Friday, December 24, 2010

உருளை சிப்ஸும் சில கவிதைகளும் ...

1
ஜன விசேஷங்கள் ...

அகமுடிப்பில் அணுக்கியாகி
சேகரித்த மாயபிம்பகள் யாவும்
நிறமிழக்கையில் உதிரும் சோகம்
மௌனப் பெருமழை ;
சகடமுருட்டிக் கொண்டோடும்
வழி நெடுக ஜன விசேஷங்கள்
சங்கதியற்று சந்ததிஈன்று
எம்மை உம்மைப்
பெற்றுப் போட்டு
இற்றுப் போன வழித்தடங்கள்
பார்வைக்கப்பால் பரவச காந்தரூபமாய்
பழம்பெருமை பேசிக் கொண்டாடும்
பேராண்மை பெருங்குடிகள்.
இருப்பினும்கவிதை கவிஞர்களுக்கல்ல அல்லவே!

2
குணவிசேஷங்கள் ...

நிமிர்ந்து நடந்து
நேர்கொண்டு பார்த்து
திமிர்ந்த ஞானச் செருக்கோடு திரிந்தாலும்
எப்போதுமிருக்கும் குணவிசேஷங்கள்
அடுத்துக் கெடுத்து குட்டிச் சுவராக்கலாம் ...
பொதுவில் யார்க்கும் ;
சொல்லாடலோ ,மல்லாடலோ
பிரயோகப் புதிர்கள் விடுத்து
ஆண் ஆணெனவும்
பெண் பெண்ெனவும் கொண்டாடப் படுதலில்
நிறை கொள்ளும் பூமி !
3
உப்பு நீரே...
நீர்த் தளும்பல்களில் சுணக்கமின்றி
கசியும் கண்களை இழுத்துப் போர்த்தும்
துப்பட்டி ரெப்பைகள்
தினமுண்ணக் கூடும் சோழி வடிவ மக்ரோனி ;
இமைக்குள்ளும் புறமும் நோக்கிக் கதைத்தேன்
விரித்துச் சலும்பித் தெறித்து
குழிந்தவிடத்தும் குவிந்தவிடத்தும்
கசியும் நீர் உப்பு நீரே...
4
திசைகளை வெறுக்கும் தேசாந்திரி மனம் ...

ஒரு போது நினைத்திருந்தது ...
கொடும்பாளூர் கன்னியின் பின் சென்று
கல்வெட்டு படிப்பதென்றால் கற்கண்டு தானோவென்று
ராணா பிரதாப்பின் சேடக் காலிடரினும்
வந்தியத் தேவனின் சாம்பல் நிறப் புரவி
இடறியும் இடறா இடக்கரடக்கல் என்றிருந்தேன்
இத்தனை நக்கல் ஆகாதோவென்றுஇத்தாலியின்
வெசூவியஸ் வெது வெதுப்பில்ஜப்பானின்
வெந்நீர் ஊற்றுக்கள் எல்லாம்
சொல்லியும் சொல்லாமல் மடை திறந்து கொண்டன.
ஆல்பாவும் பீட்டாவும் செமத்தியாய் போர் என்றேன்
மத்திக் கிணறோ அந்தரமன்றோ...
வேதியியல் ...உயிர்வேதியியல்...நுண்ணியிரியல்
கடந்து போன ஸ்டேசன்களில்
உத்தேசமாய் மூன்றாண்டுகள்
தங்கிப் பெற்றதொரு பட்டம்
நூலில்லாக் காத்தாடி.
பின்னும் வாடிச் சருகாகினும்
மணமிழக்கா மனோரஞ்சிதமாய்
மலர்மிசை மானடி சேர்ந்தார் மாட்டு
நிலமிசை ஏகிச் சுழன்றது
திசைகளை வெறுக்கும் தேசாந்திரி மனம் .

5
குன்று குளிர் கூதிர் காலம் தொட்டு மீளா நெடுநல் வாடை
விஷம் போல ஊடுருவும் வன்பனிக் காற்று
மசங்கி மறப்பின் வறண்டு முகம் காட்டும் ஆப்பிள் சருமங்கள்
குப்புறக் கவிழ்த்தினும் சொட்டு விடாதுரைந்த எண்ணெய் ஜாடிகள்
கசங்கி நசுங்கிக் கிழியும் அப்பளங்கள்
கால் பாவா தரை மேலே
அடைகாக்கும் போர்வைக்குள் மொத்த தேகம்
சுட்டும் சுடாது கத கதக்கும்
பிஞ்சின் ஸ்பரிசமோ ?!
மித வெப்பம் தேடி அலையும் ஜாதி மானிடர் !