Saturday, June 19, 2010

பள்ளி கழிப்பறையில் குழந்தை பெற்ற 14 வயதுச் சிறுமி - உடனடித்தேவை கல்வியா மனநல சிகிச்சையா?!

ராமநாதபுரம் புனித ஆந்த்ரேயா பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவி பள்ளி டாய்லட்டில் குழந்தை பெற்றுக் கொண்டது நேற்றை விட இன்றைக்குப் பழைய செய்தி,பலரும் அதை பத்திரிகைகளில் படித்திருப்பீர்கள் .சம்பந்தப் பட்ட மாணவி அந்தப் பள்ளியில் இருந்து நீக்கப் பட்டிருக்கிறாள்.பள்ளி அந்த மாணவியை நீக்கியது தவறு என்று சில அமைப்புகள் கூறி வருகின்றன.

குற்றம் நடந்தது என்ன? என்ற ரீதியில் இதை அணுகும் முன் ;

அந்த மாணவிக்கு ஏன் மனநலப் பரிசோதனை செய்வதைப் பற்றி பரிசீலிக்கக் கூடாது.

யாருக்கும் எந்த சந்தேகமும் எழும்பாத வகையில் கருவை வயிற்றில் சுமக்கத் தெரிந்திருக்கிறது,ஏன் இத்தனை குண்டாக இருக்கிறாய் என்று கேட்டவர்களிடம் எல்லாம் தவறான மாத்திரை உண்டதால் உடல் பருமனில் ஏற்பட்ட கோளாறு என்று சமாளிக்கத் தெரிந்திருக்கிறது ,அத்தனைக்கும் மேல் பெற்ற குழந்தையை கழிவறைப் பீங்கான் கோப்பையில் அமுக்கி கொல்லவும் முயற்சி செய்திருக்கிறாள்.உயிருக்குப் போராடிய நிலையில் தான் அந்த குழந்தை மீட்கப் பட்டிருக்கிறது .இதெல்லாம் அறியாமையில் அச்சத்தில்...இயலாமையில் செய்த தவறுகளாக கருதிக் கொள்ள இடமிருந்தாலும் பிரசவ வலியை யாருக்கும் தெரியாமல் எப்படி அவளால் பொறுத்துக் கொள்ள முடிந்தது.பெண்களுக்கு மறுஜென்மம் என்பார்களே பிள்ளைபேற்றை.மிகக் கடுமையான வலி அதை ஒரு சிறுமி பொறுத்துக் கொண்டு சத்தமே இன்றி குழந்தை பெற்றிருக்கிறாள் என்றால் அவள் சாதாரண மனநிலையில் இருப்பதாக எப்படி ஒத்துக் கொள்ள முடியும்.

ஆகவே பிறந்த குழந்தைக்கு தகப்பனைக் கண்டுபிடிக்கும் முன்பு;

அந்தச் சிறுமியை மீண்டும் அதே பள்ளியில் சேர்த்தே ஆக வேண்டும் என அமைப்பு ரீதியாகப் போராடும் முன்பு ;

அந்த சிறுமிக்கும் அவளது அம்மாவுக்கும் (ஒரு தாய்க்கு தன் மகள் வயிற்றில் கருவைச் சுமக்கும் விஷயம் பிரசவம் வரை தெரியாது என்பது நம்பத் தகுந்ததாக இல்லை) மனநலப் பரிசோதனை செய்து அவர்களிடம் இருந்து நடந்த விவரங்களைக் கண்டறிவது முதல் தேவை என்று தோன்றுகிறது.

மீட்கப் பட்ட குழந்தை அரசின் தொட்டில் குழந்தை காப்பகத்தில் பராமரிக்கப் பட்டு வருகிறது.அந்தக் குழந்தையின் எதிர்காலம் என்ன!

இவளே சிறுமி எனும் போது இனி இவளது எதிர்காலம் என்ன?

இந்தக் கேள்விகளுக்கு ஒரே பதில் செய்தியைப் படித்தவர்கள் அனைவரும் இன்னொமொரு செய்தி எனும் ரீதியில் அப்படியே கடந்து போவதாக மட்டுமே இருந்து விடுதல் சரியா!

ஒரு பெண்ணின் மனநிலையில் நான் இந்தக் கருத்தை கூறுகிறேன்.வாசிப்பவர்கள் விருப்பமிருப்பின் உங்களது கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.