Wednesday, May 19, 2010

பள்ளி மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை அலட்சியப் படுத்துவது தான் மத நம்பிக்கையா?

இந்து மத நம்பிக்கைகளுக்கும் அறிவியலுக்கும் இருக்கும் தொடர்பு அல்லது தொடர்பற்ற நிலை குறித்து சென்னை பிர்லா பிளானெட்டோரியத்தில் கோடைகால பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறதாம்.இந்த பயிற்சி முகாமை உடனடியாக நிறுத்தக் கூறி பி.ஜே.பி தமிழக மாநிலத் தலைவர் ராதாகிருஷ்ணனும் இந்து முன்னணி ராமகோபாலனும் கண்டனக் குரல் எழுப்பியுள்ளனர்.

இந்த பயிற்சி முகாம் இந்து மதத்தின் பாரம்பர்ய நம்பிக்கைகள் மீது சேற்றை வாரி இறைக்கும் முயற்சி எனவும் இப்படி ஒரு பயிற்சி முகாமை நடத்துவதில் அரசியல் ரீதியான காரணங்கள் இருப்பதாக தாம் நம்புவதாகவும் அவர்கள் தமது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளனர்.

கீழே உள்ள அறிவிப்பைப் பாருங்கள் ;

சென்னை, மே 7_ சென்னை பிர்லா கோள-ரங்கத்தில் உள்ள அறி-வியல் தொழில்நுட்ப மய்யத்தில் பல்வேறு பயிற்சிகளும், தொழில்-நுட்ப நிகழ்ச்சிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. மே 15ஆ-ம் தேதி நடைபெற உள்ள ஒரு நாள் பயிற்சியில் நவீன தொலைநோக்கிகளைக் கொண்டு, விண்வெ-ளியைக் கண்காணித்தல், 3டி அறிவியல் காட்சிகள், சூரிய ஒளிக்கதிர்களின் பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளின் கீழ் நிகழ்ச்சிகள் நடத்-தப்பட உள்ளன. இதில் 6-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவ, மாணவிகள் பெற்றோருடன் பங்கேற்-கலாம். முதலில் வருபவர்-களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில், 50 பேர் மட்டுமே இந்த நிகழ்ச்சிக்கு தேர்வு செய்யப்படுவர். மே 17-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை மூன்று நாள் கோடைகால முகாம் நடத்தப்படுகிறது. சூரிய ஒளிக்கதிர் முறை, சந்திரன் குறித்த ஆய்வு-கள், நட்சத்திரங்களின் பிறப்பு, அண்டைவெளி, தொலைநோக்கு கருவிகள் ஆகியவை குறித்த விவ-ரங்கள் கற்றுத் தரப்படும். இதில் 7, 8 மற்றும் 9ஆ-ம் வகுப்பு மாணவ, மாண-விகள் பங்கேற்கலாம்.மே 20ஆ-ம் தேதி முதல் 28ஆ-ம் தேதி வரை ஓவியம் மற்றும் களிமண் சிற்பங்-கள் செய்வது குறித்த பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. இப்பயிற்சியில் 8-ஆம் வகுப்பு முதல் 11ஆ-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம். பயிற்சி-களில் பங்கேற்க விரும்பு-பவர்கள் 044_24410025 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு-கொண்டு, பதிவு செய்து-கொள்ள வேண்டும்.

பயிற்சி முகாம் பற்றிய இந்த அறிவிப்பில் எங்கேயாவது இந்து மதத்தின் நம்பிக்கைகள் குறித்தான அவதூறுகளைக் காண முடிகின்றதா? நட்சத்திரங்களை ,வான மண்டலத்தைப் பற்றிப் படிப்பதோ தெரிந்து கொள்வதோ எப்படி இந்து மத நம்பிக்கைகளில் சேற்றை வாரி இறைப்பதாக இருக்க முடியும்?! இந்து மதத்தைப் பற்றியோ அதன் கடவுள்களைப் பற்றியோ இந்த அறிவிப்பில் எதுவும் தவறாக இல்லை. பிறகெதற்கு இந்தப் பயிற்சி முகாமை உடனடியாக நிறுத்தச் சொல்லி இவர்கள் இருவரும் கண்டனம் தெரிவிக்க வேண்டும்?

தமிழக அரசியல் வாதிகளுக்கும் மதத் தலைவர்களுக்கும் எங்கு?...எதற்கு ?... எப்படி? எதிர்ப்பு தெரிவிப்பது என்பதில் பயங்கரக் குழப்பம் நிலவி வருவது புரிந்திருக்க வேண்டுமே!!!

மாணவர்கள் அறிவியல் அறிவைப் பெறுவதால் அவர்கள் சார்ந்துள்ள இந்து மதத்தின் மீதான நம்பிக்கை குலையும் என எப்படி இவர்கள் இருவராக முடிவு செய்து கொண்டார்கள்.இப்படியே போனால் வானியல் என்றொரு பாடமே இருக்கக் கூடாது என்று கூட சொல்லக் கூடும் நாளடைவில்.வான மண்டலம்..நட்சத்திரம் ....அண்ட வெளியில் சிதறிப் பரவியுள்ள எண்ணற்ற கோள்களைப் பற்றிய விரிவான விளக்கங்கள் இவைகளை எல்லாம் பள்ளி மாணவர்கள் கற்றுக் கொள்ள ஒரு வாய்ப்பாக இதைக் கருதுவதால் இவர்களுக்கு என்ன நஷ்டம்?

சூரியனை பாம்பு விழுங்குவது சூரிய கிரகணம் என்றும்,சந்திரனை பாம்பு விழுங்கினால் அது சந்திர கிரகணம் என்றும் இனி வரும் தலைமுறைகளும் நம்ப வேண்டுமா? சந்திரன் (நிலா) இந்த நட்சத்திரத்தின் மனைவி ரோஹிணி எனும் நட்சத்திரமாம் சந்திரன் ரோஹிணியோடு இருக்கும் காலங்கள் வளர்பிறை என்றும் ரோகினியை விடுத்து இன்னொரு மனைவி(பெயர் தெரியவில்லை) யோடு இருக்கும் காலங்கள் தேய்பிறை என்றும் தான் எப்போதும் நம்பிக் கொண்டிருக்க வேண்டுமா?

மத நம்பிக்கைகள் என்ற பெயரில் எதையும் ஆராயாமல் ஏற்றுக் கொள்ளும் மடத்தனம் இன்னும் எத்தனை காலத்துக்கு நீடிக்க வேண்டும் என்று இவர்கள் விரும்புகிறார்கள்,இதெல்லாம் மதத்தின் பெயரால் ஏமாற்று வேலைகள் ஆகாதா?

முதலில் திரைப்படங்களுக்கு இப்படித்தான் பெயர் வைக்க வேண்டும் ...இப்படி எல்லாம் பெயர் வைக்கக் கூடாது என்று போராட்டம் நடத்தினார்கள்,அப்புறம் இரவு எட்டு மணிக்கு மேல் திரையரங்குகள் மூடப்பட வேண்டும் என்று ஒரு கட்சி கண்டித்தது...இப்போது மாணவர்களுக்கு நடத்தப் படும் பயிற்சி வகுப்புகளில் கை வைத்திருக்கிறார்கள்.

யார் எதைப் படித்தால் இவர்களுக்கென்ன ? பள்ளி மாணவர்கள் எதைக் கற்றுக் கொள்ள வேண்டும் எதை கற்றுக் கொள்ளக் கூடாது என்பதை அவரவர் பெற்றோர்களும் அந்தந்த மாணவர்களும் அல்லவா முடிவு செய்து கொள்ள வேண்டும்.இவர்கள் யார் நடுவில் கருத்துச் சொல்ல!குட்டையைக் குழப்புவதில் மீன் கிடைக்குமா ?

கட்சிகளும் மதங்களும் அவரவர்களுக்குரிய இடங்களை விட்டு விட்டு சுய சார்புடைய சுயமாய் சிந்திக்க கற்றுத் தரப் படும் சில விசயங்களில் மூக்கை நுழைப்பானேன்.