மங்கா சிணுக்கட்டமாய் சிரித்துக் கொண்டே தீப்பெட்டி ஆபிஸின் மருந்து முக்கும் அறையில் இருந்து ஓடி வந்தாள்.முகம் கேந்திப் பூவாய் விகசிக்க, நீளப்பின்னல் தோளில் புரண்டு அவள் ஓடிவந்த வேகத்தில் பின்னால் விசிறித் துள்ளி விழ வாகாய் அதைப் பிடித்துக் கொண்டு அவளைத் தொடர்ந்து அதே அறையில் இருந்து வெளியில் வந்தான் ரவி என்ற ரவிச்சந்திரன.
" விடுங்க ரவி...யாராச்சும் பார்த்துடப் போறாங்க " மங்கா கொஞ்சலாய் சிணுங்கி நழுவ ...அவளை விட்டு விட்டு ரவி வாயில் புறமாய் நகர்ந்தான் .
சீனி வந்திருப்பான்.கழுகுமலையில் கட்டிக் கொடுத்திருந்த அக்காவைப் பார்க்கப் போனவன் ,இன்று தானே வருவதாகச் சொன்னான்.சீனியைப் பார்த்து மூன்று நாட்களாகின்றன.போனால் பயல் சிரிக்கச் சிரிக்க ஏதாவது இடக்கு மடக்காகப் பேசிக் கொண்டிருப்பான்.
மணி பத்து...சாப்பிட வீட்டில் என்ன இருக்கிறதோ? அம்மா தொடக்கப் பள்ளி டீச்சர்,அரைகுறைச் சமையலில் அவள் பள்ளிக்கு ஓடி விட தங்கை தான் மீதி சமையல்,அவள் அத்தனை கெட்டிக்காரி அல்ல சமையலில்,என்ன இருக்கிறதோ இருப்பதை உள்ளே தள்ள வேண்டியது தான்,முக்கியமாய் அப்பா திண்ணையில் உட்காராத நேரமாய் இருந்தால் நல்லது.
ரவி நல்ல உயரம் ,வடமலாபுரம் டீச்சர்ஸ் ட்ரெயினிங் கல்லூரியில் 85 இல் ஓவிய ஆசிரியர் பயிற்சியை முடித்தவன்.இன்றைக்கு காலை வருடம் 1998 நவம்பர் 20௦ தேதி காலை நேரம் 10 .15 வரையிலும் வேலை கிடைத்தபாடில்லை.அப்பாவுக்கும் அவனுக்கும் எதிர்படும் நேரமெல்லாம் கர்..புர் தான்.
இதற்கெல்லாம் ரவி சலிப்படைந்து விடுவானா?!
அவன் தன்னிஷ்டத்துக்கு இருந்து கொண்டான்."ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலை இல்லே" சாப்பிட்டு விட்டு வாயிலைக் கடக்கையில் வேண்டுமென்றே இந்தப் பாட்டை முணு முணுத்தான் .திண்ணையில் அப்பா இருக்கிறாரே...சும்மா போவதா!
சப்பாத்தியும் கடலைப்பருப்பு குருமாவையும் சாப்பிட்டதாய் பேர் பண்ணி விட்டு ஊர் பஞ்சாயத்து போர்டை நோக்கி நடையைக் கட்டினான்.அங்கே தான் உள்ளூர் இளவட்டங்கள் எல்லாம் ஜமா சேர்வார்கள்.மேட்ச் இருக்கும் காலங்களில் பஞ்சாயத்து ஆபிஸ் ரூமை பூட்டி வைத்துக் கொண்டு உள்ளே கவர்மென்ட் டி.வி யில் கிரிக்கெட் மேட்ச் பார்த்துக் கொண்டிருப்பார்கள்.அந்தக் கூட்டத்தில் ரவி இல்லாமலா?!
பஞ்சாயத்து போர்டை ஒட்டி கொஞ்ச தூரத்தில் தான் கண்ணன் கோயில் அதற்கப்பால் ஆலங்குலத்து நாயக்கர் தோட்டம் ,கமலாக்கா அவர் தோட்டத்தில் தான் மிளகாய்ப் பழம் பொறுக்கிக் கொண்டிருப்பதாகவோ ,வெண்டைக்காய் பிடுங்கிக் கொண்டிருப்பதாகவோ கோழி கோபாலிடம் அவ்வப்போது தாக்கல் சொல்லி விடுவாள்.கமலாக்காவுக்கு ஆண் இரண்டும் பெண் இரண்டுமாக நாலு குழந்தைகள் புருஷன் காலராவில் போய் விட்டான்.அப்புறமென்ன செய்வாள் பாவம்!!!பிறந்த வீட்டோடு வந்து விட்டாள்.உதிரிப் பூக்கள் அஸ்வினி சாயலில் இருந்தாலும் இவள் கொஞ்சம் சிடுமூஞ்சி ;
தொடரும் ...