Monday, July 30, 2012

கொற்றவை " -ஜெயமோகன்

கொற்றவை " -ஜெயமோகன் 

வாசிச்சு முடிச்சதும் கோசாம்பியோட பண்டைய இந்தியாவை ஜோடனையோட மறுபடி வாசிச்ச எபெக்ட் .

கண்ணகியைப் புரிந்து கொள்ள முடிகிறது ,மாதவியையும் ,நீலியையும் கூடத் தான் ,ஆனால் கோப்பெருந்தேவியைப் புரிந்து கொள்ள முடியவில்லை. என்ன பெண் இவள் என்று எரிச்சலாய் இருக்கிறது ,அவள் ஒரு சிக்கலான படைப்பு மதுரை எரியூட்டப் பட கண்ணகி காரணம் அல்ல இவளே காரணம். 

குறவர்,வேளார்,வணிகர்,ஆயர் உள்ளிட்ட அடக்கி ஒடுக்கப் பட்ட எட்டுக் குடிகளின் ஒட்டு மொத்தக் கோபம் கனலாய் தகிக்கத் தொடங்கிய நெடி கூட அறியாது கேரள பாணர்கள் மற்றும் விரளியறது ஆட்டம் காண விளையும் பாண்டியன் நெடுஞ்செழியன்  ரோம் எரிகையில் பிடில் வாசித்த நீரோவை நினைவூட்டுகிறான். 

சிலப்பதிகாரம் கண்ணகியின் கற்பின் மாண்பைக்  குறித்துப் பேசுவதாகப் புரிந்து கொள்வதைக் காட்டிலும் அதிகார வர்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக பீறிட்டுக் கிளம்பிய ஒரு மாபெரும் சமுதாயப்  புரட்சியை,கிளர்ச்சியைப் பற்றி மிக விரிவாகப் பேசும் பண்டைய தென்னிந்திய வரலாற்றின் ஆவணமாக இதைப் புரிந்து கொள்ள முயல்வது நலம். 

ஐவகை நிலங்களுக்கான தெய்வங்கள் என்று நம் பாடப் புத்தகங்கள் காட்டிச் சென்றது ;

குறிஞ்சி -முருகன் 
முல்லை-திருமால் அல்லது மாயோன் 
மருதம்- இந்திரன் 
நெய்தல் -வருணன் 
பாலை -கொற்றவை 

ஆனால் கொற்றவையில் கண்ணகி கடந்து செல்லும் நால்வகை நிலங்களுக்கும் தொல் தெய்வங்களாக ஜெமோ வியாபித்துக் கூறுவது   பேரன்னை கொற்றவையின் பல்வேறு வடிவங்களான பெண் தெய்வங்களை மட்டுமே. முல்லையில் மாயோனை மட்டுறுத்தி நப்பின்னையை பெரிதாகக் காட்டுகிறார். மருதத்தில் இந்திரனை மருந்துக்கும் காணோம் ஏன் கண்ணகி கதை என்பதாலா அதற்காக கிடைக்கும் இடைவெளிகளை எல்லாமும் கொற்றவையால் மட்டுமே நிரப்புவதென்றால் முடிவில்  ஒரே பாலை நெடி மட்டுமே மிஞ்சுகிறது? 

மாதவியிடமிருந்து மீண்ட கோவலன் கண்ணகியை அடைந்து இருவரும்  புகார் விட்டு நீங்கிய நாளின் தொடக்க கணம் முதற்கொண்டே தன் கொழுனனுக்கு நேரப் போகும் அபாயம் பேரன்னையின் பிரதிநிதியாகக் காட்டப் பட்டிருக்கும் கண்ணகிக்கு தெரிந்தே தான் இருந்ததா? பின் ஏன் நாவலில் ஒரு முறை கூட அவள் தன் கணவனுக்கு  எச்சரிக்கை நிமித்தம் எந்தச் சொற்களும் கூற முயற்சிக்கவில்லை?

சாக்கிய புத்தனின் அடியவளான காவுந்தியை நீலியாக்கி ஜெமோ  கதை நகர்த்திச் செல்வது சுவாரஸ்யம் கருதியா அல்லது மூலமான சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகளும் இப்படித் தான் சொல்லி இருக்கிறாரா?

இவை தவிர சாருவாகப் பிராமணர்கள் என்றொரு பிரிவினர் அவர் தம் நெறிகள்,ஆறலைக் கள்வர் நெறிகள் ,மறவர் நெறி,உமணர் நெறி,வணிகர் நெறி என்றெலாம் கதை விரிகையில்  கற்பில்,குழந்தை வளர்ப்பில்,பொருள் தேடலில் ஆண்களுக்கு இணையாகப் பெண்களுக்கான பூரண சரி நிகர் சமானம் இருப்பதாகக் காட்டப் படுவது சாருவாகப் பிராமணர்களின் நெறியில் மட்டுமே. இப்பத் ஒரு பிரிவினர் இருந்தனர் என்று இந்த நாவலில் தான் முதல் முறையாக வாசிக்கக் கிடைத்தது. 
 
ஆஹா ...நான் சொல்ல நினைத்தது இதில்லையே !

இப்படி புதுசு புதுசா தெரிஞ்சிக்க பழைய விவரங்கள் பல இந்த நாவலில் நிறைய இருப்பதென்னவோ வாஸ்தவம் தான்,வாசிக்கப் பொறுமை இருப்பவர்கள்  வாங்கி வாசிச்சுத் தெரிஞ்சுக்கலாம். 

கொற்றவை நிறைய சிந்திக்க வச்சாலும் எனக்கென்ன ஆதங்கம்னா தீவிர முருக பக்தையான எங்கம்மா கிட்ட போய் முருகன்,,தெய்வானை,வள்ளி எல்லாம் கடவுள்கள் இல்லை ,பண்டைத் தென்னிலத்தின் வாழ்ந்து மறைந்த பழங்குடி அரச பரம்பரையினராம்னு சொல்ல வேண்டியதாப் போச்சு.எங்கம்மா அதை நம்பல இன்பாக்ட் நானும் தான் ,நம்பலன்னு  சொல்றதை  விட நம்ப விரும்பலைன்னு சொன்னா சரியா இருக்கும். ஆமாம் நம்பிக்கை வைக்க நமக்கொரு இடம் அல்லது பிரதிமை தொடர்ந்து தேவைப் பட்டுக் கொண்டே இருக்கும்  கட்டாயமிருப்பதால் இன்னின்ன விசயங்களெல்லாம் இப்படியும் இருக்கலாம் என்ற அனுமானங்கள் ,யூகங்களைக் கடந்தும் நமக்கான நம்பிக்கைகளை நாம் கைவிடாமலிருப்பது மனதளவில் பாதுகாப்பானதே. இல்லனா தேவ் ஆபீஸ் முடிஞ்சு வழக்கமா வர நேரத்தை தாண்டி கால் மணி நேரம் லேட் ஆனாலோ ,ஸ்கூல் வேன் வழக்கத்தை விட கொஞ்சம் லேட் ஆனாலோ  உடனே கோபி கிருஷ்ணனின் "உள்ளே  இருந்து கேட்கும் சில குரல்கள் "ரேஞ்சுல   ஐயோ என்னாச்சோ ஏதாச்சோன்னு அப்பப்போ சதாய்க்கற  நெகட்டிவ் தாட்ஸ் எல்லாம் ரொம்பப் படுத்தாம எப்படித் தான் டபாய்க்கறதாம். 

ஜோ.டி.குரூசோட கொற்கை வாசிச்சு முடிச்சப்போ ஏற்பட்ட அதே விதமான மனநிலை தான் இந்த நாவலுக்கும்  எனக்கு நான் சொல்லிக் கொள்வது "சும்மா இருக்க மாட்டியா நீ ,இதெல்லாம் ஏன் படிக்கற?

 மத்யானம் சாப்பாட்டுக்கு கூட்டென்ன,பொரியல் என்ன ,சாம்பாரா,பருப்பா,காரக் குழம்பா? தக்காளி ரசம் வைக்கலாமா ,இல்ல லெமன் ரசமா ?அப்பளம் பொரிக்கனுமா?மோர் மிளகாய் போதுமா ? எலுமிச்சை ஊறுகாய் நாளையோட தீரப் போறது அடுத்து மாங்காயா ,நெல்லிக்காயா என்ன ஊறுகாய் வாங்கி வைக்கலாம்?தயிர் போதுமா இல்ல தண்ணி விட்டு மோர் ஆக்கிடலாமா ? அட அட...அட எத்தனை இதம் இப்படியான சாப்ட் சாப்பாட்டு திங்கிங்க்ஸ் ! 

இதை விட்டுட்டு தடித் தடியா புஸ்தகம் வாசிக்கறாங்களாமாம் ? பெத்த புஸ்தகம்...ம்க்கும்.

போவே முகுடு ஒச்சே தரவாத்த காய கூற பெட்டி ஒண்ட செய்வே ,அதே நீக்கு நச்சிந்தி.