Sunday, August 30, 2009

ரெட்டை வால் ரெங்குடு vs பாப்பு

சென்ற வார விகடனில் ஒரு கார்டூன்" ரெட்டை வால் ரெங்குடு " என்ற தலைப்பில் ;ரெங்குடுவுக்கு லீவ் முடிந்து ஸ்கூல் திறப்பதற்கு முதல் நாளாம் ,அவனது அப்பாவும் அம்மாவும் முகமெல்லாம் கொள்ளை மகிழ்ச்சி பூத்துக் கொண்டாட தட்டாமாலை சுற்றுகிறார்கள்.

(தட்டாமாலை என்பது "கிழக்கே போகும் ரயில் படத்தில் ராதிகா "பூவரசம் பூ பூத்தாச்சு ...பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சு " என்று பாடிக் கொண்டே "கிறு..கிறு..கிறு " என்று பாவாடை குடையாக விரிந்து பறக்க குதூகலாமாய் சுற்றிக் கொண்டே ஆடுவாரே அது தான்,)
சுற்றி முடித்ததும் காதுக்குள் கொய்ங் என்று ரீங்காரம் எழலாம்.அதிகப் படியான சந்தோஷ உணர்வை வெளிப்படுத்த இப்படி ஒரு அருமையான விளையாட்டை அல்லது கொண்டாட்டத்தை யார் கண்டுபிடித்தார்களோ தெரியாது...ஆனால் அவர்கள் புண்ணியவான்கள்!!!

இனி கார்டூன் விசயத்துக்கு வருகிறேன் ,

தன் அருமை பிள்ளைக்கு பள்ளி திறந்தால் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் விடுதலை கிடைத்தது போல இத்தனை சந்தோசமா ? இப்படியா சிறுபிள்ளைகளைப் போல தட்டாமாலை சுற்றிக் கொண்டு ஆடுவார்கள்?

அதற்க்கு ரெங்குடுவின் கமென்ட் " எனக்கு நாளைக்கு ஸ்கூல் திறக்கப் போறாங்கன்னு நீங்க இன்னைக்கு இவ்ளோ கொண்டாடறது அவ்ளோ ஒன்னும் நல்லா இல்லை!!!???
இந்த பதிவை நான் இப்போது இந்நேரம் நான் வெளியிடக் காரணம் சென்ற வாரம் முழுக்க லேசான காய்ச்சல் காரணமாக விடுமுறையில் ஓய்வெடுத்த (!!!??? )பாப்பு;

இருங்க ...

பாப்பு asked ரெஸ்ட்டா அப்படின்னா என்ன?!) நான் சொன்ன பதில் "நல்லா தூங்கி எழுந்தா அது தான் ரெஸ்ட் கண்ணம்மா.

பாப்பு replied "தூங்கறதா தமிழ்ல எனக்குப் பிடிக்காத ஒரே வார்த்தை தூக்கம்...தூக்கம் ...தூக்கம் தான்"

"நான் தூங்காமலேயே ரெஸ்ட் எடுத்துக்கறேன் , ம்மா நீ என்னை தூங்கச் சொல்லி disturb பண்ணாம இருந்தாலே போதும் " பிராமிஸ் பண்ணு .

அம்மே பகவதி துர்கே இந்த ஒரு வாரம் முழுக்க சோதனை தான்

வீட்டை பெருக்கித் தள்ள தள்ள சுத்தமாக்கின சுவடே தெரியாம மறுபடி இறைபடும் காகிதக் குப்பைகள் (பாப்பு சியாமா ஆன்ட்டி கிட்ட சின்ன சின்ன கிராப்ட் கத்துக்கராங்கலாமாம் !!!)

பாத்ரூமில் டேப் மூட மறந்து விட்டேனோ என்னவோ என்று ஓடிப் போய் பார்த்தாள் "ஒரு சாக்சுக்கு ஒரு சோப்பு போதும் இல்லையாம்மா ..பத்தலைன்னா சோப்பு எங்க இருக்குன்னு சொல்லிட்டு நீ போய் ரெஸ்ட் எடு இனிமே என் டிரஸ் நான் தான் வாஷ் பண்ணுவேன்.(சொல்லி விட்டு என்ன ஒரு சாத்வீகப் புன்னகை அந்த குட்டிப் பூ முகத்தில் !?)

திடீர்னு ஒரு மத்தியான நேரம் பறக்கும் குதிரை செய்யனும்னு ஆசை படு தீவிரமாக கொழுந்து விட்டு எரிய ...மறுபடி பாட்டியோட வாயில் புடவையால் நடு ஹாலில் தொட்டில் கட்டினோம்

குதிரை செய்ய தொட்டில் எதுக்கு??

பாப்பு said அதான குதிரையோட உடம்பு ..உனக்கு ஒன்னும் தெரியலை நீ கம்முனு இரு .குதிரை செஞ்சப்புறம் உன்னைக் கூப்பிடுவேன் ...சும்மா...சும்மா question கேட்டுகிட்டு தொல்லை பண்ணாதம்மா .

என் சுடிதார் துப்பட்டாக்கள் இரண்டு தொட்டிலின் இரு முனைகளில் கட்டப் பட்டன ,அவற்றை புடவைக் கடைகளில் விரித்து விடுவதைப் போல விசிறியாக விரித்து விட்டு அடுத்த முனைகள் இரு பக்கமும் எதிர் எதிர் சுவர்களில் இருந்த கம்பிகளில் குதிரையின் றெக்கைகள் போல தோன்றும் படி மாட்டப் பட்டன.

விளையாட வைத்திருந்த மேஜிக் மாஸ்க் குதிரையின் முகமானது . முனைகளில் குஞ்சலங்கள் நிறைந்த இன்னொரு துப்பட்டா குதிரைக்கு வாலானது .
பாப்பு முருகன் மயிலில் உட்காரும் பாவனையில் தொட்டிலில் இரு புறமும் கால்களைப் போட்டு அமர பறக்கும் குதிரை ரெடி .

இது என்னோட செல்லக் குதிரை நீ அப்பால்லாம் இதுல ride பண்ணக் கூடாது ...பாவம் அதுக்கு முதுகு வலிக்கும் ...குட்டிப் பாப்பா குதிரை ,இது பாப்பாவுக்கு மட்டும் தான்.(ரொம்பத்தான் ஜாக்கிரதை உணர்வு?!)

மம்மி எப்போ பார்த்தாலும் ஒரே மாதிரியே ட்ரெஸ் பண்ற நீ ...ஒரே போரிங் !!!
நான் உனக்கு disigner skirt பண்ணித் தரேன் .

அன்றைக்கு வந்த எக்ஸ்பிரஸ் நடுப்பக்கத்தை உருவி ஸிஸரால் மடமடவென்று skirt வடிவத்தில் கத்தரித்து முழுதும் கம் தடவி வெள்ளி நிற ஜிகினாத் தூளை அதில் குத்து மதிப்பாகக் கொட்டி தடவி விட மேலே அவளுக்குப் பிடித்த குந்தன் கற்களை ஒட்டி முடித்து அதைக் காய வைக்கும் பொறுமை எல்லாம் இல்லை .

எவ்ளோ அழகா இருக்கு பார், இப்படி veriety யா ட்ரெஸ் பண்ணிக்கணும் மம்மி. என்று ஒரு வெற்றிச் சிரிப்பு .

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் ...

என்ன சொல்லிக் கொண்டிருந்தேன் ...நான்?!

அதாகப்பட்டது என்னவெனில் ஒரு வாரம் லீவ் முடிந்து இன்றைக்கு தன் பாப்பு ஸ்கூல் போகிறாள்.

நாங்கள் ரெங்குடுவின் அப்பா அம்மாவைப் போல தட்டாமாலை எல்லாம் சுற்றவில்லை ...நம்புங்கள்.

Friday, August 28, 2009

பெரியாரின் ராமாயணக் குறிப்புகள் - ஒரு பார்வை

பெரியாரின் ராமாயணக் குறிப்புகள் வாசிக்க வாய்த்தது,எந்த ஒரு விசயத்தையும் பகுத்தறியலாம் தான்...ஆனால் அதற்காக சொல்ல வந்த விசயத்தின் வீரியத்துக்காக ஏற்கனவே புனிதம் என நம்பும் ஒரு செயலை படு கேவலமாக விமர்சித்து படிப்பவர்களை குழப்புவது எந்த விதத்தில் நியாயமான செயலோ?

ராமன் கடவுள் அல்ல...ராமாயணம் கற்பனை,சொல்லப் போனால் ஆரியர்களின் கீழ்த்தரமான எண்ணங்களுக்கு வடிகாலாய் தோற்றுவிக்கப் பட்ட புனைவு,சீதை பதி விரதா பத்தினி இல்லை...சரி இதெல்லாம் ஒரு சாராரின் ஆணித்தரமான கருத்து ...வாதம் எப்படி வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும். இப்படி மேலோட்டமாகச் சொல்லி நம் மக்களை நம்பிக்கை மாற்றம் செய்ய முடியாது என்பதாலோ என்னவோ பெரியாரின் ஆதாரப் பூர்வமான எதிர் கருத்துக்கள் இப்புத்தகம் முழுதுமே கடும் அதிர்ச்சியை அளிக்கின்றன.

ஒரு விடயத்தைப் பற்றி நமது எதிர் கருத்தை தெரிவிப்பது என்பதற்கும்...திணிப்பது என்பதற்கும் நிச்சயம் நிறைய வேறுபாடுகள் உண்டு தானே?!எனக்கென்னவோ இப்புத்தகத்தில் பெரியாரின் எழுத்துக்களில் தெரியும் கடுமை திணித்தல் ரகமாகவே தோன்றுகிறது.

சமூகம் என்ற ஒரு கட்டமைப்பில் வாழும் போது சில நியாயமான பயங்களும் அவசியம் தான். அழுக்கை உருட்டி உருவம் செய்த பொம்மை தான் விநாயகர்...பிள்ளையார் என்றும் வாதிக்கிறார்கள். சரி ;ஓரினச் சேர்க்கை பற்றி வாதிக்கையில் அய்யப்பனை எள்ளுகிறார்கள் ...சரி இருக்கட்டும் .இந்துக் கடவுள்கள் கற்பனை உருவங்கள்...அதுவும் சரியே .

இவையெல்லாம் வெறும் கருத்துக்கள் மட்டுமே இவற்றால் பலரது மண்டைகள் உடையாமல் இருக்கும் வரை. இவற்றால் பலரது ரத்தம் தெறிக்காமல் இருக்கும் வரை...வெறும் கற்பனை உருவங்கள் ...ஆரியர்களின் சுயநலத்துக்காக உருவாக்கப் பட்ட மாயத் தோற்றங்கள் .எல்லாம் சரி தான். அப்படி இருக்கையில் வெறும் கற்பனைக்காக ஏன் மதம் சார்ந்த சண்டைகள் இட்டுக் கொள்ள வேண்டும்? வடை தானே முக்கியம் வடை சுற்றித் தரும் காகிதம் முக்கியமென்று ஏன் மோதிக் கொள்கிறார்கள்?

மதங்கள் வெறும் சட்டைகள் தான் என்று எங்கோ படித்தேன். சட்டைகளை மாற்றிப் போட்டுக் கொள்ள வேண்டாம் ...அட துவைத்துப் போட்டுக் கொள்ள வழி இருக்கையில் அதைச் செய்யலாம் தானே? சட்டை அழுக்கு ...முடை நாற்றம் ...என்று சொல்லிச் சொல்லி நம் சட்டையை நாமே அசிங்கப் படுத்திக் கொண்டிருந்தால் யாருக்கு என்ன லாபம்?

நான் இந்துக் குடும்பத்தில் பிறக்க வேண்டும்...முகமதியனாகப் பிறக்க வேண்டும்...கிருத்தவனாகப் பிறந்தே ஆக வேண்டும் என்றெல்லாம் யாரும் தீர்மானம் செய்து கொண்டு பிறத்தல் சாத்தியம் இல்லையே?!மதங்கள் மனங்களைப் பண்படுத்த அல்லவோ பிறப்பிக்கப் பட்டன.

ஆற்றில் சென்று கொண்டிருக்கிறோம் ...நீரின் துர்நாற்றம் சகிக்கவில்லை என்றால் ஆற்றை அல்லவா தூர்வார வேண்டும் ,நீரை அல்லவா சுத்தப் படுத்த வேண்டும். ஒட்டு மொத்தமாக ஆற்றை ஒதுக்கி வைக்க முடியுமா ? புழுக்கள் நெளியும் மெட்ரோ வாட்டர் அதை காய்ச்சி வடிகட்டிக் குடிக்கும் புண்ணியவான்கள் அல்லவா நாம்? சென்னையில் வாழ்ந்து கொண்டு மெட்ரோ வாட்டர் வேண்டவே வேண்டாம் என தைரியமாக வெறுக்க முடியுமா?

அப்படி இருக்கிறது சீதையை பஜாரி என சாடுவது. ராமனும் சீதையும் கடவுள்கள் அல்ல ...இது சரியான வாதம். ராமாயண காலம் பொய்யானது ...இது முற்றிலும் சரியே ,ஆதாரங்களும் இங்கே கொடுக்கப் பட்டுள்ளன.இதையும் ஏற்றுக் கொள்ளலாம். எல்லாம் சரி ஆனால் இப்படி ஆதாரப் பூர்வமாக சான்றுகள் கொடுத்து விளக்கிக் கொண்டிருக்கும் போதே சட்டென்று சடுதியில் பக்திமான்களின் மனதைப் புண்படுத்தியே தீருவது என கங்கணம் கட்டிக் கொண்டு ஒரு கற்பனைக் கதைக்கு இவ்வளவு முக்கியத் துவம் கொடுத்து சேற்றை வாரி இறைக்க வேண்டுமா?

கதையை கதை என்று மட்டுமே வாசிக்கலாம் தானே? இதில் தவறேதும் உண்டோ?
நீ இறை பக்தியோடு இரு ,ராமனை வணங்கு ...சீதையை அன்னையாய் பாவித்தே தீர வேண்டும் இல்லையேல் உயிர் சேதம் எனும் கட்டாயம் இங்கே யாருக்கும் இல்லையே? பிறகேன் இத்தனை காட்டமான விமர்சனம்?! மூட நம்பிக்கைகளை எதிர்க்கிறேன் என்ற பெயரில் குழப்பமான சிந்தனைகளைத் தோற்றுவிப்பது எந்த விதத்தில் சமுதாய நற்பணியாம் ?

நீ சாமி கும்பிடுவாயா? சரி செய்துகொள் அது உனது உரிமை...எனக்கதில் நம்பிக்கை இல்லை... இது எனது உரிமை. இப்படி முடிப்பது நல்லதா? இல்லை சான்றுகளுடன் விளக்குகிறேன் சகலமும் என சகதியில் காலை விட்டுக் கொண்டு சிரிப்பது நல்லதா?

"அஞ்சுவது அஞ்சாமை பேதமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில் "--------------------------

இந்தக் குறளை ஏனோ சொல்லத் தோன்றியது இப்போது !!!

அஞ்ச வேண்டிய விசயங்களுக்கு அஞ்சி அஞ்சத் தகாதவற்றுக்கு அஞ்சாது தெளிந்து குறைந்த பட்சம் பிறருக்கு நன்மை செய்யா விடினும் தீமையோ ..குழப்பமோ செய்வதில்லை எனத் தீர்மானித்து வாழ பல நல்ல கொள்கைகளையும் கொண்டது தான் இந்து மதம். இந்துக் கடவுள்களின் உருவத்துக்கும் அவற்றின் தோற்றத்தின் பின்னுள்ள புனைவுகளுக்கும் கூட சில நல்ல விளக்கங்கள் இருக்கலாம். வெறுமே வாதத்துக்காக நாம் அவற்றைப் புறக்கணித்து விட முடியாது.

சின்ன வயதில் என் தாத்தா சொன்ன விடயங்கள் சிலவற்றை இங்கே தருகிறேன்.

1.பிள்ளையார் ஏன் இடுப்புல பாம்பு ஒட்டியாணம் போட்டு இருக்கார்?,
2. சிவன் ஏன் கழுத்துல பாம்பு நெக்லஸ் போட்டு இருக்கார் ?
3.எல்லா சாமிகளுக்கும் ஏன் நிறைய கைகள் இருக்கு...அவ்ளோ கை இருந்தா ரொம்ப பசிச்ச உடனே அத்தனை கைகளையும் சீக்ரமா எப்படி கழுவிகிட்டு சாப்பிட முடியும்? ரொம்ப லேட் ஆகாதா?
4.துர்கை ஏன் சிங்கத்துல உட்கார்ந்திருக்கா ?
5. காளி ஏன் இவ்ளோ அகோரமா பயமுறுத்தற மாதிரி இருக்கா?
6.பயமில்லாம கும்பிட எந்த சாமியும் இல்லையா நமக்கு ?!

இப்படியெல்லாம் எங்கள் வீட்டில் பல வாண்டுக் கேள்விகள் எழுந்ததுண்டு .
இதற்க்கெல்லாம் ;

அச்சச்சோ ...இப்படியெல்லாம் கேள்வி கேட்டா சாமி கண்ணைக் குத்திடும் " என்றெல்லாம் யாரும் எங்களை மூட நம்பிக்கையில் மூழ்கடிக்கவில்லை .

என்ன பதில் சொன்னார்கள் தாத்தாவும் பாட்டியும்???

நாளை சொல்கிறேன் .

சும்மா...சும்மா...சும்மா...!

ருக்கு,
ரங்கா,
கே.உஷா,
டி.உஷா,
நிஷா,
தீபு,
விக்கி,
ஸ்ரீதர்,
வி.விஜி,
எஸ்.விஜி,
ஜெகதீஷ்,
ரெங்கராஜ்,
சந்திரன்,
ராதா,
தாமரைக்கண்ணன்,
வேல்முருகன்,
மோகனவள்ளி,
ராம்,
கங்கா,
பாலாமணி,
தியாகு,
செந்தில்,
மீனாட்சி சுந்தரி,
அங்காளீஸ்வரி,
புஷ்பா,
கலைஸ்ரீ,
சுமதி,
சத்யப் பிரியா,
விஜயப்பிரியா,
சத்யபாமா,
சுப்புலட்சுமி,
ஜெயா,
ஜெயலட்சுமி,
சுமித்ரா,
நர்மதா,
சவிதா,
பெருமாள்,
பாலமுருகன்,
கமல்,
ராஜகோபால்,
மதன்கபில்தேவ்,
கொண்டல் சாம்ராட்,
கிருஷ்ணகுமார்,
சதீஷ்,
சக்தி வேல்,
மஞ்சுளா,
போதும் பொண்ணு,
போதுமணி,
மும்தாஜ்,
பானு,
ஹேமா,
சுபா,
சங்கரி,
பரிமளா,
ஏஞ்சல்,
ஜெயச்சந்திரன்,
வேல்முருகன்,
சியாம் சுந்தர்,
ஜெகன்,
பிரபு,
சித்ரா,
சுகீதா,
பிரியா,
நித்யா...........

அவ்ளோ தான் ...

இவங்க பேர் மட்டும் தாங்க இப்போதைக்கு ஞாபகம் இருக்கு .இவங்கலாம் யார்னு கேட்கத் தோனுமே?!

ஒன்னாங்க்ளாஸ்ல இருந்து என்கூடப் படிச்ச கூட்டாளிகள் ..சிநேகிதர்கள்,நண்பர்கள்...எல்லாம் ஒரே அர்த்தம் தானே!

ஆமாங்க அவ்ளோ தான்...அவ்வளவே தான் .

களிக்கூத்து


பட்சிகள் கரையா
பகலற்ற கருங்கானகம்

இரையும் பூச்சிகள்

இரையாக்கும் பாம்புகள்

மத்தியானத் தூக்கத்தில்

மடல் அவிழ்க்கும் தாழம்பூக்கள்

யாமத்தில் நாசி துளைக்கும்

நன்னாரி மரப்பட்டை

சில்லென்று ... மோருண்டு ...

சிலு சிலுக்கும் காற்றும் உண்டு ...

பக்கத்தில் பத்தினிப் பெண் ...!!!

யாரங்கே ... ?

உச்சி மரப்பேய்

தானாய் ஆடும் களிக்கூத்து

காளி கூளிக்கு கூறும் செய்தி

நம்மில் ஒருத்தி நாளை வருவாள்?!

Friday, August 21, 2009

காற்றைக் கடைந்து...கடைந்து பறப்போமா?

கைகளைத் துடுப்பாக்கி
காற்றைக் குடைந்து
சோம்பி மிதக்கும்
துகள்கள் மறுத்து
இன்னும் ...இன்னும்காற்றைக்
கடைந்து கடைந்து
வளி மண்டலம் துளைத்து
வலி மண்டலம் துடைத்து
விட்டு விடுதலையாகி
விதை வெடித்த பஞ்சு
பறப்பதைப் போல்
இலகுவாய்ப் பற
துக்கம் மறந்து போம்
துன்பம் பறந்து போம்
ஆதலின்
பற...
பற...பற...பற

Thursday, August 20, 2009

அழுத்தமான கோடுகள்

அழுத்தமாகப் போட்டுக் கொண்ட
சில கோடுகளை
அழிக்க முடிந்தும்
அழிக்க நினைத்தும்
அழியாமல் காத்துக் கொள்ளவே
அனுதினமும்
பிரம்மப் பிரயத்தனத்துடன்
கோட்டுக்குள்
தாண்டாமல் நிற்கும்
கால்களுடன்
நிமிர்ந்த நன்னடை
நேர் கொண்ட பார்வை
திமிர்ந்த ஞானச் செருக்கும்
கொண்டவளாய்
நிற்பவள்

.
.
.
.
.
பெண்

Wednesday, August 19, 2009

கருப்பு வெள்ளை தாண்டாத கனவுகள்

வர்ணங்களைக் குழைத்துக் குழைத்து
நாட்காட்டியில் தேய்த்து தேய்த்து
பரத்தி விட்ட பின்னும் கூட
அந்த நாளொன்றும்
வண்ணமயமாகி விடவில்லை ...
அன்று மட்டுமல்ல
என்றென்றும்
கருப்பு வெள்ளை தாண்டி
கனவுகளும் நுழைவதில்லை ...
பகலுக்கு ஒரு நிறம்
இருளுக்கு ஒரு நிறம்
வெயிலுக்கு ஒரு நிறம்
குளிருக்கு ஒரு நிறம்
தங்கத்துக்கு மஞ்சளும்
வெள்ளிக்கு வெள்ளையுமாய்
முலாம் பூசுவதைப் போல
பூசிப் பூசிப் பழகிய குணம்
வண்ணங்களற்ற வெற்று வெளியை
உதாசீனம் செய்வதில்
சிறிதொரு சமாதானம்
பிறிதொரு சாந்தம் ...
சமாதானக் குடுவையில்
பொங்கிச் சிந்திய வண்ணக் குழம்புகளில்
தேங்கித் தேடிய பின்
சொந்தக் கருத்தொன்று
சொடேர் என்று தலையில் குட்டிவிட்டு
சொத்தென்று விழுந்து காணாமல் போனது
வர்ணக் கலவைகளில் ...
நிறப்பிரிகைக்கு முன்னிருந்த
நிர்மல வண்ணமே நித்தியமோ ?!

Friday, August 7, 2009

வேம்பும்...கரும்பும் ...வெற்று வாழ்வும் சுற்றுப்புறமும்

வாழ்தலுக்கான
நியாயங்கள்
மழுங்கடிக்கப்பட்ட
அகண்டதோர் சமவெளியில்
மருந்தென்ற பெயரில்
ஊமைச்சமாதானமாய்
வெறும்
வேம்புகள் ;
கரும்பு வேண்டாம் ...
கற்கண்டும் வேண்டாம்
வேம்பின்
ருசியறியா
நாவின் நரம்புகள் தா ...
வேம்பைக் குறித்தெழும்
மறுப்புகள்
மறக்கப்படும் .

Thursday, August 6, 2009

பலூன்களும்...கனவுகளும்பலூன்கள்


உடைபடும்


நேரத்தில்


கனவுகள்


கலைக்கப் படுகையில்


சர்ரென்று சீறிடும்


கோபத்தின் ஆயுள்


அடுத்த பலூன்


ஊதப்படும் வரையோ ?!


உடைக்கப் படுதலும்


ஊதப்படுதலுமாய்


நகர்கின்றன கனவுகள்


பலூன்களை நோக்கி...!

Wednesday, August 5, 2009

நடுகற்கள் ஆயினவே எல்லைக் கற்கள் ...?!

கடக்கும் பாதைகள்
ஓர் நாள்
பேசத் தொடங்கினவாம்
கடந்து போனவர்களைப் பற்றி ;
அதில் மாண்டவர்களும் உண்டோ?
மீண்டவர்கள் மட்டுமா ?
கேள்விகள் கேட்டனவாம்
எல்லைக் கற்கள் ;
பூவும்
பிஞ்சும்
காயும்
கனியும்
உதிரும் சருகும்
யாவும் ஒன்றே
கடத்தல் ஒரு செயல்
கடப்பது திண்ணம்
மாள்வதும் மீள்வதும்
கணக்கில் ஒன்றே
கணக்கான கணக்கு
கொக்கரித்தன பாதைகள்
நடுகற்கள் ஆயின எல்லை கற்கள்...
கடப்போம்
யாவரும்
என்றேனும் ஒருநாள்?!

Tuesday, August 4, 2009

கண்மணி குணசேகரனின் "வெள்ளெருக்கு" அருமையான சரக்கு .

சில மாதங்களுக்கு முன் எழுத்தாளர் பாராவின் பக்கங்களில் "கண்மணி குணசேகரனின் "படைப்புகள் புத்தகத் திருவிழாவில் வாங்கத் தகுந்தவை எனப் பரிந்துரைக்கப் பட்டிருந்தன.வாங்கி வாசிக்க வேண்டும் என நினைத்துக் கொண்டே இருந்தேன் ,ஆனால் அப்போது கிடைக்கவில்லை.

சென்ற மாதம் அவரது "வெள்ளெருக்கு சிறுகதைத் தொகுதி " என் கைக்கு கிடைத்தது. அடடா...!வாசித்த அத்தனை சிறுகதைகளுமே அருமை.வட்டார வழக்கில் கொஞ்சமும் காம்ப்ரமைஸ் செய்து கொள்ளாமல் அங்கத்திய மக்களின் வாழ்வை அப்படியே கண்முன் காட்சியை விரிய வைப்பதைப் போன்ற அசாத்தியமான எழுத்து நடை .வாசித்து முடித்ததும் எப்படி இப்படி ஒரு எழுத்தை இத்தனை நாட்கள் தவற விட்டோம்?! எனும் எண்ணமே மேலோங்கியது .

மொத்தம் 14 சிறுகதைகள் ;


 1. கொடி பாதை

 2. ஆணிகளின் கதை

 3. சமாதானக் கறி

 4. புள்ளிப்பொட்டை

 5. கிக்குலிஞ்சான்

 6. மழிப்பு

 7. ஏவல்

 8. வலை

 9. ராக்காலம்

 10. ஆண்

 11. வனாந்திரம்

 12. சீவனம்

 13. வெள்ளெருக்கு

 14. வண்ணம


1. கொடிபாதை :-முக்கித் திணறும் ஒரு பேருந்தும் அதில் மூச்சு விடத் தவிக்கும் பயணிகளுமாய் இந்தச் சிறுகதையை வாசித்து நிமிர்கையில் நாமும் ஒரு பட்டிக்காட்டுப் பேருந்தின் சக பயணியாய் ...அப்பாடா...ஒரு வழியாய் இறங்க வேண்டிய நிறுத்தம் வந்து விட்டது என உணரும் ஆசுவாசம் மனதில் எழாமல் இல்லை. அத்தனை இடைஞ்சலும் அப்பிக் கொண்ட நெரிசலுமாய் பேருந்தே பிரசவிக்கப் போகிற பெண் போல இக்கதையில் சித்தரிக்கப் பட்டிருப்பது செறிவு.அப்படிப் பட்ட ஒரு பேருந்தில் நிறைமாத கர்ப்பிணி ஒருத்தி பிரசவ வலி எடுத்து மருத்துவமனை செல்ல பயணிக்கிறாள் என்றால் ...அந்தச் சூழலில் அவ்விடத்தில் என்னவெல்லாம் சம்பாசனைகள் நிகழும் ,அந்தப் பெண்ணின் வேதனை எத்தகையது ? கடைசியில் அவள் நல்லபடியாக பெற்றுப் பிழைத்தாளா? எனும் வினாவுக்கு விடையே இக்கதை. அந்த கர்ப்பிணியை நினைத்து வாசகர்களுக்கு தோன்றும் கவலை கூட ௨ ௨ கடைசி வரிகளில் மறக்கடிக்கப் படுவதே இக்கதையின் வெற்றி. இங்கே ...இன்னின்ன விஷயங்கள் இப்படித் தான் நடக்கும் என வரையறுக்கப் பட்ட தன்மை அதற்க்கு மேல் புரட்சிகரமான எவ்வித நினைப்பையும் வாசகர்களுக்கு ஏற்படாமல் தடுத்துக் கொண்டே செல்வது இதம் .ஆணிகளின் கதை :-

வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் வாழ்வியல் பிரச்சினைகள் வாழும் வரை மட்டும் தான் என இல்லாமல். இறந்த பின்னும் தொடரும் இன்னல்களை இப்படி ஒரு புனைவாக தர முடியுமா என ஆச்சரியப் படுத்தும் கதை இது. ஊர்நாட்டுப் புறத்தில் ஒரு வழக்கம் தொன்று தொட்டு உண்டு. பேய் (நம்பிக்கை இருப்பவர்கள் நம்புவார்கள் போல?!) பிடித்தவர்களிடமிருந்து பேயை ஓட்ட கோடாங்கியை அழைத்து பின்னிரவில் உடுக்கை சத்தம் காதைப் பிளக்க திருநீறு அடித்து ஆணோ பெண்ணோ அவர்களின் தலை முடியை ஆலமரத்தின் பட்டையோடு சேர்த்து ஆணி அடித்து பேயை அந்த ஆணியில் சிறை வைத்து விட்டு வருவார்கள்!!! அந்த ஆணி மழுங்கி உதிரும் வரை அந்தப் பேய் அதில் சிறை இருக்கும் என்பது (மூட) நம்பிக்கை .அந்த நம்பிக்கையில் பின்னப் பட்ட கதை இது.பேய்களிலும் ஆண் பேய்..பெண் பேய் மீது மோகம் கொண்டு இம்சிக்கும் என்பது இக்கதையில் புதுமை. ஆக மொத்தத்தில் அகால மரணமடைந்து ஆயுள் முடியும் முன் இறக்கும் ஆணோ பெண்ணோ அவர்களது பிரச்சினைகள் செத்தும் ஆணிகளில் அடித்து அடக்கப் பட்ட பின்னரும் தொடரும் என்பது ஆச்சரியமான கற்பனை தான்!

சமாதானக்கறி :-

குறவர் சமூகத்தில் தாய் மாமனுக்கு தன் மருமகள்களின் மேலிருக்கும் அநியாய அதிகாரத்தை எள்ளி நகையாடும் கதையே சமாதானக் கறி .சிட்டுவுக்கும் சிட்டானுக்கும் கல்யாணம் நடக்கிறது . சிட்டுவின் தாய்மாமன் சின்னக் காத்தானுக்கோ ஓரம் சாரமாய் தன தள தள மருமகள் மீது தகிக்கும் காமம். அக்கா மகள் தான்...தூக்கி வளர்த்த பெண் தான் ஆனாலும் அடங்காத ஆசை எட்டி எட்டிப் பார்க்க கல்யாணத்தின் பின் சாந்தி முகூர்த்தம் நடக்க விடாமல் சின்னக் காத்தானும் அவனது கூட்டாளிகளும் சிட்டு வீட்டில் தகராறு செய்கிறார்கள் .சின்னக்காத்தான் தாய்மாமனுக்கு சீர் முறைமைகள் சரியாகச் செய்யவில்லை,இப்போது கூட நான் சிட்டுவைத் தூக்கிக் கொண்டு போய் என் மனைவியாக்கிக் கொள்ளுவேன் ,அது தாய்மாமனான தனக்கான உரிமை என்கிறான்.அவனை சமாதானப் படுத்த மறுபடி அவனுக்கு தாய்மாமன் சீர் செய்கிறார்கள் ,குறவர் சீர் செய்யும் முறைகள் இக்கதையில் சுவாரஸ்யமான பகுதி, சதைப் பிடிப்பான வளப்பமான பன்றிக் கறி(கோழியும் ஆடும் வெட்டினால் தாய்மாமன் ஏற்றுக் கொள்ள மாட்டான்...பன்றி தான் இங்கே அதி முக்கியம் ) அதிலும் எலும்பில்லாத கறியை அள்ளி அள்ளி திகட்டும் வரைக்கும் தாய்மாமனுக்கு இலையில் போட்டுக் கொண்டே இருக்க வேண்டும் அவனுக்காய் அழுக்கும் வரை,கூடவே தலை நிமிர முடியாதவாறு போதையில் திளைக்க வைக்கும் கள்ளு மொண்டு மொண்டு ஊற்ற வேண்டும் .கடைசியாக தாய்மாமன் மனம் குளிரும் வண்ணம் கொஞ்சம் ரொக்கப் பணம் ,இதில் அவன் மனம் சமாதானமானால் தான் கல்யாணமான பெண் தன கணவனிடம் முழுதாகப் போய்ச் சேர முடியும் ,இல்லையேல் அவளை தாய்மாமன் தூக்கிக் கொண்டு போய் தன் வீட்டில் வைத்து குடும்பம் நடத்தலாமாம்,இதுவே அவர்தம் சமூகத்து நீதி. சமாதானக்கறி கதைக்குத் தோதான தலைப்பு தான் இல்லையா பின்னே?! சிட்டு சின்னக்காத்தானிடம் இருந்து தப்பினாலா? சிட்டானுடன் வாழ்ந்தாளா? கதையை படித்து தெரிந்து கொள்ளலாம்.புள்ளிப்பொட்டை :-

ஊர் ஊராகப் போய் பாத்திரங்களுக்கு ஈயம் பூசிக் கொண்டு ஜீவிக்கும் ஒரு எளிய தம்பதிகள்,பிள்ளைகள் மனைவியின் தாய் வீட்டில் வளர ஏக்கங்களை சுமந்து கொண்டு திரியும் வறுமை . பிள்ளைகள் உடன் இல்லா தனிமைக்கு நொந்து போய் ஆசை ஆசையாய் உடலெல்லாம் புள்ளிகள் கொண்ட ஒரு சாம்பல் நிற கோழிக் குஞ்சை விலைக்கு வாங்கி வளர்க்கிறாள்,அந்தக் கோழிக் குஞ்சு வளர வளர இவர்களின் இடப் பெயர்வுகளின் போது அது மற்ற சேவல்களிடம் மாட்டிக் கொண்டு படும் இன்னல்களை ஒரு கோழியின் நிலையில் இருந்து யோசிப்பதைப் போல கதை நகர்கிறது. பல சேவல்களால் துரத்தப் படும் புள்ளிப்பொட்டை தானாக விரும்பி ஏற்பது உச்சியில் சிவப்புக் கொண்டை கொண்ட ஒரு பளீர் வெண்ணிறச் சேவலை (கோழிக் காதல் ...!!! )பறவைகளும் மிருகங்களும் இனப் பெருக்கத்திற்காக மட்டுமே கூடும் எனும் வாதத்தை இக்கதை உடைப்பதைப் போல இல்லை?! கொழிக்கும் காதல் உண்டு தான் போல?! சரி மீதிக் கதையை தொடர்வோம்...எப்போதும் ஜன சந்தடியில் ஒன்று சேவல்கள் அல்லது மந்தையில் பந்து விளையாட வரும் சிறுவர்கள் அப்புறம் தன்னை வளர்க்கும் தம்பதிகள் இவர்களால் ஏதேனும் ஒரு காரணத்திற்காக விரட்டப் படும் புள்ளிப்பொட்டை சூல் கொண்டு ஒரு முட்டை அதிலும் முதல் முட்டை இடப் படும் பாட்டை சித்தரித்திருக்கும் வரிகள் அருமை. அதை வளர்க்கும் அந்தப் பெண் அது முட்டையிட்ட பின் கண்களில் நீர் தழும்ப தன் மகளை நினைத்துக் கொள்கிறாள். ஓரிடத்தில் நிலையாமல் நகர்ந்து கொண்டே இருக்கும் தங்களது வாழ்க்கை முறையில் எப்படி வயது வந்த தங்கள் மகளை அழைத்துக் கொண்டு திரிவது? புள்ளிப்பொட்டை கதி தானே அவளுக்கும்? என அவள் புலம்பும் போது நிஜமே என ஒத்துக் கொள்ளத் தான் தோன்றுகிறது.கிக்குலிஞ்சான்: -

கவுதாரிகளை நம்பி சாமான்ய ஜீவனம் நடத்தும் ஒரு வயதான மனிதனின் கதை ,கவுதாரிகளை வைத்தே கவுதாரிகளை பொறி வைத்துப் பிடிக்கும் கலை கற்ற அந்த கிழவன் தன் வாரிசுகளை நம்புவதை விடவும் தான் வளர்த்த கவுதாரிகளை நம்புகிறான் தன் ஜீவனத்திற்கு ,இவனது வைராக்கியம் பிடிக்காத மகனும் மகளும் அவர்களது குத்தல் பேச்சுகளும் அவமதிப்புகளும் தொடர கிழவன் கவுதாரிகளை
வேட்டையாடி உப்பும் மிளகாய்த் தூளும் தூவி திகட்டத் திகட்ட தின்கிறான் சில காலம்,பிறகு கள்ளுக் குடித்த போதையில் அவனுக்கு கீழே விழுந்து முதுகுத் தண்டு ஓடிய நடமாட முடியாமல் கட்டிலில் சீல் பிடித்த புண்களுடன் அல்லாடுகிறான்...அப்போதும் அவனது கட்டிலுக்கு மேலே கூண்டில் "கிக்குலிஞ்சான்...கிக்குலிஞ்சான் என பழக்கி வைத்த தொனியில் கத்திக் கத்தி சண்டையிடும் தன் வளர்ப்புக் கவுதாரிகளைக் கண்டு துன்பம் மேலிட அவனது கண்களில் நீர் வழிந்து ஓடுகிறது .கவுதாரிகளையும் கிழவனையும் கொண்டு நகரும் இக்கதையும் அருமை .

மழிப்பு :-

முன்பெல்லாம் கிராமத்து நடைமுறை என்னவெனில் ஊர்ப் பொது நாவிதர்
மற்றும் சலவைத் தொழிலாளிகளுக்கு தினம் வேலைக்கு கூலி தருவதில்லை வருடக் கூலி தான்...இத்தனை மூட்டை நெல் இத்தனை படி கம்பு ..அல்லது சோளம் என அளப்பார்கள். இதை வாங்கிக் கொண்டு வருடம் முழுக்கவும் அவர்கள் தினம் உழைப்பார்கள், இதனால் அவர்களது வறுமை எப்போதும் அன்று தீர்ந்ததே இல்லை. அப்படிப் பட்ட நாவிதன் ஒருவனை கதை நாயகனாகக் கொண்ட இக்கதை நச் சென்று நடுமண்டையில் அடிப்பதைப் போல வலிமையான வரிகளோடு நகர்கிறது, நாவிதனின் தயவு ஊர்க் காரர்களுக்கு வேண்டும் இல்லையேல் சிரைக்காத தாடியும் மீசையும் கோரையாய் வளர்ந்து முரடாகிப் போக சீக்காளி போன்ற தோற்றம் வரும். கல்யாணம் ..காட்சி என்று வெளியிடங்களுக்குப் போக இயலாது. நாவிதனுக்கோ வருடத்திற்கு ஒருமுறை அளக்கும் நெல்லும் கம்பும் கூட ஊர்க்காரர்கள் வெள்ளாமை சரியில்லை ...பயிர் நஷ்டம்,கடன் என தள்ளிப் போட்டதில் தன் வயிறு காயும் கோபம் ...கூடவே அந்த வட்டார மக்களுக்கு சோற்றை விட முக்கியமாகிப் போன கள்ளு கிடைக்காத ஆத்திரம் ,இத்தனையும் சேர்ந்து கொள்ள தன் ஊர்க்காரர்கள் முடிவெட்டிக் கொள்ள வந்தால் நாளை...நாளை என தவிர்த்துக் கொண்டே போகிறான்,தாங்க முடியாத சிகை வளர்ச்சியில் நொந்து போனவன் ஒருவன் வேலை மெனக்கெட்டு நாவிதனுக்கு கள்ளு வாங்கித் தந்தாவது முடி வெட்டிக் கொள்ள முனைகிறான் .சுள்ளென்று சரக்கு உள்ளே போனதும் நாவிதன் போதை ஏறி தனக்கு கூலி தராமல் வஞ்சிக்கும் முதலாளிமார்களையும் ...ஊர் ஜனங்களையும் திட்டித் தீர்க்கும் கடைசிவரிகள் யதார்த்த நிஜங்கள் .வாசித்துப் பாருங்கள் புரியும்.

புத்தகம் - வெள்ளெருக்கு
எழுத்தாளர் -கண்மணி குணசேகரன்
பதிப்பகம்- தமிழினி
விலை- ரூபாய் 90

தொடரும் ...

நானிருப்பது ஈழத்திலோ ?!

திடுக் திடுக்
திருப்பங்களில்
தடக் தடக்கென
தட தடக்கும் இதயங்களுக்குச்
சொந்தக்காரர்களாகிப் போனதால்
இலை அசையும் போதெலாம்
இடி இடிக்கக் கூடுமெனும்
அனுமானம் தீர்மானமாய்
மிஞ்சிப் போன
பயக் காடுகளாயின
எம் நாடாயின காடு .
கூடுகள் எங்கே ???!!!
எம் வீடுகள் எங்கே ???!!!
நானிருப்பது ஈழத்திலோ ?!

சிரிக்கும் தலையணைகள்
தலையணை சிரிக்குமோ?!


தலையணை சிரிக்குமோ?!

வெடித்துச் சிதறியும்

கசிந்து உருகியும்

மௌனச் சிதறல்களாய்

புதைந்து போன

பல துக்கங்களால்

தினம் நனைந்து

தினம் உலர்ந்து

துவண்டு சருகாகி

கசங்கி நசிந்த

தலையணை ஒன்று

கண்ணீர்க் கோடுகளை

வெறுக்கத் துவங்கிய

சிலநாட்களின் பின்

ஏதேனும் ஒருநாளில்

துள்ளத் துடிக்க

கை கால் அசைத்திடும்

சின்னஞ்ச்சிறு

தளிரின் அசைவுகளுக்கு

நழுவாமல் அண்டக் கொடுக்கையில்

குலுங்கிச் சிரிக்கலாம் ...!

தலையணை சிரிக்குமோ?!

Monday, August 3, 2009

இருளும் இனியதே?!


இழுத்து இழுத்து
போர்த்தினாலும்
தொடரும் பகலால்
உரிக்கப் பட காத்திருக்கும்
கன்னங்கரிய துப்பட்டி ...
இருட்டு ;
வெளிச்சப் பொட்டுக்கள்
திகட்டும் போது
ஒவ்வொருநாளும்
மீளும் சொர்க்கம்
இருள் ...
இனியதே !?
Note: படம் கூகுளில் இருந்து எடுத்து பயன்படுத்தப் பட்டது ,நன்றி கூகுள்.