்கு ஈயம் பூசிக் கொண்டு ஜீவிக்கும் ஒரு எளிய தம்பதிகள்,பிள்ளைகள் மனைவியின் தாய் வீட்டில் வளர ஏக்கங்களை சுமந்து கொண்டு திரியும் வறுமை . பிள்ளைகள் உடன் இல்லா தனிமைக்கு நொந்து போய் ஆசை ஆசையாய் உடலெல்லாம் புள்ளிகள் கொண்ட ஒரு சாம்பல் நிற கோழிக் குஞ்சை விலைக்கு வாங்கி வளர்க்கிறாள்,அந்தக் கோழிக் குஞ்சு வளர வளர இவர்களின் இடப் பெயர்வுகளின் போது அது மற்ற சேவல்களிடம் மாட்டிக் கொண்டு படும் இன்னல்களை ஒரு கோழியின் நிலையில் இருந்து யோசிப்பதைப் போல கதை நகர்கிறது. பல சேவல்களால் துரத்தப் படும் புள்ளிப்பொட்டை தானாக விரும்பி ஏற்பது உச்சியில் சிவப்புக் கொண்டை கொண்ட ஒரு பளீர் வெண்ணிறச் சேவலை (கோழிக் காதல் ...!!! )பறவைகளும் மிருகங்களும் இனப் பெருக்கத்திற்காக மட்டுமே கூடும் எனும் வாதத்தை இக்கதை உடைப்பதைப் போல இல்லை?! கொழிக்கும் காதல் உண்டு தான் போல?! சரி மீதிக் கதையை தொடர்வோம்...எப்போதும் ஜன சந்தடியில் ஒன்று சேவல்கள் அல்லது மந்தையில் பந்து விளையாட வரும் சிறுவர்கள் அப்புறம் தன்னை வளர்க்கும் தம்பதிகள் இவர்களால் ஏதேனும் ஒரு காரணத்திற்காக விரட்டப் படும் புள்ளிப்பொட்டை சூல் கொண்டு ஒரு முட்டை அதிலும் முதல் முட்டை இடப் படும் பாட்டை சித்தரித்திருக்கும் வரிகள் அருமை. அதை வளர்க்கும் அந்தப் பெண் அது முட்டையிட்ட பின் கண்களில் நீர் தழும்ப தன் மகளை நினைத்துக் கொள்கிறாள். ஓரிடத்தில் நிலையாமல் நகர்ந்து கொண்டே இருக்கும் தங்களது வாழ்க்கை முறையில் எப்படி வயது வந்த தங்கள் மகளை அழைத்துக் கொண்டு திரிவது? புள்ளிப்பொட்டை கதி தானே அவளுக்கும்? என அவள் புலம்பும் போது நிஜமே என ஒத்துக் கொள்ளத் தான் தோன்றுகிறது.



கிக்குலிஞ்சான்: -

கவுதாரிகளை நம்பி சாமான்ய ஜீவனம் நடத்தும் ஒரு வயதான மனிதனின் கதை ,கவுதாரிகளை வைத்தே கவுதாரிகளை பொறி வைத்துப் பிடிக்கும் கலை கற்ற அந்த கிழவன் தன் வாரிசுகளை நம்புவதை விடவும் தான் வளர்த்த கவுதாரிகளை நம்புகிறான் தன் ஜீவனத்திற்கு ,இவனது வைராக்கியம் பிடிக்காத மகனும் மகளும் அவர்களது குத்தல் பேச்சுகளும் அவமதிப்புகளும் தொடர கிழவன் கவுதாரிகளை
வேட்டையாடி உப்பும் மிளகாய்த் தூளும் தூவி திகட்டத் திகட்ட தின்கிறான் சில காலம்,பிறகு கள்ளுக் குடித்த போதையில் அவனுக்கு கீழே விழுந்து முதுகுத் தண்டு ஓடிய நடமாட முடியாமல் கட்டிலில் சீல் பிடித்த புண்களுடன் அல்லாடுகிறான்...அப்போதும் அவனது கட்டிலுக்கு மேலே கூண்டில் "கிக்குலிஞ்சான்...கிக்குலிஞ்சான் என பழக்கி வைத்த தொனியில் கத்திக் கத்தி சண்டையிடும் தன் வளர்ப்புக் கவுதாரிகளைக் கண்டு துன்பம் மேலிட அவனது கண்களில் நீர் வழிந்து ஓடுகிறது .கவுதாரிகளையும் கிழவனையும் கொண்டு நகரும் இக்கதையும் அருமை .

மழிப்பு :-

முன்பெல்லாம் கிராமத்து நடைமுறை என்னவெனில் ஊர்ப் பொது நாவிதர்
மற்றும் சலவைத் தொழிலாளிகளுக்கு தினம் வேலைக்கு கூலி தருவதில்லை வருடக் கூலி தான்...இத்தனை மூட்டை நெல் இத்தனை படி கம்பு ..அல்லது சோளம் என அளப்பார்கள். இதை வாங்கிக் கொண்டு வருடம் முழுக்கவும் அவர்கள் தினம் உழைப்பார்கள், இதனால் அவர்களது வறுமை எப்போதும் அன்று தீர்ந்ததே இல்லை. அப்படிப் பட்ட நாவிதன் ஒருவனை கதை நாயகனாகக் கொண்ட இக்கதை நச் சென்று நடுமண்டையில் அடிப்பதைப் போல வலிமையான வரிகளோடு நகர்கிறது, நாவிதனின் தயவு ஊர்க் காரர்களுக்கு வேண்டும் இல்லையேல் சிரைக்காத தாடியும் மீசையும் கோரையாய் வளர்ந்து முரடாகிப் போக சீக்காளி போன்ற தோற்றம் வரும். கல்யாணம் ..காட்சி என்று வெளியிடங்களுக்குப் போக இயலாது. நாவிதனுக்கோ வருடத்திற்கு ஒருமுறை அளக்கும் நெல்லும் கம்பும் கூட ஊர்க்காரர்கள் வெள்ளாமை சரியில்லை ...பயிர் நஷ்டம்,கடன் என தள்ளிப் போட்டதில் தன் வயிறு காயும் கோபம் ...கூடவே அந்த வட்டார மக்களுக்கு சோற்றை விட முக்கியமாகிப் போன கள்ளு கிடைக்காத ஆத்திரம் ,இத்தனையும் சேர்ந்து கொள்ள தன் ஊர்க்காரர்கள் முடிவெட்டிக் கொள்ள வந்தால் நாளை...நாளை என தவிர்த்துக் கொண்டே போகிறான்,தாங்க முடியாத சிகை வளர்ச்சியில் நொந்து போனவன் ஒருவன் வேலை மெனக்கெட்டு நாவிதனுக்கு கள்ளு வாங்கித் தந்தாவது முடி வெட்டிக் கொள்ள முனைகிறான் .சுள்ளென்று சரக்கு உள்ளே போனதும் நாவிதன் போதை ஏறி தனக்கு கூலி தராமல் வஞ்சிக்கும் முதலாளிமார்களையும் ...ஊர் ஜனங்களையும் திட்டித் தீர்க்கும் கடைசிவரிகள் யதார்த்த நிஜங்கள் .வாசித்துப் பாருங்கள் புரியும்.

புத்தகம் - வெள்ளெருக்கு
எழுத்தாளர் -கண்மணி குணசேகரன்
பதிப்பகம்- தமிழினி
விலை- ரூபாய் 90

தொடரும் ...

நானிருப்பது ஈழத்திலோ ?!

திடுக் திடுக்
திருப்பங்களில்
தடக் தடக்கென
தட தடக்கும் இதயங்களுக்குச்
சொந்தக்காரர்களாகிப் போனதால்
இலை அசையும் போதெலாம்
இடி இடிக்கக் கூடுமெனும்
அனுமானம் தீர்மானமாய்
மிஞ்சிப் போன
பயக் காடுகளாயின
எம் நாடாயின காடு .
கூடுகள் எங்கே ???!!!
எம் வீடுகள் எங்கே ???!!!
நானிருப்பது ஈழத்திலோ ?!

சிரிக்கும் தலையணைகள்








தலையணை சிரிக்குமோ?!


தலையணை சிரிக்குமோ?!

வெடித்துச் சிதறியும்

கசிந்து உருகியும்

மௌனச் சிதறல்களாய்

புதைந்து போன

பல துக்கங்களால்

தினம் நனைந்து

தினம் உலர்ந்து

துவண்டு சருகாகி

கசங்கி நசிந்த

தலையணை ஒன்று

கண்ணீர்க் கோடுகளை

வெறுக்கத் துவங்கிய

சிலநாட்களின் பின்

ஏதேனும் ஒருநாளில்

துள்ளத் துடிக்க

கை கால் அசைத்திடும்

சின்னஞ்ச்சிறு

தளிரின் அசைவுகளுக்கு

நழுவாமல் அண்டக் கொடுக்கையில்

குலுங்கிச் சிரிக்கலாம் ...!

தலையணை சிரிக்குமோ?!