Sunday, December 13, 2009

சிலேட்டுக் குச்சியும் ...கோபால் பல்பொடியும்...




சிலேட்டுக் குச்சி (பல்பம்) தின்னும் பழக்கம் ஆரம்பப் பள்ளியில் வாசிக்கும் போது என்னையும் சேர்த்து என் நண்பர்கள் பலருக்கும் இருந்தது.அதுமட்டுமா பழனி கந்த விலாஸ் விபூதி என்றாலும் பலருக்கு அதீத இஷ்டம் தான் அப்போது. ஆட்காட்டி விரலும் கட்டை விரலும் சேர்ந்து அமுக்கிக் கொள்ள சிட்டிகை சிட்டிகையாய் தின்பவர்கள் ஒரு சிலர்,என்னவோ ஜீனி தின்பது போல அள்ளி அள்ளி வாயிலிட்டுக் கொள்பவர்கள் சிலர்,நான் முதலாம் வகை.அள்ளித்தின்பது நாகரீகமில்லை என்று அப்போதே தெரிந்திருக்கிறது பாருங்கள்!!! என்னே என் நாகரீகம்!?

இந்தப் பழக்கம் எங்கிருந்து வந்திருக்கக் கூடும் என்பதைப் பற்றி அப்போது சிந்தனை ஏதும் இல்லை.ஒரு வேலை அப்பா வழிப் பாட்டி செங்கல் பொடி கொண்டு பல் விளக்குவதைக் கண்டு வந்திருக்கலாமோ ! இல்லையேல் இட்லிக் கடை அன்னம்மா பாட்டி இட்லி அவித்து முடித்ததும் மூன்று கல் கொண்ட விறகடுப்புச் சாம்பலை நீர் தெளித்து அவித்தபின் அதிலுள்ள சாம்பலை இளஞ்சூடாக எடுத்து பல் விளக்குவதைக் கண்டு வந்திருக்கலாமோ ! அடுத்தவரைக் கண்டு பழகுவதென்றால்... தாத்தா வேப்பங்குச்சியால் பல் விளக்குவதைக் கண்டு அதையல்லவா நான் பிடித்துக் கொண்டிருக்க வேண்டும்?!முதல் காரணம் அது மகா கசப்பு ,எந்தப் பிள்ளைகள் தான் கசப்பை விரும்பக் கூடும்?!

திருநீறும் ...சாம்பலும் ஏன் சிலேட்டுக் குச்சியும் கூட வாயிலிட்டதும் நடு நாக்கில் சில்லென்று ஒரு விறு விறுப்பைத் தரும் பாருங்கள் கரைவதற்கு முன்பு அதற்க்கு ஈடாகுமோ கசப்பு!அம்மா வழிப் பாட்டி "பயோரியா பல்பொடி வைத்து பல் விளக்குவார் அன்றைய நாட்களில்..." நாட்டு மருந்து போல அந்தப் பல்பொடியும் பிடிக்காது அதன் லேசான கசப்பும் பிடிக்காது ,சுறு சுறுவென எரியும் நாக்கு ,அதே ரோஸும் வெள்ளையும் கலந்த நிறத்தில் "கோபால் பல்பொடி" சின்னப் பிள்ளைகள் எல்லோருக்கும் பிடித்த ஒன்று ,ஏனெனில் அதைக் கொண்டு பல்விலக்குவதா முக்கியம் ? அதன் இனிப்புச் சுவைக்காக அதை தின்று விடும் பல நல்ல பால்ய நண்பர்களை நானறிவேன்.நான் கூட தின்றிருக்கக் கூடும் ..இப்போது ஞாபகமில்லை.

சிலேட்டுக் குச்சியில் இருந்து பிறகு சிலர் சாக்பீசுக்கு மாறி விட்டார்கள் ,என்ன இருந்தாலும் குச்சி போல வராது தான்,குச்சியில் கூட இரண்டு வெரைட்டி உண்டு அப்போது. கல் குச்சி ,இது ஒல்லியாக நீண்டு கருப்பாக இருக்கும் ,இரண்டாவது மாவுக் குச்சி இது நல்ல வெள்ளை நிறத்தில் கொஞ்சம் தடிமனாக இருக்கும் ,இதில் மாவுக் குச்சி தான் பள்ளிப் பிள்ளைகள் எல்லோராலும் விரும்பப் பட்டது. என்ன தான் சொல்லுங்கள் மாவுக் குச்சிக்கு சாக்பீசெல்லாம் ஈடாகவே ஆகாது என்று தான் சொல்வேன் நான்.சப்பென்று இருக்கும் சாக்பீஸ் தூள்.

மண் வெறும் மண் என்று நினைத்துக் கொள்ளக் கூடாது ...தெள்ளு மண் என்பார்கள் கிராமப் புறங்களில் அப்படிப் பட்ட நுண்ணிய மண்ணை தின்னும் பழக்கம் கூட சிலருக்கு அப்போது இருந்தது.

எறும்பு சாப்பிட்டால் கண் நன்றாகத் தெரியும் என்று ஒரு பழம் நம்பிக்கை...யார் சொல்லக் கேள்வியென்று இப்போது நினைவில்லை,அப்படி எறும்புத் தின்னி பிள்ளைகளும் சிலர் இருக்கத் தான் செய்தார்கள்.யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள் நிஜமாகவே எறும்பைப் பிடித்து தின்றால் கண் பளிச்சென்று தெரியுமா என்ன?!( சுரீர்னு கடிக்கிற எறும்பை சும்மா விட முடியுமா? )

மேலே சொன்ன பழக்கங்களைக் காட்டிலும் "அரிசி " சமைக்காமல் அப்படியே வெறும் அரிசியை வாயிலிட்டு சதா மெல்லும் அபாரப் பழக்கம் அன்றைக்குப் பலரிடமும் இருந்தது.பெண் குழந்தைகள் அப்படி எந்நேரமும் அரிசி மென்றால் அத்தைமார்கள் சொல்வார்கள் "ரொம்ப அரிசி திங்காத உன் கல்யாணத்தன்னைக்கு விடாம மழை வரும் பார் " என்று ,இதென்ன நம்பிக்கையோ?!

சிலருக்கு புளியை சதா நேரமும் வாயிலிட்டு சப்பிக் கொண்டே இருக்கப் பிடிக்கும்,இல்லையேல் புகையிலை போல கன்னங்களுக்கிடையில் அதக்கிக் கொள்வார்கள் ,உமிழ் நீரில் லேசான இனிப்பும் மிகையான புளிப்புமாய் புளி மெல்ல மெல்லக் கரைந்து வர அதை முழுங்கும் ஒவ்வொரு முறையும் அலாதி ஆனந்தமாய் இருக்கும். என்ன ஒரு பொல்லாத பிரச்சினை என்றால் இப்படி புளி தின்றால் நாக்கின் ஓரங்கள் நாளடைவில் கொதித்துப் போய் கொப்புளித்து புண் வரும்.இதற்க்கெல்லாம் அஞ்சினால் எப்படி?!

சொல்ல மறந்து விட்டேன் ...இப்போது தான் ஸ்கூல் பேக் வித விதமாய் வருகிறதே தவிர இருபது இருபத்தி ஐந்து வருடங்களுக்கு முன்பெல்லாம் பெரும்பாலும் நகைக் கடை ,துணிக் கடைகளில் இலவசமாகத் தரும் மஞ்சள் பை தான் ஸ்கூல் பெக் ,சவாலாகவே சொல்கிறேன் ..அதன் காதுகளையோ அல்லது ஓரங்களையோ அல்லது அடி நுனிகளையோ பற்களால் கடித்து மேல்லாத குழந்தைகள் சொற்பமே.அது ஒரு விநோதப் பழக்கம் ...லேசான உப்புச் சுவையோடு அப்படி மென்று விழுங்குவதை இப்போது நினைத்தால் குமட்டக் கூடும்,அன்றென்னவோ அது பிடித்தமானதாகவே இருந்தது எல்லாக் குழந்தைகளுக்கும்.

இப்பத்திய குழந்தைகள் மட்டும் இளப்பமா என்ன? டூத் பேஸ்ட் திங்காத குழந்தைகள் அரிது. நல்ல வேலை இப்போது சிலேட்டுகள் இல்லை நேரடியாக பென்சிலுக்குப் போய் விடுகிறார்கள் எல்.கே.ஜி யிலேயே.மேஜிக் சிலேடு வந்து விட்டது. அதனால் பெற்றோர்களுக்கு தங்கள் பிள்ளைகள் குச்சி தின்று விடக் கூடுமோ என்ற அபாயம் குறைவே.

மண் தரை இருந்தால் அல்லவா இப்போதைய குழந்தைகள் அதெல்லாம் முயன்று பார்க்க ! எங்கெங்கு காணினும் சிமெண்டுக் காடுகள் தான். அப்படியாக அந்தப் பழக்கமும் இருக்க வாய்ப்பில்லை.திருநீர் கூட அப்படி ஒன்றும் இந்தக் கால குழந்தைகள் சாப்பிட முயல்வதில்லை என்றே நினைக்கிறேன். சாம்பல் சொல்லவே தேவையில்லை ... விறகு அடுப்பு உபயோகித்தால் அல்லவா சாம்பலை குழந்தைகள் கண்ணால் பார்க்க முடியும்?!

இப்படி எல்லாம் பெற்றோர்கள் நிம்மதிப் பட்டுக் கொள்ள முடியாது.இதெல்லாம் என்ன பெரிய சாதனைகள்?!

பிரீசரைத் திறந்து அதில் உறைந்திருக்கும் ஐஸ் துகள்களை சுரண்டித் தின்பது ;

கோரைப் பாயோ ...பிளாஸ்டிக் பாயோ அதன் ஓரங்களை உருவி மென்று துப்புவது .

பென்சில் கரையும் வரை அதை விட்டேனா பார் என துருவோ துருவென்று துருவுவது.

முன்னமே சொன்னபடி டூத் பேஸ்ட் தின்பது.

இப்படி சில மாறாத பழக்கங்கள் இருக்கின்றன தான்.

ஆனாலும் அன்றைய குழந்தைகளை விடவும் இன்றைய குழந்தைகளுக்கு கவனிப்பு கூடுதல் என்பதால் பல விநோதப் பழக்கங்கள் இன்றைக்கு மட்டுப் படுத்தப் பட்டு விட்டன குழந்தைகளிடையே என்பதை ஒப்புக் கொள்ளத் தான் வேண்டும். பெரும்பாலும் ஒற்றை குழந்தைகளாய் வளர்வதால் எந்நேரமும் பெற்றோரின் கவனிப்பு வளையத்திலே தான் இருக்க நேர்கிறது.அதனால் தேவையற்ற பல பழக்கங்கள் தடுக்கப் பட்டு விட்டன என்பதை சொல்லித் தான் ஆக வேண்டும்.
நோட்:-
சிலேட்டுப் படம் கூகுளில் தேடி எடுக்கப் பட்டது இங்கிருந்து- nallasudar.blogspot.com/2008_10_01_archive, நன்றி நண்பரே.