Wednesday, January 27, 2010

மல்லை..கடல் மல்லை...கடற்கோயில்




கடல் மல்லை...கடற்கோயில் ... வாழ்வில் உன்னதம் என்று சொல்லத்தக்க பல நிமிடங்கள் பல சமயங்களில் நம்மையறியாமலே வந்து வந்து சென்றிருக்கலாம் ,அதிலொரு நிமிடம் மல்லை கடற்கோயில் கண்ட பொழுதுகளில் கரைந்தது.ராஜசிம்ம பல்லவன் கட்டிய கடல் மல்லை கடற்கோயில் காணக் காண தெவிட்டாது கண்களுக்கு இனிய விருந்து.


நாங்கள் அவ்விடம் சென்றிருக்கையில் ஒரு அயல்நாட்டுப் பெண்மணி கோயிலைச் சுற்றி இருந்த கற்திண்டொன்றில் (கல்லாலான திண்டு) ஏகாந்தமாய் அமர்ந்து கொண்டு சிகரத்தில் வழுக்கி வழுக்கி அமர எத்தனிக்கும் கடற்காகங்களிலும் அதற்கும் மேலே தண்மையாய் ஒளி விட்ட அரைச் சந்திர நிலாவிலும் யுகம் போலாயின கணங்களில் லயித்துப் போயிருந்தார்.இன்னதென்றறியா ஏதோ ஒரு மயக்கம்!!! அங்கு அமருகையில் எனக்கும் அப்படித்தான் இருந்தது.


இரண்டு லிங்க ரூபங்களும் கிடந்த கோலத்தில் ஒரு பள்ளி கொண்ட மூர்த்தியுமாய் மூன்று கோயில்கள் காணக் கிடைக்கின்றன கற்றளியின் உள்ளே.கிடந்த கோலத்தில் பள்ளி கொண்ட தேவரை கடந்து போன காலமும் கடலின் உப்பிசமும் சிதைத்த பின்னும் கூட அழியாக் கோலமாய் வடிவுரு வதனம்.தொட்டுக் கும்பிட்டு நகர்ந்தவர்கள் அனைவருக்கும் அதன் தொன்மம் தெரிந்திருக்குமோ?!லிங்கத்தின் முனை அரிக்கப் பட்ட சிதிலம்.


சவுக்கு மரங்களை ஏராளமாய் நட்டும் கற்களை குவியல் குவியலாய் அண்டக் கொடுத்தும் ஆழிப் பேரலைகள் எழும்போதெல்லாம் பல்லவ புராதனப் பெருமை அழியாமல் காக்கும் வண்ணம் உலக பாரம்பரியச் சின்னமாக இதை கட்டிக் காத்து வரும் சுற்றுலாத் துறைக்கு பார்வையாளராக வந்தனங்களைத் தெரிவித்துக் கொள்வதில் மல்லைக்கு சுற்றுலா செல்லும் ஒவ்வொருவரும் கடமைப்பட்டிருக்கிறோம் .


சிவ வழிபாடும் உண்டு,பிற்காலப் பல்லவ மன்னர்கள் பௌத்தமும் தழைத்திருக்க உதவினர் போலும்,சமணத் துறவிகள் சயனத்துக்கு ஏற்படுத்திக் கொண்ட கற்படுக்கைகளும் ,உணவருந்த பாறைகளில் தோண்டிய சின்னச்சின்ன குழிகளும் ராமானுஜ மண்டபத்தை ஒட்டி காட்சிக்கு கிடைக்கின்றன.சயனப் பெருமாள் கோயில் காலத்தால் மாமல்லன் காலத்துக்குப் பிற்பட்டதாய் இருப்பினும் கடற்கோயிலின் உள்ளிருக்கும் பள்ளி கொண்ட தேவரை நோக்குங்கால் வைணவமும் பாங்காக வளர்க்கப் பட்டுள்ளமை காணலாம் .முதலில் சைவமும் வைணவமும் பிற்பாடு புலிகேசியுடனான போருக்குப் பின் பௌத்தமும் சமணமும் இங்கே நிலை கொண்டிருக்கலாம், தெய்வ ரூபங்கள் எதுவாயிருப்பினும் கலைக் கண்ணால் காணுகையில் கற்கள் ஒவ்வொன்றும் கவிதைகளாயின இங்கு.


சிம்ம ரூபங்கள் சிற்பங்களாக வேறெங்கேயும் விட இங்கே கனத்த கம்பீரம் காட்டுகின்றன. யானைகள் நிஜ யானைகளைக் காட்டிலும் அழகு,ஏனெனில் இவை பாகனுக்குப் பயந்து பிச்சைக்குப் பழக்கப் படவில்லை பாருங்கள்!!!,யாளிகளும் சில இடங்களில் சிலா ரூபமாய்,இந்த யாளிகள் தான் டிராகன்களின் ரிஷி மூலங்கலாம்.இருக்கலாம்.


ஐந்து ரதங்கள் ஒற்றைக் கல்லால் செதுக்கப் பட்ட கற்கோயில் வடிவங்களுக்கு மாதிரிகள்,பஞ்ச பாண்டவர்களுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லாவிட்டாலும் பல்லவர் காலக் கட்டிடக் கலைக்கு பிரமிப்பூட்டும் உதாரணங்களாய் அன்றும் ...இன்றும்...இனி என்றென்றும் இவை தன்னிகரிலாதவை.தர்ம ராஜ ரதத்தில் செதுக்கப் பட்ட சிவனின் அர்த்தநாரீஸ்வர வடிவம் கோயில் சிற்பக் கலைக்கு பெருமைக்குரிய ஒன்றென அங்கிருக்கும் குறிப்புகள் சொல்கின்றன. ஐந்து ரதங்களுமே விமானங்கள் அமைப்பில் மாறுபடுகின்றன.ஒற்றைக் கல் யானை ,ஒற்றைக் கல் சிம்மம் என பிரமிப்பில் ஆழ்த்தும் பல்லவப்படைப்புகள் .மகிஷாசுர மர்த்தினி மண்டபம்,ராஜ சிம்மன் எழுப்பிய புலிக்குகை,இப்படி நிதானமாய் பார்த்து ரசிக்க வேண்டிய சிற்பங்கள் நிறைய உண்டங்கு.


பேருந்து நிலையத்தின் அருகிலேயே அரசு கல்லூரி அருங்காட்சியகம் இருக்கிறது,இரண்டு ரூபாய் டிக்கட்டில் உள்ளே போய் பார்க்கலாம்.சிலம்பேந்திய கண்ணகியுடன், புலியை முறத்தால் அடித்துத் துரத்திய வீரத் தமிழ் தாயொருத்தி சிற்பமாய் நிற்கிறாள்,விரி குழல் ஓவியம் போல் சிதறிப் பறக்க தூக்கிய பாதங்களுடன் சதிராடும் நடராஜ விக்கிரகங்கள் சிலைகளாய்,ரதி மதன் ரூபங்கள் சிலைகளாய்,ஆலிலை கிருஷ்ண விக்கிரகம் சிலையாய்,பல்லவ காலப் பெண்கள் சிலைகளாய்,பருத்த பானை வயிற்றோடு வினாயப் பெருமானார்.எல்லாவற்றுக்கும் நட்ட நடுவில் மாமல்லன் சிலை ,உயரமான கறுத்த வழ வழப்பான கற்சிலை.


நரசிம்ம வர்ம பல்லவன் மிகச் சிறந்த மல்லன்,மல்லர்களில் மகா மல்லன் (மற்போர் புரிபவர்கள் ) ஆயுதங்கள் ஏதும் ஏந்தாமல் தோள் வலிமை கொண்டு போரிடுவோர் மல்லர்கள் (மல்யுத்தம்) என்றால் சாலப் பொருந்தும் .அங்ஙனமே நரசிம்ம வர்மன் மாமல்லன் என்றானான். வாழ்ந்த காலம் கி.பி 634 to கி.பி.670 .அவனது காலத்தில் ஐந்து ரதங்கள் திருப்பணி ஆனது.கடற் கோயில் அவனது பேரன் ராஜசிம்மன் (இரண்டாம் நரசிம்ம வர்மன்) காலத்தைய திருப்பணி.ஸ்தல சயனப் பெருமாள் கோயில் இவர்களை அடுத்து வந்த பரமேஸ்வர வர்மன் காலத்தைய திருப்பணி.ராஜசிம்மன் கட்டியது தான் காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் ஆலயம் என்றும் எங்கோ வாசித்த ஞாபகம்.


மல்லையில் மொத்தம் மூன்று விதமான கட்டிடப் பாணிகள் காணப்படுகின்றனவாம்.


1.முதலாம் வகை ஒற்றைக்கல் கோயில் மாதிரிகள் (உதாரணம்-பஞ்ச பாண்டவர் ரதம்)


2.இரண்டாம் வகை குடவரைக் கோயில்கள் (உதாரணம்-ராமானுஜ மண்டபம்)


3.மூன்றாவது கற்றளிகள் கல்லால் கட்டப் பட்ட கோயில்கள் (கற்களை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கிக் கட்டும் முறை) உதாரணம்-கடற்கோயில் )


புகைப்படங்கள் எடுக்கும் நோக்கம் இல்லாமல் தேமேவென மாமல்ல புரம் போய் வந்ததற்கு என்னை நானே பலமுறை நொந்து கொண்டாயிற்று,இனி யாரேனும் மல்லைக்குப் புறப்பட்டால் கேமரா இல்லாமல் போகாதீர்கள் என்பதே என் வரையில் உகந்த வழிகாட்டல்.


"கல்லிலே கலை வண்ணம் கண்டார் " மல்லைக்குப் பொருத்தமான வரிகள்...மாமல்ல புறத்தில் இருந்து வெளியேறும் வரை காதருகே குதிரைகளின் குளம்படிச் சத்தங்களும் கற்களில் உளி பதியும் "டணார்,டணார் " ஒலிகளும் சூழ்ந்து கொண்டிருந்து விலகியதைப் போலொரு பிரமை .கூடவே எந்த சிற்பத்தைக் கண்டாலும் அதைத் தொட்டுத் தடவுகையில் ஒட்டி நிற்கையில் ,புகைப்படம் எடுத்துக் கொள்கையில் இங்கே எப்போது எந்த பல்லவ மன்னன் ,எந்த பல்லவ இளவரசி ஓர் நொடி நின்றிருக்கக் கூடுமோ எனும் ஆச்சர்யம் கலந்த உவகையில் பெருமிதம் நிறைந்து தழும்பியது.


நீலக்கடலும் பால் நுரைப்பூக்களாய் பொங்கிப் பிரவாகித்துப் பின் அமிழும் அலையோடும் கரையும்,கரை நின்று கால் நனைக்கும் மனித முகங்களுமாய் மாமல்லபுரம் பல்லவர் பெருமை பேசுகிறது பல்லாண்டுகளாய். நாங்கள் சென்று வந்தாயிற்று நேற்று .


நாளை மறுநாள் பௌர்ணமி .பூர்ண பௌர்ணமியில் கடற்கோயிலைக் காண்பது தனி ரகம்..அலாதியான ரசனை அது ,யாருக்கெல்லாம் கொடுத்து வைத்திருக்கிறதோ அதைக் காண அவர்கள் பாக்கியவான்கள் .இப்போதெல்லாம் தொல்பொருள் துறை அனுமதிக்குமா என்று தெரியவில்லை . விடுமுறை என்றால் குழந்தைகளை அழைத்துக் கொண்டு போய் காண்பியுங்கள் சிற்பங்களையும் கூடவே பல்லவ பூமியையும்.

நோட்:

படம் கூகுளில் தேடி பெறப் பட்டது .