Tuesday, March 31, 2009

பால் நிலா ...பானையில் உருகி வழியும் நிலா
ஒரு சிறுகதையில் வாசித்தேன் ...


நல்ல நிறை பௌர்ணமியில் ஒரு வனக் குடியிருப்பின் அருகில் ஒரு அழகான ஓடை ...ஓடை நிறைய பளிங்கு போன்ற தெளிந்த நீர் ...நீருக்குள் வட்ட வெள்ளித் தட்டாய் வெள்ளி அப்பளம் போல அழகான தண்ணிலா...;ஒரு காட்டுவாசிப் பெண் செப்புக் குடத்தை எடுத்துக் கொண்டு அந்த ஓடைக்கு நீர் மொண்டு கொண்டு போக வருகிறாள் ;நீரில் நிலா ...


நிலவின் பிம்பம் களையக் களைய நீரை குடத்தில் அள்ளியதும் ஓடை நிலா குடத்தில் டாலடிக்கிறது .அடுத்து இன்னொரு பெண் ஓடையில் நீர் எடுக்க வருகிறாள் குடத்தோடு ...இப்போது அவளது குடத்திலும் நிலா .


குனிந்து பார்த்தால் ஓடையிலும் நிலா ...


இந்தப் பெண்கள் கையில் ஏந்தி நிற்கும் குடங்களிலும் நிலாக்கள்


அப்போது இன்னொரு பெண் அங்கே வருகிறாள் ...


குடிக்கக் கொஞ்சம் நீர் கேட்கிறாள் ...குடத்தில் இருந்த நீரை அந்த காட்டுவாசிப் பெண் சரித்து ஊற்ற இவள் குனிந்து இருகை குவித்து நீரை கீழே வழியாமல் ஏந்தும் போது அவளது குவித்த கைகளுக்கிடையில் நிலா நெளிந்து ..நெளிந்து ஊசலாடுகிறது.


அப்படியானால் இவள் நிலவைக் குடித்தவள் ஆகிராளோ?!


இவள் குடித்து முடித்த பின்னும் வானில் நிலா ...


ஓடையிலும் நிலா...


அந்த பெண்கள் இடுப்பில் தூக்கிச் செல்லும் குடங்களிலும் நிலாக்கள் .


ஆக மொத்தம் எத்தனை நிலாக்கள் ?


எத்தனை அழகான கற்பனை பாருங்கள் ?!


தாகத்திற்கு நீரை அருந்தி முடித்த பின் வானை நிமிர்ந்து பார்க்கும் அந்தப் பெண் தன்னுள் சொல்லிக் கொள்கிறாள்...


"நிலவை மிச்சம் வைத்தவள் நான் "என்று .


இந்த நிலா கற்பனை "அம்பையின் காட்டில் ஒரு மான் தொகுப்பில் "அடவி " எனும் சிறுகதையில் "வாசிக்கக் கிடைத்தது.

அம்பையின் சிறுகதை தொகுப்பில் "அடவி ...மரங்கொத்தியின் நுணுக்கத்துடன் ஒரு பார்வை"


விலை - ரூபாய் 80
வெளியீடு - காலச்சுவடு பதிப்பகம்
ஏற்கனவே போன பதிவில் சொன்ன சேதி தான் ,அம்பையின் காட்டில் ஒரு மான் சிறுகதை தொகுப்பை வாசித்தேன் என்றேனில்லையா? அதில் ஏழெட்டு சிறுகதைகள் இருந்தன அவற்றுள் "அடவி " என்றொரு சிறுகதை .நான் மிக ரசித்துப் படித்தது .

வனத்தின் மீது ஆசை கொண்ட பெண் செந்திரு அவளது கணவன் திருமலை ,தொழில் அதிபரான கணவன் ...புத்திசாலி மனைவி ,ஆசைக்கு ஒன்று ..ஆஸ்திக்கு ஒன்று என இரண்டு அருமையான குழந்தைகள் ,பணப் பற்றாக்குறை அற்ற நிலை இப்படியாக பொருளாதார கவலைகள் அற்ற நல்ல வாழ்க்கை என்று தானே தோன்றும் நமக்கு இவர்களைப் பற்றி வாசிக்கையில் .

ஆனால் இக்கதையில் செந்திரு கணவனிடம் கோபித்துக் கொண்டு அல்லது கருத்து வேறுபாடு கொண்டு தனியே வனத்தை நோக்கிச்செல்கிறாள் ,வனத்திற்குப் போகிறாள் என்றதும் தனியே கால் நடையாய் என்றெல்லாம் அதீத கற்பனைகள் தேவை இல்லை .கணவனின் இளைய சகோதரன் காரில் கொண்டு போய் விட்டு விட்டு வருகிறான் செந்திருவை காட்டில் இருக்கும் அரசு விருந்தினர் மாளிகையில்.

அங்கே செந்திரு தனது கடந்த காலத்தை வனத்துடனும் ...ராமனின் இல்லை ...இல்லை சீதையின் கதையுடனும் கலந்து மீண்டும் நினைவு படுத்திக் கொண்டு தனக்கான சுய தேடலில் மூழ்குகிறாள். கொஞ்சம் செந்திருவின் கதை ...நடுநடுவே சீதையே நேரடியாகச் சொல்வதைப் போல அவளது வாழ்வியல் நிகழ்வுகள் இடையில் அந்தக் காட்டில் இருக்கும் குடியிருப்பில் வசிக்கும் சவிதா பாயி,துர்கா பாயி,சந்திரா பாயி போன்ற சாமானியப் பெண்களுடனான அர்த்தமுள்ள அரட்டை ,இப்படி சுமூகமாக சம்பவங்களை விரித்துக் கொண்டு போகிறார் அம்பை.

சும்மா வீம்புக்கு அம்பையின் எழுத்துக்களில் பெண்ணிய வாடை தூக்கலாக இருக்கிறது என்று சொல்லிக் கொள்கிறார்களோ என்று தான் தோன்றுகிறது,அவர் முன் வைக்கும் கேள்விகள் எல்லாமே படு "நச் மற்றும் நறுக் "வகை . குறிப்பாக ராமாயணக் கதை ...ராமனை நாம் இங்கு வெகு சிறப்பாகத் தான் கொண்டாடுகிறோம் ,சீதையையும் தான்...லட்சுமணன் ...ஹனுமான் ...ஜாம்பவான் எல்லோரையுமே கொண்டாடுகிறோம் தான் ...ராமனின் அளவுக்கு என்றில்லா விட்டாலும் கூட சீதை இந்த உலகத்தின் அன்னையாகத் தான் ஹிந்துக்களால் போற்றப் படுகிறாள் .

இந்தச் சிறுகதை வாசித்ததும் சட்டென்று மனதில் உதித்த மற்றும் ஒரு எண்ணம் "வால்மீகி ராமாயணம் வேறு தளம் ...கம்ப ராமாயணம் வேறு தளம் " என்ற மகாப் பெரிய உண்மை . சீதையை ராவணன் கடத்திச் செல்வதாக கம்பர் சொல்லும் இடங்கள் மிக மிக நாகரீகம் ...பண்பான வர்ணனை என்று நாம் கருதும் அந்த ஓரிடத்தை மட்டும் கருத்தில் கொண்டு நான் இதைச் சொல்லவில்லை .கம்ப ராமாயணத்தில் காணக் கிடைக்காத பல முரண்பாடுகள் ஒருவேளை வால்மீகி ராமாயணத்தில் காணக் கிடைக்கலாம் .

செந்திருவுக்கு கணவன் தன்னை தொழிலில் பாகஸ்தியாக சேர்த்துக் கொள்ளவில்லையே என்ற ஆதங்கம் ...மன உளைச்சல் வாழ்வின் மீதான வெறுப்பாக மாறி வனத்தின் நிசப்தத்தின் நடுவில் தன்னை தான் அறிய நடக்க ஆரம்பிக்கிறாள் . அவளது நடை அவளோடு கூடவே நம்மையும் அழைத்துச் செல்கிறது ,அவளோடு நாமும் வானம் முழுக்க அவள் செல்லும் இடங்களுக்கெல்லாம் நடக்கிறோம் காலின் அசதியே தோன்றாமல் .

செந்திருவின் பால்ய வயது ,அவள் மும்பையில் பெரியம்மா வீட்டில் திருமலையைக் கண்டு காதல் கொள்வது ,இந்தக் காதலை கண்டு கொள்ளாமல் இருக்கும் தன் தந்தையிடம் ஒன்றிற்கு இரு முறை சாதாரணமாகவே போகும் போக்கில் இது திருமணத்தில் முடிய வேண்டிய பந்தம் என உணர்த்தும் திண்மை ,கணவனிடம் காட்டை விட்டு வரமாட்டேன் என நடத்தும் வாக்கு வாதங்கள் ,கூடவே தன் பிள்ளைகள் மற்றும் உறவுகளைப் பற்றிய நினைவுகள் இவற்றை எல்லாம் கணக்கில் கொண்டு பார்த்தால் செந்திரு ஒரு தன்னிச்சையான மனுஷியாகத் தான் தெரிகிறாள் .

அவள் தனக்கான முடிவுகளை எப்போதும் தானே எடுத்துக் கொள்கிறாள்,மற்றவர்களை பொருட்படுத்துவதில்லை ,அது தந்தையோ அல்லது கணவனோ ஆனாலும் சரி .அவளது முடிவுகளை அவளே எடுக்கிறாள்.திருமலை மீதான காதல் ஆகட்டும்...மன பேதம் கொண்டு வனத்திற்கு போதல் ஆகட்டும் செந்திரு வியப்பளிக்கக் கூடும் பலருக்கு ;
இந்த சிறுகதையில் செந்திரு தன் நினைவுகளாக பகிந்து கொள்ளும் சில விசயங்களும் வியப்பளிக்கவே செய்கின்றன, உதாரணமாக காட்டில் லட்சுமணன் மீது மோகம் கொண்ட சூர்ப்பனகை மூக்கறுத்து அவமானப் படுத்தப் பட்டது மட்டுமே நமக்கு கம்பராமாயணத்தில் படிக்கக் கிடைக்கிறது.

இந்திரகாமினி எனும் கந்தர்வப் பெண் லட்சுமணன் மீது மோகம் கொண்டு அவனை நெருங்குகையில் அவளை அவன் உதாசீனப் படுத்தவே ஆசை நிறைவேறா கோபத்தில் அவளொரு சூழ்ச்சி செய்தாளாம், லட்சுமனனி படுக்கையில் அன்றிரவு சில உடைந்த வளையல்கள் மலர்களைப் போட்டு வைத்து விட்டு மறைந்து விட்டாளாம். இதற்க்கு ராமன் என்ன செய்தான் தெரியுமா?

லட்சுமனனின் அறையை கூட்டிப் பெருக்கி சுத்தமாக்க அங்கே சென்ற சீதை இதைக் கண்டு வந்து ராமனிடம் புறம் சொல்ல , ராமன் விடிந்ததும் அந்த வளையல்கள் யாருடையவை எனக் கண்டு பிடிக்க அந்தக் காட்டில் வசித்த எல்லாப் பெண்களின் வளையல் அளவுகளையும் வாங்கி சோதித்துப் பார்த்தானாம்!?

புறம் சொல்லுதல் பெண்களின் பொதுத் தவறு என்று சொல்ல வருகிறாரோ அம்பை?! ஆனாலும் சீதை புறம் சொன்னால் என்ற வரிகள் எனக்குப் புதியவை.கூடவே அந்த வளையல்கள் காட்டுவாசிப் பெண்கள் எவருக்கும் பொருந்தாமல் சீதியின் வளையல்குடன் பொருந்துகிறது என கண்டுபிடிக்கப் பட்டதாக கூறும் போது ராமனின் சஞ்சல சந்தேக புத்தி விளக்கப் படுகிறது எனலாம்.

லட்சுமணன் ஒன்றும் உத்தமன் இல்லை எனும் ராமனின் வாக்கு நிச்சயம் கம்ப ராமாயணத்தில் காண முடியாதென்று தான் நினைக்கிறேன்,,ஒருவேளை வடமொழி ராமாயணத்தில் இருக்கக் கூடுமோ என்னவோ? ராமன் இங்கே
சஞ்சல ராமன் இல்லை ..அவன் கோதண்டராமனாக..ஜானகி ராமனாக ..."ஒருவனுக்கு ஒருத்தி எனும் "கோட்ப்பாட்டை நிலை நிறுத்த வந்த அற்புத அவதார கடவுள் என்றல்லவா துதிக்கப் படுகிறான்.ஏனிந்த முரண்பாடு?கம்பருக்கும்..வால்மீகிக்கும்?

செந்திரு எனும் பெண்ணின் மன ஓட்டத்தில் அவள் எண்ணிப் பார்ப்பதாக கதை அமைவதால் சும்மா கற்பனை என்று ஒதுக்கி விடக் கூடும் தான்! "வித்யா சுப்ரமண்யத்தின் ஒரு நாவலில் கூட அம்பையின் இந்த அடவி சிறுகதையை ஒத்த வரிகளை வாசித்த ஞாபகம் நெருடியதால் இதைப் பதியத் தோன்றியது.

எது ராமாயணம்?

புராணமே ஒரு கற்பனை என்றால் சேது பாலம் விசயத்தில் ஏன் இத்தனை ஆர்ப்பாட்ட எதிர்ப்புகள்?

ராமாயணம் உண்மை என்றால் எந்த ராமாயணம் உண்மை? வால்மீகியின் மூல நூலே உண்மை என்றால் கம்பர் கூறும் ராமாயணம் என்ன சொல்ல வருகிறது? இப்படிச் சில குழப்பங்களை மேலெழுகின்றன .

ஆக மொத்தத்தில் இது அம்பையின் எழுத்துக்கு கிடைத்த மகாப் பெரிய வெற்றியே.வாசிப்பவர்களை யோசிக்க வைத்தல்...பின் தெளிய வைத்தல் எனும் நிலையே நல்ல எழுத்துக்கு அழகாக இருக்கக் கூடும்.

ராமாயணம் பற்றி இன்னும் நிறைய தேடி வாசித்த பின் இந்தப் பதிவை தொடர்வதே சரி எனப் படுகிறது...ராமாயணம் தெரிந்தவர்கள் தங்களுக்குத் தெரிந்ததை இங்கே பதியுங்கள்.

Monday, March 30, 2009

ஜவ்வு மிட்டாய்

அம்பையின் "காட்டில் ஒரு மான்" சிறுகதைத் தொகுப்பு வாசித்துக் கொண்டிருந்தேன் நேற்று மதியம்,அப்போது தான் சட்டென்று "ஜவ்வு மிட்டாய்" ஞாபகம் வந்தது.ஜவ்வு மிட்டாய்க்கும் நான் வாசித்த சிறுகதைக்கும் சம்பந்தம் ஏதுமில்லை சிறுகதை எனது சிறு வயது நினைவுகளைத் தட்டி எழுப்பியதில் ஜவ்வு மிட்டாய் கலர்...கலராய் மின்னி மறைந்தது எண்ணங்களின் ஓடையில் .

உலக்கை அளவுக்குப் பருமன் இல்லை ...அதற்காக வாக்கிங் ஸ்டிக் மாதிரி ரொம்ப ஒல்லியாகவும் இல்லாமல் ஒரு அளவான நீண்ட கழியில் மேற்பாகத்தில் வெண்ணிற தகர மூடியால் மூடப்பட்டு மிட்டாய் உள்ளே இருக்கும் அதை மிட்டாய்க் காரர் தனது இடது தோளில் சாற்றி வைத்துக் கொண்டு வியாபாரம் செய்வார். கூடவே கெரசின் ஊற்றப் பயன்படுத்தும் பெரிய சைஸ் புனல் போல ஒரு ஊதுகுழல் வேறு வைத்துக் கொண்டு அடிக்கொரு தரம் அதை ஊத்தி சத்தமெழுப்பி மிட்டாய் வாங்க ஊர்ப் பிள்ளைகளுக்கெல்லாம் அழைப்பு விடுத்துக் கொண்டிருப்பார்.

அவரது குழல் சத்தம் கேட்டதோ இல்லையோ என்னையொத்த என்னை விடப் பெரிய ..சிறிய பிள்ளைகள் எல்லோரும் அவரைச் சுற்றி குழுமி விடுவார்கள்.இந்த ஜவ்வு மிட்டாயின் ஸ்பெசலே அந்த மிட்டாய்க் காரர் செய்து தரும் டிசைன்களில் தானே இருக்கிறது .

கைக்கடிகாரம்,ரயில்,கார்,பஸ்,மூக்குக்கண்ணாடி,பாம்பு,மயில்,நெக்லஸ்,ப்ரேஸ்லெட்,இப்படி விதம் விதமான டிசைன்களில் சில அடிக்கும்v நிறங்களில் மிட்டாய் செய்து தருவார். நிறங்கள் பெரும்பாலும் சிறுவர்...சிறுமிகளை ஈர்க்கும் படியாகவே இருக்கும்.ரோஸ்...மஞ்சள்...வெளிர் நீலம்,சிவப்பு,பச்சை ,வெள்ளை இந்த நிறங்களில் தான் .பெரும்பாலும் மனதில் நிர்ப்பது ரோஸ் நிறம் தான்.

ஜவ்வு மிட்டாயின் இனிப்பு அதை சாப்பிட்டு முடித்த பின் வெகுநேரம் வரையிலும் கூட நாக்கின் அடியில் தித்திக்கும் பல நேரங்களில் ,இப்போதெல்லாம் கிராமங்களிலும் கூட ஜவ்வு மிட்டாய்க்காரர்களைக் காணோம்,அந்த மிட்டாய் சுகாதாரமானதா இல்லையா என்பதை எல்லாம் தாண்டி மிட்டாயின் நிறமும் அடர் இனிப்புச் சுவையும் மட்டும் இன்ன்னும் நீங்காமல் நினைவுகளோடு .


இப்படி இன்னும் பல நிறம் மாறா நிஜமான சந்தோசங்களை அள்ளித் தந்த பருவம் அது. சிறுமியாகவே இருக்கத்தான் முடியாது ஆனால் அந்த நேரத்து வாழ்வின் வர்ண ஜாலங்களை வருடங்கள் சில..பல கடந்த பின்னும் நினைத்துப் பார்ப்பதென்னவோ நல்ல அருங்கோடையில் கிராமத்து வீட்டின் வேப்பமர முன் தாழ்வாரத்தில் சிலீரென்று காற்று தாழ்ந்து பரவ சுகமாய் ஒரு சிறு தூரலில் நனைவதைப் போன்ற சிலீரென்ற அனுபவம் அது.

நீங்கள் சாப்பிட்டு ரசித்ததுண்டா கலர்...கலர்..ஜவ்வு மிட்டாய்களை ,அப்படியென்றால் எழுதுங்கள் உங்கள் இனிமையான சிறு பிராயத்து மலரும் நினைவுகளை பின்னூட்டங்களாக .

Friday, March 27, 2009

அனிதாவின் காதல்கள் ...சுஜாதா இருந்திருக்கலாம் இன்னும் கொஞ்ச நாள்!!!

நேற்று இரவு தான் இந்த புத்தகம் வாசித்தேன் .சுஜாதா இறந்து விட்டதை நினைத்து மிக துக்கமாக உணர்ந்தேன்.ஒரு சாதாரணக் கதை தான் அதை இத்தனை விறுவிறுப்புடன் மிகச் சாதாரண வார்த்தைகளைக் கொண்டு விரித்து விவரிக்க சுஜாதாவுக்கு இணை சுஜாதாவே தான்.ஏன் சுஜாதா இறந்து போனார்? அவரது இடம் என்னைப் பொறுத்தவரை இன்னும் இட்டு நிரப்ப முடியாத இடமாகத் தான் தென்படுகிறது.


எவ்வளவு சீரியஸ் விஷயம் என்றாலுமே எளிமையாக்கி "இதெல்லாம் ஒன்றுமே இல்லை" என்பதைப் போன்ற எண்ணத்தை உருவாக்கும் எழுத்துக்கள். யோசித்தால் மட்டுமே அவர் எழுதி இருக்கும் விசயத்தின் நிஜமும் யதார்த்தமும் புரியக் கூடும்.


சிவாஜி திரைப் படத்தில் "பழகலாம் வாங்க " என்று சாலமன் பாப்பையா சொல்வதை பலரும் பல விதமாக விமர்சித்திருக்கலாம்.ஆனால் விமர்சித்த எல்லோருக்குமே தெரியும் ...பழகுதல் என்பதும் யதார்த்தமே என்று.;தருமியின் ஒரு பதிவில் வாசித்த ஞாபகம்


"இங்கே நம் நாட்டில் நாம் ஏன் வேஷம் போட்டுக் கொண்டே நாட்களைக் கடத்திக் கொண்டிருக்கிறோம்" நாம் என்னவோ ரொம்பவும் உத்தமர்கள் என்று பிறரிடம் பறைசாற்றிக் கொள்வதைப் போலவே தான் சதா எல்லா நேரங்களிலும் பிறர் முன்னிலையில் நம்மை நாம் வெளிப் படுத்திக் கொண்டு இருக்கிறோம் ...விரும்புகிறோம்.இதை தருமி சார் வேறு வார்த்தைகளை சொல்லி இருப்பார்.சரியாக நினைவில் இல்லை ,ஆனால் சாராம்சம் புரிந்தது .


சுஜாதாவின் எல்லாக் கதைகளும் மிக யதார்த்தமானவை .இப்படி நடக்கக் கூடுமோ என்ற "என் இனிய இயந்திரா" கூட நம் வாழ்வியலோடு ஒத்துப் போவதாகவே நினைக்கத் தோன்றுகிறது.


சரி இனி அனிதாவின் காதல்களைப் பார்ப்போம்;


அனிதா கனவுகள் நிறைந்த பெண் ,அவளுக்கென்று பிரத்யேகமான கற்பனைகள் உண்டு ..அனிதா ஐ.ஏ.எஸ் ;அனிதா தி பேமஸ் டான்சர் ,திறமையான நடிகை ,ஸ்போர்ட்ஸ் வுமன் இப்படி பலவகையில் சகல கலா வள்ளியாக தான் பிரகாசிக்க வேண்டும் என்ற கனவும் கற்பனையும் அவளுக்கு உண்டு ,இந்த சூழ்நிலையில் அவளது கனவுகள் எங்ஙனம் கலைக்கப் படுகின்றன ,அதிலிருந்து அவள் எங்ஙனம் மீள்கிறாள் என்பதே அனிதாவின் காதல்கள் நாவலின் சாராம்சம் .

அனிதா ஒரு மத்தியதர பிராமணக் குடும்பத்துப் பெண்,ஒரு சின்ன விபத்தின் போது தவறி விழுந்த பர்சை எடுத்து வைத்து பத்திரமாகத் திருப்பிக் கொடுத்ததின் காரணமாக அகில உலக அளவில் தொழில் சாம்ராஜ்யம் நடத்தும் கோடீஸ்வரன் வைரவனின் காதல் எதேஷ்ட்டமாய் அவளுக்குக் கிட்டுகிறது .இது அவளது முதல் காதல் .


அடுத்த காதல் வீட்டில் பார்த்து நிச்சயிக்கப் படும் மாப்பிள்ளை ரகு .அமெரிக்க மாப்பிள்ளை ..டாலர் கனவுகளாலும் உடன் படிக்கும் தோழி மதுமிதாவின் உற்சாகப் படுத்தும் கேலிகளாலும் அனிதா இவனை மணந்து கொள்ளச் சம்மதித்து நிச்சயதார்த்தம் கூட நடந்து முடிகிறது இவர்களுக்கு .


அடுத்த காதல் அனிதாவின் மாமா (அம்மாவுடன் பிறந்த கடைக்குட்டித் தம்பி )சீதாராமன் ,இவன் சிறு வயது முதற்க் கொண்டே அனிதாவை விரும்புகிறான், சாதாரண வங்கி கிளார்க்காக இருந்து கொண்டு தேர்வுகளை விடாமல் எழுதி உயர் பதிவை அடைவதையே தன் லட்சியமாகக் கொண்டிருக்கும் சீதாராமன் அதற்கான உந்து சக்தி என குறிப்பிடுவது அனிதாவையே .இவனை அனிதா காதலிக்கவில்லையே தவிர இவன் மீது அவளுக்கு ஒரு வித நேசம் உண்டு என்பதை சுஜாதா தன் வரிகளில் வித்யாசப் படுத்தியிருப்பார். இது காதல் இல்லை இனம் புரியா நேசம் மட்டுமே அனிதாவைப் பொறுத்தவரை .ஆனால் சீதாராமன் அனிதாவை சின்சியராகவே காதலிக்கிறான் மனதிற்குள்.


அடுத்தும் ஒரு காதல் உண்டு அவன் விஸ்வம் ,சீதாராமனுடன் பணிபுரியும் ஒரு சிநேகிதியின் அண்ணன் அவன்,அவனும் ஒரு கட்டத்தில் அனிதாவை விரும்புவதாகக் கூறுகிறான்.


அப்படி இத்தனை பேர் விரும்ப அனிதாவிடம் என்ன தான் இருக்கிறது?! பெரிய அறிவாளியா அவள்?! அதிரூப சுந்தரியும் இல்லை ,பக்கவாட்டில் பார்த்தால் சுமாராக இருப்பாள் ,அவளது அழகு சாதாரண அழகு ,அவளை விடவும் பல மடங்கு கவர்ந்திழுக்கும் அழகுடனும் ,சுதந்திரமாகப் பழகும் மனோபாவத்துடனும் உடைய தன்னை புறக்கணித்து அனிதாவை வைரவன் விழுந்து விழுந்து (!!!) காதலிப்பதை நினைத்து பொறாமைப் படுகிறாள் மதுமிதா.


பொறாமை இருந்தாலும் கூட இந்த புத்திசாலி மதுமிதா அனிதா பணக்காரி ஆனபின் தோழி என்ற பெயரில் தனக்கு கிடைக்கக் கூடும் அனுகூலங்களை மனதில் கொண்டு அனிதாவை வெறுக்காமல் இணக்கமாகவே இருக்கிறாள் கதையின் முடிவு வரையுளும் கூட;காரணம் பணமும் அதனால் கிடைக்கும் வசதிகளையும் எண்ணித்தான்.


இது இப்படி இருக்க...கதையில் அனிதா மிகக் குழப்பமான பெண்ணாகவே அல்லது சஞ்சல மனதினளாகவே முடிவு வரையிலும் சித்தரிக்கப் பட்டு விட்டு கடைசி நொடியில் ஸ்திரமான முடிவு எடுப்பவலாகக் காட்டப் படுகிறாள்.அதுவும் கூட ஒரு வகையில் சரி என்றே படுகிறது,வாழ்வியல் ஞானம் வாழ்வின் முதற் கட்டத்திலேயே எல்லோருக்கும் கிடைத்து விடுவதில்லை ,வாழ்க்கையில் சந்திக்கும் அனுபவங்களின் மிச்சங்களாகவே தெளிவான திட சிந்தனை கை வரப்பெருகிறது,


அனிதாவுக்கும் அப்படித்தான்...அனிதா மட்டும் அல்ல மத்திய தர வர்க்கத்தைச் சார்ந்த எல்லா இளம்பெண்களுக்கும் இதுவே சாத்தியம்,அம்மா அப்பா சொல்வதையே செய்யத் துணியும் மனப் பான்மையே பெரும்பாலான பெண்களுக்கும் இலகுவாகிறது,விதி விலக்குகளும் இருக்கலாம்,இங்கே அனிதாவைப் பொறுத்தவரை அவள் வீட்டுக்கு அடங்கிய பெண் என்ற தோற்றத்தையே விரும்புபவளாகத் தெரிகிறது.


அனிதா மேலே படிக்க விரும்புகிறாள் ,கூடவே வீட்டில் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்வதாகத் தெரிய வருகையில் முதல் குழப்பம் ஆரம்பிக்கிறது,படிப்பைத் தொடர்வதா அல்லது கல்யாணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆவதா என்று.


அடுத்ததாக வைரவன் தன் காதலை பலமுறை தெளிவாக்கிய பின் ரகுவை விட அவன் மீது புத்தி செல்கிறது,கூடவே அவனது காதலின் மீது லேசான பயமும் கூட அவளுக்கு உண்டென்று கதை உருள்கிறது,காரணம் அவனது மித மிஞ்சிய பணமும் செல்வாக்கும் .


நிச்சயிக்கப் பட்ட மாப்பிள்ளை ரகுவை அயல்நாட்டில் இன்னும் உயர் பதவி எனும் ஆசை காட்டி ஒதுங்கி நிற்க வைத்து விட்டு பணத்தையும் சகாயங்களையும் வாரி இறைத்து ஒரு கட்டத்தில் அனிதாவின் பெற்றோரையும் உற்றோரையும் கூட தன் வசமாக்கி வைரவன் அனிதாவை மணக்கிறான்.


திருமணமான சில நாட்கள் இடைவெளியில் அனிதாவுக்கு வைரவனின் குடும்ப சூழல் பிடித்தம் இல்லாமல் போகிறது.அவனிடம் இருக்கும் அளவில்லாப் பணத்தின் சக்தியால் பிறந்த வீட்டில் அனிதாவுக்கு ஏகப்பட்ட மரியாதை செய்தாலும் கூட எல்லாம் அவன் பணத்திற்காகவே என்ற எண்ணம் அனிதாவிடம் படிந்து அவளுக்கு சுதந்திரமான வாழ்க்கையின் மீது ஏக்கம் வருகிறது,


இது இப்படி இருக்க, வைரவனின் தொழில் முறை எதிரிகளால் வீட்டில் ரெய்டு நடந்து பெரும்பாலான சொத்துகளுக்கு சரியான முறையான கணக்கு வழக்குகள் ஒப்படைக்கப் படவில்லை என அறிவித்து அவனைக் கைது செய்து தனி விசாரணை என்ற பெயர் அவன் சிறை செல்ல நேர்கிறது,


இந்த வைரவன் கதாபாத்திரம் கொஞ்சம் விசித்திரம் தான் இங்கே. தன் இறந்து போன தாயின் சாயல் உள்ள பெண் என்பதால் மட்டுமே அவன் அனிதாவின் மீது அபிரிமிதமான காதல் கொள்கிறான்.அனிதாவை விட அழகான ...அந்தஸ்தான பல பெண்கள் அவனை மணக்க விரும்பியும் அவன் இவளை மணக்கிறான். இது கொஞ்சம் விசித்திரம் தான்,தாயின் மீது அவனுக்கிருந்த இனம் அறியா பாசம் காரணமாக இருக்கலாம் .


எப்படி அதி தீவிரமாகக் காதலித்தானோ அதே வேகத்தில் தான் சிறையில் அடைபட்டதும் அனிதாவுக்கு விவாகரத்து தரவும் முன் வருகிறான் .தன் செக்ரட்டரி பெண்ணுடன் தாராளமாகப் பழகும் போதாகட்டும் ,சொந்த அக்கா மகளுடன் மற்றவர் பார்வைக்கு வித்யசமாகப் படுவதாகட்டும் வைரவன் மீது அனிதா பயம் கொள்வதில் நியாயமே.


அனிதாவின் குடும்பத்தினர் பணத்திற்கும் செல்வாக்கிற்கும் படிப் படியாக மயங்குவதாகக் காட்டி இருப்பது வெகு யதார்த்தமே. எந்த மனிதனாயினும் அதுவே நிதர்சனம் ,இதில் விதி விலக்குகள் உண்டு என வாதிடுவது விழலுக்கு இறைத்த நீர்!அமெரிக்க மாப்பிள்ளையை விட தொழிலதிபர் மாப்பிள்ளை பெட் என தீர்மானிக்கும் அவர்கள் அவனும் சிறை சென்றதும் மணமான மகளை விவாகரத்து செய்வித்து விட்டு மறுமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார்கள்.


எந்த சூழ்நிலையில் எது பெஸ்ட்டோ அதை தேடுவதும் பெற முனைவதுமே மனித இயல்பு என்பதற்கேற்ப அனிதாவின் வீட்டினர் அடுத்த மாப்பிள்ளை தேடுகின்றனர், இத்தனை செய்பவர்களை ஒரு விஷயத்தை மட்டும் சிந்திக்கவேயில்லை அது அனிதாவின் படிப்பு, காரணம் நம் இந்திய மனப்பான்மை என்று சொன்னால் சாலப் பொருந்தக் கூடும்.


இங்கே பெற்றவர்கள் பெண்கள் படிப்பதைக் காட்டிலும் கை நிறைய சம்பாதிப்பதைக் காட்டிலும் நல்ல வாழ்க்கைத் துணை அமைத்துக் கொடுப்பதே மிக முக்கியம் என்று கருதுகிறார்கள் .அது சரியான நடைமுறையே என்றாலும் ,ஒரு அளவுக்கு மேல் யாரையும் சோதித்துப் பார்த்து தேர்வு செய்ய வாழ்க்கை என்ன அறிவியல் ஆய்வுக் களமா ? வாழும் போது தானே தெரிய வரும்

நிஜமான நிறை குறைகள்,அப்போது திடீரென்று பயந்து போய் வெறுத்து ஓடினால் அந்த ஓட்டத்திற்கு முடிவு ஏது ?


வெளிநாட்டுப் பொருட்களில் மோகம் கொண்ட தம்பி ,கிணற்றுத் தவளை வாழ்க்கையில் சோர்ந்து போன அக்கா ,பெருமைக்காகவேனும் தன் தங்கை ஒரு பெரும் பணக்காரனின் மனைவி என்று பெருமை பேச விரும்பும் இன்னொரு அக்கா,பெண்ணுக்கு கல்யாணமே வாழ்க்கையில் அதி முக்கியம் அதை தவிர வேறு எதுவும் இல்லை என நம்பும் அம்மா ...இவர்களோடு அனிதா எனும் பெண்ணின் கனவுகளும் கற்பனையும் கலந்த வாழ்க்கை . இதுவே அனிதாவின் காதல்கள் கதை.


எந்த நொடியில் அனிதா மனம் மாறுகிறாள் என்று சுஜாதா விவரிக்கும் இடம் கொஞ்சம் டிராமாடிக் ஆக இருந்தாலும் சேக்ஸ்பியர் சொன்னது போல "வாழ்க்கையே ஒரு நாடக மேடை" தானே? அதனால் அனிதா தனக்கும் சீதா ராமனுக்கும் வீட்டினர் ஏற்ப்பாடு செய்திருந்த மறுமணத்தை கடைசி நொடியில் வேண்டாம் என மறுத்து விட்டு சிறையில் இருக்கும் தன் கணவனைத் தேடி போகிறாள்.
சுபம்

Wednesday, March 25, 2009

இட்லி
இட்லி என்று பதிவுக்கு தலைப்பு வைத்தாகி விட்டது ,இட்லி பற்றி என்ன எழுதுவது...ஒன்றுமே இல்லையா என்ன? இட்லி வேக வைத்து சமைக்கப் படும் ஒரு வகை தென்னிந்திய உணவு ,இதில் எண்ணெய் சத்து துளியும் இல்லை ,கைக்குழந்தைகள் முதல் பிறர் கை பிடித்தோ கோல் ஊன்றியோ நடக்கும் கைகோல் குழந்தைகள் வரை யார் வேண்டுமானாலும் உன்பதற்க்கேற்ற எளிய இனிய உணவு ,

இது அரிசியை மற்றும் உளுந்தை ஊற வைத்து அரைத்து ஒரு நாள் இரவு முழுவதும் அரைத்த மாவை புளிக்க வைத்து பின் அடுப்பை பற்ற வைத்து இட்லி குண்டான் எனும் ஸ்பெசல் பாத்திரத்தை அடுப்பில் ஏற்றி கால் பாகம் தண்ணீர் ஊற்றி அடி கருக்காமல் இருக்க அரை மூடி எலுமிச்சம் பழமோ அல்லது துளியூண்டு புளி கிள்ளி எடுத்தோ பாத்திரத்தில் போட்டு தண்ணீர் கொதித்ததும் இட்லித் தட்டுக்கள் எனும் ஸ்பெசல் தட்டுக்களை தேடி எடுத்து...

(அட தேடி என்ற சொல் எதற்க்கென்றால் அது சென்ற முறை இட்லி அவித்த பின் எங்காவது மூலையில் மறந்து போய் போட்டு வைத்திருக்கக் கூடும் சில வீடுகளில் (என் வீட்டில் அப்படி செய்வது வழக்கமே இல்லை ...நிஜம் ...நம்புங்கள்!!!)சரி..சரி இட்லித் தட்டுக்களை ஒரு வழியாய் தேடி எடுத்தாயிற்று அல்லவா?! இனி பேச நேரம் இல்லை சரசரவென்று இரண்டு தட்டோ இல்லை ஒரே ஒரு பெரிய தட்டோ இட்லிப் பள்ளங்களில் அல்லது குழிகளில் அரைத்து வைத்த முக்கியமாக புளிக்க வைத்த இட்லி மாவை அங்கே ஊற்ற வேண்டும் .

ஏனோ ..தானோ என்றெல்லாம் ஊற்றி விடக் கூடாது இட்லி மாவை இட்லித் தட்டின் பள்ளங்களில் ..அதற்கென்று ஒரு ஸ்பெசல் முறை இருக்கிறதாம் என் பாட்டி சொல்லியிருக்கிறார்கள் ...........அது வந்து எப்படி என்றால் ...அதாவது ...அதாவது...அதாகப் பட்டது ...அது எப்படி என்றால்...!!!...அது வந்து ....

சரி ...சரி ....யாரும் பொறுமை இழக்க வேண்டாம் .

இதோடு இட்லி அவிப்பதை நிறுத்தி விட்டு ;

அடுத்த விஷயத்திற்குப் போய் விடலாம் ...அதுவே பதிவுக்கும் பதிவருக்கும் நலம் .

அதாகப் பட்டது இப்படியாகப் பட்ட பலவித சிரமங்களைப் பொருட்படுத்தாமல் நாம் (அம்மா ...அக்கா...அண்ணி...பாட்டி!!! இவர்களில் ஒருவர் தான் இந்த நாம் ...நாம் என்றால் நாம் இல்லை அந்த நாமில் என்ன தெளிவாகப் புரிகிறதா இல்லையா?!) தயாரிக்கும் இட்லிகளை உப்புச் சப்பில்லாத சில காம்பிநேசன்களில் சாப்பிட்டு வைக்கக் கூடவே கூடாது

(இந்நாள் வரையிலும் நாம் அப்படித் தானே செய்து கொண்டிருக்கிறோம் என்கிறீர்களா? இனி அப்படிப் பட்ட துரோகத்தை இட்லிக்கு நாம் கனவிலும் செய்யத் துணியக் கூடாது )

இட்லிக்கு எது சரி மேட்சிங் என்று ஒரு வரையறை செய்து விட முடியுமா நம்மால் ?அது உண்பவர்களைப் பொறுத்த விஷயம் ஆயிற்றே!?சரி புடவைக்கு எப்படி பொருத்தமாக மேட்சிங் பார்க்கிறோமோ அதே வகையில் இட்லிக்கு மேட்ச்சிங் பார்ப்போம் இப்போது நம்மால் இயன்றவரையிலும்,


இட்லி-சாம்பார் (இது கணவன் மனைவி உறவு போன்றதென்று வைத்துக் கொள்ளலாம் ...அருமையான மேட்சிங் )

இட்லி-மிளகாய்ப் பொடி பிளஸ் நல்லெண்ணெய்

இட்லி -தேங்காய் சட்னி

இட்லி -வெங்காயச் சட்னி

இட்லி-காரச் சட்னி

இட்லி-தக்காளிச் சட்னி

இட்லி-கொத்துமல்லி சட்னி

இட்லி -கோஷ்மல்லி

இட்லி - பாசிப் பருப்பு சட்னி

இட்லி- தயிர் பிளஸ் சர்க்கரை

இட்லி -நெய் பிளஸ் சர்க்கரை (அஸ்க்கா போட்டா நல்லாத்தான் இருக்கும் ப்ரிஸ்க்கா)

இட்லி- சிதம்பரம் கொத்சு (அபிஅப்பா தான் போடா சொன்னார் ...சித்தப்பா சொல்லைத் தட்டலாமோ!)

இட்லி - ஊறுகாய் (எங்கயாவது பஸ் நடுவழியில நின்னுட்ட ஊறுகாய் வச்சும் இட்லி சாப்பிடுவாங்களாம் எதோ கதைல படிச்சேன் )

இட்லி- மீந்து போன பருப்பு (எங்க பக்கத்து வீட்ல ஒரு அம்மா இப்படித் தான் இட்லிக் கொடுமை செய்றாங்க பல நேரம் ...இட்லி அழற சத்தம் என் காதில் விளராப்பல ஒரு பீல் )

இட்லி -மீன் குழம்பு (முள்ளும் மலரும் படத்துல ஒரு பாட்டு வருமே ...


"நித்தம் நித்தம் நெல்லுச் சோறு

நெய் மணக்கும் கத்தரிக்காய்

நேத்து வச்ச மீன் குழம்பு

என்னை இழுக்குதடி ...."நெல்லுச் சோறுக்கு மட்டும் இல்லை இட்லிக்கும் கூட இழுக்கும் தான்)


கட்டக் கடசியா என்னோட இட்லி மேட்சிங் பத்தியும் சொல்லனுமே !?(யாரும் கேட்கலைனாலும் கூடத் தான் சொல்லியே ஆகணும்)


இட்லிக்கு என்ன தான் எல்லாரும் சாம்பார் ..சட்னி...கொத்சு ...மிளகாய்ப் பொடி பிளஸ் ஜோதிகா (நல்லெண்ணெய்யாம் !!!) நான் சொல்லலை அபிஅப்பா சொன்னார் .இன்ன பிற வஸ்துக்களை எல்லாம் வளைச்சு மாட்டினாலும் கூட ;

நம்ம பேவரிட் கோழிக் குழம்பு தான் .

என்ன ஒரு ஜோரா இருக்கும் தெரியுமா ?!

என்ன நான் சொல்றது சரி தானே?!!!

வந்து சொல்லிட்டுப் போங்கப்பா உங்க இட்லி நினைவுகளை .

Tuesday, March 24, 2009

ஒளடதமானது மஞ்சம்


மஞ்சள் மாறா

சுகந்தம் கொஞ்சும்

அஞ்சுக மங்கை

தங்க முகம் தான்

கெஞ்சுமோ

இன்னும்

மிஞ்சுமோ ?!

வேங்கை போலொரு

வேந்தன் அவனென

அஞ்சுவதல்லா

பிஞ்சு மனம் போல்

ஆசை களிற்றை

அடக்கி மீண்டதும்

ஒளடதமானது மஞ்சம்

அஞ்சனம் திருமஞ்சனம்

பஞ்சனை காணும் மந்திரம்

வந்தனம்

சங்கத் தமிழோ

காவியமோ

மின்னற் பொழுதின்

ஓவியமோ

பேசாப் பொருளின்

தூரிகையோ

காந்தள் மலரே

கண் துயிலாய்

எஞ்சும் காலை பொழுதே வா

வெளிச்சக் கதிர்கள் விரியட்டும்

வெயில் நிறம் இங்கே பரவட்டும்

மஞ்சள் முகங்கள் மினுங்கட்டும்

தங்கக் கனவுகள் பலிக்கட்டும் ...

Sunday, March 22, 2009

தொடரும் பயணம் பிண்டத்திலிருந்து பேரண்டம் வரை
உறக்கங்களில்லாமல்

நீளும்

சொர்க்கத்தின் நீட்சியில்

மண்வாசம்

வரைபடமாய்

மலர் வாசம்

மனப்பாடமாய் ...

ஏதோ... ஏதோ

திகட்டிப் போன

ஏதோ ஒரு நொடியிலோ

அன்றி

பெருங்கனவு பிடித்திழுத்த

மறு நொடியிலோ

ஆசையின் நெடி தாக்க

தட்டுத் தடுமாறி

விழுந்த இடம்

அம்மாவின் கருவறை

மறுபடி பிண்டமானேன்

பேரண்டம் புரியா

பயணம் தொடர்கிறது ...

இன்னும்

ஒருமுறை!!!

Thursday, March 19, 2009

தாம்பத்யத் தராசு ?!
கணவன் ஒருபுறம்


மனைவி மறுபுறம்


மேல் கீழென


ஏறி ...இறங்கும்


தாம்பத்யத் தராசு


எப்போதும்


கிடை மட்டத்தில்


நிலை கொண்டால்


யாதொன்றும் பயனிலையே ?!


முட்களின் நகர்வில்


(எடைக்)கற்களின் கனத்தில்


அசையும் தட்டுக்கள்


ஏறலாம்


இறங்கலாம்


தராசின் சுழன்றாடும்


சங்கிலிக்குள் மட்டும் ...

Tuesday, March 17, 2009

சும்மா ஒரு கவிதை...!அலைகளின்

நகர்வில்

அகப் படா

தொலைவில்

மிதக்கும் கப்பலாய்...

அவள்

அவனுக்குள் ;

அவன்

அவளுக்குள் ;

முதல் காதல்

முடிவிலிகள் ;

யாரும்...யாரும்...யாராகியரோ?!

சந்திரிகாவின் நியாயங்கள் (பார்ட்- 2 )

சந்திரிகா அப்படி என்ன சொன்னாள் ?

சுறு சுறுப்பாக இருப்பவளைப் போல வெளிப் பார்வைக்குப் பட்டாலும் பாவம் அவள் கண்களை தூக்கம் தின்று கொண்டிருப்பதைப் போல எனக்கொரு பிரமை .

அவள் சொன்ன பதில் இது தான் .

தேவராஜ் மாமா வீட்டுக் கட்டில் மாதிரி ஊருல எங்கயும் இல்லை பாட்டி ,அங்க இருந்து தான் வரேன்;படுத்தா எந்திரிக்க மனசே வரலை ,வெளிநாட்டுல இருந்து கப்பல்ல இல்ல வர வச்சு வாங்கி இருக்காராம்.

பொண்ணு காலேஜுக்குப் போயிருச்சு இல்ல ...அதான். இல்லனா இந்நேரம் கூப்புட மாட்டார்.

100 ரூவா தந்தார் ,எவ்ளோ நாளைக்கு வெறும் 100 ரூவாயே வாங்கிட்டு இருப்பேன் ,கூட ஒரு அம்பது குடுங்க மாமானா ...அவரு ,

இதுவே அதிகம்டீனுட்டார்.

என்ன இப்பிடி சொல்றீங்கனு கேட்டாக்க ...

இந்த மாதிரி கட்டில்ல படுக்க நீ தான் எனக்கு காசு தரனும்.இந்த ஊருக்குள்ள இப்பிடியாப் பட்ட கட்டில் எங்கனாச்சும் பார்த்திருக்கியாங்கறார் !!!

கண்ணன் ஸ்கூல்ல எங்கயோ சுற்றுலா போறாங்களாம் ...பணம் கொடும்மான்னு ஒரே நச்சரிப்பு ஒரு வாரமா ; அதான் போயிட்டு வந்தேன் .

இதைச் சொல்லும் பொது அவள் முகத்தில் " தான் செய்த செயலைப் பற்றியஎந்த ஒரு வித்யாசமான உணர்வையும் நான் காண முடியவில்லை .

வெறும் ஒரு ஸ்கூல் டூர் !!!

அதற்கு எதை பண்டமாற்று செய்திருந்தால் என்பதைப் பற்றி அவளுக்கேதும் இரண்டாம் பட்சக் கருத்தோ ...குழப்பமோ இல்லவே இல்லை .

சந்திரிகா தொடர்வாள் ...(இப்போ என்ன அவசரம் ? நாளைக்கு சொல்றேன் மீதிய)

Monday, March 16, 2009

அம்மா வந்தாள்...தி.ஜா வின் பெயர் சொல்ல மறுபடி...மறுபடி...(100 வது பதிவு)

ரொம்ப நாட்களாக எழுத நினைத்த விஷயம் தான் ...

ஆனால் எழுத நினைத்த ஒவ்வொரு முறையுமே "என்ன இருக்கிறது இதைப் பற்றி எழுத? என்று ஒரு நொடி தோன்றும் அடுத்த நொடியில் "எவ்வளவோ இருக்கிறதே இதில் எதையென்று விரித்து எழுத என்றும் தோன்றும்.ஒரே நேரத்தில் ஒன்றுமே விஷயம் இல்லாததைப் போலவும்...ஏராளமாய் விஷயம் இருப்பதைப் போலவும் தோன்ற வைப்பதில் தி.ஜா எப்போதுமே வல்லவர் .


கதை என்று எடுத்துக் கொண்டால் மிகச் சாதாரணமாக ஒரே பத்தியில் சொல்லி முடித்து விடலாம் .அலங்காரம் , தண்டபாணி தம்பதிகளின் மகனான அப்பு சுந்தரத்தின் வேத பாடசாலையில் பாடம் கற்றுக் கொள்ள சிறு வயதிலேயே தன் தகப்பனாரால் கொண்டு விடப் படுகிறான்.இதற்க்கு காரணமாக இருப்பவள் அவனது அம்மா அலங்காரம்.


அந்த வேத பாடசாலை பவானியம்மாளுக்குச் சொந்தம் ,பவானியம்மாளின் தம்பி மகள் இந்து பால்ய விவாகம் செய்விக்கப் பட்டு குறை நாட்களில் தன் கணவனை இழந்து விதவையாக அத்தை வீட்டுக்கே மறுபடி மீள்கிறாள்.அவளுக்கு அப்புவின் மீதே அதிகப் பிரியம் அவள் தனது வாழ்வை தான் விவரம் அறிந்த காலம் முதல் அப்புவுடனே மனதளவில் பிணைத்துக் கொண்டவளாகவே கதை நெடுகிலும் காட்டப் படுகிறாள்.


அவள் சிறு பிராயத்திலிருந்தே மனதுக்குள் அப்புவையே தன் கணவனாக வரித்துக் கொண்டவள் என்பதும்...அப்புவுக்கும் அவள் மீது அலாதியான நேசம் என்பதும் புரிந்தே இருந்தாலும் "கைம்பெண்ணுக்கு கல்யாணம் "என்ற விஷயம் அப்போது சர்ச்சைக்கு உரிய ஒன்றே. இந்துவை விரும்பினால் அம்மா என்ன நினைத்துக் கொள்வாளோ ? பவானியம்மால் என்ன நியானைத்துக் கொள்ளக் கூடுமோ ?! இப்படியாக அப்பு தனியாக தனக்குள் விவாதித்துப் பார்த்து கடைசியில் தன் அம்மாவின் பொருட்டு அவளது நன்மதிப்பைப் பெறும் ஆவலில் இந்துவை தன் மனதில் இருந்து விலக்க நினைக்கிறான்.


ஆனால் இந்துவோ அவன் விலக ...விலக...விலக்க ...விலக்க நெருங்கி ...நெருங்கி வருகிறாள். இது மனித சுபாவம் போலும்!? இதை வென்றிட்டால் உலகை வென்ற மாதிரி அல்லவா? உணர்வுகளைக் கொள்ள விருப்பமில்லாதவளாய் இந்து அப்புவை தேடி வரும் ஒவ்வொரு முறையும் அவன் மிகச் சலனமுற்றவனாய் எங்கே தன்னையும் அறியாமல் இந்துவை தொட நேருமோ என குறுகிப் போனவனாய் (மயக்கம்...மோகம்...இன்னபிற சொல்லாடல்களைக் கூட இங்கே பயன்படுத்திக் கொள்ளலாம் ...அதற்குப் பெயரே தன்னை அறியாமல் அல்லது தன்னை இழத்தல் என்பதாக இருக்கக் கூடும்!) அவள் மீது கடும் கோபம் கொண்டவனாகிறான்.


அப்புவின் கோபம் இந்து மீதான விருப்பமின்மையாக இல்லாமல் பெரும்பான்மையும் "எங்கே அவள் மீது உள்ளூர இருக்கும் நேசத்தை வெளிப்படுத்திக் கொண்டால் தான் "குற்றவாளி" போல பிறரால் பார்க்கப் படலாம் என்ற சுயநலமே பிரதானமாகத் தெரிகிறது.


ஆனால் இந்து அவனை இன்னுமொருமுறை இழக்க மனமில்லாமலோ அல்லது தன்னை அவன் மட்டமாக குறைத்து மதிப்பிட்டு விட்டானே என்ற தன்மானத் தூண்டலிலோ ஏதோ ஒரு நிமிடத்தில் இந்து அப்புவின் அம்மா அலங்காரத்தைப் பற்றி தனக்குத் தெரிந்த அந்தரங்கமான உண்மை ஒன்றை அவனிடம் போட்டு உடைத்து அப்புவை தனது விருப்பத்துக்கு பணிய வைக்க முயல்கிறாள்.


அம்மாவுக்காக என்றால் "அந்த அம்மாவே இரட்டை வாழ்வை ஒன்றென மயங்கிப் போய் நிற்கிறாள்,ஊரை ஏமாற்றி தன்னையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறாள் ,சிவசுவுடன் அப்புவின் அம்மாவுக்கு நீடிக்கும் பழக்கத்தை அவள் இப்போதும் விட்டாளில்லை ...ஊரறிந்த ரகஸ்யம் இது ,உனக்குத் தெரியாதா இது ? என்று அப்புவிடம் இந்து கடும் வாதம் செய்கிறாள்.


கூடவே அம்மா என்ற பிம்பத்தின் மீது அப்பு உருவாக்கி வைத்த "அப்பழுக்கில்லாத" "பரிசுத்தமான" நிர்மலமான " இன்னபிற உருவங்கள் எல்லாம் உடையும் படி அல்லது அந்த உருவங்கள் எல்லாமே அவளாலேயே உடைக்கப்படும் படி இந்து அப்புவின் அம்மா "அலங்காரத்தைப்" பழித்துக் கூறும் போது கோபத்தில் அவன் அவளை தகாத சொல்லால் திட்டுவதோடு அடிக்கவும் செய்கிறான்.
மீதிய அப்புறம் சொல்றேன் ...

சந்திரிகாவின் நியாயங்கள் ...

அவளை முதல் முதலாக எப்போது பார்த்தேன்?

பாட்டி வீட்டில் தான் என்பதெல்லாம் சரியாக ஞாபகத்தில் நிற்கிறது...எப்போது...எந்தச் சூழலில் என்பது இப்போது யோசித்தால் பிடிபடவே இல்லை .ஆனால் நிச்சயமாக ஏதோ ஒரு விடுமுறைக் காலமாகத் தான் இருக்க முடியும் என்பதில் மட்டும் சந்தேகமே இல்லை ...!

பாட்டி உள்ளே சமையற்கட்டில் படு பிஸியாக இருந்த ஒரு காலை வேளையில் தான் சந்திரிகா படு கேசுவலாக வெளி முற்றம் தாண்டி உட்புற கூடம் தாண்டி அதை அடுத்துள்ள படுக்கை அறைக்குள் எட்டிப் பார்த்தாள்.சித்தியாக்கும் என்ற நினைவில் சாவதானமாக கட்டிலில் படுத்தவாறு காலாட்டிக் கொண்டு எட்ட இருந்த மோடாவில் பிளாஸ்டிக் தட்டில் கோவில்பட்டி கடலை மிட்டாய்களை கொட்டி வைத்து ... வலது கை அதை எடுத்து வாய்க்கு கொண்டு போக இடக்கையால் "அம்மா வந்தாள் " நாவலை கொஞ்சம் தீவிரமாக வாசித்துக் கொண்டிருந்தேன் .

இந்துவையும் ...அப்புவையும் பற்றி சிந்தித்துத் கொண்டே இருக்கையில் அலங்காரம் அம்மாளைப் பற்றி கதை நகரும் போது தான் என் அருகில் வந்த என் பாட்டி வெடுக்கென்று ... ;
நீ எப்படீ வந்த?
அருவமே இல்லாம வந்து நிக்கிற ? உன் மனசுல என்ன நினைப்பு என்று படு அதட்டலாகக் கேட்கவே...சடாரென்று திகைத்துப் போய் திரும்பிப் பார்த்தேன் .
சந்திரிகாவை அப்போது தான் நான் பார்த்திருக்கக் கூடும்!?

ரொம்ப பெரிய அழகி இல்லை அவள்.

ஆனாலும் வாளிப்பான பெண் ...சிவகாசியைச் சுற்றியுள்ள குக்கிராமங்களில் தடுக்கி விழுந்தால் காணக் கிடைக்கும் எண்ணற்ற பட்டாசுத் தொழிற்சாலைகள் ஒன்றில் அவளும் வேலைக்குப் போய்க் கொண்டிருந்தாளாம் பாட்டி சொல்லக் கேள்வி ;

இதற்க்கு முந்திய விடுமுறையில் இவளை நான் இங்கு பார்த்ததில்லையே என்ற யோசனையுடன் ...

யாரு பாட்டி இது ? என்றவாறு படுத்துக் கொண்டு வாசித்ததில் கசங்கி இருந்த சுடிதாரை இழுத்து விட்டுக் கொண்டு எழுந்து உட்கார்ந்து கொண்டு அவளைப் பார்த்தேன். என்னைப் பார்த்ததும் என்னவோ ரொம்ப நாள் தெரிந்தவளைப் போல

"பாப்பா லீவுக்கு வந்திருகாக்கும் ?
எத்தினி நாள் லீவாம் என்று கேட்டுக் கொண்டே கட்டிலுக்குக் கீழே தரையில்சுவற்றை ஒட்டி சாய்ந்து அமர்ந்து கொண்டு என்னையே பார்த்தாள் .

பாட்டி "பாப்பா லீவுக்கு தான் வந்திருக்கு...அந்தக் கதைய விடு...எவ்ளோ நாளைக்குத் தான் இப்படியே ஏமாத்திட்டு ஓடிட்டு இருப்பா பார்ப்போமேன்னு காலைல தான் உன்ன பத்தி நானும் சரோஜாக்காவும் பேசிட்டு இருந்தோம் ;அதிசயமா இப்போ வந்து யட்சிணி மாதிரி நிக்கிற இங்க உள்ரூம்ல !?

enna விஷயம் ...வாங்கின பணத்துக்கு வட்டியவும் காணோம்...அசலையும் காணோம். நாலஞ்சு மாசமா நீயும் ஆளே தட்டுப் படலை.
என்ன தாண்டீ நினைச்சுகிட்டு இருக்கா நீ ?
உங்க முதலாளி போனஸ் கீனஸ் ஒன்னும் தராமயா இருந்திருப்பாரு இன்னிக்கு வரைக்கும் ...!
பாட்டி இவ்வளவு அதட்டலாகக் கேட்டும் அவளென்னவோ மிரண்டதாகத் தெரியவில்லை .
பாப்பா இந்த மாதிரி சுடிதார்ல அரைக் கை வச்சி தச்சிக்கிறது தான் இப்போ புது ஃபேஷனாக்கும்?! என்று என் பதிலை எதிர் பார்ப்பவளாய் காட்டிக் கொண்டு "குடிக்க கொஞ்சம் தண்ணீ குடுங்க பாட்டி ...இன்னைக்கு நல்ல தண்ணிக் கிணத்துக்குப் போக தீரலை எனக்கு ...உப்புத் தண்ணி எம்புட்டுக் குடிச்சும் தாகம் தீரலை என்று தன் முந்தானையால் தன் முகத்துக்கு விசிறிக் கொண்டு பாட்டியைப் பார்த்துச் சொன்னாள் .
இங்கயே நல்ல தண்ணீ எடுக்கக் கிணத்துக்குப் போக ஆள் தேட வேண்டி இருக்கு .இருக்கிறது ரெண்டு குடம் இதுல உன்ன மாறி வரவ...போறவ எல்லாத்துக்கும் மோந்து மோந்து கொடுத்துட்டா இந்த வயசுல நான் அம்புட்டு தூரம் பானையத் தூக்கிட்டு அலையத் தான் வேணும்.
பாட்டி தணீர் கொண்டு வருவதைப் போல எந்த அறிகுறியும் இல்லாதிருக்க ...எனக்கென்னவோ "குடிக்கத் தானே கேட்டால் ...ஒரே ஒரு சொம்பு தண்ணீர் கொடுத்தால் குறைந்து விட மாட்டோமே என்ற நோக்கில் எடுத்து வந்து கொடுத்தேன்.
பாட்டி என்னை ஒன்றும் சொல்லவில்லை .
இந்தா பாரு சந்திரி ...நீ என்கிட்டே ரெண்டாயிரம் வாங்கி ஒன்னரை வருஷம் ஆச்சு...பையனுக்கு மஞ்சக் காமாலை ...போனஸ் போட்ட உடனே கொண்டாந்து கொடுத்துறேன்னு மூவாயிரம் வாங்கி அதுவும் இப்போ ஒரு வருஷம் முடிய போகுது .இன்னைய தேதிக்கு அஞ்சாயிரம் நிக்குது .வட்டியுமில்ல ...அசலுமில்ல, உன்னப் பார்த்துக் கேட்கலாம்னா நீ என்னடான்னா ஒழிஞ்சு விளாண்டுகிட்டு இருக்க ?!ஆளே கண்ணுல பட மாட்ட ...இன்னிக்கு என்ன அதிசயமா இங்கிட்டுக் காத்தடிச்சிருக்கு?
இப்போது தான் பாட்டி பேசுவது காதில் விழுந்தவலைப் போலவும்...அவளென்னவோ முந்தி வாங்கிய கடனை எல்லாம் ஒரே நாளில் கொடுக்கப் போகிறவளைப் போலவும் முகத்தை வைத்துக் கொண்டு சந்திரிகா ...பாட்டியிடம்...பாட்டி உங்க காசை எடுத்துக் கிட்டு நான் எங்க ஓடிரப் போறேன் ?இப்போ ஒரு அவசரம்...அர்ஜெண்டா ஒரு 1000 இப்பவே கொடுத்தீங்கன்னா மூனே நாள்ல உங்க மொத்தக் கடனையும் கொடுத்துருவேன்.இருந்தாக் குடுங்களேன் .பாட்டிக்கு வந்ததே ஆத்திரம் ...;என்னது விளாடரியா நீ ?ஒழுங்க முன்னாடி வாங்கின கடனைக் கட்டி முடி .உன் ஏமாத்து வேலைக்கெல்லாம் வேற ஆளைப் பார் ...நாங்க அம்புட்டுப் பெரிய பணக்காரங்க இல்ல ...உன் முதலாளி கிட்ட போய் கேளு ...எங்க பணத்தைக் கொடுத்துட்டு எங்கள ஆள விடு தாயி ...உனக்கு கோடிப் புண்ணியம்.
சந்திரிகா இந்த பதிலைத் தான் பாட்டியிடம் எதிர் பார்த்து வந்திருப்பவள் போல மெல்ல சோம்பல் முறித்துக் கொண்டு சுவற்றில் இருந்து தன் முதுகை நிமிர்த்தி கொட்டாவி விட்டாள் அந்தக் காலை நேரத்தில் .
அதென்னவோ பாட்டிக்கு அவள் கொட்டாவி விட்டது பிடிக்கவில்லை போல ;
என்னடீ இன்னேரமே இம்புட்டு வாயப் பிளக்கற ? ராத்திரியெல்லாம் தூங்காம வெட்டி முறிச்சியா என்னா?என்றார் அதட்டலாக ;
அதற்க்கு வெகு அசுவாரஸ்யமாக அவள் சொன்ன பதிலில் பாட்டி என்னை திடுக்கிட்டுப் பார்த்து விட்டு ;
நீ உள்ள போய் கத புஸ்தகம் படி கண்ணு ...நான் இவகிட்ட பேசிட்டு வரேன்
என்றார் படக்கென்று .
அவள் சொன்ன பதில் அப்படி ;
பாட்டி மனதிற்குள்ளாக சந்திரிகாவை திட்டிக் குமிப்பது அவளது முகபாவத்தில் என்னால் உணர முடிந்தது .ரெண்டும் கெட்டான் வயசுல ஒரு சின்னப் புள்ள கிட்டக்க நிக்கும் போது இந்த மூதேவி இப்படியா உளறித் தொலைப்பா ? கிராதகி .இப்படியெல்லாம் பாட்டி மனதிற்குள் அவளைத் திட்டி இருக்கலாம். நான் அவளிடம் கேட்கவில்லை
ஏன்...எதற்கு ...எப்படி என்றெல்லாம் ?!
சந்திரிகா அப்படி என்ன பதில சொன்னாள் ?
தெரிந்து கொள்ள நாளை வரை காத்திருங்கள் ...
தொடரும் ..................................................................................

Thursday, March 12, 2009

கோபால் தாத்தாவும் ...மழைக் கஞ்சியும்

நீங்கள் பார்த்திருக்கிறீர்களா கட்டை விரலில் பல் துலக்குபர்களை ?!

நான் பார்த்திருக்கிறேன் என் பால்ய வயதில் கிட்டத் தட்ட தினமும் ,கோபால் தாத்தா அப்படித்தான் பல் துலக்குவார். என் தாத்தா வீடு அந்தத் தெருவில் இருபுறமும் நீளமான திண்ணைகளுடன் சற்றே உயரமான வாசல் படிகளுடன் இருந்ததில் எதிர் வீட்டு பாத்ரூமில் கட்டை விரலில் பல் தேய்த்துக் கொண்டிருக்கும் கோபால் தாத்தாவுடன் இங்கிருந்தே சர்வ சகஜமாக உரையாடலாம் .பெரும்பாலும் என் தாத்தா அவருடன் அப்படித் தான் பேசிக் கொண்டிருப்பார் எல்லா காலை நேரங்களிலும்.

பெயருக்குத் தான் அது பாத் ரூமே தவிர யதார்த்தத்தில் அது ஒரு திறந்த மேற்கூரைகளுடன் அரைகுறையாகக் கட்டப் பட்ட ஒரு வெளிப்புற அறை .அங்கே தண்ணீர் தொட்டி,கழுநீர்ப் பானை ,அடிப்பாகம் உடைக்கப் பட்டு கவிழ்க்கப் பட்டிருக்கும் ஒன்றிரண்டு மண்பானைகள் (முளைப்பாரி போடும் காலங்களில் இதற்க்கு டிமாண்ட் ஜாஸ்தி. ஊரெல்லாம் இந்த உடைந்த மண் பானையின் மேற்புரத்திற்காக அலைவார்கள். சரி கோபால் தாத்தாவைப் பற்றி சொல்கிறேன்.

அப்போதெல்லாம் ஊரில் ரொம்ப நாட்கள் மழை வரத்து இல்லை என்றால் உடனே இளசுகளும் பெருஷுகளும் ஒன்றாகச் சேர்ந்து "மழைக் கஞ்சி" எடுப்பார்கள் . இதை தெலுங்கில் "வான கெஞ்சி" என்பது வழக்கம்.

"வானா லேது...வர்ஷா லேது

வான கெஞ்சி பொய்யண்டி;

புழுவா லேது புல்லா லேது

புல்லா கெஞ்சி பொய்யண்டி "

இதற்கான தமிழ் வடிவம் ...

"மேகம் இல்லை மழை இல்லை

மழைக் கஞ்சி ஊற்றுங்கள்

புழுக்கள் இல்லை புல்லும் இல்லை

புளித்த கஞ்சியாவது ஊற்றுங்கள் "என்பதாகும் .இந்த வரிகளை

கேலியும் கிண்டலுமாகப் பாடிக் கொண்டே கிராமம் முழுக்க வலம் வந்து ஜாதி வித்யாசம் பாராமல் எல்லா வீடுகளிலும் இருக்கும் பதார்த்தங்களை (கம்பு சோறு,கேழ்வரகுக் கூழ் ,அரிசி சோறு ,புளித்த தண்ணீர் ஊற்றி ஊற வைத்த பழைய சாதம் முதற்க் கொண்டு உப்புக் கருவாடு ...கத்தரிக்காய் புளிக் கூட்டு ,பச்சை வெங்காயம் ...பருப்பு ,பாசிப் பருப்பு துவையல்,கானத் துவையல் (குதிரை சாப்பிடுமே கொல்லு அது தான் கானப் பயிர் ...கொல்லுத் துவையல் சாப்பிட்டால் எடை குறையும் என்று எதிலோ படித்தேன்).இப்படி சகல வீடுகளிலும் போடப் படும் எல்லா உணவுகளையும் ஒரு பெரிய பாத்திரத்தில் சேகரம் பண்ணிக் கொண்டு ஊரின் எல்லாத் தெருக்களையும் பாட்டுப் பாடிக் கொண்டே கொண்டாட்டமாக சுற்றி வருவார்கள்.

கடைசியில் இந்தக் கூட்டம் ஒரு வழியாக கம்மாய்கரையை அடைந்ததும் சேகரித்த உணவுகளை எல்லாம் கைகளால் அள்ளி அள்ளி எல்லாரும் உண்பார்கள் ,சில ஊர்களில் தேங்காய் சிரட்டை ,அரச இலைகளில் கூட பங்கிட்டு உண்பார்கள் .சாப்பிட்டு முடித்ததும் இயற்கை குளியலை கம்மாய் நீரில் நன்றாய் துழாவிக் குளித்து விட்டு சரியாகக் காய்ந்தும் காயாத ஈர உடைகள் மற்றும் ஈரத் தலைமுடிகள் சிலும்பிக் கொண்டு காற்றில் ஆட சாயங்கால வேளைகளில் வீடு திரும்புவார்கள் .

இதற்கும் கோபால் தாத்தாவுக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா? மழைக் கஞ்சி எடுக்கும் போதெல்லாம் எங்கள் ஊரில் கோபால் தாத்தா தான் தலைமை தாங்குவார். (ஹா..ஹா...ஹா ...இந்த மழைக் கஞ்சி கூட்டத்தில் தலைமை தாங்குவது என்பது கூட்டத்தில் பேசுவதைப் போல அல்ல ...வீடு வீடாகப் போய் ;

"வான கெஞ்சி பொய்யண்டி "என்று கெத்து பாராமல் கேட்க வேண்டும் .அது தான் இந்த விழாவின் தலைவர் ஏற்க்க வேண்டிய அதிமுக்கியமான பொறுப்பு .கோபால் தாத்தா அந்தப் பொறுப்பை செவ்வனே செய்வார் மூன்று நான்கு வருடங்களுக்கு ஒருமுறை.வானம் பார்த்த பூமி அந்தக் கிராமாம் .நல்ல வெயில் காலங்களில் பொழுது போகவில்லை என்றால் இப்படி குழு குழுவென மழைக் கஞ்சி எடுத்து விடுவார்கள் அப்போதெல்லாம்.

வருண பகவான் உடனே மனமிரங்கி மழை கொட்டோ கொட்டென்று கொட்டி விடும் என்ற நம்பிக்கை ...இது ஊர் ஐதீகம் அந்நாட்களில் .அகஸ்மாத்தாக மழை கொட்டியும் இருக்கிறது சில மழைக் கஞ்சி கொண்டாட்டங்கள் முடிந்ததும் .

இன்றைக்கு "மழைக் கஞ்சி" என்ற சொல்லே பலருக்கு மறந்திருக்கலாம்.

சும்மா ஒரு பகிர்வு . வாசித்து விட்டு பின்னூட்டமிடுங்கள்.

Wednesday, March 11, 2009

ஒற்றனும் மகா ஒற்றனும் (அசோகமிதரனின் ஒற்றன் ஒரு மேலோட்டமான நோக்கில்)

ஒற்றனை வாசிப்பவர்கள் கட்டாயம் இவர்களை மறக்க முடியாது.

யார் அவர்கள்?

ஜான் பீன்

இலாரியா

வபின்ஸ்கி

வென்டூரா

அபே குபேக்னா

பிராவோ

விக்டோரியா

கஜூகோ

ஜிம்

சூஸி

இன்னும் சிலரும் இருக்கத்தான் செய்கிறார்கள் ...ஆனாலும் கவனம் கலைப்பது இவர்களே ,மேலும் இந்நாவலில் "டகரஜான்" என்றொரு பெயர் வருகிறது...கஜூகோ தன் இந்திய எழுத்தாள நண்பரை இவ்விதம் அழைக்கிறாள் .அவ்வகையில் "டகரஜான்" என்பது நமது நாவல் ஆசிரியர் அசோகமித்திரன் தான் என்பது புலனாகின்றது.அசோகமித்திரன் எங்கனம் டகரஜான் ஆனார் என்பது கொஞ்சம் புரிந்தும்..புரியாமலும் இருக்கையில் அடுத்தடுத்த அத்தியாயங்கள் ஈர்க்கின்றன .ஆங்கில உச்சரிப்பில் இப்படியும் பெயர் திரிந்து போகலாம் என்பது புரிய சற்று நேரம் ஆகத் தான் செய்கிறது.

சரி இனி நாவலுக்குள் செல்வோம் .

நாவலின் முகப்பில் ஆசிரியர் கூறி இருப்பதைப் போல ...

இங்கே ஒரு நாயகன்...ஒரு களம்(ஐக்கிய அமேரிக்கா )

ஒரு கால கட்டம்-(1973- 1974) .......அமெரிக்காவின் அயோவா சிட்டி பலகலைக் கழகத்தில் நடைபெறும் "சர்வ தேச எழுத்தாளர்கள் கலந்து கொள்ளும் ஒரு கருத்தரங்கத்திற்கு இந்தியாவின் சார்பில் நமது நாயகன் அழைக்கப் படுகிறார், நாயகன் இங்கு எழுத்தாளர் அசேரகமித்ரனாகவே இருக்கக் கூடும் .

வெறும் ஒருநாள்...ஒரு வாரத்தில் முடியும் நிகழ்ச்சி அல்ல அது...சுமார் ஏழு மாதங்கள் சக அயல் தேசத்து எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்கள் இவர்களைத் தவிரவும் அயோவா பல்கலை கழகத்தில் பயிலும் இதர மாணவ மாணவிகள் இவர்களுடனே உண்டு உறங்கி பயணித்து முடிக்க வேண்டிய ஒரு நிகழ்ச்சி அது.

அங்கே எழுத்தாளர் சந்திக்கும் பல்வேறு மாறுபட்ட குணாதிசயங்கள் கொண்ட மனிதர்களையும் ...அவர்களுடைய திறமைகள் மற்றும் அடாவடித் தனங்கள்...சில நேரங்களில் முட்டாள் தனங்கள் ...இயலாமைகள்,மனித குணங்களின் பல மாறுபட்ட பல வடிவங்களை தமது அனுபவங்களின் வாயிலாக சிறு நகைச்சுவை இழையோட தொகுத்து அளித்துள்ளார்.

ஜான் பீன் என்பவன் இவர்களை ஒருங்கிணைத்து அழைத்துச் செல்லப் பணிக்கப் பட்ட ஒரு அமெரிக்க விரிவுரையாளன் .முதல் aத்தியாயத்தில் அறிமுகம் ஆகி இடையிடையே சில இடங்களில் தென்பட்டு கடைசியில் டகரஜானை இந்தியாவுக்கு விமானம் ஏற்றி அனுப்பி வைக்கும் வரை நாம் ஜானை நாவலில் புறக்கணிக்க இயலாது. தன் பணியை செவ்வனே செய்யும் ஒரு மனிதனாக இவனை ஆசிரியர் அறிமுகப் படுத்தியுள்ளார்.அவ்வளவே!

அடுத்த நபர் வென்டூரா ...பிரேசிலைச் சேர்ந்த நீக்ரோ இனத்தவன் ஆன வென்டூரா கொஞ்சமே நாவலில் வந்தாலும் மிக அழுத்தமான குணாதிசயம் .சிவப்பு ஒயினை அளவுக்கு அதிகமாக அருந்தி விட்டு மிசிசிப்பி நதிப் பயணத்தின் போது கூடை கூடையாக டகரஜானின் மீது வாந்தி எடுக்கும் போதாகட்டும் ...இப்போதே வா என வற்ப்புறுத்தி அழைத்துச் சென்று "கே. மார்ட் எனும் பிரபலமான அமெரிக்க சூப்பர் மார்க்கெட்டில் "டைப் ரைட்ட்ர்" வாங்கும் போதாகட்டும் ...வாங்கிய சாதனத்தை உபயோகிக்கத் தெரியாமல் ரிப்பேர் செய்து விட்டு உடனே டகர ஜானை அடம்பிடித்து அழைத்துப் போய் வேறு " டைப் ரைட்ட்ர் "வாங்கிக் கொண்டு வந்ததாகட்டும் .வென்டூரா ஒரு வித்யாசமான நபர் இங்கு .

முதல் முதலாக அறிமுகப் படுத்திக் கொள்ளும் இடத்தில் ;

அசோகமித்திரன் "நான் இந்தியாவில் இருந்து வருகிறேன் என்கிறார்...வென்டூராவிடம்; அதற்க்கு வென்டூரா ..."பிரேசில் "என்கிறான். பதிலுக்கு அசோகமித்திரன் "ரொம்பப் பக்கம் தான் " என்று கூற ...வென்டூரா ...இல்லை வெகு தூரம் என்கிறான். அதற்கான காரணம் புரியாமல் யோசிக்கும் போது தான்...அவனுக்கு ஆங்கிலம் அதிகம் தெரியாது என்ற உண்மை புலப் படுகிறது.வெறும் வார்த்தைகள் தான் ஆனாலும் எத்தனை அர்த்தமுள்ளதாக்கி விட்டான் அந்த பிரேசில் நாட்டு எழுத்தாளன் என்று ஆச்சர்யம் வரத்தான் செய்யும் வாசிப்பவர்களுக்கு. மொழி தெரியாதவர்கள் மிக அருகில் இருப்பினும் இடைவெளி ரொம்ப தூரமே தான்.உண்மை தானே!?

இங்கே இலாரியாவை நாம் மறந்து விட முடியாது.தகப்பனது அன்பு உரிய வகையில் கிடைக்காமல் தாயின் அரவணைப்பில் வளர்ந்த இலாரியா தன் தாயை தினம் அடித்து கொடுமைப் படுத்தும் தகப்பனை வெறுக்கிறாள். கூடவே தான் நம்பிக் காதலித்த தன் காதலனும் தன்னை நம்பிக்கை துரோகம் இழைக்கவே அவள் மிக நொந்து சுய இறக்கத்தில் ஆழ்ந்து விடுகிறாள். பல மொழிப் புலமை கொண்ட இளம்பெண்ணான இலாரியா ஒருகட்டத்தில் டகரஜான் அவளிடத்தில் காட்டும் சின்னப் பரிவுக்கே அவரைக் காதலிக்கத் தொடங்கி விடுகிறாள். இதை அறிந்து அவளைத் தவிர்க்க விரும்பும் டகரஜான் அவளுக்காக வருந்துகிறார். பாவம் இலாரியா என்று நினைப்பதைக் காட்டிலும் அவளுக்கு அவர் சுய இரக்கத்தில் இருந்து மீண்டு வந்தால் அவளுக்கு இருக்கும் திறமைக்கு அவள் மிகப் பெரிய புகழ் அடையக் கூடும் என்று உற்சாகப் படுத்திவிட்டு பின் அவளது கண்களில் படுவதை தவிர்த்து விடுகிறார். இங்கே இவரது தர்ம சங்கடம் சில சொற்களில் நமக்கு வெகு அருமையாக விளக்கப் பட்டிருக்கும்.

குறிப்பாக எத்தியோப்பிய நாவலாசிரியரான அபே குபெக்னாவைப் பற்றி அவர் விவரிக்கும் இடங்களில் "அங்கதச்சுவை " முழுமை பெற்ற வரிகளை நாம் கண்டு சிரிக்கலாம்.எழுத்தாளர்களிலும் முட்டாள்கள் உண்டு...முரடர்கள் உண்டு ...என்பதை அபே குபெக்னாவை வைத்து அறிந்து கொள்ளலாம்.

அபே தானாக வழிய வந்து தாகறஜாநிடம் சிநேதம் கொள்கிறான்.ஆனாள் அவனது நோக்கம் இவரது சிநேதம் மட்டுமே அல்ல. டகரஜானுடன் சகஜமாகப் பழகும் ஒரு ஜப்பானியப் பெண் கவிதாயினியான "கஜூகோ" வின் தொடர்பைப் பெறவே அபே இவரை வலியத் தேடி வருகிறான். ஆனால் கஜூகோ என்ன காரணத்திற்காகவோ அபேயை வெறுக்கிறாள். அபே உடன் வரின் உன் நட்பும் கூட எனக்கு வேண்டாம் என டகரஜான்(அசோகமித்திரன்) இடம் சண்டையிடும் அளவுக்கு அவளது வெறுப்பு மிதமிஞ்சி நிற்கிறது அபேயிடம் .இதனால் கோபம் கொண்ட அபே நமது இந்திய எழுத்தாளரை ஒரு முறை அடித்தே விடுகிறான். அத்தோடு சரி பிறகு அவன் இவரோடு சிநேதம் பாராட்டவே இல்லை.

அயோவா சிட்டி யில் "டகரஜானை அழைத்துக் கொண்டு அபே சூட் தைத்துக் கொள்ள செல்லும் இடமும் ...வாராந்திர மளிகைச் சாமான் வாங்க அனைத்து எழுத்தாளர்களுடனும் ஷாப்பிங் சென்று மூட்டை மூட்டையாக இறைச்சியும் ...இன்ன பிற பொருட்களோடு "எனக்கு ரொம்பப் பிடிக்கும் ...எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று கூறிக் கொண்டே ஒரு குட்டி சாக்குப் பை நிறைய "மிளகாய்" வாங்கிக் குவித்து அதை எடுத்துக் கொண்டு தங்குமிடம் செல்வதும் மிக்க ரசமான இடங்கள் .மொத்தத்தில் எத்தியோப்பிய அரசரின் தம்பியின் நெருங்கிய நண்பன் என தன்னை கூறிக் கொண்ட அபே குபேக்னா ஒரு மிகச் சிறந்த முரட்டுக் கோமாளியாகவேவாசிப்பவர்களின் கருத்தில் நிறையக் கூடும்.

இவ்விதம் இந்நாவல் சொல்கிறது அபே குபேக்னா பற்றி. அபே குபேக்னா தனது எத்தியோப்பிய மொழியில் எழுதிய நாவலின் தமிழாக்கமே "ஒற்றன்" இந்நாவலை டெல்லி புத்தகத் திருவிழாவில் டகரஜான் எவ்வளவு தேடியும் அவருக்கு கடைசி வரையில் அந்த நாவல் கிடைத்த பாடில்லை .

அடுத்த நபர் பிராவோ ...போலந்து நாட்டு நாவல் ஆசிரியனான "பிராவோ " வெகு துல்லியமான திட்டமிடலுடன் கூடிய ஒரு நபராக தான் டகரஜானுக்கு அறிமுகம் ஆகிறான். ஒரு நாவலுக்கு யாரேனும் வரைபடம் தயாரிக்க இயலுமா? இதை வாசிக்கையில் எனக்கும் ஆச்சர்யமாகத் தான் இருந்தது. ஆனால் பிராவோவின் வரை படத்தை அவன் வாயிலாக விளக்கும் ஆசிரியர் பிராவோ மீது நமக்கும் ஒரு பிரமிப்பையே ஏற்படுத்துகிறார். தனது எழுத்தின் மீது தான் கொண்ட வெறியினால் "நாவல் முடியும் வரை பூட்டிய அறையைக் கூட திறவாமல் "ஏறத்தாழ ஒரு மாத காலம் யார் கண்ணிலும் படாமல் நாவலை தனது தாய் மொழியில் எழுதும் பிராவோ கடைசியில் மிக வருந்துகிறான். காரணம் ஒரு பெண். அது அவன் மனைவி அல்ல.அந்த மட்டில் அவனது குட்டும் வெளிப் படுகிறது. எத்தனையோ அருமையாகத் திட்டமிடலாம். திட்டமிடுவதில் தான் வெகு சாமர்த்தியசாலி எனப் பிறரை நம்பவும் வைக்கலாம் சில காலத்திற்கு ...ஆனாலும் என்றேனும் உண்மை வெளிப் பட்டே தீரும். அப்படியே ஆகிறது, தனது நாவலை முடித்த பின்னும் அதில் பல குறைகள் கண்டு அதை அச்சுக்கு கொண்டு வர முடியாமல் குழப்பத்தில் ஆழ்கிறான் பிராவோ.திட்டமிடுதலில் இருந்த சாமர்த்தியம் அதை நிறைவேற்றுவதில் இல்லாமையால் பிராவோ தன் மனைவியின் வாயால் " இதுவரை நீ எழுதிய நாவல்களை இதுவே மிக மோசமானது" என்று கேலி செய்யப் படுகிறான்.இப்படி முடிகிறது இவனுடன் ஆன நட்பு .அடுத்து வபின்ஸ்கி ...அறைநண்பன் (ஒரே அறையைப் பகிர்ந்து கொள்கிறான்) அறை மாட்டும் அல்ல ஒரே குளிர்பதனப் பெட்டியையும். அவன் நிரப்பி வைத்த பூண்டின் மணம் கமழும் காப்பியை அருந்த இயலாமல் ...அருந்தாமல் இருக்கவும் முடியாமல் டகரஜான் பாடு படு திண்டாட்டம் .அந்த அறையில் தனி இருக்கையிலேயே வபின்ச்கியின் அம்மா இறந்து போக அவனது துயரம் கண்டு தானும் மணம் கலங்குகிறார் ஆசிரியர்.

விக்டோரியாவை பற்றி சொல்ல வேண்டுமெனில் அவள் ஒரு திறமை மிக்க பெண் என்பதை தாண்டி அவள் தனியாக நாவலோ ...கவிதையோ எழுதியவலைப் போல தெரியவரவில்லை இங்கு. சொல்லப் போனால் .மற்ற சக எழுத்தாளர்கள் அனைவரும் எழுதிய அல்லது வாசித்த சில கவிதைகளை ஒருங்கிணைத்து அவள் ஒரு மேடை நாடகம் நடத்திக் காட்டினாள்.அதில் நமது "ஞானக் கூத்தனின் "அம்மாவின் பொய்கள் என்ற கவிதையும் இடம் பெற்ற பொது அந்த நாடகத்தின் அர்த்தமே கனமுள்ளதாகி பலரையும் ரசித்துக் கை தட்ட வைக்கிறது. இதைக் கண்டு வியந்து போய்த்தான் டகரஜான் அவளிடம் பேசுகிறார். ஆக விக்டோரியாவும் இங்கே மறக்க முடியாத பெண்ணாகிறாள்.

இவளோடு கூட காணும் சக எழுத்தாளர்கள் அனைவரோடும் நட்பு வளர்க்கவே விரும்புபவலான ஜப்பானிய கவிதாயினி "கஜூகோ" இவள் தனக்குப் பிடித்த நண்பர்கள் அனைவரையுமே கட்டிக் கொண்டு முத்தமிடுவது இன்னும் அங்கதம். இவளுக்கு ஏனோ ஆப்பிரிக்கர்களை மிகப் பிடித்திருந்தும் "அபே குபெக்னாவை மட்டும் மிக வெறுக்கிறாள்?!" என்ன செய்திருக்கக் கூடும் அபே?! புரிந்தும் புரியாத புதிர் !!! ஒருவேளை அபே அவளுக்கு ஒரு முள்ளம் பன்றி போலக் கூட தோன்றி இருக்கக் கூடுமோ என்னவோ?!இப்படித் தான் விவரிக்கிறார் ஆசிரியர் இவளை.

பிறகு ஜிம் ...மற்றும் சூஸி...ஜிம் ஒரு அற்புதமான ஓவியன். சூஸி "உலோக கலைப் பொருட்கள் மற்றும் வார்ப்பட கலைப் பொருட்கள் தயாரிப்பதில் நிபுணி ...அவளது கற்பனையில் உதிக்கும் உருவங்களை எல்லாம் கலைப் பொருட்கள் ஆக்குவதில் அவள் திறம் மிக்கவள். இருவரும் ஒரே வீட்டில் ஒரே அறையில் கூட சேர்ந்து வாழ்கிறார்கள். ஆனால் தம்பதிகள் அல்ல!சூஸி யின் கணவன் மிகப் பெரும் பணக்காரன்.சூஸி க்கு விவாகரத்து தர மறுக்கும் அவளது கணவன் "புதிதாக அவளைச் சந்திக்க வரும் நபர்கள் அனைவரையுமே அவளது புதுக் காதலர்கள் என்றே எண்ணிக் கொள்வானாம்.! "ஜிம்மி சந்திக்க வரும் டகரஜானையும் அவன் சூச்யின் புது அன்னியக் காதலன் என்று எண்ணிக் கொண்டு துப்பாக்கியைத் தூக்கி கொண்டு சுட்டுக் கொள்ளத் தேடும் போது பயத்தோடு சிரிப்பும் வெடித்துக் கொண்டு தான் கிளம்புகிறது.

ஒரு எழுத்தாளர் அந்நிய மண்ணில் சர்வ தேச எழுத்தாளர்களை சந்தித்து ஏழு மாதங்கள் தங்கி அவர்களது கலாசாரத்தை கொஞ்சமேனும் அறிந்து கொண்டு நமது இந்தியக் கலாச்சாரத்தை இத்தன்னூண்டாவது அவர்களுக்கும் புரிய வைக்க முடிந்ததோ இல்லையோ ஏராளமான வாழ்வியல் அனுபவப் பாடங்களை அவர் கற்றுக் கொண்டார் என்ற நிஜம் இந்நாவல் மூலம் நமக்கு உறைக்கத்தான் செய்கிறது. இங்கு அசோகமித்திரன் அவர்கள் தனக்கு அங்கு நேர்ந்த சம்பவங்களை அல்லது தான் சந்திக்க நேர்ந்த விஷயங்கள் அனைத்தையும் மெல்லிய நகைச்சுவை இழையோட "புனை கதை "வடிவில் அளித்துள்ளமை அருமை.

அமெரிக்க குளிர்...அங்குள்ள பஸ்கள் இயங்கும் முறை ...அமெரிக்க குடும்பங்களின் விருந்தோம்பும் முறைகள் ...பனியில் உறைந்து உறைந்து விரைத்துப் போக முயலும் விரல்களை தணலில் காட்டி வெம்மை ஏற்றுவதைப் போலவே அங்கே குளிர் தாங்காது உழலும் போதும் கூட இங்கே இந்தியாவில் தனது குடும்பம் மற்றும் வீட்டைப் பற்றி எழும் நினைவுகளை அசை போடுவதிலும் அசோகமித்திரன் தனது தனித்துவத்தை பதிந்து செல்கிறார். மகன்...மனைவியுடன் தொலைபேசியில் உரையாட எழும் எண்ணம்...சென்னையின் மழைக் காலம் என்று அவர் தொட்டுச் செல்லும் இடங்கள் எல்லாமே வாசிக்க அருமையாகத் தான் இருந்தன எனக்கு.... மற்றவர்களுக்கு எப்படி என்று இந்த நாவலை வாசித்தவர்கள் யாராயினும் எனக்கு பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம்.

நாவல் : ஒற்றன்

ஆசிரியர்: அசோகமித்திரன்

வெளியீடு : காலச் சுவடு பதிப்பகம்

விலை : ரூ .100

Friday, March 6, 2009

எங்கள் சரஸ்வதிகள் ...

எங்கள் சரஸ்வதிகள் ...
மார்ச் -8 மகளிர் தினம் .
என்ன எழுதுவது ?
ஏதாவது எழுதி ஆக வேண்டுமே என்றதும் சட்டென்று நினைவில் நிழலாடியவர்கள் எனக்கு பால்வாடியில் இருந்து கல்லூரிக் காலம் வரை கல்வி கற்பித்த சரஸ்வதிகளே!
பால்வாடியில் இருந்து ஆரம்பிக்கிறேன் ...அது தான் சரியான முறை.
"நவநீதம் என்றொரு ஆசிரியை "...இன்னும் நன்றாக ஞாபகத்தில் இருக்கிறார்.மிஞ்சிப் போனால் 4 வயதிருக்கும் எனக்கு.இன்னும் மறக்கவில்லை அவர் முகம்.ஒடிசலாய் கமலா காமேஷ் போலிருக்கும் அந்த டீச்சரை அங்கு அப்போது படித்து வந்த எங்கள் எல்லோருக்குமே ரொம்ம்பவே பிடிக்கும்.
அம்மா
ஆடு
இலை

...இதெல்லாம் அவர் தான் அறிமுகப் படுத்தினார் .இப்போது என் மகளுக்கு தமிழ் கற்பிக்க உட்காரும் போதெல்லாம் தவறாமல் நவநீதம் டீச்சரும் ஞாபகத்தில் நிழலாடுகிறார்.
அடுத்து "ஒன்றாம் வகுப்பு ...இங்கே கனகவல்லி டீச்சர் "...டீச்சருக்கு அநேகம் பேரை பிடிக்காது ...டீச்சரையும் எல்லா மாணவர்களுக்கும் எல்லாம் பிடிக்காது .காரணம் கனகவல்லி டீச்சர் எப்போதுமே சரியாக வீட்டுப் பாடம் செய்யாதவர்களை வயிற்றைப் பிடித்துக் கொண்டு கிள்ளுவார். வலிக்கும்.அந்த வலி தான் அவர்களை எப்போதும் மறக்காமல் ஞாபகம் வைத்துக் கொள்ள உதவுகிறது.
என்றாலும் இப்போதெல்லாம் டீச்சரை எங்கேனும் காண நேர்ந்தால் முன்பு போல கிள்ளுவாரோ என்று சற்று ஓரம் ஒதுங்கியே மரியாக்தை நிமித்தம் "நல்லா இருக்கீங்களா டீச்சர்?!" என்று கேட்டு விட்டால் போதும் டீச்சர் கண் கலங்கி விடுவார். அப்போது பிடிக்காத டீச்சர் இப்போது எல்லோருக்கும் பிடித்தவராகி விட்டார்.வயோதிகத்தில் அவரைப் பார்க்க நெஞ்சில் எதோ கலக்கம் நிழலாடவே செய்கிறது(பின்னே நமக்கும் வயதாவதை டீச்சரின் மரியாதை பன்மை உணர்த்துவதைஎப்படி விளக்க?)
இரண்டாம் வகுப்பில் பாஞ்சாலி டீச்சர் ...சுருள்...சுருளான கேசம்...குவைத் சேலை என்று அப்போது ஒரு சேலை ரகம் படு பிரபலம் ...டீச்சரின் தம்பியோ ,அண்ணனோ அப்போது குவைத்தில் இருந்தார்கள் போல?! டீச்சர் விதம் விதமாய் கலர்..கலராய் பூக்களும் கோடுகளும் விரவிய அந்தச் சேலைகளைப் படு பாந்தமாக உடுத்திக் கொண்டு வருவார்.அதோடு கண்டிப்பான டீச்சரும் கூட .அவரது சின்சியாரிட்டியைப் பார்த்து இப்போது கூட வியப்பு வரும்.ரொம்பவும் பெர்பெக்சன் அவர் அவரது பணியில்.திட்டுவதோ ...கில்லுவதோ அன்றி ஒரே உருட்டுப் பார்வையில் எங்கள் எல்லோரையுமே சமாளிக்கும் கலையை அவர் எங்கு கற்றிருப்பாரோ அப்போது ஆச்சரியப் பட்டிருக்கிறோம்.அவரிடம் பயின்ற ஓராண்டு முழுக்கவே நாங்கள் வீட்டுப் பாடத்தை தவற விட்டதே இல்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் அவரது திறமையை . இரண்டாம் வகுப்பில் இரண்டு செக்சன்கள் இருந்ததால் அவரது வகுப்பில் பயில நீ...நான் என்று போட்டி கூட உண்டு அப்போது.
மூன்றாம் வகுப்பில் ...அம்மாவின் பணி மாறுதல் காரணமாக வேறு ஒரு ஊரில் ஒரு கிருஸ்தவ நடுநிலைப் பள்ளியில் படித்தேன்.அங்கே எனக்கு மூன்றாம் வகுப்பு எடுத்தவர் எஸ்தர் ராணி டீச்சர் ...முக்கால் வருடம் மட்டுமே அங்கு படித்ததால் பள்ளியின் அட்மாஸ்பியர் பழகவே எனக்கு முக்கால் வருடத்தில் பாதி வருடம் ஓடி விட..மிஞ்சியத்தில் அந்த வருடம் எனக்கு ஞாபகம் இருப்பது ,எஸ்தர் டீச்சர் எப்போதும் தவறாது வலது கையில் அணியும் சிவப்பு நிற பிளாஸ்டிக் மோதிரம் தான்.அதன் முகப்பில்"அன்னை மேரியின் படம் இருக்கும்.,குழந்தை ஏசுவைக் காட்டிக் கொண்டு) இந்த மோதிரம் வாங்கி டீச்சர் போலவே வலது கையில் அணிந்து கொண்டு கரும் பலகையில் எழுதுவதாக நாங்கள் அப்போது பாவனை செய்ததெல்லாம் இன்றைக்கு இனிக்கும் நினைவுகள் .
நான்காம் வகுப்பில் ...கிருஷ்ண வேணி டீச்சர்
ஐந்தாம் வகுப்பில் ....சரோஜினி டீச்சர்
இவர்கள் இருவருமே ரொம்ப ஒற்றுமையான டீச்சர்கள் ...பாடம் எடுத்த நேரம் போக மீதி இடைவேளை நேரங்களில் எல்லாம் அவரவர் வாங்கிய புது சேலைகள் ...நகைகள்...பள்ளியில் மாற்ற டீச்சர்களைப் பற்றிய பொது விஷயங்கள்(!!!) இப்படி எதையேனும் பேசிக் கொண்டிருப்பார்கள் ...அவ்வப்போது ஆபிஸ் ரூமில் இருந்து ஜில்லென்று மண் பானைத் தண்ணீர் சொம்பில் நிரப்பி வர எங்கள் பக்கம் திரும்புவார்கள். "டீச்சர்களுக்கு தண்ணீர் கொண்டு வந்து தர...எங்களுக்குள் நீ...நான் என்று ஓட்டப் பந்தயமே நடக்கும்!" அப்போது அதிலொரு சுவாரஷ்யம் இருக்கத்தான் செய்தது?! இப்போதும்" சோழர் காலம் இந்தியாவின் பொற்காலம்" என்று எங்கேனும் காதில் கேட்க நேர்ந்தால் எனக்கு சரோஜினி டீச்சர் ஞாபகம் வரும். "நான்கு திசைகள் பாடம் கேட்க நேரும் போது கிருஷ்ணவேணி டீச்சர் நிழலாடுவார் .அதென்னவோ அவர்களைப் பற்றி நினைத்துக் கொள்ள எத்தனையோ சம்பவங்கள் இருந்த போதிலும் இப்படிச் சில குறியீடுகள் தானாகவே அமைந்து விடுகின்றன அதன்பாட்டில் .
ஆறிலிருந்து எட்டுவகுப்பு வரையிலும் சார்களே கோலோச்சினர் ...நோ டீச்சர்ஸ் அந்த காலகட்டங்களில்.
மறுபடியும் ஒன்பதாம் வகுப்பில் "சந்திர பாய் டீச்சர் " என் கல்விக் காலங்களில் எனக்கு மிகவும் பிடித்த ஆசிரியை என்றால் அது இவர் தான் .அதென்னவோ டீச்சருக்கு என்னை ரொம்பவும் பிடிக்கும்...நான் எப்போதுமே முதல் மூண்டு ரேங்க் மட்டுமே வாங்குவேன் என்று நம்பிய அப்பாவி டீச்சர் அவர் !நான் அவரிடம் பயிலும் போது டீச்சர் நடுத்தர வர்க்கத்தில் இருந்தார்...அவருக்கு மூன்று மகன்கள் ...ஒரே ஒரு செல்ல மகள்...டீச்சர் பல சமயங்களில் தன் மகளை அழைக்கும் செல்லப் பெயரில் என்னையும் எதோ நினைவில் அழைத்து விட்டு பிறகு ஒரு அசட்டுச் சிரிப்பை உதிர்ப்பார் ...எனகென்னவோ அப்போது அந்தச் சிரிப்பை நாளெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கலாம் போல இருக்கும்.
"பத்தாம் வகுப்பு ...அனுராதா டீச்சர் "...இவர் அடிப்படையில் கணித ஆசிரியை ...எனக்கோ கணக்கு பெரும் பிணக்கு ...அதனால் பத்தாம் வகுப்பில் காலாண்டுத் தேர்வுக்கு முந்தைய காலம் வரை டீச்சரின் வெறுக்கப் படும் மாணவிகள் லிஸ்டில் நான் இருந்திருக்கக் கூடும்...ஆனாள் எப்படியோ காலாண்டில் டியுசன் எல்லாம் வைத்துப் படித்து கணிதத்தில் 95 மார்க் எடுத்து கொஞ்சமாக டீச்சரின் அன்பைப் பெற்றாயிற்று ...ரொம்பக் கஷ்டமாகத்தான் இருந்தது ...டீச்சரின் அபிமானம் அல்ல ...கணிதப் பாடம்!
"பதினோராம் வகுப்பு...கலாமணி டீச்சர்" இவர் என் உறவுக்காரர் ...ஆனாலும் டீச்சர் அதை எல்லாம் பள்ளியில் பார்ப்பதே இல்லை. இவரது தனிச் சிறப்பு "கரும் பலகையில் எழுத ஆரம்பித்து விட்டார் என்றால் அவரது வகுப்பு (இவர் வேதியியல் பாடம் எடுப்பார்) முடியும் வரை எங்கள் பக்கம் திரும்பவே மாட்டார். அப்படி என்ன விரதமோ?! என்ன தான் உறவென்றாலும் கேட்கத் துணிந்ததில்லை .நிறைய தேர்வு டிப்ஸ் தருவார் .அழகான தோற்றம் இருந்தாலும் பெரும்பாலும் கைத்தறி சேலைகள் அணிவதை விரும்புவார். நகைகள் அணிவதிலோ...நிறைய பூக்கள் சூடிக் கொள்வதிலோ கலாமணி டீச்சருக்கு எப்போதுமே விருப்பம் இருந்ததில்லை நாங்கள் அறிய ...புத்தகமும் கையுமாகவே இருப்பார்.சக டீச்சர்களிடமும் அளவான "நறுக்" பேச்சு தான்.இவர் ஓர் அபூர்வப் பிறவியென்று தோன்றும் எங்களுக்கு.
"பன்னிரெண்டாம் வகுப்பு ...பாண்டியம்மாள் டீச்சர் " இவரை இப்போதும் கூட எங்காவது சந்திக்க நேரும். மிக தோழமையான டீச்சர் .எனக்கு கணித பாடம் எடுத்தார் 12 ஆம் வகுப்பில் ...டீச்சர் எங்கள் வீட்டு மாடியில் குடியிருந்த காரணத்தால் எப்போது வேண்டுமானாலும் டவுட் கேட்கலாம் நான். சுணங்காமல் ...முகம் கோணாமல் எனக்கு கணித சூத்திரங்களைப் புரிய வைப்பார்.என் அம்மாவும் டீச்சரும் நல்ல தோழிகள் என்பதும் ஒரு காரணம். டீச்சரின் ஐந்து வயது (அப்போது...இப்போது அந்த சின்னப் பெண் பள்ளி இறுதி வகுப்பு )மகள் எந்நேரமும் எங்கள் வீட்டில் தான் இருப்பாள் .
அடுத்து கல்லூரிக் காலம் ...
இங்கு எத்தனையோ ஆசிரியைகள் ...
யாரை சொல்வது...யாரை மறக்க இயலும்?
எங்கள் துறை தலைவரான "ஸ்ரீ லதா மேடம்...ஆன்சிலரி கெமிஸ்ட்ரி பாடம் எடுத்த "ஜெய சித்ரா மேடம்...தமிழ் பாடம் கற்பித்த "அருளமுதம் மேடம் ...சங்கீதா மேடம் ...ஆங்கில இலக்கியம் கற்பித்த " அருள் தெரேசா மேடம்...இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் ....!ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் தனிச் சிறப்பு மிக்கவர்கள். "ஸ்ரீ லதா மேடம் கண்டிப்பானவர்கள் என்றால் ...ஜெய சித்ரா மேடம் ரொம்ப பிரெண்ட்லி ...அருளமுதம் மேடம் ..."கல்சுரல்ஸ் " போவதென்றால் எங்களுக்கு அருளமுதம் மேடம் தான் வர வேண்டும் என்று ஒரே போட்டா போட்டியாக இருக்கும்."அருள் தெரேசா மேடம் ரொம்ப சாப்ட் ..இப்படி இவர்களைப் பற்றிச் சொல்லிக் கொண்டே போகலாம் .
மகளிர் தினம் என்ற ஒரு தினம் வந்தது நல்லதைப் போயிற்று இவர்களை எல்லாம் மீண்டுமொருமுறை நினைத்துப் பார்க்க...
தேங்க்ஸ் டு மகளிர் தினம் .

Monday, March 2, 2009

"யாமம்" ஓர் அர்த்த ஜாமப் பார்வையில் ...;

" யாமம்"ஓர் அர்த்தஜாமப் பார்வையில் ...?!

இந்தியாவில் மிளகு வாங்கி விற்றுக் கொண்டிருந்த டச்சுக் காரர்கள் அதன் விலையை கன்னா பின்னாவென்று உயர்த்தி பதுக்கி வைத்து விற்க முனையவே வந்தது ரோஷம் இங்லாந்துக்காரர்களுக்கு மள மளவென்று ராணி எலிசபெத்தை கொடுக்க வேண்டிய அன்பளிப்புகளைக் கொடுத்து சரிக் கட்டி நன்னம்பிக்கை முனை தாண்டி கடல் பயணம் மேற்கொண்டு வியாபாரம் செய்ய அனுமதி ஒப்பந்தத்தில் கையொப்பம் வாங்கிக் கொண்டு ...புறப்பட்டே விட்டார்கள் பலபல பேராசைக் கனவுகளுடன் ...!

முதல் தடவை கப்பல் கடலில் மூழ்கியது ...

வியாபாரிகள் கடலில் சிதறி ஆளுக்கொரு திசையில் காணாமல் போனார்கள் ...

இரண்டாம் முறை வில்லியம் ஹாக்கின்ஸ் தலைமையில் புறப்பட்ட கப்பல் சூரத்தில் வெற்றிகரமாக நங்கூரமிட்டதாம் . எல்லாம் இந்த மிளகால் வந்த வினை?!வெள்ளையர்களின் பெரும்பான்மை உணவான இறைச்சியை வெறும் உப்பிட்டு மட்டும் உண்பதென்பது நினைக்கச் சகிக்காத விஷயம்.

காரம் அதிலும் மிளகின் காட்டமான காரம் அத்தனை மாயம் செய்கிறது சாப்பாட்டு விசயத்தில்.

அடுத்த படியாக வெள்ளையரின் இந்திய வருகையை ஆதரித்த பெருமை பேரரசர் ஜகாங்கீரை சேரும் ...டெல்லி பாதுஷா ...ஆலம்கீர் இன்னும் என்னென்னவோ பட்டங்கள் .அதில் ஒரு பட்டம் வெள்ளை ஆதரவாளர் .

ஜகாங்கீரின் ஆங்கிலேய மோகத்தைப் பற்றி அறிய விரும்புவோர் சிரமமம் பாராமல் மதன் எழுதிய"வந்தார்கள் வென்றார்களை " மற்றும் ஒருமுறை புரட்டிப் பார்க்கலாம் .

சற்றேறக்குறைய வரலாற்றை ஒட்டிய நிகழ்வுகளைக் கொண்ட புதினம் என்பதால் லாம்டனின் நில அளவைப் பணியில் இந்த நாவலின் ஹீரோ ஹீரோ என்று சொல்வதைக் காட்டிலும் "பத்ரகிரியை "வேறு எப்படிச் சொல்வதென்று தெரியவில்லை?! ஏனெனில் கதை யில் அவனது பங்கு முக்கியமானதே.

பத்ரகிரி மட்டுமல்ல அவனைப் போலவே

அப்துல் கரீம் ("யாமம்" என்ற பெயரிடப் பட்ட அத்தர் வியாபாரி )
சதாசிவப் பண்டாரம் (இவரை விடவும் இவரை தன் போக்கில் அழைத்துச் செல்லும் "நீலகண்டம் "எனும் நாய் கூட ஹீரோ தான் இங்கு )

திருச் சிற்றம்பலம் (பத்ரகிரியின் தம்பி )

கிருஷ்ணப்ப கரையாளர் (மேல்மலையின் உரிமையாளர்...தேயிலை ஏற்றுமதிக்கு தனக்கே தெரியாமல் காரணமாகி விட்டவர் என்று நாவல் கூறுகிறது)

இவர்களைத் தவிர பத்ரகிரியின் மனைவி "விஷாலா...எனும் விஷாலாட்சி "

திருச் சிற்றம்பலத்தின் மனைவி "தையல் எனும் தையல் நாயகி "
அப்துல் கரீமின் மூன்று மனைவிகள்


முதல் மனைவி ரஹ்மானியா


இரண்டாம் மனைவி வகீதா


மூன்றாம் மனைவியான பதின் மூன்றே வயதான "சுரையா"


இவர்களில் வகீதாவின் அன்பைப் பெற்ற சந்தீபா எனும் ஏழைச் சிறுவன் .


கிருஷ்ணப்பக் கரையாளரின் காதலியாக வரும் நடுத்தர வயது ஆங்கிலோ இந்தியப் பெண் எலிசபெத் (சட்டைகாரி - இப்படித்தான் சொல்வார்களாம் ஆங்கிலோ இந்தியப் பெண்களை அந்நாளில்)


சதாசிவப் பண்டாரத்தின் அம்மா ...பண்டாரத்தின் நாயுடனான பிரயாணத்தில் இடர்படும் ஒரு பெண் ...இவளுடன் கூடி ஒரு குழந்தை பெரும் தருணத்தில் பண்டாரத்தை நாய் மறுபடியும் தன் போக்கில் இழுத்துக் கொண்டு செல்கிறது.


திருச் சிற்றம்பலம் மேற்படிப்புக்கு லண்டன் செல்லும் பொது கப்பலில் உடன் வரும் இந்திய நண்பனாய் "சற்குணம் "


திருச் சிற்றம்பலத்தின் லண்டன் பேராசிரியர் ...இவனை மகனைப் போல நடத்தும் பேராசிரியரின் மனைவி,


பத்ரகிரி...திருச் சிற்றம்பலம் இவர்களது பாசமற்ற தந்தை ...பாசம் நிறைந்த சித்தி நங்கை ...தையலின் வினோதமான தோற்றமும் செயல்பாடுகளும் கொண்ட"நெல்லிவலை" அத்தை ; அப்துல் கரீமின் கனவில் வந்து அவரது வாழ்வின் பாதையை சில நேரங்களில் தீர்மானித்துச் செல்லும் பக்கீர் அல் முசாபர் .


நில அளவைப் பொறியாளர் லாம்டன் .


நட்சத்திரங்களை கணக்கிடும் இன்னொரு அயல் நாட்டவன் .


அவனுக்கு உதவ பணியமர்த்தப் பட்ட ஏ .எஸ் .ஐயர் .


கிருஷ்ணப்ப கரையாளரின் எஸ்டேட்டில் திருட வந்து மாட்டிக் கொண்ட ஒரு திருடன் ...அவனது உதவியாள நண்பன் ,இப்படி நாவலில் பல கதா பாத்திரங்கள் மனதில் நிற்கவே செய்கின்றன.


கதை சுருக்கம்:-


நாவலை  1. அத்தரும் அப்துல் கரீம் மற்றும் அவரது மூன்று மனைவிகளும்

  2. பத்ரகிரியும் விஷாலாவும் அவர்களது வாழ்வில் இடைப்படும் தையலும்

  3. திருசிற்றமபலத்தின் லண்டன் வாழ்க்கையும் சற்குணத்தின் நட்பும்

  4. சதாசிவப் பண்டாரத்தின் நீலகண்டத்துடனான (நாய்) நெடும் பயணம்

  5. க்ருஷ்ணப்பக் கரையாளர் மற்றும் எலிசபெத்தின் மேல்மலை வாழ்க்கை

இப்படி ஐந்து பகுதிகளாகப் பிரித்துக் கொள்ளலாம் .


வெவ்வேறு மனிதர்களின் வாழ்க்கையை வெவ்வேறு விதமாக நாவல் நகர்த்திக் கொண்டு சென்றாலும் கூட கதை நிகழும் கால கட்டம் கி.பி.1600 இன் பிற்பகுதி என்றவகையில் அனைவரையும் வெள்ளையர்களின் அதிகாரம் ஒன்றிணைக்கிறது.,அதோடு கூட அப்துல் கரீம் ரோஜாக்களில் இருந்து வடித்து எடுக்கும் ஒரு வித வாசனாதி தைலமான "யாமம்" என்ற பெயரிடப் பட்ட அத்தரும் இவர்களின் வாழ்வை ஒன்றிணைத்துச் செல்கிறது.


யாமம் :


யாமம் என்பது இரவின் ஒரு பொழுதை குறிக்கும். அத்தருக்கும் யாமத்துக்கும் வெகுவான சம்பந்தம் உண்டு என்பதாலோ என்னவோ ஆசிரியர் இந்நாவலுக்கு "யாமம்" என்ற பெயர் சூட்டியமை சாலப் பொருந்துகிறது.சங்க இலக்கியங்கள் காட்டும் சிறு்பெழுதுகளில் யாமமும் ஒன்று ;


வைகறை விடியலைக் குறிப்பதைப் போல யாமம் "இரவை" குறிக்கும். இரவுப் பொழுது தம்பதிகளுக்கு இனிமை கூட்டக் கூடிய ஒரு பொழுதல்லவா? அங்ஙனமே இவ்விடத்தில் நாவலில் வரும் எல்லா கதாபாத்திரங்களுமே "யாமத்தல்" ஈர்க்கப் பட்டு அதன் அலாதியான நறுமணத்தில் மிதந்து அதனின்றும் மீட்க அல்லது மீள முடியாதவர்களாகி விடுகின்றனர்.மதரா பட்டினத்தில் வாழும் சகலரையும் அவ்வமயம் இந்த "யாமம் " எனும் அத்தர் ஆட்டிப் படைக்கிறது. இந்நின்னவர்கள் மட்டும் தான் என்று இல்லை அப்துல் கரீமின் அத்தர் கடை இருக்கும் மீர் சாஹிப் மார்க்கெட்டில் எல்லோருமே அத்தர் வாங்கிச் செல்கிறார்கள்.இதனால் அப்துல் கரீமும் அவரது மனைவிகளும் செல்வச் செழிப்பான வாழ்வை அனுபவிக்கிறார்கள்.


அப்துல் கரீம் ஒரு கடல் வணிகர் ...அவரது வாழ்வை அவரது கனவுகளில் அடிக்கடி வரும் "அல் முசாபர் எனும் பக்கீர் " பல சமயங்களில் வழி நடத்திச் செல்கிறார் . இப்படியாக முதல் மனைவி ரஹ்மானியாவுக்குப் பின் வகீதாவை மணந்த அப்துல் கரீம் அதன் பிறகு ஒரு கடல் பயணத்தில் காணாமல் போய் வெகு சிரமப் பட்டு பல ஆண்டுகளின் பின் திரும்பி வருகிறார். அப்போது அவரது கனவில் தோன்றிய பக்கீரின் சொற்படி "வாசனையின் திறவுகோல் " எனும் பெயரில் ஆற்காட்டில் ஒரு ரோஜாத் தோட்டம் அமைக்கிறார்.அங்கு மலரும் ரோஜாக்களில் இருந்தே "அத்தர் " தாயாரிக்கப் பட்டு மதரா பட்டினத்தையே தன் வயமாககுகிறது.


இத்தனை மாயாஜாலங்கள் செய்யும் அத்தரை ஒரு ஆண்மகனே வடித்து எடுக்கத் தகுதியானவன் என்று அப்துல் கரீம் நம்பியதால் அவருக்கு ஆண்குழந்தையின் மீது வெகுவாக ஆசை மேலெழுகிறது.இப்படி பேரோடும்..புகழோடும் செல்வச் செழிப்பில் திளைத்த அப்துல்கரீம் ஆண்குழந்தை வேண்டி மூன்றாவதாக "சுரையா" வைத் திருமணம் செய்து கொள்கிறார்.


ஆனாலும் விதி வலியது கடைசி வரை அவருக்கு ஆண்குழந்தையே பிறக்காமல் முதல் மனைவி ரஹ்மானியாவிற்கு மட்டும் ஒரே ஒரு பெண் குழந்தை என்ற நிலையில் அப்துல் கரீமின் மனம் அத்தர் தயாரிப்பில் இருந்து "குதிரைப் பந்தயத்தில்" திரும்பி விடுகிறது.


குதிரையின் வாலில் கட்டிய பணம் பின்னாட்களில் என்ன ஆகக் கூடுமே அது தவறாது நடந்து அப்துல் கரீமின் செல்வம் எல்லாம் கரைந்து ஒருநாளில் கரீம் எவர் கண்ணுக்கும் அகப் படாதவராகி "அந்தர் தியானமாகிறார்".


கணவரால் கைவிடப் பட்ட அந்த மூன்று அபலைப் பெண்களும் என்ன செய்வார்கள்?! பாவம் செல்வச் செழிப்போடு இருந்த காலத்தில் ஒருவருக்கொருவர் பொறாமையில் வம்பு பேசி சண்டை சச்சரவு என்றிருந்த மூவரும் இப்போது ஒரு தாய் வயிற்றில் பிறந்த பெண் மக்களாகி ஒற்றுமையுடன் வயிற்றுப் பாட்டிற்க்காக குடிசை வீட்டில் வாழ்ந்து கொண்டு மீன் விற்கும் நிலைமைக்கு அவர்களது வாழ்க்கைத் தரம் தாழ்ந்து விடுகிறது.


கடைசியில் அப்போது மதரா பட்டினத்தில் பரவிய காலராவிற்கு ரஹ்மானியாவும் ...உதவிக்கென இருந்த ஒரே ஆண் துணையான எடுபிடிச் சிறுவன் சந்தீபாவும் பலியான பின் மற்ற இருபெண்களும் தத்தமது பிறந்தகம் நோக்கிச் செல்வதோடு அவர்களது கதை முடிகிறது .


அடுத்து பத்ரகிரியும் விஷாலாவும் அவர்களது வாழ்வில் இடைப் படும் தையலும் :-


பத்ரகிரி லாம்டனின் நில அளவைப் பணியில் ஊதியம் பெரும் ஒரு இந்திய ஊழியன் ...அவனுக்கு விஷாலா என்று ஒரு சாந்த குணம் நிரம்பிய அழகிய மனைவி ...பெயர் சொல்ல ஒரு ஆண்குழந்தை என்று அமைதியான வாழ்வு அவனுடையது.கதைப் படி மயிலை பார்த்த சாரதி கோயிலின் பின் புறத்தில் பத்ரகிரியின் வீடு .


பத்ரகிரியைப் பற்றி பேசுகையில் நாம் அவனது இளம் பிராயத்தையும் கொஞ்சம் கவனமாகப் பார்த்தால் பின்னாட்களில் அவன் தனது வாழ்வை சிக்கலாக்கிக் கொண்டதற்கு இளம் பிராயத்தில் அவனது வாழவல் அவன் சந்தித்த பெரும் துயரமே கூட காரணமாக இருந்திருக்கக் கூடுமோ என்றே நினைக்கத் தோன்றுகிறது.


சுயநலமே உருவான ஒரு தந்தை ...அவரால் ஒரே வீட்டில் வாழ்ந்தும் புறக்கணிக்கப் பட்ட நோயுற்ற தாய் ...கூடவே கைக்குழந்தையான தம்பி திருச்சிற்றம்பலம் ...இப்படியான சூழலில் ஒரு நாள் தாயின் இறப்பின் பின் தந்தையின் உறவினர்களாலும் தந்தையாலுமே வேண்டாம் என ஒதுக்கப் பட்டு சித்தி வீட்டில் சித்தியின் கவனிப்பில் வளரும் நிலைக்குத் தள்ளப் பட்ட சோகம் நிறைந்தது பத்ரகிரிய்ன் இளம் பருவம் .


பத்ரகிரி அவனது தம்பி திருச் சிற்றமபலத்தின் மீது மிகுந்த பாசம் கொண்டவனாகக் கதையில் காட்டப் படுகிறான் .பின் எதற்காக தம்பி மனைவியுடன் காதல் கொள்கிறான் என்பது கொஞ்சம் நெருடுகிறது.அதிலும் விஷாலா போன்ற அன்ன அனுசரணையான மனைவி இருக்கையில் பத்ரகிரி ஏன் தன் வாழ்வை தானே இடியாப்பச் சிக்கலாக்கிக் கொள்ள வேண்டும் என்று படிக்கும் போது புத்தி கேள்வி கேட்க தவறுவதில்லை .


அதிலும் தானே விருப்பப் பட்டு மேற்ப்படிப்புக்காக தம்பியை லண்டனுக்கு அனுப்பி விட்டு இத்தகைய செயலை பத்ரகிரி செய்யக் கடவது அத்தனை நயமாகப் படவில்லை.இதில் இவனை மட்டும் குற்றம் சொல்லி விட இயலாது. திருச் சிற்றம்பலத்தின் மனைவியான தையல் விலகிச் செல்லும் மைத்துனனிடம் சதா மையலுடன் பழகி அவனது கவனத்தைக் கலைப்பது வருத்தத்தையே தருகிறது.


பத்ரகிரி ..விஷாலா...தையல் மூவரும் சர்க்கஸ் பார்க்கச் செல்கிறார்கள் ...பாதியில் அங்கே எதோ கலவரமாகி கூட்டம் சிதறி ஓடியதில் விஷாலா கூட்டத்தில் காணாமல் போகிறாள் குழந்தையுடன் . தையல் மட்டும் பத்ரகிரியின் கைகளைப் பிடித்துக் கொண்டு காணமல் போன மனைவியைத் தேடும் சிந்தனை கூட அவனுக்குள் எழும்பா வண்ணம் இன்னும் கொஞ்ச நேரம் கடற்கரையில் நடந்து விட்டு பிறகு போகலாம் என அவனது புத்தியை பேசி மயக்கி திரிந்து போகச் செய்து நெடுநேரம் சென்று வீடு திரும்புவதாக நாவலில் ஓரிடம் வருகிறது.அதற்குப் பிந்தைய வரிகளில் "பிள்ளையைத் தொட்டிலில் இட்டு ஆட்டிக் கொண்டே விஷாலா அழுகிறாள்"படிப்பவர்களுக்கும் அவளது நிலையை எண்ணி வேதனையே மிஞ்சக் கூடும்.


லண்டன் போவதற்கு முன்பு தனியாக இருக்க சிரமம் என்று தான் திருச்சிற்றம்பலத்தை வற்புறுத்தி அவனது படிப்பு முடிந்து அவன் திரும்பி வரும் வரை தான் அவனது அண்ணியுடன் இருப்பதாக மதரா பட்டினம் வருகிறாள் தையல் .பின்பு நடந்தது என்னவோ தையல் மற்றும் பத்ரகிரியின் தகாத உறவால் அவளுக்கு பிழை உண்டாக விஷாலா கோபித்துக் கொண்டு பிறந்தகம் சென்று விட , தையலுடன் ஓயாத மன உளைச்சலுடன் தனிக் குடித்தனம் செய்யும் பத்ரகிரிக்கு அதுவும் நிலைக்கவில்லை .


பிரசவத்தின் பின் தையலின் மனநிலை பாதிப்படைந்து அவள் தான் பெற்ற பிள்ளையையே கொல்லக் கூடிய அளவில் மனச் சிதறல் அடைகிறாள். வைத்தியத்திலும் தேறாத நிலையில் பத்ரைரியால் அவளுக்குப் பிறந்த ஆண் குழந்தையும் போதிய போஷாக்கு இன்றி மரித்துப் போக சித்தம் கலங்கிப் போன பத்ரகிரி தையலை அவளது தாய் வீடானா கடையத்தில் சேர்த்து விட்டு சொல்லில் அடங்கா ஏச்சுக்களையும் பேச்சுக்களையும் பெற்றுக் கொண்டு சிறு பிராயத்தில் தனது நங்கை சித்தி தன்னையும் தன் தம்பியையும் வளர்த்த அதே ஊருக்கு பித்துப் பிடித்தவன் போல திரும்புகிறான்.

இதுவே பத்ரகிரியின் சிதிலபட்ட வாழ்வின் கதை ...அவன் தன் வாழ்வை மட்டும் சீரழித்துக் கொண்டானில்லை...கூடவே தான் மிகவும் நேசம் கொண்ட தன் தம்பி தன் மனைவி இப்படி எல்லோரது வாழ்வையும் சிக்கலாக்கி விடை தெரியாது நசிந்தவனானான் .

அடுத்தது சதாசிவப் பண்டாரத்தின் கதை .இந்தக் கதையில் இவர் அறிமுகம் ஆகும் போதே நீலகண்டம் எனும் நாயுடன் நடந்து கொண்டே தான் அறிமுகமாகிறார்.பண்டாரம் திருவிடை மருதூரில் இருந்து மதராபட்டினம் நோக்கி நாயுடன் நடக்கத் தொடங்குகிறார். இடையில் பல்வேறு சம்பவங்கள் நிகழ்கின்றன .

தன் தாய் எவ்வளவோ மனம் கசிந்து வற்புறுத்தியும் கூட தனது சன்யாச வாழ்க்கையை விட மனமில்லாமல் பற்றிக் கொண்டிருந்த சதாசிவத்தை நீலகண்டம் பலவாறு சோதிக்கிறது.நாயின் வாலைப் பற்றிக் கொண்டே போகும் சதாசிவப் பண்டாரம் தனது "பற்றற்ற தன்மையை தனக்கே மறுபடி " உறுதி செய்து கொள்ளும் வண்ணம் பல அவமானங்களைச் சகித்துக் கொள்கிறார்.

குப்பை மேட்டில் படுத்து உறங்குகிறார். குப்பையில் இட்ட கழிந்து போன மிச்ச மீதிகளை உண்டு பசியாறுகிறார்.இறுதியில் கோயிலில் உட்கார்ந்த இடத்தில் சோறு கிடைக்கும் என்ற நிம்மதியான நிலையில் தான் நாய் அவரை அலைக்கழிக்கத் தொடங்குகிறது.நாயுடனான தனது நெடும் பயணத்தில் ஒரு நடுத்தர வயதுப் பெண்ணை சந்திக்க நெருடுகிறது ...அவளுக்கும் பண்டாரத்துக்கும் சம்சார பந்தமும் ஏற்பட்டு அவள் பிள்ளை பெரும் சமயம் பண்டாரம் அவளை நிர்க்கதியாக தவிக்க விட்டு மீண்டும் நீலகண்டத்தை தொடர்ந்தே ஆகா வேண்டிய மனநிலைக்கு வருகிறார்.

இடையிடையே மனம் கூக்குரல் இடுகிறது. "உனக்குப் பிறந்தது ஆணா...பெண்ணா ? போய்த்தான் பாரேன் ஒருமுறை !!! என்று !? பற்றை அறுத்தவர் செய்யும் காரியம் இதுவல்ல என்று பண்டாரம் நாயைத் தொடர்கிறார் செவ்வனே .இறுதியில் நாயும் பண்டாரமும் பட்டினத்தடிகள் சமாதிக்கு வந்து சேருகிறார்கள் .

பண்டாரம் திடீரென்று நாயைப் போலவே நடந்து கொள்ளத் தொடங்குகிறார். அவரது அங்க சேஸ்டைகளைக் கண்டு அங்கிருந்த மக்கள் எல்லோரும் பண்டாரத்தை பைத்தியம் என்று நினைக்கிறார்கள் .

முடிவாக அந்த சமாதியில் இருந்த ஒரு அறையில் பண்டாரம் ஜோதி வடிவாகி மறைகிறது. நாயையும் காணோம். அந்த அறையில் இருந்து "அத்தர் மணம்" கசிந்து பெருகுகிறது .இதைக் கண்டு மக்கள் பொருள் விளங்கா ஆச்சர்யம் அடைகின்றனர்.எல்லா சாதுக்களையும் போல சதாசிவப் பண்டாரத்தின் வாழ்வும் ஒரு கதையாகி முடிந்தது.

அடுத்து திருச்சிற்றம்பலத்தின் லண்டன் வாழ்க்கை :-

திருச் சிற்றம்பலம் ஒரு "கணித விற்பன்னன் " கணிதத்தில் மேலும் ஆராய்ச்சிக் கல்வி பயிலவே அவன் லண்டன் செல்கிறான் .லண்டன் செல்ல கப்பல் பயணத்தில் சற்குணம் என்றொரு நண்பன் கிடைக்கிறான் சிற்றம்பலத்திற்கு ...சற்குணம் ஆடம்பரப் பிரியனாகவும்...சிற்றம்பலம் உயர் கணிதம் கற்க செல்லும் மாணவனாகவும் கப்பலில் அறிமுகமாகிக் கொள்கிறார்கள்.பின் அவர்களது நட்பு லண்டனிலும் தொடர்கிறது.

முதலில் வாழ்க்கை தரத்தில் தாழ்ந்தவனாகக் காட்டப் படும் சிற்றம்பலம் தனது கல்வியின் மேன்மையாலும் தனது கணித அறிவாலும் இந்தியா திரும்புகையில் உயர்ந்த அந்தஸ்தைப் பெற்றவனாகிறான்.ஆனால் பெரிய தனவந்தரின் மகனான சற்குணம் முதில் விளையாட்டுப் பிள்ளை போல உள்ளசங்களில் ஆர்வம் மிக்கவனாக அறியப் பட்டாலும் அவனது மணம் எப்படியோ மாறிப் போக லண்டன் வாழ் கறுப்பினப் பெண்களுக்கு இழைக்கப் படும் அநீதிகளுக்கு எதிராக கிளர்ந்து எழுகிறான் ஒரு கட்டத்தில்.

பெண்களை போகப் பொருட்கள் என்று மட்டுமே நினைத்து சுற்றித் திரிந்த அந்த வாலிபன் புரட்சிகரமாக மாறிப் போன மாயம் கண்டு சிற்றம்பலம் வியந்து அச்சம் கொள்கிறான் .சற்குணம் லண்டன் குளிருக்கு "நீயும் ஒரு பெண்ணின் துணை தேடிக் கொள்" என சிற்றம்பலத்திடம் கூறும் ஒவ்வொரு முறையும் சிற்றம்பலம் தன் மனைவியைத் தவிர தன் யாரையும் தொட விரும்பவில்லை என்று மறுக்கிறான்.நாவலில் இவனது மனப் பக்குவத்தைக் காணும் போது தையல் நாயகி இவனுக்கு ஏற்ற மனைவி இல்லையோ ! என்ற எண்ணம் வருவது இயற்க்கை.இப்பெர்ப் பட்ட கணவனுக்கு அவள் எப்படி அவனது அண்ணனுடன் இணைந்து துரோகம் இழைக்க முடிந்தது என்பது தான் வாழ்வின் மாய முடிச்சு போல!

தனது கல்வி முடிந்து வெற்றியுடன் அவன் இந்தியா ...மதரா பட்டினம் திரும்புகையில் தான் தன் மனைவியை விட்டுச் சென்ற இடத்தில் அவள் இல்லாத நிலை கண்டு அவன் மணம் நிச்சயம் உடைந்திருக்கும் .இவன் வாழ்வில் விதி தையலின் ரூபத்தில் விளையாட்டுக் காட்டி விலகிச் சென்றது.

அடுத்து கிருஷ்ணப்பக் கரையாளர் மற்றும் எலிசபெத்தின் மேல்மலை வாழ்க்கை :-

பரம்பரை சொத்துக்களை எல்லாம் உல்லாச வாழ்வில் குடித்தும் பெண்களுக்கு செலவழித்துமே கரைக்கிறார் என்று புகார் கூறி க்ருஷ்ணப்பக் கரையாலரின் பங்காளி அவரது சொத்துக்களை எல்லாம் தானும் வாரிசு தாரர் என்ற முறையில் தனதாக்கித் தருமாறு கிழக்கிந்தியக் கம்பெனிக்கு மனுக் கொடுக்கிறார், இதனால் வழக்கு கோர்ட்டில் நிலுவையில் இருக்கிறது . இதற்குள் கிருஷ்ணப்பர் மனம் மாறுகிறார்,
இதில் இடைச் செருகலாய் எலிசபெத்தின் கதை அந்தக் காலத்தில் ஆங்கிலேயப் பெண் இந்திய ஆணுடன் கலந்தால் பிறக்கும் குழந்தைகளை மறுபடி லண்டன் செல்லும் போது உடன் அழைத்துச் செல்லும் அங்கீகாரம் இல்லை. அவர்களுக்குப் பிறக்கும் பெண் குழந்தைகள் சட்டைக்காரிகள் என்ற பெயரில் இங்கே கிருஸ்த்தவ மிசன்களில் அனாதைகளாக வளர்க்கப் பட்டு "கம்பெனி உயர் அதிகாரிகளின் வீடுகளில் எடுபிடி வேலைக்கு " அனுப்பப் படுவார்கள் .

அப்படி அனுபப் பட்ட இளம்பெண்களில் ஒருத்தியே எலிசபெத். அவள் தனது இளம் பருவம் முதலே தனது அழகான தோற்றத்தின் காரணமாக பாலியல் தொந்திரவுக்கு உள்ளாகி முடிவில் அதையே தனது தொழிலாக தேர்ந்தெடுக்கும் நிலைக்குத் தள்ளப் பட்டு தனது இளமை எல்லாம் தேய்ந்து ஓய்ந்த பின் க்ருஷ்ணப்பருக்கு அறிமுகம் ஆகிறாள்.

உடல் தேவை என்பதை மீறி இங்கு இருவருக்குமே மனத் தெளிவும் ...நிம்மதியும் தேவை ஆகி விடவே ...ஒரு கட்டத்தில் கிருஷ்ணப்பர் எலிசபெத்தை மேல்மலைக்கு அழைத்துக் கொண்டு செல்கிறார். தனது பங்காளியிடமும் தனக்கு வேறு எந்த சொத்துக்களும் வேண்டாம் மேல்மலை மட்டும் போதும் அதனால் வழக்கை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என சமாதானம் ஆகிறார்.

மேல்மலை எளிசபெத்துக்குச் சொந்தமாகிறது. அங்கு அவள் மூலமாக ஒரு கால கட்டத்தில் தேயிலை பயிர் அறிமுகமாகிறது.இதன் மூலம் கிடைக்கும் பெரும் தொகையில் எலிசபெத் ஒருமுறை லண்டன் செல்ல ஆசைப் படுகிறாள் .கிருஷ்ணப்பரும் "திரும்பி வந்து விட வேண்டும் " என்ற நிபந்தனையின் கீழ் சம்மதிக்கிறார். இப்படி முடிகிறது இவர்களின் கதை.

மேலே சொல்லப் பட்ட இவரது வாழ்கை சம்பவங்களை வைத்து ஒப்பிடும் போது எலிசபெத்தின் வாழ்வே கொஞ்சம் சுகப் பட்டதாக சொல்லலாம் ...

ஆரம்பத்தில் அவள் கஷ்டப் பட்டாலும் கடை நாட்களில் சிறிதே வாழ்க்கையை ரசிக்கும் சூழல் அவளுக்கும் கிருஷ்ணப்பருக்கும் மட்டுமே கிடைக்கப் பெறுகிறது.

ஆகா மொத்தத்தில் "யாமம்" அப்துல் கரீமின் அந்தர் தியானத்தோடு கரைந்து போக மற்றேல்லோருடைய வாழ்வும் அதனை ஒட்டியே நடை போட "எலிசபெத் " மட்டுமே ஆறுதல் தருகிறாள் இந்நாவலில் .மனித வாழ்வின் விசித்திரங்களைப் பற்றி மற்றுமொருமுறை அசை போட மிகச் சிறந்த வாசிப்பனுபவம் இந்நாவல் .

கூடவே அத்தரைப் பற்றி வரும் வர்ணனைகள் ...அதன் நறுமணம்...இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் ...?!

விருப்பம் இருப்பவர் "யாமம்" வாங்கி வாசித்துப் பாருங்கள்.புள்

விடுபட முடியா ஆழம்
உள்ளே உள்ளே ...உள்ளே
இழுக்க...இழுக்க ...
இழுபடா லாவகத்துடன்
ஊசலாடும்
தூக்கனாங்குருவி கூடாய்
செயற் பொறியில் சிக்கா
செம்பஞ்சுத் துகள்களாய்
சிற்றாறுகள் குறுக்கிடும்
நீள்
வனப் பாதையில்
கால் போன போக்கில்
நடக்க விழைகையில்
நாள்...
கோள்...
நட்சத்திரம் ...
யாவும் பிறழ்ந்து போகட்டுமா ...
என
போக்குக் காட்டியும்...
காட்டாதொரு
பின்னிலவில்
இருள் நீங்கா பெருவெளியில்
புல் தரையின்
மெது மெதுப்பை
உணர்ந்து அழும்
பாதங்களுக்கே கேட்கக் கூடும்
புள்ளினங்களின் ஆர்ப்பரிப்பு.